Friday, 25 January 2019

அவர்களின் பயமும் எங்களின் கனவும்


சிங்கள தொலைக்காட்சியான ஹிருவின் அரசியல் நேர்காணல் நிகழ்ச்சியான சலக்குணவில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்து கொண்டு, தனிச் சிங்களத்திலேயே உரையாடியது, துணிச்சலானது. 

சுமந்திரன் கலந்து கொண்ட நோக்கமும், நிகழ்ச்சியின் கருப்பொருளும் “தமிழ் மக்களின் பிரச்சினைகளை தென்னிலங்கைக்கு விளங்கப்படுத்துதல்” என்பதாக அமைய, கேள்வி கேட்ட மூன்று சிங்கள ஊடகவியலாளர்களின் ஊடாட்டமோ, சுமந்திரனை மடக்கி மட்டம் தட்டுவதிலும், தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளை மலினப்படுத்துவதிலுமே மையம் கொண்டிருந்ததால், சுமந்திரனின் துணிச்சலான செயற்பாட்டை, “வரவேற்கத்தக்கது” என்று கூறுவது பொருத்தமாகப்படவில்லை. 

நிகழ்ச்சியின் முதற் கேள்வியே, நீங்கள் எங்கு கல்வி கற்றீர்கள் என்று தொடங்கி, அவர் கொழும்பில் கற்றதை விபரித்ததும், அப்படியானால் தமிழர் என்பதால், தமிழ் மொழியை பேசுவதால் நீங்கள் ஏதாவது பாதிப்பிற்கு உள்ளாகினீர்களா என்பதாக அமைகிறது. 

1983 இனக்கலவரத்தில் யாழ்ப்பாணத்திற்கு கப்பலில் ஏற்றி அனுப்பப்பட பல்லாயிரம் தமிழர்களில் அடங்கும் சுமந்திரனும், “ஓம், நிறையவே, தமிழன் என்றபடியால் நான் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டேன்” என்று மறுமொழி தருவதுடன் அவரது பதிலடி ஆரம்பமாகிறது.

ஊடகவியலாளர்கள் மறுவளமாக வந்து, வடக்கில் கல்விகற்ற பலர் இன்றும் இலங்கையில் பல்வேறு உயர் தொழில்துறைகளில் வீற்றிருக்கிறார்கள், அதேவளை இந்தத் தீவில் தமிழ் மக்களிற்கு பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக கூறுகிறார்கள், அவ்வாறாயின் இந்த தொழில்துறைகளில் உள்ளவர்களின் முன்னேற்றத்திற்கு அவர்களது தாய்மொழி தடங்கலாக இருக்கிறதா என்ற அடுத்த கேள்விக்கும், “ஓம்” என்ற பதிலும் விளக்கமும் விடையாகிறது.

தெற்கில் வாழுபவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளும் வடக்கில் வாழுபவர்களின் பிரச்சினைகளும் ஒன்று என்று நீங்கள் நினைக்கவில்லையா என்ற கேள்வியை சிங்கள ஊடகவியலாளர் கேட்கும் போதே, எழுபதாண்டுகளிற்கு மேலாக நாங்கள் போராடிவரும் அரசியல் போராட்டத்தை, அதுவும் முப்பதாண்டுகளிற்கு மேலாக பல்லாயிரக்கணக்கான உயிர்களை ஆகுதியாக்கி நிகழ்த்திய விடுதலைப் போராட்டத்தின் தார்ப்பரியத்தை இன்றும் சிங்களம் புரிந்து கொள்ள மறுக்கிறது என்ற எண்ணம் தான் மேலெழுகிறது. 

விடுதலைப் புலிகள் புரிந்தது பயங்கரவாதம் தான், அதேவேளை அப்பாவி மக்களை துன்புறுத்தி அரசாங்கம் அரங்கேற்றியதும் பயங்கரவாதம் தான் என்று சுமந்திரன் அளித்த நேரடியான பதிலை ஊடகவியலாளர்கள் எதிர்பார்க்கவில்லை போலிருந்தது.

இலங்கையின் இரண்டு பிரதமர்கள் தமிழர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை கிழித்தெறிந்த பின்னணியிலும், 1972ன் குடியரசு யாப்புருவாக்கத்தில் தமிழர்கள்  பங்களிப்பு புறக்கணிக்கப்பட்ட பின்புலத்திலுமே, தமிழர்கள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள் என்பதற்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டும் என்று சுமந்திரன் ஆணித்தரமாக சிங்களத்திலே கருத்துரைத்தது, சிங்களத்திற்கு புரிந்தருக்குமா என்பதும் சந்தேகமே. 

நெல்சன் மண்டேலா தான் ஆயுதம் ஏந்தியதை நியாயப்படுத்திய கதையை சுமந்திரன் சொல்லப் போக, “அப்போ நீங்கள் பிரபாகரனையும் மண்டேலாவை போல தூய்மைப்படுத்த முனைகிறீர்களா” என்று ஊடகவியலாளர் கேட்ட தொனியில் பொதிந்திருந்த வன்மமும் ஆத்திரமும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருப்பவர்களையும் பயமுறுத்தியது. 

இருக்கும் அதிகாரங்களை வைத்துக் கொண்டு வட மாகாண சபையை உங்களால் திறம்பட இயக்க முடியவில்லை என்ற எள்ளல் நிறைந்த கேள்விகளிற்கு, எங்கள் தரப்பு குறைபாடுகளிற்கு நாங்கள்  பொறுப்பேற்கிறோம், அதேவேளை ஆளுநர்கள் போட்ட முட்டுக் கட்டைகளும், சட்டத்தில் உள்ள குறைபாடுகளும் வடமாகாண சபை திறம்பட இயங்காமைக்கு காரணங்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார் சுமந்திரன். 

நீங்கள் தான் தமிழர்களின் பிரதிநிதிகள் என்று 
கூறுகிறீர்கள், ஆனால் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் உங்களது வாக்கு வங்கி சரிந்து விட்டதே என்று குத்திகாட்டிய ஊடகவியலாளருக்கு, நாங்கள் அமைக்க உதவிய நல்லாட்சியினால் எமது மக்களுக்கு அரசியல் தீர்வோ பொருளாதார நன்மைகளோ கிடைக்கவில்லை. அதனால் எங்கள் மேல் அவர்களிற்கு ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக, எங்களை விட தீவிரவாத சிந்தனை கொண்ட கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களித்தார்கள் என்று வெளிப்படையாகவே சுமந்திரன் பதிலளித்தார்.

தமிழ் மக்கள் என்றுமே தங்களது உரிமைகளுக்கு முன்னுரிமையளித்துத் தான் வாக்களிப்பார்கள், தெற்கில் உள்ளவர்களைப் போல தங்களது அன்றாட பிரச்சினைகளை முன்னிறுத்தி வாக்களிக்க மாட்டார்கள் என்பதையும் தென்னிலங்கைக்கு சுட்டிக்காட்ட சுமந்திரன் தவறவில்லை.

 தமிழ் மக்கள் என்றுமே தேசிய கட்சிகளிற்கு வாக்களிக்க மாட்டார்கள், இந்த தீர்வு முயற்சியில் நாங்கள் தோற்றுப் போனால், எங்களை விட தீவிர சிந்தனை கொண்டவர்களே இனிவரும் தேர்தல்களில் வென்றுவிடுவார்கள் என்று தென்னிலங்கையை பயமுறுத்தவும் சுமந்திரன் பின்னிற்கவில்லை. 

புதிய அரசியல் யாப்புருவாக்கம், நிபுணர் குழு அறிக்கை, ஏக்கிய ராஜ்ஜிய / ஒருமித்த நாடு சொல்லாடல்கள், சமஷ்டி தான் உங்களுக்கு வேணுமா அது பிரிவினைக்கு வழிவகுக்குமே, என்பன தொடர்பான கேள்விகளும் அதற்கான தெளிவுபடுத்தல்களும்,இந்த நேர்காணலில் பெரும் பகுதிகளை ஆக்கரமித்திருந்தது.


இந்த நேர்காணலில் இடம்பெற்ற பெரும் பகிடி என்னவென்றால், தமிழ் தேசியவாதிகள் ஏக்கிய ராஜ்ஜிய/ ஒருமித்த நாடு, என்பது ஒற்றையாட்சி தான், சுமந்திரன் சுத்துறார் என்று கதற, ஒரு சிங்கள ஊடகவியலாளரோ “உண்மையை சொல்லுங்கள்...நீங்கள் தனி நாட்டுக்கு வழிவகுக்க தான் ஏக்கிய ராஜ்ஜிய / ஒருமித்த நாடு என்ற ஐஸ்கிரீமை பூசி ஏமாற்றுகிறீர்கள்.. அது தானே” என்று கேட்பது தான். 


ரணகளமான நேர்காணலின் நடுவிலே, ஆனந்தசங்கரியும் தேவானந்தாவும் தங்களுக்கு தெரிந்த அரைகுறை சிங்களத்தில் அரற்றி, தங்களுக்கு அளிக்கப்பட்ட நகைச்சுவை நடிகர்களிற்கான கதாபாத்திரத்தில் செவ்வனே கலக்கி விட்டு போனார்கள்.   


நிகழ்ச்சி ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே  சூடு பிடிக்க தொடங்கிய நேர்காணலின் உச்சக்கட்டம், அண்மையில் யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் நிகழ்த்திய உரையின் ஒரு சிறிய பகுதியில், “(நாடு) பிரிந்தாலும் பிரியலாம்” என்று போற போக்கில் சொல்லி போன சொல்லாடலின் காணொலியை போட்டுக் காட்டி விட்டு, “நீங்கள் நாடு பிரிய வேண்டும் என்று உள்ளார விரும்புகிறீர்கள்” மூன்று ஊடகவியலாளர்களும் ஜனாதிபதி சட்டத்தரணியான சுமந்திரனை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி நடாத்திய குறுக்கு விசாரணை தான்.

யாழ்ப்பாண மண்ணில் வைத்து ஒருமித்த நாட்டுக்குள் தீர்வு காண நாங்கள் இதய சுத்தியுடன் அதை அணுக வேண்டும், எங்களது செயல்களில் மட்டுமல்ல சிந்தனையிலும் நாங்கள் சுத்தமாக இருக்க வேண்டும், ஆதலால் நாங்கள் இன்னும் தமிழீழ கனவோடு பயணிக்க கூடாது என்று தமிழ் மக்களிற்கு பிரசங்கம் வைத்து விட்டு வந்த சுமந்திரனிற்கு, 

“நாடு பிரிந்துவிடும் என்பது அவர்களிற்கு (சிங்களவர்கள்) இருக்கிற ஒரு பயங்கரமான பயம், அது ஏன் இருக்கிறது என்று எனக்கு தெரியாது, பிரிந்தாலும் பிரியலாம்” என்ற சொல்லாடலில் “பிரிந்தாலும் பிரியலாம்” என்று சுமந்திரன் கூறியதை உறுவி எடுத்து வைத்துக் கொண்டு, இலங்கையின் முதன்மையான சட்டத்தரணிகளில் ஒருவரான சுமந்திரனை, தொலைக்காட்சி நேர்காணலில் குறுக்கு விசாரணை செய்ய கொழும்பில் மூன்று சிங்கள ஊடகவியலாளர்கள் காத்திருந்தார்கள். 

யாழ்ப்பாணத்தில் பிறந்து, கொழும்பில் படித்து, அங்கேயே வழக்கறிஞராக திறம்பட பணியாற்றி, கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் ஒட்டுமொத்த இலங்கையின் ஜனநாயகத்தையே உயர் நீதிமன்றில் வழக்காடி காப்பாற்றி, பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் தீர்வை வரைந்து, அதற்காக முழுமையான இதய சித்தியுடன் கடந்த பல ஆண்டுகளாக செயலாற்றும் சுமந்திரன் கூறிய, quey sera sera ரக “பிரிந்தாலும் பிரியலாம்” என்ற இரு வார்த்தைகளை வைத்துக் கொண்டு அவரை சல்லடை போடும் சிங்களம் தான் ஒட்டு மொத்த தமிழினித்திற்குமான ஒரு நியாயபூர்வமான அதிகார பரவலாக்கத்திற்கு இணங்கப் போகிறது? 

ஒருமித்த பிளவுபடாத நாட்டுக்குள் எங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து தாருங்கள், உங்களுக்கு உரியதை நாங்கள் கேட்கவில்லை, எங்களது உரிமையைத் தான் கேட்கிறோம் என்று பாராளுமன்றத்திலும் வெளியிலும் சிங்களவர்களை நோக்கி கெஞ்சும் தொனியில் அறைகூவல் விட்ட சுமந்திரனிற்கு, என்னதான் இருந்தாலும் நீரும் தமிழன் தான், ஆகவே நீரும் எப்படியும் நாட்டை பிரிக்கத் தான் பார்ப்பீர், என்ற தொனியில் வகுப்பெடுத்தார்கள் ஹிரு தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள். 

அவர்கள் பயப்பிடுகிறார்கள் இவர்கள் கைவிடச் சொல்கிறார்கள் என்பதற்காக நாங்கள் எங்களது தமிழீழ கனவை கலைத்து விடமுடியாது, தொலைக்கவும் மாட்டோம். தனித் தமிழீழத்திற்கான போராட்டத்தில் நாங்கள் தோற்றது உண்மை, எங்களது இலக்கு தவறிப் போனதும் யதார்த்தம், இன்றைய களயதார்த்தை அனுசரித்து பிரிவுபடாத நாட்டுக்குள் எங்களது சுயநிர்ணய உரிமைகளை உள்ளடக்கிய தீர்வை ஏற்க நாங்கள் தயாராகவே உள்ளோம் என்பதும் சத்தியம். 

அதற்காக, கனவு காணும் எங்களின் உரிமையையும் நாங்கள் ஏன் விட்டுத் தரவேண்டும்? எங்களது அப்பப்பாக்களும் அம்மம்மாமாரும் ஊட்டி வளர்த்த கனவல்லவா அந்தக் கனவு? எங்களது அம்மாமாரும் அப்பாமாரும் கண்ட அதே கனவல்லவா அந்தக் கனவு? எங்களது அண்ணாமாரும் அக்காமாரும் தம்பிமாரும் தங்கச்சிமாரும் இந்தக் கனவை நனவாக்கத் தானே தங்களை ஆகுதியாக்கினார்கள்? பக்கத்து வாங்கில் இருந்து படித்த நண்பனும் ஒன்றாக கிரிக்கட் விளையாடிய தோழனும் புத்தகத்தையும் batஐயும் எறிந்து விட்டு ஓடியது  இந்தக் கனவை நனவாக்கத் தானே?

இன்றைய நாட்டு நிலைமை எங்களுக்கு நன்றாக விளங்கும். போரழித்து விட்டுப் போன எங்களது வாழ்வாதாரங்களையும் மொழியையும் கலாச்சாரத்தையும் சமூக கட்டுக்கோப்புக்கள்ளயும் மீளக்கட்டியமைக்க வேண்டிய முக்கியம் எங்களுக்கு நன்றாக புரியும்.  எங்களுக்குள் உறங்கும் எங்களின் தாயகக் கனவு நிகழ்கால தீர்வு முயற்சிகளுக்கு நிட்சயமாக இடைஞ்சலாக இருக்க மாட்டாது, இருக்கவும் முடியாது.

தமிழீழக் கனவு எங்களுக்குள் பத்திரமாக இருக்கட்டும், அந்தக் கனவை நாங்கள் எங்களுக்குள் ஆழமாக புதைத்து வைத்திருப்போம், எங்களது அடுத்த சந்ததிக்கும் அந்தக் கனவை நாங்கள் கடத்தி விட்டு தான் நாங்கள் கண் மூடுவோம், என்றோ ஒரு நாள் எங்களின் கனவு நனவாகட்டும். 

Que sera, sera
Whatever will be, will be
The future's not ours to see
Que sera, sera
What will be, will be

“பிரிந்தாலும்.. பிரியலாம்”


பி.கு
நேர்காணலின் முழுமையான வடிவம்