Friday, 31 August 2018

வலி தரும் மகாவலி

தண்ணீர் என்றாலே தமிழர்களிற்கு கண்ணீர் தான் போலிருக்கிறது. சங்க காலத்தில் பூம்புகாரை அழித்த கடற்கோளாகட்டும், 2004ல் கடற் புலிகளின் பலத்தை அழித்த ஆழிப்பேரலையாகட்டும், காவேரியை வாட வைக்கும் கன்னடர்களாகட்டும், இப்போது தமிழர் தாயகப் பகுதிகளை கவர முயலும் மகாவலி அபிவிருத்தித் திட்டமாகட்டும், எல்லாமே தண்ணீர் தந்த கண்ணீர் கதைகள் தான். 

1961ல் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களான UNDP மற்றும் FAOவின் அனுசரணையில், இலங்கைத் தீவில் விவசாயத்தைப் பெருக்கவும், நீர் மின்சார திட்டத்தை அறிமுகப்படுத்தி விரிவாக்கவும் என 30 வருட திட்டமாக, மகாவலி அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 

1977ல் ஆட்சியைப் பிடித்த ஜெயவர்தனவின் அரசு, ஆறே ஆறு ஆண்டுகளில் மகாவலி திட்டத்தை முழுமையாக முடிக்க கங்கணம் கட்டிக் கொண்டு, துரித மகாவலி அபிவிருத்தித் திட்டத்தை அமுலாக்கத் தொடங்கியது. காமினி திஸநாயக்காவின் அமைச்சின் கீழ் செயற்படத் தொடங்கிய இந்தத் திட்டத்திற்கு, ஜேர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், ஒஸ்ரேலியா, சுவீடன் உட்பட பல முதலாளித்துவ நாடுகள், பாரியளவில் நிதியுதவி வழங்க முன்வந்தன.  1977ல் திறந்த சந்தை பொருளாதார கொள்கையை பின்பற்ற தொடங்கிய இலங்கைக்கு மேற்கத்தைய நாடுகள் வழங்கிய ஊக்கசக்கதியாக துரித மகாவலி திட்டம் அமைந்தது. 

1984 ஒக்டோபர் மாதமளவில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு பகுதியில் குடியிருந்த தமிழ் விவசாயக் குடும்பங்களை இலங்கையின் பாதுகாப்புப் படையினர் பலவந்தமாக வெளியேற்றினர். செழிப்பான விவசாய பூமியான இந்தப் பகுதிகளில், சிறு சிறு தமிழ்க் கிராமங்களும், நீண்ட கால குத்தகையடிப்படையில் 16 தமிழர்களிற்கு சொந்தமான நிறுவனங்கள் இயக்கிய விவசாய பண்ணைகளும் இருந்தன.

தமிழ் நிறுவனங்கள் நடாத்திய விவசாயப் பண்ணைகளில், நாவலர் பண்ணை, Kent Farm, சிலோன் தியேட்டர்ஸ், Dollar Farm என்பன பெரிய நிலப்பரப்புகளில் இயங்கி வந்தன. Kent மற்றும் Dollar பண்ணைகளில், 1977ல் இடம்பெற்ற இனக்கலவரத்தினால் மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் குடியமர்த்தப்பட்டிருந்தனர். 1984ல், Dollar மற்றும் Kent பண்ணைகளில் குடியேறிய மலையகத் தமிழர்களை இலங்கை இராணுவம் பஸ்களில் ஏற்றிக் கொண்டு போய், மலையகத்தில் இறக்கிவிட்டது. 

வடக்கு கிழக்கு தமிழர்களின் இதயபூமியான மணலாற்றில் தமிழர்களை கொன்றும் அடித்தும் விரட்டி விட்டு, பண்ணைகளை திறந்த சிறைச்சாலைகளாக அறிவித்து விட்டு, தென்னிலங்கை சிறைகளில் இருந்த சிங்களக் கைதிகளைஅவர்களது  குடும்பங்களோடு அந்தக் பண்ணைகளில் இலங்கை அரசு குடியேற்றியது. 1988ல் வெளியான வர்த்தகமானி மூலமாக, மணலாறு என்ற தமிழ்ப்பெயரை தாங்கிய பிரதேசத்தின் பெயர் அதிகாரபூர்வமாக வெலிஓயா என்ற சிங்களப் பெயராகியதோடு, தனியான பிரதேச செயலகப் பிரிவுமானது (DS Division).
வடக்கு கிழக்கில் தோன்றியிருக்கும் பிரிவினைவாதிகளின் தமிழீழக் குறிக்கோளை முறியடிக்க, வடக்கில் 2 லட்சம் சிங்களவர்களை குடியேற்றுவோம் என்று இலங்கையின் தேசிய பந்தோபஸ்து அமைச்சர் அத்துலத்முதலி இதே காலப்பகுதியில் தான் முழங்கியருந்தார். 

2009ல் யுத்தம் முடிவடைந்த பின்னர், சுமார் 6,000 சிங்களக் குடும்பங்கள் மீண்டும் மணலாற்றில் அரசாங்கத்தால் குடியேற்றப்பட்டார்கள். மணலாற்றைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் குடிதண்ணீரில் கலந்திருந்த ஒருவித நச்சுதன்மையால் சிறுநீரகத்திற்கு பாதிப்புக்கள் ஏற்படுவதால், குடியேறிய குடும்பங்களிற்கு தூய்மையான குடிநீர்  வழங்க 50 மில்லியன் ரூபாய்கள் செலவில் water purification இயந்திரங்கள் மணலாற்றில் நிறுவப்பட்டுள்ளன. 

மணலாறு பிரதேசத்தை சுற்றி சுமார் 3,000 மில்லியன் ரூபாய்கள் செலவில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது. இந்த அபிவிருத்தி திட்டங்களிற்காக மகாவலி அபிவிருத்தி சபையின் கீழ்வரும் மகாவலி L வலய பிரதேசம் சுமார் 163,000 ஹெக்டேயரிலிருந்து 192,000 ஹெக்டேயராக விஸ்தரிக்கப்படுகிறது.

யுத்தகாலத்தில் மணலாறில் இருந்து இடம்பெயர்ந்த தமிழர்களின் நிலங்களில் சிங்களவர்கள் குடியேறியிருப்பது ஒரு புறம், புதிதாக மகாவலி அதிகார சபையின் எல்லை, வெலிஓயா DS பிரிவைத் தாண்டி, முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களுக்குள் மூக்கை நீட்டியிருப்பது மறுபுறம் என்று இரு பாரிய அச்சுறுத்தல்களை  எதிர்கொண்டே இந்த வாரம் முல்லைத்தீவில் தமிழர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டிருக்கிறது. 

“எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்” என்றும் “விழித்தெழு தமிழா, எதிர்த்திடு மகாவலியை” என்றும் கோஷங்கள் எழுப்பிக்கொண்டு ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் முல்லைத்தீவில் அணிதிரண்டு தமது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள். 

போராட்டம் அழைக்கப்பட்டமைக்கான காரணத்தை தமிழ் சிவில் சமூக அமையம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு விபரிக்கின்றது.

“கடந்த ஜனவரி பெப்ரவரி 2017ல் கொக்கிளாய், கருநாட்டுக்கேணி கரையோரப் பகுதியில் அரச காணியில் அடாத்தாக குடியேறியிருந்தனர் எனக்கூறி இரண்டு சிங்கள மீனவர்களிற்கு எதிராக கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தினால் அரச காணி (ஆட்சி மீளப்பெறுதல்) சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. 

வழக்கை விசாரித்த முல்லைத்தீவு நீதிமான் நீதிமன்றம் மேற்படி இரு சிங்கள மீனவர்களையும் காணிகளை விட்டு வெளியேறுமாறு ஜனவரி 2018ல் கட்டளை வழங்கியது. 

அதன் பின்னர், காணிகளில் அடாத்தாக குடியிருந்த இருவரும் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்தனர். பெப்ரவரி 2018ல் வழக்கை எடுத்துக் கொள்ள (leave to proceed) மறுத்து உயர் நீதிமன்றம் கட்டளையிட்டது.

இது இவ்வாறிருக்க 6.8.2018 அன்று மகாவலி அபிவிருத்தி சபை மேற்படி இரண்டு சிங்கள மீனவர்களிற்கும் காணி அனுமதி பத்திரத்தை வழங்கி அவர்களின் சட்டபூர்வமற்ற காணி அபகரிப்பை சட்டபூர்வமாக்கியுள்ளது. 

மேற்படி நடவடிக்கையானது மத்திய அரசாங்கத்தின் சட்டமான அரச காணி (ஆட்சி மீளப்பெறுதல்) சட்டத்தின் கீழ் உரிய தமிழ் அரச அதிகாரிகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் நீதிமன்ற தீர்ப்புக்களையும் கேலிக்குரியதாக்கியுள்ளது. 

சட்டத்தின் ஆட்சி தமக்கு ஒருபோதும் நிலையான தீர்வுகளைத் தரமாட்டாது என்ற புரிதலை இந்தச் சம்பவங்கள் மீள ஞாபகப்படுத்துகின்றன.”


தமிழர் தாயகத்தை துண்டாடும் முயற்சிகளை தடுக்க தமிழ் மக்கள் அணிதிரள்வது அவசியமானது. இராணுவத்தினர் வசமிருக்கும் வளமான விவசாய நிலங்களும், குடிமனைகளும் முழுமையாக விடுவிக்கப்பட போராடுவதும் அவசியமானது.

மறுவளமாக தாயகத்தில் எமது இருப்பை, எமது வசமிருக்கும் நிலங்களை, எமக்கிருக்கும் வளங்களைக் கொண்டும் நம்மத்தியில் இருக்கும் நிபுணர்களைக் கொண்டும் முழுமையாக பயன்படுத்தி வளப்படுத்தி எமது பிரதேசங்களையும் எமது மக்களையும் மேம்படுத்த  நாங்கள் என்ன திட்டங்கள் வைத்திருக்கிறோம்? 

அபிவிருத்தி என்ற போர்வையில் சிங்களவர்கள் எமது பிரதேசங்களில் குடியேறும் பிரச்சினையை தடுக்க, அதே பிரதேசங்களில் எமது மக்களை குடியேற்ற முடியுமா? அதற்கு எங்களது மக்கள் முன்வருவார்களானால் எமது பிரதேசங்களை நோக்கி வரும் அபிவிருத்தி செயற்பாடுகளை எமக்கு நன்மை பயக்கத்தக்கதாக மாற்ற முடியுமல்லவா?

நெடுங்கேணியை அண்டிய பிரதேசங்களில் மீண்டும் பாரிய விவசாய பண்ணைகளை திறந்து நடாத்த முனையும் தமிழ் முதலீட்டாளர்கள், அந்த பண்ணைகளில் வேலை செய்ய தமிழ் தொழிலார்களை தேடுவது கடினமாக இருக்கிறது என்று முறையிடுவதில் உண்மை இருக்கிறதா?  

கடந்தாண்டு அரசியல் தீர்வுக்கு யோசனைகள் வரைந்து சமர்ப்பித்த வடக்கு மாகாண சபை, 
 கடந்த நான்காண்டுகளில் எமது பிரதேச வளர்ச்சிக்கான அபிவிருத்தித் திட்டங்கள் ஏதாவது வரைந்ததா? இல்லை சொல்லிக் கொள்ளும்படியாக ஏதாவது முயற்சிகளைத் தான் முன்னெடுத்ததா? 

ஈராண்டுகளிற்கு முன்னர் கனடாவில் நடந்த வட மாகாண அபிவிருத்தி தொடர்பான மாநாட்டில், வடக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், அரச அதிகாரிகளின் பங்களிப்போடு புலம்பெயர் வாழ் நிபுணர்களின் வழிகாட்டலில் உருவாக்கிய, அபிவிருத்தி திட்டங்கள் என்னவாகின?

கடந்தாண்டு ஆசிய அபிவிருத்தி வங்கி செயற்படுத்த முன்வந்த, யாழ்ப்பாண கிளிநொச்சி மாவட்டங்களின் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்யவும் மலக்கழிவுகளை முறையாக அகற்றுவதற்குமான 130 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான யாழ்ப்பாண ஆறு திட்டம் இன்னமும் வட மாகாண சபையின் பரிசீலனையில் தான் இருக்கிறதா இல்லை அதனை மத்திய அரசு முடக்கி விட்டதா?  

சிங்கப்பூரின் அபிவிருத்திக்கு பாரிய பங்காற்றிய அந்நாட்டின் நீண்ட கால வெளிநாட்டு அமைச்சரும் (1965-80), பிரதி பிரதம மந்திரியுமான (1980-85), சின்னத்தம்பி ராஜரத்தினம் பிறந்த சங்கானை வீட்டை பார்க்கவும், சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு யாழ்ப்பாணத் தமிழர்கள் ஆற்றிய பங்களிப்புக்கு நன்றி செலுத்தவும் யாழ் வந்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சரிடம், ஒரு மறுவாழ்வு நிலையத்தை (Rehabilitation centre) அமைக்க உதவ யாழ் வைத்தியசாலை மருத்துவர்களால் முடியுமென்றால், எங்களது பிரதேச அபிவிருத்திக்கு சிங்கப்பூரை பங்காளியாக்க எங்களது மாகாண சபையும் பாராளுமன்ற உறுப்பினர்களும் என்ன முயற்சியெடுத்தார்கள்? 

தனிநாட்டுக் கனவை நெஞ்சில் சுமந்து கொண்டு, நாடு விடுதலை அடைந்ததும் எங்கே அதிவேகப் பாதை போட வேண்டும், எப்படி வடக்கையும் கிழக்கையும் இணைக்க ரயில் தடம் பதிக்க வேண்டும், விவசாயம், கைத்தொழில், மீன்வளம் எப்படி அபிவிருத்தி செய்யப்படும் என்று மாவட்டம் மாவட்டமாக திட்டங்களை வரைந்து கொண்டு விடுதலைப் போரை முன்னெடுத்த நம்மினமா இன்று திட்டங்கள் எதுவுமின்றி அந்தரிப்பது?

எங்களது இருப்பை பாதுகாக்க நாங்கள் போராடத் தான் வேண்டும். அதேவேளை போராடி போராடியே அழிந்த சந்ததி என்ற வரலாற்று அவப்பெயரையும் நாங்கள் சுமந்தவர்களாகி விடலாகாது. முப்பது வருட கொடிய யுத்தத்தால் அழிவைச் சந்தித்தவர்கள் நாங்கள், எங்களை நாங்களே மீளெழ வைக்க நாங்கள் தான் முயற்சிக்க வேண்டும்.

இடம்பெயர்ந்தோரும் புலம்பெயர்ந்தோரும் மீண்டும் தாயகம் திரும்பி எமது பிரதேசங்களில் நாங்கள் வாழ நாங்கள் வழிசெய்யலாம். அரசியல் தீர்வு வரும் வரை அபிவிருத்தியை பின்போடலாம் என்பது “ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது” என்பது போல நீண்ட கால நோக்கில் பாரிய பின்னடைவையே எமக்கு ஏற்படுத்தும். 

7 habits  of Highly Effective People என்ற மிகச்சிறந்த புத்தகத்தை எழுதிய Stephen Cover சொல்லிய Circle of Influenceல் நாங்கள் கவனம் செலுத்தினால், எங்கள் பாடசாலைகள் நன்றாக இயங்கும், பல்கலைக்கழகம் புத்துயிர் பெறும், மாநகர சபையும் மாகாண சபையும் வினைத்திறனுடன் செயற்படும், முதலீட்டாளர்கள் வருவார்கள், நல்ல நல்ல தொழில் முயற்சிகள் உருவாகும், வியாபாரமும் வர்த்தகமும் பெருகும், மக்கள் மீண்டும் தங்களது சொந்த இடங்களிற்கு திரும்புவார்கள், அந்நியர்கள் எங்களது மண்ணில் குடியேறுவதற்கான வாய்ப்புக்களை நாங்களே அடைத்துக் கொள்ளலாம். 

“பத்துப் பன்னிரண்டு தென்னைமரம் பக்கதிலே வேணும்

நல்ல முத்துச் சுடர்போலே நிலாவொளி முன்பு வரவேணும்

அங்குக் கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற் படவேணும்

என்றன் சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளந் தென்றல் வரவேணும்

காணி நிலம் வேண்டும் பராசக்தி, காணி நிலம் வேண்டும்”

(பாரதியார்)

1 comment:

  1. தமிழர்களை குடியமர்த்தினால் அபிவிருத்தி திட்டம் வராது உந்த மகாவலி அபிவிருத்தி திட்டமே சிங்களவர்களை குடியேற்றத்தானேஅப்பனே

    ReplyDelete