Friday, 30 November 2018

புள்ளினங்காள்...
தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளிற்கு மேலாக கலக்கி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் பட்டாளம் அளப்பரியது, அட்டகாசமானது. ரசிகர் பட்டாளம் என்று இங்கு குறிப்பிடுவது ரஜினிகாந்தின் வெள்ளித்திரையில் நடிக்கும் நடிப்பைத் திரையில் கண்டு ரசித்து, மகிழ்ந்து ஆரவாரித்து, அதைப் பற்றி காலமெல்லாம் அலட்டிக் கொண்டிருப்பவர்களை மட்டும் தான், ரஜினிகாந்தின் அரசியலை இதில் கலக்கத் தேவையில்லை, கலக்கவும் கூடாது.

ரஜினிகாந்திற்கு இருக்கும் ரசிகர்களை எந்தவொரு பெட்டிக்குள்ளோ வட்டத்திற்குள்ளோ அடக்க முடியாது. வயது வேறுபாட்டில்லாது, சமூக அந்தஸ்து பார்க்காது, பால் வேறுபாடுகள் களைந்து, கல்வி தராதரத்தை காற்றில் பறக்க விட்டு விட்டு, ரஜினிகாந்த் ரசிகன் என்ற ஒற்றைப் புள்ளியில் ரஜினிகாந்த் எனும் காந்த சக்தியால் ஈர்க்கப்படுபவன் தான் ரஜினிகாந்த் ரசிகன்.

ரஜினிகாந்த் ரசிகனாக ஒருவன் எப்போது ஆகிறான், ஏன் இப்படி ஆனான், எதற்காக அப்படி ஆகிவிட்டான் என்று யாருக்குமே தெரியாது, ரஜினிகாந்த் ரசிகனுக்கும் தெரியாது. முதல் முதலாக பாட்ஷா படத்தை பார்த்து வளர்ந்தவனும் பொல்லாதவன் படத்தை பற்றி கதைப்பான். இந்த நூற்றாண்டில் பிறந்து கோச்சடையான் பார்த்த குழந்தையும் அண்ணாமலை படத்தை ஆறு தரமாவது பார்த்திருக்கும்.


சிவாஜி, MGR பிறகு சிவக்குமார், கமல்ஹாசன் என்று வெள்ளைத் தோல் நாயகர்களின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் சினிமாவில் தோன்றிய முதலாவது கறுப்பு ஹீரோ ரஜினிகாந்த் என்பதும் ரஜினிகாந்த் ரசிகர்கள் கொண்டாடும் விடயங்களில் ஒன்று. தமிழனின் தனிநிறம் கறுப்பு, கறுப்பு என்பதும் அழகுதான், கறுவலிலும் அழகிய வெள்ளைப் பெட்டைகளைக் கவரும் கவர்ச்சி இருக்கிறது என்று படத்திற்கு படம் நிரூபித்துக் காட்டியதும் ரஜினிகாந்தின் தனித்துவம் தான்.

தர்மயுத்தத்திலும் ஜானியிலும் வெள்ளை சேலையில் தேவதையாகத் தோன்றும் ஶ்ரீதேவியோடு, கண்களாலும் தனக்கேயுரித்தான உடலசைவுளாலும் ரஜினிகாந்த் காதல் செய்யும் காட்சிகளை யாராலும் மறக்க முடியுமா? கபாலியில் கூட குமுதவல்லியைக் காண காத்திருக்கும் அந்த நீண்ட நெடிய இரவுக் காட்சியிலும், காலாவில் தனது முன்னாள் காதல் கண்ணம்மாவோடு இரவுணவு உண்ணும் காட்சியிலும்  ரஜினிகாந்த் முகத்திலும் உடலசைவுகளிலும் வெளிக்கொணரும் காதல் உணர்வை ரசிக்கலாம் தான் யாராலும் இருக்க முடியுமா? 

ரஜினிகாந்த் படங்கள் என்றால் ரஜினிகாந்திற்கேயுரிய சில விசேட அம்சங்கள் இருக்க வேண்டும், அதை எதிர்பார்த்தே ரஜினிகாந்தின் ரசிகர்கள் “தலைவர் தரிசினத்திற்காக” வெள்ளித்திரைக்கு முன்பாக முதல் நாள் காட்சி காண ஓடோடி வருவார்கள். 

கபாலி, காலா என்ற இரு படங்களிலும் இயக்குனர் ரஞ்சித், வேண்டுமென்றே  ரஜினிகாந்தின் தனித்துவங்களை தவிர்த்துவிட்டதாகவோ இல்லை அடக்கி வாசித்து விட்டதாகவோ இன்றும் ரஜினிகாந்த் ரசிகன் மனதுக்குள் கறுவிக் கொண்டு தான் திரிகிறான்.


ரஜினிகாந்தின் படங்களில் வரும் நகைச்சுவை காட்சிகளில் comedy நடிகர்களிற்கு இணையாக ரஜினிகாந்த் பூந்து விளையாடும் போது, ரஜினிகாந்த் ரசிகன் கவலை மறந்து வயிறு குலுங்க சிரித்துக் கொண்டேயிருப்பான். அந்தக் காலத்து தில்லுமுல்லுவில் தேங்காயோடும் சுருளியோடும், பின்னர் தொண்ணூறுகளில் மன்னன் படத்தில் கவுண்டமணியோடும், பத்தாண்டுகளிற்கு  முன்பு சந்திரமுகியில் வடிவேலோடும் ரஜினிகாந்த் நடித்த நகைச்சுவை காட்சிகளை திரும்ப திரும்ப நூறு முறை பார்த்தும் ரஜினிகாந்த் ரசிகன் சிரித்துக் கொண்டேயிருப்பான்.

திரைப்பாடல்களில் ஶ்ரீதேவி, ஶ்ரீப்ரியா, குஷ்பூ, மீனா, உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஏன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தோன்றி ரஜினிகாந்தோடு ஆட்டம் போட்டாலும், ரஜினிகாந்த் ரசிகனின் கவனம் மட்டும் சிதறாமல் ரஜினாகாந்தின் நடன அசைவுகளை ரசித்துக் கொண்டிருக்கும். ஆகாய கங்கை பாட்டில்  கண்ணாடியை சுழற்சிக் கொண்டு வரும் ரஜினிகாந்திலிருந்து காதல் அணுக்கள் பாட்டில் கிட்டாரோடு உலாவும் ரஜினிகாந்த் வரை இந்த கருதுகோளிற்கு ஆதாரமாக காட்டலாம்.

ஒரு ஹீரோவாக, அதற்கு மேலே போய் சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் திரையில் நடித்திருந்தாலும், ஆரம்ப காலங்களில் வில்லனாக நடித்ததாலோ என்னவோ anti-hero கதாபாத்திரங்களில் ரஜினிகாந்தின் நடிப்பு அபாரமாக இருக்கும். மூன்று முடிச்சு படத்தில் வசந்த கால நதிகளிலே பாட்டுக் காட்சியிலிருந்து, எந்திரனில் வரும் சிட்டியின் “வசீ.. மே” காட்சிவரை ரஜினிகாந்த் anti-hero வாக கலக்குவார்.  

எழுபதுகளில் Black & White படத்தில் அறிமுகமாகி, நினைத்தாலே இனிக்கும் எனும் அற்புதமான Colour படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்து, பிறகு இந்தியாவின் முதலாவது animation படமான கோச்சடையானிலும் தோன்றிய ரஜினிகாந்த், நேற்று இந்தியாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட படங்களில் அதிக பொருட் செலவில் தயாரான 2.0 எனும் 3D படத்தில் முக்கிய பாத்திரங்கள் ஏற்று கலக்கியிருப்பார்.

2.0 திரைப்படம் பார்த்ததே ஒரு அழகான அனுபவம் என்று தான் சொல்ல வேண்டும். 3D கண்ணாடி அணிந்து “தலைவர் தரிசனம்” காண போனால், கைக்கெட்டும் தூரத்தில் ரஜினிகாந்தைக் காண சில்லிட்டது. ஒரு பக்கத்தில் ரஹ்மானின் பின்னனி இசை திரைக் கதைக்குப் பலம் சேர்க்க, ரஜினிகாந்த் படங்களுக்கேயுரிய வேகத்தில் படம் பறக்கத் தொடங்குகிறது.

கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தால் நேர்த்தியாக 
செதுக்கப்பட்ட திரைப்படத்தில், ஆங்காங்கே வெளிப்படும் logic பிழைகளைக் கூட 3D கண்ணாடி மறைத்துவிடுகிறது. சுட்டுப் போட்டாலும் நடிப்பு வராத எமி ஜாக்சன் இந்த படத்திற்கு ஏன் ஷங்கர் தெரிவு செய்தார் என்ற மர்மத்தை நீங்கள் திரையில் பார்த்தே தெரிந்து கொள்ளுங்கள்.

எந்திரன் படத்தில் வரும் வசீகரனை விட, 2.0ல் வரும் வசீகரன் நிறையவே வசீகரிக்கிறார். சிட்டி மீண்டும் வரும் காட்சிகளும் கெட்ட சிட்டியின் பஞ்ச் வசனங்களும் என்று ரஜினிகாந்த்தின் அனைத்து அவதாரங்களிற்கும் 2.0 ஆங்காங்கே களம் அமைத்து தந்திருக்கிறது.

2.0 படத்தில் மிகவும் அதிசயக்க வைத்த விடயம் அக்‌ஷய் குமாரின் இயல்பான ஆனால் மிரட்டும் நடிப்பு தான். ரஜினிகாந்திற்காக ஒருமுறை 2.0 பார்க்கலாம் என்றால், அக்‌ஷய் குமாரிற்காக இன்னொரு முறை பார்க்க வேண்டும்.

திரைக்கதைக்கு வலுச்சேர்க்கும் வலிய வசனம் எழுத சுஜாதா மட்டும் இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்ற கேள்வி எழுவதை மட்டும் ஷங்கராலும் ஜெயமோகனாலும் தவிர்க்க முடியவில்லை. 

நடிகர்களின் நடிப்பாற்றலையும் தொழில்நுட்பக் கலைஞர்களின் கைவண்ணத்தையும் மிஞ்சி, பிரவாகம் எடுத்து நிற்பது இயக்குனர் ஷங்கரின் கற்பனையும், அந்தக் கற்பனைக்கு திரைவடிவம் கொடுக்க அவர் செலவழித்திருக்கும் மனிதர்களின் உழைப்பும் Lycaவின் முதலீடும் தான்.

Zee TVயிற்கு அளித்த பேட்டியில் “சிவாஜி திரைப்படம் ஷங்கர் இயக்கிய ரஜினிகாந்த் படம், எந்திரன் என்பது ரஜினிகாந்த் நடித்த ஷங்கர் படம், அப்படியென்றால் 2.0?” என்று அர்ச்சனா கேட்ட கேள்விக்கு ரஜினிகாந்த் “2.0 வந்து சுபாஸ்கரனின் படம்” என்பார்.

500 கோடி இந்திய ரூபாய்களிற்கு மேல் 2.0 
என்ற திரைப்படத்தில் முதலீடு செய்து, இந்திய திரைத்துறையில் மைல்கல் பதித்த Lyca நிறுவன உரிமையாளர் ஒரு ஈழத்தமிழர் என்பது நமக்கெல்லாம் பெருமை தான்.

அதேவேளை, இந்தியாவில் தயாராகும் ஒரு தமிழ் திரைப்படத்தில், risk எடுத்து, 500 கோடிக்கு மேல் முதலீடு செய்ய முன்வந்த ஒரு ஈழத்தமிழ் முதலீட்டாளனை, நமது தாயகத்தில் தொழில்வாய்ப்புக்களை வழங்கவில்ல ஒரு வியாபார முயற்சியில் முதலீடு செய்து, நமது மக்களின் வாழ்வை மேம்படுத்த நம்மால் இன்னும் முடியாமல் இருப்பது வேதனையளிக்கிறது.

Lycaவைப் போல், புலத்தில் இன்று நம்மவர் நிறுவனங்களும் தனிநபர்களும் தங்கள் தங்கள் துறைகளில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். இவர்களில் அநேகமானோர் 1983ற்கு பின்னர், இனக் கலவரங்களாலும் யுத்தத்தாலும் புலம்பெயர்ந்தவர்கள். 

தாய் மண்ணின் மணம் மறவாதவதவர்கள், விடுதலை வேண்டி வேள்வி செய்த தன்னினத்திற்கு தானும் ஏதாவது செய்து விட வேண்டும் என்ற தீராத அவா உடையவர்கள், ஆயுதப் போராட்டத்திற்கு நிதியாதாரமும் moral ஆதரவும் அள்ளி அள்ளி அளித்தவர்கள், தங்களது தாய் மண்ணின் மகத்துவத்தை மீண்டும் கொண்டுவர தாங்களும் பங்காற்ற ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா என்ற ஆவலோடு  காத்திருக்கிருப்பவர்கள். 

யுத்தம் முடிந்து பத்தாண்டுகள் கடந்தும், கடந்த நான்காண்டுகளில் நாமே நமது வடமாகாண சபையை நடாத்தியும், 2015ல் தெற்கில் ஒரு புதிய ஆட்சியை நிறுவ பக்க பலமாக நின்றும், வந்த அந்த நல்லாட்சி ஆட்டம் காணும் போதெல்லாம் முண்டு கொடுத்தது நின்றும், ஏன் நேற்றுக் கூட ரணிலின் ஐதேக கட்சி ஆட்சிக்கு வர சத்தியக் கடதாசியில் ஆதரவளித்து நிற்கின்ற போதும், புலத்தில் இருக்கும் நமது புலம்பெயர் மக்களின் நிதி மற்றும் மனித வளங்களை நமது தாயகத்தில் அல்லல்படும் தமிழ் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு பயன்படுத்த வல்ல ஒரு பொறிமுறையை (mechanism) ஏற்படுத்த முடியாமல் இருப்பது வேதனையளிக்கிறது.

புள்ளினங்கள் படும்பாட்டை படமாக்க ஐந்நூறு கோடி இந்திய ரூபாய்கள் முதலீடு செய்ய முன்வந்த நம்மினத்தவன், போரின் சிதைவுகளில் துவண்டு போய் இருக்கும் தன்னினத்தவனின் வாழ்வை மேம்படுத்த ஒரு வாய்ப்பு வழங்கினால் பறந்து வராமலா போய் விடுவான்? 

“பொற்கால கதிரொளியை
சிறகசைத்து வரவேற்பாய்
பெண் மானின் மரக் கிளையை
தொட்டணைத்து தூங்க வைப்பாய்
சிறு காலின் மென் நடையில் 
பெருங் கோலம் போட்டு வைப்பாய்
உனைப் போல பறப்பதற்கு
எனை இன்று ஏங்க வைப்பாய்
புள்ளினங்காள் ஓ  புள்ளினங்காள்
உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்”

என்ற காலஞ்சென்ற கவிஞர் நா. முத்துக்குமாரின் வரிகள் தாயக உறவுகளிற்கும் புலம்பெயர் தமிழர்களிற்குமிடையிலான ஒரு உரையாடலைப் போலவும் இருக்கிறதல்லவா? 

Sunday, 25 November 2018

ரணில் எனும் பச்சைக் கள்ளன்?

இலங்கை அரசியலில் சுமார் நாற்பதாண்டுகளிற்கு மேலான அனுபவமுள்ள ரணில் விக்கிரமசிங்க இதுவரை அரசியலில் சாதித்தது தான் என்ன? இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவல்ல முதிர்ச்சிடைந்த தலைமைப் பண்பு (statesmanship) அவரிடம் இருக்கிறதா? இலங்கையையின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை தீட்டி நடைமுறைப்படுத்த வல்ல ஆற்றல் (ability) அவரிடம் இருக்கிறதா போன்ற கேள்விகள் வியாபிக்கத் தொடங்கியிருக்கிறது.

கடந்த கால் நூற்றாண்டிற்கு மேலாக, இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை தலைமை தாங்கி வரும் ரணில் விக்கிரமசிங்க, தேர்தல் களங்களில் அந்தக் கட்சிக்கு ஈட்டிக் கொடுத்த தோல்விகள் ஏராளம். 

1994ல் ஐதேக கட்சியின் தலைமைப் பொறுப்பை ரணில் ஏற்ற பின்னர், அந்தக் கட்சி எதிர்கொண்ட ஆறு பொதுத் தேர்தல்களில் நான்கிலும், ஐந்து ஜனாதிபதி தேர்தல்களில் நான்கிலும் ஐதேக தோல்வியைத் தழுவியிருக்கிறது. இதைத் தவிர இந்தக் காலப் பகுதியில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களிலும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களிலும் ரணிலின் பச்சைக் கட்சி தோல்விக்கு மேல் தோல்விகளை சந்தித்திருக்கிறது.

1977 பொதுத் தேர்தலில், கொழும்பை அண்டிய பியகம தேர்தல் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான ரணிலை, பிரதி வெளி விவகார அமைச்சராக நியமித்தார் அவரது அங்கிளான ஜனாதிபதி ஜெயவர்த்தனா. 

கொழும்பு ரோயல் கல்லூரியில் அனுர பண்டாரநாயக்காவோடும் தினேஷ் குணவர்தனவோடும் ஒரே வகுப்பில் கல்வி கற்ற ரணில் விக்கிரமசிங்கவை, அமைச்சரவை அந்தஸ்துள்ள கல்வி, இளைஞர் விவகார மற்றும் தொழில்வாய்ப்புக்கள் அமைச்சராக நியமிக்க ஜெயவர்தனவிற்கு அதிக காலம் எடுக்கவில்லை. 

எண்பதுகளில் ரணில் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் தான் பாடசாலைகளில் ஒப்படை (assignment) முறை அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் மீள பெறப்பட்டது.

முப்பது வயதில் இலங்கையின் மிகவும் இளமையான Cabinet அமைச்சராக பதவியேற்ற ரணில், 1989ல் நடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர், ஜனாதிபதி பிரேமதாசவின் அரசில் ஜதேகவின் சபை முதல்வராகவும், தொழிற்துறை, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகவும் பதவியேற்றார்.

1993ல் பிரேமதாச கொல்லப்பட,  DB விஜேதுங்க ஜனாதிபதியாக, ரணில் முதல் முறையாக பிரதமரானார். 1994ல் ஐதேகவை விட்டு, பிரிந்திருந்த காமினி திசைநாயக்க மீண்டும் கட்சியில் இணைந்து, இரண்டே இரண்டு வாக்குகளால் ரணிலை தோற்கடித்து கட்சியின் தலைவராகி, சந்திரிக்கா பிரதமான 1994 தேர்தலில் எதிர்க் கட்சித் தலைவரானார். 

1994 சனாதிபதி தேர்தலிற்கு சில மாதங்களிற்கு முன்னர் பேலியகொடவையில் காமினி கொல்லப்பட, சந்திரிக்காவை ஜனாதிபதி தேர்தலில் எதிர்கொள்ள காமினியின் மனைவி சிறிமாவை தேர்தல் களத்திற்கு அனுப்பி வைத்தார் ரணில் என்ற ஐதேக தலைவர். பிறரை களத்திற்கு அனுப்பி விட்டு தான் ஒதுங்கியிருக்கும் அரிய தலைமைத்துவ பண்பை 2010லும் 2015லும் ரணில் மீண்டும் மீண்டும் வெளிக்காட்ட தவறவில்லை.

2000 ஆண்டளவில் சந்திரிக்கா முன் வைத்த அரசியல் யாப்பு யோசனைகளை ஐதேகவும் இணைந்து தான் தயாரித்தது.  இறுதியில் பாராளுமன்றில் புதிய அரசியல் யாப்பை ஒரு சட்டவாக்கமாக முன்வைக்க சந்திரிக்கா  முன்வந்த போது, அதை சட்டமாக நிறைவேற்றக் கூடாது சட்டவலுவற்ற ஒரு White Paperஆக தான் முன் வைக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் குழப்பம் விளைவித்து, பாராளுமன்றத்தில் அரசியல் யாப்பு யோசனைகளை தீவைத்து கொளுத்திய descentஆன அரசியல்வாதி தான் ரணில் விக்கிரமசிங்க.

அதே காலப்பகுதியில் சந்திரிக்காவும் கதிர்காமரும் நோர்வேயை இலங்கை இனப் பிரச்சினையை தீர்க்க, விடுதலைப் புலிகளுடன் பேச மத்தியஸ்தம் வகிக்க அழைத்திருந்தார்கள். கொழும்பு வந்திருந்த எரிக் சொல்ஹேய்மின் நோர்வே தூதுக்குழு மரியாதை நிமித்தம் எதிர்க்கட்சித் தலைவரான ரணிலையும் சந்தித்திருந்தது. தங்களுடனான சந்திப்பில் ரணில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை என்று நோர்வே தரப்பினர் பின்னர் எழுதிய To end a Civil War எனும் புத்தகத்தில் பதிவு செய்தார்கள்

தொண்ணூறுகளின் கடைசிக் காலத்திலிருந்து நோர்வேயின் அனுசரணையில் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை சந்திரிக்கா ஆரம்பித்திருக்க, 2001 இறுதியில் பிரதமாரான ரணில், ஜனாதிபதி சந்திரிக்காவை பேச்சுவார்த்தைகளில் இருந்து ஓரம் கட்டியதும் பேச்சுவார்த்தைகள் குழம்புவதற்கான பிரதான காரணிகளில் ஒன்று என்று To end a Civil War எனும் புத்தகத்தில் இடம்பெறும் பலரது கருத்துக்கள் சுட்டிக் காட்டுகின்றன.

1999ல் தன்மீது நடந்த தற்கொலைத் தாக்குதலிற்கு பின்னரும் தொடர்ந்து புலிகளுடன் பேச வேண்டும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற ஓர்மத்துடன் இருந்த சந்திரிக்காவை ஓரம் கட்டிய ரணில், பேச்சிவார்த்தை மேடைகளில் புலிகள் விடுத்த கோரிக்கைகளை நிராகரிக்க கூறிய சாட்டு “ஜனாதிபதி ஒத்துழைக்க மறுக்கிறார்”. 

மறுவளமாக விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்த சர்வதேச வலைப்பின்னலை பின்னிக் கொண்டும், கருணாவின் பிரிவிற்கு அனுசரணை வழங்கியும், புலிகளை வெறுப்படைய வைத்து, அன்ரன் பாலசிங்கம் 2005 மாவீரர் தின உரையில் “ரணில் ஒரு குள்ளநரி” என்று வர்ணிக்குமளவிற்கு புலிகளின் வெறுப்பை சம்பாதித்திருந்தார்.

விடுதலைப் புலிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் எட்டிய SIHRN உட்பட எந்த இணக்கப்பாடுகளும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதும், 2002ல் வொஷிங்டனில் நடந்த இலங்கையின் அபிவிருத்தி தொடர்பான மாநாட்டிற்கு புலிகள் அழைக்கப்படாமையில் ரணில் பின்புலத்தில் ஆற்றிய பங்கையும் வரலாறு பதிவு செய்துவிட்டுத் தான் சென்றுள்ளது.

2005 ஜனாதிபதி தேர்தலில், சமஷ்டி தருவேன் என்னு தேர்தல் விஞ்ஞாபனத்தில் ரணில் பகிரங்கமாக குறிப்பிட்டிருக்க, மகிந்தவிற்கு வலுச் சேர்க்கும் வண்ணம் அமைந்த புலிகளின் தேர்தல் பகீஷ்கரிப்பு, ரணிலை 185,000 வாக்குகளால் தோல்வியடைய வைத்தது.

2015ல் சந்திரிக்காவோடு இணைந்து, மைத்ரியை பொது வேட்பாளராக முன்னிறுத்தி, சிங்கள வாக்குகளை பிரித்து, சிறுபான்மையினரின் ஒன்றுபட்ட வாக்குபலத்துடன் ஜனாதிபதி தேர்தலில் மைத்ரியை வெல்ல வைத்தது ரணிலின் சாணக்கியம் தான்.

ஜனவரி 8, 2015ல் மைத்ரி ஜனாதிபதியாக தெரிவாக, அலரி மாளிகையில் இருந்த மகிந்தவை ஹெலிக்கொப்டரில் ஏற்றி தங்காலைக்கு அனுப்ப வழிசமைத்தது என்னவோ அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் தான்.

2015ன் ஆரம்பத்தில் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளாமல், பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை பெற்று பிரதமரான ரணில் முன்மொழிந்த 100 நாள் வேலைத் திட்டத்தை மறக்கத் தான் முடியுமா? அந்த நூறு நாள் வேலைத்திட்டத்தில் அடங்காத தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக அளித்த வாக்குறுதிகள் எதுவும் இன்றுவரை முழுமையாக நிறைவேற்றப்பட்டனவா? 2015 செப்டெம்பரில் ஐநாவில் இலங்கையும் இணைந்து நிறைவேற்றிய 30-1 நிறைவேற்ற படாமைக்கு பொறுப்பு கூற வேண்டியது ரணில் இல்லையா?

2015ன் ஆரம்பத்தில் இலங்கையில் நிலவிய நல்லாட்சி பற்றிய பலத்த எதிர்பார்ப்புக்களை, தனது செயல்திறனற்ற
தலைமைத்துவத்தால் நாசமாக்கியது ரணில் இல்லையா? மகிந்த தரப்பினர் மீது சுமத்தப்பட்ட எந்த வழக்குகளின் விசாரணைகளையும் முழுமையடைய விடாமல் ரணில் தடங்கல் செய்கிறார் என்று மைத்ரி குற்றம் சாட்டியது நமக்கு மறந்து விட்டதா?

2015 நவம்பரில் அரசியல் கைதிகளை இன்னும் ஒரு வாரத்தில் விடுதலை செய்து விடுவேன் என்று கூட்டமைப்பினரிற்கு வாக்குறுதியளித்தத ரணில், இன்று வரை அதை நிறைவேற்றவில்லை. படையினரின் ஆக்கிரமிப்பில் இருக்கும் காணிகளும் விடுவிக்கப்படவில்லை, போரினால் அழிவுண்ட வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்ய புலம்பெயர்ந்த தமிழர்களை இணைத்து செயலாற்ற முன்வந்த சர்வதேச முன்னெடுப்புக்களும் முன்னகரவில்லை, இப்படி ரணில் செய்வதாக சொல்லி செய்யாமல் போன கருமங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

அன்றிலிருந்து இன்றுவரை ரணிலின் modus operandi என்பது காலத்தை கடத்துவது தான். கோரிக்கைகள் அனைத்தையும் அனுதாபத்தோடு கேட்பது, கட்டாயம் நிறைவேற்றுவேன் என்று உறுதியளிப்பது, ஜனாதிபதியை சாட்டு சொல்வது, காலத்தை இழுத்தடிப்பது, எதையும் செய்யாமல் இருப்பது, தனது பதவியை தக்க வைப்பது, அவ்வளவு தான்.

புதிய அரசியல்யாப்பு விவகாரமும் இந்த காலங் கடத்தும் கைங்கரியத்தின் இன்னுமொரு வடிவம் தான். ஐதேவும் சுதந்திரக் கட்சியும் இணைந்த நல்லாட்சியின் ஆரம்பத்தில், சந்திரிக்காவின் 2000ம் ஆண்டு அரசியல் யாப்பு யோசனைகளை மீண்டும் பாராளுமன்றத்தில் முன்வைத்து, மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்றியிருக்கலாம். அதைச் செய்யாமல் மக்கள் கருத்தறிய மாவட்டம் மாவட்டமாக போய், எல்லா தரப்புக்களையும் அழைத்து கருத்துக் கேட்டு, வட மாகாண சபையையும் தமிழ் மக்கள் பேரவையையும் யோசனைகளை வரையப் பண்ணி, காலத்தை இழுத்தடித்தது தான் மிச்சம், உருப்படியாக எதுவும் நடைபெறவில்லை.

பொருளாதாரத்தை எடுத்துக் கொண்டாலும், ரணில் நியமித்த மத்திய வங்கி ஆளுநரான மகேந்திரனின் கைவண்ணத்தில் மத்திய வங்கி பிணைகளில் நடந்த  ஊழல், இலங்கையின் பொருளாதாரத்தில் பின்னடைவை சந்திக்க வைத்தது. விசாரணைகளின் விளைவாக நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட மகேந்திரனை சிங்கப்பூரிற்கு தப்பி ஓட வைத்த Mr. Clean தான் ரணில் விக்கிரமசிங்க.

தீர்க்கமான முடிவுகளை எடுத்து செயலாற்றும் வலுவற்ற ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக்குவதன் மூலமாக தமிழர்களின் முக்கிய பிரச்சினைகளிற்கு தீர்வு வரும் என்ற நம்பிக்கை ஏனோ வர மறுக்கிறது. 

இன்றைய இலங்கையின் குழப்பகரமான அரசியல் களத்தில் மிகவும் நிதானமாகவும் சாணக்கியமாகவும் காய்களை நகர்த்தி, உள்நாட்டிலும் சர்வதேச நாடுகளிடமும் நன்மதிப்பை சம்பாதிருக்கும் தமிழ் தலைமைகள், இனிவரும் நாட்களில் எடுக்கும் முடிவுகள் மேற்கூறிய வரலாற்றை கவனத்தில் எடுத்தே  எடுப்பார்கள், எடுக்க வேண்டும்  என்ற நம்பிக்கை மட்டும் எஞ்சியிருக்கிறது.

நம்பிக்கை தானே வாழ்க்கை

Friday, 9 November 2018

ஜனநாயகமாம் ஜனநாயகம்இரண்டாம் உலக மகாயுத்தத்தில் பாரிய சமூக பொருளாதார விலையை கொடுத்து வெற்றி பெற்ற பிரித்தானிய சாம்ராஜ்யம், அதன் விளைவாக தனது காலனி நாடுகளை விட்டு வெளியேறத் தொடங்கியது. அந்த வரிசையில் 1947ல் இந்தியாவை இரண்டாக பிரித்துவிட்டும், 1948ல், தாங்கள் கைப்பெற்றும் போது இரண்டாக இருந்த இலங்கைத் தீவை ஒன்றாக்கிவிட்டும், வெள்ளையர்கள் வெளியேறினார்கள். 

சுதந்திர இலங்கைக்கான முதலாவது அரசியல் யாப்பையைம் பிரித்தானிய பேரரசே வரைந்து கொடுத்து விட்டுத் தான் சென்றது. சோல்பரி பிரபு தலைமையிலான அரசியல் யாப்பமைப்புக் குழு சிறுபான்மையினரின் கருத்துக்களை அறிய, அழைத்த அமர்வில் தான் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் GG பொன்னம்பலம்  50:50க்கு கேட்டு தனது வாதத்திறமையை வெளிக்காட்டினார். 

சிங்களவர்கள் 80% வாழும் நாட்டில், ஆட்சியில் சமபங்கு கேட்பது முட்டாள்தனம் என்று அவருக்கு அன்று புரியாமல் போனது எங்களது துரதிருஷ்டம். அன்று 50:50 கேட்ட பொன்னம்பலம், சமஷ்டி கேட்டிருக்கலாம் என்று அன்றே சிலர் அங்கலாய்த்தார்களாம், அந்த சிலரில் SJV செல்வநாயகமும் அடக்கமாம்.

1948ல் DS சேனநாயக்காவின் ஆட்சியில் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்போடு, ஆரம்பமாகியது தான் சிங்கள பெளத்த பேரினவாத அரசின் சிறுபான்மையினரிற்கு எதிரான அடக்குமுறைகள். 20 ஓகஸ்ட் 1948ல் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு, சரியாக இரண்டு கிழமைகளில், UNP அரசாங்கத்தில் மீன்பிடி மற்றும் தொழில்துறை அமைச்சராக GG பொன்னம்பலம் பதவியேற்றார்.

GG பொன்னம்பலத்தின் அமைச்சுக் காலத்தில் பரந்தனில் இரசாயன, காங்கேசன்துறையில் சீமெந்து, ஒட்டிசுட்டானில் ஓடு, வாழைச்சேனையில் காகித தொழிற்சாலைகள் நிறுவப்பட்டது. பொன்னம்பலம் அமைச்சராகியதால் தமிழ்  காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்பட, SJV செல்வநாயகம் பிரிந்து சென்று தமிழரசு கட்சியை நிறுவினார். 

1956ல் தனிச் சிங்கள சட்டம் நிறைவேற்றிய SWRD பண்டாரநாயக்கவோடு, descent ஆக ஆற அமர இருந்து கதைத்து, தமிழர்களின் தாயக பிரதேசங்களில் எங்களது நலன்களை நாங்களே கவனிக்கவல்ல அதிகாரங்களை பகிர்ந்து தரும் பண்டா செல்வா ஒப்பந்தத்தை, ஜனநாயக வழி நின்று கைச்சிட்டார் கோட்டு சூட்டு போட்ட செல்வநாயகம் எனும் தமிழ் Gentleman.

1947லிருந்து அமுலில் இருந்த இலங்கை அரசியலமைப்பில் சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் நலன்களை காக்க Privy Council போன்ற ஷரத்துக்கள் இருப்பதாக நம்பியிருந்த தமிழர்கள், ஏமாந்து போன முதலாவது சம்பவம் தனிச் சிங்கள சட்டவாக்கமும் அதன் அமுலாக்கமும் தான். தங்களது தனிப்பட்ட அரசியல் நலன்களிற்காக அரசியல் யாப்பையே மீறத் துணிந்த சிங்கள அரசின் முதலாவது அரசியல் அடாவடியாகவும் இந்த சம்பவம் பதிவாகியது.

ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பண்டாவும் செல்வாவும், கொழும்பு St Thomas கல்லூரியின் பழைய மாணவர்கள். செல்வா யாழ்ப்பாணத்தில் பரி யோவானிலும் யூனியன் கல்லூரியிலும் படித்தவர், பட்டப் படிப்பிற்காக St Thomasல் இணைந்தவர். கனவான்கள் இருவர், தங்களது இனத்தின் சார்பாக, ஜனநாயக வழிநின்று கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ஒப்பேற்றுவார்கள் என்று நினைத்தால், பண்டா ஒப்பந்தத்தை கிழித்து போட்டார், செல்வநாயகம் கடும் கண்டனம் தெரிவித்தார். 

1965ல் ஆட்சிக்கு வர தமிழரசு கட்சியின் ஆதரவைப் பெற, செல்வாவுடன் டட்லி-செல்வா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார் UNPயின் தலைவரான டட்லி சேனநாயக்கா. டட்லி சேனநாயக்காவும் கொழும்பு ரோயல் கல்லூரியில் படித்த descent ஆன அரசியல் வாதி, கொடுத்த வாக்கை மீற மாட்டார் என்று நம்பியிருந்த தமிழ் தலைமைகளிற்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே, ஜனநாயகம் மீண்டும் தமிழர்களை கைவிட்டது. 

டட்லி அரசில் உள்துறை அமைச்சராக இருந்த தமிழரசு கட்சியின் திருச்செல்வத்தின் காலத்தில் தான் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் நிறுவுவதற்கான ஆரம்ப ஏற்பாடுகள் நிகழ்ந்தன, தனிச் சிங்கள சட்டத்தின் பாதிப்பிலிருந்து சிறிய மீட்சியும் கிடைத்தது (Reasonable Use of Tamil Act), அதைவிட பெரிதாக எந்த விமோசனமும் தமிழ் மக்களிற்கு கிடைக்கவில்லை.

1970களில் சிறிமாவோ அரசாங்கம் இயற்றிய இலங்கையின் முதலாவது குடியரசு அரசியலமைப்பை தமிழர் தரப்பு புறக்கணித்தது. பாராளுமன்றத்தில் தமிழ் தலைவர்கள் ஆற்றிய உரைகள் “அந்த மாதிரி” இருந்தது என்று வரலாறு பதிவு செய்து கொண்டிருக்க, வன்னிக் காட்டு பண்ணைகளில் இளைஞர்கள் துவக்கு சுட பழகிக் கொண்டிருந்தார்கள்.

1977ல் தமிழீழ தனியரசு நிறுவுவோம் என்று வட்டுக்கோட்டையில் அறைகூவல் விடுத்து, முற்றவெளியில் ரத்த திலகமிட்டுக் கொண்டு, எங்களது MPமார் கொழும்புக்கு படையெடுக்க, ரத்மலானையில் அவ்ரோ விமானம் ஒன்று வெடித்து சிதறியது. 

JR ஜெயவர்தன இலங்கையின் இரண்டாவது குடியரசு யாப்பை இயற்றி, பொதுசன வாக்கெடுப்பை நடாத்திக் கொண்டிருக்க, இலங்கையின் ஜனநாயகத்தில் நம்பிக்கையிழந்த தமிழ் இளைஞர்கள், தங்களது இனத்தின் தலைவிதியை தாங்களே தீர்மானிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கோடு காடுகளிலும் மலைகளிலும் ஆயுத பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். 

1987ல் இந்திய அரசாங்கம் தலையிட்டு, தமிழர்களின் பிரச்சினையை தீர்க்கவென்ற வெளிப்படையான நோக்கோடு, இலங்கையுடன் செய்த இந்திய இலங்கை ஒப்பந்தம், இலங்கை அரசியல்யாப்பின்  13வது திருத்தச் சட்டமானது. 13வது திருத்தத்தில் இருக்கும் அரைகுறை அதிகாரப் பகிர்வு அம்சங்களே இன்றுவரை முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை, என்பது இலங்கையின் ஆட்சியாளர்கள் இலங்கையின் அரசியலமைப்பிற்கு தரும் மாட்சிமையின் இன்னுமொரு சாட்சி. 

1990ல் இந்தியா போக, 2000ல் நோர்வே வந்தது, 2002ல் மேற்குலக அனுசரணையோடு விடுதலைப் புலிகளும் நாடு நாடாக பேச்சுவார்த்தைக்கு போனார்கள். பேச்சு மேசையில் இணங்கிய விடயங்களை அமுல்படுத்த அன்றும் ரணிலுக்கு கிடைத்த சாட்டு, சுதந்திர கட்சியின் ஜனாதிபதி சந்திரிகாவும் ஜனநாயகமும் தான். 

புலிகள் இடைக்கால தீர்வுத்திட்டத்தை முன்வைத்த கையோடு, ஜனநாயகத்தை பயன்படுத்தி ஜனாதிபதி சந்திரிக்கா அன்று ரணிலை வீட்டுக்கு அனுப்பினார், மேற்குலகம் கண்டன அறிக்கை விட்டது, ரணிலின் அரசின் அனுசரணையோடு பிளவுண்ட விடுதலைப் புலிகள் பலமிழக்கத் தொடங்கினார்கள். 

அதற்கு முன்னர் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளில் இணங்கிய SIHRN வரைவும், அரசியல் அமைப்பிற்கு முரணானது என்று சாட்டுச் சொல்லி இயங்கவிடாமல் செய்தார்கள், ஜனநாயக வழிநிற்கும் மேற்குலகமும் ஆமா சாமி போட்டு, புலிகளை வெறுப்பேற்றியது. 

2005 ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் தோல்விக்கு விடுதலைப் புலிகள் விடுத்த தேர்தல் புறக்கணிப்பு அறிக்கை காரணமாக இருந்தது என்ற கோபத்தை, புலிகளை ஒரு “ஜனநாயக விரோத சக்தியாக” சித்தரித்த மேற்குலகம், விடுதலைப் புலிகளை அழிக்க இலங்கை அரசிற்கு துணைபோனது. 

2005ல் புலிகளோடு சந்திரிக்கா அரசு இணங்கிய சுனாமி மீள் கட்டமைப்பிற்கான P-TOMS கட்டமைப்பையும், இலங்கையின் ஜனநாயக அரசமைப்பின் காவலனான உயர்நீதிமன்றம், JVP கொடுத்த மனுவின் பேரில் கலைத்தது. மீண்டும் JVP உயர்நீதிமன்ற படிகளேறி, இந்திய இலங்கை ஒப்பந்தத்தால் இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரிக்க, ஜனநாயக வழியையே பயன்படுத்தியது.

2009ற்கு பின்னர், மகிந்த அரசோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு நடாத்திய பேச்சுக்கள், கூட்டமைப்பு ஒரு தீர்வுத் திட்டத்தை பேச்சு மேசையில் முன்வைத்தத்தோடு முறிவடைந்தது. மேற்குலகின் முழுமையான கண்காணிப்பில் நடந்த இந்த பேச்சுவார்த்தைகளின் minuets இன்றுவரை ரகசியமாக பேணப்படுவதும் “ஜனநாயகத்தை” காப்பற்றத் தானா என்ற கேள்வியும் எழுகிறது.

2015ல் நல்லாட்சியில் ஏதாவது நடக்கும் என்று நம்பி பயணித்து, நிறைய விட்டுக் கொடுப்புக்களை கொடுத்து, ஜனநாயக வழியில் பயணித்து, புதிய அரசியலமைப்பு தயாரிப்பிலும் இணைந்து பணியாற்றி, அரசியலமைப்பு பாராளுமன்றத்திற்கு வரப் போகும் தருணத்தில், மீண்டும் சிங்கள தேசம் ஜனநாயகக் கூத்தாடி, தமிழர்களை பார்த்தும் மேற்குலகை நோக்கியும் பெப்பே காட்டி நிற்கிறது.

தமிழர்களிற்கு இடைக்காலத் தீர்வோ இல்லை பேரிடலிருந்து புனருத்தாரணம் பெறவோ, எந்தக் கட்டமைப்பு வந்தாலும் சிங்கள தேசம், ஜனநாயகக் கூத்தாடி குழப்பியது தான் இலங்கை தேசத்தின் வரலாறு உணர்த்தி நிற்கிறது. 

காலங்காலமாக தாயகத்திலும் புலத்திலும், எங்களது உரிமைகளை நாங்கள் பெற, அகிம்சை வழியில் போராடினோம் அடக்குமுறையால் அடக்கினார்கள், ஜனநாயக வழியிலும் முயற்சி செய்தோம் ஏமாற்றினார்கள், ஆதலால் தான் வேறு வழியின்றி ஆயுதப் போராட்டத்திற்கு உந்தப்பட்டோம் என்று தமிழர்கள் மேற்குலகின் காதுகளில் அழகாக ஆங்கிலத்தில் கூறிய வாதங்களை நம்பாத மேற்குலகம், இன்று இலங்கையில் நடக்கும் ஜனநாயக கேலிக்கூத்துக்களைப் பார்த்தாவது, தமிழர்களின் தார்மீக உரிமைகளை மதிக்க முன்வருமா? 

ஜனநாயக வழியில் போராடி தோற்றபடியால் தான் ஆயுதம் தூக்கினாங்கள் என்று நாங்கள் கத்தி கத்தி சொல்லும் போது எங்களை நம்பாத மேற்குலகத்திற்கு இப்பவாவது இலங்கையில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காட்சிகள் மாறாது, ஆட்சி மாற்றத்தால் தமிழர்களுக்கு என்றுமே தீர்வுகள் கிடைக்காது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்,. 

இலங்கையின் ஜனநாயக பாராளுமன்ற வழிமுறைகளை பின்பற்றியும் உலக ஒழுங்கின் ஐநா கட்டமைப்பின் செல்நெறி நின்றும், தமிழர்களின் ஜனநாயக உரிமைகளைப் பெற முயன்ற தமிழர் தரப்பிற்கு, மேற்குலகின் பதில் என்னவாகத் தான் இருக்க போகிறது? 

இலங்கைத் தேசத்தின் கோமாளித்தனமான ஜனநாயக மற்றும் நீதி பொறிமுறைகளுக்குள், தமிழ் மக்களுக்கு என்றுமே நீதியும் நியாயமும் கிடைக்காது என்று மீண்டும் மீண்டும் நிரூபணமாகி விட்ட நிலையில், தமிழர் தரப்பிற்கு இருக்கும் தேர்வுகள் தான் என்ன? 

மூன்றரை ஆண்டுகள் விட்டுக் கொடுத்து முட்டுக் கொடுத்த நல்லாட்சியின் முக்கிய நன்மைகள் தான் என்ன? அரசியல் கைதிகள் விடுதலைக்கு மட்டும் சட்ட சாட்டுப்போக்கு. பிரதம மந்திரியை துரத்தவும் பாராளுமன்றத்தை கலைக்கவும் அரசியல் யாப்பை மீறத் துணிந்தவர்களால், ஏனிந்த நூற்று சொச்ச கைதிகளை விடுதலை செய்ய மட்டும் சட்டத்தை சாக்காக காட்ட முடிந்தது? 

செயல்திறனற்ற நல்லாட்சியின் முடிவிற்கு பிரதம மந்திரியும் பாரிய பொறுப்பாளியாவார். 
ஜனாதிபதியின் மேல் காட்டும் நியாயமான கோபம், ஜனாதிபதியை சாட்டி சாட்டி காலத்தை கடத்திய பிரதம மந்திரி மேலும் வரவேண்டுமென்று தான் தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். “ரணில் பாவம், அவர் செய்ய முதல் இவர் கலைத்து விட்டார்” என்ற பரிதாபக் கதைகளைக் கேட்க தமிழ் மக்கள் இம்முறை தயாராக இல்லை என்றே தோன்றுகிறது. 

எங்களுக்கு உரித்தான உரிமைகளை, நாங்களும் எங்களது தாயகத்தில் சமவுரிமையோடு வாழ்வதற்கான உரிமைகளை, இலங்கையின் ஆட்சியாளர்களிடம், அன்பாக கேட்டடோம்..தரவில்லை, ஒப்பந்தம் போட்டம்.. கிழித்து போட்டார்கள், அமைச்சர் பதவி எடுத்தும் பார்த்தோம்.. சரி வரவில்லை, சத்தியாக்கிரகம் இருந்தோம் .. அடக்கி ஒடுக்கினார்கள், இந்தியாவிடம் ஓடினோம்.. இந்தியாவையும் கலைத்து விட்டார்கள், கட்டுநாயக்கா ஆனையிறவு என்று camp campஆக நாசமாக்கினோம்.. சீனாவையும் இந்தியாவையும் கொண்டு வந்து இயக்கத்தை ஆணிவேரோடு அறுத்தார்கள்..  ஆட்சியை மாற்றிவிட்டு .. ஜெனிவாவில் போய் நின்றோம்..ஜனநாயக கூத்தாடி எல்லாவற்றையும் அவர்களே கலைத்து விட்டார்கள்.. இனி என்ன செய்யப் போகிறோம்? 

தமிழர் தரப்பு தனது உரிமைகளை வெல்ல என்ன வழிமுறைகளை கையாளலாம் என்ற கேள்விக்கு ஆண்டவரிடம் கூட பதில் இருக்குமா என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.