Friday, 26 October 2018

எங்களுக்கு என்னடா பிரச்சினை?
“இப்ப எங்களுக்கு என்னடா பிரச்சினை, மச்சான்?” விக்னேஸ்வரனின் புதிய அரசியல் கட்சி பற்றிய செய்தியை வாசித்து விட்டு, நேற்றிரவு தொலைபேசியில் தொடர்பெடுத்த  அருமை நண்பனொருவன் கேட்டான் . 

எங்கட அரசியல் பிரச்சினை பற்றி எப்ப கதைக்கத் தொடங்கினாலும் அந்த நல்ல நண்பன் தவறாமல் கேட்கும் கேள்வி “இப்ப எங்களுக்கு என்னடா பிரச்சினை, மச்சான்?”

“விசர்க் கதை கதையாதேடா.. அப்ப என்னத்துக்கு எங்கட பெடியள் சண்டை பிடிக்க போய் உசிரை விட்டவங்கள்? என்று கேள்வியை கேள்வியால் மடக்க முயலுவேன்.

“சரி.. அதான் சண்டை முடிஞ்சுதேடா.. சண்டையிலும் தோத்து தானே போனோம்.. இப்ப எங்களுக்கு என்னடா பிரச்சினை?” நண்பனும் விட மாட்டான்.

“அகிம்சையா போராடி தோற்றபடியா தான் arms எடுத்தனாங்கள்.. வெள்ளைக்காரன் நாட்டை விட்டு போன நாளிலிருந்தே நாங்க எங்கட உரிமைக்காக போராடிக் கொண்டு தானிருக்கிறம்” வரலாற்றுப் பாடம் படிப்பிக்கத் தொடங்குவேன். 

“சரி, அதெல்லாம் இருக்கட்டும், அது முடிந்து போன கதை, இப்ப எங்களுக்கு என்னடா பிரச்சினை, மச்சான்” சுற்றி சுற்றி வந்தும் சுப்பரின் கொல்லைக்குள் தான் அவன் நிற்பான்.

“சண்டை முடிஞ்சு பத்து வருஷமாகுது, எங்களுக்கு அரசியல் தீர்வும் வரேல்ல, ஆமி நிலத்தையும் விடேல்ல, jailல் இருக்கிறாக்களையும் விடேல்ல, காணாமல் போன சனத்துக்கும்  என்ன நடந்தது என்று தெரியாது, யுத்த குற்றத்திற்கும் விசாரணையும் இல்லை நீதியும் இல்லை..” என்று பிரச்சனைகளை பட்டியலிட தொடங்குவேன்.

“பொறு பொறு பொறடா.. நீயும் அரசியல்வாதி மாதிரி கதையாதே” நண்பன் இடையில் நிற்பாட்டினாலும் எனக்கு பட்டியலிட வேறு பிரச்சினைகளும் இருக்காது. “உதெல்லாத்துக்கும் யாரு தீர்வை தரோணும்.. அதைச் சொல்லு” நண்பன் பத்மவியூகம் அமைப்பான்.

“பேக் கதை கதையாதே... வேற யாரு.. இந்தியா தான்” நானும் நக்கலாக பதிலளித்து பத்மவியூகத்தை சுற்றிச் சுழன்று வருவேன். 

“உன்ர கோதாரி விழுந்த நக்கலை நிப்பாட்டு” நண்பன் கொஞ்சம் கடுப்பாவான். “உதெல்லாத்துக்கும் சிங்கள அரசாங்கத்திடம் தானேடா தீர்வை எதிர்பார்க்கிறம்? நாங்க தனிய கேட்டா தரமாட்டங்கள் என்று இந்தியா, அமெரிக்கா, ஐநா என்று எல்லோரையும் சேர்த்துக் கொண்டு போய் நின்று அவங்களை கேட்கிறம்” நண்பன் குட்டிப் பிரசங்கம் வைப்பான். 


“அவங்க தானே எங்கட இயக்கத்தை அழிச்சவங்கள்.. எங்கட பிரச்சினையை தீர்க்க அவங்களுக்கு அப்ப ஒரு moral responsibility இருக்கல்லோ” நியாயத்தை logicalஆக விளக்குவேன்.

“டேய் லூசா, அவங்களுக்கு moral responsibility, மxx, மண்ணாங்கட்டி எல்லாம் இருந்திருந்தா, எங்கட போராட்டத்தை அழிக்க துணை போயிருக்க மாட்டங்கள்” நண்பன் pointல் அடிப்பான்.

“அப்ப என்ன செய்ய சொல்லுறாய், நாங்களும் அன்பா கேட்டம்..தரேல்ல, ஒப்பந்தம் போட்டம்.. கிழித்து போட்டாங்கள், அமைச்சர் பதவி எடுத்தும் பார்த்தம்.. சரி வரேல்ல, சத்தியாக்கிரகம் இருந்தம்.. கணக்கெடுக்கேல்ல, இந்தியா வந்திச்சு.. கலைச்சு போட்டாங்கள், கட்டுநாயக்கா ஆனையிறவு என்று camp campஆ அடிச்சம்.. சீனாவையும் இந்தியாவையும் கொண்டு வந்து இயக்கத்தை ஆணிவேரோடு அறுத்தாங்கள்..  இப்ப ஜெனிவாவில் போய் நிற்கிறம்..” நீட்டி முழங்குவேன்.

“சரி.. நீ பழையபடி பழங்கதை கதை, உன்னை திருத்தேலாது” நண்பன் சலித்துக் கொள்வான். “வேலையில்லாமல் சனம் கஷ்டப்படுது, போராடின பெடி பெட்டையளை கவனிக்க ஆருமில்லை, OL சோதனையில் வடமாகாணம் தான் last, கம்பஸுக்கு இடம் கிடைக்கேல்ல என்று arms எடுத்த எங்களுக்கு இன்றைக்கு கம்பஸுக்கு போற  பெடி பெட்டையளின் அளவு குறைஞ்சு போச்சு, தண்ணி பிரச்சினை ஒரு பக்கம்..இப்படி இதைப் பற்றி பேசாதே.. ஆனையிறவு அடிச்சம் கிளிநொச்சி பிடிச்சம் கதை சொல்லிக் கொண்டிரு” என்று நண்பன் விளாசுவான்.

“எங்களுக்கு அரசியல் உரிமை வந்தா உதை எல்லாம் ஒரு வரியத்தில fix பண்ணுவம்” நண்பனுக்கு சூடு வைப்பேன். “Diasporaவை இறக்குறம், வடக்கு கிழக்கை அடுத்த சிங்கப்பூராக்குறம்.. இருந்து பார்” கண்களில் கனவு மிதக்க மிதக்க கதைப்பபேன்.

நேற்றிரவு தொலைபேசியில் வந்த நண்பன் மறுபடியும் முதலிலிருந்தே தொடங்கினான், “இப்ப எங்களுக்கு என்னடா பிரச்சினை, மச்சான்?”.

“டேய், விளையாடாதே, அடுத்த கிழமை விஜய் படம் வேற வருதாம்.. நீ வேற கடுப்பேத்தாதே” மீண்டும் விஜய் படம் வரப்போவதாக அறிந்த கணத்திலிருந்து தொற்றிய பீதி கலந்த விசரில் பதிலளித்தேன்.

“ஓமடா.. அதை விடு.. அந்தக் காலத்தில நாற்பது இயக்கங்கள் இருந்திச்சு.. எல்லா இயக்கமும் தனிநாடு கேட்கப் போய் கடைசியாக ஒன்றும் நடக்கேல்ல” நண்பன் பழங்கதை பேசினான். “இப்ப என்னென்றா ஆளுக்கொரு கட்சி தொடங்கீனம்.. ஆரோடு சண்டைக்கு போக போயீனம்?” கடைசியில் நண்பன் நிகழ்காலத்தில் காலடி எடுத்து வைத்தான்.

“எனக்கு தெரியேல்லயடா.. நீயே சொல்லு செல்லம்” கடுப்பேத்தினவை கடுப்பாக்க முயன்றேன்.

“ஹா ஹா ஹா” கடுப்பாவான் என்று பார்த்தால், கலகலவென சிரித்தான். “விக்கியரும் கடைசியில் மகிந்த மாமாவிடம் தான் தாம்பூலத் தட்டோடு போய் நிற்கோணும்..தீர்வு காண அவங்களோடு தான் பேசணும்.. அம்பாந்தோட்டையில் போய் நின்டு நல்லூரில் சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் மாவைக்கும் காட்டின மாதிரி சண்டித்தனம் காட்டேலாது.. பம்மிக் கொண்டு தான் கதைக்கோணும்” நண்பனின் நக்கலில் யதார்த்தம் பொதிந்திருந்தது.

“நமக்கு பூகோள அரசியல் விளங்கேல்லயாக்கம் மச்சி” நமட்டுக் கதையை விட தொடங்கினேன். “அடுத்த வல்லரசு சீனாவா அமேரிக்காவா என்ற போட்டியில், ஈழத்தமிழர்கள் ஒரு தீர்மானிக்கும் சக்தியாம், உது விளங்காமல் பேக் கதை பறையுறாய்” நாங்களும் ஏலும் என்று நண்பனுக்கு காட்டினேன். 

“வாஆஆஆஆஆவ்.. அப்பச் சரி அப்பச் சரி அப்பச் சரி” நண்பன் அதிர்ந்தே போனான். “அரசியலை விடுவம், நயன்தாரான்ட அடுத்த படம் எப்ப வருதாம்” நண்பனுக்கு அரசியல் வெறுத்து போயிருந்தது என்று நினைத்தேன். 

“ஐரா என்று பேர் வச்சிருக்கிறாங்கள்.. நயன்தாரா முதன் முதலாக double acting ஆம்.. “ கடமைக்காக சொல்லிக் கொண்டு போனேன்.

“ஓ.. double acting.. ஹும்.. அப்ப எங்கட விக்கியரைப் போல என்று சொல்லு” நண்பன் மீண்டும் அரசியல் முருங்கை மரம் ஏறினான்.

“அப்பு.. ராசா.. செல்லம்.. உந்த விளையாட்டுக்கு நான் வரேல்ல” தப்ப முயன்றேன். “தலைவரின் அடுத்த படம் நவம்பரில் வருதாம்.. can’t wait” ரஜினி படத்திற்கு தாவினேன்.

“எதுடா.. கார்த்திக் சுப்புராஜின் படமோ” நண்பன் அதீத அக்கறை காட்டினான்.

“இல்லைடா.. 2.0...ஷங்கர்ட படம்” என்றேன்.

“ஓ.. அதுவும் விக்கியருக்கு நல்லா பொருந்துது.. we are all going to see விக்னேஸ்வரன் 2.0” என்றுவிட்டு ரஜினிகாந்த் மாதிரி சிரித்தான். “அவரும் ஆன்மீக அரசியல், இவரும் ஆன்மீக அரசியல்.. நல்ல பொருத்தம் மச்சி” என்று தமிழ்நாட்டையும் தமிழீழத்தையும் ஒற்றைப் புள்ளியில் இணைத்தான்.

“ஆண்டவரே.. என்னை காப்பாற்றும்” நண்பரிடம் இருந்து என்னை காப்பாற்ற சர்வதேச தலையீட்டை வேண்டினேன்.

“உன்னை கர்த்தர் காப்பாற்றலாம்.. ஆனா எங்கட தமிழ் சனத்தை கடவுளால் கூட காப்பற்ற முடியுமோ தெரியாதுடா” என்ற நண்பன், மீண்டும் பழைய கொப்புக்கு தாவினான், “அது சரிடா..இப்ப எங்களுக்கு என்னடா பிரச்சினை, மச்சான்?” 

“கர்த்தரே முருகா.. ஆமென் அரோகரா” தொலைபேசியை துண்டித்தேன். 

Thursday, 11 October 2018

89யாழ்ப்பாணத்தில் ஆண்கள் மட்டும் பாடசாலையில் படித்த பெடியள், பெட்டைகளோடு ஒன்றாக இருந்து படிக்க களம் அமைத்து தந்தவை யாழ்ப்பாணத்தின் பிரபல mega டியூடரிகள் தான். யாழ் நகரத்தின் புறநகர்ப் பகுதிகளில் பத்து பதினைந்து மாணவ மாணவிகளுடன் குட்டி குட்டி டியூட்டரிகளிற்கு போய்க் கொண்டிருந்தவர்கள் எல்லாம், O/L சோதனைக்கான கடைசி இரு வருடங்களும், Mega டியூடரிகளில் Rock star வாத்திமாரைத் தேடி தஞ்சம் புகுவது யாழ்ப்பாணக் கல்விச் சமூகத்தின் வழக்கம், வரலாறு, பாரம்பரியம். 

இந்த Mega டியூடரிகளில் Rock star வாத்திமார் நடாத்தும் வகுப்புகளிற்கு, திருவிழாவைப் போல் மாணவர் கூட்டம் அள்ளுப்படும். யாழ்ப்பாண நகரத்தின் பிரபல கல்லூரி மாணவ மாணவர்கள் ஒன்று கூடும் ஒரே களமாக, இந்த டியூடரிகள் அமையும். முழுமையான ஈடுபாட்டுடன் கற்பித்த ஆசிரியர்களின் வழிகாட்டலிலும், அயராது படித்த மாணவர்களின் முயற்சியாலும், இலங்கைத் தீவில் கல்வி பெறுபேறுகளில் முன்னனியில் திகழ்ந்த மாவட்டங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் மிளிர்ந்த பொற்காலங்கள் அவை.

Mega டியூடரிகள் கல்விக்கு நல்ல களம் அமைத்துத் தந்த அதேவேளை, விடலைப் பருவத்தை எட்டிய பெடி பெட்டைகளிற்கு சுழற்றவும், சேட்டைகள் விடவும், காதல் செய்யவும், பம்பல் அடிக்கவும் மேடை அமைத்துத் தந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பிரதேசங்களாகவும் விளங்கின.  

1989ம் ஆண்டு மார்கழியில் O/L பரீட்சைக்கு தோற்றவிருந்த எங்கள் Batchக்கு, யாழ் நகரின் மத்தியிலிருந்து சற்றுத் தள்ளி அமைந்திருந்த Yarl Hall தான் பிரதான mega டியூடரி. யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளான பரி யோவான், மத்திய கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரி, பற்றிக்ஸ், சுண்டுக்குளி, கொன்வென்ட், வேம்படி என்று எல்லா பாடசாலைகளுக்கு போற பிள்ளைகளுக்கும் கிட்டவான இடத்தில் தான் Yarl Hall அமைந்திருந்தது. 

பரி யோவான் கல்லூரி பக்கமிருந்து, பிராதான வீதியில் சைக்கிளை வலித்துக் கொண்டு போனால், English Convent, தண்ணீர் தாங்கி எல்லாம் தாண்டி வர, வலப் பக்கத்தில் Yarl Hall இருக்கும். யாழ் மத்திய கல்லூரிப் பக்கமிருந்து, அதே பிரதான வீதியால் வந்தால், பிலிப்பரின் வைத்தியசாலை, 1981ல் எரியூட்டப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகம் எல்லாம் தாண்டி வர, இடப்பக்கத்தில் Yarl Hall இருக்கும்.  

எண்பதுகளில் Yarl Hallன் நம்பிக்கை நட்சத்திரம், crowd puller, Rock star வாத்தியார் என்றால் அது இரா. செல்வவடிவேல் தான். யாழ் நகரின் மதில்கள் எல்லாம் “விஞ்ஞானம் - இரா.செல்வவடிவேல்” என்ற கொட்டை எழுத்துக்கள் அலங்கரித்த காலங்கள் அவை. 

வெள்ளை நிற Vespa scooterல் யாழ்ப்பாணம் எங்கும் ஒடித்திரிந்து, மாணவர்களிற்கு சுவாரசியமாகவும் அழகிய தமிழ் நடையுடனும் ஸ்டைலாக விஞ்ஞானம் கற்பித்த இரா. செல்வவடிவேலின் வகுப்புகளிற்கு சனம் அள்ளுப்படும். வடமராட்சியில் வகுப்பெடுத்து விட்டு வந்தாலும், யாழ் நகர் வகுப்புக்களிற்கு நேரம் தவறாது வருவது செல்வவடிவேல் மாஸ்டரின் இன்னுமொரு நற்பண்பு.

Yarl Hallல் செல்வவடிவேல் மாஸ்டரின் வகுப்புகள் பிரதான வீதியை அண்டியிருக்கும் பெரிய கொட்டகையில் நடந்தன. அந்த கொட்டகைக்கு பின்னால் இருந்த பழைய கட்டிடத்தில் சிறிய வகுப்பறைகளும், Yarl Hallன் checkieயின் அலுவலகமும் இருந்தன.

செல்வவடிவேல் மாஸ்டரின் வகுப்பு நடக்கும் கொட்டகையில் மூன்று வரிசைகளில் வாங்குங்கள் போடப்பட்டிருக்கும். வாங்குகளில் அநேகமாக, பாடசாலை பாடசாலையாக தான் மாணவ மாணவிகள் அமர்ந்திருப்பார்கள்.

நாங்கள் O/L படித்த இறுதியாண்டின் ஆரம்பத்தில், நடு வரிசையில் முன்னுக்கிருந்த வாங்குகளில் பரி யோவான் கல்லூரி மாணவர்களும், எங்களுக்கு பின்னால் பற்றிக்ஸ் கல்லூரி மாணவர்களும் அமர்ந்திருந்தார்கள். மண்டபத்தின் இடப்புறம் இருந்த வாங்களுகளில் மத்திய கல்லூரி மாணவர்களும் இந்துக் கல்லூரி மாணவர்களும் அமர்ந்திருந்தார்கள். 

மண்டபத்தின் வலப்பக்கத்தில் இருந்த வாக்குகளில் தான் பெட்டைகள் அமர்ந்திருப்பார்கள். முன்னுக்கு இருந்த வாங்குகளில் வேம்படி, அவர்களுக்கு பின்னால் சுண்டுக்குளி, கொன்வென்ட் என்று யாழ்ப்பாணத்தின் வடிவான பெட்டைகள் Yarl Hallன் அந்த கொட்டகையை அழகாக்குவார்கள். 

செல்வவடிவேலின் வகுப்புக்கள் கலகலப்பாக நடந்தேறும். வகுப்பு முடிந்ததும் பெட்டைகள் தான் முதலில் வகுப்பறையை விட்டு வெளியேறி, சைக்கிளை எடுத்துக் கொண்டு தங்களது வீடுகளை நோக்கி சைக்கிளை மிதிப்பார்கள். பெட்டைகள் எல்லாம் போனாப் பிறகு தான் பெடியள் பாய்ந்தடித்து வெளியே வந்து, சைக்கிளில் பாய்ந்து தாங்கள் சுழன்றும் பெட்டையை கலைத்துக் கொண்டு போய், வீடு வரை பத்திரமாக கொண்டு சென்று விட்டு விடுவார்கள், இது தான் யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய சுழற்றல். 

Yarl Hallற்கு எங்களோடு வந்த பரி யோவான் நண்பர்களும் சுழற்றல் மன்னர்களாக தான் இருந்தார்கள். சுழற்றுவதோடு நிறைவடையும் காதல் தான் பத்தாம் வகுப்பில் அதுவரை நாங்கள் அறிந்திருந்தது. சுழற்றலில் இருந்து காதலிற்கு upgrade ஆகும் கருமத்தை அனுபவித்திராத பருவமது.

ஒரு நாள் வழமை போல் செல்வவடிவேலின் வகுப்பிற்கு வந்து Yarl Hallன் கொட்டகையில் நடு வாங்குகளில் முன் வரிசையில் அமர்ந்திருந்தோம். வகுப்பிற்குள் நுழைந்த செல்வவடிவேல் மாஸ்டர், நாங்கள் அமர்ந்திருந்த முதல் மூன்று நான்கு வாங்குகளையும் சுட்டிக் காட்டி “அட தம்பியவை, நீங்கள் பின் வாங்கில போய் இருங்கடா” என்று கட்டளை பிறப்பித்தார். 

நேரத்திற்கு வந்து முதல் வாங்கு பிடித்த எங்களை, ஏன் பின் வாங்குகளிற்கு அனுப்புகிறார் என்று புரியாமல் நாங்கள் பின்வாங்க, செல்வவடிவேல் மாஸ்டரின் கணீர் குரல் மீண்டும் ஒலித்தது. “தங்கச்சியவ.. நீங்க இந்த முன் வாங்குக்கு வாங்கோ”, கொட்டகையின் வலப்பக்க வாங்குகளின் பின்வரிசையில் இருந்த கொன்வென்ட் பெட்டைகளைத் தான் செல்வவடிவேல் மாஸ்டர் அழைத்துக் கொண்டிருந்தார். 

சென் ஜோன்ஸ் பெடியளை பின்னுக்கு அனுப்பி விட்டு, கொன்வென்ட் பெட்டைகளை முன்னுக்கு அழைத்து இருத்திவிட்டு, செல்வவடிவேல் மாஸ்டர் மேடையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தார். “இப்ப என்னென்டா.. இந்த வகுப்பில் இருக்கும் பிரபல பாடசாலை மாணவன் ஒருத்தன்.. ஒரு காதல் கடிதம் எழுதியிருக்கிறார்..”என்று தனது சட்டைப் பைக்குள் இருந்து ஒரு கசங்கின காகிதத்தை எடுத்துக் காட்டினார்.

“அடேய்.. நீங்க படிக்க வாறியளோ.. இல்ல காதலிக்க வாறனீங்களோ..” என்று இரா.செல்வவடிவேல், சொற்பொழிவாற்றத் தொடங்க, வகுப்பில் இருந்த அனைவருக்கும் யாரை நோக்கி மாஸ்டர் ஆட்டிலெறி அடிக்கிறார் என்பது விளங்கியது, அதைத்தான் ஆரம்பத்தில் பரி யோவான் மாணவர்களை எழுப்பி பின்னால் அனுப்பி வைத்து அவர் சூசகமாக தெரிவித்து விட்டாரே.

“படிக்கிற பள்ளிக்கூடத்தின் மரியாதையை காத்தில பறக்க விட்டிட்டீங்களடா..” என்று அன்றைய வகுப்பு முழுவதும் அறிவுரையும் புத்திமதியும் தான் அரங்கேறியது. விஞ்ஞானம் படிப்பிக்கும் செல்வவடிவேல் மாஸ்டர், அன்று எங்களுக்கு வாழ்க்கைப் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். முன் வாங்குகளில் இருந்த மற்றப் பாடசாலை பெடியள் எல்லாம் எங்களைத் திரும்பி திரும்பி பார்க்க, நம்மில் பலருக்கும் யார் செய்தது என்று தெரியாதபடியால் குழம்பிப் போய் இருந்தோம். 

ஒருவாறு செல்வவடிவேல் மாஸ்டரின் கதாகலாட்சேபம் முடிவிற்கு வந்ததோடு வகுப்பு கலைக்கப்பட்டது. சைக்கிளை எடுத்துக் கொண்டு, நாங்கள் எல்லோரும் மார்ட்டீன் வீதியோரத்தில் கூடினோம். பெட்டைகளை சுழற்றிக் கொண்டிருந்த எல்லார் மேலும் சந்தேகம் இருந்தாலும் கொன்வென்டில் படிக்கும் பெட்டை ஒன்றை சுழற்றிய நண்பன் ஒருவன் தானாக முன்வந்து குற்றத்தை ஒப்புக் கொண்டான்.

“மச்சான் நான் தான்டா அந்த letter எழுதினது” சொல்லும் போதே அவனது குரல் பயத்தால் உடைந்திருந்தது.

“எப்படீடா.. எப்படா.. யாரிட்ட குடுத்து குடுத்தனீ” என்று அவனவன் மாறி மாறி அதிர்ச்சிக் கேள்விக் கணைகளால் நண்பர்கள் அவனைத் துளைத்தெடுக்கத்  தொடங்கினார்கள்.

“போன கிழமை மச்சான்.. நேராத் தான் குடுத்தனான்.. யாருக்கும் தெரியாது” நண்பனின் குரலில் இன்னும் பதற்றம் தொற்றியிருந்தது.

“டேய் வடுவா.. எங்க வச்சடா குடுத்தனீ” எங்களில் ஒருத்தன் கேட்டான்.

“இங்க வச்சுத் தான்டா .. Yarl Hallல” சுழற்றலிலுருந்து காதலிற்கு படியேற முயற்சித்த நண்பன் ஒப்புவித்தான். “அவள் செல்வவடிவேல் மாஸ்டரிட்ட போட்டு குடுத்திட்டாள்டா” கண்களில் லேசாக கண்ணீர் தளும்பியது.

“இங்க வச்சா... எப்படீடா.. நாங்க பார்க்கேல்லயே” அவனுக்கு பக்கத்தில் நின்ற நண்பனொருவனுக்கு நம்ப முடியாமல் இருந்தது. 

“போன கிளாசுக்கு.. அதான் லேட்டாக வந்தனான்” தாக்குதல் திட்டம் விளக்கப்படத் தொடங்கியது. 

“லேட்டா வந்து..” இன்னொருத்தன் அவசரப்பட்டான்.

“அவட சைக்கிள் சீட்டிற்கு அடியில.. letterஐ கசக்கி வச்சிட்டன்.. மச்சான்”

Friday, 5 October 2018

உடையார்பயணங்கள் நல்ல மனிதர்களை அறிமுகப்படுத்தவல்லது, அழகிய அனுபவங்களையும் தரவல்லது, அரிதாக அவை அருமையான புத்தகங்களையும் கைகளில் திணித்துவிடும். பாலகுமாரன் எழுதிய “உடையார்” நாவல் எனக்கு அறிமுகமானது, போன வருடம் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு பயணித்த கடுகதி ரயில் பயணத்தில் தான். 


யாழ்ப்பாணப் பயணத்தில் அறிமுகமான கனதியான புத்தகத்தை, இந்த வருடம் தாய்லாந்தில் அரங்கேறிய எங்களது SJC92ன் ஒன்றுகூடலிற்கு காவிக் கொண்டு வந்தது நண்பன் அருள்மொழி. ஒரு பயணத்தில் அறிமுகமான புத்தகம், இன்னொரு பயணத்தில் கையில் கிடைத்தது.  அதன் பின்னர் பல பயணங்களில் “உடையாரும்” கூடவே பயணித்தார். 

போன வருடம் ஓகஸ்ட் மாதம் நல்லூர் தேர்த் திருவிழாவை தரிசித்து விட்டு, ரயிலேற யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் இறக்கி விட நண்பன் கோபிஷங்கர் வந்தான். காங்கேசன்துறையிலிருந்து  வந்த ரயில், யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் நுழையவும், இறுக்கிக் கட்டியணைத்து விடைதர நண்பன் வாதுலனும் ஓடோடி வந்தான்.

உடையார் நாவல் சோழ மன்னர்களில் அதிசிறந்தவனான இராஜராஜ சோழன், தஞ்சையில் கட்டிய பெருங்கோவிலின் கதையை காட்சிப்படுத்துகிறது. கல்கியின் “பொன்னியின் செல்வன்” வாசிக்காத தமிழர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பொன்னியின் செல்வனில் வரும் அருள்மொழித் தேவன், அரியணையேறி இராஜராஜனாக கோலோச்சிய கதை தான் உடையார்.

கொழும்பு நோக்கி பயணிக்கும் கடுகதி புகையிரதத்தின் பெட்டியில் ஏறி, ஆசனத்தை தேடிக் கொண்டிருக்க, அதே புகையிரத பெட்டிக்குள்  ஜூட் ஜோசப் அண்ணாவும் நிற்கிறார். இன்றைக்கு பயணம் நிட்சயம் அலுப்புத் தட்டாது என்று மனதுக்குள் மகிழ்ந்து விட்டு, பக்கத்து ஆசனத்தில் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு ஒய்யாரமாக இருந்த அன்ரியை கதைத்துப் பேசி, வெய்யில் படாத ஜூட் ஜோசப் அண்ணாவின் சீட்டிற்கு அனுப்பி விட்டு, ஜூட் ஜோசப் அண்ணாவை பக்கத்து ஆசனத்தில் வரவேற்கும் போது, ரயில் புங்கன்குளம் தாண்டிக்கொண்டிருந்தது.   

வழமையாக பரி யோவானின் பழங்கதை பேசும் இருவரும், ஏனோ அன்று சோழர்கள் பற்றி பேசத் தொடங்க, ஜூட் ஜோசப் அண்ணா “நீர் உடையார் வாசித்து விட்டீரா” என்று கேட்டார். இல்லை என்று தலையாட்ட “அது ஒரு கெட்ட சாமான்டா.. எடுத்தா வைக்க மாட்டாய்” என்னு தனக்கேயுரிய பாணியில் ஜூட் ஜோசப் அண்ணா பில்டப்பை ஏற்றும் போது, சுண்டுக்குளி மாணவி கிருஷாந்தி குமாரசாமியையும் வேறு பல நூற்றுக்கணக்கானவர்களையும் கொன்று புதைத்த செம்மணி வெளியைத் தாண்டிய ரயில், நாவற்குழி பாலத்தில் தடதடத்தது.  

எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் “உடையார்” நாவல், ஆறு பெரிய புத்தகங்கள் அடங்கிய பொக்கிஷம், பக்கங்கள் வாசிக்க வாசிக்க அலுக்காது. உடையார் என்பது இராஜராஜனைத் தான் குறிக்கிறது. உடையாரின் மூலக்கதை தஞ்சை பெருங்கோவில் கட்டிய சம்பவங்களை மையமாக் கொண்டிருந்தாலும், இராஜராஜனிற்கும் அவனது மகனான இராஐராஜேந்திரனிற்கும் இடையில் நடக்கும் கருத்து மோதல்களையும், இராஜராஜனின் அனுக்கியும் மனைவியுமான பஞ்சவன்மாதேவியுடனான காதலையும் அழகாக பதிவுசெய்கிறது.

ஆனையிறவு தாண்டும் போது, ஜூட் அண்ணா, பொன்னியின் செல்வனின் முடிவில் ஆட்சிக் கட்டிலேறிய மதுராந்தகனிற்கு என்ன நடந்தது என்பதையும், தனக்கு கிடைக்க வேண்டிய ஆட்சியை குடந்தை ஜோசியரின் ஆலோசனைப்படியும் தமக்கையார் குந்தவையின் அறிவுரைக்கமையவும் தாரைவார்த்த அருள்மொழி மீண்டும் எப்படி சோழ மன்னனான் என்பதையும், ஆதித்த கரிகாலன் எவ்வாறு கொல்லப்பட்டான என்பதையும், பாலகுமாரன் “உடையாரில்” சொல்லியிருக்கிறார் என்று விளக்கினார். “உண்மையைச் சொன்னால், உடையார் கதை, பொன்னியின் செல்வன் part 2 தான்டா” என்றார். 

கிபி 1010ம் ஆண்டளவில் கட்டிமுடிக்கப்பட்ட இந்தக் கோயிலின் ஒவ்வொரு பகுதியும் எவ்வாறு கட்டப்பட்டிருக்கும் என்று, அலசி ஆராய்ந்து, அதை கற்பனை கலந்து எழுதும்
போது, நம்மையும் மீண்டும் அந்த யுகத்திற்கு கொண்டு செல்ல வைப்பது பாலகுமாரனின் எழுத்துக்களில் பொதிந்திருக்கும் வல்லமை. கோயில் கட்டுமானத்தின் தலைமைச் சிற்பியான குஞ்சரமல்ல பெருந்தச்சனோடும் அவரது சிற்பிகளோடும், அவர்களோடிணைந்த சோழ தேசத்தின் அனைத்து மக்களோடும் இணைந்து நாங்களும் கோயில் கட்டும் உணர்வை “உடையார்” நாவல் வாசிப்பனுபவம் தந்துவிடுகிறது.

கொடிகாமத்தில் நின்ற ரயில், மாங்குளம் காடுகளினூடே வேகமெடுக்க, கண்முன் விரிந்த வன்னிக் காடுகளின் காட்சி, தமிழ்ப் புலிகள் கோலோச்சிய காலத்தை மீண்டும் நினைவுபடுத்த, பக்கத்து ஆசனத்தில் ஜூட் ஜோசப் அண்ணா புலிக்கொடியேந்தி தமிழர்களின் மாட்சிமையை நிலைநாட்டிய சோழ மன்னர்களின் பெருமையை புளுகிக் கொண்டிருந்தார்.  

“உடையார்” நாவலில் வரும் வரலாற்று பாத்திரங்களான பிரம்மராயர் கிருஷ்ணராமன், கருவூர்த்தேவர், போன்றவர்களினூடாகவும், கற்பனை பாத்திரங்கள் ஊடாகவும், இந்த நாவலை ஒரு வரலாற்று நாவலாக மட்டுமல்ல, ஆன்மீக உரையாடல்கள் நிறைந்ததாகவும், பாலகுமாரன் எழுதியிருப்பது, இந்த நாவலின் மற்றுமொரு சிறப்பு. 

தாண்டிக்குளம் தாண்ட “அண்ணா வவுனியா stationல் friend ஒருத்தன் வருவான்.. ஒரு ஹலோ சொல்லிட்டு வாறன்” என்றேன். “எங்கட ஜொனியனோ?” என்று, நாடி நரம்பு, ரத்தம் எல்லாம் ஜொனியன் என்கிற வெறி, பெருமிதம், திமிர், எடுப்பு நிறைந்த ஜூட் ஜோசப் அண்ணா கேட்க, ஓமென்று பதிலளித்தேன். “உலகத்தின் எந்த மூலை முடுக்குக்கு போனாலும்.. எங்கட பெடியள் வந்து சந்திப்பாங்களடா.. அதுதான்டா ஜொனியன் பந்தம்” என்று விளாசினார்.

2011ம் ஆண்டளவில் வெயில் கொளுத்தியெறிந்த ஒரு மத்தியான வேளையில் தஞ்சை பெருங்கோயிலை ஒரு சாதாரண சுற்றுலாப் பயணியாக பார்க்க போயிருந்தை எண்ண இன்று வெட்கமாக இருக்கிறது. வாசலில் நின்று அந்த 99 அடி உயர விமானத்தையும், ஒற்றைக்கல்லில் செதுக்கிய நந்தியையும் பார்த்துவிட்டு வரத்தான் அன்று நேரம் சரியாக இருந்தது, என்பதை நினைக்க இன்று வேதனையாக இருக்கிறது. 

வவுனியா புகையிரத நிலையத்தில், உழுந்து வடையும் கதலி வாழைப்பழத்தையும் காவிக் கொண்டு நண்பன் சுது சிறி வந்து சந்தித்தான். எப்ப யாழ்ப்பாணம் போனாலும் அங்கிருந்து திரும்பினாலும், வவுனியாவில் மறித்து, ஓரிரு நிமிடமேயானாலும் சந்திக்காமல் போக விடமாட்டான்.

இராஜராஜன் அரசாட்சியில் மன்னன் மட்டுமல்ல, போரிலும் விண்ணன், அதைவிட காதலில் இராஜராஜன் ஒரு சிங்கன். இராஜராஜனின் அந்தப்புரத்தை பதினான்கு மனையாட்டிகள் அலங்கரித்தார்கள். பொன்னியின் செல்வனில் அருள்மொழிக்கு வானதி காதலி. உடையாரில் தேவரடியார் பெண்ணான பஞ்சவன்மாதேவி தான் இராஜராஜனின் கதாநாயகி. இதனால் தான் இரண்டு மனைவியர் திரைப்படமான “ரெட்டைவால் குருவி” படத்தில் வரும் பாட்டொன்றிற்கு “ராஜ ராஜ சோழன் நான்..எனை ஆளும் தேசம் நீ தான்” என்று கவிஞர் வாலி கவியெழுதியிருப்பார். 


தஞ்சையில் பரமேஸ்வரனிற்கு கோயில் கட்டி முடித்துவிட்டு, தனது மனைவியரோடும் அனுக்கியரோடும் இராஜராஜன் பழையாறைக்கு குடிபெயர்ந்து விடுவார். பழையாறையில் மரணிக்கும் இராஜராஜனின் ஆன்மாவும், பஞ்சவன்மாதேவியின் ஆத்மாவும் தஞ்சை பெருங்கோயிலில் குடியேறுவதோடு  பாலகுமாரன், “உடையார்” கதையை முடித்திருப்பார். 


இராஜராஜனின் ஆவி இன்னும் தஞ்சை பெருங்கோவிலில் உலா வருகிறது என்று உலாவும் நம்பிக்கைக்கு வலுச்சேர்ப்பது போல் பாலகுமாரன் கதையை நிறைவு செய்வார்.  தஞ்சை பெருங்கோவிலில் இராஜராஜனின் ஆவியிருப்பதால், பதவியில் இருக்கும் தலைவர்கள் அந்தக் கோயிலிற்கு போவதில்லையாம், போனவர்கள் தங்கள்  பதவிகளை இழந்துள்ளார்களாம். 


மீண்டும் ஒருமுறை தஞ்சை போக வேண்டும், பிரகதீஸ்வரர் கோயிலேக வேண்டும், ஒரு அதிகாலைப் பொழுதும் இரவும் அதன் முற்றத்தில் கழிக்க வேண்டும், பாலகுமாரனின் உடையார் கதையில் வரும் கதாபாத்திரங்களின் குரலொழிகள் கேட்க வேண்டும், சிற்பங்கள் செதுக்கிய உளிச் சத்தமும், மண்ணையும் கல்லையும் சுமந்த யானைகளின் பிளிரலும், குதிரைகளின் கனைப்பும் காதால் கேட்க வேண்டும் என்ற உணர்வே, “உடையார்” புத்தகத்தின் கடைசிப் பக்கம் வாசிக்கும் போது மேலோங்கியிருக்கிறது.