Friday, 25 May 2018

நிலாவும் ஜெருசலேமும்
ஜெருசலேம் நகரும் “சொப்பன சுந்தரி” மாதிரி என்று சொன்னால் மதவாதிகளும் பழமைவாதிகளும் அடிக்க வருவார்கள். ஆனால் உண்மையில் ஜெருசலேமும் ஒரு வகையில் சொப்பன சுந்தரி  தான், நீண்ட நெடிய வரலாற்றில் ஜெருசலேம் நகரை பலர் “வைத்து இருந்திருக்கிறார்கள்”. 

ஜெருசலேம் நகரம், 52 முறைகள் தாக்கப்பட்டு, 23 தடவைகள் முற்றுகையிடப்பட்டு, 44 தரம் மாறி மாறி வெவ்வேறு தரப்பினரால் கைப்பற்றப்பட்டு, கைவிடப்பட்டு, மீளக் கைப்பற்றப்பட்ட, ஒரு குறுகிய நிலப்பரப்பு. அப்படி என்ன தான் இருக்கிறது இந்த ஜெருசலேமில் என்று அறிய வேண்டுமானால் வரலாற்றில் பயணிக்க வேண்டும். 


எகிப்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை மீட்டுக் கொண்டு வந்த மோசேக்கு, ஆண்டவர்  வாக்குத்தத்தம் பண்ணிய “பாலும் தேனும் ஓடும்” , யூதர்களின் மூதாதையர்களின் தேசத்தின் (Promised Land) அதிமுக்கிய நகரம்  ஜெருசலேம். 


கடவுளால்  வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நிலத்தையும் ஜெருசலேமையும் 
காணாமலே மோசே பாலைவனத்தில் மோட்சம் போய்விட, மூதாதையரின் நிலத்தை மீட்கும் போராட்டத்தின் தலைமைப் பொறுப்பை யோசுவா ஏற்கிறார். 

ஏழு பழங்குடிகளையும் வென்று, தாயக நிலப்பரப்பை மீட்கும் யோசுவாவால் ஜெருசலேமை மட்டும் எபூசியர்களிடமிருந்து முழுமையாக விடுவிக்க முடியாமல் போக, அவருக்கு பின் வந்த யூதர்களின் புகழ்பூத்த மன்னரான தாவீது ராஜாவால் (King David), ஜெருசலேம் முழுமையாக கைப்பற்றப்பட்டு, யூதேயாவின் தலைநகரமாக ஜெருசலேம் பிரகடனப்படுத்தப்படுகிறது.

தங்கள் தேசத்தை மீட்டுத் தந்த கடவுளுக்கு நன்றி செலுத்த, தாவீதின் மகனான சாலமன் மன்னன் (King Solomon), ஜெருசலேமின் கோயில் மலை (Temple Mount) எனும் இடத்தில், கிமு 957ல், கட்டிய பலிபீடமே, முதலாவது ஜெருசலேம் ஆலயம். இதே இடத்தில் தான் ஆபிரகாம் தனது மகனான ஈசாக்கை கடவுளுக்கு பலிகொடுக்க பலிபீடம் கட்டினான் என்பது யூதர்களின் நம்பிக்கை.


முதலாவது ஜெருசலேம் ஆலயம் கட்டப்பட்டு பத்து ஆண்டுகளிலேயே, ஜெருசலேம் மீது படையெடுத்த பபிலோனிய கோடுங்கோலனான நெபுக்கட்னெசரால் ஆலயம் சூறையாடப்பட்டு அழிக்கப்படுகிறது. 

கிமு 538 ஆண்டளவில், ஜெருசலேமை கைப்பற்றியிருந்த பாரசீக மன்னன் சைரஸின் ஆசியுடன், இரண்டாவது ஜெருசலேம் கோயில் மீண்டும் கட்டப்பட்ட தொடங்கி, 23 ஆண்டுகளில் அந்தப் பணி நிறைவடைகிறது. 


அடுத்த 200 ஆண்டுகளில் மாமன்னன் அலெக்சாண்டரின் படையெடுப்பின் போது மீண்டும் கோயில் அழிக்கப்படலாம் என்றெழுந்த அச்சுறுத்தலை, யூதர்கள் சாணக்கியமாக மென்வலு கொண்டு முறியடித்து, ஜெருசலேம் ஆலயத்தை அழிவிலிருந்து காப்பாற்றுகிறார்கள்.  

கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் ஐம்பதாண்டுகளிற்கு முன்னர், ரோம சாம்ராஜ்ஜியத்தின் கவர்னரான ஏரோது மன்னன், இரண்டாவது ஜெருசலேம் தேவாலயத்தை விரிவாக்கி அழகுபடுத்துகிறான். 
யேசு நாதரின் 33 ஆண்டு வாழ்க்கை வரலாற்றில், ஜெருசலேம் கோயில் அடிக்கடி வந்து போகும். 12 வயதில் ஜெருசலேம் ஆலயத்தில் அவர் தொலைந்து போனது தொட்டு, அவர் இறக்கும் போது ஜெருசலேம் ஆலயத்தின் திரைச்சீலை கிழிந்தது வரை பல சம்பவங்கள் வேதாகமத்தில் உள்ளடங்கும். 

அன்பையும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் போதித்த யேசுநாதர், சிலுவையில் அறையுண்டு இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், கோபம் கொண்டு சவுக்கை எடுத்து விளாசி “இது என்னுடைய தந்தையின் வீடு, இதை கள்வர் குகையாக்காதீர்கள்” என்று யேசு சத்தமிட்ட சம்பவம் அரங்கேறிய இடமும் ஜெருசலேம் தேவாலயம் தான். 

கிபி 70ம் ஆண்டளவில் யூதர்களின் இரண்டாவது ஜெருசலேம் தேவாலயம் ரோமர்களால் அழிக்கப்பட, கிபி 7ம் நூற்றாண்டில் ஜெருசலேத்தை கைப்பற்றிய இஸ்லாமியர்களால் Dome of Rock என அழைக்கப்படும் குவிமாட வடிவிலமைந்த மசூதி, ஜெருசலேம் தேவாலயம் அமைந்திருந்த  அதே Temple Mount பகுதியில் நிர்மாணிக்கப்படுகிறது. ஜெருசலேமில் இருந்தே அல்லா, விண்ணுலகிற்கு பயணமானார் என்பது இஸ்லாமியர்களின் மத நம்பிக்கை. மக்கா, மெதீனாவிற்கு அடுத்தபடியாக இஸ்லாமியர்களின் புனித தலமாக ஜெருசலேம் கருதப்படுகிறது. 

தாய் நாட்டை இழந்த யூதர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் பிரிந்து வாழ்கிறார்கள். உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் மீண்டும் ஒரு நாள் தாயகம் திரும்புவோம் என்ற ஓர்மத்தை அடுத்தடுத்த தலைமுறைகளிற்கு ஊட்டி விடுகிறார்கள். கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகள் சிதறுண்டிருந்த யூத இனத்திற்கு விடிவு கிடைக்கும் நிகழ்வுகள் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அரங்கேறத் தொடங்குகின்றன.


முதலாவது உலக மகாயுத்தத்தின் முடிவில், 1917ம் ஆண்டு யூதர்களிற்கு என்று ஓரு தனிநாடு, ஒட்டமான் சாம்ராஜ்ஜியத்தின் அங்கமான அன்றைய பாலஸ்தீன நிலப்பரப்பில், அமைக்கப்படுவதை அங்கீகரித்து, பிரித்தானிய அரசு Balfour declaration எனும் பிரகடனத்தில் கைச்சாத்திடுகிறது. 
  
இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்து, 1948ல் பிரித்தானிய வல்லரசு தான் ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்க, பதினைந்து அரபு நாடுகளை தனியனாக எதிர்த்து நின்று தனது தாயகத்தை மீட்டு இஸ்ரேல் எனும் யூதர்களின் தேசம் உருவாகிறது. 1948ம் ஆண்டு போரில், ஜெருசலேத்தின் ஒரு பகுதியை மட்டுமே யூதர்களால் கைப்பற்ற முடிந்தது. 

இஸ்ரேல் பிறந்த வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட Dominique Lapierre & Larry Collins எழுதிய O’Jersualem எனும் புத்தகம், இதுவரை வாசித்த புத்தகங்களில் மிகச் சிறந்த வரலாற்று நாவல்களில் ஒன்று. 

அழிந்து போன இரண்டாவது ஜெருசலேம் தேவாலயத்தின் சிதைவுகள் இருந்த Western wall இருந்த பகுதியை, 1967ல் நிகழ்ந்த ஆறு நாள் அதிரடி யுத்தத்தில் இஸ்ரேல் கைப்பற்றி, ஜெருசலேம் நகரை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டது. சர்வதேச சமூகமோ ஐநா சபையில் கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றுவதோடு தனது கடப்பாட்டை கட்டுப்படுத்திக் கொண்டது.

நிலவுக்கு ஒரு குணமுண்டு, அந்தக் குணம் அது தோன்றும் மண்ணைப் பொறுத்து மாறுபடும். ஜெருசலேம் நிலவு ஒரு குழப்படி நிலவு, அதுவும் Blood Moon எனப்படும் செந்நிலா யூதர்களின் நான்கு பிரதான பண்டிகைகளையொட்டி வானில் உலாவரும் போது, யூதேயாவில் வில்லங்கம் தலைவிரித்தாடும். 


கிறிஸ்துவுக்கு பின்னரான வரலாற்றில் இதுவரை எட்டு  தடவைகள் இந்த Tetrad of Blood Moons (நான்கென்தொகுதியின் செந்நிலாக்கள்) எனும் நிகழ்வு நடந்தேறியிருக்கிறது.  இந்த எட்டு தடவைகளில்  கடைசி நான்கு தடவைகள் இந்த செந்நிலாக்கள் நான்கும் ஜெருசலேமிற்கு மேலால் தோன்ற, நான்கு முக்கிய வரலாற்று நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன.

1493-94 காலப்பகுதியில் ஸ்பெயின் தேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட யூதர்களே, பாதுகாப்பான நிலம் தேடி கொலம்பஸின் கப்பலில் ஏறி அமெரிக்காவை அடைந்தார்களாம். 1949-1950ல் செந்நிலாக்கள் தோன்ற இருந்த காலத்தில் தான் 1948ல் இஸ்ரேல் எனும் யூத தேசம் உருவானது.

1967-68ல் தோன்றிய செந்நிலாக்கள், முழு ஜெருசலேமையும், 6 நாள் யுத்தத்தின் பெறுபேறாக, யூதர்களிற்கு தாரைவார்த்து விட்டு சென்றது. 2015-16ல் வந்த செந்நிலாக்கள், அமெரிக்காவில் Trumpஐ பதவியில் ஏற்றி, உலக வல்லரசை இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க வைத்துள்ளதாம். 

அடுத்த முறை இந்த நாலு செந்திலாக்களும் யூதர்களின் பண்டிகைக் காலத்தில் தோன்றும் காலம் 2033. இந்தக் இடைப்பட்ட காலப்பகுதியில் தான் அழிக்கப்பட்ட ஜெருசலேம் ஆலயத்தை, முன்றாவது ஜெருசலேம் கோயிலை, மீளக்கட்டியமைக்க இஸ்ரேல் தயாராகிக் கொண்டிருக்கிறது. கட்டிட அமைப்பிலிருந்து பலிபீடத்திற்கு தேவையான 20 கலசங்கள் வரை எல்லாம் தயாராகி விட்டதாம். 

யூதர்கள் பழைய இடத்தில் ஜெருசலேம் கோயில் கட்டினால், அதே இடத்தில் இருக்கும் இஸ்லாமியர்களின் புனித மசூதிகளிற்கு என்ன நடக்க போகிறது, அதனால் விளையப் போகும் விளைவுகள் என்ன என்பதைத் தான் அரபுலகமும் சர்வதேசமும் அவதானித்துக் கொண்டிருக்கின்றன. 
மூன்றாவது ஜெருசலேம் ஆலயம் கட்டியெழுப்பப்பட்ட்ட பின்னர் யேசுவின் இரண்டாவது வருகை இடம்பெறும் என்ற வேதாகம எதிர்வுகூறலை பல கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். கிறிஸ்துவை மீட்பராக (Messiah) ஏற்காத யூதர்களோ, ஜெருசலேம் ஆலயத்தின் மூன்றாவது மீள்நிர்மாணத்துடன் தங்களது முதலாவது மீட்பரின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். 

யூதர்களின் நம்பிக்கைகளில் 50 ஆண்டுகளின்  (Jubilee years) நிறைவும் 70 ஆண்டுகளின் முடிவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு 50வது ஆண்டும் அடிமைகள் விடுவிக்கப்பட்டு, கடன்கள் தள்ளுபடி செய்யப்பட, கடவுளின் அனுக்கிரகம் தங்கள் மேல் இறங்கும் என்று யூதர்கள் நம்புகிறார்கள்.

1917ல் Balfour declaration நடந்து 50 ஆண்டுகளில், 1967ல் ஜெருசலேம் முழுமையாக கைப்பற்றப்பட்டது, அது நடந்து 50 ஆண்டுகள் கடந்து 2017ல் அமெரிக்கா ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரித்தது. 

May 14,1948ல் சுதந்திரம் கிடைத்து சரியாக 70 ஆண்டுகள் கழித்து அதே நாளில் ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதுவராயலயம் திறக்கப்பட்டது. அதே நாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 58 பலஸ்தீனியர்களை இஸ்ரேல் அநியாயமாக சுட்டுக் கொன்றது. 

ஜெருசலேமைப் பற்றி மேலும் மேலும்  அறியும் போதும் வாசிக்கும் போதும், என்றாவது ஒரு நாள் ஜெருசலேம் நகரை நேரில் பார்க்க வேண்டும், வரலாற்றில் இடம்பிடித்த இடங்களை தரிசிக்க வேண்டும் என்ற அவா எழுந்து கொண்டேயிருக்கும். செந்நிலாக்கள் தோன்றாத காலங்களில் அங்கு போவது தான் சிறந்தது போலிருக்கிறது, அப்போது தான் ஜெருசலேம் நகரை அதன் பெயருக்கு தக்கதாய் அமைதியே உருவமாக, அழகான நிலவொளியில் கண்டு ரசிக்கலாம்.


பி.கு

இந்தப் பதிவை மீளாய்வு செய்த SJC92 நண்பன் ஒருவன் கேட்டான்.

“மச்சான்,  அப்ப 2033ல் பிரச்சினை வருமென்றிரியா?”

“அப்படி போலத் தான் இருக்கு”

“ஐயோ..”

“ஏன்டா? “

“அப்ப 2033ல் எங்கட SJC92ன் 60th Birthday Bashக்கு அரோகரா தான் போலிருக்கு”

No comments:

Post a Comment