Friday, 5 October 2018

உடையார்பயணங்கள் நல்ல மனிதர்களை அறிமுகப்படுத்தவல்லது, அழகிய அனுபவங்களையும் தரவல்லது, அரிதாக அவை அருமையான புத்தகங்களையும் கைகளில் திணித்துவிடும். பாலகுமாரன் எழுதிய “உடையார்” நாவல் எனக்கு அறிமுகமானது, போன வருடம் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு பயணித்த கடுகதி ரயில் பயணத்தில் தான். 


யாழ்ப்பாணப் பயணத்தில் அறிமுகமான கனதியான புத்தகத்தை, இந்த வருடம் தாய்லாந்தில் அரங்கேறிய எங்களது SJC92ன் ஒன்றுகூடலிற்கு காவிக் கொண்டு வந்தது நண்பன் அருள்மொழி. ஒரு பயணத்தில் அறிமுகமான புத்தகம், இன்னொரு பயணத்தில் கையில் கிடைத்தது.  அதன் பின்னர் பல பயணங்களில் “உடையாரும்” கூடவே பயணித்தார். 

போன வருடம் ஓகஸ்ட் மாதம் நல்லூர் தேர்த் திருவிழாவை தரிசித்து விட்டு, ரயிலேற யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் இறக்கி விட நண்பன் கோபிஷங்கர் வந்தான். காங்கேசன்துறையிலிருந்து  வந்த ரயில், யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் நுழையவும், இறுக்கிக் கட்டியணைத்து விடைதர நண்பன் வாதுலனும் ஓடோடி வந்தான்.

உடையார் நாவல் சோழ மன்னர்களில் அதிசிறந்தவனான இராஜராஜ சோழன், தஞ்சையில் கட்டிய பெருங்கோவிலின் கதையை காட்சிப்படுத்துகிறது. கல்கியின் “பொன்னியின் செல்வன்” வாசிக்காத தமிழர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பொன்னியின் செல்வனில் வரும் அருள்மொழித் தேவன், அரியணையேறி இராஜராஜனாக கோலோச்சிய கதை தான் உடையார்.

கொழும்பு நோக்கி பயணிக்கும் கடுகதி புகையிரதத்தின் பெட்டியில் ஏறி, ஆசனத்தை தேடிக் கொண்டிருக்க, அதே புகையிரத பெட்டிக்குள்  ஜூட் ஜோசப் அண்ணாவும் நிற்கிறார். இன்றைக்கு பயணம் நிட்சயம் அலுப்புத் தட்டாது என்று மனதுக்குள் மகிழ்ந்து விட்டு, பக்கத்து ஆசனத்தில் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு ஒய்யாரமாக இருந்த அன்ரியை கதைத்துப் பேசி, வெய்யில் படாத ஜூட் ஜோசப் அண்ணாவின் சீட்டிற்கு அனுப்பி விட்டு, ஜூட் ஜோசப் அண்ணாவை பக்கத்து ஆசனத்தில் வரவேற்கும் போது, ரயில் புங்கன்குளம் தாண்டிக்கொண்டிருந்தது.   

வழமையாக பரி யோவானின் பழங்கதை பேசும் இருவரும், ஏனோ அன்று சோழர்கள் பற்றி பேசத் தொடங்க, ஜூட் ஜோசப் அண்ணா “நீர் உடையார் வாசித்து விட்டீரா” என்று கேட்டார். இல்லை என்று தலையாட்ட “அது ஒரு கெட்ட சாமான்டா.. எடுத்தா வைக்க மாட்டாய்” என்னு தனக்கேயுரிய பாணியில் ஜூட் ஜோசப் அண்ணா பில்டப்பை ஏற்றும் போது, சுண்டுக்குளி மாணவி கிருஷாந்தி குமாரசாமியையும் வேறு பல நூற்றுக்கணக்கானவர்களையும் கொன்று புதைத்த செம்மணி வெளியைத் தாண்டிய ரயில், நாவற்குழி பாலத்தில் தடதடத்தது.  

எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் “உடையார்” நாவல், ஆறு பெரிய புத்தகங்கள் அடங்கிய பொக்கிஷம், பக்கங்கள் வாசிக்க வாசிக்க அலுக்காது. உடையார் என்பது இராஜராஜனைத் தான் குறிக்கிறது. உடையாரின் மூலக்கதை தஞ்சை பெருங்கோவில் கட்டிய சம்பவங்களை மையமாக் கொண்டிருந்தாலும், இராஜராஜனிற்கும் அவனது மகனான இராஐராஜேந்திரனிற்கும் இடையில் நடக்கும் கருத்து மோதல்களையும், இராஜராஜனின் அனுக்கியும் மனைவியுமான பஞ்சவன்மாதேவியுடனான காதலையும் அழகாக பதிவுசெய்கிறது.

ஆனையிறவு தாண்டும் போது, ஜூட் அண்ணா, பொன்னியின் செல்வனின் முடிவில் ஆட்சிக் கட்டிலேறிய மதுராந்தகனிற்கு என்ன நடந்தது என்பதையும், தனக்கு கிடைக்க வேண்டிய ஆட்சியை குடந்தை ஜோசியரின் ஆலோசனைப்படியும் தமக்கையார் குந்தவையின் அறிவுரைக்கமையவும் தாரைவார்த்த அருள்மொழி மீண்டும் எப்படி சோழ மன்னனான் என்பதையும், ஆதித்த கரிகாலன் எவ்வாறு கொல்லப்பட்டான என்பதையும், பாலகுமாரன் “உடையாரில்” சொல்லியிருக்கிறார் என்று விளக்கினார். “உண்மையைச் சொன்னால், உடையார் கதை, பொன்னியின் செல்வன் part 2 தான்டா” என்றார். 

கிபி 1010ம் ஆண்டளவில் கட்டிமுடிக்கப்பட்ட இந்தக் கோயிலின் ஒவ்வொரு பகுதியும் எவ்வாறு கட்டப்பட்டிருக்கும் என்று, அலசி ஆராய்ந்து, அதை கற்பனை கலந்து எழுதும்
போது, நம்மையும் மீண்டும் அந்த யுகத்திற்கு கொண்டு செல்ல வைப்பது பாலகுமாரனின் எழுத்துக்களில் பொதிந்திருக்கும் வல்லமை. கோயில் கட்டுமானத்தின் தலைமைச் சிற்பியான குஞ்சரமல்ல பெருந்தச்சனோடும் அவரது சிற்பிகளோடும், அவர்களோடிணைந்த சோழ தேசத்தின் அனைத்து மக்களோடும் இணைந்து நாங்களும் கோயில் கட்டும் உணர்வை “உடையார்” நாவல் வாசிப்பனுபவம் தந்துவிடுகிறது.

கொடிகாமத்தில் நின்ற ரயில், மாங்குளம் காடுகளினூடே வேகமெடுக்க, கண்முன் விரிந்த வன்னிக் காடுகளின் காட்சி, தமிழ்ப் புலிகள் கோலோச்சிய காலத்தை மீண்டும் நினைவுபடுத்த, பக்கத்து ஆசனத்தில் ஜூட் ஜோசப் அண்ணா புலிக்கொடியேந்தி தமிழர்களின் மாட்சிமையை நிலைநாட்டிய சோழ மன்னர்களின் பெருமையை புளுகிக் கொண்டிருந்தார்.  

“உடையார்” நாவலில் வரும் வரலாற்று பாத்திரங்களான பிரம்மராயர் கிருஷ்ணராமன், கருவூர்த்தேவர், போன்றவர்களினூடாகவும், கற்பனை பாத்திரங்கள் ஊடாகவும், இந்த நாவலை ஒரு வரலாற்று நாவலாக மட்டுமல்ல, ஆன்மீக உரையாடல்கள் நிறைந்ததாகவும், பாலகுமாரன் எழுதியிருப்பது, இந்த நாவலின் மற்றுமொரு சிறப்பு. 

தாண்டிக்குளம் தாண்ட “அண்ணா வவுனியா stationல் friend ஒருத்தன் வருவான்.. ஒரு ஹலோ சொல்லிட்டு வாறன்” என்றேன். “எங்கட ஜொனியனோ?” என்று, நாடி நரம்பு, ரத்தம் எல்லாம் ஜொனியன் என்கிற வெறி, பெருமிதம், திமிர், எடுப்பு நிறைந்த ஜூட் ஜோசப் அண்ணா கேட்க, ஓமென்று பதிலளித்தேன். “உலகத்தின் எந்த மூலை முடுக்குக்கு போனாலும்.. எங்கட பெடியள் வந்து சந்திப்பாங்களடா.. அதுதான்டா ஜொனியன் பந்தம்” என்று விளாசினார்.

2011ம் ஆண்டளவில் வெயில் கொளுத்தியெறிந்த ஒரு மத்தியான வேளையில் தஞ்சை பெருங்கோயிலை ஒரு சாதாரண சுற்றுலாப் பயணியாக பார்க்க போயிருந்தை எண்ண இன்று வெட்கமாக இருக்கிறது. வாசலில் நின்று அந்த 99 அடி உயர விமானத்தையும், ஒற்றைக்கல்லில் செதுக்கிய நந்தியையும் பார்த்துவிட்டு வரத்தான் அன்று நேரம் சரியாக இருந்தது, என்பதை நினைக்க இன்று வேதனையாக இருக்கிறது. 

வவுனியா புகையிரத நிலையத்தில், உழுந்து வடையும் கதலி வாழைப்பழத்தையும் காவிக் கொண்டு நண்பன் சுது சிறி வந்து சந்தித்தான். எப்ப யாழ்ப்பாணம் போனாலும் அங்கிருந்து திரும்பினாலும், வவுனியாவில் மறித்து, ஓரிரு நிமிடமேயானாலும் சந்திக்காமல் போக விடமாட்டான்.

இராஜராஜன் அரசாட்சியில் மன்னன் மட்டுமல்ல, போரிலும் விண்ணன், அதைவிட காதலில் இராஜராஜன் ஒரு சிங்கன். இராஜராஜனின் அந்தப்புரத்தை பதினான்கு மனையாட்டிகள் அலங்கரித்தார்கள். பொன்னியின் செல்வனில் அருள்மொழிக்கு வானதி காதலி. உடையாரில் தேவரடியார் பெண்ணான பஞ்சவன்மாதேவி தான் இராஜராஜனின் கதாநாயகி. இதனால் தான் இரண்டு மனைவியர் திரைப்படமான “ரெட்டைவால் குருவி” படத்தில் வரும் பாட்டொன்றிற்கு “ராஜ ராஜ சோழன் நான்..எனை ஆளும் தேசம் நீ தான்” என்று கவிஞர் வாலி கவியெழுதியிருப்பார். 


தஞ்சையில் பரமேஸ்வரனிற்கு கோயில் கட்டி முடித்துவிட்டு, தனது மனைவியரோடும் அனுக்கியரோடும் இராஜராஜன் பழையாறைக்கு குடிபெயர்ந்து விடுவார். பழையாறையில் மரணிக்கும் இராஜராஜனின் ஆன்மாவும், பஞ்சவன்மாதேவியின் ஆத்மாவும் தஞ்சை பெருங்கோயிலில் குடியேறுவதோடு  பாலகுமாரன், “உடையார்” கதையை முடித்திருப்பார். 


இராஜராஜனின் ஆவி இன்னும் தஞ்சை பெருங்கோவிலில் உலா வருகிறது என்று உலாவும் நம்பிக்கைக்கு வலுச்சேர்ப்பது போல் பாலகுமாரன் கதையை நிறைவு செய்வார்.  தஞ்சை பெருங்கோவிலில் இராஜராஜனின் ஆவியிருப்பதால், பதவியில் இருக்கும் தலைவர்கள் அந்தக் கோயிலிற்கு போவதில்லையாம், போனவர்கள் தங்கள்  பதவிகளை இழந்துள்ளார்களாம். 


மீண்டும் ஒருமுறை தஞ்சை போக வேண்டும், பிரகதீஸ்வரர் கோயிலேக வேண்டும், ஒரு அதிகாலைப் பொழுதும் இரவும் அதன் முற்றத்தில் கழிக்க வேண்டும், பாலகுமாரனின் உடையார் கதையில் வரும் கதாபாத்திரங்களின் குரலொழிகள் கேட்க வேண்டும், சிற்பங்கள் செதுக்கிய உளிச் சத்தமும், மண்ணையும் கல்லையும் சுமந்த யானைகளின் பிளிரலும், குதிரைகளின் கனைப்பும் காதால் கேட்க வேண்டும் என்ற உணர்வே, “உடையார்” புத்தகத்தின் கடைசிப் பக்கம் வாசிக்கும் போது மேலோங்கியிருக்கிறது.


No comments:

Post a Comment