Friday, 13 July 2018

கீழடியில்...

“ஆராய்ச்சி நடக்கிற இடம் தானே.. இப்படியே மூணு கிலோ மீட்டர் போனா.. ரைட்ல வீரலட்சுமி டீ ஸ்டால் வரும்.. அந்தண்டை போற பாதையால போங்க” சனிக்கிழமை காலை வேளை, மதுரை ரோட்டோரத்தில் வீதிப் போக்குவரத்தை கண்காணித்துக் கொண்டிருந்த, முறுக்கு மீசை வைத்த காவல்துறை அதிகாரிகள் இருவர் மகிழ்வோடு எங்களுக்கு வழிகாட்டினார்கள்.

வறண்டு கிடந்த வைகை ஆற்றின் தடத்தையும், மறுபக்கத்தில் ஒரே நேரத்தில் நான்கு கிரிக்கெட் ஆட்டங்கள் அரங்கேறிக் கொண்டிருந்த ஆண்டுக்கணக்காக தண்ணீரையே காணாத தெப்பைக் குளத்தையும் தாண்டி,  கீழடி கிராமத்தை நோக்கி முன்னேறினோம்.

சில மாதங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்து தம்பிமார்  சுஜீந்தன் பரமேஸ் மற்றும் நீதுஜன் பாலா எழுதிய “அலை அழித்த தமிழ்” எனும் தமிழர்களின் பண்டைய வரலாற்றை சுவாரசியமாகவும் கனக்க கற்பனை கலந்தும் எழுதிய அருமையான புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கும் நாட்களில் தான், தம்பி ஜேகேயின் முகநூலில் எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் மெல்பேர்ணில் கீழடி அகழ்வாராய்ச்சி பற்றி பேசப் போவதாக அறிந்து, அந்தக் கூட்டத்திற்கு போனேன். 
“இப்படியேஏஏஏ நெடுக போங்கண்ணே...” வீரலட்சுமி டீ ஸ்டால் அடியில், குறுக்கே வந்த ஒரு குட்டி truck driver வழி சொன்னார். குறுகிய தெருவிற்குள் கார் நுழைய, சற்று தூரத்தில் மணற் தெருவும் மரங்களும் எம்மை கிராமத்திற்குள் அழைத்துச் சென்றன. 

மண்டபம் நிறைந்த மெல்பேர்ண் கூட்டத்தில், எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் கீழடி அகழ்வாய்வின் வரலாற்றை விரிவாக சொன்னார். நமது சங்க இலக்கியங்களில் வருகின்ற நகர அமைப்பு தமிழகத்தில் இருந்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள், மதுரைக்கு அருகில் இருக்கும் கீழடியில் இடம்பெறும் அகழ்வாராய்ச்சியில் கிடைத்திருக்கின்றன என்றார் எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன். 

ஒடுங்கிய மண் வீதியில், தன்னுடைய phoneஐ பார்த்து சிரித்துக் கொண்டே தன்னிலை மறந்து நடந்து வந்து கொண்டிருந்த தம்பியை நிற்பாட்டி மீண்டும் வழியை உறுதி பண்ணினோம். “நேரா போனீங்னா.. ஹைவே வரும்.. அதில ஏறி.. ரைட்ல இறங்குங்க.. ஒரு மசூதி வரும்.. அதான்ட கேளுங்க.. காட்டுவாங்க” phone தம்பி வழி சொல்லி விட்டு மீண்டும் phoneஐ பார்த்து சிரித்துக் கொண்டே நடையை கட்டினான்.
ஆழக் கடலெங்கும் சோழ மகராஐனும் எங்கள் கரிகாலனும் ஏறிநடந்து ஆட்சி புரிந்த கடல், வரலாற்றின் முக்கிய திருப்பங்களில் எவ்வாறெல்லாம் தமிழர்களிற்கு எதிரியாக மாறியது என்பதை புனைவு கலந்து “அலை அழித்த தமிழ்” புத்தகம் விபரித்திருக்கும். சங்ககாலத்தில் வைகை ஆறு கீழடி வரை வியாபித்திருக்க, வைகை ஆற்றில் பயணித்து கடலில் சங்கமித்து, கிரேக்க ரோமானிய சாம்ராஜ்ஜியங்களோடு தமிழர்கள் வியாபாரம் செய்ததற்கான ஆதாரங்களும் கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப் பெற்றுள்ளனவாம். 

மசூதியிற்கு எதிர்புறம் கூட்டமாக சிறுவர்கள் நிற்க, அவ்விடத்தில் நின்ற பெரியவர் ஒருவரை வழி கேட்டோம். “ஆராய்ச்சி நடக்கிற இடத்திற்கா போறீங்க” சிறுவர்கள் உற்சாகமாக குரலெழுப்பினார்கள். “அதோ.. அதில தெரியுற தென்னந்தோப்பு தான்.. அங்கன போங்க” பெரியவரை கதைக்க விடாமல், தாங்களே வழிகாட்டி விட்டு, காரிற்கு பின்னாலே சத்தமிட்டுக் கொண்டே சிறுவர்கள் ஓடி வந்தார்கள்.


“வரிசை வரிசையாகக் கால்வாய்கள், பெரிய தொட்டிகள், தண்ணீர் உள் செல்லவும் வெளி வருவதற்குமான அமைப்புகள், உலைகள், வட்டக்கிணறுகள், மூடிய வடிகால்கள், திறந்த வடிகால்கள், சுடுமண் குழாய்களால் ஆன வடிகால்கள் என முழுமையான நகர அமைப்பை உறுதி செய்யும் சான்றுகள், தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக கீழடியில் தான் கிடைத்திருக்கிறது” என்கிறது கீழடி அகழ்வாராய்ச்சியின் முக்கியத்துவத்தை தமிழர்கள் அறிய பரப்புரையில் ஈடுபடும் மக்கள் கலை இலக்கிய கழகம், மதுரை எனும் அமைப்பு.

ஒரு பெரிய கிணற்றடியில் காரை நிறுத்திவிட்டு, டிரைவர் நஸீரோடு தென்னந்தோப்புக்குள்ளால் நடக்க தொடங்கினோம். அகழ்வாராய்ச்சி தளம் என்ற பெயர்பலகையை தாண்டி போக, பெரிய மீசை வைத்த பெரியவரிடம் வந்த நோக்கம் சொல்ல, சிரித்துக் கொண்டே வரவேற்று, அகழ்வாராய்ச்சி  நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். “ஒம்பது மணிக்கு இந்த கவர் எல்லாம் எடுத்திடுவாங்க..” என்று அகழ்வாராய்ச்சி குழிகளை மூடியிருந்த நீல நிற தரப்பாள்களை காட்டினார். 

ஒரு பக்கத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சட்டி பானையின் துண்டுகள் குவிக்கப்பட்டிருக்க, டிரைவர் நஸீர் ஆர்வத்தோடு ஓடி ஓடி படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். “சார்.. படம் எடுக்காதீங்க சார்.. போர்டு போட்டிருக்கு பார்க்கல்லயா” என்றவாறே மெல்லிய உயரமான ஒரு மனிதர் பணிவாகவும் உறுதியாகவும் கட்டளையிட்டார். அவரை மெல்ல அணுகி விசாரித்ததில் அவர் தான் அந்த தளத்தின் மேற்பார்வையாளர், ஆறு வருடங்களாக கீழடியில் இடம்பெறும் அகழ்வாய்வு தளத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

“Controversy created awareness” என்று நறுக்கென்று சொல்லி, கீழடி அகழ்வாய்வுற்கு இந்திய மத்திய அரசு கொடுத்த இடைஞ்சல்களைப் பற்றிய செய்திகள் தொடர்பாக விசாரித்ததற்கு சாணக்கியமாக பதிலளித்தார். “இந்த இடத்தில் ஒரு industry இருந்திருக்கு, அதற்கான சான்றுகள் நிறையவே கிடைத்திருக்கு, அநேகமாக அது நெசவு தொழிற்சாலையாக இருக்கலாம்” என்றார். தமிழகத்திலிருந்து கடல்வழியாக கிரேக்கத்திற்கும் ரோமிற்கும் பட்டாடைகள் ஏற்றுமதியான வரலாற்றை உறுதிப்படுத்த நிறைய சான்றுகள் கிடைத்துள்ளனவாம்.

கீழடியை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து சுமார் 30 பேர் அந்த தனியாருக்கு சொந்தமான தென்னந் தோட்டத்தில் இடம்பெறும் அகழ்வாய்வு பணிகளில் வேலைக்கமர்த்தப்படுள்ளனர். “டீச்சர் ஒருத்தர்  தன்னார்வத்தில் செய்த ஒரு அகழ்வில் சில பண்டைய மட்பாண்டங்கள் வெளிவர.. கீழடி அகழ்வாய்வு திட்டம் தொடங்கியது” என்று இந்த திட்டத்தின் ஆரம்பம் பற்றி மேற்பார்வையாளர் தம்பி விபரித்தார்.

நீலத் தரப்பாள்களை வேலையாட்கள் ஒவ்வொரு கிடங்காக விலக்க, ஒரு சுடு கிணறு அப்படியே வெளிப்பட்டது. இன்னொரு கிடங்கில் அடுப்பு ஒன்று தென்பட்டது. அவற்றை படம் பிடிக்க அனுமதி கேட்க, மேற்பார்வையாளர் தம்பி பணிவாக மறுத்து விட்டார். மேற்பார்வையாளர் தம்பிக்கு கொடுத்த அன்பளிப்பையும் அவர் ஏற்க மறுத்து விட்டு, தான் இதை ஒரு கடமையாக செய்யவில்லை, எங்களது வரலாறும் நாகரீகமும் சரியாக பதிவு செய்யப்பட வேண்டும் என்ற நோக்கில் தானாற்றும் பங்களிப்பாகவே இதை நோக்குவதாக அந்த மேற்பார்வையாளர் தம்பி சொல்லிக் கொண்டே போனார்.


மனித குலத்தின் முதல் நாகரீகமான சிந்து சமவெளி நாகரீகத்தை விட பழமையானது எங்களது தமிழர் நாகரீகம் என்பதற்கான ஆதாரங்கள், கீழடியில் கிடைக்கப்பெற்றுள்ளதாக சில ஆய்வாளர்கள் கருதுகிறார்களாம். இந்திய மத்திய அரசின் செயற்பாடுகளால் இடையில் நிறுத்தப்பட்டிருந்த அகழ்வாய்வு, தமிழ் நாட்டில் எழுந்த எதிர்ப்பலைகளால் தமிழக அரசு பொறுப்பெடுத்து மீண்டும் கடந்த மார்ச் மாதம் முதல் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஆண்டாண்டு காலமாக நம் மூதாதையர் வாழ்ந்த எமது தாயக நிலத்தில் அந்நியர் எங்களையே ஆள விட்டு விட்டு, ஆண்ட பரம்பரை ஆளவும் தெரியாமல் அடங்கிப் போய் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், ஈராயிரம் ஆண்டுகளிற்கு முன்னர் நம் முன்னோர்களே இந்த உலகத்தின் நாகரீகத்தின் முன்னோடிகள் என்பதை கீழடி மீண்டும் ஒருமுறை உரக்க கூவி நிற்கிறது. 

நம்மினத்தின் பெருமையை உலகம் ஏற்பது ஏற்காது இருப்பதை விடுவம், முதலில் நம்மினத்தின் பெருமையை நாங்கள் கொண்டாட வேண்டும். மதுரைக்கு போனால், ஒரு எட்டு கீழடிக்கு போய் பார்த்து விட்டு வாருங்கள், பண்டைத் தமிழனின் பெருமையை உணர்வீர்கள். 

மேலதிக தகவல்கள் 


No comments:

Post a Comment