Friday, 27 April 2018

பம்பல் @ Phuket
“மச்சான், ஷெல்டன்ட bagஜ காணேல்லயாம்” எனக்கு வெறுப்பேற்றவென்றே சிரிலங்கா இலச்சினை பொறிக்கப்பட்ட T’Shirt அணிந்து கொண்டு வந்த அருள்மொழி, முறைப்பாட்டை பதிவு செய்யும் போது மதியம் ஒரு மணியிருக்கும்.

பெப்ரவரி 21, 2018 புதன்கிழமை அன்று காலை எங்களது SJC92 நண்பர்கள் குழாம், Phuketல் ஒன்று கூடத் தொடங்கியிருந்தோம். அன்று காலை, கோலாலம்பூர், சிங்கப்பூர், ஹொங்கொங், டுபாய் நகரங்களிலிருந்து Phuket சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய சிறு குழுக்களையும், கம்போடியாவிற்கு கோயில் பார்க்கப்போன பக்த கோடிகளையும் காவிக் கொண்டு நான்கு வாகனங்கள் நாங்கள் தங்கியிருக்கும் Novotel Phuket Resortஐ வந்தடைந்ததும், எங்களது ஒன்றுகூடல் களைகட்டத் தொடங்கியது.

“மச்சான், உனக்கு தெரியுமா ஷெல்டன்ட bagஐயும் அடிச்சிட்டாங்களாம்” சிவனேயென்று தன்பாட்டில் எலுமிச்சம் பழச்சாறு குடித்துக் கொண்டிருந்த ரோய் பிரதீபனிற்கு “அம்மான்” ராஜரட்னம் கதை விட்டுக் கொண்டிருந்தான்.

Novotel Hotelன் Bar எங்களை வரவேற்கவென பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டிருக்க, முதல் நாளே வந்திறங்கிய சிலரும், அன்று காலை லண்டனிலிருந்து நேரடியாக வந்திறங்கிய நண்பர்களும், வாகனங்களில் வந்திறங்கிய பட்டாளத்தை ஆரத் தழுவி வரவேற்றோம்.

“டேய், யாராவது ஷெல்டன்ட bagஐ கண்டால் சொல்லுங்கடா, ப்ளீஸ்.. அவன் அழுறான்டா” சிக்காகோவிலிருந்து வந்திருந்த DJ சுவாமி, கத்தியே சொன்னான். 

வாழ்வில் ஏற்படும் வெவ்வேறு விதமான சந்தர்ப்ப சூழல்களில் எத்தனையோ விதமான நட்புக்கள் நம்மை தொற்றிக் கொண்டாலும், பள்ளிக்கால நட்பில் இருக்கும் சிறப்புப் பந்தம் தனித்துவமானது. பள்ளித் தோழனோடு நட்பு பாராட்டும் போதும், பழங்கதை பேசி பம்பலடிக்கும் போதும், இன்றைய வாழ்வின் சவால்களும், குடும்ப பாரமும் அந்தக் கணங்களில் மறைந்து, நாங்கள் மீண்டும் இனிய இளமைக் காலங்களிற்கு பயணித்து விடுவோம். காலங்களை கடக்கும் வல்லமையும், காலங்கள் கடந்து நிலைக்கும் வலிமையும், பள்ளிக் கால நட்பிற்கு மட்டுமேயுண்டு. 

“மச்சான், we may have to lodge a complaint about shelton’s bag” சிங்கப்பூலிலிருந்து முதல் நாளிரவு வந்திறங்கியிருந்தும், கண் முட்ட நித்திரை வழிந்த அரவிந்தன், கடுமையான முடிவெடுக்க தயாரானான்.

கடலும் மலையும்  முட்டி மோதி காதல் கொள்ள, அதை ஓரமாக நின்ற நெடுந்துயர்ந்த தென்னை மரங்கள் ரசித்துக் கொண்டிருக்கும் Phuket தீவின் ஒரு கரையில் தான் எங்களது ஒன்றுகூடலிற்கான களம் அமைந்திருந்தது. 

“டேய், ஷெல்டன்ட bagஐ யாரோ எடுத்திட்டாங்களாம்” சிட்னியிலுருந்து பறந்து வந்திருந்த சத்தி மாஸ்டரும் காணாமல் போன Bagஐ கண்டுபிடிக்கும் படலத்தில் தீவிரமாக இறங்கினார். 

ஐந்தாண்டுகளின் பின்னர், பரி யோவான் கல்லூரியின் 1992ம் ஆண்டு நண்பர்களின் இரண்டாவது ஒன்றுகூடலிற்கு, ஒரு சிறிய குன்றில் அமைந்திருந்த Novotel Phuket Resortஐ களமாகத் தெரிவு செய்திருந்தோம். ஹொட்டலின் முன்னாலுள்ள வீதி கடந்தால், மறுபக்கம் அழகிய கடல்.  குன்றின் ஏற்றத்திலிருந்த ஹொட்டலின் வாயிலுக்கு வர வீதியிலிருந்து ஒரு தட்டை வான் shuttle service ஓடிக்கொண்டிருந்தது.

“மச்சான்.. யாரும் ஷெல்டனின் Bagஐ மாறி எடுத்திருப்பியல்.. ஒருக்கா check பண்ணுங்கடா” தொண்ணூறுகளின் பிரிந்து, இந்தமுறை லண்டனிலிருந்து வந்து எம்மோடிணைந்த நண்பன் நந்தகுமார் கோரிக்கை வைத்தான். 

45வது அகவை கொண்டாட்டம் என்று மனிசி மாருக்கு சாட்டு சொல்லி, நாள் குறிப்பதில் புடுங்குபட்டு, “தாய்லாந்தா..?” என்று ஒரு மாதிரியாக எழுந்த கேள்விக் கணைகளை சமாளித்து, T’Shirtஐ Red & Blackல் அடிப்பதா இல்லை வெள்ளை நிறத்தில் அடிப்பதா என்று அடிபட்டு, என்ன program எப்படி செய்வது என்று கண்டங்கள் கடந்து பேச்சுவார்த்தை நடாத்தி, “தண்ணியடிக்கவும் கூத்தடிக்கவும் தானேடா get together” என்ற நிகழ்விற்கு வராத நண்பர்களின் இழி சொற்களை புறந்தள்ளி, நட்பை கொண்டாட நாங்கள் 44 பேர்அழகிய Phuket நகரில் தரையிங்கியிருந்தோம். 

“டேய் ஷெல்டன்ட bagஐ யாரடா வச்சிருக்குறீங்க.. வச்சிருந்தது காணுமடா..” காலையில் கனடாவிலிருந்து பறந்து வந்த “கிளி” சுரேஷ், சொப்பன சுந்தரியை ஞாபகப்படுத்தினான். 

வெள்ளிக்கிழமை 23 பெப்ரவரி அன்று Phuketல் சுனாமி அடிக்கும் என்று, எங்களது WhatsApp குறூப்பில், பஹ்ரேயனிலிருந்து டானியல் பீ ஷியாமள்ராஜ் என்ற தீர்க்கதரிசி எதிர்வு கூறியிருந்தது, சாதுவாக பயத்தை தந்திருந்தது உண்மை. 2004 சுனாமியில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் Phuketம் ஒன்று என்பதால் அந்த பயத்திற்கு கொஞ்சம் நியாயமும் இருந்தது. ஹொட்டலில் எங்கு திரும்பினாலும் “Tsunami evacuations way” என்ற பதாதைகள் வேறு பயத்தை அதிகரித்தன.“மச்சான் உன்ட Bagல் என்னடா இருந்தது” அழுவாரைப் போல மூஞ்சியை தூக்கி வைத்திருந்த ஷெல்டனை கேட்டேன். எல்லோரும் கனகாலத்திற்கு பின்னர் சந்தித்த நண்பர்களோடு பம்பலாக கதைத்துக் கொண்டிருந்த அற்புத தருணத்தை குழப்பும் கெட்ட கிருமியாக ஷெல்டனின்  “காணாமல் போன bag” விவகாரம் உலா வந்து கொண்டிருந்தது.


“அ...அ.. bagல மச்சான் ... என்ர tooth pasteம் brushம் இருந்தது” ஷெல்டன் அனுங்கினான். “வேற என்னவாவது இருந்ததா?.. உன்ட passport ?” ஷெல்டனை துலாவினேன். “ச்சீ.. passport பத்திரமா இருக்கு..வேறொன்றும் இருக்கேல்ல” ஷெல்டனின் அப்பாவித்தனமான பதிலைக் கேட்டு தலை சுற்றியது.

“டேய் உதுக்கு போயாடா இவ்வளவு ஆர்ப்பாட்டம்..எல்லோரையும் போய் தேட வைத்துக்கொண்டு..” ஷெல்டனை கடிந்து கொண்டேன். “ஹொட்டலில் கேட்டால் pasteம் brushம் தருவாங்களே.. லூசுப் பயலே” என்று விட்டு திரும்ப, கொழும்பிலிருந்து ஷெல்டனோடு ஒன்றாய் பயணித்த நிஷான் தன்னுடைய phoneல் இருந்த படத்தை கஜனிற்கு காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்.

“என்னவாம் மச்சான்” என்று கஜனைக் கேட்க. கையை உதறி விசிறிக் கொண்டே கஜன் கத்தினான், “இந்த நாய் அப்படி ஒரு bagஏ கொண்டு வரவில்லை மச்சான்.. இங்க பாரடா” என்று கொழும்பு விமான நிலையத்தில் ஷெல்டனும் மற்ற நண்பர்களும் பயணப்பொதிகளுடன் நிற்கும் படத்தை காண்பித்தான். கொண்டு வராமலே “காணாமல் போன” Bagஐ கலைத்து கலைத்து தேடிக் களைத்து போன காமெடி நாடகத்துடன், எங்களது SJC92 Batchன் இரண்டாவது Bash, பம்பலாக களை கட்டத் தொடங்கியது.

தொடரும்

Group Photo @ Phuket

No comments:

Post a Comment