Friday, 22 June 2018

பரி யோவான் பொழுதுகள்: அந்தக் காலத்தில..“அந்தக் காலத்தில், ஒரு அலுவலிற்கு யாழ்ப்பாண கச்சேரிக்கு போயிருந்தன்” பரி யோவான் நண்பன் ஒருவரின் தந்தையை அண்மையில் யாழ்ப்பாணத்தில் சந்தித்த பொழுது கதை சொல்லத் தொடங்கினார். 

“அதில இருந்த officer, உங்கட பிள்ளையள் எங்க படிக்கீனம் என்று கேட்டார்.. சென் ஜோன்ஸில என்டு சொன்னன்.. உடன அவர் எழும்பி..சென் ஜோன்ஸிலயா உங்கட பிள்ளையள் படிக்கீனம்.. வாங்கோ உள்ளுக்க.. இந்தாங்கோ கதிரை.. இருங்கோ..” என்று நண்பனின் அப்பர் அந்தக் காலத்தில் கச்சேரியில் தனக்கு கிடைத்த வரவேற்பை நினைவு கூர்ந்து கொண்டு போனார்.

பள்ளிக்கூடத்தைப் பற்றி புளுகுவது ஜொனியன்ஸிற்கு மட்டுமல்ல, ஜொனியன்ஸின் அப்பாமாருக்கும் தொற்றியுள்ள வியாதி என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். தனது இரண்டு பெடியளையும் பரி யோவானில் படிப்பிக்க அனுப்பிய தந்தை, இன்றும் தனது மகளின் குடும்பத்தோடு யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வருகிறார்.

கொஞ்ச நேரத்தில் ஐயாவின் பேரன், மகளின் மகன், பக்கத்தில் இருந்த கதிரையில் வந்தமர்ந்தான். “தம்பி எங்க படிக்கிறீர்.. சென் ஜோன்ஸ் தானே” என்று அறிந்த விடையே அவனது வாயிலிருந்து வரவேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டே கேள்வியை கேட்டேன். குட்டித் தம்பியோ குண்டைத் தூக்கித் தலையில்  போட்டான், “இல்லை.. கொக்குவில் ஹிண்டு”.

“சென் ஜோன்ஸ் இப்ப முந்தி மாதிரி இல்லையாம்” சற்று முன்னர் பெருமையால் பொங்கி வழிந்த ஐயாவின் குரல் தளர்ந்தது. “நல்லா விழுந்திட்டுதாம்..பிள்ளையளை அங்க அனுப்ப வேண்டாம் என்று சனம் குசுகுசுக்குது” என்ற ஐயாவின் வார்த்தைகளில் கவலை இரையோடியிருந்தது.

ஐயா சொல்லுற அந்தக் காலத்தில், பரி யோவான் எப்படி இருந்தது? பரி யோவானின் மாட்சிமை நிறைந்த காலங்கள் என்று எதை அதன் பழைய மாணவர்கள் இன்றும் நினைத்து நினைத்து அங்கலாய்க்கிறார்கள்? போரும் புலப்பெயர்வும் இடப்பெயர்வும் அழித்து விட்டு சென்ற அழிவுகளில் பரி யோவானும் அடங்கி விட்டதா?

அந்தக் காலத்தில் பரி யோவான் கல்லூரி, கல்வி, விளையாட்டு, ஒழுக்கம் என்ற மூன்று துறைகளிலும் யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி, இலங்கையிலும் முன்னனி வகித்த பாடசாலைகளில் ஒன்றாக திகழ்ந்தது. 

சாதாரணதர (O/L) உயர்தர(A/L) பெறுபேறுகளில், யாழ் மாவட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் பாடசாலைகளின் தரவரிசையில், ஹாட்லி, யாழ் இந்துக் கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரிகளோடு, பரி யோவானும் மல்லுக் கட்டிக் கொண்டு தானிருந்தது. 

இலங்கை பல்கலைக்கழகங்களின் மருத்து பீடங்களிற்கு அதிகளவான மாணவர்களை பரி யோவானே அனுப்பி வைக்கும்.  யாழ் இந்துவிலிருந்து கட்டுபத்தைக்கு ஐந்து பஸ்கள் நிறைய இந்துவின் மைந்தர்கள் போகிறார்கள் என்றால், அவர்களை கலைத்துக் கொண்டு இரண்டு பேரூந்துகளில் பைலா பாட்டு பாடிக் கொண்டே ஜொனியன்ஸ் என்ஜினியரிங் படிக்க வந்து கொண்டிருப்பார்கள். 

கிரிக்கெட்டில் யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை பரி யோவான் அணி முன்னனியில் இருக்காத வருடங்களை, கடந்த நூற்றாண்டில் விரல் விட்டு எண்ணலாம். உதைபந்தாட்டத்தில், பற்றிக்ஸ், ஹென்றீஸ் அணிகளிற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்ததும் பரி யோவான் அணி தான். 1986ல் இயக்கத்தின் SOLT நடாத்திய பண்டிதர் கிண்ண கோப்பையை பார்த்திபன் தலைமை தாங்கிய பரி யோவான் அணி கைப்பற்றியது வரலாறு. 

கல்வி, விளையாட்டு இரண்டிலும் கலக்கிக் கொண்டு, ஒழுக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்த கல்லூரியாக பரி யோவான் திகழ்ந்ததால் தான், பரி யோவான் கல்லூரியில் தங்களது பிள்ளைகளை சேர்க்கப் பெற்றோர்கள் முண்டியடித்தார்கள். வேலை நிமித்தம் பிற மாவட்டங்களில் வேலை செய்த பெற்றோர், பிரிவுத் துயரை தாங்கிக் கொண்டு தங்களது பிள்ளைகளை பரி யோவானின் விடுதியில் சேர்த்தது, தங்கட பெடியனை பரி யோவான் அன்னை ஒரு நல்ல முழுமையான மனிதனாக மாற்றி விடுவாள் என்ற அபரிதமான நம்பிக்கையில் தான். 

பரி யோவானில் இணைவதும் லேசுப்பட்ட விடயமாக இருக்கவில்லை. 38பேர் மட்டும் படிக்கும் பாலர் வகுப்பில் இணைவதே ஒரு வரம். அதன் பின்னர் நாலாம் வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலும் நடக்கும் கடுமையான போட்டி நுழைவுத் தேர்வுகளின் அடிப்படையில் தான் admission கிடைக்கும். இடையில் 1983 இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட கொழும்பு மாணவர்களிற்கு பரி யோவானின் பெரிய கதவுகள் திறந்து விடப்பட்டது. 

Christian lore she gives her boys,
Ever prizing heavenly joys,
Her highest pride a noble mind,
Her Greatest joy a heart that’s kind
எனும் கல்லூரி கீதத்தின் வரிகளை நிஜமாக்கும் ஆயிரமாயிரம் மாணவர்களை அந்தக் காலத்தில் அந்த புனித வளாகம் உருவாக்கிக் கொண்டிருந்தது, இனியும் உருவாக்கும்.

பள்ளிக்கூடத்திற்கு ஒரு சில நிமிடங்கள் பிந்தி வந்தாலே கேட்டு கேள்வியில்லாமல் தண்டனை தான். நேரந்தவறாமையை (punctuality) பரி யோவான் மிகவும் இறுக்கமாக கடைபிடித்தது. Sports meet ஒன்றுக்கு பிரதம விருந்தினர் வருவது சற்றே பிந்தி விட, பிரதம விருந்தினர் இல்லாமலே March passஐ தொடங்கிய சம்பவத்தை பழைய மாணவர்கள் இன்றும் நினைவுறுத்துவார்கள். பள்ளியில் பழகிய இந்த punctuality எனும் “கெட்ட பழக்கத்தால்” திருமண வாழ்வில் பிந்தியே வெளிக்கிடும் மனைவிமாரோடு ஜொனியன்ஸ் படும் பாட்டை பராபரம் அறியாது. 

Peto Hallல் Upper Schoolற்கும் Williams Hallல் Middle schoolற்கும் ring இருக்கும் மரத்தடியில் Primary schoolற்கும் திங்கட்கிழமைகளில் assembly நடக்கும். முக்கியமான நிகழ்வுகளிற்காக Middle schoolம் Peto Hallற்கு வரும். 

மாணவர்கள் வந்து அமர்ந்ததும், Peto Hallன் பிரதான வாசலில் இருந்து, மண்டபத்தின் இரு கரைகளினூடாகவும் நடுவாலும் பரி யோவானின் பொலிஸ் (prefects) மிடுக்காக நடந்து வர, பிற்பக்கமிருந்து வரிசை வரிசையாக பேச்சு சத்தம் அடங்கிக் கொண்டு வந்து, மண்டபத்தை நிசப்தம் சூழ்ந்து கொள்ளும். ஆசிரியர்கள் மேடையில் வீற்றிருக்க, கறுப்பு மேலங்கியோடு அதிபர் மேடையேறி, ஆங்கிலத்தில் assembly நடந்தேறும். சிறப்பு உரைகள் தமிழிலும் இடம்பெறும்.  

பரி யோவான் காற்றிலேயே ஆங்கிலம் கலந்திருக்கும். பரி யோவான் மாணவர்களுக்கு ஆங்கில மொழியாற்றல் வளர்வதற்கு, பரி யோவானின் assemblyயும், ஆங்கிலத்தில் வரும் அறிவிப்புகளும், ஆங்கிலப் புலமை வாய்ந்த அற்புதமான ஆசிரியர்களும் தான் காரணம். 

Assembly முடிந்து வகுப்புக்கு திரும்பினாலோ, பாடசாலையின் முதலாவது மணி அடித்தாலோ, இடைவேளை முடிய மணி அடித்தாலோ, இல்லை அவசர staff meeting நடந்தாலோ, முழு பாடசாலையையும் கட்டுபாட்டில் வைத்திருப்பது பரி யோவானின் Prefects Guild தான். வகுப்புக்கு ஒரு monitor இருப்பான், வகுப்புகளிற்கு வெளியே Prefect ரோந்து போய்க் கொண்டிருக்க, பரி யோவான் வளாகம் அமைதியாக இருந்த அந்த கணங்களை மறக்கேலாது.

பரி யோவானின் அதிபர்களிற்கு அடுத்தபடியாக பரி யோவானின் Senior Prefectsற்கும் Cricket Captainsற்கும் தான் அதிகளவு மரியாதை இருந்தது. Senior Prefect ஆக வருபவரை அநேகமாக முழு பாடசாலையும் அறிந்திருக்கும், அவரது ஆளுமைக்கு பாடசாலை முழுவதும் கட்டுப்படும். 1985ல் அதிபர் ஆனந்தராஜா மாஸ்டரை படுகொலை செய்யப்பட்டவுடன் எழுந்த அசாதாரண சூழலில், ஆசிரியர்கள் சிலரும் பயம் காரணமாக தலைமறைவாகிவிட, பாடசலையை சில நாட்கள் கொண்டு நடாத்தியது நிஷான் கனகராஜா தலைமையிலான Prefects guild தான். 


வகுப்புக்கு வெளியே காவல் கடமை செய்த சில Prefects மார் இன்றும் ஞாபகத்தில் வருவார்கள். எட்டாம் வகுப்பில் “உஷ்ஷ்ஷ்” அடித்துக் கொண்டே ஸ்டைலாக நடந்து வந்த நேசக்குமார் அண்ணா, ஒன்பதாம் வகுப்பில் கஷ்டப்பட்டு முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு “உமக்கு எத்தனை தரம் சொல்லுறது” என்று வெருட்டிய Egerton, அடுத்த வருடம் “ஐசே ஏன் நிற்குறீஈஈஈஈர்” என்று நிரூபன் புவனரட்னத்தை சொல்ல வைப்பதற்காக சும்மா சும்மா எழுந்து நிற்கும் பெடியள், கடைசியாக படித்த Lower VI Commerce வகுப்பில் வேண்டுமென்றே நாங்கள் கொளுவலுக்கு போன 90 batch Prefect ஐங்கரன், என்று பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். 

அந்தக் காலத்தில் பரி யோவானில் ஆசிரியர்களிற்கும் மாணவர்களிற்குமிடையிலான உறவு, தனித்துவமானது. எங்களிற்கு படிப்பித்த ஆசிரியர்களை நாங்கள் இன்றும் கொண்டாடுவது, வகுப்பறைகளையும் தாண்டி எங்களது நலனில் அவர்கள் செலுத்திய அர்ப்பணிப்பு நிறைந்த அக்கறையால் தான். 

மோட்டுத்தனமாக மாணவர்களை அடித்து உடல் உள ரீதியாக காயப்படுத்திய ஆசிரியர்களும் அந்தக் காலத்தில் இருந்தார்கள் தான். ஆனால் அவ்வாறான சம்பவங்கள் நடந்த போது, உடனடியாக தலையிட்டு ஆசிரியரை கடுமையாக கண்டித்துவிட்டு, வீடு தேடிச் சென்று மாணவனையும் சமாதானப்படுத்த, ஆளுமை நிறைந்த அதிபர்களும், Head Masterமாரும், Superviorsம், பழைய மாணவர் சங்க தலைவர்களும் அந்தக் காலத்தில் இருந்தார்கள். தன்னுடைய பிள்ளையை ஆசிரியர் அடித்து விட்டார் என்பதற்காக எந்த பெற்றோரும் அதிபரின் அலுவலகத்தைத் தாண்டி இயக்கத்திடம் முறையிடவும் இல்லை. 

ஒவ்வொரு நாளும் Principal பாடசாலை வளாகத்தை சுற்றி ஒரு rounds வருவார். பாடசாலையின் ஒரு கோடியில் இருந்து மறு கோடி வரை ஒரு சுற்று சுற்றி வருவார். வெள்ளை Pants மற்றும் Shirt அணிந்து, ஆனந்தராஜா மாஸ்டர் நடந்து வருவது இன்றும் கண்ணிற்குள் நிற்கிறது. Principal rounds வரும் சமயம், குழப்படி செய்து வகுப்பிற்கு வெளியே நிற்கும் குழப்படிக்காரனிற்கு அன்று நல்ல பூசை விழும். 

1988ம் ஆண்டு ES தேவசாகயம் அதிபராக பொறுப்பேற்ற பின், மாணவர்களிற்கு பிரம்பால் அடிப்பது தடை செய்யப்பட்டது. வகுப்பில் குழப்படி செய்யும் மாணவன் ஒன்றில் வகுப்புக்கு வெளியே நிற்க வேண்டும், இல்லை Roberts Williams மண்டபத்திற்கு போக வேண்டும். 


குழப்படி செய்யும் மாணவன், Roberts Williams மண்டபத்தில் இருக்கும் நீண்ட வாங்குகளின் ஒரு முனையில் புத்தகத்தை வைத்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டும், மறு முனையில் அதே மாதிரி இன்னொரு குழப்படிக்காரன் சும்மாவே இருப்பான். மண்டபத்தின் மேடையில் ஒரே ஒரு ஒற்றை Prefect சும்மா அமர்ந்து கொண்டு தண்டனைக்குள்ளான குழப்படிக்காரன்கள் சும்மா இருப்பதை கண்காணித்துக் கொண்டிருப்பார்.  பிரம்படியை விட இந்த “சும்மா இருத்தல்” தண்டனை நூறு மடங்கு கொடியது. 

புலம்பெயர் தமிழர்களிற்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. புலம்பெயர்ந்த நாடுகளில் அவர்கள் தங்களை மாற்றிக் கொள்வார்கள், இன்றைய காலவோட்டத்தில்  தங்களை இணைத்துக் கொள்வார்கள். ஆனால், யாழ்ப்பாணத்திற்கு போகும் போது, அங்கு இருக்கும் அனைத்தும் அவர்கள் நாட்டை விட்டுப் போன போது எப்படி இருந்ததோ, இப்பவும் அப்படியே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இன்று பரி யோவான் கல்லூரி மீதான எங்களது அதீத எதிர்பார்ப்பும் அந்த வகையில் தான் அமைகிறதோ தெரியவில்லை.

பரி யோவானின் பழைய பெருமைகளைப் பற்றி நாங்கள் சமூக வலைத்தளங்களில் பீத்துவதையும், batch get togetherகளிற்கு போய் Red & Black T’Shirt அணிந்து கொண்டு Group Photoவை பதிவேற்றுவதையும், Big Match என்று சொல்லி ஆனந்தக் கூத்தாடுவதையும், ஆசிரியர்களை கெளரவிப்பதையும் பார்த்து, தங்களது பிள்ளைகளும் நாளை இவ்வாறு வாழ வேண்டும் என்று நம்பி, இன்று பரி யோவானில் தங்களது பிள்ளைகளை இணைக்கும் பெற்றோரின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் இனி வரும் காலங்களிலும் பரி யோவான் கல்லூரி முழுமையாக பூர்த்தி செய்ய உறுதுணையாக இருக்க வேண்டியது பரி யோவான் சமூகத்தின் கடமையாகும். 
Thursday, 7 June 2018

காலா
தொண்ணூறுகளிலிந்து ரஜினிகாந்த் அரசியலுக்கு இந்தா வருவேன் அந்தா வருவேன் என்று தனது திரைப்படங்கள் வெளிவரும் வேளையையொட்டி வெளியிடும் கருத்துக்கள் எதையுமே எப்பவுமே, கணக்கில் எடுப்பதில்லை. இன்னும் வடிவாக சொன்னால், ரஜினிகாந்த் எனும் நடிகனை, வெள்ளித்திரைக்கு வெளியே ரசிப்பதுமில்லை, அவரது அரசியல் பிரவேசத்தை பற்றி அலட்டிக் கொள்வதுமில்லை.

நாங்கள் டிக்கட் வாங்கக் கொடுக்கும் காசிற்கு, மூன்று மணித்தியாலங்கள் கூத்தாடி விட்டுப் போகும் கூத்தாடி தான் ரஜினிகாந்த். கூத்தாடிகளின் அரசியல் சமூகக் கருத்துக்களை தூக்கி பிடித்துக்கொண்டு, போராட்டம், புறக்கணிப்பு என்று புறப்பட்டு எங்களது நேரத்தை வீணடிக்கவும் விருப்பமில்லை, உணர்வுகளை விரயமாக்கவும் போவதுமில்லை.  என்னைப் பொறுத்தவரை, வெள்ளித் திரைக்கு வெளியே ரஜினி ஒரு லூசுப்பயல்!

ரஜினிகாந்தின் படம் திரையில் அரங்கேறும் போது, முதலாவது படக்காட்சியை பார்ப்பது என்பது ஒரு Thrill. Poster வந்து, பாட்டுக்கள் கேட்டு, Teaser பார்த்து, கதை leak ஆகி, நாள் கணக்கிட்டு, மணித்தியாலங்களை கரைத்து, நிமிடங்களை எண்ணி, திரையரங்கின் கதிரையில் போய் அமரும் வரையான அனுபவமே அலாதியானது தான். 

காலா திரைப்படத்தின் எழுத்தோட்டம் ரஜினிகாந்தின் வழமையான படங்களின் ஆரம்பம் போலில்லாமல், “நிலம் எங்கள் உரிமை” எனும் தலைப்போடு, ஒரு ஆவணப்படத்தின் முன்னோட்டம் போல ஆரம்பிக்க, “என்னடா இது.. திரும்பவும் ரஞ்சித் ரஜினியை வச்சு செஞ்சிட்டானோ” என்று நெஞ்சம் படபடக்கிறது.

எழுத்தோட்டத்திற்கு சற்றும் குறையாத அலப்பறையுடன் ஆரம்ப காட்சிகள் நகர்ந்து, cricket batஐ தூக்கிக் கொண்டு ரஜினிகாந்த் திரையில் நிமிர எழுந்த பரபரப்பு, ரஜினி clean bowled ஆனதோடு, மீண்டும் அடங்குகிறது. ஜீப்பில் அநாயசதாக ஏறி தலையை சாதுவாக ஆட்டியபடி ரஜினி வலம் வர, பின்னனி இசையின் அதிரவைக்காத அதிர்வு, ஜீப்பில் ரஜினியின் காட்சிகளை ரசிக்க வைக்கிறது

படத்தில் ரஜினியையும் சமுத்திரகனியையும் வில்லன் சம்பத்தையும் தவிர வேறு முகங்கள் பரிச்சயமற்றவையாக இருப்பது சலிப்பைத் தருகிறது. அதுவும் ரஜினிகாந்திற்கு இரு கிழவிகள் ஹீரோயின்கள். ராதிகா ஆப்தே, சொனாக்‌ஷி சின்ஹா, நயன்தாரா, ஸ்ரேயா, ஜஸ்வர்யா ராய் என்று ஆட்டம் போட்ட ரஜினிகாந்த், கிழவிகளோடு காதல் பண்ணுவது, ரஜினிக்கு மட்டும் வயசாகவில்லை, “ரஜினி படத்திற்கும்” வயதாகிவிட்டது என்பதை இயக்குனர் ரஞ்சித் அழுத்தமாக பதிவு செய்கிறார். 

காலாவின் இடைவேளை வரை இயக்குனர் ரஞ்சித்தின் படம் தான். திரை நிரம்ப கூட்டம் கூட்டமாக நடிகர்கள் நிறைந்திருக்க, ஆவணப்படத்திற்கான அனைத்து (அவ)லட்சணங்களுடன் கமரா தாராவியின்
சந்து பொந்துகளில் புகுந்து வெளியேறி காட்சிகளை நகர்த்துகிறது. மூச்சை பிடித்துக்கொண்டு எல்லோரும் ரஜினியை வைத்துக் கொண்டு முக்கி முக்கி புரட்சி வசனங்கள் பேசுகிறார்கள், முஷ்டியை முறுக்குகிறார்கள். 

ரஜினிகாந்த் தோன்றும் காட்சிகளில், ரஜினிகாந்தின் ஸ்டைல் அல்லது முத்திரை அழுத்தமாக வெளிவந்தது கொண்டேயிருப்பதால், ஏதொவொரு எதிர்பார்ப்பு நம்மோடு கூடவே பயணித்துக் கொண்டேயிருக்கிறது. மழை பெய்து கொண்டிருக்க, ஒரு மேம்பாலத்தில், தனியாக ஜீப்பில் குடையை பிடித்துக் கொண்டு வந்திறங்கி, குடையால் வில்லன்களை அடித்து துவம்சம் செய்யும் காட்சியில் ரஜினிக்கு கட்டாயமாக ஒரு விசில் அடிக்கலாம்.

தூத்துக்குடி போராட்டத்தில் காயப்பட்ட ஒரு இளைஞன் ரஜினிகாந்தைப் பார்த்து “நீங்க யாரு” என்று கேட்ட வீடியோ சில நாட்களிற்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. காலா படத்தில் “யாரு இவரு..” என்ற ரஜினிகாந்த் வசனம் பேசும் காட்சி சிரிப்பை மட்டுமல்ல, மேற்கூறிய சம்பவத்தையும் ஞாபகத்தில் வரவழைத்தது. 

சந்தோஷ் நாராயணனின் காலா பாடல்கள் முதலில் கேட்கும் போது, பெரிதாக பிடிக்கவேயில்லை. திரைப்படத்தில் பாடல்கள் நன்றாக பொருந்தி படத்திற்கு அழகாக மெருகேற்றுகிறது.  அதுவும் தனது பழைய காதலியை ரஜினிகாந்த் சந்திக்கும் போது வரும் “கண்ணம்மா..” பாட்டும் அந்த BGMம், நெருடல். 

ரஜினிகாந்தும் வில்லன் நானா பட்டேக்கரும் திரையில் சந்திக்கும் காட்சிகள் அனல் பறக்கின்றன. ரஜினியும் பட்டேக்கரும் சந்திக்கும் முதல் காட்சியும், பட்டேக்கரின் வீட்டில், வெள்ளை சோஃபாவில் கறுப்பு வேட்டியும் ஷேர்ட்டும் அணிந்து கொண்டு, காலிற்கு மேல் கால் போட்டுக் கொண்டு, ஸ்டைலாக இருந்து கொண்டு பட்டேக்கரோடு வார்த்தைகளால் மோதும் காட்சிகள் ரஜினிகாந்த் படங்களிற்கேயுரிய தனித்துவம் மீண்டும் மிளிர்கிறது. 

காலா திரைப்படத்தின் இடைவேளைக்குப் பிந்தைய பகுதி முழுவதுமாக ரஜினிகாந்த் படம் தான். ரஜினிகாந்தின் கண்களில் ஒரு காந்தம் இருக்கும், ஒன்றரை கண்ணால் ரஜினி கண்ணில் கோபம் கொப்பளிக்க பார்க்கும் காட்சிகள், ரஜினி ரசிகர்கள் மட்டுமே உணர்ந்து ரசிக்கும் அற்புத கணங்கள். ரஜினியின் அழுத்தமான அந்தக் கோப காட்சிகள் காலாவில் நிறையவே நிரம்பிக் கிடக்கின்றன.  

காலாவில், ஷங்கர் மகாதேவன் பாடிய “வாடி என் தங்க சிலை” பாட்டு, திரைப்படம் முடிந்து வெளியே வந்த பின்பும் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. காலாவில் இருக்கும் ஒன்பது பாடல்கள் ரஜினிகாந்தின் படத்திற்கு அதிகம் தான், ஆனால் எல்லா பாடல்களும் குறுகிய நேரமாக இருப்பதாலும், காட்சிகளோடு நன்றாக பொருந்துவதாலும், திரைக்கதையை தொய்ய விடாமல் கொண்டோடுகின்றன.

காலா படத்தின் வசனங்கள் எழுதியது ஆதவன் தீட்சண்யாவாம். சில இடங்களில் வசனங்கள் சற்று நீளமாக இருந்தாலும், திரைக்கதையில் வாறவன் போறவன் எல்லாம் வசனங்களை முழங்கி விட்டுப் போனாலும், பல இடங்களில் வசனங்கள் ஆழமாகவும் ஆணித்தரமாவும் அமைந்திருக்கின்றன. அதுவும், ரஜினிகாந்தும் நானா பட்டேக்கரும் சந்திக்கும் காட்சிகளின் வசனங்கள் நாளங்களை சூடேற்றுகின்றன. 

திரைக்கதையில் சரியான தருணத்தில் இதிகாச இராமாயணத்தை செருகும் இயக்குனர் ரஞ்சித், திரைப்படத்தை இராமாயணத்தின் முடிவை அடியொட்டி முடிக்க மட்டும் துணியாதது ஏமாற்றம். “தளபதி” யில் மணிரத்னம் விட்ட அதே குறையை “காலாவில்” ரஞ்சித்தும் தொடர்ந்ததால், திரைப்படத்தின் கடைசி ஐந்து நிமிடங்கள் வீணடிக்கப்படுகின்றன. 

காலா... கன காலத்திற்குப் பிறகு பார்த்த, ரஜினிகாந்த் நடித்த.. ரஜினி படம். 

Friday, 1 June 2018

தர்மேந்திரா...“மரணம், எமது வாழ்வு முழுவதும் கூடவேயிருந்து துரத்துகின்ற நிழல்” என்று தம்பி ஜேகே எழுதிய பதிவை, பரி யோவான் பள்ளிக்கால தோழன் நகுலனின் மறைவையொட்டி வரைந்த பதிவில் பதிவிட்டிருந்தேன். இந்தக் கிழமை அந்தக் கொடிய நிழல் எமது SJC92 நண்பர்களில் மிகவும் நெருங்கிப் பழகிய அன்பு நண்பன் தர்மேந்திராவைக் காவு கொண்டு விட்டது.
யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியில்,
ஆறாம் வகுப்பு நுழைவுத் தேர்வினூடாக இணைந்த ஆற்றலும் திறமையும் நிறைந்த மாணவர்களில் தர்மேந்திராவும் ஒருவன். 1985ம் ஆண்டு புதிதாக இணைந்த மாணவர்களை  Year 7D என்ற சிறப்பு வகுப்பில்  அடைத்திருந்தார்கள். 
படிப்பில் கெட்டிக்காரன்களாகவும் கிரிக்கெட்டில் விண்ணன்களாகவும் இருந்த 7D பெடிளோடு பழகி பம்பலடிக்க,  பரி யோவானின் ஆரம்பப் பிரிவிலேயே இணைந்த எங்களிற்கு கொஞ்ச காலம் எடுத்தது. 
பாடசாலை இடைவேளை நேரங்களில், பரி யோவான் மைதானத்தில் ஒரே நேரத்தில் அரங்கேறும் வகுப்புக்களிற்கிடையிலான கிரிக்கெட் ஆட்டத்தில் தான் தர்மேந்திராவை முதன் முதலில் சந்தித்ததாக ஞாபகம். St John Bosco பள்ளியில் ஆரம்பக் கல்வியை கற்றுவிட்டு, பரியோவானில் இணைந்த நெடிய கரிய உருவம் தான் தர்மேந்திரா, அப்பவே அவன் கறுவல் தான்.
“மச்சான், ஜெயந்திகுமார் மாஸ்டரின் ட்யூஷனில், அவர் வாங்கில் ஏறி நிற்கச் சொன்னால், இவன்ட தலை கூரையில் முட்டுமடா” என்று நண்பனொருவன் பள்ளிக்காலத்தில் தர்மேந்திராவின் நினைவுகளை மீட்டுக்கொண்டான். 
6ம் வகுப்பு அணிகளிற்கிடையிலான கிரிக்கெட் Matchகளில், புதிதாக வந்த மாணவர்களைக்  கொண்ட 7D அணியே பலமிக்க அணியாகத் திகழ்ந்தது. சுரேன், இன்பன், ஜெயரூபன், திருமாறன், அருள்மொழி என்று பரி யோவானின் கிரிக்கெட் நட்சத்திரங்கள் எல்லாம் அணிவகுத்த 7D வகுப்பு கிரிக்கெட் அணியின் Captain தர்மேந்திரா தான்.
“அது வந்து மச்சான், தர்மி தான் schoolற்கு bat கொண்டு வாறவன், அவன்ட suitcase தான் விக்கெட், அதால தான் அவனை Captain ஆக்கினாங்கள்” என்று அருள்மொழி பழைய கதையை பகிடியாக்கினான். 

தர்மேந்திரா நன்றாகவே கிரிக்கெட் விளையாடுவான், அவனது கண்ணில் எப்போதும் ஒருவித ஆக்ரோஷம் குடிகொண்டிருக்கும், யாரும் வலிய போய் அவனோடு கொழுவ மாட்டார்கள், கொழுவினால் வெளுவை வாங்குவீனம். 
தாயக மண்ணில் அரங்கேறிய யுத்தம் எங்களை ஒவ்வொரு திக்காக சிதறடிக்க, தர்மேந்திராவும் கனடாவிற்கு குடியேறினான். கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகள் தர்மேந்திராவுடன் எங்களில் பலருக்கு தொடர்புகள் இருக்கவில்லை, கனடாவில் இருந்த பலருக்கே தர்மேந்திரா Ottawaவில் வாழ்ந்தது கனகாலமாகத் தெரிந்திருக்கவில்லை. 
Ottawaவில் தர்மேந்திராவின் வாழ்க்கையை இந்துக் கல்லூரி நண்பன் ஆதவன் அழகாக பதிவு செய்து நாங்கள் அறியாத தர்மேந்திராவின் Ottawa பக்கங்களை எங்களுக்கு அறியத் தந்துவிட்டான்.
2014ம் ஆண்டளவில் வேலை விஷயமாக Ottawaவிற்கு போன நண்பன் ரமோஷனை சந்தித்த நண்பர்கள் இணைந்து எடுத்த படத்தில் தர்மேந்திராவும் காட்சியளித்தான். 
மச்சான் இவனை ஞாபகமிருக்காஎன்று ரமோ WhastsAppல் தர்மேந்திராவின் படத்தை போட, யாரோ ஒருத்தன் தர்மேந்திராவின் சிறுபராயத்து படத்தைப் போட, தர்மேந்திராவும் எங்களது நட்பு வட்டாரத்தில் இணைந்து கொண்டான்.  யாழ்ப்பாணத்தில், தர்மேந்திரா, தர்மி என்று அழைக்கப்பட்டவன், WhatsAppல் DM ஆனான். 
“டேய் DM...கறுவல், என்னடா பம்முறாய்” என்று DMஐ வம்புக்கிழுத்தால், “இஞ்ச வா.. சொல்றதை கேளு.. நான் கறுப்பென்றால் நீ என்ன நிறம்” என்று பதில் தாக்குதல் வரும்.
DM சிலவேளைகளில் உணரச்சிவசப்பட்டு பெடியளோடு சண்டையும் பிடிப்பான். ஆளை நல்லாக சூடேற்றி விட்டு “டேய் emotional ஏகாம்பரம்” என்று பழித்து, நக்கலடித்தால், சிங்கனிற்கு கோபம் உச்சத்தில் ஏறும். 
DMஐ உசுப்பேத்து, சண்டை பிடித்து, கூத்து பார்த்து, பிறகு “டேய் மச்சான்..எல்லாம் பகிடிக்கு தான்டா” என்று சமாளித்த கணங்களை நாங்கள் இனி அனுபவிக்க போவதில்லை.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு நேரம் DM, WhatsApp ஊடாக தொடர்பில் வந்தான். அவனது மனைவி கெளதமி காலமாகி இரண்டு வாரங்கள் கடந்திருந்தன. Torontoவில் கெளதமியின் இறுதிச் சடங்குகளை முடித்து விட்டு, அந்தக் கிழமை தான் திரும்பவும் Ottawaவிற்கு திரும்பியிருந்தான். 
மச்சான் Sheshan கனக்க கேள்வி கேட்கிறான்டா.. என்ன சொல்லுறது என்று தெரியேல்லடா” மகனைப் பற்றி கதைக்கத் தொடங்க DMன் குரல் உடைந்தது. “கெளதமின்ட படத்தை பார்த்து, mummy come back என்று சொல்லுறான்டா”, என்று சொல்லி கலங்கிய நண்பனை,  முடிந்தளவு தேற்றினேன்
தனது வீடு முழுக்க கெளதமியின் நினைவுகள் நிறைந்து போய் இருப்பதாகவும், அன்று காலை தானும் நடந்தது எல்லாமே மறந்து போய் கெளதமிக்கு கோப்பி எடுத்துக் கொண்டு மேல்மாடிக்குப் போனது பற்றியும் சொன்னான். 

கெளதமியின் நினைவுகளில் இருந்து விடுபடவும், Seshanற்காகவும் Ottawaவிலிருந்து Torontoவிற்கு இடம்பெயரப் போவது பற்றியும் விவரித்துக் கொண்டிருந்தான். கெளதமியின் இறப்பு தொடர்பான paper work பூர்த்தி செய்ய, கெளதமியின் முன்னாள் முகாமையாளர் உதவி செய்வது பற்றியும், சொல்லிக் கொண்டே போனான்.
“மச்சான், எனக்கு வாய் விட்டு அழோணும் போல இருக்குடா” DM உணர்ச்சிவசப்பட்டான். “மகனுக்கு முன்னால அழது அவனை upset ஆக்க விரும்பேல்லடா” என்று சொல்லி ஒரு தந்தையின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினான்.

“என்ர அப்பா செத்த போது, இப்படித்தான் மச்சான், காரை எடுத்துக் கொண்டு தூர இடத்திற்கு போய் அழுதிட்டு வந்தனான்டா.. இப்ப அதுவும் ஏலாது.. என்னட்ட car licenseம் இல்லைடா” என்ற DMன் குரல் மீண்டுமொரு முறை  உடைந்தது.
மூன்று நாட்கள் கழித்து, இந்தப் புதன்கிழமை அதிகாகாலை வேளையிலேயே “மச்சான் DM is no more” என்ற நெஞ்சையடைக்கும்  துக்க செய்தி பல திக்குகளிலுருந்தும் அவரசரமாக வரத் தொடங்கியது
“டேய் உனக்கு அவன்ட வீடு ஞாபகம் இருக்கு தானேபோன செப்டம்பர் மாதம் DMன் வீட்டிற்கு போனதை நகு ஞாபகப்படுத்தி விட்டு DMன் இறுதி கணங்களை என் கண்முன் மீண்டும் கொண்டு வந்தான்.
டேய் DM, கறுவல்..
தனியாக அழ இடம் தேடித் தானோ நீ வெகு தூரம் ஓடி விட்டியாடா மச்சான்?.. 
ஏன்டா மச்சான்.. உனக்கு ஏன் இவ்வளவு அவசரம்?
இனி யாரோடு மச்சான் நாங்க தனகுவோம்? 
பாலகுமாரன் உடையார் நாவலில் மரணம் என்பது கனவுகளிலிருந்து விடுதலையாகி நனவுகளிற்கு திரும்புதல் என்பார். உனது நனவுகளே உனக்கு கடினமானதாக அமைந்து விட, கனவுகள் காணத் தான் அவரசர அவசரமாக ஓடிப் போய் விட்டீயா?
போட்டு வாடா கறுவல்...