Friday, 11 May 2018

நிலவோடு பயணம்..
எதோவொரு படத்தில், இரவு நேரம் செந்தில் நிலத்தில் படுத்திருந்து வானத்து நிலாவை சீரியஸாக பார்த்துக் கொண்டு படுத்திருப்பார். செந்திலைப் பார்த்து ஊர்ச் சனமும் வானத்தை அண்ணாந்துப் பார்த்துக் கொண்டிருக்க, கவுண்டமணி அந்த வழியாக வருவார்.

“டேய், கருவாயா, என்னத்தையடா அப்படி பார்க்கிறாய்” என்று கவுண்டமணி கேட்க, செந்தில் தனக்கேயுரிய நிதானத்துடன் “ஒண்ணுமில்லை அண்ணே, இதே நிலாவை எங்கட ஊரிலும் பார்த்திருக்கிறேன், அதான் எப்படின்னு யோசிச்சுக்கிட்டு இருக்கிறன்” என்று பதிலளிப்பார்.

கவுண்டமணி செந்திலின் அந்த நகைச்சுவைக் காட்சி இன்று பார்த்தாலும் சிரிப்பு வரும். ஆனால் அந்தக் காட்சியில் செந்தில் பகிடியாக சொன்ன கருத்தில் நிலா பற்றிய ஒரு ஆழமான விஷயம் இருக்கிறது. 

நிலவிற்கு ஒரு குணமுண்டு, அந்தக் குணம் அது தோன்றும் மண்ணைப் பொறுத்து மாறுபடும். நிலவின் குணம் அதை பார்ப்பவரின் மனநிலையை பொறுத்தும் வேறுபடும். இரவிற்கு ஆயிரம் கண்கள் என்று கண்ணதாசன் எழுதினார், அந்த இரவினில் தோன்றும் நிலவிற்குள்ளும் வெவ்வேறு  குணங்கள் புதைந்திருக்கும்.


யாழ்ப்பாணத்து நிலவில் எப்போதும் ஒரு சோகம் குடிகொண்டிருக்கும். அமைதியாக காட்சி தரும் நிலவில், நாளை என்ன நடக்குமோ, எங்கே ஷெல்லடி விழுமோ, எங்கே பொம்மர் அடிக்குமோ, யாரை ஆமி சுடுமோ, எந்தப் புலி எங்கு ஆகுதியாகுமோ என்ற ஏக்கம் நிறைந்த சோகம் யாழ்ப்பாண நிலவில் அன்று குடிகொண்ருந்தது.

1990ல் ஒரு நாள், இரண்டாவது ஈழ யுத்தம் தொடங்கி கோட்டை சண்டை உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலம். சண்டை தொடங்க, மின்சாரமும் தடைபட்டு விட்டது. காலம்பற வெயிலில் காய வைத்து எடுத்த eveready batteryயில் இயங்கும் National Panasonic வானொலி பெட்டியில், நிலவொளியில் 7:45ற்கு வெரித்தாஸ் வானொலி செய்தி கேட்டுக் கொண்டு, அம்மா சுட்ட மஞ்சள் போட்ட யாழ்ப்பாண தோசையை, உரலில் இடித்த செத்த மிளகாய் சம்பலோடு வெளி விறாந்தையில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம், வானத்திலிருந்த நிலவிற்கும் வாயூறியது.

மண்டைதீவு பக்கமிருந்து ஊய் என்ற சத்தத்தோடு வந்த ஷெல், எங்கள் தலைக்கு மேலால் பறந்து போய் இரண்டு வளவு தாண்டி வெறும் வளவுக்குள் விழுந்தது. கொஞ்சம் தள்ளி இங்கால விழுந்திருந்தால் யாழ்ப்பாண தோசையோடு நாங்களும் சிதறியிருப்போம். அடுத்த பத்து பதினைந்து நிமிஷத்தில், ஷெல்லடியில் இருந்து தப்ப நாங்கள் இருபாலை நோக்கி சைக்கிள்களில் இடம்பெயர்ந்து கொண்டிருந்தோம். சங்கிலியன் தோப்பு தாண்டி, மந்திரி மனையடியில் ஹெலி வருகிறது போலிருக்கு என்று வானத்தை பார்க்க, நிலவும் எங்களோடு பயத்தோடு பயணித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.

2009 மே மாதம் 9ம் திகதி பெளத்தர்களின் வெசாக் கொண்டாடிய முழு நிலவும், முள்ளிவாய்க்காலில் அரங்கேறும் இனப்படுகொலைக்கு சாட்சியாகப் போகும் நிலவும் வேறு வேறாகத் தானிருக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்த மனித அகோரத்தில் சிதறிய தமிழ் மக்களின் ரத்தம், தேய்ந்து கொண்டிருந்த நிலத்தின் கன்னத்தில்  கட்டாயம் ஒட்டிக் கொண்டிருக்கும்.  நிலவின் சாட்சியமும் ஒரு நாள் சர்வதேச நீதிமன்றில் ஏறும், ஏற வேண்டும். 

இன்றும் யாழ்ப்பாண நிலவில் சோகம் தான் புதைந்து போயுள்ளது. தன் கண்முண்ணே வன்னியில் நடந்தேறிய இனப்படுகொலைக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லையே என்ற கோபம் நிறைந்த சோகமும், மெல்ல மெல்ல தமிழினம் தனது தனித்துவத்தையும் பலத்தையும் இழந்து கொண்டிருக்கும் அவலத்தை நினைத்தும் நிலவு படும் வேதனையின் சோகம் இன்றைய யாழ்ப்பாண நிலவின் முகத்தில் தெரியும். 

 கொழும்பில் படிக்கும் காலங்களில், மினி பஸ்ஸின் யன்னலிற்கு வெளியே ஒரு பாதுகாவலனைப் போல நிலவும் கூடவே வரும். குண்டு வெடிப்புக்களும் கைதுகளும் அறம்புறமாக கொழும்பில் அரங்கேறிக் கொண்டிருக்க, கூடவே பயணிக்கும் நிலவின் நிழலில் ஏதோவொரு அரவணைப்பும் ஆறுதலும் கிடைக்கும்.

காதலிக்கும் காலங்களில் நிலவு இன்னும் கொஞ்சம் அழகாக தெரியும். லூசுத்தனமாக நிலவோடு பேச பழகியது காதலிக்கும் பொழுதுகளில் தான். அப்படி பேசப் பழகிய  பழக்கத்தில் இன்றும் நிலவோடு உறவாடல் தொடர்கிறது.  

டுபாய்க்கு போகும் போது நிலவை பார்க்க, அந்த நிலவில் ஒரு தனிமையும் இறுக்கமும் புலப்பட்டது. பாலைவனத்திற்கு மேலால், வெம்மை கலந்த காற்றோடு உறவாடும் நிலவு, டுபாய் நகரத்தின் வானுயர்ந்த அழகிய கட்டிடங்களிற்கு மேலால் மெல்ல மெல்ல அசைந்து போகும். கட்டிடங்களை பார்க்கும் நிலவு, அந்த கட்டிடங்களை கட்ட, கடும் வெயிலில் கஷ்டப்பட்டு உழைத்த, உழைக்கும், தொழிலாளர்களை நினைத்து கொள்ளும் ஏக்கம் தான் டுபாய் நிலவில் பதிந்திருக்கும். 


மெல்பேர்ண் நிலவில் குதூகலமும் குளிர்மையும் நிறைந்திருக்கும். உலகின் மிகச்சிறந்த நகரம் என்ற இறுமாப்பும் கர்வமும் மெல்பேர்ண் நிலவின் முகத்தில் அப்பட்டமாக தெரியும். அந்த அகம்பாவத்தில், கேட்டுக் கேள்வி இல்லாமல் காரின் பக்கத்து இருக்கையில் வந்து அமர்ந்து கொள்ளும், தனித்த நீண்ட பயணங்களை இனிமையாக்கும். 

Blue Moon, Red Moon, Super Moon, சந்திர கிரகணம் என்று விதம் விதமாக நிலவு தோன்றும் போதும், சூரியனோடு இணைந்து அவதாரங்கள் எடுக்கும் போதும் வானியலாளர்கள் அதை பெரிதுபடுத்த, ஊடகங்கள் அதை பூதாகரமாக்க, முழு உலகமும் இணைந்து, இரவிரவாக விழித்திருந்து நிலவை பார்க்கும். 

நிலவோடு பயணிப்பது ஒரு இனிமையான சுகம். வளர்ந்து தேய்ந்து, பெளர்ணமியில் முழுமையடைந்து, அமாவாசையில் காணாமல் போய், வடிவங்கள் மாறி, நிறங்களும் மாறி, முகிலில் மறைந்து, வானில் எழுந்து, ஒளித்து பிடித்து விளையாடும் நிலவோடு பயணிக்கும் பயணத்தை அனுபவித்து ரசித்தவர்களிற்குத் தான் அதன் அருமை விளங்கும்.

1 comment:

  1. நிலவோடு பயணிப்பதே இவ்வளவு அழகென்றால், அந்த நிலவோடு வாழ்வது...ஆமாம் மச்சான் என் மனைவி பெயர் வெண்ணிலா, பெடியன் பெயர் நிலவன். Beautiful டா

    ReplyDelete