Friday, 23 March 2018

கம்போடியாவில்...
“மச்சான் நான் இன்றைக்கு மரக்கறி” பாங்கொக் சுவர்ணபூமி விமான நிலையத்தில் கம்போடியாவிற்கு விமானம் ஏறமுதல் காலம்பற கோப்பி குடித்துக் கொண்டிருக்கும் போது கஜன் அறிவித்தான். 

“ஏன்டா மச்சான்.. இன்றைக்கு திங்கட்கிழமை தானே..ஏதும் விரதமோ” Starbucksல் வாங்கிய Latteஐ குடித்துக் கொண்டே கேட்டேன். 

“கோயிலுக்கு போற நாட்களில் நான் சைவம் மச்சான்” கஜன் உறுதிபட பறைந்தான். கஜனிற்கு பக்கத்தில் Bacon & Egg sandwichஐ கடித்துக் கொண்டிருந்த டிலாஷ், கடிப்பதை ஒரு கணம்  நிறுத்தி, கஜனை பார்த்துவிட்டு, மறுபடியும் சாப்பிடத் தொடங்கினான். 
பரி யோவானில் படித்த காலங்களில் நாங்கள் போன ஒரே ஒரு சுற்றுலா, முதலாம் வகுப்பில், றீகல் தியேட்டரில் Jungle Book படம் பார்த்துவிட்டு சுப்ரமணியம் பூங்காவிற்கு போனது மட்டும் தான். இந்த சோகக் கதையை மனிசியிடம் சொல்லி அழுது, அனுதாப அலையில் நீந்தி, கம்போடியாவில் சோழன் கட்டின கோயில் பார்க்க வெளிக்கிட்ட SJC92 குறூப்போடு இணைந்திருந்தேன்.காலம்பற விடியிற நேரம் கம்போடியா விமான நிலையத்தில் வந்திறங்க, வெக்கை முகத்தில் அடித்தது. எளிமையான அழகுடன் காட்சியளித்த சியாம் ரெப் விமான நிலையத்தின் தோற்றம் ஏனோ பலாலி விமான நிலையத்தை ஞாபகத்தில் கொண்டு வந்தது.

முக்கோண வடிவ கூர்மையான முகடுகளோடு, கம்போடிய கலாச்சாரத்தை தனித்துவமாய்  பிரதிபலித்த விமான நிலையத்தின் முகட்டிற்கு மேலாக மிளிர்ந்து கொண்டிருந்த காலைச் சூரியன், பல்லாண்டுகள் நிகழ்ந்த யுத்தத்திலிருந்து மீண்டு வரும் கம்போடிய தேசத்தை ஆசீர்வதிப்பதைப் போல இருந்தது.

நாங்களும் சந்தர்ப்பங்களை தவறவிடாமல் இருந்திருந்தால், பலாலி சர்வதேச விமான நிலையத்தையும் எங்களது பாரம்பரிய கட்டிடக் கலையை எடுத்துக் காட்டும் வண்ணம் கட்டியிருப்போம். சந்தர்ப்பங்களை கைவிடுவது என்பது எங்களிற்கு கைவந்த கலையல்லவா? வரலாற்றில் நாங்கள் கைவிட்ட சந்தர்ப்பங்கள் தான் எத்தனை? அதனால் தான் என்னவோ வரலாறும் எங்களை கைவிடத் தொடங்கிவிட்டது.

நீண்ட கால போர்களால் சிதைவுண்ட கம்போடியாவும் வியற்நாமும் ஏதோ ஒரு வகையில் பிரச்சினைகளை முடித்துக் கொண்டு, அழிவுண்ட தங்களது பொருளாதாரத்தை மீளவும் கட்டியெழுப்பத் தொடங்கி விட்டார்கள். நாங்களோ இன்னும் “கம்போடியா தந்த பாடம்” படிக்காமல் “வங்கம் தந்த பாடம்” படிப்பதிலேயே ஆர்வமாய் இருக்கிறோம். 

கம்போடிய தெருக்களில் நிறைய Lexus ரக வாகனங்கள் ஓடித்திரிந்தன. தெருவோரங்கள் யாழ்ப்பாணத்தின் புறநகர் பிரதேசங்களை ஞாபகப்படுத்த, ஆங்காங்கே Gloria Jeansம் KFCயும் எட்டிப்பார்த்தன. பலாலி வீதியை விட குறுகிய பிரதான தெருக்களை பாடசாலை சீருடையில் சைக்கிளில் பயணிக்கும் சிறுவர்களும், டுக் டுக் என்றழைக்கப்படும் மோட்டார் சைக்கிளால் இழுக்கப்படும் ரிக்‌ஷோக்களும் நிறைத்திருந்தார்கள். 

நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிற்கு சென்று, சற்று இளைப்பாறி விட்டு, பக்கத்தில் இருந்த ஒரு இந்திய உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டோம். கஜன் மரக்கறி சாப்பிட்டானா இல்லை கோழி எலும்பு கடித்தானா என்ற கேள்வியை சுருட்டி உங்கள் சட்டைப் பையில் வைத்துக்கொள்ளுங்கள். 

உச்சி வெய்யில் ஏறியிருந்த ஒரு மணியளவில் எங்களை “கம்போடிய கோயில்” காட்ட அழைத்துச்செல்ல வாகனம் தயாரானது. ஆங்கிலம் துண்டற தெரியாத வாகன ஓட்டுனரோடும், ஹொட்டல்காரன் கீறித்தந்த வரைபடத்தோடும் கம்போடியாவில் கோயில் பார்க்க நாங்கள் புறப்பட்டோம். 

எங்களுடைய வாகனம் புத்தம் புதிதாகக் கட்டப்பட்ட அரச திணைக்களங்களின் காரியாலங்களை கடந்து, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சாலையில் மிதந்தது. கட்டிடங்கள் எல்லாம் வெள்ளை நிறத்திலும் ஒரே மாதிரியான சிவப்பு நிற கூரையமைப்போடும், வெள்ளைச் சீருடையும் சிவப்பு கழுத்துப் பட்டியும் அணிந்த கொன்வென்ட் பெட்டைகள் போல் அழகாக காட்சியளித்தன. 

கம்போடிய கோயிலிற்கு நுழைவுச் சீட்டு வாங்க,  எங்களுடைய வாகனத்தை கம்போடிய கலாச்சார அமைச்சின் அலுவலகத்தில் நிறுத்தினார்கள். ஒவ்வொருத்தரையும் தனித்தனியே படம் எடுத்து, எங்கள் படம் பொறித்த நுழைவுச் சீட்டைத் தந்துவிட்டு சுழையாக USD37 கறந்தார்கள்.

கம்போடியாவில் அமெரிக்க டொலர்கள் தான் புழக்கத்தில் உள்ளது. எந்தக் கடையிலும் அமெரிக்க டொலரில் சாமான் வாங்கலாம், அமெரிக்க டொலரிலும் கம்போடிய நாணமான ரியலிலும் விலைகள் குறிப்பிடப்பட்டிருக்கும்.  

முதலாவதாக நாங்கள் போன கோயில், அந்தக் காலத்தில் ஒரு பல்கலைக்கழகமாக இருந்திருக்க வேண்டுமாம். நாங்கள் அங்கே போய் இறங்க, வாகனத்தை சூழ்ந்து கொண்ட ஆடைகளும் புத்தகங்களும் விற்கும் சிறார்களின் கெஞ்சல் பரிதாபமாக இருந்தது. 

கெஞ்சும் சிறார்களை கடந்து போய் கோயிலின் வாயிலை கடந்தால், பாதையின் ஓரத்தில் அங்கங்களை இழந்த முன்னாள் Khmer Rogue போராளிகள் சிலர், வாத்திய இசை இசைத்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார்கள். 

பாரிய மரங்களின் கிளைகளிற்கும் விழுதுகளிற்குமிடையில் பரவிக்கிடைந்த நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சிதைந்த கட்டிட இடிபாகளிற்கூடாக நடந்து திரிந்தோம், படங்கள் பிடித்தோம்.. வெயிலில் வியர்க்க வியர்க்க நடந்து களைத்து போனோம். 

“மச்சான், அவங்கள் வரட்டும் நாங்கள் ஒரு இளநியை குடிச்சிட்டு பஸ்ஸிற்கு போவம்” என்று யோகதாஸ் சொல்ல, நாங்கள் நால்வர் இளநீரைக் குடித்து விட்டு பஸ்ஸை தேடினால், பஸ்ஸை காணவில்லை.

“Your bus.. other side” டுக் டுக் காரனொருத்தன் உதவிக்கு வந்தான். அபயத்தில் உதவிக்கு வந்தானா இல்லை சுத்துறானா என்று நாங்கள் குழம்பினோம். “You give two dollar.. I take you to bus” அவன் பேரம் பேசினான்.

“சரி போவமடா” என்று இன்பன் முடிவெடுக்க எல்லோரும் டுக் டுக்கில் ஏறினோம். காத்து வாங்கிக் கொண்டே டுக் டுக்கில் இரண்டு கிலோ மீட்டர்கள், அந்தக் கோயிலை சுற்றிக் கட்டப்பட்ட பெரிய மதிலைச் சுற்றிப் பயணித்து, எங்கள் பஸ் நின்ற இடத்தில் வந்து இறங்கினோம். 
“மச்சான், இனி Ankor Wat கோயிலிற்கு போவமடா” என்று யாரோ ஒருத்தன் சொல்ல, எல்லோரும் ஓமடா ஓமடா சொன்னார்கள். எல்லோரும் ஓமடா ஓமடா சொன்னதைக் கேட்டு, ஆங்கிலமும் தமிழும் தெரியாத டிரைவரோடு Khmer மொழி தெரியாத எங்கட சிறிபிரகாஷ், எங்களை Ankor Wat கோயிற்கு கொண்டு போய்ச் சேர்க்கப் பேச்சுவார்த்தையில் இறங்கினான். 

அடுத்த வாரம்.. Ankor Wot கோயிலில்

Angkor Wat.. கம்போடியாவில் 2

No comments:

Post a Comment