Friday, 10 August 2018

கலைஞருக்கு ஓரு கடிதம்
கலைஞர் அவர்களே,

எண்பதாண்டுகளிற்கு மேலாக அயராது உழைத்த நீங்கள், மெரீனா கடற்கரையில், உங்கள் அண்ணாவிற்கு பக்கத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், உங்களுக்கு கடிதம் எழுதி அலுப்பு தாறது பிழையா என்று ஒருக்கா யோசித்தேன். 

இப்ப எழுதாவிட்டால் எப்ப எழுதுவது என்று யோசித்து விட்டு, உங்களை, உங்களது தமிழை, உங்களது அரசியல் பயணத்தை தூர நின்று, தொலைக்காட்சியில் பார்த்தும், வானொலியில் கேட்டும், பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் வாசித்தும், அறிந்த ஒரு சாதாரண புலம்பெயர் தமிழனாக இந்தக் கடிதம் எழுதத்  தொடங்கினேன்.

கடிதம் எழுதுவது உங்களுக்கு கை வந்த கலை. நாள் தோறும் முரசொலியில் உங்களது கட்சியினருக்கு நீங்கள் எழுதிய “என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே” என்று விளித்து எழுதிய கடிதங்கள் பொக்கிஷங்கள், எண்ணிக்கையடிப்படையில் அது ஒரு உலக சாதனையாகக் கூட இருக்கலாமாம்.

எந்தப் பிரச்சினை வந்தாலும் நீங்கள் முதலில் தூக்கும் ஆயுதம் கடிதம் தான். தமிழீழத்தில் இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அந்த யுத்தத்தை இந்திய மத்திய அரசு தலையிட்டு நிறுத்தச் சொல்லி, நீங்கள் கடிதம் கடிதமாக எழுதிக் கொண்டேயிருந்தீர்கள். 

ஏப்ரல் 22, 2009 அன்று உங்கள் உடன்பிறப்புக்களிற்கு எழுதிய விரிவான கடிதத்தில் “எனக்கு வழி தெரியவில்லை- பொறுப்பான இடத்தில் இருக்கிறோமே- கையறு நிலையில் நம் இனத்தைக் காப்பாற்ற இயலாத வகையில் இருக்கிறோமே” என்று உங்களது இயலாமையை வெளிப்படையாக அறிவித்துவிட்டு, ஈழத்தில் நடைபெறும் கொடூரத்தை தாங்க முடியாமல் இருக்கும் உங்கள் மனவேதனையை கொட்டித் தீர்த்தீர்கள். 

உங்களது நிலைமையை உணர்வோடு பதிவுசெய்த இந்தக் கடிதம் எழுதி ஜந்தாவது நாள், ஏனோ நீங்கள் திடீரென முடிவெடுத்து, காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில், மரீனாவில், மனைவியாரும் துணைவியாரும் புடைசூழ, உண்ணாவிரதம் இருந்த அந்தக் காட்சிகள் தான் இன்றுவரை எங்களோடு பயணிக்கின்றன. 

உங்களது இயலாமையை அறிவித்த தன்னிலை விளக்கம் மட்டுமல்ல, ஆண்டாண்டுகளாக நீங்கள் எங்களுக்காக செய்த போராட்டங்களும், இழந்த ஆட்சியும், கண்டும் காணாமலும் செய்த உதவிகளும், எங்கள் உயிரினும் மேலான தமிழ் மொழிக்கு நீங்கள் ஆற்றிய பங்களிப்பும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்ததும், என்று அனைத்தையுமே அந்த உண்ணாவிரத நாடகக் காட்சியால், எங்களது நினைவலைகளிலிருந்து அழிந்து விட்டது. 

தொண்ணூறுகளின் இறுதியில் இருந்து இந்திய மத்திய அரசில் செல்வாக்கு செலுத்த வல்ல ஒரு பிராந்திய தலைவராக உலாவந்த நீங்கள், எங்கள் இனம் யுத்தத்தில் அழிந்து கொண்டிருந்த போது கொடுத்த அழுத்தம் போதாது என்பதே இன்றும் எங்களது ஆறாத கவலையாக இருக்கிறது. உங்களது குடும்ப உறுப்பினர்கள் மீது சுமத்தப்படக்கூடிய ஊழல் வழக்குகளைக் காட்டி, பயமுறுத்தி உங்களை இந்திய மத்திய அரசு அடக்கி விட்டதாக எங்களில் பலர் இன்றும் நம்புகிறோம்.  

“அடைந்தால் திராவிட நாடு இன்றேல் சுடுகாடு” என்று முழங்கிய நீங்கள், மாநில ஆட்சியை தேர்தலில் வென்றது தொட்டு, மாநிலங்களின் உரிமைகளை வெல்வதற்கான ஒரு போராளியாகவே மாறினீர்கள். பஞ்சாபைப் போல் இயற்கை வளங்களும், கேரளாவைப் போல் மூளை வளமும், உத்தர பிரதேசத்தைப் போல அரசியல் பலமும் அற்று
பின்தங்கியிருந்த தமிழகத்தை, இந்தியாவின் முன்னனி மாநிலங்களில் ஒன்றாக மாற்றிய பெருமை உங்களையே சாரும் என்று பலரும் புகழும் போது, தனிநாடு கேட்டுப் போராடி, ஒரு மிகச்சிறந்த நிழல் அரசாங்கத்தையே நடாத்திக்காட்டிய எங்களின் இன்றைய கையறு நிலைமையை நினைத்து வேதனைப்படத் தான் முடிகிறது. 

1976ம் ஆண்டில், உங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்கில், இந்திரா காந்திக்கு பயந்து இந்தியாவின் பிரபல வக்கீல்கள் உங்களிற்காக வாதாட முன்வராத போது, உங்களிற்காக கட்டணம் எதுவும் வாங்காமல், பிரயாணச் செலவைக் கூட தானே ஏற்றுக் கொண்டு வாதாட வந்த வக்கீல்,  எங்கள் ஜீஜீ பொன்னம்பலம் என்பதையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

1977 ஓகஸ்ட் மாதம் ஈழத் தமிழ்மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் முதன் முதலாக பேரணி நடாத்தியதும் நீங்கள் தான். அந்தப் பேரணியை தொடர்ந்தே, தமிழீழத்தில் இயங்கிக் கொண்டிருந்த இயக்கங்களிற்கு தி.மு.க தலைவர்களும் தொண்டர்களும் அடைக்கலமும் ஆதரவும் தரத் தொடங்கினார்களாம். 

எண்பதுகளின் ஆரம்பத்தில் எங்களது விடுதலைப் போராட்டம் வீரியம் பெறத் தொடங்கிய காலங்களில், ஆகாஷவாணி செய்திகளிலும் மாநிலச் செய்திகளிலும், எங்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்தவர்களில் நீக்கமற நிறைந்திருந்த பலரில் நீங்களும் முக்கியமானவர். அன்றிலிருந்து யுத்தத்தின் இறுதிக் காலங்கள்  வரை உங்களை எங்களின் தீவிர ஆதரவாளனகாவே பார்த்து வந்தோம், அதனால் தான் என்னவோ உங்களில் அளவுக்கதிகமான நம்பிக்கையும் வைத்து விட்டோம். 

1990ம் ஆண்டு மார்ச் மாதம், இலங்கையிலிருந்து திரும்பிய இந்திய இராணுவத்தின் கடைசிப் படையணிக்கு, சென்னை துறைமுகத்தில் நடந்த வரவேற்பை புறக்கணித்து உங்களது இனப்பற்றை வெளிக்காட்டிய போது நாங்கள் மெய்யாகவே புளங்காகிதம் அடைந்தோம். அதற்கு முந்தைய மாதம் விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தையும் அரசியல்துறைப் பொறுப்பாளர் யோகியையும் நீங்கள் சந்தித்தது எம்மத்தியில் நம்பிக்கை கலந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 

ஐம்பதுக்கிலும் அறுபதுகளிலும் ஹிந்தி எதிர்ப்பு மொழிப் போருக்கு தி.மு.க அளித்த தலைமையால் ஆட்சிக் கட்டிலேறிய உங்களிற்கு, ஈழத் தமிழர் பிரச்சினையை நீங்கள் கையில் எடுத்த நாள் தொட்டு, ஆட்சியிழப்பும் அவப்பெயரும் தொடரத் தொடங்கின.  எங்களது பிரச்சினையை நியாயமாக கையாண்ட இந்திரா காந்தியும் MGRம் பொறுத்த நேரத்தில் இறந்து விட்டது எங்களது துர்ப்பாக்கியம் மட்டுமல்ல, உங்களது துர் அதிர்ஷ்டமும் தான். 

இந்தியா கன்னியாகுமரியில் முடியவில்லை, அங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது என்பதைக் காட்ட கன்னியாகுமரி கடற்கரையிலிருந்து இமய மலையை நோக்கிய வண்ணம், 133 அடி உயரத்தில் நிமிர்ந்து நிற்கும் வள்ளுவர் சிலையை நிறுவ உத்தரவிட்டீர்களாம். கன்னியாகுமரி வள்ளுவர் சிலையும் சென்னையில் இருக்கும் வள்ளுவர் கோட்டமும்,  இன்னும் பல தமிழ் மொழியினதும் இனத்தினதும் வரலாற்றை எடுத்தியம்பும் கட்டிடங்களும் நிகழ்வுகளும்
உங்கள் எண்ணத்தில் உதித்த தமிழ் அடையாளங்கள். 

எங்களை நம்பி, எங்களால் எங்களுக்காக நாங்கள் நடாத்திய விடுதலைப் போர், எங்களை மீறிய சர்வதேச சக்திகளாலும், எங்களுக்குள் நிகழ்ந்த சதிகளாலும், மெளனிக்கப்பட்டு, நாங்கள் எதிரியிடம் சிறைபடவும் சரணாகதியடையவும் காலம் (அவ)கோலம் போட்டது. காலம் போட்ட அந்தக் கோலத்தில், நீங்களும் நன்றாகவே அடி வாங்கினீர்கள். 

“மரணத்தினால் சில கோபங்கள் தீரும்,
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்”
என்று எழுதினார் கவிஞர் வைரமுத்து.  உங்களுக்கும் இது பொருந்தும் என்று நம்புவோம். நீங்கள் உங்கள் கடிதங்களை முடிக்கும் அதே சொற்களுடன் இந்தக் கடிதத்தையும் நிறைவு செய்வதே உங்களுக்கு செலுத்தும் இறுதி மரியாதையாகவும் இதய அஞ்சலியாகவும் இருக்கும். 

“விடைபெறுகிறேன்...”

No comments:

Post a Comment