Friday, 30 March 2018

மகாலிங்கம் மாஸ்டர்

“மச்சான், நீயொரு செத்த வீட்டு Bloggerடா” அருமை நண்பனொருவன் அண்மையில் நக்கலடித்தான். “யார் செத்தாலும் நீ Blog எழுதுறாயடா” என்று அவனது நக்கல் நீண்டது.

“யார் செத்தாலும் Blog எழுத வராது மச்சான்” கடித்தவனை கட்டுப்படுத்தினேன். “எங்கட வாழ்க்கையில் ஏதோ ஒரு இடத்தில், ஏதோ ஒரு விதமாக,  எங்களில் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினவர்களைப் பற்றித் தான்டா எழுதலாம்” என்று அவனை அறுத்தேன்.

பள்ளியில் பாடப் படிப்பிற்கும் மேலாக, நல்ல பழக்க வழக்கங்களையும், வாழ்க்கையின் யதார்த்தங்களையும் சொல்லித்தந்து, மாணவர் நலனில் அன்றும் என்றும் அக்கறை காட்டிய ஆசிரியர்கள் எங்களை விட்டு மறையும் போது, மனம் வலிக்கிறது, கண்களில் ஈரம் முட்டுகிறது.
——————————————


எங்களுடைய SJC92 பிரிவு, Upper Schoolல் காலடி எடுத்து வைக்கும் போது, ஒரு பரீட்சார்த்த முயற்சியாக எட்டாம் வகுப்பு தவணை பரீட்சையின் அடிப்படையில், மண்டைக்காய்கள் A பிரிவிலும், அரைகுறைகள் B பிரிவிலும், பம்பல்காரன்கள் C பிரிவிலும், குழப்படிக்காரன்கள் D பிரிவிலும் அடைக்கப்பட்டார்கள். 

B பிரிவில் இருந்த எங்களிற்கு வாய்த்த வாத்திமார் எல்லாரும் கல்லூரியின் மிகச்சிறந்த ஆசிரியர்கள், legends, அரை குறைகளை நிமிர்த்தி எடுக்க அனுப்பப்பட்ட சிறப்புப் படைபிரிவு. இந்த படைப்பிரிவின் சிறப்புத் தளபதி, அதாவது வகுப்பாசிரியர், தமிழாசிரியரான கதிர்காமத்தம்பி மாஸ்டர். இவரோடு பல களங்கள் கண்ட தளபதிகளான, மகாலிங்கம் மாஸ்டர்(English), அன்ரனிப்பிள்ளை மாஸ்டர்(Maths), பிரபாகரன் மாஸ்டர்(Science), ஒகஸ்ரின் மாஸ்டர்(Commerce) ஆகியோரும் களமிறக்கப்பட்டார்கள். 

மகாலிங்கம் மாஸ்டர் ஒரு படு ஸ்டைலான ஆள். நேர்த்தியாக iron பண்ணப்பட்ட ஷேர்ட் அணிந்து, தடிப்பான மீசைக்கு கறுப்பு dye அடித்து, கமர்கட்டுக்குள் கமகமக்கும் perfumeம் அடித்து, கம்பீரமாக மோட்டார் சைக்கிளில் அமர்ந்து, அவர் பாடசாலை வளாகத்திற்குள் வலம்வரும் காட்சியில் “நானொரு ஜொனியன்” என்ற மிடுக்கு நிறைந்திருக்கும். 

நாங்கள் படிக்கும் காலத்தில் அவருடைய கறுப்பு நிற மோட்டார் சைக்கிள், தனபாலன் மாஸ்டரின் வீட்டடியில் தான் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். மோட்டார் சைக்கிளில் பரி யோவானின் வாயியில் வளைவைக் கடந்து வரும் மகாலிங்கம் மாஸ்டர், பாடசாலை மணியிருக்குமிடத்தில் வலப்புறம் திரும்பி, staff cycle park தாண்டி, male staff roomற்கும் உயர்ந்த Church மதிலிற்குமிடையில் இருக்கும் ஓடையடியில் வேகம் குறைத்து, பஞ்சலிங்கம் மாஸ்டர் வீட்டடியில் gear மாற்றி, தனபாலன் மாஸ்டர் வீட்டு வாயிலில் வந்திறங்கும் காட்சி இன்றும் நினைவில் நிழலாடுகிறது. 

சிறிய மேடு பள்ளங்களில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கினாலும், 180 பாகையில் நிமிர்ந்து நிற்கும் மகாலிங்கத்தாரின் உடம்பு குனிந்து வளையாது.... விண்ணெண்று எப்போதும் நிமிர்ந்தே நிற்கும், அவரின் ஆளுமையைப் போல.

———————————————

“மச்ச்ச்சாஆஆன், உனக்கு ஞாபகமிருக்கா, ஒருக்கா எங்கட முழு கிளாசுக்கும் பிரம்பால சளீர் சளீர் என்று அடி விழுந்தது” ஷெல்டன் நினைவுபடுத்தினான். “கையை இழுத்து இழுத்து நாப்பத்து நாலு பேருக்கும் அந்த வயசிலும் களைக்காமல் விளாசினார்டா.... மச்ச்ச்சாஆஆன்“ ஷெல்டனின் குரலில் அடிவாங்கிய வலி இன்னும் தெரிந்தது. “அவர் எப்பவும் நல்ல fit ஆன ஆள் மச்சான்” என்றான் ஷெல்டன். 

சூப்பர் ஸ்டார் ரஜினினிகாந்தை விட ஸ்டைலாக, விறுவிறுவென்று நடந்து வரும் மகாலிங்கம் மாஸ்டரை பார்த்ததாலே எங்களுக்கு மரியாதை கலந்த பயம் வந்து ஒட்டிக்கொள்ளும்.  ஆங்கில மொழியை முழுமையான ஈடுபாட்டடோடு மகாலிங்கம் மாஸ்டர் கற்றுத் தந்ததோடு மட்டும் அவர் நிற்கவில்லை.  பரி யோவானின் புகழ் பூத்த கிரிக்கெட் வீரனும், பயிற்றுவிற்பாளரும், மெய்வல்லுனர் வீரருமான மகாலிங்கம் மாஸ்டர், எங்களுக்குள் பரி யோவானின் விழுமியங்களை விதைத்ததில் பெரும் பங்கு வகித்தவர்.  

————————————-


“டேய்... உனக்கு அவர் inswing outswing சொல்லித்தந்தது ஞாபகமில்லையாடா” இரவு பதினொன்றரைக்கு WhatsApp அலைவரிசையில் ஷியாமல்ராஜ் கலகலப்பானான். “இல்லை மச்சான்...ஞாபகமில்லை” தொலைக்காட்சியில் Aidan Markram, inswingerஐ தட்டி நூறாவது ரன்னை எடுத்துவிட்டு, Batஐ தூக்கி காட்டினார்.

“டேய் வடுவா ராஸ்கல்.. நீ சென் ஜோன்ஸிலா படிச்சனீ... (சிரிப்பு), நீ உண்மையிலேயே எங்கட B class தானாடா (சிரிப்பு)...டேய் உண்மையை சொல்லு” ஷியாமல் formற்கு வந்தான். “பஹ்ரேய்ன் வந்து வப்பன்.. அலட்டாமல் கதையை சொல்லு” பயந்தாங்கோழியை பயமுறுத்தினேன்.

“ஒரு நாள் மச்சான்... வகுப்பில சரியோ.. inswing என்டா எப்படி பந்தை பிடிக்கோணும், outswing என்டா எப்படி பிடிக்கோணும் என்று வடிவாஆஆஆ சொல்லித் தந்தார்டா” ஷியாமல் எண்பதுகளிற்கே கூட்டி போனான். “கையை எப்படி திருப்போணும்.. கால் எப்படி creaseல் land பண்ணோனும்... சரியோ..என்று செய்து காட்டினது கூட உனக்கு ஞாபகமில்லையா.. மொக்கா” ஷியாமல் விவரித்தான்.

“பிறகுடா.. ஒரு batsmanஆக, எப்ப bowler inswing போடப்போறான், எப்ப outswinger வரும் என்டதை எப்படி pick பண்ணுறது என்றதையும் சொல்லித் தந்தார்” என்று, யாழ்ப்பாணத்தை கலக்கிய பரி யோவானின் சகலதுறை ஆட்டக்காரரன் தான் SK மகாலிங்கம் என்பதை ஷியாமல் நினைவுபடுத்தினான். “அதால தான்டா நான் சென் ஜோன்ஸிற்கு opening batsman...” என்று தன்னைப் பற்றி ஷியாமல் புளுகத் தொடங்கவும் பஹ்ரேய்ன்காரன் WhatsApp தொடர்பை துண்டித்து என்னை காப்பாற்றவும் நேரம் சரியாக இருந்தது. 

———————————————-

1989ம் ஆண்டில் ஒரு நாள், அருளானந்தம் Blockல் பழைய பூங்கா பக்கம் இருந்த எங்களது 11B வகுப்பறையில் மகாலிங்கம் மாஸ்டர் ஆங்கிலப் பாடம் நடாத்திக் கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்தை இந்திய இராணுவமும்  மண்டையன் குழு ஈபிக்காரன்களும் மரண பயந்தோடு கடும் கிடுக்குப் பிடிக்குள் வைத்திருந்த காலம். 

எங்கிருந்தோ திடீரென வந்த இரண்டு அக்காமார், வகுப்பிற்குள் நுழைந்து “சுதந்திரப் பறவைகள்” என்ற எழுத்துக்களைப் பொறித்த துண்டுப் பிரசுரங்களை வகுப்பிற்குள் விநியோகிக்கத் தொடங்கினார்கள், நாங்களும் அடித்து பிடித்து வாங்க, வகுப்பு குழம்பி விட்டது. ஒரு கணம் திகைத்துப் போன மகாலிங்கம் மாஸ்டர், கையைக் கட்டிக் கொண்டு அவர்களின் செய்கையை தலையை ஆட்டிக் கொண்டே பார்த்துக் கொண்டு நின்றார். 

நோட்டீஸ் தந்துவிட்டு அக்காமார் வகுப்பை விட்டு வெளியேறப் போக “தங்கச்சிமார், இங்க வாங்கோ” மகாலிங்கம் மாஸ்டரின் கம்பீரக் குரல் ஒலித்தது. “நான் இங்க பாடம் நடத்திக் கொண்டு நிற்கிறன்.. கேட்டு கேள்வியில்லாமல் நீங்க பூந்து நோட்டீஸ் குடுக்கிறியள்.. இது என்ன பழக்கம்” மகாலிங்கம் மாஸ்டரின் குரலில் ஒலித்த கண்டிப்பை அக்காமார் எதிர்பார்க்கவில்லை. “பிழை தான் சேர்.. மன்னித்துக் கொள்ளுங்கோ” அக்காமார் அடுத்த வகுப்பிற்கு பறந்தார்கள். 

————————————————

அதே வருஷம், புங்கன்குளம் வீதியில் வசித்த நண்பன் யசீந்திராவோடு, அவனது அடி வளவிற்குள் கிரிக்கெட் விளையாடி விட்டு, வீட்டு வாசலில் சைக்கிளில் நின்று கொண்டே கதைத்துக் கொண்டிருக்கும் போது பின்னேரம் ஆறுமணியிருக்கும். சாரம் கட்டிக் கொண்டு, கையில் கொக்குத் தடியோடு மகாலிங்கம் மாஸ்டர் அரியாலைப் பக்கமிருந்து புங்கன்குளம் வீதியால் சைக்கிளில் வர, பரி யோவானின் பாரம்பரியத்திற்கமைய, சைக்கிளால் இறங்கி மரியாதை கொடுத்தோம். ஓரு சின்ன தலையாட்டலோடு மகாலிங்கம் மாஸ்டர் கடந்து போனார். 

அடுத்த நாள், மகாலிங்கம் மாஸ்டர் வகுப்பிற்குள் வந்து Good morning சொல்லிவிட்டு, நேராக யசீயரும் நானும் இருந்த வாங்கடியிற்கு வந்து, முதுகில் மொங்கு மொங்கு என்று மொங்கினார். “உதென்ன பழக்கம்...இரவில ரோட்டில நின்று கதைக்கிறது.. அவங்கள் அறுவார் வேற திரியுறாங்கள்” எங்கள் மேலிருந்த அக்கறையும் எங்கள் பாதுகாப்பில் இருந்த ஆதங்கமும் அந்த மொங்கலில் வெளிப்பட்டது. 

———————————————

1994ம் ஆண்டு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பியிருந்த நேரம், கொழும்பிலிருக்கும் யாரோக்கோ ஒரு கடிதம் தந்துவிட, எங்கள் வீட்டிற்கே மகாலிங்கம் மாஸ்டர் வந்து விட்டார். பழைய வகுப்பறை ஞாபகத்தில் எட்டியே நின்ற என்னை “இங்க வாரும் ஐசே” என்று பக்கத்தில் கூப்பிட்டு இருத்தி அமர்த்தி, கையைப் பிடித்து “you have done well.. all the best” என்று வாழ்த்திவிட்டு, அம்மாவைப் பார்த்து “அவன் நல்லா வருவான்..நீங்க யோசிக்க தேவையில்லை”என்று சொல்லி, அன்பாக முதுகில் மொங்கி விட்டுத் தான் சென்றார். 

——————————————

பள்ளிக்கூடத்தில் படிப்பிக்கும் போது கண்டிப்பும் கறாராயும் இருந்த மகாலிங்கம் மாஸ்டரை, பழைய மாணவனாக சந்திக்கும் போது அன்பையும் அக்கறையையும் வாரி வழங்குவார். 2002, 2005, 2013, ஆண்டுகளில் அவரது கச்சேரி east lane சந்தித்த பொழுது, பக்கத்தில் இருத்தி கையைப் பிடித்துக் கொண்டு “அந்தக் காலம் போல வராதுடா” என்று அவருக்கேயுரிய தனித்துவமான சிரிப்போடு வாசல்வரை வந்து வழியனுப்பி வைப்பார். 2013ல் போகும் போது அவர் சுடச்சுட பரிமாறிய அந்த வடையின் சுவை இன்னும் வாயில் நிற்கிறது. 

2016 Big Match பார்க்கப் போன போது, ஆட்டத்தின் கடைசி நாளிரவு வலம்புரி ஹோட்டல் மண்டபத்தில் நடந்த விருந்தில் தான் என்னுடைய Favourite ஆசிரியர்களில் ஒருவரான மகாலிங்கம் மாஸ்டரை கடைசியாக சந்தித்தது. 

Big Match  முடிய பழைய மாணவர்களுக்கும் பரி யோவானின் கிரிக்கெட் அணிக்குமான இரவு விருந்தான அந்த நிகழ்விற்கு மகாலிங்கம் மாஸ்டர் தான் பிரதம விருந்தினர். நவீனன், தெய்வேந்திரா, ரட்ணராஜா, ஜூட் ஜோசப்,  விக்னபாலன் என்று பரி யோவானின் legends, மகாலிங்கம் மாஸ்டரை சூழ்ந்திருக்க, மகிழ்ச்சியிலும் பெருமையிலும் மூழ்கியிருக்க வேண்டிய மகாலிங்கம் மாஸ்டரின் முகத்தில் ஏனோ ஏதோவொரு சலனம். 

பிரதம விருந்தினர் உரையாற்ற மகாலிங்கம் மாஸ்டர் ஒலிவாங்கியை பிடித்த போது அந்த சலனத்தின் காரணம் அவரின் பேச்சில் ஒலித்தது. அவரது பெரும் நேசத்திற்குரிய பரி யோவான் கிரிக்கட் அணி, அந்த Big Match  கிரிக்கெட் ஆட்டத்தை ஆடிய விதத்தை, பரி யோவான்கள் மட்டுமே கூடியிருந்த அந்த சபையில்,  மகாலிங்கம் மாஸ்டர் அக்கறையோடு கண்டித்தார். 


ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி கதைத்து, பரி யோவானின் தனித்துவமான வரலாற்றையும் பாரம்பரியத்தையும் எடுத்தியம்பி, இன்றைய தலைமுறைக்கு எங்களது விழுமியங்கள் பற்றி மகாலிங்கம் மாஸ்டர் வகுப்பெடுக்க, நாங்களும் வகுப்பறையில் இருந்த அதே பயத்தோடு கேட்டுக் கொண்டிருந்தோம். மகாலிங்கம் மாஸ்டர் கடைசியாக கலந்து கொண்ட பரி யோவான் நிகழ்வு இதுவாகத் தானிருக்கும். 

———————————————-

எங்கட SJC92 batch நண்பன் தயாபரன், மகாலிங்கம் மாஸ்டரைப் எழுதிய நினைவுப் பகிர்விலிருந்து  சுட்ட ஒரு பந்தியோடு இந்தப் பதிவை நிறைவாக்குவது பொருத்தமாக இருக்கும். 

 “கம்பீரமான நடை, மிடுக்கான தோற்றம், துணிவாக தன் கருத்தை  இன்சொல்லுடன்  பகிரும் முறை, ஆங்கிலத்திலும் தமிழிலும் சரளமாக பேசும் திறன், நேரந்தவராமை என்ற பண்புகளுடன் வாழ்ந்த மகாலிங்கம் மாஸ்டரைப் பார்க்கும் போதெல்லாம், பரியோவான் அன்னையின்  ஏகபுத்திரன் இவர் தானோ என்று எண்ணத் தோன்றும்”

Friday, 23 March 2018

கம்போடியாவில்...
“மச்சான் நான் இன்றைக்கு மரக்கறி” பாங்கொக் சுவர்ணபூமி விமான நிலையத்தில் கம்போடியாவிற்கு விமானம் ஏறமுதல் காலம்பற கோப்பி குடித்துக் கொண்டிருக்கும் போது கஜன் அறிவித்தான். 

“ஏன்டா மச்சான்.. இன்றைக்கு திங்கட்கிழமை தானே..ஏதும் விரதமோ” Starbucksல் வாங்கிய Latteஐ குடித்துக் கொண்டே கேட்டேன். 

“கோயிலுக்கு போற நாட்களில் நான் சைவம் மச்சான்” கஜன் உறுதிபட பறைந்தான். கஜனிற்கு பக்கத்தில் Bacon & Egg sandwichஐ கடித்துக் கொண்டிருந்த டிலாஷ், கடிப்பதை ஒரு கணம்  நிறுத்தி, கஜனை பார்த்துவிட்டு, மறுபடியும் சாப்பிடத் தொடங்கினான். 
பரி யோவானில் படித்த காலங்களில் நாங்கள் போன ஒரே ஒரு சுற்றுலா, முதலாம் வகுப்பில், றீகல் தியேட்டரில் Jungle Book படம் பார்த்துவிட்டு சுப்ரமணியம் பூங்காவிற்கு போனது மட்டும் தான். இந்த சோகக் கதையை மனிசியிடம் சொல்லி அழுது, அனுதாப அலையில் நீந்தி, கம்போடியாவில் சோழன் கட்டின கோயில் பார்க்க வெளிக்கிட்ட SJC92 குறூப்போடு இணைந்திருந்தேன்.காலம்பற விடியிற நேரம் கம்போடியா விமான நிலையத்தில் வந்திறங்க, வெக்கை முகத்தில் அடித்தது. எளிமையான அழகுடன் காட்சியளித்த சியாம் ரெப் விமான நிலையத்தின் தோற்றம் ஏனோ பலாலி விமான நிலையத்தை ஞாபகத்தில் கொண்டு வந்தது.

முக்கோண வடிவ கூர்மையான முகடுகளோடு, கம்போடிய கலாச்சாரத்தை தனித்துவமாய்  பிரதிபலித்த விமான நிலையத்தின் முகட்டிற்கு மேலாக மிளிர்ந்து கொண்டிருந்த காலைச் சூரியன், பல்லாண்டுகள் நிகழ்ந்த யுத்தத்திலிருந்து மீண்டு வரும் கம்போடிய தேசத்தை ஆசீர்வதிப்பதைப் போல இருந்தது.

நாங்களும் சந்தர்ப்பங்களை தவறவிடாமல் இருந்திருந்தால், பலாலி சர்வதேச விமான நிலையத்தையும் எங்களது பாரம்பரிய கட்டிடக் கலையை எடுத்துக் காட்டும் வண்ணம் கட்டியிருப்போம். சந்தர்ப்பங்களை கைவிடுவது என்பது எங்களிற்கு கைவந்த கலையல்லவா? வரலாற்றில் நாங்கள் கைவிட்ட சந்தர்ப்பங்கள் தான் எத்தனை? அதனால் தான் என்னவோ வரலாறும் எங்களை கைவிடத் தொடங்கிவிட்டது.

நீண்ட கால போர்களால் சிதைவுண்ட கம்போடியாவும் வியற்நாமும் ஏதோ ஒரு வகையில் பிரச்சினைகளை முடித்துக் கொண்டு, அழிவுண்ட தங்களது பொருளாதாரத்தை மீளவும் கட்டியெழுப்பத் தொடங்கி விட்டார்கள். நாங்களோ இன்னும் “கம்போடியா தந்த பாடம்” படிக்காமல் “வங்கம் தந்த பாடம்” படிப்பதிலேயே ஆர்வமாய் இருக்கிறோம். 

கம்போடிய தெருக்களில் நிறைய Lexus ரக வாகனங்கள் ஓடித்திரிந்தன. தெருவோரங்கள் யாழ்ப்பாணத்தின் புறநகர் பிரதேசங்களை ஞாபகப்படுத்த, ஆங்காங்கே Gloria Jeansம் KFCயும் எட்டிப்பார்த்தன. பலாலி வீதியை விட குறுகிய பிரதான தெருக்களை பாடசாலை சீருடையில் சைக்கிளில் பயணிக்கும் சிறுவர்களும், டுக் டுக் என்றழைக்கப்படும் மோட்டார் சைக்கிளால் இழுக்கப்படும் ரிக்‌ஷோக்களும் நிறைத்திருந்தார்கள். 

நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிற்கு சென்று, சற்று இளைப்பாறி விட்டு, பக்கத்தில் இருந்த ஒரு இந்திய உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டோம். கஜன் மரக்கறி சாப்பிட்டானா இல்லை கோழி எலும்பு கடித்தானா என்ற கேள்வியை சுருட்டி உங்கள் சட்டைப் பையில் வைத்துக்கொள்ளுங்கள். 

உச்சி வெய்யில் ஏறியிருந்த ஒரு மணியளவில் எங்களை “கம்போடிய கோயில்” காட்ட அழைத்துச்செல்ல வாகனம் தயாரானது. ஆங்கிலம் துண்டற தெரியாத வாகன ஓட்டுனரோடும், ஹொட்டல்காரன் கீறித்தந்த வரைபடத்தோடும் கம்போடியாவில் கோயில் பார்க்க நாங்கள் புறப்பட்டோம். 

எங்களுடைய வாகனம் புத்தம் புதிதாகக் கட்டப்பட்ட அரச திணைக்களங்களின் காரியாலங்களை கடந்து, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சாலையில் மிதந்தது. கட்டிடங்கள் எல்லாம் வெள்ளை நிறத்திலும் ஒரே மாதிரியான சிவப்பு நிற கூரையமைப்போடும், வெள்ளைச் சீருடையும் சிவப்பு கழுத்துப் பட்டியும் அணிந்த கொன்வென்ட் பெட்டைகள் போல் அழகாக காட்சியளித்தன. 

கம்போடிய கோயிலிற்கு நுழைவுச் சீட்டு வாங்க,  எங்களுடைய வாகனத்தை கம்போடிய கலாச்சார அமைச்சின் அலுவலகத்தில் நிறுத்தினார்கள். ஒவ்வொருத்தரையும் தனித்தனியே படம் எடுத்து, எங்கள் படம் பொறித்த நுழைவுச் சீட்டைத் தந்துவிட்டு சுழையாக USD37 கறந்தார்கள்.

கம்போடியாவில் அமெரிக்க டொலர்கள் தான் புழக்கத்தில் உள்ளது. எந்தக் கடையிலும் அமெரிக்க டொலரில் சாமான் வாங்கலாம், அமெரிக்க டொலரிலும் கம்போடிய நாணமான ரியலிலும் விலைகள் குறிப்பிடப்பட்டிருக்கும்.  

முதலாவதாக நாங்கள் போன கோயில், அந்தக் காலத்தில் ஒரு பல்கலைக்கழகமாக இருந்திருக்க வேண்டுமாம். நாங்கள் அங்கே போய் இறங்க, வாகனத்தை சூழ்ந்து கொண்ட ஆடைகளும் புத்தகங்களும் விற்கும் சிறார்களின் கெஞ்சல் பரிதாபமாக இருந்தது. 

கெஞ்சும் சிறார்களை கடந்து போய் கோயிலின் வாயிலை கடந்தால், பாதையின் ஓரத்தில் அங்கங்களை இழந்த முன்னாள் Khmer Rogue போராளிகள் சிலர், வாத்திய இசை இசைத்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார்கள். 

பாரிய மரங்களின் கிளைகளிற்கும் விழுதுகளிற்குமிடையில் பரவிக்கிடைந்த நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சிதைந்த கட்டிட இடிபாகளிற்கூடாக நடந்து திரிந்தோம், படங்கள் பிடித்தோம்.. வெயிலில் வியர்க்க வியர்க்க நடந்து களைத்து போனோம். 

“மச்சான், அவங்கள் வரட்டும் நாங்கள் ஒரு இளநியை குடிச்சிட்டு பஸ்ஸிற்கு போவம்” என்று யோகதாஸ் சொல்ல, நாங்கள் நால்வர் இளநீரைக் குடித்து விட்டு பஸ்ஸை தேடினால், பஸ்ஸை காணவில்லை.

“Your bus.. other side” டுக் டுக் காரனொருத்தன் உதவிக்கு வந்தான். அபயத்தில் உதவிக்கு வந்தானா இல்லை சுத்துறானா என்று நாங்கள் குழம்பினோம். “You give two dollar.. I take you to bus” அவன் பேரம் பேசினான்.

“சரி போவமடா” என்று இன்பன் முடிவெடுக்க எல்லோரும் டுக் டுக்கில் ஏறினோம். காத்து வாங்கிக் கொண்டே டுக் டுக்கில் இரண்டு கிலோ மீட்டர்கள், அந்தக் கோயிலை சுற்றிக் கட்டப்பட்ட பெரிய மதிலைச் சுற்றிப் பயணித்து, எங்கள் பஸ் நின்ற இடத்தில் வந்து இறங்கினோம். 
“மச்சான், இனி Ankor Wat கோயிலிற்கு போவமடா” என்று யாரோ ஒருத்தன் சொல்ல, எல்லோரும் ஓமடா ஓமடா சொன்னார்கள். எல்லோரும் ஓமடா ஓமடா சொன்னதைக் கேட்டு, ஆங்கிலமும் தமிழும் தெரியாத டிரைவரோடு Khmer மொழி தெரியாத எங்கட சிறிபிரகாஷ், எங்களை Ankor Wat கோயிற்கு கொண்டு போய்ச் சேர்க்கப் பேச்சுவார்த்தையில் இறங்கினான். 

அடுத்த வாரம்.. Ankor Wot கோயிலில்

Angkor Wat.. கம்போடியாவில் 2

Friday, 16 March 2018

பரி யோவான் பொழுதுகள்: 2018 Big Match
March 9, 2018

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் 112வது வடக்கின் பெரும் போர் (Battle of the North) என்றழைக்கப்படும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரிக்குமிடையிலான, மூன்று நாள் கிரிக்கட் போட்டியின் இரண்டாவது நாள் முடிவிற்கு வருகிறது.

வட மாகாணத்தின் தலைசிறந்த பாடசாலை கிரிக்கெட் அணியாக கடந்த ஐந்து வருடங்களாக மகுடம் சூட்டிக் கொண்ட பரி யோவான் கல்லூரி அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில், 8 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை இழந்து ஒரு இக்கட்டான நிலையில் நிற்க, அழகிய யாழ்ப்பாண நகரை இரவின் இருள் சூழ்ந்து கொள்கிறது.

உலகின் மறுகோடியில், கடும் குளிரில் விறைத்துப் போயிருக்கும் நோர்வே நாட்டிலிருந்து, வாமபாகன் அண்ணா பதிவு செய்த “பாலும் கசந்ததடி, படுக்கையும் நொந்ததடி” என்ற முகநூல் பதிவு, ஒவ்வொரு பரி யோவான் பழைய மாணவனின் மனநிலையை படம்பிடித்துக் காட்டுகிறது, பரி யோவான்களின் சமூகவலைத்தளங்களிலும் அதிகமாகப் பகிரப்படுகிறது.

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சபை நடாத்தும் சுற்றுப் போட்டியில், இரண்டாவது பிரிவில் விளையாடும் ஒரேயொரு தமிழ்ப் பாடசாலையான பரி யோவான் கல்லூரி கிரிக்கட் அணிதானா கடந்த இரண்டு நாட்களாக, மத்திய கல்லூரி மைதானத்தில் ஆடியது என்ற ஆதங்கம் உலகெங்கும் பரந்து வாழும் பரி யோவான் சமூகத்தின் மனதில் கவலையாக எதிரொலிக்கிறது. 

“ரோயல் கொலிஜ்ஜை வென்ற டீமை எப்ப இறக்குவியள்” என்று சென்ரல் கொலிஜ் அன்புத் தம்பியொருத்தரின் நக்கல், பரி யோவான்களின் இதயத்தை பிழிகிறது. 

“பசைவாளிகள் தயாராகிறது, விக்னபாலனும் விஜயராகவனும் விசேட விமானத்தில் யாழ்ப்பாணம் விரைகிறார்கள்” என்று இன்னுமொரு நண்பன், 1982ல் தோல்வியின் விளிம்பிலிருந்து நொட்டி நொட்டி ஆட்டத்தை காப்பாற்றிய பரி யோவானின் வரலாற்றை நக்கலுடன் ஞாபகப்படுத்துகிறார். 

“சிறிதரனும் சஞ்சீவும் எங்கிருந்தாலும் உடனடியாக மைதானத்திற்கு வரவும், 1993ல் பாவித்த அதே மட்டைகளை மறக்காமல் கொண்டு வரவும்”, 1993ல் ஐந்து மணித்தியாலங்கள் அடித்து ஆடி, மத்திய கல்லூரியின் வெற்றியை தட்டிப்பறித்த ஜோடிக்கும் நக்கலும் நளினமும் கலந்து விடுக்கப்பட்ட அழைப்பு முகநூலில் லைக்குகளை அள்ளுகிறது.

யாழ்ப்பாணத்தில் மைதானத்திலும், Thepaparae.comன் அதியுயர் தரம் வாய்ந்த ஓளிபரப்பினூடாக, நேரம் காலம் பார்க்காமல், மெல்பேர்ண் தொட்டு லண்டன் தாண்டி டொரோன்டோ கடந்து பொஸ்டனிலும் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பரி யோவான் பழைய மாணவர்களிடமிருந்தோ பெரிதாக எந்தவிதமான எதிர்வினைகளும் வெளிவரவில்லை. 

“ என்ன... ரெண்டு நாளில் மட்ச் முடிஞ்சிடும் என்டியள், இன்னும் மட்ச் நடக்குது போல” களநிலவரம் அறிந்ததும், வீடுகளிலும் சமூக வலைத்தளங்களிலும், பரி யோவான் சமூகம் எதிர்கொண்ட எள்ளலும் நக்கலும் வரலாறு காணாதது.

“முப்பது வரியமா பிக் மட்ச் பார்க்கிறன், இப்பத் தான் ஆறு ஓவரில் 8 ரன்னிற்கு நாலு விக்கெட் விழுறது பார்க்கிறன்” முகநூலில் வரலாற்றுப் பாடங்கள் நடக்க, “இன்னிங்ஸால வாங்கப் போறியள், நாளைக்கு லன்ஞ்சுக்கு முதல் முடிஞ்சிடும்” சாத்திரக்காரர் எதிர்வுகூறினார்கள்.

அந்த வெள்ளிக்கிழமை பின்னேரம், யாழ்ப்பாண பண்ணைக் கடலில் சூரியன் கரையும் பொழுதில், முதல் இன்னிங்ஸில் பரி யோவான் அணி அடித்த 217 ஓட்டங்களிற்கு பதிலடியாக 328 ஓட்டங்களை மத்திய கல்லூரி அடித்த பின், இரண்டாவது இன்னிங்ஸ் ஆட களமிறங்கிய பரி யோவான் அணியின் இளைய ஆட்டக்காரர்கள் நால்வர் அடுத்தடுத்து ஆட்டமிழந்திருந்தார்கள்.

“நாங்க எப்படியும் செய்வம் அண்ணா.. என்று சொல்லித் தான் ஜூனியர்ஸ் முன்னுக்கு போனவங்கள்” பரி யோவான் அணியின் கப்டன் ஜதுஷன் அந்த பின்னேரப் பொழுதில் கண்மூடி திறக்க முதல் இழந்த நாலு விக்கெட்டுக்களின் கதையை சொல்கிறார். 

“ஷெரூபனை இறக்க அம்பயர் விடேல்ல..அப்பத் தான் ஜூனியர்ஸ் முன்னுக்கு வந்தவங்கள்.. ரெண்டு night watchman வேற out ஆகிட்டாங்கள்..ஜூனியர்ஸ் maximum try பண்ணினவங்கள்..”தனது அணியின் எந்த வீரனையும் விட்டுக் கொடுக்காது ஜதுஷன் கதைத்துக் கொண்டு போனார். 

“அந்த நாலு விக்கெட்டுக்களை எடுத்திட்டு.. அவங்கள் எங்களுக்கு முன்னால வந்து நின்று celebrate பண்ணின விதம்.. எப்படியாவது ஏதாவது செய்யோணும் என்ற ஒரு இதை தந்திச்சு” பரி யோவானின் போன வருட Big Matchன் கதாநாயகன் கபில்ராஜின் குரலில் இன்னும் அந்த ஓர்மம் ஒலித்தது.  “பெடியள் அன்றைக்கு இரவு அழுது கொண்டு தான் அண்ணே வீட்ட போனவங்கள்” கல்லூரியின் கிரிக்கட் அணியோடு இணைந்திருந்த தம்பியொருத்தர் தகவல் தந்தார். 

யாழ்ப்பாணத்தின் பிரபல ஹோட்டல்களிலும் உணவகங்களிலும் ஒன்றுகூடிய, Big Match பார்க்க போன பரி யோவான் பழைய மாணவர்களின் களை இழந்த முகங்களை, “நாளைக்கு இருக்கு மச்சான் fight back, எங்கட Johnian fight back” என்று உற்சாகப்படுத்தவும் பெடியள் இருந்தார்கள். 

பரி யோவான் அணியை Big Match வெற்றிகளிற்கு வழிநடத்திய முன்னாள் கிரிக்கட் அணி கப்டன்களும், கிரிக்கெட் வீரர்களும், பழைய மாணவர்களும் அன்றிரவு பரி யோவான் கிரிக்கட் அணியின் வீரர்களிற்கு, முகநூல் மூலமாகவும் தொலைபேசி வாயிலாகவும் அனுப்பிய நூற்றுக்கணக்கான தொடர்பாடல்களில் பொதிந்திருந்தது ஒரே ஒரு செய்தி மட்டும் தான். 

“Give your best tomorrow, whatever happens, we are proud of you, we are Johnians, Johnians always play the game” 

SJC95 Batch ஒன்றுகூடிய இடத்தில் அந்த Johnian Fightback பற்றிய நம்பிக்கை  கொஞ்சம் அதிகமாகவே இருந்தற்கு காரணம், அந்த சிறிய குழுவில், பிரம்புக் கதிரைகளில், கம்பீரமாக சிரித்துக் கொண்டு இருந்த அந்த இருவர்... 1993ம் ஆண்டின் Big Match கதாநாயகர்கள்...சிறிதரன் & சஞ்சீவ்... ஓம்.. இருவரும் ஒன்றாக Big Match நேரம் யாழ்ப்பாணத்தில் தான் நின்றார்கள்.

“மச்சான்.. நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு டீமோட ஒருக்கா கதையுங்கோடா” நண்பர்கள் வலியுறுத்த, பரி யோவானின் அதிபரிற்கு, அந்த இரவிலும், அணியோடு கதைக்க அனுமதி கேட்டு சிறியிடமிருந்து ஒரு குறுந்தகவல் பறக்கிறது. அடுத்த இரு நிமிடங்களில் அதிபரிடமிருந்து பதில் வருகிறது...”Yes”. 

மார்ச் 10, 2018சனிக்கிழமை

112வது வடக்கின் பெரும் போரின் கடைசி நாள், வெற்றியின் விளிம்பில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி....

பரி யோவான் வளாகத்தில் ஒன்றுகூடிய பரி யோவானின் கிரிக்கெட் அணியோடு அணியின் தலைவர் ஜதுஷன், அந்த நாளின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். “மூன்டு பேர் fifty அடிச்சா காணும்.. எப்படியும் 200 வந்திடும்.. எங்களிற்கு 100 ரன் lead வந்திடும்”, அவர் சொல்லி வாய் மூடவில்லை, “100 ரன் இருந்தா காணுமடா.. நாங்க போட்டு எடுத்திடுவம்” அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் கபில்ராஜின் குரலில் நம்பிக்கை நிறைந்திருந்தது.

“இது என்ரயும் ஜதுவிடயும் கடைசி year அண்ணா.. நாங்க முந்தி என்ன தான் செய்திருந்தாலும்.. இந்த Match தான் நாளைக்கு எல்லார்ட நினைவிலும் நிற்கும்.. அதான் நாங்க ஏதாவது செய்யோணும் என்று இறங்கினாங்கள்” கபில்ராஜ், அந்தக் கணங்களை மீண்டும் மீட்டுக் கொண்டார். 

மத்திய கல்லூரி மைதானத்தில் வந்திறங்கிய பரி யோவான் அணியை சந்தித்துப் பேசி உற்சாகப்படுத்த, சஞ்சீவையும் சிறியையும் நித்திரைப் பாயால் எழுப்பிக் கொண்டு வந்து இறக்கினார்கள் SJC95 Batch பெடியள். 


“தம்பிமார்.. நாங்க இறங்கேக்க 8 விக்கெட் போய்ட்டுது.. உங்களிற்கு இன்னும் 6 விக்கெட் இருக்கு... அதுவும் இனி தான் திறமான batsmen வர இருக்கு.. எப்படியும் வெல்லலாமடா” தங்களுக்கேயுரிய அந்த பம்பல் கலந்த பாணியில் சிறியும் சஞ்சீவும் அணியோடு கதைக்கத் தொடங்கினார்கள்.

25 ஆண்டுகளிற்கு முன்னர் சாதித்துக் காட்டிய அண்ணாமார் கதைக்க கதைக்க பரி யோவான் அணியின் நம்பிக்கை அதிகரித்துக் கொண்டேயிருந்தது. “Forget the Big Match, Forget the crowd, Forget everything.. just focus on the next ball” இங்கிலீஷ் இல்லாத ஜொனியன் pep talkஆ, “this is your time to make history Boys, all the best” அடித்து சொல்லிவிட்டு சிறியும் சஞ்சீவும் நகர்கிறார்கள். 

103 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய பரி யோவான் அணிக்கு, பந்துகளை அடித்தாடிய ஜதுஷன் (50), கபில்ராஜ் (50), ஷெரூபன் (46), டினோஷன் (33) பலம் சேர்க்க, இன்னிங்ஸ் தோல்வி தவிர்க்கப்பட்டதுமன்றி, மத்திய கல்லூரிக்கு வெற்றி இலக்காக 109 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்படுகிறது. 

Johnian Fight Back .. பற்றிய செய்தி உலகமெல்லாம் பரவ, மத்திய கல்லூரி மைதானமும், பரி யோவான்களின் WhatsApp Forumகளும் சூடு பிடிக்கத் தொடங்குகின்றன. போட்டது போட்டபடியிருக்க, மனிசி பிள்ளைகளின் கதைகள் கேட்காமல் போக, அடுத்து வந்த மணித்தியாலங்கள், Thepapare.comன் நேரடி ஓளிபரப்பை பார்ப்பதில் தான் கரைகிறது. 

மத்திய கல்லூரியின் ஒவ்வொரு விக்கெட்டாக விழ, இருந்த இடத்தை விட்டு அசைந்தால், விக்கெட் விழுவது நின்றுவிடுமோ என்ற கிலேசத்தில், பசி, தாகம், மூத்திரம் என்று அனைத்தையும் அடக்கிக் கொண்டு, ஆட்டத்தை வழமைக்கு மாறான அமைதியுடன், பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் பரி யோவானின் பழைய மாணவர்கள்.

20/1....20/2....20/3....36/4....57/5...
ஐந்தாவது விக்கெட்டாக மத்திய கல்லூரியின் அணித்தலைவர் தசோபன், கபில்ராஜின் பந்துவீச்சில் Bowled ஆக, இழந்திருந்த உற்சாகம் மீளவும் எட்டிப் பார்க்கிறது. ஆட்டமிழந்து செல்லும் எதிரணியின் தலைவரின் தோள்மேல் அன்பாக கையை போட்டு நட்புடன் வழியனுப்பி வைக்கும் கபில்ராஜின் செய்கை ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. 

அடுத்து வந்த 7 ஓவர்களில் மத்திய கல்லூரியின் ஆட்ட நாயகன் மதுஷனும் (53) ராஜ்கிளின்டனும் இணைந்து எடுத்த 25 ஓட்டங்கள் பரி யோவான்களின் எதிர்பார்ப்பை சோதித்தது.  அணியின் எண்ணிக்கை 82 ஓட்டங்களில் இருக்கும் போது மதுஷன் கபில்ராஜின் பந்துவீச்சில் bowled ஆக, மீண்டும் உற்சாகம் பனைமரத்தில் ஏறியது.

9/101... வெற்றியைக் கொண்டாட பரி யோவான்கள் தயாராக, “யாழ்ப்பாண பிஸ்தாக்கள்” என்று போல் பிரகலாதன் அண்ணா வர்ணித்த மத்திய கல்லூரி அணியோ போராட தயாராகிறது. மைதானத்தை சுற்றிப் பார்வையாளர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டேயிருக்க, சில வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்ற குழப்பங்கள் நிகழ்ந்து விடக்கூடாது என்று இரு தரப்பு பழைய மாணவர்களும் நம்பிக்கையோடு காத்திருக்க, ஆட்டம் தனது கடைசி நிமிடங்களிற்கு முன்னேறுகிறது. 

பரி யோவான் அணியின் சிறந்த பந்துவீச்சாளர்களான கபில்ராஜும் ஜதுஷனும் மாறி மாறி பந்து வீசுகிறார்கள், மெல்ல மெல்ல மத்திய கல்லூரி அணியோ இலக்கை நோக்கி முன்னேறுகிறது. ஒரு பந்து, ஓரே பந்து, ஆட்டத்தின் தலைவிதியை நிர்ணயக்கும். ஆட்டம் எந்தப் பக்கம் சாயும் என்று யாருமே எதிர்வுகூற வாயைத் திறக்கவில்லை. இதயம் படபடக்க, நகத்தை கடித்துத் துப்பியவாறு, இரு கல்லூரிகளதும் பல்லாயிரக்கணகான பழைய மாணவர்கள் உலகமெங்கும் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

9/106, ஆட்டம் நிறைவடைய இன்னும் 9 பந்துகளே இருக்கின்றன. அந்த 9 பந்துகளில் மத்திய கல்லூரி அணி, இலக்கை எட்டாவிட்டால், ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிந்துவிடும். சுப்ரமணியம் பூங்கா முனையிலிருந்து கபில்ராஜ் ஓடி வருகிறார்.. ஏற்கனவே 5 விக்கெட்டுக்களை சாய்த்து விட்டார்.

“Yorker போட்டு விக்கெட்டை பிடுங்குவம் என்டு தான் போட்டனான்.. ஆனா காலுக்க விழுந்துட்டு”, காலிற்குள் விழுந்த பந்தை மத்திய கல்லூரி வீரன் fine legற்கும் deep square legற்குமிடையில் glance பண்ண.. 9/110... மத்திய கல்லூரி ஆதரவாளர்கள் மைதானத்திற்குள் ஓடுகிறார்கள்.

195 ஆண்டுகால பழமை வாய்ந்த பரி யோவான் கல்லூரிக்கு என்று பல சிறப்பம்சங்கள் உண்டு. அந்த சிறப்பம்சங்களில் பிரதானமானது, காலங் காலமாக, தலைமுறை தலைமுறையாக, பேணப்பட்டும் காவப்பட்டும் வரும் விழுமியங்கள் (Values). 

பரி யோவானின் விழுமியங்கள் காலங்கள் கடந்தும் அதன் மாணவர்களின் வாழ்வில் நிலைத்து நிற்கும். வாழ்விலே ஏதோவொரு சந்தர்ப்பத்தில் சவால்களை சந்திக்கும் போது இந்த விழுமியங்களே ஜொனியன்ஸிற்கு கைகொடுக்கும்.

Pitch may be bumby
Light may be blinding, but
Johnians always play the game

என்ற வாசகங்கள், ஜொனியன்ஸ் விளையாட்டுக் களத்தில் மட்டுமன்றி வாழ்க்கை எனும் களத்திலும் என்றுமே கடைசி வரை போராட வேண்டும், அதுவும் நேர்மையாக போராட வேண்டும் என்ற நற்பண்பை வலியுறுத்த, ஒவ்வொரு ஜொனியினின் மண்டைக்குள்ளும் விதைக்கப்படும் விழுமியம், தாரக மந்திரம்.

தலைமுறை தலைமுறையாக விதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த விழுமியம் இன்றும் அழியாமல் உயிரோடு இருப்பதை எடுத்துக் காட்டிய கிரிக்கட் ஆட்டம் தான், 2018ன் 112வது வடக்கின் பெரும் போர். 


ஆட்டத்தின் முதல் இரு நாட்களும் அபாரமாக ஆடிய யாழ்ப்பாண மத்திய கல்லூரி அணி அடைந்த வெற்றி மிகவும் பாராட்டத்தக்கது. ஆட்டத்தின் under dogsஆக களமிறங்கி, வியக்கத்தக்க வகையிலும் எல்லோராலும் ரசிக்கத்தக்க வகையிலும் aggressiveஆக விளையாடி, ஆட்டத்தில் வெற்றியீட்டிய மத்திய கல்லூரி அணிக்கு வாழ்த்துக்கள். 

இன்னிங்ஸ் தோல்வியின் விளிம்பிலிருந்து, கடைசிவரை கடுமையாக போராடி, ஒழுக்க நெறி பிறழாது விளையாடி, எதிரணியையும் மரியாதையோடு நடாத்தி, காலங்கள் கடந்தும் அழியாத, அழிக்க முடியாத Johnian Fight Backஐ மீண்டும் அரங்கேற்றிய எமதருமை பரி யோவான் கல்லூரி அணி, அனைவரதும் மனதை வென்ற அணியாக தலை நிமிர்ந்தே ஆடுகளத்தை விட்டகன்றது. 

112வது வடக்கின் பெரும்போர் கிரிக்கட் ஆட்டத்தை யாழ்ப்பாண மத்திய கல்லூரியும், அகிலமெங்கும் பரவியிருக்கும் இரு கல்லூரிகளதும் கிரிக்கட் ஆர்வலர்களின் மனதுகளை பரி யோவான் கல்லூரி அணியும் வென்றன, என்பது தான் இந்த அற்புதமான 2018 Big Match போட்டியின் தனித்துவம். 

Johnians always play the game !Wednesday, 7 March 2018

பரி யோவான் பொழுதுகள்: Big Match is Calling...

Big Match is Calling....

யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டியங்கும், ஜொனியன் தம்பி அக்சரனின் AkiY T’Shirt நிறுவனம், காலத்திற்கு ஏற்ற விதவிதமான வாசகங்களை தாங்கிய T’Shirtகள் தயாரித்து விடுவதில் வல்லவர்கள். 2018ம் ஆண்டின் Central - St. John’s Big Matchற்காக அவர்கள் வெளியிட்டிருக்கும் “Big Match is Calling” என்ற வாசகங்கள் தாங்கிய T’Shirt, வெளிநாட்டிலும் தாயகத்திலும் வாழும் ஒவ்வொரு ஜொனியனின் மனதை அப்படியே படம்பிடித்து காட்டுவதாக அமைந்திருக்கிறது.

Big Match is calling... 

அப்படி என்னதான் இருக்கிறது இந்த கண்டறியாத Big Matchல்? சும்மாவே எடுப்பெடுக்கின்ற ஜொனியன்ஸ், இந்த Big Match காலத்தில் கொஞ்சம் அதிகமாகவே அலட்டிக் கொள்வது ஏன்? அடுத்து வரும் மூன்று நாட்களும் மனிசி, பிள்ளை, வேலை எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, Big Matchல் என்ன நடக்கிறது என்பதை அறிய, ஆவலாக Facebookஐயும் WhatsAppஐயும் நோண்டுவது ஏன்? போன இரண்டு வருடங்களாக Paparae.com ஒளிபரப்பும் நேரடி ஒளிபரப்பை, ஏதோ சர்வதேச கிரிக்கட் ஆட்டங்களை கண்டுகளிப்பது போல் பார்த்துக் ரசித்துக் கொண்டிருப்பதன் காரணம் தான் என்ன? 

Big Match is calling...

பாடசாலைக் காலங்களில், பின்னேரங்களில் சைக்கிளில் கூட்டம் கூட்டமாக, யாழ்ப்பாண வீதிகள் எங்கும், சிவப்பு கறுப்பு கொடிகளோடும், தகர டப்பாக்களோடும், திரிந்து, சுண்டுக்குளிக்கும் வேம்படிக்கும் முன்னாலும், பிரதான சந்திகளிலும், கூடி நின்று பாட்டுப் பாடி ஆடிய இளைஞர்களை, உலகின் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்தாலும், இன்றும் ஏனிந்த Big Match சுண்டியிழுக்கிறது? 

Big Match is calling...

வருடமெல்லாம் காதல் பாட்டுக்கள்  இயற்றி  இசையமைத்து பாடுவதிலும், குறும்படங்கள் தயாரிப்பதிலும் தங்கள் நேரத்தை செலவிடும் பரி யோவானின் கலைஞர்கள், மார்ச் மாதம் வந்தவுடன், போட்டது போட்டபடி இருக்க, Big Matchற்கு ஓரு பாட்டெழுதி, இசையமைத்து, drone வைத்து படம்பிடித்து, வீடியோவாக்கி வெளியிட வைக்கும் உந்துசக்கியை வழங்க இந்த Big Matchல் அப்படி என்ன தான் இருக்கிறது?

Big Match is calling...

கொளுத்தும் வெயிலில், பள்ளிக்கூட பெடியள் மைதானத்தில் விளையாட, மரநிழலிலும் கொட்டகைகளின் கீழும் இருந்தும் நின்றும், பரி யோவானை Big Match தோல்வியிலிருந்து காப்பாற்றிய விக்னபாலனினதும் ஶ்ரீதரனதும் கதைகளையும், இன்னும் பல பரி யோவான் பழங்கதைகளையும் அலுப்புத் தட்டாமல் திரும்ப திரும்ப கேட்கத் தானா இந்த இழவு Big Matchற்கு விமானம் ஏறி, பஸ்ஸும் ரயிலும் பிடித்து, பழைய மாணவர்கள் யாழ்ப்பாணத்திற்கு படையெடுக்கிறார்கள்?  

Big Match is calling...

பரி யோவானின் வில்லியம்ஸ் மண்டபத்திற்கும் பீட்டோ ஹோலிற்கும் நடுவிலிருந்து, பரி யோவானின் கிரிக்கட் அணியை சுமந்து கொண்டு புறப்படும் பேரூந்து, அந்த கம்பீரமான பரி யோவான் கல்லூரி வரவேற்பு வளைவைத் தாண்டுவதைப் பார்க்கவும், பேரூந்திற்கு முன்னாலோ பின்னாலோ, சைக்கிளிலிலோ காரிலோ, ஊர்வலமாக, பிரதான வீதி வழியாக அணியை அழைத்து செல்லும் அந்த Big Matchன் அற்புத கணங்களை அனுபவிக்கவா இத்தனை அலப்பறை? 

Big Match is calling...

ரோட்டோரம் சனம் நின்று மகிழ்வோடு கையசைத்து வாழ்த்த, காவல்துறையும் போக்குவரத்தை நிறுத்தி வழிவிட, பிரதான வீதி வழியே, தண்ணீர் தாங்கி தாண்டி, பிலிப்பரின் வைத்தியசாலை கடந்து, இலங்கை விமானப்படை சிதைத்த சென் ஜேம்ஸ் தேவாலயத்தை கண்டு, செல்வநாயகம் தூபியடியில் திரும்பி, இலங்கை அரசு எரித்து மீளக்கட்டியெழுப்பிய யாழ் பொது நூலகத்தடியில் நிறைவேறும் அந்த அட்டகாசமான குறுகிய பயணத்திற்காகவா இத்தனை ஆர்ப்பாட்டம்? 

Big Match is calling...
தள்ளாத வயதிலும், நோய் நொடிகளின் வேதனையிலும், சில மணி நேரங்களிற்கெனினும், தவறாமல் Big Match பார்க்க வரும் எங்கள் பழைய ஆசான்களோடு சில நிமிடங்கள் அளவளாவத் தான்,  
விதம் விதமாக சிவப்பு கறுப்பு டீ ஷேர்ட் செய்வித்து அணிந்து கொண்டு, கறுப்பு கண்ணாடியும் சிவப்புத் தொப்பியும் மாட்டிக் கொண்டு, Big Match பார்க்கப் போக ஜொனியன்ஸ் துடிக்கிறார்களா? 

Big Match is calling...

1987லிருந்து இரண்டாண்டுகள் தோல்விகளையே காணாத அணியை வழிநடத்திய சஞ்சீவனிற்கும், அதற்கு முந்தைய ஈராண்டுகள் பலமான பரி யோவான் அணிக்கு தலைமைதாங்கிய வாகீசனிற்கும், கிட்டாத Big Match வெற்றி எனும் பேறை 1990ல் சதீசன் அடைந்த கணத்தை போலவும், சுரேன்குமார் அடித்த 145 இன்னிங்ஸ் போல இன்னுமொரு செஞ்சரியையும் பார்க்கத் துடிக்கத் தானா பரி யோவான் பள்ளியின் பழைய மாணவர்கள் Big Match பார்க்க இவ்வளவு அந்தரப்படுகிறார்கள்  ?

Big Match is calling...

பாடசாலையில் படிக்கும் காலத்தில் கொடியோடு மைதானத்திற்குள் பாயும் பழைய மாணவர்களைப் பார்த்து ஏங்கியதை நினைத்து, கொடியோடு மைதானத்திற்குள் ஓட நீதிபதி ஜொனியன் இளஞ்செழியன் தடைவிதித்தும், எல்லைக் கோட்டிற்கு வெளியே மேளம் அடித்து பாட்டுப் பாடி, கத்திக் கூப்பாடு போட்டு, தலைமுறைகள் தாண்டிய ஜொனியன்ஸோடு ஆடி மகிழத் தான் இவர்கள் இவ்வளவு குத்தி முறிகிறார்களா? 

Big Match is calling...

அப்படி என்னதான் இருக்கிறது இந்த கண்டறியாத Big Matchல்? 

Friday, 2 March 2018

இளமை எனும் பூங்காற்று

எழுபதுகளில் பிறந்த எங்கள் தலைமுறைக்கும், எங்களிற்கு முந்தைய தலைமுறைக்கும், ஶ்ரீதேவி தான் வெள்ளித்திரையில் மின்னிய முதலாவது  கனவுக்கன்னி. அழகிய பெரிய கண்களும்,  சொத்தி மூக்கும், அபிநயக்கும் சிவந்த உதடுகளும், உயரமான உருவமும் என்று ஶ்ரீதேவி திரையில் தோன்றி எங்களை வசீகரித்து விடுவார், இன்றும் மனதிற்குள் வசீகரித்துக் கொண்டு தானிருக்கிறார்.

‭ஶ்ரீதேவி நடித்த படங்களில் இன்றும் நினைவில் நிலைத்து நிற்கும் சில காட்சிகளை மீளவும் நினைத்துப் பார்ப்பதே இந்தப் பதிவின் நோக்கம், மாறாக ஶ்ரீதேவிக்கு தேசியக் கொடி போர்த்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்வதல்ல.

பாலச்சந்தரின் மூன்று முடிச்சு திரைப்படம், பிற்காலத்தில் திரையுலகை கோலோச்சப் போகும் கமல்-ஶ்ரீதேவி-ரஜினி எனும் மூன்று நட்சத்திரங்கள், சினிமா எனும் பள்ளியின், பாலர் வகுப்பில் காலடி எடுத்து வைத்த திரைப்படம். 

மூன்று முடிச்சு படத்தின் “வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்” பாடல் காட்சியை இன்றும் மறக்க முடியாது.  Mouth Organ வாசித்துக் கொண்டே கமல் பாட, துடுப்புக்களை வலித்துக் கொண்டு ரஜினி வில்லத்னமாக சிரித்துக் கொண்டிருக்க, ஶ்ரீதேவியோ பாடலின் முதல் பாதியில் காதல் சொட்டச் சொட்டவும் கடைசியில் சோகம் நிறைந்த அதிர்ச்சியோடும் நடித்திருப்பார்.
மணவினைகள் யாருடனோ
மாயவனின் விதிவகைகள்
விதிவகைகள் முடிவு செய்யும்
வசந்தகால நீரலைகள்

என்று பாடலின் கடைசியில் ரஜினி உறுமலாக பாடும் வரிகள், இறுதியில் ஶ்ரீதேவியின் வாழ்க்கையை வர்ணிக்கும் வரிகளாகவே அமைந்து விட்டன. இந்தியாவின் மாபெரும் சினிமா நட்சத்திரம், இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத்த பேரழகி, தன்னை மணம் முடிக்க உச்ச நட்சத்திரத்திலிருந்து பெரும் கோடீஸ்வரர்கள் வரை வரிசையில் நிற்க, இரண்டாம் தாரமாக போனி கபூரை மணம் முடித்தது “மணவினைகள் யாருடனோ,
மாயவனின் விதிவகைகள்” தான்.

உறவினர் ஒருவரின் திருமண நிகழ்விற்கு டுபாய்க்கு போன ஶ்ரீதேவி, குடித்துவிட்டு குளிக்கப் போய், குளியல் தொட்டியில் மூழ்கி மரணிக்க போவதை எதிர்வுகூறிய கண்ணதாசனின் வரிகள் தான் “விதிவகைகள் முடிவு செய்யும், வசந்தகால நீரலைகள்” என்பவையா? 

பாரதிராஜாவின் “16 வயதினிலே” நடிக்கும் போது ஶ்ரீதேவிக்கு பதின்னான்கு வயது தான். கச்சை கட்டின சப்பாணியோடும் (கமல்), “இது எப்படியிருக்கு” பரட்டையோடும் (ரஜினி), மயிலு (ஶ்ரீதேவி) இந்தப் படத்தை காலத்தால் அழியாத காவியமாக படைத்திருப்பார். “செந்தூரப் பூவே” BGM இன்றைக்கும் எவ்வாறு இளையராஜாவின் புகழைப் பாடுகிறதோ, அதே போல் ஶ்ரீதேவி அறிமுகமாகும் அந்தப் பாடல் காட்சி என்றும் கண்ணுக்குள் நிலைத்து நிற்கும். ஶ்ரீதேவி ஆற்றைக் கடக்க முயலும் அந்த கிளுகிளு காட்சியை மையப்படுத்தி அவரது மரணத்திற்கு பின்னர் வெளியான மீம்ஸ் உண்மையிலேயே அருவருக்கத்தக்கது. 

கமலோடு ஶ்ரீதேவி அதிக படங்களில் ஜோடி சேர்ந்திருந்தாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தோடு இணைந்து நடித்த படங்களில் இருவருக்குமிடையில் இருக்கும் ஈர்ப்பு அழகாக அமைந்திருக்கும். தர்மயுத்தம் படத்தில் “ஆகாய கங்கை” பாடலில், ரஜினி கண்ணாடியை சுழற்றிக் கொண்டு ஸ்டைலாக நடந்து வருவது எவ்வளவு கம்பீரமாக இருந்ததோ, அதைவிட பாடலின் ஆரம்பத்தில் “தா..தான ன தா ன ன தா”வில் ஶ்ரீதேவியின் கண்கள் சொல்லும் கவிதையும் கொஞ்சும் முகபாவமும் கொள்ளையழகு. 

ஶ்ரீதேவியின் அழகில் வழமையாக ஒருவித கம்பீரம் கலந்த மிடுக்கு இருக்கும்.  ஶ்ரீதேவியின் அழகின் மிடுக்கை அடக்கி, அமைதிப்படுத்தி காட்சிப்படுத்திய பாடல்களில் நினைவில் வருவது, மகேந்திரன் இயக்கிய “ஜானி” படத்தின் “என் வானிலே” பாடல். மீண்டும் ரஜினியோடு இணைந்த இந்தப் படத்தில், தயக்கத்துடன் பியானோ வாசிக்கும் தலைவரை “no...no..no.. just listen” என்று அன்பாக அதட்டி, பாடலுக்குள் செல்லும் காட்சியை நூறு தரம் மீண்டும் மீண்டும் பார்க்கலாம். 

சுஜாதாவின் கணேஷ்-வசந்த் பாத்திரங்களை குதறித் தள்ளிய ப்ரியா திரைப்படத்தில், இளையராஜாவின் அற்புதமான “டார்லிங் டார்லிங் டார்லிங்” பாடலிற்கு பிகினி அணிந்து, ரஜினியும் படத்தில் இருக்கத்தகதாக, யாரோ ஒரு நடிகருடன் ஶ்ரீதேவி நடித்திருப்பார். பின்னாட்களில் “தொடையழகி”யாக பெயர் வாங்கிய ரம்பா,  ஶ்ரீதேவியின் இந்தப் பாடல் காட்சிக்கு கிட்டவும் வரமுடியாது. 

பகலில் ஒரு இரவு படத்தில் “இளமை எனும் பூங்காற்று” பாடலை மட்டும் ரசிக்க வேண்டும் என்றால், audioவில் தான் கேட்க வேண்டும். வீடியோவில் அந்தப் பாடலை பார்த்தால், ஶ்ரீதேவியை தாண்டி பாடலை ரசிக்க விசுவாமித்திரராக பிறந்திருக்க வேண்டும். “அங்கம் முழுதும், பொங்கும் இளமை”யோடு ஶ்ரீதேவி நடித்த இந்தப் பாடலை பல நூறுதரம் பார்த்தே இளமைக் காலங்களை இரண்டு தலைமுறைகள் கடந்து வந்திருக்கும். 

பச்சை தொப்பியணிந்து, பச்சை வர்ண உடையணிந்து, ஹெலிகாப்டரில் பறந்து கொண்டே, ஶ்ரீதேவி கமலோடு பாடும் குரு படத்தின் “பறந்தாலும் விடமாட்டேன்” பாட்டும், அதே படத்தில் தண்ணியடித்துவிட்டு வெள்ளை நிறச் சேலையில் கமலை கட்டிப்பிடித்து ஆடும் “எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்” பாட்டும் நினைவில் நிலைத்தவை. ஶ்ரீதேவிக்கு வெள்ளை நிறம் தான் மிகவும் பிடித்த நிறமாக இருந்திருக்க வேண்டும், ஏனெனில் பல படங்களில் அவர் வெள்ளைநிற உடையணிந்தே நடித்திருப்பார். 

வெள்ளை நிற சேலையில், நடமாடும் ஒரு வெண்ணிலவாகவே ஶ்ரீதேவி மிளிர்ந்த பாடல், வாழ்வே மாயம் படத்தில் கங்கை அமரனின் இசையிலமைந்த “நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா” பாடல். அதே படத்தில் இடம்பிடித்த, இரட்டை அர்த்தங்களால் நிரம்பி வழிந்த “தேவி ஶ்ரீதேவி” பிற்காலத்தில் சிம்பு பாடிய பீப் பாடலிற்கு ஒரு முன்னோடி. 

ஶ்ரீதேவிக்கு கிடைக்க வேண்டிய தேசிய விருதை கமல்ஹாசன் தட்டிப்பறித்ததாக பரவலாக பேசப்பட்ட படம், பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறை. “கண்ணே கலைமானே” பாடலிற்கு உயிரூட்டமளித்து, ச்சுப்ரமணி...ச்சுப்ரமணி என்று நாய்க்குட்டியைக் கொஞ்சும் பாக்கியலக்‌ஷ்மியாக நடித்த ஶ்ரீதேவி தான் இந்தப் படத்தின் super star. ரயில் நிலையத்தில் அரங்கேறும் கடைசிக் காட்சி கமலுக்கு எந்தளவு பெயர் சேர்த்ததோ, அதைவிட பலமடங்கு காட்சிகளில் திரைப்படமெங்கும் ஶ்ரீதேவி கலக்கியிருப்பார். 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலகை ஒரு காலத்தில் முடிசூடா ராணியாக கோலோச்சிய ஶ்ரீதேவியின் அவலச்சாவு பல சந்தேகங்களிற்கு இடமளித்திருக்கிறது. அவர் மரணித்த விதமும் சூழ்நிலையும் ஏனோ பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தை தான் நினைவில் கொண்டு வந்தது.

நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை