Thursday, 28 February 2019

தமிழீழம் ஜிந்தாபாத்
தமக்கு இழைக்கப்பட்ட  அநீதிகளினால் ஏற்பட்ட கோபம் காரணமாகவே விடுதலைப் புலிகள் தற்கொலை தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் மதம் சார்ந்து அவர்கள் தாக்குதல்களை நடத்தவில்லை எனவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தான் மீது இந்தியா தொடுத்துள்ள போர் பற்றி, பாக்கிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவர் அளித்த கொள்கை விளக்க உரையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

“தற்கொலை தாக்குதல் என்பது பலவீனமானவர்களின் தந்திரம்” என்றும் இம்ரான் கான் குறிப்பிட்டார். இம்ரான் கானின் இந்தக் கருத்து, தேசியத் தலைவரின் “பலவீனமான இனத்தின் பலமான தூண்களாய் நான் அவர்களை (கரும்புலிகளை) உருவாக்கினேன்” என்ற சிந்தனையோடு ஒத்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

ஈழத் தமிழர்களது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் அகிம்சை வழியில் தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை, அதில் ஆதிக்கம் செலுத்திய, செலுத்திக் கொண்டிருப்பதாகவும் நம்ப வைக்கப்படும் மிகப்பெரிய சக்தி இந்தியா தான். 

அறுபதுகளில் பெரியாரும் அண்ணாவும் வழிநடாத்திய தனித் தமிழ்நாடு போராட்டமும், மொழிப் போரால் கிளர்ந்த மொழிப் பற்றும், எழுபதுகளில் இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளில் தம்மினத்திற்கு எதிராக கட்டவிழுத்து விடப்பட்ட அநியாயங்களை அறுக்கவென வீறுகொண்டெழுந்த இளைஞர்களின் சிந்தனையிலும் பாரிய தாக்கம் செலுத்தியிருந்தது.

“அடைந்தால் தனி நாடு, இன்றேல் சுடுகாடு” என்று வீரவசனம் பேசியவர்கள், மாநில சுயாட்சிக்கு இறங்கி வந்து, தமிழ் நாட்டை பெற்றுக் கொள்ள, வல்வெட்டித்துறையில் இருந்து படகேறியவர்கள் தமிழ்நாட்டில் ஆயுதங்கள் வாங்கி பயிற்சியெடுக்கத் தொடங்கினார்கள்.

23 ஜூலை 1983ல் யாழ்ப்பாணத்தில் வெடித்த கண்ணிவெடியால் தென்னிலங்கையில் இனவாதம் தீயாக கிளர்ந்து, தமிழர்களை அடித்துக் கொன்று, அகதிகளாக வடக்கு கிழக்கிற்கும் தமிழ் நாட்டுக்கும் அனுப்ப, இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் ஜி. பார்த்தசாரதி இலங்கையில் காலடி எடுத்து வைத்தார். 

அதே நேரத்தில், எந்த இயக்கப் படகில் ஏறுகிறோம் என்பது கூட அறியாத இளைஞர்கள், மாதகலில் படகேறி உத்தர பிரதேசத்தில் இந்திய இராணுவத்திடம் ஆயுதப் பயிற்சி பெறத் தொடங்கினார்கள்.
இந்திராவின் ஆசியுடன் இந்திய இராணுவத்திடம் பயிற்சி பெற்ற இயக்கங்களிற்கு தமிழ்நாடு தளமாகியது, மட்டக்களப்பும் யாழ்ப்பாணமும் களங்களாகின.

1977ல் பதவியேற்ற UNP அரசாங்கத்தின் அணுகுமுறையால் இலங்கையின் பொருளாதாரம் வளம்பெறத் தொடங்கியதை முடக்கவும், இலங்கையில் அதிகரித்து வந்த அமெரிக்காவின் ஆதிக்கத்தை தடுக்கவும், தமிழர்களின் போராட்டத்தை இந்தியா தனது ஆயுதமாக்கிக் கொண்டது.

“இந்தியா வரும்.. விடுதலை வாங்கித் தரும்” என்று நம்பியிருந்த தமிழ் மக்களின் (கெட்ட) கனவு, 1987ல் இந்திய இராணுவ வருகையோடு சுக்கு நூறாகிப் போனது. 
JR ஜெயவர்த்தனாவின் நரித்தனமான இராஜதந்திர காய் நகர்த்தில் இந்திய வல்லரசு தோற்றுப் போனது, இன்றும் தோற்றுக் கொண்டிருக்கிறது.

1971 இந்திய பாக்கிஸ்தான் யுத்தத்தின் போது, மேற்கு பாக்கிஸ்தான் விமானங்கள் இலங்கையில் தரையிறங்கி எரிபொருள் நிரப்பிக் கொண்டு, கிழக்கு பாக்கிஸ்தான் (பங்களாதேஷ்) நோக்கி பறக்க அனுமதியளித்த அதே இலங்கை அரசாங்கத்திற்காக, 1987ல் கொழும்பு வந்த இந்திய பிரதமரை கொல்லத் தாக்கிய இலங்கை கடற்படை வீரன், “சூரிய வெட்பத்தில் மயங்கி விழுந்தான்” என்று அறிக்கை விட்ட அதே இலங்கை அரசாங்கத்திற்காக, தமிழர்களிற்கு எதிராக இந்தியாவின் துப்பாக்கிகள் முழங்கத் தொடங்கின. 

ரஜீவ் காந்தியின் படுகொலை, இலங்கைத் தமிழர்களுடனான இந்தியாவின் உறவை முப்பதாண்டுகள் தாண்டியும் பாதித்துக் கொண்டிருக்கிறது, ராகுலும் ப்ரியங்காவும் குடும்பத் தொழிலை தொடர்வதால் இனியும் பாதிக்கத் தான் போகிறது. 

1991ல் நிகழ்ந்த அந்த துன்பியல் சம்பவத்திற்கு பின்னர், இந்தியா தானுண்டு தன்பாடுண்டு என்று சும்மா இருக்கவில்லை. 2000ம் ஆண்டளவில் யாழ்ப்பாண நகரை மீண்டும் கைப்பற்ற நெருங்கிய புலிகளை முன்னேற விடாமல் தடுத்ததும் இந்தியா தான். ஒரு வளமாக இந்தியா முன்னேறிய புலிகளை தடுத்து வைக்க, மறுவளமாக பாக்கிஸ்தான்காரன் இலங்கை இராணுவத்திற்கு கொடுத்த Multi Barrel, அரியாலையில் நின்ற புலிகளை முகமாலைக்கு கொண்டு வந்து நிறுத்தியது.

2002ல் நோர்வே அனுசரணையில் புலிகளும் அரசாங்கமும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க, லண்டனில் இருந்த புலிகளின் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தை, மருத்துவ காரணங்களிற்காகவேனும் சென்னை வழியாக Transitல் பயணிக்க அனுமதியளிக்க மறுத்ததும் இதே இந்திய அரசாங்கம் தான். 

கிளிநொச்சிக்கும் கொழும்புக்கும் பறந்து வரும் நோர்வேக்காரன்கள், நாடு திரும்பும் வழியில் புதுடெல்லியை தொடாமல் மீண்டும் ஒஸ்லோ போக மாட்டார்கள். “பேச்சுவார்த்தைகள் குறித்து இந்தியாவிற்கு அறிவிக்கும் நோர்வே, ஜனாதிபதியாகிய என்னை சந்திப்பதுமில்லை அறிவிப்பதுமில்லை” என்று அந்நாளில் இலங்கையின் ஜனாதிபதியாக இருந்து பேச்சுவார்த்தைகளை குழப்பியதில் முக்கிய பங்காற்றிய சந்திரிக்கா குமாரணதுங்க பின்னாளில் தனது நடவடிக்கைகளிற்கு காரணம் கற்பித்தார். 

இறுதி யுத்த காலத்தில் இந்திய மும்மூர்த்திகளும் (நாராயணன், மேனன், விஜய் சிங்) இலங்கை மும்மூர்த்திகளும் (கோத்தா, பஸில், லலித்) இணைந்து செயற்பட்டுத் தான் புலிகளை அழித்தார்கள் என்பது உலகறிந்தது. புலிகளை அழித்ததும் 13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று தமிழர்களிற்கு அதிகார பரவலாக்கத்தின் அடிப்படையில் அரசியல் தீர்வு வழங்குவேன் என்று, மஹிந்த ராஜபக்ச இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வைக்க இந்தியாவால் இன்றுவரை முடியவேயில்லை, இல்லை நிறைவேற்ற வைக்க விரும்பவேயில்லை.

யுத்தம் முடிந்த பின்னும், சிகிச்சைக்காக சென்னைக்கு வந்த தேசிய தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை, விமானநிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்பி தனது குரூர முகத்தை இந்தியா திரும்பவும் ஒருமுறை நமக்கு ஞாபகப்படுத்தியது.  

சீனாவின் பக்கம் மஹிந்தர் தலை வைத்து படுக்க, அவரை கவிழ்த்து மைத்ரி-ரணிலை ஆட்சிக் கட்டிலேற்றியதில் மீண்டும் இந்தியா தனது வகிபாகத்தை தக்க வைத்துக்கொண்டது. “நல்லாட்சியில் நல்லது நடக்கும், நாங்கள் இருக்கிறோம், பார்த்துக் கொள்வோம்” என்று தமிழர் தலைமைகளிற்கு இந்தியா அளித்த நம்பிக்கையும் காற்றோடு கலந்து விட்டது, இல்லை இன்னுமொரு முறை சிங்களத்திடம் இந்தியா ஏமாந்து விட்டது. 

“இலங்கையில் ஆட்சியை மாற்ற முடிந்த எங்களால் உங்களுக்கு தீர்வை பெற்றுத் தருவது பெரிய விடயமல்ல, பொறுத்திருங்கள்” என்று புலம்பெயர் தமிழர் தரப்புகளிற்கு இந்திய தரப்புக்கள் கூறிய கதையை இன்னும் யாரும் நம்புபவார்களா? 

2009ற்கு பின்னர் ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எத்தனை தரம் இந்தியா எதிர்த்திருக்கிறது, எத்தனை தரம் அதை வலுவிழக்கச் செய்திருக்கிறது. கடைசியாக 2015ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்தச் சொல்லி இலங்கையை வலியுறுத்தாத ஒரே நாடு இந்தியாவாகத் தானிருக்க வேண்டும்.  

ஆக, இலங்கைத் தமிழர்களிற்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வை பெற்றுத் தரவேண்டிய தார்மீக கட்பாடு இருந்தும், பெற்றுத்தரவல்ல வல்லமை இருந்தும் இந்தியா இன்றுவரை தனது தார்மீக கடப்பாட்டில் இருந்து விலகியே நடந்து கொண்டிருக்கிறது. மேற்கத்தைய நாடுகள் தமிழர்களிற்கு சார்பாக எடுத்த, எடுக்கும் நடவடிக்கைகளிற்கும் “தானும் படுக்கான், தள்ளியும் படுக்கான்” ரகத்தில் தடைகளை ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறது.

பாக்கு நீரிணையில் கடற்புலிகள் கோலோச்திய காலத்தில் இந்தியாவிற்கு இல்லாதிருந்த பாதுகாப்பு அச்சுறுத்தல் இந்தியாவிற்கு இன்று ஏற்பட்டிருப்பதற்கான காரணத்தை இந்தியா புரிந்து கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் முனைய வேண்டும். 

எழுபதுகிலும் எண்பதுகளிலும் வளர்ந்த இலங்கைத் தமிழர்களில் பலர், இலங்கை கிரிக்கெட் அணியை ஆதரிக்காது இந்தியாவை ஆதரித்த காலம், அவர்களிற்கு பின்வந்த சந்ததிகளில் மாறிவிட்டது. இலங்கை கிரிக்கெட் அணி தோற்க வேண்டும் என்று எண்ணிய போக்கு மாறி, இன்று இந்தியா யுத்தத்தில் பாக்கிஸ்தானிடம் அடிவாங்க வேண்டும் என்ற மனக்போக்கே, ஈழத்தமிழர்களின் சமூக வலைத்தளங்களில் பரவலாக காணக் கிடைப்பதையும் இந்தியா கருத்தில் எடுக்க வேண்டும். 

இந்தியாவை சூழ எல்லா நாடுகளும் இந்தியாவிற்கு எதிரானவையாக இருக்க, இலங்கைத் தமிழர்கள் மட்டுமே இந்திய எதிர்ப்பு குறைந்த இனமாக இருந்த காலம் மாறி வருகிறது. தமிழ்நாட்டிலும், ஜல்லிக்கட்டு, காவேரி, ஏழு தமிழர்கள் விடுதலை என்று இன்னாரென்ன பிரச்சினைகளில் இந்திய மத்திய அரசிற்கு எதிரான உணர்வுகள் பலமாக எதிரொலிக்கத் தொடங்கி விட்டன.

இலங்கைத் தமிழர் தரப்பும் பாரம்பரிய இராஜதந்திர உறவாடல்களை விட்டகன்று, தங்களது நலன் சார்ந்து சில தந்திரோபாய நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். அடுத்த முறை சம்பந்தரும் சுமந்திரனும் இந்தியாவிற்கு போகும் போது, ஒரு பொடி நடையாக இஸ்லாமாபாத்திற்கு போய் இம்ரான்கானோடு ஒரு படம் எடுத்து Twitterல் போட வேண்டும். சென்னைக்கு சாறி வாங்க போய், சரவணபவனின் தோசையைப்  பற்றி blog எழுதுவோரும், கராச்சிக்கு போய் சல்வார் வாங்கி விட்டு, லாகூர் பிரியாணி பற்றி பந்தி பந்தியாக எழுத வேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் மீதான, இந்தியாவின் தார்மீக கடப்பாட்டை நிறைவேற்ற வைக்க இஸ்லமாபாத்தும் இம்ரான் கானும் உதவட்டும்.

தமிழீழம் ஜிந்தாபாத்!

Friday, 22 February 2019

சென்னை.. வாங்க சாப்பிடுவம்


சென்னையில் வாங்க சாப்பிடுவம் என்று கூப்பிட்டால், இதை வாசிக்கும் பல பேர் வயிற்றை பிடித்துக்கொண்டு பேந்த பேந்த முழிப்பார்கள். சென்னையில் கண்ட இடத்தில் சாப்பிட்டு, வயித்தால அடி அடி என்று அடித்து நாட்கணக்கில் படுத்திருந்தவர்கள் கதையை கேள்விபட்டிருப்பீர்கள், ஏன் ஆஸ்பத்திரியில் அனுமதியான பெருங்கதையைக் கூட அறிந்திருப்பீர்கள்.

அப்படி இருக்கும் போது, எந்த துணிவில் எங்களை சென்னையில் “வாங்க சாப்பிடுவம்” என்று நீங்க கூப்பிடலாம் என்று நீங்கள் நினைக்கலாம். எங்களிற்கு பரிச்சயமில்லாத இடங்களிற்கு நாங்கள் பயணிக்கும் போது, சில முன்னெச்சரிக்கைகளை சரியாக கைக் கொண்டால், போற இடத்தில் கிடைக்கும் அழகிய அனுபவங்களை அளவாக அனுபவதித்து விட்டு அவதிப்படாமல் வீடு வந்து சேரலாம்.

நாங்கள் முதல் முறை சென்னைக்கு போகும் போது பிரவீனிற்கு ஒரு வயது தான். அந்த முறை மட்டுமல்ல, அடுத்த இரண்டு மூன்று முறைகள் போகும் போதும் மெல்பேர்ணில் இருந்து long life பால் போத்தல்களை கட்டிக் காவிக் கொண்டு தான் போனாங்கள். பாலும் பால் சார்ந்த பதார்த்தங்களும் தான் வயிற்றை பதம் பார்க்க வல்ல கெட்ட சாமான்களில் பிரதானமானது.

சென்னையில் முக்கியமாக கவனமாக இருக்க வேண்டியது, குடிதண்ணீர் தான். பல்லு மினுக்கி விட்டு வாய் அலம்பவும், போத்தலில் அடைத்த குடிநீரை பாவிப்பது உங்களது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காது. போத்தலில் அடைத்த குடி தண்ணீரும், ஒன்று Aquafina இல்லாட்டி Kinley தான் பாதுகாப்பானதாம், ஒன்று Pepsi தயாரிப்பது மற்றது Coke கம்பனிக்காரனின் தயாரிப்பு. தண்ணி வாங்குவதென்றாலும் நல்ல supermarketsல் வாங்கினால் கலப்படமில்லாதது வாங்கலாமாம். 

காலம்பற சாப்பாட்டுக்கு நாங்கள் வழமையாக போறது பாண்டி பஜாரில் இருக்கும் சரவணபவனிற்கு தான். எல்லா சரவணபவனும் ஒன்று தான் அங்கு இருக்கும் பதார்த்தங்கள் எல்லாம் ஒரே ருசி தான் என்று யார் சொன்னாலும் நம்பவே வேண்டாம். பாண்டி பஜார் சரவணபவனில் எப்பவும் சனம் நிரம்பி வழியும், சுத்தமாகவும் இருக்கும், சின்ன பிள்ளைகள் விளையாட ஒரு சின்ன slideம் இருக்கும், எல்லாவற்றிக்கும் மேலாக, சாப்பாட்டு ருசி சும்மா அந்த மாதிரி இருக்கும்.

காலங்காத்தால பாண்டி பஜார் சரவணபவனில் போய் இருந்ததும், முதலில் order பண்ணுவது, சுடச்சுட மெட்ராஸ் ஃபில்டர் கோப்பிக்கு தான். அமுதமாக சுவைக்கும் சரவணபவன் மெட்ராஸ் ஃபில்டர் கோப்பியை, டம்ளரிலிருந்து  இருந்து டவாராவில் ஊற்றி, சூடாற்றி ஒரு மிடாய் குடித்து விட்டு, “எனக்கு நெய் தோசை ஒன்று, இவக்கு ஸ்பெஷல் மசாலா தோசை, பசங்களுக்கு பூரியும் பரோட்டாவும்.. ஆ.. அதோட ஒரு வெண் பொங்கல்.. அவ்வளவு தான்” என்று waiterற்கு orderஐ கொடுத்து விடுவோம்.
“ஒரு வடை சொல்லியிருக்கலாம்” மனிசிக்கு விருப்பம் வரும், “தம்பி.. ரெண்டு வடை.. அதோட சுடச்சுட கேசரி” என்று உத்தரவை கொடுக்க, “நல்லா இனிப்பு சாப்பிடும்.. நல்லா மெலிஞ்சு போய் தானே இருக்குறீர்” என்று அன்றைய நற்செய்தி வாசிப்பு தொடங்கும். 

உலகத்தில் எனக்கு பிடிக்காத உணவுகளில் ஒன்று இட்லி. இட்லி ஏன் பிடிக்காது, தோசை மட்டும் பிடிக்குது, ரெண்டும் ஒரே உழுந்தில் இருந்து வாறது தானே என்று பேக்கதை பறைந்த பலரிற்கு கொடுத்த ஒரே பதில் “இட்லி பிடிக்காது.. அவ்வளவு தான்”. இட்லிக்கு குஷ்பூவின் பெயரை வைத்ததால் பிடிக்காமல் போனதோ தெரியாது, ஆனால் இட்லியை துண்டற கண்ணில் காட்டேலாது.

சுடச்சுட வாற நெய்த் தோசையை ஒருக்கா சட்னியில் தொட்டும் இன்னொருக்கா சாம்பாரில் தொட்டும் சாப்பிடுவதும் ஒரு கலை தான். சரவணபவனில் பச்சை மிளகாய் சட்னி தான் திறம், சிவத்த மிளகாய் சட்னியை எப்பவும் சொதப்புவார்கள். 

மொறு மொறு தோசையை நொறுக்கி வழ வழ சாம்பாரில் தோய்த்தெடுத்து வாயில் போட்டு விட்டு, யாரும் பார்க்காத போது நைஸாக விரலையும் ஒரு சூப்பு சூப்பி விரலில் படிந்த சாம்பாரையும் ருசிப்பது தான் சாப்பாட்டு பிரியர்களிற்கு தனியழகு, கெளரவம்.

தோசை சாப்பிடும் போதே ஒரு டீ சொல்லி விட வேண்டும். வெண்பொங்கல் வந்து சேரும் போது தான் டீயும் வந்து சேரும். உஞ்சூண்டு சீனியை இதமாக வெண் பொங்கலிற்கு மேலாக தூவி விட்டு, சுடு சுடு வெண்பொங்கலை கரண்டியால் கிள்ளி வாயில் போட்டுக் கொண்டு, ஒரு வாய் தேத்தண்ணி குடிக்க, இளையராஜாவின் “பூங்கதவே தாழ் திறவாய்” பாட்டு மண்டைக்குள் கேட்கத் தொடங்கும்.

தோசையும் சாப்பிட்டு பொங்கலை ருசித்தும், கெலியடங்காத வாய், waiter மறந்து போன கேசரியை கொண்டு வா என்று கேட்டுத் தொலைக்கும். சின்னதா ஒரு eversilver கிண்ணியில், தகதக நிறத்தில் கேசரி வந்து இறங்கும் அழகே ஒரு தனியழகு தான்.  அழகிய கேசரியை கண்ணிறைய பார்த்து விட்டு, கண்ணை மூடிக்கொண்டு அதைக் கிள்ளி வாயில் போட்டு அதன் இதமான சுவையை நாவு உணரும் கணங்கள், உண்மையிலேயே “சொல்லி வேலையில்லை” ரக கணங்கள் தான்.

இந்த முறை சென்னைக்கு போன போது, நாங்கள் தங்கியிருந்த GRT Grand Hotelலேயே காலை உணவை சாப்பிடுவதாக எங்கள் குடும்பத்தின் மூன்று உறுப்பினர்கள் எடுத்த முடிவிற்கு கட்டுப்படவேண்டியதாகி விட்டது.  முடிவெடுத்த மூவரும் நன்றாக நித்திரை கொண்டு விட்டு, bathroom போக அடிபட்டு, ஆடிப் பாடி அறையை விட்டு வெளிக்கிட முதல், அறைக்கு வெளியே தொங்கும் அன்றைய தினசரியை தூக்கிக் கொண்டு Hotelன் கீழ்தளத்தில் இருக்கும் உணவகத்திற்கு வந்து விடுவேன்.

“தம்பி.. சூடா ஒரு ஃபில்டர் காப்பி” சொல்லி விட்டு போற வழியில், ஒரு glass வெந்தக தண்ணீரை வயிற்றிக்குள் இறக்கி விடுவேன். Hotelல் buffet style என்பதால், குடிக்கவும் கடிக்கவும் பலவித குடிக்கும் வகையறாக்களும் கடிக்கும் பதார்த்தங்களும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். GRTயின் உணவகத்தில் ஒரு பக்கம் மரக்கறி சாப்பாடும், இன்னொரு பக்கம் மாமிச பட்சிகளின் பதார்த்தங்களும் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும்.


எங்கும் எல்லோரும் health conscious ஆகி விட, வெந்தய தண்ணியும் மிளகுத் தண்ணியும்,  பீட்ருட் ஜூஸும், இளநீர் தண்ணியும் வரிசையில் நின்று என்னைக் குடி, என்னைக் குடி, உடம்பிற்கு நல்லது என்று வரவேற்கும். இளநீரையும் ஒரு glassல் ஊற்றிக் கொண்டு போய், சொகுசான கதிரையில் இருந்து பேப்பரை விரிக்கவும்,  “சார்.. காப்பி”, மதுரையில் இருந்து வந்து சென்னையில் வேலை பார்க்கும் பாண்டியன், டம்ளரில் சூடுபறக்கும் கோப்பியை டவாராவில் வைத்து பரிவோடு பரிமாறுவார். 

பேப்பரை வாசித்துக் கொண்டே கோப்பியை டம்ளரிலிருந்து டவாராவிற்கு பரிமாற்றி சூடாடற்றி, வாயில் வைத்தால்.. உவாக்.. களனித் தண்ணி. சென்னையில் பாண்டிபஜார் சரவணபவன் கோப்பி குடிக்க விடாமல் உலை வைத்த மூவரும் அப்போது தான் liftல் வந்து கொண்டிருப்பார்கள். 


GRTயில் சாப்பிட முடிவெடுத்த மும்மூர்த்திகளும், தங்களுக்கு விருப்பமான சாப்பாட்டை தேடி பிடித்து கோப்பை நிறைய போட்டுக் கொண்டு வருவார்கள். மூத்தவனின் கோப்பையில் omeletteம் sausageம் கமகமக்கும், சின்னவனோ baconம் பாணும் மென்று கொண்டிருப்பான். “உமக்கும் ஒரு தோசை... நெய் தோசை சொல்லியிருக்கிறேன்.. சந்தோஷ் I am getting பூரி for you” மனிசி வந்து இருக்கும் போதே சபை களை கட்டத் தொடங்கி விடும்.

GRTயின் சாதுவாக வெங்காயமும் போட்ட நெய் தோசை வந்து இறங்க சுணங்கும், அந்த இடைவெளியில் சட்டி நிறைய இருக்கும் வெண் பொங்கலை கொஞ்சமும், உப்புமாவில் கொஞ்சமும் ருசித்து விட்டு, ஒரு தேத்தண்ணிக்கு order கொடுக்க சரியாக இருக்கும்.  வெண்பொங்கலிற்கு பக்கத்தில் இருந்த சிவத்த மிளகாய் சட்னியின் சுவையோ சுவை. அந்த சட்னிக்காகவே மூன்று தரம் வெண்பொங்கலோ வடையோ சாப்பிடலாம். 

GRTயின் தோசை அளவிலும் சுவையிலும் சரவணபவனாரின் தோசைக்கு கிட்டவும் நிற்க முடியாது. சிவத்த சட்னி நல்லா இருந்ததால், பல்லைக் கடித்துக் கொண்டு சாப்பிட வேண்டியது தான். GRTயின் கோப்பியை விட தேத்தண்ணி எவ்வளவோ பரவாயில்லை.  தேத்தண்ணியோடு கடிக்க, ஒரு குட்டிக் muffinஐ மட்டும் எடுத்துக் கொண்டு வந்து விடுவேன். 

பிரவீன் மிச்சம் விட்ட, வெங்காயமும் பச்சை மிளகாயும் போட்டுப் பொரித்த omletterஐ கொஞ்சம் சுவைத்து பார்க்க, அது ருசித்தது.  சந்தோஷின் கோப்பையில் இருந்து ஒரு pan cakeஐ பிச்சு சாப்பிட, “அப்பா..” என்று அவன் முறைப்பாட்டை பதிய “உமக்கு வேண்டுமென்றால் போய் எடுமேன்..அவங்கட சாப்பாட்டை எடுத்துக் கொண்டு” தாய்ப் பறவை சண்டைக்கு வரும்.

பரி யோவான் canteenல் மற்றவன் வாங்கும் mutton rollஐ நாங்களும், நாங்கள் வாங்கும் rollஐ அவனும், பிச்சு சாப்பிட்டு பழகின பழக்கம், வருடங்கள் கடந்தும் நாடுகள் தாண்டியும் தொடர்கிறது என்று விளக்கம் கொடுத்து, மாட்சிமை மிகுந்த கல்லூரியின் மானத்தை வாங்க மனம் விரும்பவில்லை.  

மூன்று நாட்கள் காலையில் ஆமான கோப்பி குடிக்காமல் செத்து போயிருந்த உடம்பு, நான்காம் நாள் வெள்ளனவே எழும்பி, பொடி நடையாக தியாகராஜ சாலை நெடுக நடந்து, பாண்டிபஜார் சரவணபவனில் கோப்பி குடித்து விட்டு வந்து தனது கெடும்பை அடக்கிக் கொண்டது. 

தியாகராஜ சாலையில் ஓரங்களில் இருக்கும் பெரிய மரங்களை பார்க்கும் போது, “சார்.. இதில தான் இது ஒரு பொன்மாலைப் பொழுது பாட்டு ஷூட் பண்ணினவங்கள்” என்று யாரோ ஒரு ஓட்டோக்காரன் எப்பவோ சொல்லி விட்டு போன கதைதான் ஞாபகம் வந்தது. 

காலம்பற சாப்பாட்டை ஒரு கட்டு கட்டினால், மத்தியானம் பசிக்கத் தொடங்க எப்படியும் இரண்டு மணியாகிவிடும். T. Nagarல் திரும்பும் இடமெல்லாம் நல்ல நல்ல சாப்பாட்டுக் கடைகள் இருந்தாலும், நமக்கு பிடித்தது விருதுநகர் செட்டிநாடு ஹோட்டல் தான். குடும்பத்தோடு போனால், மேல்மாடியில் இருக்கும் குளிரூட்டப்பட்ட அறையில் “வாங்க.. சார்.. வாங்க மேடம்” என்று அன்போடு வரவேற்க ஒரு waiter கூட்டமே தயாராக இருக்கும் .

மத்தியான சாப்பாடு சாப்பிட அடுத்த கிழமை போவோமா? 


Friday, 8 February 2019

பரி யோவான் பொழுதுகள்: பரி யோவானில் ஈபிகாரன்கள்1989 ஆண்டு நவம்பர் மாதத்தின் ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று, Yarl Hallல் ஒகஸ்ரின் மாஸ்டரின் Tution வகுப்பு முடிந்து, பிரதான வீதி வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தோம்.

நல்லூர் பக்கம் போகும் நண்பர்கள் கோயில் வீதியடியில் விடைபெற, பரி யோவான் கல்லூரி தாண்டிப் போக வேண்டிய நாங்கள் நால்வரும் சைக்கிளை வீடு நோக்கி உழக்கி கொண்டிருந்தோம்.  பிரபுவும் திருமாறனும் முன்னால் போக இளங்கோவோடு நானும் அவர்களிற்கு பின்னால் வந்து கொண்டிருந்தோம். 

யாழ்ப்பாணத்தை இந்திய இராணுவம் ஆக்கிரமித்திருந்த கொடிய காலமது. இந்திய இராணுவத்தோடு இணைந்து செயற்பட்ட ஈபிக்காரன்கள், பிள்ளை பிடிகாரன்களாக உலாவந்த பயங்கர காலங்கள் அவை.  ஈபிக்காரன்களின் கட்டாய ஆட்சேர்ப்பிற்கு பயந்து பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டும் டியூடரிகள் பெடியள் இல்லாமல் வெறிச் சோடியும் போயிருந்த இருண்ட நாட்களில் இருந்து அப்போது தான் மெல்ல மெல்ல யாழ் நகரம் விடுபட்டுக் கொண்டிருந்தது. 

நேரம் பின்னேரம் ஆறு மணியைத் தாண்டியிருக்கும், யாழ் நகரில் இருள் மெல்ல மெல்ல கவியத் தொடங்கியிருக்க, நாங்கள் பரி யோவானின் பிரதான வாயிலை தாண்டிக் கொண்டிருந்தோம். பரி யோவான் வளாகத்தினுள் studiesற்கு போக விடுதி நண்பர்கள் Robert Williams மண்டபத்திற்கு வெளியே குழுமி நின்றதும் தெரிந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் பரி யோவான் வளாகத்தினுள் எக் காரணம் கொண்டும் day scholars போக முடியாது என்பது கல்லூரி காலங்காலமாக கடைபிடித்து வந்த கட்டுப்பாடுகளில் ஒன்று. 

பரி யோவான் தேவாலயம் தாண்டி, Figg hallஐ நெருங்கும் போது, திருமாறனின் அம்மா எங்களிற்கு எதிர்பக்கமாக பதைபதைப்புடன் நடந்து வந்து கொண்டிருந்தா. எங்களை வீதியோரமாக நிற்பாட்டி “சந்தியில காரொன்றில ஈபிகாரன்கள் நிற்கிறாங்கள்..நானும் உங்களோட வாறன்” என்று எச்சரித்து விட்டு, திருமாறனின் சைக்கிளில் அவ ஏறிக் கொண்டா. அம்மாமாரோடு போனா ஈபிக்காரன்கள் ஒன்றும் செய்ய மாட்டாங்கள் என்று திருமாறனின் அம்மா நினைத்திருக்கலாம்.

சைக்கிளை ஒரு பத்து உழக்கு உழக்கி அருளாந்தம் block அடி தாண்டியிருக்க மாட்டோம், Old Park சந்தி தாண்டி, சுண்டுக்குளி பக்கம் பார்த்துக் கொண்டு நின்ற கார், படாரென uturn அடித்து நாங்கள் வந்து கொண்டிருந்த பக்கமாக  திரும்பியதும், கார் நின்ற கடையடியிலிருந்து ரெண்டோ மூன்று பேர் துவக்கோடு வெளிப்பட்டதும் ஒரு சில கணங்களில் நடந்தேறி விட்டது. 

கார் சடாரென திரும்பிய சத்தத்திலும் கடையடியிலிருந்து ஓடி வந்த துப்பாக்கிதாரிகள் போட்ட கூச்சலிலும், பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சனத்திற்கு கிலி பிடித்துக் கொண்டது. பிரதான வீதியைக் கடந்து பழைய பூங்கா வீதியால் போன ஒரு புலியைக் கண்டதால் அந்த அறுவான்களுக்கு கிலி வந்து வெருண்டடித்ததால் நடந்ததேறிய நாடகத்தின் ஆரம்பக் காட்சி தான் இவையென பின்னர் அறிந்து கொண்டோம்.

எங்களிற்கு முன்னால் போய் கொண்டிருந்த பிரபுவும் திருமாறனும் முன்னால் இருந்த வீட்டுக்குள் ஓட, தெருவில் இருந்த சனமும் அதே வீட்டுக்குள் ஓட, என்னோடு நின்ற இளங்கோ சொன்னான் “மச்சான், வீட்டுக்க கன சனம்.. நாங்க schoolற்குள்ள போவமடா”. சரியென்று சொல்ல முதல் அவனோடு சேர்ந்து என்னுடைய சைக்கிளும் uturn அடித்து, கல்லூரியின் பிரதான வாயிலை நோக்கி பறக்கத் தொடங்கியது.

டப்...டப்...டப்... துப்பாக்கி முழங்கும் ஓசையும், ஸ்....ஸ்...ஸ் என்று அதன் சன்னங்கள் தலைக்கு மேலால் பறந்த சத்தமும், “மச்சான் தலையை குனியடா” என்று இளங்கோ கத்தியதும் இன்றும் காதிற்குள் எதிரொலிக்கிறது. 

காற்றில் பறந்த சைக்கிள், பிரதான வாயிலின் சிறிய கேட்டை இடித்துக் கொண்டு, போய் நின்றதோ, விடுதி மாணவர்கள் குழுமி நின்ற Robert Williams மண்டபத்தடியில் தான். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்ற எங்களை, விடுதி மாணவர்கள் அக்கறையோடு விசாரிக்க தொடங்கவும், பிரதான வாயிலின் சிறிய கேட்டை தள்ளிக் கொண்டு உள்ளே வந்த ஈபிக்காரன்கள், Principalன் office பக்கமிருந்த Tin shed வகுப்பறைகளை நோக்கி தங்களது தானியங்கி துப்பாக்கிகளிலிருந்து வேட்டுக்களைத் தீர்க்கவும் சரியாக இருந்தது.

சைக்கிளை போட்டு விட்டு, புத்தகங்களையும் எறிந்து விட்டு, விடுதி நண்பர்களோடு சேர்ந்து நாங்களிருவரும் Hostel பக்கம் ஓடத் தொடங்கினோம். Memorial Hostelலடிக்கு வர, வழமையாக தங்களது விடுதிக்குள் எங்களை அனுமதியாத விடுதி நண்பர்கள், “மச்சான் வாடா.. கெதியா வாடா” என்று கையை பிடித்து இழுத்துக் கொண்டு போனார்கள். “எல்லோரும் கட்டிலுக்கு கீழே படுங்கோ” என்று யாரோ ஒரு Prefect சத்தமாக கத்த, நாங்கள் எல்லோரும் நெஞ்சம் பதைபதைக்க கட்டிலுக்கு அடியில் படுத்திக்கிடந்தோம்.

சிறிது நேரத்தில், “டேய்.. xxxxxx.. வெளில வாங்கடா...உங்களை round up பண்ணியிருக்கிறம்” என்று வெளியே அவங்களில் ஒருத்தன் கத்துவது கேட்டது. எங்களிற்கு முன்னால் இருந்த அறையிலிருந்து அண்ணாமார் கையை தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு வெளியே போக, நாங்களும் அவர்களை பின் தொடர்ந்தோம்.

Canteenற்கு முன்னால் இருந்த Tennis Court அடியில் குழுமியிருந்த எங்களை சுற்றி நாலோ ஐந்து ஈபிகாரன்கள் துப்பாக்கிகளோடு நின்றார்கள். “டேய் .. எங்களைக் கண்டு ஆரடா ஓடினது” ஈபிகரான்களின் பொறுப்பாளரைப் போன்றவன் கத்தினான். 

மோட்டு மூதேசிகள் பள்ளிக்கூடத்திற்குள் வந்து அறம்புறமாக சுட, வளாகத்திற்குள் இருந்த ஐம்பது மாணவர்களும் தான் ஓடினார்கள், இதில் யார் ஓடினது என்று  மொக்குக் கேள்வி கேட்டால்,  என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அனைவரும் அமைதியாக இருந்தார்கள்.

“எனக்கு தெரியும்.. யார் ஓடினது என்று.. இப்ப பிடிக்கிறன் பார்” என்று பொறுப்பாளர் தன்னைத் தானே James Bond ஆக்கினார். “டேய்.. நீ போய்.. அந்தா அதில விழுந்து கிடக்கிற புத்தகத்தை எடுத்திட்டு வாடா” தன்னுடைய அல்லக்கை ஒன்றிற்கு பொறுப்பாளர் கட்டளைப் பிறப்பித்தார்.

ஈபிக்காரன் சுட்ட பயத்தில் எல்லோரும் தான் புத்தகத்தை வீசி விட்டு ஓடினாங்கள், இதுக்க யாருடைய புத்தகம் மாட்டுப்படப் போகுதோ என்று நாங்க பதற, ஈபி அல்லக்கை ஒரு CR கொப்பியோடு திரும்பியது. “ம..யூ..மயூரன்” ஈபியின் பொறுப்பாளர் எழுத்துக் கூட்டாத குறையாக புத்தகத்தில் எழுதியிருந்த பெயரை வாசித்தான்.

“மயூரன் யாரிங்கே.. வெளில வாடா” என்று அவன் கத்த, நாங்களும் மயூரனை தேடத் தொடங்கினோம். மயூரன் என்ற பெயரில் எங்களது கும்பலில் யாரும் இருப்பதாக தெரியவில்லை. எங்களது பரி யோவான் கும்பலில் பரி யோவான் ஆலய போதகர் சர்வானந்தன், சில ஆசிரியர்கள், Prefects, மாணவர்கள் என்று எல்லோரும் இருக்க, யாரும் எதுவும் பேசத் துணியாத அந்தக் கணத்தில் தான் முன் வரிசையில் நின்ற சரவணபவன் அண்ணா ஈபிக்காரனிற்கு விளக்கம் கொடுக்க முன்வந்தார்.

“என்னென்டா அண்ணே.. மயூரன் ஒரு day scholar.. அவர் தன்ட கொப்பியை அவர்ட hostel friendற்கு குடுத்திட்டு வீட்ட போட்டார்.. அவர் இப்ப..” சரவணபவன் அண்ணா சொல்லி முடிக்கவில்லை கன்னத்தை பொத்தி ஈபிக்காரன் பளாரென்று அறைந்தான். “டேய்.. எங்களுக்கு நீ சுத்துறியா.. பேய்ப்.. xxxxx” பிஸ்டலை எடுத்து சரவணபவன் அண்ணாவின் மண்டையில் வைக்க எங்களுக்கு குலை நடுங்கியது.

“தம்பி.. இவர் ஒரு borderer.. இவருக்கு ஒன்றும் தெரியாது.. அவரை ஒன்றும் செய்யாதீங்கோ” சர்வானந்தன் போதகர் சரவணபவன் அண்ணாவின் உதவிக்கு வர “shut up.. you bastard” வெள்ளையங்கி போதகரிற்கு ஆங்கிலத்தில் அர்ச்சனை கிடைத்தது. 

“கொண்டு வாங்கடா இவனை” ஈபிக்கார பொறுப்பாளன் உத்தரவிட, அல்லக்கைகள் சரவணபவன் அண்ணாவின் கைகளை பின்புறமாக கட்டிக் கொண்டு, “நடவடா..” என்று தள்ளிக் கொண்டு, இருட்டில் கரைந்தார்கள்.

சில மாதங்களிற்கு முன்னர் தான் பரி யோவானின் மிகச் சிறந்த ஆளுமை நிறைந்த கிரிக்கெட் வீரனும், மாணவர்களால் பெரிதும் விரும்பபட்டவருமான அகிலனை, மண்டையன் குழுவின் கொலை வெறிக்கு பலிகொடுத்திருந்த பரி யோவான் சமூகம், இன்னுமொரு மாணவனையும் இழப்பதை தடுக்க அந்த இரவே உடனடியாக களத்தில் இறங்கியது. 

பரி யோவானின் அதிபர் Dr. தேவசகாயம், போதகர் சர்வானத்தன், மற்றும் ஆசிரியர்கள், இந்திய இராணுவத்தின் யாழ்ப்பாண தளபதியை சந்திக்க பழைய பூங்காவில் அமைந்திருந்த அவரது முகாமிற்கு உடனடியாக நேரடியாகவே சென்று கொடுத்த முறைபாட்டால், சரவணபவன் அண்ணாவின் உயிர் ஈபிகாரன்களினமிருந்து காப்பாற்றப்பட்டது.

ஆனால்.. A/L பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுகளை எதிர்பார்த்து காத்திருந்த அறிவாளி என்று அறியப்பட்ட தேவகுமாரின் உயிரை ஈபிகாரன்கள் காவுகொண்டதை அந்த ஆண்டவனால் கூட தடுக்க முடியவில்லை. A/L சோதனையில் 3AC எடுத்த அறிவாளியையும் பலியெடுத்து விட்டுத் தான் 
ஈபிக்காரன்கள் யாழ்ப்பாண மண்ணை விட்டு இந்திய இராணுவத்தோடு கப்பலேறினார்கள்.

யாழ்ப்பாணத்தில் எண்பதுகளின் இறுதிக் காலங்களில் கோரத்தாண்டவமாடிய ஈபிக்காரன்களிற்கும் படுகொலைகள் பல புரிந்த மண்டையன் குழுவிற்கும் தலைமை தாங்கிய சுரேஷ் பிரேமச்சந்திரன் போனமுறை நடந்த  தேர்தலில்களில் தோற்று போனது மகிழ்ச்சியை தந்தது. 

விடுதலைப் புலிகளால் ஞானஸ்னானம் கொடுக்கப்பட்டு மீண்டும் தமிழ் தேசிய அரசியலில் இணைந்திருந்து, மிகக் தீவிரமான தமிழ் தேசிய நிலைப்பாடு எடுத்திருந்த அவரை, இருபத்தைந்து ஆண்டுகள் கடந்த பிற்பாடும் தமிழ் மக்கள் தண்டிக்க தயாராகவே  இருந்திருக்கிறார்கள் என்பது அவரோடு இணைந்து அரசியல் பயணம் மேற்கொள்ள நினைத்த நினைக்கும் தரப்புக்களிற்கு எச்சரிக்கையாக இருக்கட்டும். Friday, 1 February 2019

சென்னை பயணக் குறிப்புக்கள்


ஒரு முறை போய் வந்தாலும் மீண்டும் மீண்டும் பல முறைகள் போகத் தூண்டும் பெருமை சில நகரங்களிற்கு மட்டுமே இருக்கும். விட்ட குறை தொட்ட குறை வைத்து விட்டு வந்த கணக்கில், இந்த நகரங்களும் உங்களை மீண்டும் வா வா என்று வரவேற்கக் காத்திருக்கும். 

எங்கட யாழ்ப்பாணத்தில் இருந்து கூப்பிடு தொலைவில் இருக்கும் நம்ம சென்னையும் அந்த ரகத்தில் அடங்கும் நகரங்களில் ஒன்று. 2005ல் முதல் முறையாக சென்னைக்கு சென்றதில் இருந்து, இதுவரை ஜந்து தடவைகள் சென்னைக்கு போய் வந்தாகி விட்டது, இன்னும் சென்னை அலுக்கவில்லை. அடுத்த முறை போகும் போது இன்னென்ன செய்ய வேண்டும் என்று மனம் இப்பவே பட்டியலிடத் தொடங்கி விட்டது.

“நாங்க இந்தியாக்கு போகேல்லை, ஏன் சென்னைக்கும் போகேல்ல, அங்கிருக்கும் ரங்கநாதன் தெருவிற்கு தான் போறனாங்கள்” என்று புடவைக் கடைகள் நிறைந்திருக்கும் தியாகராஜ நகரில் இருக்கும் ரங்கநாதன் தெருவை குத்தலாக பலருக்கு நக்கலாக சொன்னாலும், சிங்காரச் சென்னை படைக்கும் பலவிதமான அனுபவங்களை ரசித்து ருசித்து அனுபவித்து விட்டோம், இன்னும் அனுபவிக்க நிறைய இருக்கிறது. 

மனிசி shopping shopping என்று அலைந்தாலும், அங்கே சுளித்து இங்கே நெளித்து, சென்னை படைக்கும் தனித்துவமான அனுபவங்களை அனுபவிக்கவும், சரித்திர பிரசித்தி பெற்ற இடங்களை தரிசிக்கவும் தவறுவதேயில்லை. 


புறப்படுகை

2005ல் இந்தியாவிற்கு போக visa எடுப்பது என்றால் வாழ்க்கை வெறுக்கும். நீளமான application formஐ கை உளைய உளைய நிரப்பி, Sri Lankan origin என்றால் இன்னுமொரு பிறம்பான form நிரப்பி, மெல்பேர்ணில் இருக்கும் இந்திய துணைத் தூதுவரலாயத்தில் மணிக்கணக்கில் வரிசையில் காத்து நின்று விண்ணப்பித்து, அதில் அவர்கள் பிடித்திருக்கும் நொட்டை நொசுக்குகளை சீர்பண்ணி, மறுபடியும் விண்ணப்பித்து, மூன்று நாலு தடவைகள் தூதுவராலயத்தின் வாசற்படி ஏறியிறங்கி, என்று ஏன்டா இந்தியாவிற்கு போகிறோம் என்று எண்ண வைக்கும் அந்த process கடந்தாண்டு அமுலாக்கப்பட்ட eVisa முறை இலகுவாக்கி விட்டது. 

புதிய eVisa நடைமுறை இலகுவானாலும், சுளையாக USD 80 கறந்து விட்டுத் தான் visaவை, emailல் அனுப்பி வைப்பார்கள். நவீனமயப்படுத்தப்பட்ட அண்ணா சர்வதேச விமான நிலையத்தின் Immigration பகுதியில் eVisaவில் வருபவர்களிற்கு தனியான கியூ இருந்தது. அந்த பகுதியில் கடமையாற்றும் அதிகாரிகள் ஆஞ்சு ஓஞ்சு, passport பார்த்து, படம் பிடித்து, கைவிரல் ரேகைகள் பதிவு செய்து, passportல் இந்திய விசா குத்தி எங்களை வெளியே செல்ல விட, இன்னும்  இரு அதிகாரிகள் சபை விலத்தும் தொந்திகளோடு வாசலை அடைந்துக் கொண்டு கதிரையில் அமர்ந்திருந்தார்கள். என்னடா என்று கேட்டால், பத்தடிக்கு முதல் அந்த அதிகாரி குத்திய விசாவை இந்த அதிகாரி மறுபடியும் check பண்ணுறாராம்.

எல்லாவற்றிற்கும் வசதியாக வழமை போல் தியாகராய நகரில் தான் இந்தமுறையும் Hotel எடுத்திருந்தோம். காலை சாப்பாட்டிற்கு கீழே இறங்கி வர, மெல்பேர்ணில் பார்த்த பல தெரிந்த முகங்கள் நெய்த் தோசையை சாம்பாரில் பிசைந்து கொண்டிருந்தார்கள். அநேகமானவர்கள் மார்கழி மாதத்தில் சென்னையில் அரங்கேறும் இசை நிகழ்ச்சிகளை காணவும், தங்கள் பிள்ளைகளிற்கு தலைசிறந்த ஆசான்களிடம் சிறப்பு இசைப் பயிற்சிகளை வழங்கவும் தான் சென்னைக்கு  வந்திருந்தார்கள்.


சென்னை மெட்ரோ

காலம்பற சாப்பாட்டுக்கு வெந்தய தண்ணியை ஒரு மிடாய் குடித்து விட்டு, மொறு மொறு நெய் தோசை, வெண் பொங்கல், omlette என்று ஒரு கட்டு கட்டினோம். “தம்பி, சூடா ஒரு நல்ல madras filter காப்பி தாங்கோ” என்று கேட்டு வாங்கிக் குடித்து, அன்றைய நாளை கழிக்க எங்களை தயார்படுத்திக் கொண்டோம்.

மனிசியை காரில் எற்றி, “பத்திரமா போட்டு வா ராசாத்தி, credit card பாவம், பார்த்து பத்திரமாக உம்மட கை நோகாமல் பாவியும்” என்று வாழ்த்தி,  ரங்கநாதன் தெருவிற்கு வழியனுப்பி விட்டு, நாங்கள் சென்னையின் அடையாளமான ஓட்டோவில் ஏறி, அசோக் நகரில் இருக்கும் புதிய Metro ரயில் நிலைத்திற்கு சென்றோம். 

ஓட்டோ ஓட்டுநர் சந்தோஷை தனது இருக்கையில் இருத்தி வைத்து ஓட்டோவை இயக்க, Disnleylandலும் கிடைக்காத புதிய ride அனுபவத்தில் சந்தோஷும் மகிழ்ச்சியாக சென்னையை ரசிக்கத் தொடங்கினான்.சுத்தமாக இருந்த Metro நிலையத்தில் ஒரு பக்கம் automatic ticket machineல் கல்லூரி மாணவர்கள் நுழைவுச்சீட்டை எடுத்துக் கொண்டு, அதை barrierல் swipe பண்ணி, உள்ளே நுழைய, நாங்கள் customer serviceல் கேட்டு விசாரித்து நேரு parkற்கு டிக்கட் வாங்கினோம். Chennai Metroவில் நாங்கள் கேட்ட மோட்டுக் கேள்விகளிற்கு பொறுமையாக பதிலளித்து, எங்கு போக வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று அன்போடு அலுவலர்கள் வழிகாட்டினார்கள். சென்னையில் இந்த முறை கவனித்த முக்கிய விடயங்களில் ஒன்று, போகும் இடங்களில் மேம்பட்டிருக்கும் customer service. முன்னைய காலங்களில் ஏனோ தானோ என்ற மனப்பாங்கோடு வாடிக்கையாளர்களை அணுகிய போக்கு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.

சொன்ன நேரத்திற்கு சரியாக metro ரயில் வந்திறங்க, முதலாவது பெட்டியில் ஏறி, சென்னையின் ஒரு பக்கத்தை சுற்றி வந்தோம். கோயம்பேடு சந்தையை Metro தாண்டும் போது தான், அதன் விஸ்தீரணமும் பரபரப்பும் வியக்க வைத்தது.

Undergroundல் அமைந்திருந்த நேரு Park metro ரயில் நிலையத்தில் இறங்கி, platform மாறி, விமான நிலையம் பக்கம் போகும் ரயிலில் ஏறி, மறுபடியும் அசோக் நகர் வந்து, 96 திரைப்படம் பார்த்த போது Chennai metroவில் போக வேண்டும் என்று எழுந்த ஆசையை தீர்த்துக் கொண்டோம்.


சாப்பாடு, புத்தகம், சினிமா

சென்னையென்றால் நமக்கு நல்ல ருசியான விதம் விதமான தமிழ்ச் சாப்பாடும், புத்தம் புதிய தமிழ்ச் சினிமாவும், தரமான தமிழ் புத்தகங்களும், மெரீனா கடற்கரையும் தான். சென்னையில் சாப்பாட்டு விலை மளமளவென ஏறிவிட்டது, ஆனால் ருசி மட்டும் எப்பவும் போல அப்படியே இருக்கிறது. 

செட்டிநாடு உணவகம் ஒன்றில், ஆட்டுக்கால் ரசத்தை உறிஞ்சி விட்டு, கோழிக்காலை கடித்துக் கொண்டே ஆம்பூர் புரியாணியை ஒரு கட்டுக் கட்ட, தொண்டை வரை வயிறு நிரம்பி ஏவறை வரும். ஆனாலும் இந்தக் கெலிப்பட்ட நாக்கு தான் கெடும்பில் “சுடச்சுட கேசரி கொண்டு வாங்கோ” என்று கேட்டுத் தொலைக்கும்.

தமிழ் புத்தகம் வாங்க T நகரிலிருந்து KK நகரில் இருக்கும் Discovery Book Palaceற்கு Trafficல் சிக்கி சிதறி போக வேண்டியதாகி விட்டது. முந்தைய காலங்களில் தமிழ் புத்தகங்களை அதிகம் கொண்டிராத, Mount Roadல் இருக்கும் Higgin Botham புத்தகசாலையில் இப்போது தமிழிற்கு தனியறை ஒதுக்கி, எழுத்தாளர்களின் வரிசைப்படி நிறைய தமிழ் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்ததும் நல்ல மாற்றம்.  

இந்தமுறை சென்னைக்கு டிசம்பர் கடைசி வாரத்தில் போனதால், ஜனவரி முதல் வாரத்தில் நடக்கும் சென்னை புத்தக கண்காட்சியை தவறவிட்டது வருத்தமளித்தது. சென்ற முறை போன போது சென்னை புத்தகத் திருவிழாவில் சங்கமித்த அனுபவத்தையும் அள்ளிக் கட்டிய புத்தகங்களை T’Nagar தபால் நிலையத்திற்கு போய் தபாலில் ஒஸ்ரேலியாவிற்கு அனுப்பியதையும் மறக்க முடியாது. 

புதிய புதிய சினிமா தியேட்டர்கள் shopping mallகளில் முளைத்திருந்தாலும், கடந்த வருடத்தின் மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றான “கனா” படம் பார்க்கப் போனது, நாங்க எப்பவும் போகும் ராயப்பேட்டை சத்யம் தியேட்டரிற்குத் தான். 

சத்யம் தியேட்டரில் மட்டுமன்றி வேறு பல தியேட்டர்களிலுல் 25 நாட்கள் கடந்தும் ரஜினிகாந்தின் 2.0 படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்பதையும் வரலாறு பதிவு செய்துவிடுவது சிலருக்கு கசக்கத் தான் போகிறது.கோவிந்தா.. கோவிந்தா

வழமையாக சென்னையில் இருந்து காலம்பற நாலு மணிக்கு திருப்பதிக்கு வெளிக்கிட்டா, கோவிந்தா கோவிந்தா சொல்லி, நீண்ட வரிசையில் நின்று, மெல்ல மெல்ல நகர்ந்து, ஏழுமலையானின் தரிசனம் பார்த்து, லட்டும் வாங்கிக் கொண்டு, பின்னேரம் ஆறு ஆறரைக்கு சென்னை திரும்பி விடுவோம். 

இந்த முறை திருப்பதியானிற்கு எங்களில் என்ன கோபமோ தாபமோ தெரியாது, கிறிஸ்மஸிற்கு முதல் நாள் காலையில் திருப்பதி தேவஸ்தானம் போய் இறங்கி, பொறுமையை கடுமையாக சோதித்த வரிசையில்  இடிபட்டு நெரிபட்டு, வெங்கடசலாபதியின் அருமையான தரிசனம் காணவே எட்டு மணித்தியாலங்கள் கடந்து விட்டது. திருப்பதி லட்டையும் வாங்கிக் கொண்டு மீண்டும் சென்னை நோக்கி புறப்படும் போது நேரம் ஆறரை தாண்டி விட்டது.

திருப்பதி முடித்து வந்து, சாந்தோம் St Thomas பேராலயத்தில் இரவு பதினொரு மணிக்கு தொடங்கும் கிறிஸ்மஸ் நள்ளிரவு திருப்பலிக்கு வேறு போகவேண்டும். எங்களது வாகன ஓட்டுநருக்கு கர்த்தர் தான் காதிற்குள் ஏதோ சொல்லியிருக்க வேண்டும், பகலில் ஆடிப்பாடி வாகனம் ஓட்டியவர், இரவில் புயலாக பறந்தார், சில இடங்களில் பயமும் காட்டினார், பத்தரைக்கு எங்களை பத்திரமாக கொண்டு வந்து சென்னையில் சேர்த்து விட்டார்.

ஓடோடிப் போய், வேட்டியை களைந்து, குளித்து விட்டு, Pants Shirts ற்கு மாறி, ஓட்டோவை பிடித்து, “சாந்தோம் சர்ச்சுக்கு போங்க” என்றோம். கண்ணில் படும் அழுக்குகளை இரவு மறைத்து விடுவதால், சென்னை இரவில் தான் அதிகம் அழகாக இருக்கும். இரவை ரசித்தபடி, மயிலாப்பூர் தாண்டி சாந்தோம் பேராலயத்தின் வாசலிலேயே கொண்டு வந்து இறக்கி விட்டார் அந்த நல்ல ஓட்டோ ஓட்டுநர்.


சாந்தோமில் கிறிஸ்மஸ்

இயேசு நாதரின் 12 சீடர்களில் ஒருவரான St. Thomasன் கல்லறை மீது கட்டப்பட்ட பேராயலயம் (Basilica) தான் சாந்தோம் தேவாலயம். Rome நகரில் St. Peterன் கல்லறை மீது தான் கத்தோலிக்க தேவாலயத்தின் அதியுயர் மத மீடம் வீற்றிருக்கிறது. “பேதுரு (Peter) வாகிய பாறையின் மேல் என் திருச்சபையை எழுப்புவேன்” என்று யேசு வாக்குத்தத்தம் பண்ணிய அதே St. Peterன் கல்லறை வத்திக்கானில் பேராலயமாக உருப்பெற, கிறிஸ்துவின் நற்செய்தியோடு தென்னிந்தியாவிற்கு வந்த தோமாவின் கல்லறை மேல் சாந்தோம் பேராயலயம் வீற்றிருக்கிறது.

கேரளாவில் காலடி எடுத்து வைத்த தோமையர், அங்கு ஏழு திருச்சபைகளை நிறுவி விட்டு, சோழ மண்டலத்தினூடாக பயணித்து கிழக்கு கடற்கரையான மயிலாப்பூரை அடைந்தாராம். அங்கும் பல அற்புதங்களை நிகழ்த்தி, நற்செய்தியை அறிவித்து, மயிலாப்பூர் மகாராஜாவையும் மனந்திரும்ப வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில், ஈட்டியால் குத்தப்பட்டு இறக்க, அவரது கல்லறை எழுப்பப்பட்ட இடத்தில் தான், சாந்தோம் பேராயலம் கட்டப்பட்டிருப்பதாக சாந்தோம் ஆலயத்தின் வரலாறு பதிவாகிறது.

கிறிஸ்து பாலகன் பிறக்கப் போகும் நள்ளிரவை நேரம் நெருங்கிக் கொண்டிருக்க, மக்கள் கூட்டம் கூடத் தொடங்கியது. சரியாக பதினொன்றேகாலுக்கு தமிழில் Christmas carols பாடத் தொடங்கினார்கள். ஒரு பாட்டு Jazzல் பாடினார்கள், அடுத்த பாட்டு rock’n’rollல் துள்ளியது, இன்னொறு பாட்டு கர்நாடக சங்கீதத்தை தழுவியது, கடைசியில் ஒன்று மெல்லிசையில் அரவணைத்தது. விதம் விதமான genereகளில் தமிழில் Christmas carols கேட்ட அனுபவம் புதியது, அலாதியானது. 

பேராலயத்திற்கு வெளியே ஒழுங்கமைக்கப்பட்டிருந்த மேடையில், முழுமதியின் வெள்ளொலியில் கடற்காற்று இதமாக வீசிக் கொண்டிருக்க, பாலன் யேசுவின் பிறப்பை கொண்டாடிய அந்த அற்புத கணங்களின் அனுபவம் அற்புதமானது. 

நள்ளிரவிற்கு சற்று முன்னர், சென்னையின் பேராயர், மக்களினூடாக பவனியாக வந்து மேடையில் ஏறி, அழகு தமிழில் கிறிஸ்மஸ் திருப்பலி ஒப்புக்கொடுக்க தொடங்கினார். கிறிஸ்துவின் பிறப்பை பிரதிபலிக்க ஒரு குழந்தை பொம்மையை ஒரு கணவனும் மனைவியும் பவனியாக கொண்டு வந்து, தொழுவத்தில் வைக்கும், இந்திய இலங்கை கத்தோலிக்க ஆலயங்களில் அரங்கேறும் கிறஸ்மஸ் சடங்கும் நடந்தேறியது.

சென்னையின் பேராயர் அந்தோனிசாமி நத்தார் வாழ்த்து செய்தி வழங்கும் நேரம் நெருங்கியதும், தொலைக்காட்சி cameraக்கள் மேடையை சூழ்ந்து கொண்டு, திருப்பலி மேடையையும் ஆயரையும் எங்களது கண்களில் இருந்து மறைத்து விட்டார்கள். திருப்பலியை சற்று நேரம் இடை நிறுத்தி ஊடகவியலாளர்களை மேடையிலிருந்து இறங்குமாறு பணிவுடன் ஆலயத்தின் பங்கு தந்தை வேண்டிக்கொள்ள வேண்டியதாகி விட்டது.

“இறைவனிற்கு நன்றியாயிரு, பிறரில் கருணையாயிரு, உலகத்திற்கு நம்பிக்கையாயிரு (be grateful to god, be compassionate to others, be a hope to the world)” எனும் தொனிப்பொருளில் சென்னை பேராயர் ஜோர்ஜ் அந்தோனிசாமி நிகழ்த்திய தமிழ் பிரசங்கம், கன காலத்திற்கு பின்னர் செவிமடுத்த ஒரு மிகவும் அருமையான தமிழ் பிரசங்கம். 


விடைபெறும் போது

சென்னையில் ஒரு அதிகாலை வேளையில் உதயசூரியன் விழித்தெழும் பொழுதை அனுபவத்துக் கொண்டே, அந்த அழகிய நகரில் மகிழ்ந்திருந்த நாட்களை இரை மீட்டிக் கொண்டே, சென்னை மாநகரை விட்டு மீண்டும் ஒரு முறை விடைபெற விமான நிலையம் நோக்கி வரும் போது, சென்னை விமான நிலையத்தடியில், Fortune 500 நிறுவனங்களில் 67 நிறுவனங்கள்  தமிழ்நாட்டில் இயங்குவதாக பறைசாற்றும் பென்னாம் பெரிய Billboard ஒன்று கவனத்தை ஈர்த்தது. 

அறுபதுகளில் தனிநாடு கேட்ட தமிழ்நாடு இன்று உலகில் வகிக்கும் வகிபாகத்தையும், எண்பதுகளில் தனி ஈழம் காணப் புறப்பட்ட எங்களின் இன்றைய நிர்க்கதியையும், எண்ணிக் கலங்கிக் கொண்டே, பிதுங்கி வழிந்த கனமான suitecaseகளை check in counterல் ஏற்றினால், ஒரு சிறப்பான தரமான சம்பவம் எங்களுக்காக காத்திருந்தது...

அது...சிரிலங்கன் airlines நிறுவனத்திற்கு பணியாற்றும் இந்திய பணியாளர்களுடன் Excess Luggage தொடர்பாக நிகழ்ந்த கசப்பான அனுபவம். 

சென்னை... எத்தனை முறை போனாலும் சலிக்காத நகரம்..மாநகரம்.