Friday, 16 March 2018

பரி யோவான் பொழுதுகள்: 2018 Big Match
March 9, 2018

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் 112வது வடக்கின் பெரும் போர் (Battle of the North) என்றழைக்கப்படும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரிக்குமிடையிலான, மூன்று நாள் கிரிக்கட் போட்டியின் இரண்டாவது நாள் முடிவிற்கு வருகிறது.

வட மாகாணத்தின் தலைசிறந்த பாடசாலை கிரிக்கெட் அணியாக கடந்த ஐந்து வருடங்களாக மகுடம் சூட்டிக் கொண்ட பரி யோவான் கல்லூரி அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில், 8 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை இழந்து ஒரு இக்கட்டான நிலையில் நிற்க, அழகிய யாழ்ப்பாண நகரை இரவின் இருள் சூழ்ந்து கொள்கிறது.

உலகின் மறுகோடியில், கடும் குளிரில் விறைத்துப் போயிருக்கும் நோர்வே நாட்டிலிருந்து, வாமபாகன் அண்ணா பதிவு செய்த “பாலும் கசந்ததடி, படுக்கையும் நொந்ததடி” என்ற முகநூல் பதிவு, ஒவ்வொரு பரி யோவான் பழைய மாணவனின் மனநிலையை படம்பிடித்துக் காட்டுகிறது, பரி யோவான்களின் சமூகவலைத்தளங்களிலும் அதிகமாகப் பகிரப்படுகிறது.

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சபை நடாத்தும் சுற்றுப் போட்டியில், இரண்டாவது பிரிவில் விளையாடும் ஒரேயொரு தமிழ்ப் பாடசாலையான பரி யோவான் கல்லூரி கிரிக்கட் அணிதானா கடந்த இரண்டு நாட்களாக, மத்திய கல்லூரி மைதானத்தில் ஆடியது என்ற ஆதங்கம் உலகெங்கும் பரந்து வாழும் பரி யோவான் சமூகத்தின் மனதில் கவலையாக எதிரொலிக்கிறது. 

“ரோயல் கொலிஜ்ஜை வென்ற டீமை எப்ப இறக்குவியள்” என்று சென்ரல் கொலிஜ் அன்புத் தம்பியொருத்தரின் நக்கல், பரி யோவான்களின் இதயத்தை பிழிகிறது. 

“பசைவாளிகள் தயாராகிறது, விக்னபாலனும் விஜயராகவனும் விசேட விமானத்தில் யாழ்ப்பாணம் விரைகிறார்கள்” என்று இன்னுமொரு நண்பன், 1982ல் தோல்வியின் விளிம்பிலிருந்து நொட்டி நொட்டி ஆட்டத்தை காப்பாற்றிய பரி யோவானின் வரலாற்றை நக்கலுடன் ஞாபகப்படுத்துகிறார். 

“சிறிதரனும் சஞ்சீவும் எங்கிருந்தாலும் உடனடியாக மைதானத்திற்கு வரவும், 1993ல் பாவித்த அதே மட்டைகளை மறக்காமல் கொண்டு வரவும்”, 1993ல் ஐந்து மணித்தியாலங்கள் அடித்து ஆடி, மத்திய கல்லூரியின் வெற்றியை தட்டிப்பறித்த ஜோடிக்கும் நக்கலும் நளினமும் கலந்து விடுக்கப்பட்ட அழைப்பு முகநூலில் லைக்குகளை அள்ளுகிறது.

யாழ்ப்பாணத்தில் மைதானத்திலும், Thepaparae.comன் அதியுயர் தரம் வாய்ந்த ஓளிபரப்பினூடாக, நேரம் காலம் பார்க்காமல், மெல்பேர்ண் தொட்டு லண்டன் தாண்டி டொரோன்டோ கடந்து பொஸ்டனிலும் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பரி யோவான் பழைய மாணவர்களிடமிருந்தோ பெரிதாக எந்தவிதமான எதிர்வினைகளும் வெளிவரவில்லை. 

“ என்ன... ரெண்டு நாளில் மட்ச் முடிஞ்சிடும் என்டியள், இன்னும் மட்ச் நடக்குது போல” களநிலவரம் அறிந்ததும், வீடுகளிலும் சமூக வலைத்தளங்களிலும், பரி யோவான் சமூகம் எதிர்கொண்ட எள்ளலும் நக்கலும் வரலாறு காணாதது.

“முப்பது வரியமா பிக் மட்ச் பார்க்கிறன், இப்பத் தான் ஆறு ஓவரில் 8 ரன்னிற்கு நாலு விக்கெட் விழுறது பார்க்கிறன்” முகநூலில் வரலாற்றுப் பாடங்கள் நடக்க, “இன்னிங்ஸால வாங்கப் போறியள், நாளைக்கு லன்ஞ்சுக்கு முதல் முடிஞ்சிடும்” சாத்திரக்காரர் எதிர்வுகூறினார்கள்.

அந்த வெள்ளிக்கிழமை பின்னேரம், யாழ்ப்பாண பண்ணைக் கடலில் சூரியன் கரையும் பொழுதில், முதல் இன்னிங்ஸில் பரி யோவான் அணி அடித்த 217 ஓட்டங்களிற்கு பதிலடியாக 328 ஓட்டங்களை மத்திய கல்லூரி அடித்த பின், இரண்டாவது இன்னிங்ஸ் ஆட களமிறங்கிய பரி யோவான் அணியின் இளைய ஆட்டக்காரர்கள் நால்வர் அடுத்தடுத்து ஆட்டமிழந்திருந்தார்கள்.

“நாங்க எப்படியும் செய்வம் அண்ணா.. என்று சொல்லித் தான் ஜூனியர்ஸ் முன்னுக்கு போனவங்கள்” பரி யோவான் அணியின் கப்டன் ஜதுஷன் அந்த பின்னேரப் பொழுதில் கண்மூடி திறக்க முதல் இழந்த நாலு விக்கெட்டுக்களின் கதையை சொல்கிறார். 

“ஷெரூபனை இறக்க அம்பயர் விடேல்ல..அப்பத் தான் ஜூனியர்ஸ் முன்னுக்கு வந்தவங்கள்.. ரெண்டு night watchman வேற out ஆகிட்டாங்கள்..ஜூனியர்ஸ் maximum try பண்ணினவங்கள்..”தனது அணியின் எந்த வீரனையும் விட்டுக் கொடுக்காது ஜதுஷன் கதைத்துக் கொண்டு போனார். 

“அந்த நாலு விக்கெட்டுக்களை எடுத்திட்டு.. அவங்கள் எங்களுக்கு முன்னால வந்து நின்று celebrate பண்ணின விதம்.. எப்படியாவது ஏதாவது செய்யோணும் என்ற ஒரு இதை தந்திச்சு” பரி யோவானின் போன வருட Big Matchன் கதாநாயகன் கபில்ராஜின் குரலில் இன்னும் அந்த ஓர்மம் ஒலித்தது.  “பெடியள் அன்றைக்கு இரவு அழுது கொண்டு தான் அண்ணே வீட்ட போனவங்கள்” கல்லூரியின் கிரிக்கட் அணியோடு இணைந்திருந்த தம்பியொருத்தர் தகவல் தந்தார். 

யாழ்ப்பாணத்தின் பிரபல ஹோட்டல்களிலும் உணவகங்களிலும் ஒன்றுகூடிய, Big Match பார்க்க போன பரி யோவான் பழைய மாணவர்களின் களை இழந்த முகங்களை, “நாளைக்கு இருக்கு மச்சான் fight back, எங்கட Johnian fight back” என்று உற்சாகப்படுத்தவும் பெடியள் இருந்தார்கள். 

பரி யோவான் அணியை Big Match வெற்றிகளிற்கு வழிநடத்திய முன்னாள் கிரிக்கட் அணி கப்டன்களும், கிரிக்கெட் வீரர்களும், பழைய மாணவர்களும் அன்றிரவு பரி யோவான் கிரிக்கட் அணியின் வீரர்களிற்கு, முகநூல் மூலமாகவும் தொலைபேசி வாயிலாகவும் அனுப்பிய நூற்றுக்கணக்கான தொடர்பாடல்களில் பொதிந்திருந்தது ஒரே ஒரு செய்தி மட்டும் தான். 

“Give your best tomorrow, whatever happens, we are proud of you, we are Johnians, Johnians always play the game” 

SJC95 Batch ஒன்றுகூடிய இடத்தில் அந்த Johnian Fightback பற்றிய நம்பிக்கை  கொஞ்சம் அதிகமாகவே இருந்தற்கு காரணம், அந்த சிறிய குழுவில், பிரம்புக் கதிரைகளில், கம்பீரமாக சிரித்துக் கொண்டு இருந்த அந்த இருவர்... 1993ம் ஆண்டின் Big Match கதாநாயகர்கள்...சிறிதரன் & சஞ்சீவ்... ஓம்.. இருவரும் ஒன்றாக Big Match நேரம் யாழ்ப்பாணத்தில் தான் நின்றார்கள்.

“மச்சான்.. நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு டீமோட ஒருக்கா கதையுங்கோடா” நண்பர்கள் வலியுறுத்த, பரி யோவானின் அதிபரிற்கு, அந்த இரவிலும், அணியோடு கதைக்க அனுமதி கேட்டு சிறியிடமிருந்து ஒரு குறுந்தகவல் பறக்கிறது. அடுத்த இரு நிமிடங்களில் அதிபரிடமிருந்து பதில் வருகிறது...”Yes”. 

மார்ச் 10, 2018சனிக்கிழமை

112வது வடக்கின் பெரும் போரின் கடைசி நாள், வெற்றியின் விளிம்பில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி....

பரி யோவான் வளாகத்தில் ஒன்றுகூடிய பரி யோவானின் கிரிக்கெட் அணியோடு அணியின் தலைவர் ஜதுஷன், அந்த நாளின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். “மூன்டு பேர் fifty அடிச்சா காணும்.. எப்படியும் 200 வந்திடும்.. எங்களிற்கு 100 ரன் lead வந்திடும்”, அவர் சொல்லி வாய் மூடவில்லை, “100 ரன் இருந்தா காணுமடா.. நாங்க போட்டு எடுத்திடுவம்” அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் கபில்ராஜின் குரலில் நம்பிக்கை நிறைந்திருந்தது.

“இது என்ரயும் ஜதுவிடயும் கடைசி year அண்ணா.. நாங்க முந்தி என்ன தான் செய்திருந்தாலும்.. இந்த Match தான் நாளைக்கு எல்லார்ட நினைவிலும் நிற்கும்.. அதான் நாங்க ஏதாவது செய்யோணும் என்று இறங்கினாங்கள்” கபில்ராஜ், அந்தக் கணங்களை மீண்டும் மீட்டுக் கொண்டார். 

மத்திய கல்லூரி மைதானத்தில் வந்திறங்கிய பரி யோவான் அணியை சந்தித்துப் பேசி உற்சாகப்படுத்த, சஞ்சீவையும் சிறியையும் நித்திரைப் பாயால் எழுப்பிக் கொண்டு வந்து இறக்கினார்கள் SJC95 Batch பெடியள். 


“தம்பிமார்.. நாங்க இறங்கேக்க 8 விக்கெட் போய்ட்டுது.. உங்களிற்கு இன்னும் 6 விக்கெட் இருக்கு... அதுவும் இனி தான் திறமான batsmen வர இருக்கு.. எப்படியும் வெல்லலாமடா” தங்களுக்கேயுரிய அந்த பம்பல் கலந்த பாணியில் சிறியும் சஞ்சீவும் அணியோடு கதைக்கத் தொடங்கினார்கள்.

25 ஆண்டுகளிற்கு முன்னர் சாதித்துக் காட்டிய அண்ணாமார் கதைக்க கதைக்க பரி யோவான் அணியின் நம்பிக்கை அதிகரித்துக் கொண்டேயிருந்தது. “Forget the Big Match, Forget the crowd, Forget everything.. just focus on the next ball” இங்கிலீஷ் இல்லாத ஜொனியன் pep talkஆ, “this is your time to make history Boys, all the best” அடித்து சொல்லிவிட்டு சிறியும் சஞ்சீவும் நகர்கிறார்கள். 

103 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய பரி யோவான் அணிக்கு, பந்துகளை அடித்தாடிய ஜதுஷன் (50), கபில்ராஜ் (50), ஷெரூபன் (46), டினோஷன் (33) பலம் சேர்க்க, இன்னிங்ஸ் தோல்வி தவிர்க்கப்பட்டதுமன்றி, மத்திய கல்லூரிக்கு வெற்றி இலக்காக 109 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்படுகிறது. 

Johnian Fight Back .. பற்றிய செய்தி உலகமெல்லாம் பரவ, மத்திய கல்லூரி மைதானமும், பரி யோவான்களின் WhatsApp Forumகளும் சூடு பிடிக்கத் தொடங்குகின்றன. போட்டது போட்டபடியிருக்க, மனிசி பிள்ளைகளின் கதைகள் கேட்காமல் போக, அடுத்து வந்த மணித்தியாலங்கள், Thepapare.comன் நேரடி ஓளிபரப்பை பார்ப்பதில் தான் கரைகிறது. 

மத்திய கல்லூரியின் ஒவ்வொரு விக்கெட்டாக விழ, இருந்த இடத்தை விட்டு அசைந்தால், விக்கெட் விழுவது நின்றுவிடுமோ என்ற கிலேசத்தில், பசி, தாகம், மூத்திரம் என்று அனைத்தையும் அடக்கிக் கொண்டு, ஆட்டத்தை வழமைக்கு மாறான அமைதியுடன், பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் பரி யோவானின் பழைய மாணவர்கள்.

20/1....20/2....20/3....36/4....57/5...
ஐந்தாவது விக்கெட்டாக மத்திய கல்லூரியின் அணித்தலைவர் தசோபன், கபில்ராஜின் பந்துவீச்சில் Bowled ஆக, இழந்திருந்த உற்சாகம் மீளவும் எட்டிப் பார்க்கிறது. ஆட்டமிழந்து செல்லும் எதிரணியின் தலைவரின் தோள்மேல் அன்பாக கையை போட்டு நட்புடன் வழியனுப்பி வைக்கும் கபில்ராஜின் செய்கை ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. 

அடுத்து வந்த 7 ஓவர்களில் மத்திய கல்லூரியின் ஆட்ட நாயகன் மதுஷனும் (53) ராஜ்கிளின்டனும் இணைந்து எடுத்த 25 ஓட்டங்கள் பரி யோவான்களின் எதிர்பார்ப்பை சோதித்தது.  அணியின் எண்ணிக்கை 82 ஓட்டங்களில் இருக்கும் போது மதுஷன் கபில்ராஜின் பந்துவீச்சில் bowled ஆக, மீண்டும் உற்சாகம் பனைமரத்தில் ஏறியது.

9/101... வெற்றியைக் கொண்டாட பரி யோவான்கள் தயாராக, “யாழ்ப்பாண பிஸ்தாக்கள்” என்று போல் பிரகலாதன் அண்ணா வர்ணித்த மத்திய கல்லூரி அணியோ போராட தயாராகிறது. மைதானத்தை சுற்றிப் பார்வையாளர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டேயிருக்க, சில வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்ற குழப்பங்கள் நிகழ்ந்து விடக்கூடாது என்று இரு தரப்பு பழைய மாணவர்களும் நம்பிக்கையோடு காத்திருக்க, ஆட்டம் தனது கடைசி நிமிடங்களிற்கு முன்னேறுகிறது. 

பரி யோவான் அணியின் சிறந்த பந்துவீச்சாளர்களான கபில்ராஜும் ஜதுஷனும் மாறி மாறி பந்து வீசுகிறார்கள், மெல்ல மெல்ல மத்திய கல்லூரி அணியோ இலக்கை நோக்கி முன்னேறுகிறது. ஒரு பந்து, ஓரே பந்து, ஆட்டத்தின் தலைவிதியை நிர்ணயக்கும். ஆட்டம் எந்தப் பக்கம் சாயும் என்று யாருமே எதிர்வுகூற வாயைத் திறக்கவில்லை. இதயம் படபடக்க, நகத்தை கடித்துத் துப்பியவாறு, இரு கல்லூரிகளதும் பல்லாயிரக்கணகான பழைய மாணவர்கள் உலகமெங்கும் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

9/106, ஆட்டம் நிறைவடைய இன்னும் 9 பந்துகளே இருக்கின்றன. அந்த 9 பந்துகளில் மத்திய கல்லூரி அணி, இலக்கை எட்டாவிட்டால், ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிந்துவிடும். சுப்ரமணியம் பூங்கா முனையிலிருந்து கபில்ராஜ் ஓடி வருகிறார்.. ஏற்கனவே 5 விக்கெட்டுக்களை சாய்த்து விட்டார்.

“Yorker போட்டு விக்கெட்டை பிடுங்குவம் என்டு தான் போட்டனான்.. ஆனா காலுக்க விழுந்துட்டு”, காலிற்குள் விழுந்த பந்தை மத்திய கல்லூரி வீரன் fine legற்கும் deep square legற்குமிடையில் glance பண்ண.. 9/110... மத்திய கல்லூரி ஆதரவாளர்கள் மைதானத்திற்குள் ஓடுகிறார்கள்.

195 ஆண்டுகால பழமை வாய்ந்த பரி யோவான் கல்லூரிக்கு என்று பல சிறப்பம்சங்கள் உண்டு. அந்த சிறப்பம்சங்களில் பிரதானமானது, காலங் காலமாக, தலைமுறை தலைமுறையாக, பேணப்பட்டும் காவப்பட்டும் வரும் விழுமியங்கள் (Values). 

பரி யோவானின் விழுமியங்கள் காலங்கள் கடந்தும் அதன் மாணவர்களின் வாழ்வில் நிலைத்து நிற்கும். வாழ்விலே ஏதோவொரு சந்தர்ப்பத்தில் சவால்களை சந்திக்கும் போது இந்த விழுமியங்களே ஜொனியன்ஸிற்கு கைகொடுக்கும்.

Pitch may be bumby
Light may be blinding, but
Johnians always play the game

என்ற வாசகங்கள், ஜொனியன்ஸ் விளையாட்டுக் களத்தில் மட்டுமன்றி வாழ்க்கை எனும் களத்திலும் என்றுமே கடைசி வரை போராட வேண்டும், அதுவும் நேர்மையாக போராட வேண்டும் என்ற நற்பண்பை வலியுறுத்த, ஒவ்வொரு ஜொனியினின் மண்டைக்குள்ளும் விதைக்கப்படும் விழுமியம், தாரக மந்திரம்.

தலைமுறை தலைமுறையாக விதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த விழுமியம் இன்றும் அழியாமல் உயிரோடு இருப்பதை எடுத்துக் காட்டிய கிரிக்கட் ஆட்டம் தான், 2018ன் 112வது வடக்கின் பெரும் போர். 


ஆட்டத்தின் முதல் இரு நாட்களும் அபாரமாக ஆடிய யாழ்ப்பாண மத்திய கல்லூரி அணி அடைந்த வெற்றி மிகவும் பாராட்டத்தக்கது. ஆட்டத்தின் under dogsஆக களமிறங்கி, வியக்கத்தக்க வகையிலும் எல்லோராலும் ரசிக்கத்தக்க வகையிலும் aggressiveஆக விளையாடி, ஆட்டத்தில் வெற்றியீட்டிய மத்திய கல்லூரி அணிக்கு வாழ்த்துக்கள். 

இன்னிங்ஸ் தோல்வியின் விளிம்பிலிருந்து, கடைசிவரை கடுமையாக போராடி, ஒழுக்க நெறி பிறழாது விளையாடி, எதிரணியையும் மரியாதையோடு நடாத்தி, காலங்கள் கடந்தும் அழியாத, அழிக்க முடியாத Johnian Fight Backஐ மீண்டும் அரங்கேற்றிய எமதருமை பரி யோவான் கல்லூரி அணி, அனைவரதும் மனதை வென்ற அணியாக தலை நிமிர்ந்தே ஆடுகளத்தை விட்டகன்றது. 

112வது வடக்கின் பெரும்போர் கிரிக்கட் ஆட்டத்தை யாழ்ப்பாண மத்திய கல்லூரியும், அகிலமெங்கும் பரவியிருக்கும் இரு கல்லூரிகளதும் கிரிக்கட் ஆர்வலர்களின் மனதுகளை பரி யோவான் கல்லூரி அணியும் வென்றன, என்பது தான் இந்த அற்புதமான 2018 Big Match போட்டியின் தனித்துவம். 

Johnians always play the game !1 comment:

  1. As usual, this is great piece of writing! Great work Jude.
    No need to watch the game just reading this will be sufficient.

    ReplyDelete