Thursday, 19 April 2018

மரவெள்ளி...
“ஐசே... கிழங்கு.. எழும்பும்.. நீர் தான் ஐசே..எழும்பும்”, 

அருளானந்தம் Blockல் இருந்த எங்களது வகுப்பறையின், பிரதான வீதிப் பக்கம் இருக்கும் வாங்கு வரிசைகளிற்கு இடையால், உடம்பை ஒரு பக்கமாக சரித்து, வேகமாக நடந்து, வகுப்பறையின் முற்பகுதிக்கு வந்து, அடுத்த வரிசை வாங்குகளிற்கு நடுவே புகுந்து கொண்டே, பிரபாகரன் மாஸ்டர் உறுமாவார்.

பிரபாகரன் மாஸ்டர் கூப்பிட்ட “கிழங்கு”, உரும்பிராயிலிருந்து பாடசாலைக்கு வரும் நண்பன் ஆதவன், நடுங்கிக் கொண்டே எழும்புவான்.

“ஐசே.. பகுதிபட காய்ச்சி வடித்தல்.. சுருக்கமா விளங்கப்படுத்தும்” பிரபாகரன் மாஸ்டர், ஆதவனிற்கு பக்கத்தில் வந்து நின்று கேள்வியை கேட்க, எங்களுக்கு பதறும். ஆதவன் சயன்ஸ் பாடத்தில் வலு கெட்டிக்காரன், அவன் சரியாக பதில் சொல்லி விடுவான், எங்களிடம் கேள்வி வராது, நாங்கள் அன்று பிரபாகரன் மாஸ்டரிடம் அடி வாங்காமல் வீடு போய் சேருவோம். 

தமிழீழ ஆயுதப் போராட்டத்தின் முன்னோடியான சிவக்குமரன் அவதரித்த, உரும்பிராய் மண்ணிலிருந்து வரும் பிரபாகரன் மாஸ்டரும் அதே ஊரவனான ஆதவனிற்கும் இடையிலான இந்த கிழங்கர்கள் ஊடலை எங்களது வகுப்பில் படித்த எவரும் மறந்திருக்க மாட்டார்கள். உரும்பிராய் மண்ணில் தாராளமாக விளையும் மரவெள்ளிக் கிழங்கை அடித்தளமாக வைத்தே இந்த “கிழங்கு நாடகம்” பரி யோவான் வகுப்பறையில் அரங்கேறும்.

தங்க பஸ்பம் போன்ற நிறத்துடன், நல்ல மொறு மொறுப்பாக மரவெள்ளியை பொரித்து, உப்பும் மிளாகாய்த் தூளும் போட்டு பிரட்டி, கொழும்பு கோட்டை ரோட்டோரம் வைத்து விற்ற தள்ளு வண்டில்காரனை என்றும் மறக்கேலாது. மரவெள்ளி பொரியல் என்றால் யாருக்கு தான் பிடிக்காது, அதுவும் அதை சுவைபட தயாரித்து சிரிப்போடு பரிமாறியவனை எப்படித்தான் மறப்பது?

தொண்ணூறுகளின் மத்தியில், CIMA படிக்கும் காலங்களில், பம்பலப்பிட்டியில் இருந்து பஸ் பிடித்து வந்து கொழும்பு கோட்டை பிரதான தொலை தொடர்பு பரிவர்த்தனை நிலையத்திற்கு (Telecom) முன்னால் இருக்கும் பஸ் தரிப்பிடத்தில் இறங்கும் போது மணி இரவு ஒன்பதை தாண்டியிருக்கும்.

வத்தளைக்கு வீட்டிற்கு போக அவ்விடத்திலிருந்து புறப்படும் 187 ஜா-எல பஸ் பிடிக்க வேண்டும். வெள்ளைநிற Telecom கட்டிடத்திற்கும் மற்றப் பக்கமிருந்த பழுப்பு நிற YMCA கட்டிடத்திற்கும் இடையில் இருந்த இடைவெளியடியில் நின்ற சிறிய மரத்திற்கு கீழ் தான், இந்த இரவுநேர மரவெள்ளி பொரியல் தள்ளு வண்டிக்காரன் தனது கடையை நடாத்திக் கொண்டிருப்பான். 

தள்ளு வண்டிக்காரனிற்கு சரி பின்னால், உயரமான பரணில் ஆமிக்காரன் ஒருத்தன் சென்ரிக்கு நிற்பான். 1980களில் Telecom கட்டிடத்தை குறிவைத்து ஈரோஸ் இயக்கம் நடாத்திய குண்டுத் தாக்குதலின் விளைவாக, அந்த பிரதேசமே உயர் பாதுகாப்பு வலயம் தான். 

“கொஹமத மல்லி” என்று அன்பாக விசாரிக்கும் தள்ளு வண்டிக்காரனிடம், பத்து ரூபாய்க்கு ஒரு சின்ன bag நிறைய சுடச்சுட மரவெள்ளி பொரியல் வாங்கி, ரோட்டோரம் இருக்கும் இரும்பு தடுப்புச் சுவரில் சாய்ந்து கொண்டே, ஒவ்வொரு கிழங்காக பதறாமல் எடுத்து, உறைப்பு மரவெள்ளிக் கிழங்குப் பொரியலை வாய்க்குள் போட்டு, மெல்ல மெல்ல சரக் சரக் என கொரித்துக் கொண்டு, இரவையும் நிலவையும் ரசிக்க, பரணிலிருந்து ஆமிக்காரன் பாடும் ஏதோவொரு சிங்களப் பாட்டும் ரசனை மிகுந்ததாகவே இருக்க, அற்புதமான அந்த சில கணங்களின் மகிழ்வை குறுக்கறுக்க, ஜா-எல பஸ் கொந்தாவின் காட்டுக் கத்தல் பறந்து வரும்..

“பாலியகொட..வத்தள..மாபொல்ல..மாபாகெய, கதான..ஜா-எல...ஜா-எல”
கொழும்பு தள்ளு வண்டிக்காரன் பொரித்த மாதிரி, வீடுகளில் பொரித்த மரவெள்ளி திறமாக அமைவதில்லை. வீடுகளில் பொரிக்கும் மரவெள்ளி சரியான அளவில் பொரி படாததால், ஒன்றில் மிருதுவாக வாழைக்காய் பொரியலைப் போலிருக்கும், இல்லாட்டி அதிகமாக பொரிந்து கடிக்க கஷ்டப்படும். மரவெள்ளியை இதமா பதமா பொரிப்பதே ஒரு கலை தான் போலிருக்கிறது.

இந்தியன் ஆமிக்காரன்களுடனான சண்டைக் காலங்களில் யாழ்ப்பாணமெங்கும் உணவுத் தட்டுப்பாடு நிலவியது. அந்தக் காலங்களில், சில நாட்களில் காலை உணவாக மரவெள்ளியை அவித்து, கட்டைச் சம்பலோடு சாப்பிட்ட ருசி இன்றும் வாயில் மொய்த்துக் கொண்டிருக்கிறது. 

ஒரு நாள், அவித்த மரவெள்ளியையும் கட்டைச் சம்பலையும் உரலில் போட்டு இடித்து, இரண்டையும் கலக்க வைத்து, குண்டு குண்டு உருண்டையாக உருட்டி,  அப்பா செய்து தந்த அந்த மரவெள்ளி கிழங்கு உருண்டை இன்றும் நினைவில் நிழலாடுகிறது. 

மரவெள்ளிக் கிழங்கு கறி என்றால் எப்பவுமே தனியாக தான் கறியாக்க வேண்டும். பூசணியரோடு மரவெள்ளியரை இணைத்து கறி வைப்பது என்பது, ஒட்டுக் குழுக்களோடு இணைந்து ஆட்சியமைப்பதற்கு இணையானது, ஏற்கவும் முடியாது உண்ணவும் முடியாது.

ரெண்டு பச்சை மிளகாயும் வெட்டிப் போட்டு, மரவெள்ளிக் கிழங்கை பால்கறி வைத்தால், சொல்லி வேலையில்லை. தள தள என்று களி போன்ற மரவெள்ளிக் கறியை, சோற்றிக்கு பக்கத்தில் தரையிறக்க, மரவெள்ளியை விரலால் கிள்ளி தனியே ஒரு ருசி பார்த்து விட்டு தான் சோற்றைப் பிசைய மனம் வரும்.  

மரவெள்ளியை உறைப்பு கறியாக வைக்கலாமோ தெரியாது, குழம்பாக சாப்பிட்டதாக ஞாபகமுமில்லை, உறைப்புக் கறியாக சாப்பிட விருப்பமுமில்லை. மரவெள்ளியை பொரியலாகவும் அவியலாகவும் பால் கறியாகவும் ருசித்து ரசித்து சாப்பிட்டே பழகியாகிவிட்டது, அதை மாற்ற மனம் வராது. 

1970களில் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில், உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்க, வெளிநாட்டு இறக்குமதிகளிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.  தென்னிலங்கையில் பஞ்சம் நிலவிய காலமாக இது கணிக்கப்பட, வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் விவசாயிகளின் பொற்காலமாக இந்தக் காலப்பகுதி கொண்டாடப்படுகிறது. 

தமிழர் தாயகத்தில் தாராளமாக விளைந்த மரவெள்ளிக் கிழங்கின் அருமை அந்த நாட்களில் இலங்கை நாட்டிற்கே நன்றாக புரிந்த காலமது. மரவெள்ளிக்கிழங்கை வித விதமான உணவுவகைகளாக மாற்றி சாப்பிட்ட காலத்தை அண்ணர் ஒருத்தர் உட்பெட்டியில்,
“அப்பயடா, மரவெள்ளியில் அவியல், கறி, றொட்டி, தோசை, பொரியல், கள்ளுக்கு பிரட்டல், மரவெள்ளிமா கூள், புட்டு, துவையல் என்டு விதம் விதமா செஞ்சு சனம் சாப்பிட்டது” என்று நினைவு கூர்ந்தார்.

மரவெள்ளிக்கு மண்ணின் மணம் கமழும் நல்ல ருசி மட்டுமல்ல, செழிப்பான பொருளாதார வரலாறும் நிறையவே இருக்கிறது. 

1 comment:

  1. அருமை.........1970 முதல்,ஏழு ஆண்டுகள் மறக்கவே முடியாது..பாணுக்கு வரிசையில் நின்றதென்ன....அனுராதபுரம்/மாஹோ என்று அரிசி கட்டப் போனதென்ன........இடையில் கொலரா நோய் வந்து சின்ன வெங்காயத்துக்கு வந்த தடை/மதிப்பு என்ன.......ஹும்ம்... நன்றி பதிவுக்கு.

    ReplyDelete