Friday, 14 September 2018

நரை வரும் பருவம்

கொஞ்சக் காலத்திற்கு முன்னர், இடது கண் இமையில் ஒரு நீட்டு வெள்ளை மயிர் எட்டிப் பார்க்கத் தொடங்கியது. ஒரு காலம்பற  shave எடுத்திட்டு, மூக்குக் கண்ணாடியை போட்டுக் கொண்டு  முகக் கண்ணாடியை பார்க்க, “Hello.. how are you” சொல்லிக் கொண்டு அந்த ஒற்றை நரை மயிர் கண்ணிமையில் அரியாசனம் போட்டு அமர்ந்திருந்தது.

ஆண்டவரை கூப்பிட்டு மனதுக்குள் அழுதுவிட்டு, பெடியளை காரில் ஏற்றிக் கொண்டு பள்ளிக்கூடத்திற்கு போகும் வழியில், கண்ணிமையில் துளிர்விட்ட ஒற்றை நரை மயிரின் சோகத்தை அவங்களிடம் பகிர, பக்கத்து சீட்டில் இருந்த சந்தோஷ், காதடியில், பிடறியில் என்று தடவி பார்த்து விட்டு “அப்பா.. you got grey hair in your head too” என்று மல்டிபரல் கொண்டு மனதை நோகடித்தான்.

தலையும் நரைக்க தொடங்கி விட்டது, ஐயகோ என்று மனது அழத் தொட்கியது. யாழ்ப்பாணத்தில் எங்களோடு வாழ்ந்த அம்மப்பாவை பழசு என்று சின்ன வயதில் பகிடியாக கூப்பிட்டது அப்போது ஞாபகம் வந்தது. அப்படியென்றால் நானும் இன்னும் கொஞ்ச நாளில் “பழசு” ஆகிவிடுவேனா, இப்பத் தானே பரி யோவானில் பத்தாம் வகுப்பில் படித்து விட்டு வந்த மாதிரி இருக்கிறது , அதற்குள் நானெப்படி “பழசாக” முடியும், இது கொடுமை என்று மனது அரற்றியது.

Signal lightsல் கார் நிற்க, காரிலிருந்த முகக் கண்ணாடியை இறக்கி விட்டு மீண்டும் அந்த கண்ணிமை ஒற்றை நரையை கவலையோடு பார்த்துக் கொண்டிருக்க, மனிசியிடமிருந்து வரும் வழமையான காலை நேர தொலைபேசி அழைப்பு காரை உலுக்கியது.

“...என்ர கண்ணிமையில் ஒரு நரச்ச மயிர் வந்திட்டு” அனுதாபத்தை எதிர்பார்த்து கவலையை பகிர, “உமக்கு நீர் இன்னும் பெடியன் என்று நினைப்போ” மறுமுனையில் நக்கல் தொனித்தது. மெளனத்தையே விடையாக பகிர, “இன்னும் school Boys மாதிரி, friends ஓட சேர்ந்து வயசு போனது தெரியாமல் கூத்தடிக்க, நாடு நாடா trip போய்க் கொண்டிரும்..” Big Bossன் அகம்TV மாட்டை மரத்தில் கட்டி விட்டு, பிரசங்கத்தை தொடர்ந்தது.

“..இந்த நரைச்ச மயிரை பிடுங்கட்டோ..” அந்த கண்ணிமையின் ஒற்றை நரை மயிரை  நகங்களைக் கொண்டு சுற்றி வளைக்க முயற்சி செய்து கொண்டிருக்க, பின்னால் இருந்த கார்காரன் horn அடித்து, signal lightsல் green light விழுந்ததை சுட்டிக் காட்டவும் சரியாக இருந்து. 

“..பிடுங்காதேயும்..பிடுங்கினால் இன்னும் கனக்க வரும்..உதை விட்டு போட்டு.. பின்னேரம் வரும் போது மறக்காமல் பாலும் பாணும் வாங்கியாரும்.. மறக்காதேயும்.. உமக்கு வயசு போய்ட்டுது.. ஹா ஹா ஹா” மறுமுனையில் மனிசி மகிழ்ச்சியாக விடைபெற்றாள்.

“..பிடுங்கி தான் பார்ப்பமா.. அவா வேணுமென்டு சொல்லுறாவோ” என்று மனம் ஒரு புறம் மனிசையை சந்தேகித்தது. வேலைக்கு வந்ததும், முதல் வேலையாக Googleஐ கேட்டால், அதுவும் மனிசி சொன்னது சரிதான் என்று சொல்லுது, ஒன்றை பிடுங்கினால் ஒம்பது முளைக்குமாம். 

ஊரில் வருடந்தோறும் நடக்கும் சம்சாரிகள் vs இளந்தாரிகள் கிரிக்கெட் ஆட்டத்தில், அப்பா சம்சாரிகள் அணிக்கு விளையாடும் போது அவருக்கும் நாற்பது சொச்ச வயசு தானிருந்திருக்கும். சம்சாரிகள் அணியை “பழசுகள் Team” என்று இளந்தாரி அண்ணாமார் நக்லடிக்கும் போது சிரித்ததும் ஏனோ இப்ப தான் நினைவில் வருகிறது. 

இன்னும் இரண்டு கிழமைகளில் Melbourne OBA க்கும் Sydney OBA க்குமிடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டி வேற வருகிறது, அதுவும் 40 வயதுக்கு மேற்பட்டோர் மட்டும் விளையாடலாம் என்பதால் தானோ அப்பாவை பழசு என்று பளித்தது நினைவுக்கு வந்ததோ தெரியவில்லை.  

பதினாறே பதினாறு வயதில் யாழ்ப்பாணம் வெலிங்டன் திரையிரங்கில் பார்த்த வருஷம் 16 படத்தோடு, குஷ்பூ கனவுக் கன்னியானாள். குஷ்பூவிற்கு வயதாகி சினிமாவை விட்டு விட்டு அரசியலில் நடிக்கத் தொடங்க, நாங்களும் நயன்தாராவின் கட்சியில் இணைந்தோம். நயன்தாராவின் கட்சியில் இணைந்தாலும்,  குஷ்பூவை என்றுமே  மறக்க முடியவில்லை. 

எங்களிற்கு வயது போவதை மறக்கவும் மறைக்கவும், நாங்கள் இளமையான நடிகைகளை பின் தொடர்ந்தாலும், வயது எங்களையும் அவளவையையும் கலைத்துக் கொண்டு தான் வருகிறது. எங்களைப் போல் குஷ்பூவிற்கும் தலைமயிர் நரைத்திருக்கும் என்று நினைக்க கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. நாளைக்கு நயன்தாராவிற்கும் தலைமயிர் நரைக்கும் என்று நினைக்க ஒரு நமுட்டுச் சிரிப்பு இதழோரத்தில் எட்டிப் பார்த்தது. 

கபாலியிலும் காலாவிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நரைத்த மீசையோடும் தாடியோடும் தலைமயிரோடும் தோன்றி, அலட்டிக் கொள்ளாமல் நடித்து, எங்களுக்கு மட்டுமல்ல, திரையில் ச்சும்மா பாய்ந்து பாய்ந்து பறந்து கிறந்து அடித்துக் கலக்கிய ரஜினி படங்களுக்கும் வயதாகி விட்டதனை குறியீடாக காட்டி விட்டதும், காலத்தின் கோலமாகத் தான் இருக்க வேண்டும். 


அலுவலகத்தில் கோப்பி போட போனால், Office குசினியில் இருக்கும் கண்ணாடியிலும் இடக்கண் இமையில் நரைத்த மயிர் தெரியுது. என்ன இழவிற்கு எல்லா இடமும் கண்ணாடி வைக்கிறாங்களோ என்று பொருமிவிட்டு, ஆசனத்தில் வந்தமர்ந்து கோப்பியைக் குடிக்க தொடங்கினால், மண்டைக்குள் அந்த ஒற்றை நரை மயிர் பற்றிய எண்ணம் தான் ஒடுது. Phoneஐ எடுத்து முகத்தை ஒரு selfie எடுத்து,  ஒற்றை நரையரின் தாக்கத்தை ஆராயத் தொடங்கினேன்.

இப்பக் கொஞ்ச காலமாக ஒவ்வொரு நாள் காலம்பறயும் பல் மினுக்கி, shave எடுத்து விட்டு, மூக்கு கண்ணாடியை மாட்டினால்,  முகக் கண்ணாடியை ஆக்கிரமிப்பது, இடது கண்ணிமையில் கோலோச்சும் அந்த ஒற்றை நரைமயிர் தான். ஒற்றை நரையரை பிடுங்கவா.. விடவா என்று விவாதத்தை மனம் ஒரு பக்கம் நடாத்திக் கொண்டிருக்க, தலையில் கொஞ்சம் கொஞ்சமாக நரைமயிர்கள், முல்லைத்தீவில் அரங்கேறும் சிங்களக் குடியேற்றங்களைப் போல், ஊடுருவத் தொடங்கிவிட்டன. 

எவ்வளவு தான் மயிர் நரைத்தாலும் கடைசி வரை hair dye அடிப்பதில்லை, என்று ஏதோ வேகத்தில், ஏதோ அவசரத்தில், சமஷ்டி கேட்ட தமிழரசுக் கட்சியைப் போல, சபதம் வேறு எடுத்து விட்டேன். கன்னத்தில் கறுப்பு மை வழிய வழிய, எனக்கு நானே தலைக்கு கறுப்படிக்கும் காட்சியை முகக் 
கண்ணாடியில் காண, உண்மையிலேயே பயமாக இருக்கிறது.

எண்பதுகளில் நீட்டு காற்சட்டை போட்ட இயக்க அண்ணமார், எங்களது அரசியல் எதிர்காலத்தை, வேட்டி கட்டிய அரசியல்வாதிகளிடமிருந்து, பிடுங்கி எடுத்த காலத்தில், வயதானவர்கள் எல்லோரையும் ஏளனமாக பார்த்த இழிவான காலங்கள் இன்றும் நினைவில் நிழலாடுகின்றன.  C50 என்றும், C70 என்றும் ரோட்டில் போகும் வயதானவர்களை பார்த்து கத்தி விட்டு ஓடிய தலைமுறையல்லவா நாங்கள்? 

வயதில் முதிர்ந்த,  அரசியல் அனுபவத்தில் நிறைந்த, வயதான அந்த பரம்பரையை ஒதுக்கி விட்டும், அழித்து விட்டும், நாங்கள் பயணித்த பயணத்திற்கு நடந்த கதை வரலாறி விட்டது. இன்றைய இளம் தலைமுறை அன்றைய இளம் தலைமுறையை போல இல்லை என்று, அன்று களமாடிய இன்றைய வயதானவர்களின் கவலைக் குரல்களும் கேட்கத் தொடங்கி விட்டன. 

இன்று காலை எழுந்து, பல்லு மினுக்கி, shave எடுத்து விட்டு, மூக்கு கண்ணாடியை மாட்டிக் கொண்டு முகக் கண்ணாடியை பார்த்தால், அதே இடதுகண் இமையில், நெட்டையாய் முளைத்திருந்த அந்த ஒற்றை நரை மயிருக்குப் பக்கத்தில், கட்டையாய் இன்னுமொரு கெட்ட நரை மயிர் ஒன்று குட்டியாய் முளைத்திருக்கிறது. 

கண்ணிமையில் முளைத்த ஒற்றை மயிரோடு மல்லுக் கட்டிக் களைத்தவனுக்கு, இரட்டையரை ஆண்டவன் பரிசாக அளித்திருக்கிறான்.  மறுபடியும் மீசையும் குறுந்தாடியும் வளர்க்கத் தொடங்கினால், மீசையும் நரைக்கிறது, தாடியும் நரைக்கிறது, ஆனால் ஆசை மட்டும் இன்னும் நரைக்கவேயில்லை 😀 

Friday, 7 September 2018

மணிரத்தினத்தின் பாடல்கள்தமிழ் திரைப்பட இயக்குனர்களில் மணிரத்தினத்திற்கென்று ஒரு தனித்துவம் இருக்கிறது. மணிரத்தினத்தின் தனித்துவ முத்திரை அவரது படங்களில் மிளிரும். மணிரத்தினத்தின் திரைப்படங்களின் தரம் பிற இயக்குனர்களின் திரைப்படங்களிலிருந்து வேறுபடுவதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று, மணிரத்தினம் தெரிவு செய்யும் அதியுயர் தரம் வாய்ந்த தொழில்நுட்பவியலாளர்கள் குழு.

பாட்டெழுத வைரமுத்துவும் வாலியும், மெட்டமைக்க முன்னர் இளையராஜா பின்னர் ரஹ்மான், காட்சிப்படுத்த P.C ஶ்ரீராம் இல்லாட்டி ரஜீவ் மேனன் என்று தமிழ் சினிமாவின் ஜாம்பாவான்களின் திறமைகளை ஒரு புள்ளியில் மையப்படுத்தும் ஆற்றல் தான் மணிரத்தினத்தின் தனித்துவம். 

மணிரத்தினம் இயக்கிய படங்களில் இடம்பெறும்  பாடல்களை அவர் திரையில்  காட்சிபடுத்தும் விதம் மிக மிக அழகாக இருக்கும், காலங்கள் கடந்தும் என்றும் நினைவில் இருக்கும். மணிரத்தினமும் வைரமுத்துவோடோ வாலியோடோ, இளையராஜாவோடோ ரஹ்மானோடோ, இணைந்து  தயாரிக்கும் பாடல்களுக்கு ரஜீவ் மேனனோ P.C ஶ்ரீராமோ ஓளி ஓவியம் வரையும் அற்புத கணங்கள் மணிரத்தினத்தின் திரைப்படப் பாடல் காட்சிகளாகத் தான் இருக்கும்.

வீடியோ டெக்கில் படம் பார்க்கும் போது fast forward பண்ணியும் திரையரங்குகளில் பாடல்கள் வரும் போது தம்மடிக்கப் போயும் திரைப்படம் பார்த்த தமிழ் ரசிகர்களை, உட்கார வைத்து பாடல் காட்சிகளையும் ரசிக்க வைத்த பெருமை மணிரத்தினத்தின் படங்களில் வரும் பாடல்களிற்கே உரித்தாகும். 

“செக்கச் சிவந்த வானம்” நிகழ்ச்சியில், திரையில் மிகச் சிறப்பாக காட்சியமைக்கப்பட்ட தனது மூன்று பாடல்களை வைரமுத்து தெரிவு செய்வார். பாலச்சந்தரின் புன்னகை மன்னன் படத்தில் வரும் என்ன சத்தம் இந்த நேரம், பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தில் இடம்பிடித்த ஆயிரம் தாமரை மொட்டுக்களே,  மற்றது தனக்கு மிகவும் மிகவும் பிடித்த மணிரத்தினத்தின் பம்பாய் படத்தில் இடம்பெறும் உயிரே உயிரே பாடல் என்று வைரமுத்து பட்டியலிடுவார்.

திரையில் காட்சிப்படுத்தப்பட்ட விதத்தில் தனக்கு மிகவும் பிடித்த பாடல் பம்பாய் படத்தில் வரும் கண்ணாளனே பாட்டு என்றும், மணிரத்தினம் ரோஜா படத்தில் வரும் தமிழா தமிழா பாட்டு என்றும் சுருக்கமாக பதிலளிப்பார்கள். 

மணிரத்னம் இயக்கிய படங்களில் இடம்பெற்ற பாடல்களில், இசை, பாடல்வரிகள் மற்றும் முக்கியமாக காட்சிப்படுத்திய விதம் என்பவற்றின் அடிப்படையில் அதிகம் விரும்பிய பாடல், தளபதி படத்தில் இடம்பெற்ற ராக்கம்மா கையத் தட்டு பாட்டு தான்.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், A/L படித்துக் கொண்டிருந்த பொழுதுகளில், கொழும்பு இந்துக் கல்லூரி நண்பர்களோடு கொம்பனித் தெரு நவா தியேட்டரில் தளபதி படம் பார்த்த ஞாபகம் இன்னும் நினைவில் நிற்கிறது. படத்தின் ஆரம்பத்திலேயே ராக்கம்மா கையத்தட்டு பாட்டு வரும். ராக்கம்மா பாட்டில் தலைவர் ரஜினிகாந்தின் ஆட்டம்  சும்மா பட்டையை கிளப்பும். 

மணிரத்தினம் படத்தின் trademarkகளில் ஒன்றான இருட்டில் தான் அந்தப் பாட்டை P.C ஶ்ரீராம் அழகாக காட்சிப் படுத்தியிருப்பார். ரஜினிகாந்தோடு  இந்த பாட்டில் ஆடுவது சோனு வாலியா என்ற இந்தி நடிகை. மணிரத்தினத்தின் படங்களில் இந்தி நடிகைகள் தலையை காட்டிக் கொண்டேயிருப்பார்கள், அழகை ரசிக்க வேண்டும்,  ஆராய கூடாது என்று நமக்கு நாமே சாட்டு சொல்லி விட்டு மணியின் மணியான பாட்டை ரசிக்கத் தொடங்கிவிடுவோம். 

ராக்கம்மா கையத்தட்டு பாட்டு மிக மெதுவாக தொடங்கி, ரஜினியின் வேகத்தைப் போல பரபரவென எகிறி, கடைசியில் ஷோபனாவின் வருகையோடு மிதமாகி நிறைவடையும் ஒரு வித்தியாசமான இளையராஜா பாடல். வாலி எழுதிய இந்தப் பாடலில் ரஜினிகாந்தின் ஆட்டமும் ஒரு தனிச்சிறப்பு தான். பாட்டு முழுக்க இடுப்பை முன்னுக்கும் பின்னுக்கும் ஆட்டுவதும், இடமும் வலமுமாக ஆட்டுவதும் தான் ரஜினிகாந்திற்கு கொடுக்கப்பட்ட dance steps. 

பாட்டின் இறுதியில் வரும் “குனிந்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும்” எனும் வரிகள், கவிஞர் வாலி நடிகை ஷோபனாவை வர்ணிக்க எழுதிய அழகிய கவிதை என்று கன காலம் நினைத்துக் கொண்டிருந்த முட்டாள்தனமான இளமைக்காலத்தை நினைவுறுத்தும் பாட்டு, ராக்கம்மா கையைத்ததட்டு. 

பாட்டில் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும் விரல் சொடுக்கும் சத்தம், பாடலின் இறுதியில் ஷோபனா தனது தோழியரொடு சிவலிங்கத்தை சுற்றி பரதம் ஆடும் போதும் மீண்டும் ஒலிப்பதும், ஆடிக்கொண்டே விழிகளால் ரஜினிகாந்தை  தேடும் ஷோபனா, பார்வையாலே அவரை கவர்வதும், காதல் வயப்படும் தலைவர் சொக்கிப் போய் நிற்பதும்.. அழகு, மிக மிக அழகு. 

காதலில் விழுந்திருந்த தொண்ணூறுகளின் மத்தியில் மணிரத்தினத்தின் பம்பாய் திரைப்படம், தெஹிவளை கொன்கோர்ட் திரையரங்கில் CIMA நண்பர்களோடு பார்த்த ஞாபகம். இளையராஜாவோடு உறவை முறித்துக் கொண்டதால், மணிரத்னம் கண்டெடுத்த மாணிக்கம் ரஹ்மானோடு இணைந்த மூன்றாவது படம் தான் பம்பாய். பம்பாய் படம் எடுத்துக் கொண்ட கரு கொதிக்கும் தணல், அதை ஆற்றத் தான் என்னவோ பாடல்கள் எல்லாம் மனதை ஆற்ற வைக்கும் விதமாக இதமாக இருந்தன.

“கண்ணாளனே” பாட்டே திறமாக இருந்தது என்றால், உயிரே உயிரே பாட்டு உண்மையிலேயே வேற range. தமிழ் திரையுலக வரலாற்றில் காட்சிப்படுத்தப்பட்ட மிகச் சிறந்த பாடல்களில் உயிரே உயிரே பாட்டு முதல் மூன்று இடங்களில் நிட்சயம் இடம்பிடிக்கும். 

உயிரே பாடலில், பாழடைந்த கோட்டையின் மதிற் சுவர்களில் உலாவியபடி, உள்ளுக்குள் வட்டக் கழுத்து T-Shirtம், வெளியே நாவல்-வெள்ளை நிறங்களில் வரி வரி rugby topம் அணிந்து, ஊத்தை வெள்ளை நிற sports shoesம் போட்டுக் கொண்டு அரவிந்சாமி காதலில் உருக உருக பாடுவார். நீலக் கடலை அண்மித்த அந்த கோட்டையின் கருங்கற்களில் படிந்திருக்கும் பச்சைப் பாசியையும், ரஜீவ் மேனனின் கமரா கவிதையாக படம் பிடித்திருக்கும். 

காதலனை காக்க வைத்து விட்டு, ஓடி வரும் எல்லா காதலிகளைப் போலவே மனிஷா கொய்ராலாவும் இந்தப் பாட்டில் ஓடோடி வருவா. மனிஷா கொய்ராலா குலுங்க குலுங்க ஓடி வரும் காட்சியை பார்ப்பதற்காகவே இந்தப் பாடலை பல தடவை திரும்ப திரும்ப பார்த்த குறும்புக்கார நண்பனொருவன் இதை எழுதும் போது ஞாபகத்தில் வந்து தொலைத்தான். 

காதலித்து, கலியாணம் கட்டி, பிள்ளைகளும் பெத்தாப் பிறகு, மீண்டும் ஒருக்கா காதலித்த காலங்களிக்கு பயணிக்க ஆசைப்பட வைத்த பாடல் என்றால், மணிரத்தினத்தின் ஓகே கண்மணி படத்தில் வரும் மென்டல் மனதில் பாட்டு தான். மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு, துல்பிகாரும் நித்தியா மேனனும் மும்பாயை சுற்றி வந்து காதலிப்பை பார்க்க பார்க்க, நாங்களும் யாழ்ப்பாணத்தில் சைக்கிளில் டபிளிஸ் ஏறி பண்ணை பாலத்தடியை சுற்றி வரவேண்டுமென மனது துடிக்கும்.

குண்டு வெடிப்புக்களும் கைதுகளும் நிறைந்திருந்த காலங்களில் நிம்மதியாக படிக்க மட்டுமல்ல காதலிக்கவும் முடியவில்லை. மீண்டும் அந்த இனிமையான இளமைக் காலங்களிற்கு எங்களையும் அழைத்துச் சென்று காதலிக்கும் பருவத்தை ஞாபகப்படுத்திய பாடலாக ஓகே கண்மணி படத்தில் வரும் மென்டல் மனதில் பாடல் அமைந்தது.  

மணிரத்னம் என்றுமே பாடல்களை படமாக்க வெளிநாடுகளுக்கு சென்றதில்லையாம். இயற்கையையும், நடிகர்களின் நடிப்பையும் நடன இயக்குனர்களின் நடன அசைவுகளையும், பாடல் வரிகளையும், இசையையும், நம்பி காட்சிப்படுத்தப்படும் பாடல்களாகவே மணிரத்தினத்தின் திரைப்படப் பாடல்கள் அமைந்து விடுகின்றன. 

நாங்கள் விரும்பும் பாடல்கள், நாங்கள் பயணிக்கும் வாழ்வின் கட்டங்களை பொறுத்தோ இல்லை எங்களது ரசனையைப் பொறுத்தோ மாறுபடலாம், வேறுபடலாம். மாறுபாடுகள் இருந்தாலும் வேறுபாடுகள் வந்தாலும், பாட்டுக்களோடு பயணிக்கும் வாழ்க்கையில் இருக்கும் சுகம் விபரிக்க இயலாதது.  நல்ல பழைய நினைவுகளை மீட்க வைக்கும் அருமையான பாடல்கள் வாழ்கையை வளமாக்குபவை, அதிலும் மணிரத்தினத்தின் படப் பாடல்கள் என்றால் அது ஒரு தனிரகம்.