Friday, 7 September 2018

மணிரத்தினத்தின் பாடல்கள்தமிழ் திரைப்பட இயக்குனர்களில் மணிரத்தினத்திற்கென்று ஒரு தனித்துவம் இருக்கிறது. மணிரத்தினத்தின் தனித்துவ முத்திரை அவரது படங்களில் மிளிரும். மணிரத்தினத்தின் திரைப்படங்களின் தரம் பிற இயக்குனர்களின் திரைப்படங்களிலிருந்து வேறுபடுவதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று, மணிரத்தினம் தெரிவு செய்யும் அதியுயர் தரம் வாய்ந்த தொழில்நுட்பவியலாளர்கள் குழு.

பாட்டெழுத வைரமுத்துவும் வாலியும், மெட்டமைக்க முன்னர் இளையராஜா பின்னர் ரஹ்மான், காட்சிப்படுத்த P.C ஶ்ரீராம் இல்லாட்டி ரஜீவ் மேனன் என்று தமிழ் சினிமாவின் ஜாம்பாவான்களின் திறமைகளை ஒரு புள்ளியில் மையப்படுத்தும் ஆற்றல் தான் மணிரத்தினத்தின் தனித்துவம். 

மணிரத்தினம் இயக்கிய படங்களில் இடம்பெறும்  பாடல்களை அவர் திரையில்  காட்சிபடுத்தும் விதம் மிக மிக அழகாக இருக்கும், காலங்கள் கடந்தும் என்றும் நினைவில் இருக்கும். மணிரத்தினமும் வைரமுத்துவோடோ வாலியோடோ, இளையராஜாவோடோ ரஹ்மானோடோ, இணைந்து  தயாரிக்கும் பாடல்களுக்கு ரஜீவ் மேனனோ P.C ஶ்ரீராமோ ஓளி ஓவியம் வரையும் அற்புத கணங்கள் மணிரத்தினத்தின் திரைப்படப் பாடல் காட்சிகளாகத் தான் இருக்கும்.

வீடியோ டெக்கில் படம் பார்க்கும் போது fast forward பண்ணியும் திரையரங்குகளில் பாடல்கள் வரும் போது தம்மடிக்கப் போயும் திரைப்படம் பார்த்த தமிழ் ரசிகர்களை, உட்கார வைத்து பாடல் காட்சிகளையும் ரசிக்க வைத்த பெருமை மணிரத்தினத்தின் படங்களில் வரும் பாடல்களிற்கே உரித்தாகும். 

“செக்கச் சிவந்த வானம்” நிகழ்ச்சியில், திரையில் மிகச் சிறப்பாக காட்சியமைக்கப்பட்ட தனது மூன்று பாடல்களை வைரமுத்து தெரிவு செய்வார். பாலச்சந்தரின் புன்னகை மன்னன் படத்தில் வரும் என்ன சத்தம் இந்த நேரம், பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தில் இடம்பிடித்த ஆயிரம் தாமரை மொட்டுக்களே,  மற்றது தனக்கு மிகவும் மிகவும் பிடித்த மணிரத்தினத்தின் பம்பாய் படத்தில் இடம்பெறும் உயிரே உயிரே பாடல் என்று வைரமுத்து பட்டியலிடுவார்.

திரையில் காட்சிப்படுத்தப்பட்ட விதத்தில் தனக்கு மிகவும் பிடித்த பாடல் பம்பாய் படத்தில் வரும் கண்ணாளனே பாட்டு என்றும், மணிரத்தினம் ரோஜா படத்தில் வரும் தமிழா தமிழா பாட்டு என்றும் சுருக்கமாக பதிலளிப்பார்கள். 

மணிரத்னம் இயக்கிய படங்களில் இடம்பெற்ற பாடல்களில், இசை, பாடல்வரிகள் மற்றும் முக்கியமாக காட்சிப்படுத்திய விதம் என்பவற்றின் அடிப்படையில் அதிகம் விரும்பிய பாடல், தளபதி படத்தில் இடம்பெற்ற ராக்கம்மா கையத் தட்டு பாட்டு தான்.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், A/L படித்துக் கொண்டிருந்த பொழுதுகளில், கொழும்பு இந்துக் கல்லூரி நண்பர்களோடு கொம்பனித் தெரு நவா தியேட்டரில் தளபதி படம் பார்த்த ஞாபகம் இன்னும் நினைவில் நிற்கிறது. படத்தின் ஆரம்பத்திலேயே ராக்கம்மா கையத்தட்டு பாட்டு வரும். ராக்கம்மா பாட்டில் தலைவர் ரஜினிகாந்தின் ஆட்டம்  சும்மா பட்டையை கிளப்பும். 

மணிரத்தினம் படத்தின் trademarkகளில் ஒன்றான இருட்டில் தான் அந்தப் பாட்டை P.C ஶ்ரீராம் அழகாக காட்சிப் படுத்தியிருப்பார். ரஜினிகாந்தோடு  இந்த பாட்டில் ஆடுவது சோனு வாலியா என்ற இந்தி நடிகை. மணிரத்தினத்தின் படங்களில் இந்தி நடிகைகள் தலையை காட்டிக் கொண்டேயிருப்பார்கள், அழகை ரசிக்க வேண்டும்,  ஆராய கூடாது என்று நமக்கு நாமே சாட்டு சொல்லி விட்டு மணியின் மணியான பாட்டை ரசிக்கத் தொடங்கிவிடுவோம். 

ராக்கம்மா கையத்தட்டு பாட்டு மிக மெதுவாக தொடங்கி, ரஜினியின் வேகத்தைப் போல பரபரவென எகிறி, கடைசியில் ஷோபனாவின் வருகையோடு மிதமாகி நிறைவடையும் ஒரு வித்தியாசமான இளையராஜா பாடல். வாலி எழுதிய இந்தப் பாடலில் ரஜினிகாந்தின் ஆட்டமும் ஒரு தனிச்சிறப்பு தான். பாட்டு முழுக்க இடுப்பை முன்னுக்கும் பின்னுக்கும் ஆட்டுவதும், இடமும் வலமுமாக ஆட்டுவதும் தான் ரஜினிகாந்திற்கு கொடுக்கப்பட்ட dance steps. 

பாட்டின் இறுதியில் வரும் “குனிந்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும்” எனும் வரிகள், கவிஞர் வாலி நடிகை ஷோபனாவை வர்ணிக்க எழுதிய அழகிய கவிதை என்று கன காலம் நினைத்துக் கொண்டிருந்த முட்டாள்தனமான இளமைக்காலத்தை நினைவுறுத்தும் பாட்டு, ராக்கம்மா கையைத்ததட்டு. 

பாட்டில் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும் விரல் சொடுக்கும் சத்தம், பாடலின் இறுதியில் ஷோபனா தனது தோழியரொடு சிவலிங்கத்தை சுற்றி பரதம் ஆடும் போதும் மீண்டும் ஒலிப்பதும், ஆடிக்கொண்டே விழிகளால் ரஜினிகாந்தை  தேடும் ஷோபனா, பார்வையாலே அவரை கவர்வதும், காதல் வயப்படும் தலைவர் சொக்கிப் போய் நிற்பதும்.. அழகு, மிக மிக அழகு. 

காதலில் விழுந்திருந்த தொண்ணூறுகளின் மத்தியில் மணிரத்தினத்தின் பம்பாய் திரைப்படம், தெஹிவளை கொன்கோர்ட் திரையரங்கில் CIMA நண்பர்களோடு பார்த்த ஞாபகம். இளையராஜாவோடு உறவை முறித்துக் கொண்டதால், மணிரத்னம் கண்டெடுத்த மாணிக்கம் ரஹ்மானோடு இணைந்த மூன்றாவது படம் தான் பம்பாய். பம்பாய் படம் எடுத்துக் கொண்ட கரு கொதிக்கும் தணல், அதை ஆற்றத் தான் என்னவோ பாடல்கள் எல்லாம் மனதை ஆற்ற வைக்கும் விதமாக இதமாக இருந்தன.

“கண்ணாளனே” பாட்டே திறமாக இருந்தது என்றால், உயிரே உயிரே பாட்டு உண்மையிலேயே வேற range. தமிழ் திரையுலக வரலாற்றில் காட்சிப்படுத்தப்பட்ட மிகச் சிறந்த பாடல்களில் உயிரே உயிரே பாட்டு முதல் மூன்று இடங்களில் நிட்சயம் இடம்பிடிக்கும். 

உயிரே பாடலில், பாழடைந்த கோட்டையின் மதிற் சுவர்களில் உலாவியபடி, உள்ளுக்குள் வட்டக் கழுத்து T-Shirtம், வெளியே நாவல்-வெள்ளை நிறங்களில் வரி வரி rugby topம் அணிந்து, ஊத்தை வெள்ளை நிற sports shoesம் போட்டுக் கொண்டு அரவிந்சாமி காதலில் உருக உருக பாடுவார். நீலக் கடலை அண்மித்த அந்த கோட்டையின் கருங்கற்களில் படிந்திருக்கும் பச்சைப் பாசியையும், ரஜீவ் மேனனின் கமரா கவிதையாக படம் பிடித்திருக்கும். 

காதலனை காக்க வைத்து விட்டு, ஓடி வரும் எல்லா காதலிகளைப் போலவே மனிஷா கொய்ராலாவும் இந்தப் பாட்டில் ஓடோடி வருவா. மனிஷா கொய்ராலா குலுங்க குலுங்க ஓடி வரும் காட்சியை பார்ப்பதற்காகவே இந்தப் பாடலை பல தடவை திரும்ப திரும்ப பார்த்த குறும்புக்கார நண்பனொருவன் இதை எழுதும் போது ஞாபகத்தில் வந்து தொலைத்தான். 

காதலித்து, கலியாணம் கட்டி, பிள்ளைகளும் பெத்தாப் பிறகு, மீண்டும் ஒருக்கா காதலித்த காலங்களிக்கு பயணிக்க ஆசைப்பட வைத்த பாடல் என்றால், மணிரத்தினத்தின் ஓகே கண்மணி படத்தில் வரும் மென்டல் மனதில் பாட்டு தான். மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு, துல்பிகாரும் நித்தியா மேனனும் மும்பாயை சுற்றி வந்து காதலிப்பை பார்க்க பார்க்க, நாங்களும் யாழ்ப்பாணத்தில் சைக்கிளில் டபிளிஸ் ஏறி பண்ணை பாலத்தடியை சுற்றி வரவேண்டுமென மனது துடிக்கும்.

குண்டு வெடிப்புக்களும் கைதுகளும் நிறைந்திருந்த காலங்களில் நிம்மதியாக படிக்க மட்டுமல்ல காதலிக்கவும் முடியவில்லை. மீண்டும் அந்த இனிமையான இளமைக் காலங்களிற்கு எங்களையும் அழைத்துச் சென்று காதலிக்கும் பருவத்தை ஞாபகப்படுத்திய பாடலாக ஓகே கண்மணி படத்தில் வரும் மென்டல் மனதில் பாடல் அமைந்தது.  

மணிரத்னம் என்றுமே பாடல்களை படமாக்க வெளிநாடுகளுக்கு சென்றதில்லையாம். இயற்கையையும், நடிகர்களின் நடிப்பையும் நடன இயக்குனர்களின் நடன அசைவுகளையும், பாடல் வரிகளையும், இசையையும், நம்பி காட்சிப்படுத்தப்படும் பாடல்களாகவே மணிரத்தினத்தின் திரைப்படப் பாடல்கள் அமைந்து விடுகின்றன. 

நாங்கள் விரும்பும் பாடல்கள், நாங்கள் பயணிக்கும் வாழ்வின் கட்டங்களை பொறுத்தோ இல்லை எங்களது ரசனையைப் பொறுத்தோ மாறுபடலாம், வேறுபடலாம். மாறுபாடுகள் இருந்தாலும் வேறுபாடுகள் வந்தாலும், பாட்டுக்களோடு பயணிக்கும் வாழ்க்கையில் இருக்கும் சுகம் விபரிக்க இயலாதது.  நல்ல பழைய நினைவுகளை மீட்க வைக்கும் அருமையான பாடல்கள் வாழ்கையை வளமாக்குபவை, அதிலும் மணிரத்தினத்தின் படப் பாடல்கள் என்றால் அது ஒரு தனிரகம். 

1 comment:

  1. Waiting for your comments on Checkka Sivantha Vaanam

    ReplyDelete