Friday, 2 March 2018

இளமை எனும் பூங்காற்று

எழுபதுகளில் பிறந்த எங்கள் தலைமுறைக்கும், எங்களிற்கு முந்தைய தலைமுறைக்கும், ஶ்ரீதேவி தான் வெள்ளித்திரையில் மின்னிய முதலாவது  கனவுக்கன்னி. அழகிய பெரிய கண்களும்,  சொத்தி மூக்கும், அபிநயக்கும் சிவந்த உதடுகளும், உயரமான உருவமும் என்று ஶ்ரீதேவி திரையில் தோன்றி எங்களை வசீகரித்து விடுவார், இன்றும் மனதிற்குள் வசீகரித்துக் கொண்டு தானிருக்கிறார்.

‭ஶ்ரீதேவி நடித்த படங்களில் இன்றும் நினைவில் நிலைத்து நிற்கும் சில காட்சிகளை மீளவும் நினைத்துப் பார்ப்பதே இந்தப் பதிவின் நோக்கம், மாறாக ஶ்ரீதேவிக்கு தேசியக் கொடி போர்த்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்வதல்ல.

பாலச்சந்தரின் மூன்று முடிச்சு திரைப்படம், பிற்காலத்தில் திரையுலகை கோலோச்சப் போகும் கமல்-ஶ்ரீதேவி-ரஜினி எனும் மூன்று நட்சத்திரங்கள், சினிமா எனும் பள்ளியின், பாலர் வகுப்பில் காலடி எடுத்து வைத்த திரைப்படம். 

மூன்று முடிச்சு படத்தின் “வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்” பாடல் காட்சியை இன்றும் மறக்க முடியாது.  Mouth Organ வாசித்துக் கொண்டே கமல் பாட, துடுப்புக்களை வலித்துக் கொண்டு ரஜினி வில்லத்னமாக சிரித்துக் கொண்டிருக்க, ஶ்ரீதேவியோ பாடலின் முதல் பாதியில் காதல் சொட்டச் சொட்டவும் கடைசியில் சோகம் நிறைந்த அதிர்ச்சியோடும் நடித்திருப்பார்.
மணவினைகள் யாருடனோ
மாயவனின் விதிவகைகள்
விதிவகைகள் முடிவு செய்யும்
வசந்தகால நீரலைகள்

என்று பாடலின் கடைசியில் ரஜினி உறுமலாக பாடும் வரிகள், இறுதியில் ஶ்ரீதேவியின் வாழ்க்கையை வர்ணிக்கும் வரிகளாகவே அமைந்து விட்டன. இந்தியாவின் மாபெரும் சினிமா நட்சத்திரம், இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத்த பேரழகி, தன்னை மணம் முடிக்க உச்ச நட்சத்திரத்திலிருந்து பெரும் கோடீஸ்வரர்கள் வரை வரிசையில் நிற்க, இரண்டாம் தாரமாக போனி கபூரை மணம் முடித்தது “மணவினைகள் யாருடனோ,
மாயவனின் விதிவகைகள்” தான்.

உறவினர் ஒருவரின் திருமண நிகழ்விற்கு டுபாய்க்கு போன ஶ்ரீதேவி, குடித்துவிட்டு குளிக்கப் போய், குளியல் தொட்டியில் மூழ்கி மரணிக்க போவதை எதிர்வுகூறிய கண்ணதாசனின் வரிகள் தான் “விதிவகைகள் முடிவு செய்யும், வசந்தகால நீரலைகள்” என்பவையா? 

பாரதிராஜாவின் “16 வயதினிலே” நடிக்கும் போது ஶ்ரீதேவிக்கு பதின்னான்கு வயது தான். கச்சை கட்டின சப்பாணியோடும் (கமல்), “இது எப்படியிருக்கு” பரட்டையோடும் (ரஜினி), மயிலு (ஶ்ரீதேவி) இந்தப் படத்தை காலத்தால் அழியாத காவியமாக படைத்திருப்பார். “செந்தூரப் பூவே” BGM இன்றைக்கும் எவ்வாறு இளையராஜாவின் புகழைப் பாடுகிறதோ, அதே போல் ஶ்ரீதேவி அறிமுகமாகும் அந்தப் பாடல் காட்சி என்றும் கண்ணுக்குள் நிலைத்து நிற்கும். ஶ்ரீதேவி ஆற்றைக் கடக்க முயலும் அந்த கிளுகிளு காட்சியை மையப்படுத்தி அவரது மரணத்திற்கு பின்னர் வெளியான மீம்ஸ் உண்மையிலேயே அருவருக்கத்தக்கது. 

கமலோடு ஶ்ரீதேவி அதிக படங்களில் ஜோடி சேர்ந்திருந்தாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தோடு இணைந்து நடித்த படங்களில் இருவருக்குமிடையில் இருக்கும் ஈர்ப்பு அழகாக அமைந்திருக்கும். தர்மயுத்தம் படத்தில் “ஆகாய கங்கை” பாடலில், ரஜினி கண்ணாடியை சுழற்றிக் கொண்டு ஸ்டைலாக நடந்து வருவது எவ்வளவு கம்பீரமாக இருந்ததோ, அதைவிட பாடலின் ஆரம்பத்தில் “தா..தான ன தா ன ன தா”வில் ஶ்ரீதேவியின் கண்கள் சொல்லும் கவிதையும் கொஞ்சும் முகபாவமும் கொள்ளையழகு. 

ஶ்ரீதேவியின் அழகில் வழமையாக ஒருவித கம்பீரம் கலந்த மிடுக்கு இருக்கும்.  ஶ்ரீதேவியின் அழகின் மிடுக்கை அடக்கி, அமைதிப்படுத்தி காட்சிப்படுத்திய பாடல்களில் நினைவில் வருவது, மகேந்திரன் இயக்கிய “ஜானி” படத்தின் “என் வானிலே” பாடல். மீண்டும் ரஜினியோடு இணைந்த இந்தப் படத்தில், தயக்கத்துடன் பியானோ வாசிக்கும் தலைவரை “no...no..no.. just listen” என்று அன்பாக அதட்டி, பாடலுக்குள் செல்லும் காட்சியை நூறு தரம் மீண்டும் மீண்டும் பார்க்கலாம். 

சுஜாதாவின் கணேஷ்-வசந்த் பாத்திரங்களை குதறித் தள்ளிய ப்ரியா திரைப்படத்தில், இளையராஜாவின் அற்புதமான “டார்லிங் டார்லிங் டார்லிங்” பாடலிற்கு பிகினி அணிந்து, ரஜினியும் படத்தில் இருக்கத்தகதாக, யாரோ ஒரு நடிகருடன் ஶ்ரீதேவி நடித்திருப்பார். பின்னாட்களில் “தொடையழகி”யாக பெயர் வாங்கிய ரம்பா,  ஶ்ரீதேவியின் இந்தப் பாடல் காட்சிக்கு கிட்டவும் வரமுடியாது. 

பகலில் ஒரு இரவு படத்தில் “இளமை எனும் பூங்காற்று” பாடலை மட்டும் ரசிக்க வேண்டும் என்றால், audioவில் தான் கேட்க வேண்டும். வீடியோவில் அந்தப் பாடலை பார்த்தால், ஶ்ரீதேவியை தாண்டி பாடலை ரசிக்க விசுவாமித்திரராக பிறந்திருக்க வேண்டும். “அங்கம் முழுதும், பொங்கும் இளமை”யோடு ஶ்ரீதேவி நடித்த இந்தப் பாடலை பல நூறுதரம் பார்த்தே இளமைக் காலங்களை இரண்டு தலைமுறைகள் கடந்து வந்திருக்கும். 

பச்சை தொப்பியணிந்து, பச்சை வர்ண உடையணிந்து, ஹெலிகாப்டரில் பறந்து கொண்டே, ஶ்ரீதேவி கமலோடு பாடும் குரு படத்தின் “பறந்தாலும் விடமாட்டேன்” பாட்டும், அதே படத்தில் தண்ணியடித்துவிட்டு வெள்ளை நிறச் சேலையில் கமலை கட்டிப்பிடித்து ஆடும் “எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்” பாட்டும் நினைவில் நிலைத்தவை. ஶ்ரீதேவிக்கு வெள்ளை நிறம் தான் மிகவும் பிடித்த நிறமாக இருந்திருக்க வேண்டும், ஏனெனில் பல படங்களில் அவர் வெள்ளைநிற உடையணிந்தே நடித்திருப்பார். 

வெள்ளை நிற சேலையில், நடமாடும் ஒரு வெண்ணிலவாகவே ஶ்ரீதேவி மிளிர்ந்த பாடல், வாழ்வே மாயம் படத்தில் கங்கை அமரனின் இசையிலமைந்த “நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா” பாடல். அதே படத்தில் இடம்பிடித்த, இரட்டை அர்த்தங்களால் நிரம்பி வழிந்த “தேவி ஶ்ரீதேவி” பிற்காலத்தில் சிம்பு பாடிய பீப் பாடலிற்கு ஒரு முன்னோடி. 

ஶ்ரீதேவிக்கு கிடைக்க வேண்டிய தேசிய விருதை கமல்ஹாசன் தட்டிப்பறித்ததாக பரவலாக பேசப்பட்ட படம், பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறை. “கண்ணே கலைமானே” பாடலிற்கு உயிரூட்டமளித்து, ச்சுப்ரமணி...ச்சுப்ரமணி என்று நாய்க்குட்டியைக் கொஞ்சும் பாக்கியலக்‌ஷ்மியாக நடித்த ஶ்ரீதேவி தான் இந்தப் படத்தின் super star. ரயில் நிலையத்தில் அரங்கேறும் கடைசிக் காட்சி கமலுக்கு எந்தளவு பெயர் சேர்த்ததோ, அதைவிட பலமடங்கு காட்சிகளில் திரைப்படமெங்கும் ஶ்ரீதேவி கலக்கியிருப்பார். 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலகை ஒரு காலத்தில் முடிசூடா ராணியாக கோலோச்சிய ஶ்ரீதேவியின் அவலச்சாவு பல சந்தேகங்களிற்கு இடமளித்திருக்கிறது. அவர் மரணித்த விதமும் சூழ்நிலையும் ஏனோ பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தை தான் நினைவில் கொண்டு வந்தது.

நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை


1 comment:

  1. தேசியவிருது கமல் தட்டிப்பறித்த இடம் இடிக்கிறது;கமல் கூறியதையே கூற வேண்டியுள்ளது, "சிறந்த நடிகர்" என்றது தான் கமலுக்குக் கிடைத்தது.ஷபானா அஸ்மி தட்டிச் சென்று விட்டார்,சிறந்த நடிகைக்கான விருதை...என்னைப் பொறுத்தவரை கமலஹாசனின் பெண்வடிவம் அல்லது ஸ்ரீதேவியின் ஆண்வடிவம் கமல்,,குழந்தைப் பருவத்திலிருந்து வந்தது முதல் நடிப்பால் கவர்ந்தவர்கள்...

    ReplyDelete