Friday, 27 April 2018

பம்பல் @ Phuket
“மச்சான், ஷெல்டன்ட bagஜ காணேல்லயாம்” எனக்கு வெறுப்பேற்றவென்றே சிரிலங்கா இலச்சினை பொறிக்கப்பட்ட T’Shirt அணிந்து கொண்டு வந்த அருள்மொழி, முறைப்பாட்டை பதிவு செய்யும் போது மதியம் ஒரு மணியிருக்கும்.

பெப்ரவரி 21, 2018 புதன்கிழமை அன்று காலை எங்களது SJC92 நண்பர்கள் குழாம், Phuketல் ஒன்று கூடத் தொடங்கியிருந்தோம். அன்று காலை, கோலாலம்பூர், சிங்கப்பூர், ஹொங்கொங், டுபாய் நகரங்களிலிருந்து Phuket சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய சிறு குழுக்களையும், கம்போடியாவிற்கு கோயில் பார்க்கப்போன பக்த கோடிகளையும் காவிக் கொண்டு நான்கு வாகனங்கள் நாங்கள் தங்கியிருக்கும் Novotel Phuket Resortஐ வந்தடைந்ததும், எங்களது ஒன்றுகூடல் களைகட்டத் தொடங்கியது.

“மச்சான், உனக்கு தெரியுமா ஷெல்டன்ட bagஐயும் அடிச்சிட்டாங்களாம்” சிவனேயென்று தன்பாட்டில் எலுமிச்சம் பழச்சாறு குடித்துக் கொண்டிருந்த ரோய் பிரதீபனிற்கு “அம்மான்” ராஜரட்னம் கதை விட்டுக் கொண்டிருந்தான்.

Novotel Hotelன் Bar எங்களை வரவேற்கவென பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டிருக்க, முதல் நாளே வந்திறங்கிய சிலரும், அன்று காலை லண்டனிலிருந்து நேரடியாக வந்திறங்கிய நண்பர்களும், வாகனங்களில் வந்திறங்கிய பட்டாளத்தை ஆரத் தழுவி வரவேற்றோம்.

“டேய், யாராவது ஷெல்டன்ட bagஐ கண்டால் சொல்லுங்கடா, ப்ளீஸ்.. அவன் அழுறான்டா” சிக்காகோவிலிருந்து வந்திருந்த DJ சுவாமி, கத்தியே சொன்னான். 

வாழ்வில் ஏற்படும் வெவ்வேறு விதமான சந்தர்ப்ப சூழல்களில் எத்தனையோ விதமான நட்புக்கள் நம்மை தொற்றிக் கொண்டாலும், பள்ளிக்கால நட்பில் இருக்கும் சிறப்புப் பந்தம் தனித்துவமானது. பள்ளித் தோழனோடு நட்பு பாராட்டும் போதும், பழங்கதை பேசி பம்பலடிக்கும் போதும், இன்றைய வாழ்வின் சவால்களும், குடும்ப பாரமும் அந்தக் கணங்களில் மறைந்து, நாங்கள் மீண்டும் இனிய இளமைக் காலங்களிற்கு பயணித்து விடுவோம். காலங்களை கடக்கும் வல்லமையும், காலங்கள் கடந்து நிலைக்கும் வலிமையும், பள்ளிக் கால நட்பிற்கு மட்டுமேயுண்டு. 

“மச்சான், we may have to lodge a complaint about shelton’s bag” சிங்கப்பூலிலிருந்து முதல் நாளிரவு வந்திறங்கியிருந்தும், கண் முட்ட நித்திரை வழிந்த அரவிந்தன், கடுமையான முடிவெடுக்க தயாரானான்.

கடலும் மலையும்  முட்டி மோதி காதல் கொள்ள, அதை ஓரமாக நின்ற நெடுந்துயர்ந்த தென்னை மரங்கள் ரசித்துக் கொண்டிருக்கும் Phuket தீவின் ஒரு கரையில் தான் எங்களது ஒன்றுகூடலிற்கான களம் அமைந்திருந்தது. 

“டேய், ஷெல்டன்ட bagஐ யாரோ எடுத்திட்டாங்களாம்” சிட்னியிலுருந்து பறந்து வந்திருந்த சத்தி மாஸ்டரும் காணாமல் போன Bagஐ கண்டுபிடிக்கும் படலத்தில் தீவிரமாக இறங்கினார். 

ஐந்தாண்டுகளின் பின்னர், பரி யோவான் கல்லூரியின் 1992ம் ஆண்டு நண்பர்களின் இரண்டாவது ஒன்றுகூடலிற்கு, ஒரு சிறிய குன்றில் அமைந்திருந்த Novotel Phuket Resortஐ களமாகத் தெரிவு செய்திருந்தோம். ஹொட்டலின் முன்னாலுள்ள வீதி கடந்தால், மறுபக்கம் அழகிய கடல்.  குன்றின் ஏற்றத்திலிருந்த ஹொட்டலின் வாயிலுக்கு வர வீதியிலிருந்து ஒரு தட்டை வான் shuttle service ஓடிக்கொண்டிருந்தது.

“மச்சான்.. யாரும் ஷெல்டனின் Bagஐ மாறி எடுத்திருப்பியல்.. ஒருக்கா check பண்ணுங்கடா” தொண்ணூறுகளின் பிரிந்து, இந்தமுறை லண்டனிலிருந்து வந்து எம்மோடிணைந்த நண்பன் நந்தகுமார் கோரிக்கை வைத்தான். 

45வது அகவை கொண்டாட்டம் என்று மனிசி மாருக்கு சாட்டு சொல்லி, நாள் குறிப்பதில் புடுங்குபட்டு, “தாய்லாந்தா..?” என்று ஒரு மாதிரியாக எழுந்த கேள்விக் கணைகளை சமாளித்து, T’Shirtஐ Red & Blackல் அடிப்பதா இல்லை வெள்ளை நிறத்தில் அடிப்பதா என்று அடிபட்டு, என்ன program எப்படி செய்வது என்று கண்டங்கள் கடந்து பேச்சுவார்த்தை நடாத்தி, “தண்ணியடிக்கவும் கூத்தடிக்கவும் தானேடா get together” என்ற நிகழ்விற்கு வராத நண்பர்களின் இழி சொற்களை புறந்தள்ளி, நட்பை கொண்டாட நாங்கள் 44 பேர்அழகிய Phuket நகரில் தரையிங்கியிருந்தோம். 

“டேய் ஷெல்டன்ட bagஐ யாரடா வச்சிருக்குறீங்க.. வச்சிருந்தது காணுமடா..” காலையில் கனடாவிலிருந்து பறந்து வந்த “கிளி” சுரேஷ், சொப்பன சுந்தரியை ஞாபகப்படுத்தினான். 

வெள்ளிக்கிழமை 23 பெப்ரவரி அன்று Phuketல் சுனாமி அடிக்கும் என்று, எங்களது WhatsApp குறூப்பில், பஹ்ரேயனிலிருந்து டானியல் பீ ஷியாமள்ராஜ் என்ற தீர்க்கதரிசி எதிர்வு கூறியிருந்தது, சாதுவாக பயத்தை தந்திருந்தது உண்மை. 2004 சுனாமியில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் Phuketம் ஒன்று என்பதால் அந்த பயத்திற்கு கொஞ்சம் நியாயமும் இருந்தது. ஹொட்டலில் எங்கு திரும்பினாலும் “Tsunami evacuations way” என்ற பதாதைகள் வேறு பயத்தை அதிகரித்தன.“மச்சான் உன்ட Bagல் என்னடா இருந்தது” அழுவாரைப் போல மூஞ்சியை தூக்கி வைத்திருந்த ஷெல்டனை கேட்டேன். எல்லோரும் கனகாலத்திற்கு பின்னர் சந்தித்த நண்பர்களோடு பம்பலாக கதைத்துக் கொண்டிருந்த அற்புத தருணத்தை குழப்பும் கெட்ட கிருமியாக ஷெல்டனின்  “காணாமல் போன bag” விவகாரம் உலா வந்து கொண்டிருந்தது.


“அ...அ.. bagல மச்சான் ... என்ர tooth pasteம் brushம் இருந்தது” ஷெல்டன் அனுங்கினான். “வேற என்னவாவது இருந்ததா?.. உன்ட passport ?” ஷெல்டனை துலாவினேன். “ச்சீ.. passport பத்திரமா இருக்கு..வேறொன்றும் இருக்கேல்ல” ஷெல்டனின் அப்பாவித்தனமான பதிலைக் கேட்டு தலை சுற்றியது.

“டேய் உதுக்கு போயாடா இவ்வளவு ஆர்ப்பாட்டம்..எல்லோரையும் போய் தேட வைத்துக்கொண்டு..” ஷெல்டனை கடிந்து கொண்டேன். “ஹொட்டலில் கேட்டால் pasteம் brushம் தருவாங்களே.. லூசுப் பயலே” என்று விட்டு திரும்ப, கொழும்பிலிருந்து ஷெல்டனோடு ஒன்றாய் பயணித்த நிஷான் தன்னுடைய phoneல் இருந்த படத்தை கஜனிற்கு காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்.

“என்னவாம் மச்சான்” என்று கஜனைக் கேட்க. கையை உதறி விசிறிக் கொண்டே கஜன் கத்தினான், “இந்த நாய் அப்படி ஒரு bagஏ கொண்டு வரவில்லை மச்சான்.. இங்க பாரடா” என்று கொழும்பு விமான நிலையத்தில் ஷெல்டனும் மற்ற நண்பர்களும் பயணப்பொதிகளுடன் நிற்கும் படத்தை காண்பித்தான். கொண்டு வராமலே “காணாமல் போன” Bagஐ கலைத்து கலைத்து தேடிக் களைத்து போன காமெடி நாடகத்துடன், எங்களது SJC92 Batchன் இரண்டாவது Bash, பம்பலாக களை கட்டத் தொடங்கியது.

தொடரும்

Group Photo @ Phuket

Thursday, 19 April 2018

மரவெள்ளி...
“ஐசே... கிழங்கு.. எழும்பும்.. நீர் தான் ஐசே..எழும்பும்”, 

அருளானந்தம் Blockல் இருந்த எங்களது வகுப்பறையின், பிரதான வீதிப் பக்கம் இருக்கும் வாங்கு வரிசைகளிற்கு இடையால், உடம்பை ஒரு பக்கமாக சரித்து, வேகமாக நடந்து, வகுப்பறையின் முற்பகுதிக்கு வந்து, அடுத்த வரிசை வாங்குகளிற்கு நடுவே புகுந்து கொண்டே, பிரபாகரன் மாஸ்டர் உறுமாவார்.

பிரபாகரன் மாஸ்டர் கூப்பிட்ட “கிழங்கு”, உரும்பிராயிலிருந்து பாடசாலைக்கு வரும் நண்பன் ஆதவன், நடுங்கிக் கொண்டே எழும்புவான்.

“ஐசே.. பகுதிபட காய்ச்சி வடித்தல்.. சுருக்கமா விளங்கப்படுத்தும்” பிரபாகரன் மாஸ்டர், ஆதவனிற்கு பக்கத்தில் வந்து நின்று கேள்வியை கேட்க, எங்களுக்கு பதறும். ஆதவன் சயன்ஸ் பாடத்தில் வலு கெட்டிக்காரன், அவன் சரியாக பதில் சொல்லி விடுவான், எங்களிடம் கேள்வி வராது, நாங்கள் அன்று பிரபாகரன் மாஸ்டரிடம் அடி வாங்காமல் வீடு போய் சேருவோம். 

தமிழீழ ஆயுதப் போராட்டத்தின் முன்னோடியான சிவக்குமரன் அவதரித்த, உரும்பிராய் மண்ணிலிருந்து வரும் பிரபாகரன் மாஸ்டரும் அதே ஊரவனான ஆதவனிற்கும் இடையிலான இந்த கிழங்கர்கள் ஊடலை எங்களது வகுப்பில் படித்த எவரும் மறந்திருக்க மாட்டார்கள். உரும்பிராய் மண்ணில் தாராளமாக விளையும் மரவெள்ளிக் கிழங்கை அடித்தளமாக வைத்தே இந்த “கிழங்கு நாடகம்” பரி யோவான் வகுப்பறையில் அரங்கேறும்.

தங்க பஸ்பம் போன்ற நிறத்துடன், நல்ல மொறு மொறுப்பாக மரவெள்ளியை பொரித்து, உப்பும் மிளாகாய்த் தூளும் போட்டு பிரட்டி, கொழும்பு கோட்டை ரோட்டோரம் வைத்து விற்ற தள்ளு வண்டில்காரனை என்றும் மறக்கேலாது. மரவெள்ளி பொரியல் என்றால் யாருக்கு தான் பிடிக்காது, அதுவும் அதை சுவைபட தயாரித்து சிரிப்போடு பரிமாறியவனை எப்படித்தான் மறப்பது?

தொண்ணூறுகளின் மத்தியில், CIMA படிக்கும் காலங்களில், பம்பலப்பிட்டியில் இருந்து பஸ் பிடித்து வந்து கொழும்பு கோட்டை பிரதான தொலை தொடர்பு பரிவர்த்தனை நிலையத்திற்கு (Telecom) முன்னால் இருக்கும் பஸ் தரிப்பிடத்தில் இறங்கும் போது மணி இரவு ஒன்பதை தாண்டியிருக்கும்.

வத்தளைக்கு வீட்டிற்கு போக அவ்விடத்திலிருந்து புறப்படும் 187 ஜா-எல பஸ் பிடிக்க வேண்டும். வெள்ளைநிற Telecom கட்டிடத்திற்கும் மற்றப் பக்கமிருந்த பழுப்பு நிற YMCA கட்டிடத்திற்கும் இடையில் இருந்த இடைவெளியடியில் நின்ற சிறிய மரத்திற்கு கீழ் தான், இந்த இரவுநேர மரவெள்ளி பொரியல் தள்ளு வண்டிக்காரன் தனது கடையை நடாத்திக் கொண்டிருப்பான். 

தள்ளு வண்டிக்காரனிற்கு சரி பின்னால், உயரமான பரணில் ஆமிக்காரன் ஒருத்தன் சென்ரிக்கு நிற்பான். 1980களில் Telecom கட்டிடத்தை குறிவைத்து ஈரோஸ் இயக்கம் நடாத்திய குண்டுத் தாக்குதலின் விளைவாக, அந்த பிரதேசமே உயர் பாதுகாப்பு வலயம் தான். 

“கொஹமத மல்லி” என்று அன்பாக விசாரிக்கும் தள்ளு வண்டிக்காரனிடம், பத்து ரூபாய்க்கு ஒரு சின்ன bag நிறைய சுடச்சுட மரவெள்ளி பொரியல் வாங்கி, ரோட்டோரம் இருக்கும் இரும்பு தடுப்புச் சுவரில் சாய்ந்து கொண்டே, ஒவ்வொரு கிழங்காக பதறாமல் எடுத்து, உறைப்பு மரவெள்ளிக் கிழங்குப் பொரியலை வாய்க்குள் போட்டு, மெல்ல மெல்ல சரக் சரக் என கொரித்துக் கொண்டு, இரவையும் நிலவையும் ரசிக்க, பரணிலிருந்து ஆமிக்காரன் பாடும் ஏதோவொரு சிங்களப் பாட்டும் ரசனை மிகுந்ததாகவே இருக்க, அற்புதமான அந்த சில கணங்களின் மகிழ்வை குறுக்கறுக்க, ஜா-எல பஸ் கொந்தாவின் காட்டுக் கத்தல் பறந்து வரும்..

“பாலியகொட..வத்தள..மாபொல்ல..மாபாகெய, கதான..ஜா-எல...ஜா-எல”
கொழும்பு தள்ளு வண்டிக்காரன் பொரித்த மாதிரி, வீடுகளில் பொரித்த மரவெள்ளி திறமாக அமைவதில்லை. வீடுகளில் பொரிக்கும் மரவெள்ளி சரியான அளவில் பொரி படாததால், ஒன்றில் மிருதுவாக வாழைக்காய் பொரியலைப் போலிருக்கும், இல்லாட்டி அதிகமாக பொரிந்து கடிக்க கஷ்டப்படும். மரவெள்ளியை இதமா பதமா பொரிப்பதே ஒரு கலை தான் போலிருக்கிறது.

இந்தியன் ஆமிக்காரன்களுடனான சண்டைக் காலங்களில் யாழ்ப்பாணமெங்கும் உணவுத் தட்டுப்பாடு நிலவியது. அந்தக் காலங்களில், சில நாட்களில் காலை உணவாக மரவெள்ளியை அவித்து, கட்டைச் சம்பலோடு சாப்பிட்ட ருசி இன்றும் வாயில் மொய்த்துக் கொண்டிருக்கிறது. 

ஒரு நாள், அவித்த மரவெள்ளியையும் கட்டைச் சம்பலையும் உரலில் போட்டு இடித்து, இரண்டையும் கலக்க வைத்து, குண்டு குண்டு உருண்டையாக உருட்டி,  அப்பா செய்து தந்த அந்த மரவெள்ளி கிழங்கு உருண்டை இன்றும் நினைவில் நிழலாடுகிறது. 

மரவெள்ளிக் கிழங்கு கறி என்றால் எப்பவுமே தனியாக தான் கறியாக்க வேண்டும். பூசணியரோடு மரவெள்ளியரை இணைத்து கறி வைப்பது என்பது, ஒட்டுக் குழுக்களோடு இணைந்து ஆட்சியமைப்பதற்கு இணையானது, ஏற்கவும் முடியாது உண்ணவும் முடியாது.

ரெண்டு பச்சை மிளகாயும் வெட்டிப் போட்டு, மரவெள்ளிக் கிழங்கை பால்கறி வைத்தால், சொல்லி வேலையில்லை. தள தள என்று களி போன்ற மரவெள்ளிக் கறியை, சோற்றிக்கு பக்கத்தில் தரையிறக்க, மரவெள்ளியை விரலால் கிள்ளி தனியே ஒரு ருசி பார்த்து விட்டு தான் சோற்றைப் பிசைய மனம் வரும்.  

மரவெள்ளியை உறைப்பு கறியாக வைக்கலாமோ தெரியாது, குழம்பாக சாப்பிட்டதாக ஞாபகமுமில்லை, உறைப்புக் கறியாக சாப்பிட விருப்பமுமில்லை. மரவெள்ளியை பொரியலாகவும் அவியலாகவும் பால் கறியாகவும் ருசித்து ரசித்து சாப்பிட்டே பழகியாகிவிட்டது, அதை மாற்ற மனம் வராது. 

1970களில் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில், உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்க, வெளிநாட்டு இறக்குமதிகளிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.  தென்னிலங்கையில் பஞ்சம் நிலவிய காலமாக இது கணிக்கப்பட, வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் விவசாயிகளின் பொற்காலமாக இந்தக் காலப்பகுதி கொண்டாடப்படுகிறது. 

தமிழர் தாயகத்தில் தாராளமாக விளைந்த மரவெள்ளிக் கிழங்கின் அருமை அந்த நாட்களில் இலங்கை நாட்டிற்கே நன்றாக புரிந்த காலமது. மரவெள்ளிக்கிழங்கை வித விதமான உணவுவகைகளாக மாற்றி சாப்பிட்ட காலத்தை அண்ணர் ஒருத்தர் உட்பெட்டியில்,
“அப்பயடா, மரவெள்ளியில் அவியல், கறி, றொட்டி, தோசை, பொரியல், கள்ளுக்கு பிரட்டல், மரவெள்ளிமா கூள், புட்டு, துவையல் என்டு விதம் விதமா செஞ்சு சனம் சாப்பிட்டது” என்று நினைவு கூர்ந்தார்.

மரவெள்ளிக்கு மண்ணின் மணம் கமழும் நல்ல ருசி மட்டுமல்ல, செழிப்பான பொருளாதார வரலாறும் நிறையவே இருக்கிறது. 

Friday, 13 April 2018

Angkor Wat.. கம்போடியாவில் 2
“மச்சான், do you know this is the biggest religious site in the world” கனடாவிலிருந்து வந்திருந்த சிவகணேஷன் எங்களது வாகனம் Angkor Wat கோயிலை அண்டித்த போது பக்கத்து சீட்டிலிருந்தவனிற்கு சொன்னது எல்லோருக்கும் கேட்டது. 

முதலாவது கோயில் பார்த்து விட்டு, அடுத்ததாக போக இருந்த கோயிலை தவிர்த்து, நேரடியாக Angkor Wat கோயிலிற்குப் போக, ஆங்கிலம் தெரியாத ட்ரைவரும் Khemer மொழி தெரியாத சிறிபிரகாஷும் நடத்திய பேச்சுவார்த்தை சுவாரசியமானது என்று சொல்வது ஒரு வித understatement.

“We are here” ஹொட்டல்காரன் கீறித்தந்த வரைபடத்தில் நாங்கள் பார்த்து விட்டு வந்த முதலாவது கோயிலை சிறிபிரகாஷ் சுண்டுவிரலால் சுட்டிக் காட்டினான். “This one...No no” இரண்டாவது கோயிலைக் காட்டி, அதற்கு போக வேண்டாம் என்று ரோயல் இங்கிலீஷில் சொல்லி, சைகையாலும் செய்து காட்டினான். 

“This one.. big temple.. yes yes” கடைசியாக குறிப்பிடப்பட்டிருந்த Angkor Wat கோயிலை குறித்து வடிவாத் தான் சொன்னான். இந்த சம்பாஷணை ஒரு மூன்று நாலு தரம் திரும்ப திரும்ப ஓடியிருக்கும், வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு நாங்கள் சிறிபிரகாஷின் விளையாட்டை ரசித்துக் கொண்டிருந்தோம். 


“Ok.. you got it..” எவ்வளவு விளங்கப்படுத்தியும் ட்ரைவரிடமிருந்து விளங்கியதற்கான எந்த அறிகுறியும் தெரியாததால் களைத்துப் போன சிறிபிரகாஷ் பேச்சுவார்த்தையை முடிவிற்கு கொண்டு வந்தான். “now..... let’s go” கையில் இருந்த தண்ணி போத்தலிலிருந்து தண்ணியை மட மடவென சிறிபிரகாஷ் குடித்தான். 

வாகனம் கிளம்பி ஒரு இருபது நிமிட ஓட்டத்தில், ஒருவழி பாதையான ஒரு பாலத்தடியில் வாகன நெரிசலில் சிக்கிக் கொண்டது.  பாலத்தின் இருபுறமும் காவல் சிலைகள் வீற்றிருக்க, ஒடுங்கிய கோட்டை வாசல் போன்ற ஒரு பாதையால் வாகனம் மெல்ல மெல்ல நகர்ந்து சென்றது.  “மச்சான் இதான்டா அந்தக் கோயிலாக இருக்கோணும்.. அதான் இவ்வளவு சனமா இருக்கு” பின் சீட்டிலிருந்த யாரோ யாருக்கோ சொன்னான்.  

வாகனத்தால் இறங்கி விசாரித்தால் அது Angkor Wot கோயில் இல்லையாம், அது எங்கட mapல் இருந்த இரண்டாவது கோயில். எங்கட சிறிபிரகாஷின் பேச்சுவார்த்தையின் சீத்துவம் பல்லிளிக்க, பேசாமல் மீண்டும் வாகனத்தில் ஏறி, “let’s go” சொல்ல டிரைவர் மூன்றாவது கோயிலுக்கு கூட்டிக் கொண்டு போனான். 

Angkor Wat...என்றால் கோயில்களின் நகரம் என்று அர்த்தமாம். அகன்ற அகழிக்கு இந்தப் பக்கம் இருந்து பார்க்கவே கோயிலின் பிரம்மாண்டம் பிரமிக்க வைத்தது. அகழிக்கு மேலாக கட்டப்பட்ட வெள்ளை நிற மிதக்கும் பாலத்தை கடந்து கோயிலை அடைந்தோம். ஐந்து வாயில்களை கொண்ட கோயிலில், விஷ்ணுவின் சிலை இருந்த ஒரு வாயிலினூடாக நாங்கள் நுழைந்தோம்.

“மச்சான், சப்பாத்தை கழற்றுங்கடா” கஜன் திடீரென புனிதனாகினான்.  விஷ்ணுவின் சிலையைத் தாண்டி வெள்ளைக்காரனும் சைனாக்காரனும் சப்பாத்துக் காலோடு நடக்க, வீணாக கஜனோடு வம்பை விலைக்கு வாங்க விரும்பாமல், நாங்கள் பதின்மூன்று பேரும் கையில் சப்பாத்தை தூக்கிக் கொண்டு வெறுங்காலில் கடந்து போக, விஷ்ணுவிற்கு ஊதுபத்தியால் பூசை செய்து கொண்டிருந்த புத்த பிக்கு எங்களை விநோதமாகப் பார்த்தார்.

“மச்சான் இது கோயிலில் இல்லையாம்” வாசலை தாண்டி வந்து சப்பாத்துக்களை மாட்ட சிவகணேசன் கத்தினான். “I have hired a guide.. he tells me this is the entrance to temple.. temple is another mile awayயாம்” இருபத்தைந்து டொலர்களிற்கு வேலைக்கமர்த்தப்பட்ட கம்போடிய வழிகாட்டி சிவகணேசனிற்கு பக்கத்தில் சிரித்துக் கொண்டு நின்றார்.

“This temple was built by Soori ya varma two.. he is a North Indian king” கம்போடிய வழிகாட்டி கதை சொல்லத் தொடங்க, ஜெயரூபன் பதறினான், “Are you absolutely sure.. he is not a chola king?”. கம்போடிய வழிகாட்டிக்கு சோழன் யாரென்றே தெரியவில்லை. 

“மச்சான் மனிசிக்கு சோழன் கட்டின கோயில் பார்க்க போறன் என்று சொல்லி விட்டு வந்துட்டேன்டா... இங்க வந்தா... ச்சா” பக்கத்தில் நடந்து கொண்டிருந்த யோகதாஸிற்கு கவலையா சொல்ல, அவன் பதறாமல் சொன்னான் “அவக்கு தெரியவா போகுது.. நீ சும்மா வாடா”. 
இந்து ஆகமங்கள் பிரித்த ஐந்து வகையான மக்கள் பிரிவினரும் நுழையவென ஐந்து வெவ்வேறு வாயில்களுடன், 12வது நூற்றாண்டில் Ankor Wat கோயில் கட்டப்பட்டிருக்கிறது. சிவனை வழிபடும் பரம்பரையில் வந்த பல்லவ மன்னனான சூரியவர்மன், விஷ்ணு கோயிலை ஏன் கட்டினான் என்ற குழப்பம் ஒரு பக்கம், வழமையாக கிழக்குப் பக்கம் நோக்கியிருக்கும் இந்துக் கோயில்களிற்கு மாறாக, Angkor Wot மேற்கு நோக்கியிருப்பதன் மர்மம் மறுபக்கம் என்று கம்போடிய வழிகாட்டி கதை சொல்லிக் கொண்டே கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். 13வது நூற்றாண்டளவில், பெளத்தர்களால் கம்போடியா கைப்பற்றப்பட, பிரதான கோயிலில் இருந்த விஷ்ணு வாசலிற்கு நகர்த்தப்பட, பிரதான கோயிலில் புத்த பகவான் குடியேறினாராம். “எங்கட நாட்டில்  நடந்தது தான் இங்கேயும் நடந்திருக்கு” இன்பனின் சிந்தனை தாய்நாட்டிற்கு பறந்தது.

அரசர்களை மகிழ்விக்க வானத்திலிருந்து வந்திறங்கும் அப்ஸராக்கள் நடனமாடும் உயர்ந்த மேடையை தாண்டி போக, சுவற்றில் இராமாயண கதை செதுக்கப்பட்டிருந்தது. “இங்கே பாருங்கடா ராவணனை” சிவகணேசன் கூப்பிட்டான். “பத்து தலையும் ஒன்றுக்கு மேலே ஒன்று இருக்கு.” வழமையாக பக்கத்து பக்கத்தில் இருக்கும் பத்துத் தலை இராவணனின் படங்களிலிருந்து Angkor Wot இராவணன் வேறுபட்டான்.

பாரிய பாறைக் கற்களை ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கி கட்டப்பட்ட மாபெரும் ஆலயத்தைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்க, “I wonder how many project managers they would have used to build this” டிலாஷ் கேட்க எல்லோரும் களைப்பிலும் சிரித்தோம். சில கற்களில் பொறிக்கப்பட்டிருந்த கோடுகள், எந்தக் கல்லு எங்கே போகவேண்டும் என்பதற்கான ஒருவகை bar coding system என்று கம்போடிய வழிகாட்டி விளக்கம் தந்தார். 

35 வருடங்களில், 25 மைல்களுக்கு அப்பால் இருந்த மலையில் இருந்த பாறைகளை குடைந்து எடுத்து 6,000 யிற்கும் மேற்பட்ட யானைகளை பயன்படுத்தி கோயில் கட்டப்பட்டதாக வழிகாட்டி கூறிக் கொண்டு வந்தான். 

மிகப்பெரிய ஒரு புத்தர் சிலைக்குப் பக்கத்தில் இருந்த ஒரு சுவரில் பதிக்கப்பட்டிருந்த எழுத்துக்களை காட்டி அது பாளி மொழி எழுத்துக்கள் என்று பிக்கு ஒருத்தர் விவரிக்க, அந்த எழுத்துக்களை கூர்ந்து கவனித்த ஜெயரூபன், அது தமிழ் எழுத்துக்கள் போலுள்ளதாக சொல்லி, ஓரிடத்தில் “சிவபூசை” என்று எழுதியுள்ளதையும் பிக்குவிற்கு நிரூபித்தான். 

மாலை மங்கிக் கொண்டிருக்க, நாங்கள் வைகுண்ட பீடத்தை பார்க்க, 70 பாகையில் அமைக்கப்பட்ட ஒரு இரும்பு ஏணியில் ஏறிக் கொண்டிருந்தோம். மெல்ல மெல்ல ஏறி கோயிலின் உச்சியை அடைந்தால் Angkor Watன் பிரம்மாண்டம் கண்களிற்கு முன்னால் பரந்து விரிந்தது. 

சூரியன் மறையும் அந்தப் பொழுதை Angkor Wot கோயிலின் உச்சியிலிருந்து பார்ப்பது உண்மையிலேயே ஒரு வரம். மாலை மங்கும் வேளையில், அந்த பொன் மாலைப் பொழுதின் அழகை ரசிக்கத் தான் இரண்டாவது சூரியவர்மன் இந்தக் கோயிலை கட்டினானோ? 
வைகுண்ட பீடத்திலிருந்து இறங்கி கீழே வந்து, பிரதான கோயிலிற்கும் வாயிலிற்கும் இடையில் இருக்கும் சிறிய நீர் தேக்கத்தடிக்கு வந்தால், கோயிலின் முழுமையான பிம்பமும் அந்த நீர்நிலையில் தெளிவாகத் தெரியும் அற்புதக் காட்சியையும் கண்டு ரசித்தோம். 
சோழ மன்னன் கட்டினதாக நாங்களே நினைத்து, ஒரு காலத்தில் நாங்கள் எப்படியெல்லாம் சீரும் சிறப்போடும் வாழ்ந்தோம் என்பதை கண்ணாரக் கண்டு மகிழ வந்த நாங்கள் கண்டதும் கேட்டதும், பண்டைய தமிழர்களுக்கும் இந்த இடத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற (திரிக்கப்பட்ட?) வரலாற்றுச் செய்தியைத் தான். 

கி.பி 7ம் நூற்றாண்டளவில் கட்டப்பட்ட மகாபலிபுரத்தில் இருக்கும் கற்கோயில்களிற்கும் Angkor Wat கோயிலுக்கும் இடையில் ஒற்றுமைகள் இருப்பதாக ஆங்காங்கே சத்தங்கள் எழ ஆரம்பித்து விட்டன. மகாபலிபுர கோயில்களில் இருக்கும் மகாபாரத கதை சிற்பங்களும் Angkor Wot கோயில் இராமாயண சிற்பங்களிற்கும் இடையில் ஒற்றுமை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்னும் சிலர் ஒரு படி மேலே போய், Angkor Wat கோயில், மகாபலிபுரத்தில் கட்டப்பட்டு, பின்னர் பாகம் பாகமாக dismantle பண்ணப்பட்டு, கப்பலில்  கொண்டு வரப்பட்டு Angkor Wotல் மீண்டும் பொருத்தப்பட்டதாக கதை சொல்கிறார்கள். அதற்கு ஆதாரமாக இரு இடங்களிலும் இருக்கும் பாறைகளில் வரையப்பட்டுள்ள bar coding முறையை ஆதாரமாக தூக்கி போடுகிறார்கள். 

தென்னாசியாவில் யானைகளை வைத்து வேலை வாங்கும் முறைமை 12வது நூற்றாண்டளவில் இருக்கவில்லை, ஆகவே கம்போடிய கோயிலை கட்ட உதவிய யானைகளும் பாகர்களும் சிற்பிகளும் கூட கடல்கடந்த தமிழர் தேசத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டவர்கள் தான் என்று பழங்கதை பேசி வேறும் சிலர் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.

“History is written by victors” என்று Winston Churchill சொன்னது தமிழர்களை பொறுத்தவரையில் நூற்றாண்டுகள் கடந்தும் நிரூபணமாகிக் கொண்டேயிருக்கிறது, என்ற கசப்பான உண்மையை மீண்டுமொரு தரிசித்து விட்டு கம்போடியா மண்ணை விட்டு விடைபெற்று, எங்களது SJC92ன் ஒன்று கூடலிற்கு Phuket வந்து இறங்கினால், நண்பன் அருள்மொழி சிரித்துக் கொண்டே வந்து ஆரத்தழுவினான்.

“மச்சான்.. உனக்கொரு புத்தகம் கொண்டு வந்திருக்கிறன்டா.. வாடா roomற்கு” என்று கூட்டிக் கொண்டு போய், ஆறு பெரிய டொங்கான் புத்தகங்களை suitcaseக்குள்ளால் எடுத்து கைகளில் தந்ததான்...

“உடையார்”

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் எழுதிய, அருள்மொழித் தேவர் என்கிற இராஜராஜ சோழன் தஞ்சை பெருங்கோவில் எனும் மாபெரும் கற்கோயில் கட்டிய கதை!

எம்மை வென்றவர்கள் வரலாறுகளை திரித்தும் மாற்றியும் எழுதிக் கொண்டிருக்க, நாங்கள் மீண்டும் மீண்டும் வரலாற்றோடு மல்லுக் கட்டிக் கொண்டுதானிருக்கிறோம், கோயில்களையும் கட்டிக் கொண்டுதானிருக்கிறோம். ஆனால் கோயில் கட்டி நாங்கள் கும்பிட்டுக் கொண்டிருக்கும் எங்கள் தெய்வங்கள் தான் எங்களை இன்றுவரை காப்பாற்ற கோயிலை விட்டு வெளியே வரவேயில்லை...