Friday, 31 August 2018

வலி தரும் மகாவலி

தண்ணீர் என்றாலே தமிழர்களிற்கு கண்ணீர் தான் போலிருக்கிறது. சங்க காலத்தில் பூம்புகாரை அழித்த கடற்கோளாகட்டும், 2004ல் கடற் புலிகளின் பலத்தை அழித்த ஆழிப்பேரலையாகட்டும், காவேரியை வாட வைக்கும் கன்னடர்களாகட்டும், இப்போது தமிழர் தாயகப் பகுதிகளை கவர முயலும் மகாவலி அபிவிருத்தித் திட்டமாகட்டும், எல்லாமே தண்ணீர் தந்த கண்ணீர் கதைகள் தான். 

1961ல் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களான UNDP மற்றும் FAOவின் அனுசரணையில், இலங்கைத் தீவில் விவசாயத்தைப் பெருக்கவும், நீர் மின்சார திட்டத்தை அறிமுகப்படுத்தி விரிவாக்கவும் என 30 வருட திட்டமாக, மகாவலி அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 

1977ல் ஆட்சியைப் பிடித்த ஜெயவர்தனவின் அரசு, ஆறே ஆறு ஆண்டுகளில் மகாவலி திட்டத்தை முழுமையாக முடிக்க கங்கணம் கட்டிக் கொண்டு, துரித மகாவலி அபிவிருத்தித் திட்டத்தை அமுலாக்கத் தொடங்கியது. காமினி திஸநாயக்காவின் அமைச்சின் கீழ் செயற்படத் தொடங்கிய இந்தத் திட்டத்திற்கு, ஜேர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், ஒஸ்ரேலியா, சுவீடன் உட்பட பல முதலாளித்துவ நாடுகள், பாரியளவில் நிதியுதவி வழங்க முன்வந்தன.  1977ல் திறந்த சந்தை பொருளாதார கொள்கையை பின்பற்ற தொடங்கிய இலங்கைக்கு மேற்கத்தைய நாடுகள் வழங்கிய ஊக்கசக்கதியாக துரித மகாவலி திட்டம் அமைந்தது. 

1984 ஒக்டோபர் மாதமளவில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு பகுதியில் குடியிருந்த தமிழ் விவசாயக் குடும்பங்களை இலங்கையின் பாதுகாப்புப் படையினர் பலவந்தமாக வெளியேற்றினர். செழிப்பான விவசாய பூமியான இந்தப் பகுதிகளில், சிறு சிறு தமிழ்க் கிராமங்களும், நீண்ட கால குத்தகையடிப்படையில் 16 தமிழர்களிற்கு சொந்தமான நிறுவனங்கள் இயக்கிய விவசாய பண்ணைகளும் இருந்தன.

தமிழ் நிறுவனங்கள் நடாத்திய விவசாயப் பண்ணைகளில், நாவலர் பண்ணை, Kent Farm, சிலோன் தியேட்டர்ஸ், Dollar Farm என்பன பெரிய நிலப்பரப்புகளில் இயங்கி வந்தன. Kent மற்றும் Dollar பண்ணைகளில், 1977ல் இடம்பெற்ற இனக்கலவரத்தினால் மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் குடியமர்த்தப்பட்டிருந்தனர். 1984ல், Dollar மற்றும் Kent பண்ணைகளில் குடியேறிய மலையகத் தமிழர்களை இலங்கை இராணுவம் பஸ்களில் ஏற்றிக் கொண்டு போய், மலையகத்தில் இறக்கிவிட்டது. 

வடக்கு கிழக்கு தமிழர்களின் இதயபூமியான மணலாற்றில் தமிழர்களை கொன்றும் அடித்தும் விரட்டி விட்டு, பண்ணைகளை திறந்த சிறைச்சாலைகளாக அறிவித்து விட்டு, தென்னிலங்கை சிறைகளில் இருந்த சிங்களக் கைதிகளைஅவர்களது  குடும்பங்களோடு அந்தக் பண்ணைகளில் இலங்கை அரசு குடியேற்றியது. 1988ல் வெளியான வர்த்தகமானி மூலமாக, மணலாறு என்ற தமிழ்ப்பெயரை தாங்கிய பிரதேசத்தின் பெயர் அதிகாரபூர்வமாக வெலிஓயா என்ற சிங்களப் பெயராகியதோடு, தனியான பிரதேச செயலகப் பிரிவுமானது (DS Division).
வடக்கு கிழக்கில் தோன்றியிருக்கும் பிரிவினைவாதிகளின் தமிழீழக் குறிக்கோளை முறியடிக்க, வடக்கில் 2 லட்சம் சிங்களவர்களை குடியேற்றுவோம் என்று இலங்கையின் தேசிய பந்தோபஸ்து அமைச்சர் அத்துலத்முதலி இதே காலப்பகுதியில் தான் முழங்கியருந்தார். 

2009ல் யுத்தம் முடிவடைந்த பின்னர், சுமார் 6,000 சிங்களக் குடும்பங்கள் மீண்டும் மணலாற்றில் அரசாங்கத்தால் குடியேற்றப்பட்டார்கள். மணலாற்றைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் குடிதண்ணீரில் கலந்திருந்த ஒருவித நச்சுதன்மையால் சிறுநீரகத்திற்கு பாதிப்புக்கள் ஏற்படுவதால், குடியேறிய குடும்பங்களிற்கு தூய்மையான குடிநீர்  வழங்க 50 மில்லியன் ரூபாய்கள் செலவில் water purification இயந்திரங்கள் மணலாற்றில் நிறுவப்பட்டுள்ளன. 

மணலாறு பிரதேசத்தை சுற்றி சுமார் 3,000 மில்லியன் ரூபாய்கள் செலவில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது. இந்த அபிவிருத்தி திட்டங்களிற்காக மகாவலி அபிவிருத்தி சபையின் கீழ்வரும் மகாவலி L வலய பிரதேசம் சுமார் 163,000 ஹெக்டேயரிலிருந்து 192,000 ஹெக்டேயராக விஸ்தரிக்கப்படுகிறது.

யுத்தகாலத்தில் மணலாறில் இருந்து இடம்பெயர்ந்த தமிழர்களின் நிலங்களில் சிங்களவர்கள் குடியேறியிருப்பது ஒரு புறம், புதிதாக மகாவலி அதிகார சபையின் எல்லை, வெலிஓயா DS பிரிவைத் தாண்டி, முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களுக்குள் மூக்கை நீட்டியிருப்பது மறுபுறம் என்று இரு பாரிய அச்சுறுத்தல்களை  எதிர்கொண்டே இந்த வாரம் முல்லைத்தீவில் தமிழர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டிருக்கிறது. 

“எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்” என்றும் “விழித்தெழு தமிழா, எதிர்த்திடு மகாவலியை” என்றும் கோஷங்கள் எழுப்பிக்கொண்டு ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் முல்லைத்தீவில் அணிதிரண்டு தமது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள். 

போராட்டம் அழைக்கப்பட்டமைக்கான காரணத்தை தமிழ் சிவில் சமூக அமையம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு விபரிக்கின்றது.

“கடந்த ஜனவரி பெப்ரவரி 2017ல் கொக்கிளாய், கருநாட்டுக்கேணி கரையோரப் பகுதியில் அரச காணியில் அடாத்தாக குடியேறியிருந்தனர் எனக்கூறி இரண்டு சிங்கள மீனவர்களிற்கு எதிராக கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தினால் அரச காணி (ஆட்சி மீளப்பெறுதல்) சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. 

வழக்கை விசாரித்த முல்லைத்தீவு நீதிமான் நீதிமன்றம் மேற்படி இரு சிங்கள மீனவர்களையும் காணிகளை விட்டு வெளியேறுமாறு ஜனவரி 2018ல் கட்டளை வழங்கியது. 

அதன் பின்னர், காணிகளில் அடாத்தாக குடியிருந்த இருவரும் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்தனர். பெப்ரவரி 2018ல் வழக்கை எடுத்துக் கொள்ள (leave to proceed) மறுத்து உயர் நீதிமன்றம் கட்டளையிட்டது.

இது இவ்வாறிருக்க 6.8.2018 அன்று மகாவலி அபிவிருத்தி சபை மேற்படி இரண்டு சிங்கள மீனவர்களிற்கும் காணி அனுமதி பத்திரத்தை வழங்கி அவர்களின் சட்டபூர்வமற்ற காணி அபகரிப்பை சட்டபூர்வமாக்கியுள்ளது. 

மேற்படி நடவடிக்கையானது மத்திய அரசாங்கத்தின் சட்டமான அரச காணி (ஆட்சி மீளப்பெறுதல்) சட்டத்தின் கீழ் உரிய தமிழ் அரச அதிகாரிகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் நீதிமன்ற தீர்ப்புக்களையும் கேலிக்குரியதாக்கியுள்ளது. 

சட்டத்தின் ஆட்சி தமக்கு ஒருபோதும் நிலையான தீர்வுகளைத் தரமாட்டாது என்ற புரிதலை இந்தச் சம்பவங்கள் மீள ஞாபகப்படுத்துகின்றன.”


தமிழர் தாயகத்தை துண்டாடும் முயற்சிகளை தடுக்க தமிழ் மக்கள் அணிதிரள்வது அவசியமானது. இராணுவத்தினர் வசமிருக்கும் வளமான விவசாய நிலங்களும், குடிமனைகளும் முழுமையாக விடுவிக்கப்பட போராடுவதும் அவசியமானது.

மறுவளமாக தாயகத்தில் எமது இருப்பை, எமது வசமிருக்கும் நிலங்களை, எமக்கிருக்கும் வளங்களைக் கொண்டும் நம்மத்தியில் இருக்கும் நிபுணர்களைக் கொண்டும் முழுமையாக பயன்படுத்தி வளப்படுத்தி எமது பிரதேசங்களையும் எமது மக்களையும் மேம்படுத்த  நாங்கள் என்ன திட்டங்கள் வைத்திருக்கிறோம்? 

அபிவிருத்தி என்ற போர்வையில் சிங்களவர்கள் எமது பிரதேசங்களில் குடியேறும் பிரச்சினையை தடுக்க, அதே பிரதேசங்களில் எமது மக்களை குடியேற்ற முடியுமா? அதற்கு எங்களது மக்கள் முன்வருவார்களானால் எமது பிரதேசங்களை நோக்கி வரும் அபிவிருத்தி செயற்பாடுகளை எமக்கு நன்மை பயக்கத்தக்கதாக மாற்ற முடியுமல்லவா?

நெடுங்கேணியை அண்டிய பிரதேசங்களில் மீண்டும் பாரிய விவசாய பண்ணைகளை திறந்து நடாத்த முனையும் தமிழ் முதலீட்டாளர்கள், அந்த பண்ணைகளில் வேலை செய்ய தமிழ் தொழிலார்களை தேடுவது கடினமாக இருக்கிறது என்று முறையிடுவதில் உண்மை இருக்கிறதா?  

கடந்தாண்டு அரசியல் தீர்வுக்கு யோசனைகள் வரைந்து சமர்ப்பித்த வடக்கு மாகாண சபை, 
 கடந்த நான்காண்டுகளில் எமது பிரதேச வளர்ச்சிக்கான அபிவிருத்தித் திட்டங்கள் ஏதாவது வரைந்ததா? இல்லை சொல்லிக் கொள்ளும்படியாக ஏதாவது முயற்சிகளைத் தான் முன்னெடுத்ததா? 

ஈராண்டுகளிற்கு முன்னர் கனடாவில் நடந்த வட மாகாண அபிவிருத்தி தொடர்பான மாநாட்டில், வடக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், அரச அதிகாரிகளின் பங்களிப்போடு புலம்பெயர் வாழ் நிபுணர்களின் வழிகாட்டலில் உருவாக்கிய, அபிவிருத்தி திட்டங்கள் என்னவாகின?

கடந்தாண்டு ஆசிய அபிவிருத்தி வங்கி செயற்படுத்த முன்வந்த, யாழ்ப்பாண கிளிநொச்சி மாவட்டங்களின் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்யவும் மலக்கழிவுகளை முறையாக அகற்றுவதற்குமான 130 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான யாழ்ப்பாண ஆறு திட்டம் இன்னமும் வட மாகாண சபையின் பரிசீலனையில் தான் இருக்கிறதா இல்லை அதனை மத்திய அரசு முடக்கி விட்டதா?  

சிங்கப்பூரின் அபிவிருத்திக்கு பாரிய பங்காற்றிய அந்நாட்டின் நீண்ட கால வெளிநாட்டு அமைச்சரும் (1965-80), பிரதி பிரதம மந்திரியுமான (1980-85), சின்னத்தம்பி ராஜரத்தினம் பிறந்த சங்கானை வீட்டை பார்க்கவும், சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு யாழ்ப்பாணத் தமிழர்கள் ஆற்றிய பங்களிப்புக்கு நன்றி செலுத்தவும் யாழ் வந்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சரிடம், ஒரு மறுவாழ்வு நிலையத்தை (Rehabilitation centre) அமைக்க உதவ யாழ் வைத்தியசாலை மருத்துவர்களால் முடியுமென்றால், எங்களது பிரதேச அபிவிருத்திக்கு சிங்கப்பூரை பங்காளியாக்க எங்களது மாகாண சபையும் பாராளுமன்ற உறுப்பினர்களும் என்ன முயற்சியெடுத்தார்கள்? 

தனிநாட்டுக் கனவை நெஞ்சில் சுமந்து கொண்டு, நாடு விடுதலை அடைந்ததும் எங்கே அதிவேகப் பாதை போட வேண்டும், எப்படி வடக்கையும் கிழக்கையும் இணைக்க ரயில் தடம் பதிக்க வேண்டும், விவசாயம், கைத்தொழில், மீன்வளம் எப்படி அபிவிருத்தி செய்யப்படும் என்று மாவட்டம் மாவட்டமாக திட்டங்களை வரைந்து கொண்டு விடுதலைப் போரை முன்னெடுத்த நம்மினமா இன்று திட்டங்கள் எதுவுமின்றி அந்தரிப்பது?

எங்களது இருப்பை பாதுகாக்க நாங்கள் போராடத் தான் வேண்டும். அதேவேளை போராடி போராடியே அழிந்த சந்ததி என்ற வரலாற்று அவப்பெயரையும் நாங்கள் சுமந்தவர்களாகி விடலாகாது. முப்பது வருட கொடிய யுத்தத்தால் அழிவைச் சந்தித்தவர்கள் நாங்கள், எங்களை நாங்களே மீளெழ வைக்க நாங்கள் தான் முயற்சிக்க வேண்டும்.

இடம்பெயர்ந்தோரும் புலம்பெயர்ந்தோரும் மீண்டும் தாயகம் திரும்பி எமது பிரதேசங்களில் நாங்கள் வாழ நாங்கள் வழிசெய்யலாம். அரசியல் தீர்வு வரும் வரை அபிவிருத்தியை பின்போடலாம் என்பது “ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது” என்பது போல நீண்ட கால நோக்கில் பாரிய பின்னடைவையே எமக்கு ஏற்படுத்தும். 

7 habits  of Highly Effective People என்ற மிகச்சிறந்த புத்தகத்தை எழுதிய Stephen Cover சொல்லிய Circle of Influenceல் நாங்கள் கவனம் செலுத்தினால், எங்கள் பாடசாலைகள் நன்றாக இயங்கும், பல்கலைக்கழகம் புத்துயிர் பெறும், மாநகர சபையும் மாகாண சபையும் வினைத்திறனுடன் செயற்படும், முதலீட்டாளர்கள் வருவார்கள், நல்ல நல்ல தொழில் முயற்சிகள் உருவாகும், வியாபாரமும் வர்த்தகமும் பெருகும், மக்கள் மீண்டும் தங்களது சொந்த இடங்களிற்கு திரும்புவார்கள், அந்நியர்கள் எங்களது மண்ணில் குடியேறுவதற்கான வாய்ப்புக்களை நாங்களே அடைத்துக் கொள்ளலாம். 

“பத்துப் பன்னிரண்டு தென்னைமரம் பக்கதிலே வேணும்

நல்ல முத்துச் சுடர்போலே நிலாவொளி முன்பு வரவேணும்

அங்குக் கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற் படவேணும்

என்றன் சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளந் தென்றல் வரவேணும்

காணி நிலம் வேண்டும் பராசக்தி, காணி நிலம் வேண்டும்”

(பாரதியார்)

Saturday, 18 August 2018

துரைச்சாமி மாஸ்டரோடு ஒரு பின்னேரம்...பரி யோவான் பொழுதுகள்“வாங்கோ...வாங்கோ...வாங்கோ, வழமையா என்றா எழும்பித் தான் வந்தாக்களை வரவேற்பன்..” வாசலில் சப்பாத்துக்களை கழற்றி விட்டு வீட்டிற்குள் நுழைந்த எங்களை துரைச்சாமி மாஸ்டர் கதிரையில் இருந்து கொண்டே உற்சாகமாக வரவேற்றார். துரைச்சாமி மாஸ்டரின் விருந்தோம்பல் இன்றும் சற்றும் குறையவில்லை. 

“நான் ஏன் எழும்பேல்ல என்டு சொல்லும் பாப்பம்” துரைச்சாமி மாஸ்டருக்கு வலது பக்கத்தில் இருக்கப் போன டினேஷ், கதிரையில் இருக்க முதலே, எண்பதுக்களில் எங்களை துளைத்தெடுத்த அதே கடுமை மாறாத குரலில், துரைச்சாமி மாஸ்டர் கேள்வி கேட்டார்.

டினேஷ் “தெரியல்லயே சேர்” என்று தலையைச் சொரிய, “ஆ.. அப்ப நீர் சொல்லும் பாப்பம்” என்று இடப்புறம் அமர்ந்து டினேஷ் அவதிப்படுவதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த என்னை நோக்கி 50 கலிபர் திரும்பியது, இல்லை இல்லை 90 கலிபர், ஏனென்றால் துரைச்சாமி மாஸ்டருக்கு இப்ப 93 வயது நடக்குதாம். 

“நீங்க வரப் போறீங்க என்ட படியால், இன்றைக்கு மத்தியான நித்திரையால வெள்ளனவே எழும்பிட்டார்” துரைச்சாமி மாஸ்டரை அக்கறையோடு கவனிக்கும் அவரது மனைவி சொல்ல, எங்களது வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருந்த துரைச்சாமி மாஸ்டர், சிரித்துக் கொண்டிருந்தார். 

“என்னை பெரியாளாக்கி விட்டதே சென் ஜோன்ஸ் தான்” என்ற துரைச்சாமி மாஸ்டர் கொஞ்சம் சீரியஸானார். “நீங்களும் சென் ஜோன்ஸிற்கு நிறைய செய்தனீங்கள் மாஸ்டர்.. வீடு வீடாய் போய் காசெல்லாம் சேத்தனீங்க” என்று நாங்களும் மாஸ்டரை மகிமைப்படுத்தினோம்.

“ஓம் ஓம்.. அப்ப என்னட்ட கார் இருந்தது.. அவயள் என்ன கேட்டாலும் நான் செய்யுறனான்” என்று தனது கறுப்பு நிற Morris Minor காரை எங்களுக்கு ஞாபகப்படுத்தினார். “சேர்.. அப்ப அந்தக் கோழிக் கதை..”என்று வாய் நுனியில் வந்த பரி யோவான் சமூகத்தில் மிகப்பிரபலமான அந்த கோழிக் கதையை அவரிடமே நேரடியாக கேட்காகமல் தவிர்த்துக் கொண்டோம். 


“உமக்கு தெரியுமா மெல்பேர்ணில் நான் வீடு வீடாக போய் பேப்பர் போட்டு காசு சேர்த்து ஒரு புது BMW கார் வாங்கினான்” துரைச்சாமி மாஸ்டர் பெருமையோடு சொன்னார். “ஓம் சேர்.. அதுக்கு THURAI என்று number plateம் போட்டனீங்க” என்று நாங்கள் சொல்ல, பலமாக சிரித்தார். 

“ஒரிடமும் வெளில போக மாட்டார்.. கட்டிலில் படுப்பார்.. எழும்பி இந்த கதிரையில் இருப்பார்.. bathroom போக wheel chair இருக்கு.. பிறகு கதிரை.. இரவு ஏழெட்டு மணிக்கு நித்திரை” என்று அந்தக் காலத்தில் பரி யோவானின் ஆரம்பப் பிரிவு வளாகம் எங்கும் ஓடியாடித் திரிந்த துரைச்சாமி மாஸ்டரின் இன்றைய நாட்களை அவரது மனைவி வர்ணித்தார். 

“டிக்கெட் போட்டாச்சு.. ஆனா இன்னும் வந்து சேரேல்ல” என்று துரைசாமி மாஸ்டர் சொல்லி விட்டு சத்தமாக சிரிக்க, எங்களுக்கு ஏதோ செய்தது.


 “நீர் இங்கால வந்து இரும்” என்று டினேஷுக்கு அந்தக் கால பரி யோவான் Primary School Head Masterன் தோரணை மாறாமல் உத்தரவு பறந்தது. “அங்கால ஒருக்கா.. இங்கால ஒருக்கா என்று அன்டனாவை அடிக்கடி திருப்பேலாமல் இருக்கு” என்று சொல்லும் போதும் பலமான சிரிப்புத் தான்.
துரைச்சாமி மாஸ்டரின் மனைவி கொண்டு வைத்த வடையில் ஒன்றை எடுத்து டினேஷும் நானும் ஆளுக்கு பாதி பாதியாக சாப்பிட “நீர் அவர்ட வடையில் பாதியை சாப்பிட்டிட்டு, பிறகு உம்மட வடையில் பாதியை சாப்பிடோணும், சரியோ” என்று சிரித்து சிரித்து எங்களை வெருட்டிக் கொண்டேயிருத்தார். 

தேத்தண்ணி போட போன அவரது மனைவியிடம் நாங்கள் சீனியை குறைத்து போடச் சொல்ல “அவைக்கு போடாத சீனியை எனக்கு போடும்” என்று மனைவிக்கு நக்கலடித்தார். 

அவரது மனைவி எங்களுக்கு முதலில் தேத்தண்ணி பரிமாறி விட்டுப் போக “இவ எனக்கு இன்னும் தேத்தண்ணி தரேல்ல”என்று எங்களுக்கு மட்டும் கேட்கத்தக்கதாக மெதுவாக பகிடியாக குசுகுசுத்தார். அடுத்த நிமிடமே, துரைச்சாமி மாஸ்டருக்கு தேத்தண்ணி வர, எங்களை பார்த்து கண்ணைக் காட்டி சிரித்தார். 

“தேத்தண்ணி குடிச்சிட்டீரோ” என்று என்னைப் பார்த்து அடுத்த தாக்குதல் தொடங்கியது. “இல்லை சேர்.. கொஞ்சம் கிடக்கு” என்று சாதுவாக மிரண்டேன். “ஓகே.. குடிச்சிட்டு கோப்பையை இதில வையும்” என்று தனக்கு முன்னால் இருந்த மேசையை சாதுவான அதட்டலோடு காட்டினார்.

ஆனந்தராஜா மாஸ்டர் காலத்தில் நடந்த ஒரு கதை ஒன்றை சொல்லி சிரித்தார். பிறகு தனபாலன் மாஸ்டர் மெல்பேர்ண் வந்த போது தனக்கு 175வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்லூரி வெளியிட்ட தங்க நாணயம் ஒன்றும் நினைவுச்சின்னம் ஒன்றும் தந்ததை ஞாபகப்படுத்தினார். “ஞானபொன்ராஜா தான் இப்பவும் பிரின்ஸிபலா” என்று இன்றைய அதிபரையும் விசாரித்தார்.

“சேர், உங்கட old boy தான் இப்ப யாழ்ப்பாண நகர மேயர்” என்று சொல்ல, யார் எவர் என்று விசாரித்து விட்டு “அம்மா.. நீங்க இனி யாழ்ப்பாணம் போனால் உங்களுக்கு விலாசம் தான்.. என்ட பெயரைச் சொன்னால் காணும்..தனிக்கவனிப்பு கிடைக்கும்.. “என்று தனது மனைவிக்கு சொல்லி பெருமிதம் பட்டுக் கொண்டார், துரைச்சாமி மாஸ்டர்.

“நாங்க 2011ல போன போது Bankற்கு போக, இவரை இருக்க வைத்துவிட்டு, இருந்த இடத்தில் வந்து கையெழுத்து வாங்கி எல்லா வேலையும் இவரின் students செய்து தந்தவை” என்று கடைசியாக துரைச்சாமி மாஸ்டரோடு யாழ்ப்பாணம் போய் வந்த அனுபவத்தை அவரது மனைவி பகிர்ந்து கொண்டார்.

“சேருக்கு என்ன சாப்பிட விருப்பம்” டினேஷ் கேட்டார். “அவருக்கு சோறு பிடியாது, McDonaldsன்ட cheese burger என்றா நல்ல விருப்பம்” என்று அவரது மனைவி குறுக்கிட, துரைச்சாமி மாஸ்டர் ஒரு குழந்தையைப் போல் நெளிந்தார். “சோறு சாப்பிடக் குடுத்தா.. சோறா என்று கேட்பார்.. Pizzaவும் நல்ல விருப்பம்” என்று அவரது மனைவி தொடர்ந்தார்.

மத்தியானத்திலிருந்து மெல்பேர்ணில் பெய்து கொண்டிருந்த கடும் காற்றுடன் கூடிய மழை சற்றுத் தணிந்திருந்த பின்னேர வேளையில் தான் நாங்கள் துரைச்சாமி மாஸ்டரை பார்க்க போயிருந்தோம். பல காலமாக மாஸ்டரை ஒருக்கா பார்த்திட்டு வருவேண்டும் என்று டினேஷ் கேட்டுக் கொண்டே இருந்தார், இன்றைக்கு தான் அந்த இனிய பொழுது கைக்கூடி வந்தது.

“சேர்.. அப்ப நாங்க வெளிக்கிடட்டே” என்று நாங்கள் அனுமதி கேட்கும் போது மெல்பேர்ண் வானத்தை இரவும் கருமேகங்களும் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தன. எங்களை இன்னும் இருந்து மாஸ்டரோடு கதைத்துக் கொண்டிருக்க அவரது மனைவி கேட்டுக்கொள்ள, “அவயள விடும்.. அவயள் பிள்ளை குட்டியளை பார்க்கோணும் அல்லோ” என்று மாஸ்டர் எங்களை சிரிப்போடு வழியனுப்பினார்.

“சேர்.. அடுத்த முறை வரும்போது McDonaldsல் Cheeseburger வாங்கியாறம்” என்னு வாசலில் சப்பாத்தை போட்டுக் கொண்டே நாங்கள் குரல் கொடுக்க “ஓம் ஓம்.. எனக்கு போளியும் நல்ல விருப்பம்” என்று சொல்லி துரைச்சாமி மாஸ்டர் சத்தமாக சிரித்துக் கொண்டே எங்களுக்கு விடை தந்தார்.

பரி யோவான் கல்லூரியில் நான்கு தலைமுறை மாணவர்களை முழுமையான ஈடுபட்டோடும் அதீத அக்கறையோடும் கற்பித்த துரைச்சாமி மாஸ்டரோடு நீங்களும் தொடர்பு கொண்டு ஒரு ஹலோ சொன்னால் அவரது அன்றைய நாள் அவரிக்கு நிட்சயமாக இனிமையாக அமையும். 

நீங்கள் அவரைத் தொடர்பு கொள்ள விரும்பின் டினேஷ் சுந்தரலிங்கத்தையோ (SJC85) அல்லது என்னையோ தொடர்பு கொண்டால், நாங்கள் துரைச்சாமி மாஸ்டரின் தொலைபேசி இலக்கத்தை தந்து உதவுவோம்.


Thursday, 16 August 2018

மக்களின், மக்களால், மக்களுக்காக....

சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்தையும் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் நம்பியாராமல், மக்கள்  ஒன்றிணைந்து தமது தேவைகளை தாமாகவே பூர்த்தி செய்யும் செயற்பாடுகள் உருப்பெறத் தொடங்கி விட்டன. 

அண்மையில் இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்குமிடையிலான கிரிக்கெட் போட்டி நிறைவடைந்த பின்னர், இளைஞர்கள் ஒன்றிணைந்து மைதானத்தில் இருந்த குப்பைகளை அகற்றியதும் இந்த வகையில் அடங்கும்  

தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் தன்னார்வ அடிப்படையில் சிறு சிறு குழுக்களாக ஒன்றிணையும் மக்கள், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுற்றாடல் போன்ற விடயங்களில், அரசாங்கத்தை பகைக்கா வண்ணம், தங்களைத் தாங்களே கவனித்துக்  கொள்ளும் செயற்பாடுகள் உருப்பெறத் தொடங்கி விட்டது ஒரு நல்ல ஆரம்பம்.

யாழ்ப்பாண மாநகர சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட இரு பிரதான கட்சிகளும், தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதிமுக்கியத்துவம் அளித்த விடயம், யாழ்ப்பாண நகரை தூய்மைப்படுத்துவது. யாழ்ப்பாண நகரின் மூலை முடுக்கெல்லாம் நிறைந்து வழியும் குப்பையும், அந்தக் குப்பையை கிளறிக் கொண்டிருக்கும் கட்டாக்காலி நாய்களும், அழகிய யாழ்ப்பாண நகரை அலங்கோலப்படுத்துவது மட்டுமன்றி சுகாதார சீர்கேடுகளிற்கும் வழிவகுத்துக் கொண்டிருக்கின்றன. 

யாழ்ப்பாணத்தின் சமூக அக்கறையுள்ள நண்பர்கள் குழாம் ஒன்றின் முன்னெடுப்பில், யாழ்ப்பாண நகரை பொதுமக்களின் பங்களிப்போடு சுத்தப்படுத்த ஒரு திட்டவரைபு தயாரிக்கப்பட்டு, யாழ்ப்பாண மாநகர சபையோடு கலந்துரையாடப்பட்டு வருவது, எமது மண்ணில் எமது மக்களை மைய்யமாகக் கொண்ட முன்னெடுப்புக்கள் துளிர்விடத் தொடங்கியிருப்பதற்கான நல்லதோர் அடையாளமாக இந்த திட்டத்தை கருதலாம். 

இந்த நண்பர்கள் குழாமிடம், யாழ்ப்பாண நகரைத் தூய்மையாக்கும் திட்டத்தைத் தவிர, வட மாகாணத்தில் இடம்பெறும் வீதி விபத்துகளை குறைப்பதற்கான செயற்திட்டம் ஒன்றும், வடக்கு கிழக்கு பாடசாலை மாணவர்களுக்கான Career Guidance செயற்திட்டம் ஒன்றும் நிதி வளங்கள் கிடைக்காமையால் கிடப்பில் கிடக்கிறது. 


கிளிநொச்சியை தளமாகக் கொண்டியங்கும் IRDG எனும் தன்னார்வ அமைப்பு, புலத்தில் இயங்கும் வல்லுனர்களின் திறமைகளைப் பயன்படுத்தி, தாயகத்தில் கிராமங்களை மையமாகக்கொண்ட சிறிய அளவிலான பொருளாதார முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. விவசாயத்தையும் சிறு கைத்தொழிலையும் அபிவிருத்தி செய்யும் IRDG அமைப்பினை சர்வதேச அரசாங்கங்களும் தொண்டர் நிறுவனங்களும் ஊக்குவிக்கத் தொடங்கி விட்டன. 
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 1992ம் ஆண்டு நண்பர்கள் RfE எனும் தமது அமைப்பினூடாக வடக்கு கிழக்கிலும் மலையகத்திலும், கணிதப் பாடத்தில் எமது மாணவர்களின் அறிவை வளர்க்க திட்டங்களை முன்னெடுக்க, பரி யோவான் கல்லூரியின் 1987 பிரிவு மாணவர்கள் முல்லைத்தீவில் உருத்திரபுரம் மற்றும் தர்மபுரம் மகா வித்தியாலங்களின் அபிவிருத்தியை கடந்த பல வருடங்களாக தத்தெடுத்து விட்டார்கள் என்றே சொல்லலாம்.

மீண்டும் விடுதலைப் புலிகளின் காலம் வரவேண்டும் என்று யார் சத்தம் போட்டாலும் நாங்கள் கைதட்டி ஆரவாரிக்கிறோம், ஆனால் விடுதலைப் புலிகள் காலத்தில் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட, இன்று நம்மாலும் முன்னெடுக்கப்படக் கூடிய செயற்திட்டங்களை செயற்படுத்தாமலே காலத்தை கடந்து போய்க் கொண்டிருக்கிறோம்.

“புலம் பெயர்ந்த மக்களின் ஆற்றலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தலைவரிடம் தெளிவான சிந்தனை இருந்தது, தம்பி” என்று புலத்தில் பல ஆண்டுகள் விடுதலைப் போராட்டத்திற்கு அளப்பரிய பங்களித்த அண்ணனொருவர் அண்மையில் தனது ஆதங்கத்தை பகிர்ந்தார். “எங்களுக்கு சுதந்திரம் கிடைத்ததும், புலம் பெயர்ந்த எங்கட மக்கள் தான், யுத்தத்தால் எங்கள் பிரதேசங்கள் அடைந்த பின்னடைவிலிருந்து மீளவும் எழ காத்திரமான பங்களிப்பு செய்யப் போகிறார்கள் என்பதில் அவருக்கு அதீத நம்பிக்கை இருந்தது” என்றார் அண்ணர். 

2004 மார்கழியில் நிகழ்ந்த ஆழிப்பேரலை அவலத்திலிருந்து மீள, எமது மக்களிற்கான உடனடி உதவிகளை ஒழுங்காக ஒருங்கமைத்து வழங்கிய செயற்பாட்டில் புலம்பெயர் மக்கள் ஆற்றிய பங்களிப்பு தலைவரின் சிந்தனைக்கு அவர்கள் கொடுத்த செயல்வடிவம். ஆசிய கண்டம் எதிர்கொண்ட அந்த பேரழிவின் பின்னர், நடைபெற்ற மீட்பு பணிகளை அதியுச்ச செயற்திறனுடன் நடாத்திக் காட்டியது விடுதலைப் புலிகள் தான் என்று உலகமே புகழாரம் சூட்டியதை எங்களால் மறந்திருக்க முடியாது. 

புலம்பெயர்ந்த மக்களின் ஆற்றலைப் பயன்படுத்தி தாயகத்தின் தேவைகளை நிறைவு செய்யும் செயற்திட்டங்களாக மாற்றியதில் விடுதலைப் புலிகளின் நந்தவனம் செயலகம் ஆற்றிய பணி பலருக்கு தெரியும். தொண்ணூறுகளின் ஆரம்பத்திலிருந்து நந்தவனம் செயலகத்தினூடாக தாயகத்தில் அரும்பணியாற்றிய புலம்பெயர்ந்த உணர்வாளர்கள் அந்த நாட்களைப் பற்றி இன்றும் மகிழ்வோடும் நிறைவோடும் நினைவு கூர்வார்கள்.

தாயகத்தில் இன்று புலம்பெயர்ந்த மக்களின் ஆற்றலை உள்வாங்கி, தாயகத்தின் தேவைகளை நிறைவு செய்யவல்ல செயற்திட்டங்களை நடைமுறைவல்ல ஒரு கட்டமைப்பு இல்லாதது ஒரு பெருங் குறையாகவே தொடர்கிறது. அதே வேளை “சண்டை நடக்கேக்க ஓடினாக்கள் இங்க தேவையில்லை.. நாங்களே எங்களை பார்த்துக் கொள்ளுவம்” என்ற ஒரு மனநிலையும் தாயகத்தில் உருவாகி வருகிறதோ என்று ஆதங்கப்பட வைக்கத்தக்க சில நிகழ்வுகளும் நடக்கின்றன. 

போரின் காரணமாக புலம்பெயர்ந்து,  தங்களையும் பலப்படுத்திக் கொண்டு விடுதலைப் போராட்டத்திற்கும் பலம் சேர்த்த ஒரு தலைமுறை, “நாட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும்” என்ற இன்னும் நிறைவேறாத வேட்கையுடன் முதுமையை நோக்கியும் மரணத்தை நோக்கியும் பயணித்துக் கொண்டிருக்கிறது. 

போரால் அழிவுண்ட எங்கள் தேசத்தை மீள கட்டியெழுப்ப வேண்டிய நிபுணத்துவத்தையும் நிதிவளங்களையும் இந்த புலம்பெயர்ந்த மக்கள் தம்மகத்தே கொண்டிருக்கிறார்கள்.  எங்கள் தேசத்தை ஆழமாக நேசிக்கும் இந்தத் தலைமுறைக்குப் பின்னர் வரும் தலைமுறைகள் அவர்களிற்கிருக்கும் அதேயளவு பற்றுடன் தாயகத்திற்கு உதவி செய்யப் போவதில்லை. 

நந்தவனம் செய்த அதே செயற்பாட்டை செய்யவல்ல ஒரு மக்கள் மைய்ய அமைப்பொன்றை கட்டியெழுப்புவதற்கான காலம் வந்துவிட்டது. மாகாண சபை செய்யும், பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்வினம், ஜனாதிபதியின் செயலணி செய்யும் என்று பார்த்துக் கொண்டிராமல், மக்களால் மக்களுக்காக இயங்கவல்ல மக்கள் மைய்ய அமைப்பு ஒன்றே, தாயகத்தின் தேவைகளை நிறைவு செய்ய புலம்பெயர் மக்களின் ஆற்றல்களை ஒருங்கிணைக்கும் பணியை திறம்பட ஆற்றும் என்ற சிந்தனை நோக்கி நாங்கள் பயணிக்க வேண்டும். 

தமிழகத்தில் ஓசூர் மாவட்டத்தில் இயங்கும் ஓசூர் மக்கள் சங்கத்தின் செயற்பாடுகள் நமக்கு ஒரு முன்மாதிரியாக அமையலாம். அரசாங்க அதிகாரிகளோடு இணைந்து, குளங்களை தூர்வாரி நீர்நிலைகளை தூய்மைப் படுத்துவது, டெங்கு ஒழிப்பு, வீதி விபத்துக்களை குறைப்பது, சூரிய மின்சக்தி திட்டங்களை அமுல்படுத்துவது, வரலாற்று மரபுகளை நினைவு கூறுவது என்று பல்வேறு அரிய நல்ல திட்டங்களை ஓசூர் மக்கள் சங்கம் வெற்றிகரமாக செயற்படுத்தி வருகிறது. 

“ஒசூர் மக்கள் சங்கத்தின் தாரக மந்திரம் - 
ஒருவரையும் -குறை -குற்றம் -கேலி செய்யாமல் , அரசு அதிகாரிகளுடன் இணைந்து நம் ஊர், நம் மக்கள் , நமக்காக என்ற ஒரே கோட்பாடுடன் அரவணைத்து சென்றால் எந்த ஒரு நல்ல விஷயத்தையும் சாதிக்க முடியும்”  என்று ஓசூர் மக்கள் சங்கத்தின் முகநூல், சங்கத்தினது நோக்கத்தை தெளிவாக பறைசாற்றுகிறது.

வெற்றி பெற்ற மக்கள் இயக்கங்களின் DNA என்று கருதப்படும் “For the People, By the People and Of the People, என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தான் தங்களது ஓசூர் மக்கள் சங்கம் அமைக்கப்பட்டுள்ளதாம். ஆதாவது, மக்களின், மக்களுக்காக மக்களால் !

Friday, 10 August 2018

கலைஞருக்கு ஓரு கடிதம்
கலைஞர் அவர்களே,

எண்பதாண்டுகளிற்கு மேலாக அயராது உழைத்த நீங்கள், மெரீனா கடற்கரையில், உங்கள் அண்ணாவிற்கு பக்கத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், உங்களுக்கு கடிதம் எழுதி அலுப்பு தாறது பிழையா என்று ஒருக்கா யோசித்தேன். 

இப்ப எழுதாவிட்டால் எப்ப எழுதுவது என்று யோசித்து விட்டு, உங்களை, உங்களது தமிழை, உங்களது அரசியல் பயணத்தை தூர நின்று, தொலைக்காட்சியில் பார்த்தும், வானொலியில் கேட்டும், பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் வாசித்தும், அறிந்த ஒரு சாதாரண புலம்பெயர் தமிழனாக இந்தக் கடிதம் எழுதத்  தொடங்கினேன்.

கடிதம் எழுதுவது உங்களுக்கு கை வந்த கலை. நாள் தோறும் முரசொலியில் உங்களது கட்சியினருக்கு நீங்கள் எழுதிய “என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே” என்று விளித்து எழுதிய கடிதங்கள் பொக்கிஷங்கள், எண்ணிக்கையடிப்படையில் அது ஒரு உலக சாதனையாகக் கூட இருக்கலாமாம்.

எந்தப் பிரச்சினை வந்தாலும் நீங்கள் முதலில் தூக்கும் ஆயுதம் கடிதம் தான். தமிழீழத்தில் இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அந்த யுத்தத்தை இந்திய மத்திய அரசு தலையிட்டு நிறுத்தச் சொல்லி, நீங்கள் கடிதம் கடிதமாக எழுதிக் கொண்டேயிருந்தீர்கள். 

ஏப்ரல் 22, 2009 அன்று உங்கள் உடன்பிறப்புக்களிற்கு எழுதிய விரிவான கடிதத்தில் “எனக்கு வழி தெரியவில்லை- பொறுப்பான இடத்தில் இருக்கிறோமே- கையறு நிலையில் நம் இனத்தைக் காப்பாற்ற இயலாத வகையில் இருக்கிறோமே” என்று உங்களது இயலாமையை வெளிப்படையாக அறிவித்துவிட்டு, ஈழத்தில் நடைபெறும் கொடூரத்தை தாங்க முடியாமல் இருக்கும் உங்கள் மனவேதனையை கொட்டித் தீர்த்தீர்கள். 

உங்களது நிலைமையை உணர்வோடு பதிவுசெய்த இந்தக் கடிதம் எழுதி ஜந்தாவது நாள், ஏனோ நீங்கள் திடீரென முடிவெடுத்து, காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில், மரீனாவில், மனைவியாரும் துணைவியாரும் புடைசூழ, உண்ணாவிரதம் இருந்த அந்தக் காட்சிகள் தான் இன்றுவரை எங்களோடு பயணிக்கின்றன. 

உங்களது இயலாமையை அறிவித்த தன்னிலை விளக்கம் மட்டுமல்ல, ஆண்டாண்டுகளாக நீங்கள் எங்களுக்காக செய்த போராட்டங்களும், இழந்த ஆட்சியும், கண்டும் காணாமலும் செய்த உதவிகளும், எங்கள் உயிரினும் மேலான தமிழ் மொழிக்கு நீங்கள் ஆற்றிய பங்களிப்பும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்ததும், என்று அனைத்தையுமே அந்த உண்ணாவிரத நாடகக் காட்சியால், எங்களது நினைவலைகளிலிருந்து அழிந்து விட்டது. 

தொண்ணூறுகளின் இறுதியில் இருந்து இந்திய மத்திய அரசில் செல்வாக்கு செலுத்த வல்ல ஒரு பிராந்திய தலைவராக உலாவந்த நீங்கள், எங்கள் இனம் யுத்தத்தில் அழிந்து கொண்டிருந்த போது கொடுத்த அழுத்தம் போதாது என்பதே இன்றும் எங்களது ஆறாத கவலையாக இருக்கிறது. உங்களது குடும்ப உறுப்பினர்கள் மீது சுமத்தப்படக்கூடிய ஊழல் வழக்குகளைக் காட்டி, பயமுறுத்தி உங்களை இந்திய மத்திய அரசு அடக்கி விட்டதாக எங்களில் பலர் இன்றும் நம்புகிறோம்.  

“அடைந்தால் திராவிட நாடு இன்றேல் சுடுகாடு” என்று முழங்கிய நீங்கள், மாநில ஆட்சியை தேர்தலில் வென்றது தொட்டு, மாநிலங்களின் உரிமைகளை வெல்வதற்கான ஒரு போராளியாகவே மாறினீர்கள். பஞ்சாபைப் போல் இயற்கை வளங்களும், கேரளாவைப் போல் மூளை வளமும், உத்தர பிரதேசத்தைப் போல அரசியல் பலமும் அற்று
பின்தங்கியிருந்த தமிழகத்தை, இந்தியாவின் முன்னனி மாநிலங்களில் ஒன்றாக மாற்றிய பெருமை உங்களையே சாரும் என்று பலரும் புகழும் போது, தனிநாடு கேட்டுப் போராடி, ஒரு மிகச்சிறந்த நிழல் அரசாங்கத்தையே நடாத்திக்காட்டிய எங்களின் இன்றைய கையறு நிலைமையை நினைத்து வேதனைப்படத் தான் முடிகிறது. 

1976ம் ஆண்டில், உங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்கில், இந்திரா காந்திக்கு பயந்து இந்தியாவின் பிரபல வக்கீல்கள் உங்களிற்காக வாதாட முன்வராத போது, உங்களிற்காக கட்டணம் எதுவும் வாங்காமல், பிரயாணச் செலவைக் கூட தானே ஏற்றுக் கொண்டு வாதாட வந்த வக்கீல்,  எங்கள் ஜீஜீ பொன்னம்பலம் என்பதையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

1977 ஓகஸ்ட் மாதம் ஈழத் தமிழ்மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் முதன் முதலாக பேரணி நடாத்தியதும் நீங்கள் தான். அந்தப் பேரணியை தொடர்ந்தே, தமிழீழத்தில் இயங்கிக் கொண்டிருந்த இயக்கங்களிற்கு தி.மு.க தலைவர்களும் தொண்டர்களும் அடைக்கலமும் ஆதரவும் தரத் தொடங்கினார்களாம். 

எண்பதுகளின் ஆரம்பத்தில் எங்களது விடுதலைப் போராட்டம் வீரியம் பெறத் தொடங்கிய காலங்களில், ஆகாஷவாணி செய்திகளிலும் மாநிலச் செய்திகளிலும், எங்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்தவர்களில் நீக்கமற நிறைந்திருந்த பலரில் நீங்களும் முக்கியமானவர். அன்றிலிருந்து யுத்தத்தின் இறுதிக் காலங்கள்  வரை உங்களை எங்களின் தீவிர ஆதரவாளனகாவே பார்த்து வந்தோம், அதனால் தான் என்னவோ உங்களில் அளவுக்கதிகமான நம்பிக்கையும் வைத்து விட்டோம். 

1990ம் ஆண்டு மார்ச் மாதம், இலங்கையிலிருந்து திரும்பிய இந்திய இராணுவத்தின் கடைசிப் படையணிக்கு, சென்னை துறைமுகத்தில் நடந்த வரவேற்பை புறக்கணித்து உங்களது இனப்பற்றை வெளிக்காட்டிய போது நாங்கள் மெய்யாகவே புளங்காகிதம் அடைந்தோம். அதற்கு முந்தைய மாதம் விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தையும் அரசியல்துறைப் பொறுப்பாளர் யோகியையும் நீங்கள் சந்தித்தது எம்மத்தியில் நம்பிக்கை கலந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 

ஐம்பதுக்கிலும் அறுபதுகளிலும் ஹிந்தி எதிர்ப்பு மொழிப் போருக்கு தி.மு.க அளித்த தலைமையால் ஆட்சிக் கட்டிலேறிய உங்களிற்கு, ஈழத் தமிழர் பிரச்சினையை நீங்கள் கையில் எடுத்த நாள் தொட்டு, ஆட்சியிழப்பும் அவப்பெயரும் தொடரத் தொடங்கின.  எங்களது பிரச்சினையை நியாயமாக கையாண்ட இந்திரா காந்தியும் MGRம் பொறுத்த நேரத்தில் இறந்து விட்டது எங்களது துர்ப்பாக்கியம் மட்டுமல்ல, உங்களது துர் அதிர்ஷ்டமும் தான். 

இந்தியா கன்னியாகுமரியில் முடியவில்லை, அங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது என்பதைக் காட்ட கன்னியாகுமரி கடற்கரையிலிருந்து இமய மலையை நோக்கிய வண்ணம், 133 அடி உயரத்தில் நிமிர்ந்து நிற்கும் வள்ளுவர் சிலையை நிறுவ உத்தரவிட்டீர்களாம். கன்னியாகுமரி வள்ளுவர் சிலையும் சென்னையில் இருக்கும் வள்ளுவர் கோட்டமும்,  இன்னும் பல தமிழ் மொழியினதும் இனத்தினதும் வரலாற்றை எடுத்தியம்பும் கட்டிடங்களும் நிகழ்வுகளும்
உங்கள் எண்ணத்தில் உதித்த தமிழ் அடையாளங்கள். 

எங்களை நம்பி, எங்களால் எங்களுக்காக நாங்கள் நடாத்திய விடுதலைப் போர், எங்களை மீறிய சர்வதேச சக்திகளாலும், எங்களுக்குள் நிகழ்ந்த சதிகளாலும், மெளனிக்கப்பட்டு, நாங்கள் எதிரியிடம் சிறைபடவும் சரணாகதியடையவும் காலம் (அவ)கோலம் போட்டது. காலம் போட்ட அந்தக் கோலத்தில், நீங்களும் நன்றாகவே அடி வாங்கினீர்கள். 

“மரணத்தினால் சில கோபங்கள் தீரும்,
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்”
என்று எழுதினார் கவிஞர் வைரமுத்து.  உங்களுக்கும் இது பொருந்தும் என்று நம்புவோம். நீங்கள் உங்கள் கடிதங்களை முடிக்கும் அதே சொற்களுடன் இந்தக் கடிதத்தையும் நிறைவு செய்வதே உங்களுக்கு செலுத்தும் இறுதி மரியாதையாகவும் இதய அஞ்சலியாகவும் இருக்கும். 

“விடைபெறுகிறேன்...”

Friday, 3 August 2018

சமைக்கப்போன தமிழன்
ஒஸ்ரேலியாவில் கடந்த ஒரு தசாப்தமாக தொலைக்காட்சியில் கோலோச்சிக் கொண்டிருக்கும், சிறந்த சமையற்காரனிற்கான போட்டியான Master Chefன் 2018ற்கான போட்டியில் வெற்றி பெற்றுள்ளார் சசி செல்லையா என்ற தமிழர். மதுரையை பூர்வீகமாகக் கொண்ட சசி, சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த மூன்றாம் தலைமுறைத் தமிழர்.

பன்னிரண்டாண்டுகள் சிங்கப்பூரில் சிறப்பு பொலிஸ் படையில் கடமையாற்றி விட்டு ஒஸ்ரேலியாவிற்கு  புலம்பெயர்ந்து, அடலெய்டில் சிறை அதிகாரியாக பணிபுரிகிறார், சசி செல்லையா. SBS தமிழ் வானொலியில் சஞ்சேயன் அண்ணாவுடனான நேர்காணலில் சசி கதைக்கும் தமிழ், அவரது சமையலைப் போலவே மிகவும் ருசிகரமாக இருப்பது மகிழ்ச்சி. 

ஒஸ்ரேலியாவில் இலங்கை இந்திய மக்களை “curries” என்று தான் நக்கலாக கூப்பிடுவார்கள். Toyota Camry என்றால் Curry Car, இந்திய இலங்கையர்கள் அதிகமாக வாழும் suburbsஐ Curry suburbs என்று நாங்கள் சாப்பிடும் கறியை வைத்து எங்களை மட்டம் தட்டும் இந்த மண்ணில், வெள்ளைக்கார நடுவர்களிற்கு கறி கறியாய் சமைத்துக் கொடுத்தே சசி செல்லையா வெற்றிக் கேடயத்தை தட்டிச் சென்றது பெருமை. 

ஒஸ்ரேலிய நாட்டவர்களின் தனிச்சிறப்பான பண்புகள் பலவற்றில் ஒன்று “fair go”, இன்னொன்று “reward for effort”. கறி என்றாலே முகத்தை சுழிக்கும் வெள்ளையர்கள் அதிகமாக வாழும் நாட்டில், கறுப்பான களையான ஒரு கறித் தமிழன், பல மாதங்களாக இரவு நேர ஒஸ்ரேலிய தொலைக்காட்சித் திரையை ஆக்கிரமித்திருந்தான், இறுதியில் வெற்றியும் பெற்றான் என்றால், அது ஒஸ்ரேலியர்களின் fair go மற்றும் reward for effortற்கு கிடைத்த நற்சான்றிதழ் என்பது, சந்தோஷம்.

தம்பி சசி செல்லையா வைத்த மதுரை கோழிக் கறி என்ன, ரசத்தில் போட்ட மீன் என்ன, காய்ச்சிய பாயாசம் என்ன என்று Master Chef 2018 எங்கும் எங்கள் பாரம்பரிய சமையல் மணம் தான். அம்மா சமைத்த கறி, அத்தை செய்த Dish என்று தனது குடும்ப நினைவுகளை Master Chefல் நினைவுகூர்ந்த வண்ணமும், எப்போதும் சிரித்த முகத்தோடும், தன்னம்பிக்கையோடும் தன்னடக்கத்தோடும், அவரது இரண்டு பெடியன்கள் சசியை உற்சாகப்படுத்திக் கொண்டேயிருக்க, ஒஸ்ரேலிய மக்கள் அனைவரதும் மனதை சசி செல்லையா வென்றார். 


எங்கள் வீட்டில் இரவு ஏழரை மணியானால் சின்னவன் சந்தோஷும் மனிசியும் தொலைக்காட்சிக்கு முன்னால் இருந்து விடுவார்கள். பிறகென்ன, “go Sashi go” முழக்கமும் “ஐயோ.. what has he done” என்ற ஆதங்கமும்,  “I want him to win.. கடவுளே” என்ற பிரார்த்தனைகளும் வீட்டை ஆக்கிரமிக்கும்.

Master Chef நிகழ்ச்சி பார்த்து முடித்த பிறகு மனிசியின் கண்ணில் பட்டால் அவ்வளவு தான். “நீரும் இருக்குறீரே.. ஒரு தேத்தண்ணி போடக் கூடத் தெரியாது” என்று நக்கல், பசிலன் ஷெல்லை போல பறந்து வரும். “Boys, don’t be like அப்பா, சமைக்க பழகுங்கோடா, I will teach you” பெடியளிற்கு அறிவுரை என்ற போர்வையில், சினைப்பர் என்னைத் தான் குறிவைக்கும். 

மனிசிமார் நக்கலடிக்கும் போதோ இல்லை ஏசும் போதோ “straight to the keeper” என்ற யுக்தியை பயன்படுத்த வேண்டும் என்பது  ஜொனியன்ஸிற்கு பாலர் வகுப்பிலிருந்தே பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடம். எவ்வளவு தான் பரி யோவான் அன்னை அடித்து அடித்து திரும்ப திரும்ப படிப்பித்திருந்தாலும், சில வேளை இந்த யுக்தி மண்டைக்குள் வர மறுக்கும் வேளைகளும் வந்து தொலைக்கும்.  

போன வருஷம் Master Chef நடந்து கொண்டிருந்த காலத்தில் தான் அந்த விபரீதம் நடந்தது. ஒரு நாள் மனிசி வேலையால் வர பிந்திவிட, “காட்டுறன் இவாக்கு இன்றைக்கு விளையாட்டு” என்று கறுவிக் கொண்டு, யாழ்ப்பாணக் கோழிக் கறி வைக்க வெளிக்கிட்டேன். 

Googleல் தேடி Youtubeல் யாரோ ஒரு டமிழன் ஜேர்மன்காரிக்கு Jaffna chicken curry வைத்துக் காட்டும் வீடியோவை மேலோட்டமாக பார்த்து விட்டு, Fridgeக்கால கோழியை எடுத்து, சுடுதண்ணியில் குளிப்பாட்டி, இளக வைத்துவிட்டு, கோழியை சின்னன் சின்னனாக வெட்டத் தொடங்கினேன்.

Master Chef பார்த்துக் கொண்டிருந்த சந்தோஷ் “அப்பா, what are you doing” என்று ஆச்சரியமாக கேட்டான். கோழிக் கறி வைக்கப் போறேன் என்று சொல்ல, “wow.. நா help பண்ணுறன்” என்று வந்தவனை, அன்பாக அடித்து கலைத்தேன். போகும் போது “by the way அம்மா doesn’t use that knife to cut chicken” என்று முதலாவது ஆப்பை அழகாக செருகினான். 

சின்னன் சின்னனாக வெட்டிய கோழித் துண்டுகளை “உறைப்புக்கூடிய யாழ்ப்பாணக் கறித்தூளில்” போட்டுப் பிரட்டி எடுத்தேன். கோழியை கறித்தூளில் ஊற விட்டு விட்டு, Facebookஐ திறந்து “Cooking Chicken tonight” என்று ஒரு postஐ போட்டு விட்டு, தாச்சியை அடுப்பில் வைத்து, கோழி வெட்டிய அதே கத்தியால் வெட்டிய வெங்காயத்தை, தாச்சியில் போட்டு வதக்க தொடங்கினேன். வெங்காயத்தின் மீது எங்கட வீட்டில் வளரும் கருவேப்பிலையையும் தூவி வாசனையை தூக்கினேன்.

வெங்காயம் நல்ல வதகி வரத்தான், rangehoodஐ போட மறந்தது ஞாபகம் வர “ஐயோ கடவுளே.. வீடே நாறப் போகுது” என்று பதறி அடித்து rangehoodஐ தட்டி விட்டு விட்டு, மெல்பேர்ண் கடுங்குளிர் வீட்டுக்குள் வந்தாலும் பரவாயில்லை என்று பின்கதவை திறந்து விட்டு விட்டு, சாம்பிராணி குச்சியை கொளுத்தி முன் வாசலில் வைத்து விட்டு, ஓடி வந்து, கொதிக்கும் தாச்சிக்குள் “உறைப்புக் கூடிய யாழ்ப்பாணக் கறித் தூளில்” ஊறிய  கோழியரை, இதமா பதமா இறக்கினேன்.

உறைப்பு ஊறிய கோழியை வதகிய வெங்காயத்தோடு பிரட்டி விட்டு, தண்ணி ஊற்றி கோழியை அவிய விடத் தொடங்கினேன். கறித்தூளில் உப்பு இருக்குமா இல்லையா என்ற சந்தேகம் வர, அகப்பையில் கொஞ்சமாக கறியை எடுத்து நக்கி பார்த்து விட்டு, உப்பை லாவகமாக தூவி கலந்து விட்டேன்.


கோழிப்பிள்ளையார் கொதி தண்ணியில் நல்லா அவிந்து விட்டதா என்று பரி சோதிக்க, கால் அவியல், அரை அவியல், முக்கால் அவியல் என்ற இடைவேளைகளில் தாச்சியில் இருந்தே கோழித்துண்டே அகப்பையால் எடுத்து, சுடச்சுட வாயில் போட்டு,  இடைக்கிடை ருசி பார்த்துக் கொண்டேயிருந்தேன். 


கோழித் துண்டுகள் அவிந்து விட்டது என்று தெரிந்ததும், தேங்காய்ப் பாலை விட தேங்காயப் பாலைத் தேடினால், சனியனைக் காணவில்லை. மனிசிக்கு Call பண்ணிக் கேட்டால் மானப்பிரச்சினை வேற என்று முடிவெடுத்து விட்டு, அரை டம்ளர் full cream பசும்பாலை, கறிக்குள் விட்டேன்.

பாலை விட்டிட்டு பார்த்தால், வெள்ளை வெள்ளளையா கறிக்கு மேல பால் மிதக்குது. அகப்பையில் எடுத்து விரலால் தொட்டு கறியை நக்கி பார்த்தால், உறைக்க வேண்டிய கறி இனிக்குது, “போச்சுடா பொன்னம்பலம்”.  படக்கென்று ஒரு கரண்டி “உறைப்புக் கூடிய யாழ்ப்பாணக் கறித்தூள்” போட்டுக் கலக்கியும் இனிப்புத் தன்மை எடுபட மறுத்தது. 

“என்ன இழவுடா இது” என்று மனம் பதைபதைக்க, கறிக்கு மேலால மிதந்த வெள்ளை திரவியத்தை, அகப்பையால் வடித்து எடுத்து இன்னொரு சட்டிக்குள் விடத் தொடங்கினேன். வெள்ளையர்களை கறியிலிருந்து வெளியேற்ற, என்னுடைய யாழ்ப்பாண கோழிக் கறியினது தனித்துவம் மிளிரத் தொடங்கியது. 

பரி யோவான் கிரிக்கெட் அணி Big Match வென்ற பெருமையை ஒத்த உணர்வோடு, கோழிக் கறியை அடுப்பால் இறக்கி, ரொட்டியையும் சுட்டு விட்டு, பெடியளை சாப்பிடக் கூப்பிட்டேன், “Boys, dinner is ready”.

iPadம் கையுமாக சாப்பிட வந்த மூத்தவன் பிரவீன், கண்ணை iPadலிருந்து ஏறெடுத்து, என்னுடைய அழகிய, வாசனை வீசும், உறைப்பான, திறமான கோழிக் கறியை, பார்த்து விட்டு கேட்டான்,

“அப்பா, what is this thingy..... !”

தமிழினத்திற்கும் எங்கள் பாரம்பரிய சமையலுக்கும் பெருமை சேர்த்த சசி செல்லையா ஒரு நிஜ ஹீரோ தான். ஒஸ்ரேலியாவில் Master Chef போட்டியில் வென்ற சசி செல்லையாவை தமிழ் கூறும் நல்லுலகம் தலைக்கு மேல் தூக்கி கொண்டாடுகிறது, கொண்டாடத் தான் வேண்டும். 


ஒஸ்ரேலியாவிற்கு புலம்பெயரும் வரை சமையலறை பக்கமே போகத சசி செல்லையா, ஆறு சொச்ச வருடங்களில் சமைக்கப் பழகி, ஒஸ்ரேலியாவின் 2018ம் ஆண்டுக்கான Master Chef ஆக வரமுடியும் என்றால்.. என்றால்.. என்றால்..  

 “ராசாத்தி.. அந்த தேங்காய் பால் tinஐ எங்க வைக்கிறனீர்?” 

பி.கு
SBS  வானொலிக்கு சசி செல்லத்துரை அளித்த செவ்வி.