Friday, 6 July 2018

மதுரைக்கு போனேனடி..“பாண்டியர்களிற்கு இவ்வளவு bias ஆன ஒராளை இன்டைக்கு தான் சந்திக்கிறன்” என்று எங்களுடைய மதுரை வழிகாட்டி Guide  முத்துவிற்கு சொல்லும் போது, வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணியிருக்கும், மதுரை மீனாட்சி அம்மனின் வடக்குப்புற வெளி வீதியில் சனக்கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது.

அதற்கு இரண்டு மணித்தியாலங்களிற்கு முன்னர், எங்களோடு  நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் வந்து Guide முத்து இணைந்திருந்தார். காரின் முன் ஆசனத்தில் ஏறி,  ஆசனத்தின் Head restஐ கழற்றி வைத்து விட்டு, பின் ஆசனத்தில் இருந்த எங்கள் பக்கம் திரும்பி, மதுரையின் ஈராயிரம் வருட வரலாற்றை சுருக்கமாகவும் அழகாகவும் Guide முத்து சொல்லிக் கொண்டு வந்தார். 

“Leftல் cut பண்ணு.. Rightல வா” என்று Driver நஸீமுக்கு சொல்லிக் கொண்டே, Guide முத்து  சொன்ன தமிழகத்தின் பண்டைய வரலாற்றை, தமிழ் வளர்க்க சங்கம் அமைத்த மதுரை தெருக்களில் மீண்டும் கேட்க கேட்க சந்தோஷமாகவிருந்தது. 

கையிலிருந்த Phoneஐயும் காலிலிருந்த செருப்பையும் ஒரு பையில் போட்டு அதற்கான காப்பகத்தில் கொடுத்து, token வாங்கிக் கொண்டு வடக்கு கோபுர வாசலினூடாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிற்குள் காலடி எடுத்து வைத்தோம். 

வாயில் கடந்ததும் ஒரு ஓரமாக நின்று கொண்டே, கடம்பவனத்தில் இந்திரன் வணங்கிய சுயம்புலிங்கம் தான் மதுரை ஆலயத்தின் மூலம் என்று Guide முத்து கதை சொல்லத் தொடங்கினார்.
கிட்டத்தட்ட 1,600 வருடங்கள் பழமை வாய்ந்த இந்தக் கோயில் கிட்டத்தட்ட 15 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளதாம். நான்கு திக்குகளிலும் எட்டு கோபுரங்களும் இரண்டு விமானங்களும் கம்பீரமாக வீற்றிருக்கும் இந்தத் தலம், பல்வேறு காலங்களில் வெவ்வேறு மன்னர்களால் கட்டப்பட்டதாம் என்று, ஆங்கிலமும் தமிழும் கலந்து Guide முத்து வகுப்பெடுத்தார்.

எட்டுக் கோபுரங்களில் மிக உயரமான (160 அடிகள்) தெற்கு கோபுரத்தடியில் வந்து நின்று, கோபுரத்தில் நிறைந்துள்ள சிற்பங்களை காட்டி “இதில இருக்கிற எல்லா sculpturesம் கீழ பார்க்கிற மாதிரி தான் செய்திருக்கிறாங்க” என்றார். உண்மை தான் முதலாவது வரிசையில் இருக்கும் சிற்பத்தின் கண்ணும் கீழ் நோக்கி தானிருந்தது, அதற்கு மேல் வரிசையிலிருந்த எல்லா சிற்பங்களும் அவ்வாறே கீழ் நோக்கியே பார்த்துக் கொண்டிருந்தன. 

“மதுரை என்றால் மீனாட்சியின் ஆட்சி தான், அதனால தான் உங்க வீட்ட மீனாட்சி ஆட்சியா இல்லை சிதம்பரம் ஆட்சியா என்று கேட்பாங்க” என்று சொல்லி சிரித்து விட்டு,  Guide முத்து எங்களை மீனாட்சி அம்மன் சந்நிதிக்கான special வரிசையில் நூறு ரூபாய் பணம் கட்டி சேர்த்து விட்டார். 

வரிசையில் போய் அம்மனை தரிசிக்க போனால், மிகவும் பணிவாகவும் அன்பாகவும் வரவேற்ற ஐயர்மார், பெயர் நட்சத்திரம் கேட்டு “தீபாரத்தி காட்டறன்.. போய் பாருங்கோ..” என்று எங்களுக்கு சொல்லி விட்டு “தோ.. இவாள மறுபடி.. விடுங்கோ” என்று காவலாளிகளிடம் சொல்லி எங்களை வரிசையின் இடை நடுவில் மீண்டும் இணைத்து விட்டார். எல்லாப் புகழும் தட்சணைக்கே.


உலக அதிசயங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட போட்டி போட்ட மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் புதைந்திருக்கும் பல அதிசயங்களை Guide முத்து ஒவ்வொன்றாக காட்டி விளக்கம் தந்து கொண்டு வந்தார். எந்தத் திக்கிலிருந்து பார்த்தாலும் ஒரே முகம் காட்டும் கூரையில் வரையப்பட்ட சிவலிங்க ஓவியம், முழுவதும் மரகதக் கற்களான (emerald stone) மீனாட்சி அம்மனின் விக்கிரகத்தை செதுக்க முதல் பரீட்சார்த்தமாக செதுக்கிய மூன்று prototypes, கோயிலின் கொடிக் கம்பத்தின் சக்தி, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட அழகிய உயிரோட்டமுள்ள சிற்பங்கள் என்று ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே வந்தோம்.

மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணத்தின் கதையை சொல்லி, அழகர் ஆற்றில் இறங்குவது ஏன் என்பதையும் விளக்கினார். திருமணத்திற்கு வந்த பக்தர்களின் தாகம் தீர்க்க சிவன் உருவாக்கிய கங்கை தான் வைகை ஆறு என்று சொல்ல, வரும் வழியில் கண்ட காய்ந்து வரண்டு போய் இருக்கும் வைகை ஆற்றின் தடம் தான் நினைவில் வந்தது. 

கோயிலை தரிசித்து விட்டு வெளியே வந்து ஆயிரம் கால் மண்டபத்தையும் சென்று பார்த்தோம். குறுக்கு நெடுக்காகவும் எந்தப் பக்கமிருந்து பார்த்தாலும் ஒரே நேர் கோட்டில் அமைக்கப்பட்டிருந்த ஆயிரம் தூண்களில் இருக்கும் சிற்ப வேலைப்பாடுகள் ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்ததாம். 

“முத்து... அடுத்தது ஜிகர்தண்டா” என்று Guide முத்துவிடம் வேண்டுகோள் வைக்க, “வாங்க சார் வாங்க.. கூட்டி போறன்” என்று கொண்டே தனது சப்பாத்தை காலில் அணிந்து கொண்டார். மதுரை அம்மன் கோயிலை சுற்றியுள்ள குறுந்தெருக்களில் நடக்க மதுரை மல்லிகைப் பூவின் மணம் கமகமத்தது. எதிர்ப்பட்ட பல ஜிகர்தண்டா கடைகளைத் தாண்டிச் சென்று அந்த சிறிய ஒரிஜினல் “ஃபேமஸ் ஜிகர்தண்டா” கடைக்கு போய்,  “கடவுளே என்ற வயிறு பத்திரம்” என்று மனதுக்குள் செபித்துவிட்டு, ஆசை தீர ஜிகர்தண்டா சாப்பிட்டோம்.
கோயிலுக்கு போகும் வழியில் இருந்த அரிய நல்ல புத்தகங்களுடன் காட்சியளித்த புத்தகக்கடை பூட்டியிருந்தது ஏமாற்றமக்க, “சார்.. உங்க மேடத்திற்கு மதுரை சுங்கடி சாரீஸ் வாங்க போறீங்களா” என்று ஞாபகப்படுத்தி, Guide முத்து திருமண வாழ்க்கையை காப்பாற்றும் ஆபத்பாண்டவனாக அவதாரம் எடுத்தார். 

நிலத்தில் இருந்து, சேலைகளை விரித்து design பார்த்து, Head pieceன் அழகு பார்த்து, விலை பேசி, தன்னந்தனியாக முடிவெடுத்து வாங்கிய இரு சுங்கடிச் சேலைகளில் ஒன்று மட்டும் மனிசிக்கு பிடித்ததே, ஒரு வாழ்நாள் சாதனை தான்.

“சார்.. பரோட்டா சாப்பிடேல்லயா” காரில் ஏறினதும் driver நஸீர் கேட்டார். “Be vegetarian, don’t play with அம்மன்” என்று அன்று காலை அம்மாவிடமிருந்து வந்திருந்த WhatsApp பயமுறுத்த, “பரோட்டா கடையை மட்டும் காட்டுங்க பாஸ்.. ஒரு ஓரமா நின்டு பரோட்டா போடுறதை பார்த்துவிட்டு போவம்” என்று மதுரை பரோட்டா சாப்பிட கெலிப்பட்ட நாக்கிற்கு சமாதானம் சொன்னேன். 

“சார்..தஞ்சை temple is a monument for ராஜராஜன்.. மதுரை temple is an authentic spiritual site” என்று தொடங்கி, தஞ்சை கோயிலை கொஞ்சம் தாழ்த்தியும் மதுரை கோயிலை ஆகலும் உயர்த்தியது Guide முத்து முன்வைத்த வாதங்கள் சுவாரசியமானவை. தஞ்சை பெருங் கோயிலில் இன்றும் ராஜராஜனின் ஆத்மா வாழ்வதால் அங்கு செல்லும் தலைவர்களின் பதவிகள் பறிபோகும் என்ற தமிழகத்தில் உலாவும் நம்பிக்கை பற்றியும் Guide முத்து சொன்னார்.

“முத்து, நாங்க சோழரின் side தான்” என்று சொல்லி “சோழம்.. சோழம்..சோழம்” என்று ராஜராஜனின் மெய்காவல்படை செய்வது போல் நெஞ்சில் குத்தினேன். “புலிச் சின்னம், கடற்புறா இதெல்லாம் விடுதலைப் புலிகள், சோழர்களிடமிருந்து தான் எடுத்தவங்கள்” என்று சொல்ல, “ஆமா சார் ஆமா சார் “ என்று அந்த உரையாடலை தொடர விரும்பாமல், பாண்டியர்களின் பெருமை பேசுவதை தொடந்து கொண்டே போனார் எங்கள் Guide முத்து.

நகரங்களிற்கு ஒரு குணமுண்டு, அதை உணர வீதிகளில் உலாவ வேண்டும். நகரங்களின் காற்றின் மணமும், நகரத்தாரின் பேச்சும் வழக்கும், அதைக் காணும் போது நெஞ்சில் எழும் எண்ணங்களும், அந்த நகரத்தின் குணத்தை நமக்கு உணர்த்திவிடும். 

“மதுரை is one of the two living ancient cities in India” என்னு Guide முத்து சொன்னார், உண்மை தான். மதுரையில் உலா வந்த போது ஒரு வகை vibeஐ உணரக்கூடியதாக இருந்தது, அந்த vibe மதுரை அம்மன் சந்நிதியில் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. மீண்டும் ஒரு முறை மதுரை வர வேண்டும் என்று அந்த vibe இன்றும் துருத்திக் கொண்டிருக்கிறது. 

திரும்பவும் மதுரைக்கு போக வேண்டும், மதுரை மீனாட்சி அம்மன் சந்நிதி ஏக வேண்டும், சாப்பிடாமல் வந்த அந்த பரோட்டா சாப்பிட வேண்டும், அதுவும் விக்ரம் வேதா படத்தில் வாற மாதிரி நெல்லிக் கறியோடு பரோட்டா சாப்பிட வேண்டும், மணிரத்தினத்தின் உயிரே படத்தில் வரும் கண்ணாளனே உட்பட பல பாடல்கள் காட்சியமைக்கப்பட்ட நாயக்கர் மஹால் போய்ப்
பார்க்க வேண்டும்,  நண்பன் பரணி சொன்ன கோனார் கடைக்கும் போக வேண்டும். 


நீண்டு கிடக்கும் 
வீதிகளும் - வான் 
நிமிர்ந்து முட்டும் 
கோபுரமும் ! 

ஆண்ட பரம்பரை 
சின்னங்களும் - தமிழ் 
அழுந்தப் பதிந்த 
சுவடுகளும் ! 

காணக் கிடைக்கும் பழமதுரை
(கவிஞர் வைரமுத்து)

6 comments:

 1. Enjoyed your writing machchan...keep continuing.......

  ReplyDelete
 2. Superb டா....இந்த இடங்களை பார்க்க, அந்த வீதிகளை அனுபவிக்க, காலம் இன்னும் அமையவில்லை, இத வாசிக்க, போக வேண்டிய அவசியம் உணர்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. நிட்சயமாக உனக்கும் ஒரு காலம் வரும். நீயும் அந்த அனுபவத்தை உனது பாணியில் பதிவு செய்வாய். அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்

   Delete
 3. எனது சொல்லை விட உங்களது வாசிப்பு நடை மிகவும் அருமை மீண்டும் சந்திக்க காத்திருக்கிறேன் சோழற் கதையுடன்.

  ReplyDelete
  Replies
  1. நிட்சயமாக மீண்டும் வருவோம்

   Delete