Friday, 16 February 2018

உயர்வான சிந்தனையும் எளிமையான வாழ்வும்
ஆண்டாண்டு காலமாக தமிழ் மக்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் பிரச்சினைகளிற்கு அரசியல் தீர்வு இப்போதைக்கு கிடைக்கப் போவதில்லை! 

இலங்கையில் கடந்த வாரம் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் உரத்துச் சொல்லும் செய்தி இதுவாகத் தானிருக்கிறது. இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு, ஊழலற்ற  ஆட்சி எனும் பிரகடனங்களின் அடிப்படையில் ஆட்சிக்கட்டிலேறிய மைத்ரி-ரணில் அரசு,நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் கடும்போக்குவாத மகிந்த அணியிடம் கண்ட தோல்வியும் அதன் பின்விளைவுகளும், உலகிற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கும் செய்தி இதுவாகத் தானிருக்கிறது. 

கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடந்த புதிய அரசியல் யாப்புருவாக்க முயற்சிகளும் இனி வரப்போகும் மாற்றங்களோடு முடக்கப்பட்டு விடும். இந்தத் தேர்தலில், வடக்கில் பலம் பெற்றுள்ள தமிழ் காங்கிரஸ், அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் பெருவாரியாக வெற்றி பெற்றாலும், தென்னிலங்கையை வழிக்கு கொண்டுவந்தோ இல்லாவிடில் பூகோள அரசியலில் புகுந்து விளாயாடியோ, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையில் எவ்வாறு அரசியல் தீர்வு காணப்போகிறது என்பதை காலத்தின் கையில் விட்டுவிடுவோம். 

வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்ற வாக்குகளின் வீழ்ச்சியும், தமிழ் காங்கிரஸ் தேர்தலில் அடைந்த வெற்றியும், மீண்டும் ஒருமுறை தமிழின ஒற்றுமைக்கான அறைகூவல்களை பலதரப்புக்களிலுருந்தும் எழ வைத்திருக்கிறது. 2009 மே மாதத்தில், இன அழிப்பிற்கு உள்ளாகி, லட்சக்கணக்கான மக்கள் மனிக் முகாமில் அடைபட்டு, ஆயிரக்கணக்கான போராளிகள் சிறைப்பிடிக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டு, ஒரு அவலமான நிலையில் இருந்த போதும் வராத ஒற்றுமையா, ஒரு தேர்தல் முடிவின் பின் வரப்போகிறது ? 

தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பதிவான பல தரமான பதிவுகளில் எண்ணத்தைத் தூண்டிய ஒரு பதிவு, குருபரன் குமாரவடிவேலுடையது. நேர்த்தியான சிந்தனையும் அதனை அழகாக வெளிப்படுத்தும் ஆற்றலும் குருபரனிடம் நிறைந்து கிடக்கிறது. அரசியலே மூச்சாக பேசியும் எழுதியும் வந்த தம்பி குருபரனின் எண்ணத்தைத் தூண்டிய பதிவு இது தான்

“தமிழ்த் தேசிய அரசியல் சக்திகள் 
உள்ளூர் சபைகளை தேசக் கட்டுமானப் பணியில் ஈடுபடுத்த வேண்டிய காலமிது.  Think out of the box.”

போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உடனடி நிவாரணங்களை வழங்குவதே தலையாய நோக்கம் என்ற எண்ணத்தோடு, 2013ல் பதவியேற்ற வட மாகாண சபை, தேசிய அரசியலில் சிக்குண்டு, சமூக பொருளாதார அபிவிருத்தியை புறந்தள்ளியது போல், அடுத்து வரும் கிழமைகளில் பதவியேற்கப் போகும் மாநகர சபைகளும் பிரதேச சபைகளும் அரசியலுக்கு தான் முதலிடம் கொடுக்கப் போகின்றன. அதிரடியான தீர்மானங்கள் முன்மொழிவதிலும், அடிதடிகளிலும் கைகலப்புகளிலும், நம்பிக்கையில்லா தீர்மானங்களிலும் தான் இந்த சபைகள் தங்கள் நேரத்தை செலவிடப் போகின்றன.


ஊரில் அரங்கேறப் போகும் இந்த நாடகங்களை நாங்களும் தொலைக்காட்சியிலும் சமூக வலைத்தளங்களிலும் கண்டு ரசித்துக் கொண்டு இருக்க, சத்தமேயில்லாமல் சில சிறிய தன்னார்வ நிறுவனங்களும் தனிப்பட்டவர்களும், சிதைந்து போயிருக்கும் நமது பொருளாதாரத்தை மீளக்கட்டியமைக்க தம்மாலான செயற்பாடுகளை செய்து கொண்டிருப்பார்கள். எந்தவித ஆர்ப்பாட்டமுமில்லாமல் சிறியளவில் தாயகத்தில் முளைவிடத் தொடங்கியிருக்கும் இந்த முயற்சிகளை பிரபல்யப்படுத்துவது, அந்த முயற்சிகளை பாழடிப்பதாகவே அமையும்.  

தமிழர் தாயகப் பகுதிகள் பொருளாதார ரீதியில் இலங்கைத் தீவில் பின்தங்கிய பகுதிகளாகவே விளங்குகின்றன. கடந்த பத்தாண்டுகளிற்கு மேலாக இலங்கை நாட்டின் per capita GDP அடிப்படையில், அது ஒரு அபிவிருத்தி அடைந்து வரும் நாடாக கருதப்படுவதால், முந்தைய காலங்களைப் போல் இலங்கைக்கு வெளிநாட்டு நிதியுதவிகள் அதிகளவில் கிடைப்பதில்லை. இன்னொரு வகையில் பார்த்தால், தென்னிலங்கை அதிவேகமாக பொருளாதார ரீதியில் அடைந்த முன்னேற்றம், வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு அத்தியாவசியத் தேவையான வெளிநாட்டு நிதியுதவிகளையும் இல்லாமல் செய்துவிட்டது. 

இந்த அவலமான பின்னணியிலும், பொருளாதார அபிவிருத்தி என்ற கெட்ட சொல்லை தமிழ் அரசியல் பரப்பில் பாவிப்பதே ஒரு குற்றமாக கருதப்படுகிறது. பொருளாதார அபிவிருத்தி என்பது பென்னாம் பெரிய தொழிற்சாலைகள் கட்டிவதும், அதிவேக சாலைகள் அமைப்பதும், அதன் விளைவான சுற்றுச் சூழல் மாசுபடுதலும், கலாச்சார சீரழிவும் என்று தமிழ் சமுதாயத்தை ஒரு குறுகிய வட்டத்திற்குள் யாரோ அடைத்து வைத்துவிட்டார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. 

எங்களது விழுமியங்கள் அழியாது, எங்கள் கலாச்சாரத்தைப் பேணிக் கொண்டு, எங்கள் சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொண்டு நாங்கள் பொருளாதார அபிவிருத்தி எனும் பாதையில் நடக்கலாம், நடக்கத் தொடங்க வேண்டும். இந்த பொருளாதார அபிவிருத்தி பயணத்திற்காக அடிப்படையாக “உயர்வான சிந்தனையும் எளிமையான வாழ்வும்(high thinking and simple living)” எனும் கருப்பொருளையும் நாங்கள் எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கருப்பொருள், இலாபத்தையும் முதலாளித்துவத்தையும் “கெட்ட சாமான்களாக” நோக்கும் எமது சமுதாயத்தின் எண்ணக்கருவோடு முரண்படாது பயணிக்க உதவும்.

விவசாயம், கடற்தொழில், IT தொழில்நுட்பம் மற்றும் medical & eco tourism எனும் நான்கு துறைகளை தூண்களாகக் கொண்டு எமது பொருளாதாரம் மீளக் கட்டியெழுப்பப்படலாம். கிராமங்களை மையமாகக்கொண்டு உள்ளூர் மக்களிற்கு வேலைவாய்ப்புக்களை வழங்கவில்ல விவசாய மற்றும் கடற்தொழில் சார்ந்த தொழில் முயற்சிகள், சுற்றுச்சூழலையும் பாதிக்காது, பெரிய முதலீடுகளிற்கும் தேவையிருக்காது. 

“படிச்சு கம்பஸ் enter பண்ணி டொக்டராகோணும் இல்லாட்டி என்ஜியனாராகோணும்” என்று அன்றும் இன்றும் எங்கள்  அம்மாமார் பிள்ளைகளிற்கு நிலாச்சோறு ஊட்டிக்கொண்டு தானிருக்கிறார்கள். எங்கள் ஊரில் நிறைந்திருக்கும் என்ஜினியர்களின் மண்டைகளைப் பயன்படுத்த தொழில்நுட்பம் சார்ந்த தொழிற்துறைகளும், திறமான டாக்குத்தர்மாரை நம்பி medical tourismம் எங்கள் தாயக மண்ணில் நன்றாகவே விதைவிட்டு வளரும். தாயகப் பூமியெங்கும் நிறைந்திருக்கும் இயற்கை அழகை அழிக்காமல் eco tourismம் நல்ல முறையில் நிலை கொள்ளும். 

இந்த முயற்சிகள் எதுவுமே பாரியளவில் செய்ய வேண்டியதில்லை. “சிறியதும் அழகுதான் (small is also beautiful)” எனும் கருப்பொருளைத் தழுவி, சிறிய முயற்சிகளாகவே அவை முன்னெடுக்கப்படலாம். பல பல சிறிய முயற்சிகள் முளைவிடத் தொடங்க, வீட்டுக்குள் முடங்கியிருக்கும் எங்களது சமூக பொருளாதார அபிவிருத்தி சைக்கிளில் ஏறி இறக்கை கட்டி பறக்கும். 

இனி வரப்போகும் மாகாண சபைத் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் குறிவைத்து, தாயகத்தில் புதிதாய் முளைத்திருக்கும் professional politicians வேலை செய்யத் தொடங்கியிருப்பார்கள். அவர்களது நோக்கம் அடுத்த தேர்தலை வெல்வதில் குறியாய் இருக்க, சமூக பொருளாதார அபிவிருத்தி பற்றி சிந்திக்கவும் செயற்படவும் அவர்களுக்கு நேரம் இருக்குமோ தெரியாது. அப்படியே நேரம் இருந்தாலும், அபிவிருத்தி திட்டங்கள் பற்றிய ஒரு blue print தயாரிப்பதை விட, கேள்வி- பதில் எழுதுவதே அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரியலாம். 

போரின் காரணமாக புலம்பெயர்ந்து தங்களையும் பலப்படுத்திக் கொண்டு விடுதலைப் போராட்டத்திற்கும் பலம் சேர்த்த ஒரு தலைமுறை, “நாட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும்” என்ற இன்னும் நிறைவேறாத வேட்கையுடன் முதுமையை நோக்கியும் மரணத்தை நோக்கியும் பயணித்துக் கொண்டிருக்கிறது. 1950களிலும் 1960களிலும் பிறந்த இந்த தலைமுறை தான், போரால் அழிவுண்ட எங்கள் தேசத்தை மீள கட்டியெழுப்ப வேண்டிய நிபுணத்துவத்தையும் நிதிவளங்களையும் தம்மகத்தே கொண்டிருக்கிறார்கள். 

தாயகத்தை நேசித்துக் கொண்டு, புலம்பெயர் தேசத்தில் வாழும், இந்தப் “பழசுகள் படையணியை” களமிறக்க வேண்டிய காலமிது.  எங்கள் தேசத்தை ஆழமாக நேசிக்கும் இந்தத் தலைமுறைக்குப் பின்னர் வரும் தலைமுறைகள் அவர்களிற்கிருக்கும் அதேயளவு பற்றுடன் தாயகத்திற்கு உதவி செய்யப் போவதில்லை. 


விடுதலைப் போரிற்கு பின்னரான காலப்பகுதியில் எங்களது பலமாக விளங்கும் புலம்பெயர் சமூகத்தை,  தாயக  சமூகத்தையும் பொருளாதாரத்தையும்
மீளவும் கட்டியெழுப்ப பயன்படுத்தப் போகிறோமா? இல்லை காலம் அவர்களையும் காவு கொள்ள விட்டு விடப்போகிறோமா? 

விடுதலைப் புலிகள் காலத்தில் இருந்தது போல், வெளிநாடுகளிலிருந்து வரும் நிபுணர்களை ஒருங்கிணைத்து திட்டங்களை செயற்படுத்தும் கட்டமைப்புக்கள் இல்லாத இன்றைய சூழ்நிலையில், புலத்தில் வாழும் எங்கள் நிபுணர்களின் மீள்வருகையும் அவர்களின் பங்களிப்பை உள்வாங்கலும் இடம்பெறுமா?

பதவிகளை அலங்கரிக்கும் அரசியல்வாதிகளை புறந்தள்ளி விட்டு சமூக பொருளாதார அபிவிருத்தி முன்னெடுப்புக்களை மேற்கொள்வது சாத்தியப்படுமா? அதிகாரங்கள் கையில் வைத்திருக்கும் இந்த அரசியல்வாதிகள் இந்த முன்னெடுப்புக்களிற்கு இடைஞ்சல் தராமல் இருக்க என்ன செய்வது? 

Time to think  out of the Box! 

உசாத்துணை: 
Northern Province Development: My Preferences By CV Wigneswaran 

https://www.colombotelegraph.com/index.php/northern-province-development-my-preferences/

Friday, 2 February 2018

எதிரியின் வாயிலிருந்து..


போர்க் குற்றங்கள் இழைத்த இலங்கை இராணுவத்தின் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவின் எழுதிய  “Road to Nandikadal” புத்தகம் ஆறேழு மாதங்களிற்கு முன்னர் வாசிக்க தொடங்கியது. “ஆமிக்காரன் எழுதின புத்தகத்தை ஏன் வாசிக்கிறீர்.. உமக்கென்ன விசரா” என்று புத்தகத்தை திறந்த நாளிலிருந்து மனிசி நச்சரித்துக் கொண்டே இருந்தா. 

எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்து யுத்தத்தின் இறுதிவரை இலங்கை இராணுவத்தில் பணியாற்றிய ஒரு இராணுவ அதிகாரி அப்படி என்ன தான் எழுதியிருக்கிறார் என்ற ஆவலில் தான் வாசிக்க தொடங்கினேன். பக்கம் பக்கமாக வாசித்துக் கொண்டு போக, கடைசி சில அத்தியாயங்களை  தவிர, மிகுதி அத்தியாயங்கள் எல்லாம் விடுதலைப் புலிகள் அரங்கேற்றிய வீரகாவியத்தின் சாட்சியங்களின் பதிவாகவே எனக்கு தெரிந்தது. எதிரியின் பதிவிலிருந்து எங்களது விடுதலைப் போராட்டம் உச்சம் பெற்றிருந்த காலத்தை மீண்டும் ஒருமுறை நினைவூட்டி நனவிடை தோய்தலில் திளைக்க வாய்த்த சந்தர்ப்பமாக இந்த புத்தகத்தை வாசித்த அனுபவம் அமைந்தது.  

முப்பது வருடகால யுத்ததில் இடம்பெற்ற அனைத்து முக்கிய தாக்குதல்களும் அரசியல் நிகழ்வுகளும் பதிவாகியுள்ள இந்தப் புத்தகத்தில், 1990 மாங்குளம் முகாம் மீதான தாக்குதலையும்  1991 சிலாவத்துறை முகாம் மீதான தாக்குதலையும் புத்தகாசிரியர் விவரித்த பாணி அலாதியானது. குறிப்பாக முற்றுகைக்குள்ளான மாங்குளம் முகாமிலிருந்து தப்பி கால் நடையாக வவுனியாவை அடைந்த இலங்கை இராணவத்தினர், அந்தப் பயணத்தில் அனுவதித்த சோதனைகளையும் அவர்களுக்குள் எழுந்த முரண்பாடுகளையும் ஒரு திரைப்படமாகவே எடுக்கலாம். 

“எங்கட குறூப் கடற்கரையில் தான் படுத்திருந்தனாங்க.. சரியா எங்கட முதுகுக்கு மேலால தான் ஹெலி போய் campக்குள் இறங்கினது” 1991ம் ஆண்டு சிலாவத்துறை இராணுவ முகாம் மீதான தாக்குதலில் பங்குபற்றிய நண்பனொருவர் தனது  நினைவுகளை மீட்டுக் கொண்டார்.

“ கடலோட தொட்டுக் கொண்டு.. மேலால பறந்து வந்து, அன்றைக்கு மட்டும் அந்த ஹெலி அவங்களுக்கு சாமான் இறக்காமல் இருந்திருந்தால், கதை வேற” என்று அவர் சொல்லிக் கொண்டு போனார். சிலாவத்துறை தாக்குதலில் திருப்புமுனையாக அமைந்த இந்த சம்பவம் இலங்கை இராணுவத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் புத்தகத்திலும் நண்பர் விவரித்த மாதிரியே பதிவாகியுள்ளது. 

எங்களிற்கு இயக்கம் என்றால் அண்ணாமாரும் அக்காமாரும், மச்சான்மாரும் மச்சாள்மாரும் நண்பர்களும் தோழிகளும் தான். அதனால் தான் யாரும் இயக்கத்தை பற்றி பிழையாக கூறும் போதோ அல்லது இயக்கத்தை குற்றம் சாட்டும் போதோ, எம்மால் ஏற்கவும் முடிவதில்லை சகித்துக் கொண்டு இருக்கவும் முடிவதில்லை. 

1990 யாழ்ப்பாண கோட்டை முற்றுகையை உடைக்க இலங்கை இராணுவத்தினர் பட்ட பாட்டையும் இந்த புத்தகம் விரிவாக பதிவுசெய்கிறது. முற்றுகை முறியடிப்பு தாக்குதல் ஒன்றில், யாழ்ப்பாணம் பிரதான வீதி வழியாக உடைத்துக் கொண்டு முன்னேற முற்பட்ட இராணுவ அணிக்கு சரத் பொன்சேகாவும், யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலை பக்கமாக  முன்னேற முற்பட்ட அணிக்கு கோதபாயவும் தலைமை தாங்கினார்களாம். 
1990களின் இறுதியிலும் 2000களின் ஆரம்பத்திலும் ஓயாத அலைகள் தாக்குதல் நடவடிக்கைகளின் தாக்கத்தாலும், கட்டுநாயக்க விமானப்படைத்தளம் உட்பட தென்னிலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்களாலும், தமிழீழம் மலர்வதை தடுக்க முடியாது என்ற விரக்தியடைந்த மனநிலையில் இலங்கை இராணுவம் இருந்ததை வாசித்த பக்கங்கள் வலி மிகுந்தவை, பெரு மூச்சை வரவைத்தவை.

2002ம் ஆண்டு தொடங்கிய சமாதான காலத்தில், இலங்கை இராணுவம் சந்தித்த அவமானங்களை கமால் குணரத்ன கோபத்தோடு பதிவு செய்கிறார். உயர் பாதுகாப்பு வலயங்களை குறைப்பது தொடர்பாக விடுதலைப் புலிகளோடு இலங்கை இராணுவ தளபதிகள் சரிசமமாக இருந்து பேசியதை இழிவாக கருதும் கமால் குணரத்ன, இராணுவக் காவலரண்களில் போராளிகளாலும் பொதுமக்களாலும் இராணுவத்தினர் கேலிக்கு உட்பட்ட நிகழ்வுகளையும் பதிவு செய்கிறார். 

2006ல் முகமாலையில் இறுதியுத்தம் தொடங்கிய போது, முதலில் இயக்கத்தின் கை தான் ஓங்கியிருந்தது என்பதையும், அந்த தீரச் சமரை தலைமை தாங்கிய தளபதி தீபனின் இராணுவ நுணுக்கங்களை புகழவும், கமால் குணரத்ன சில பக்கங்களை ஒதுக்கியிருந்தது ஆச்சரியம் அளித்தது. அதே போல் 2000ம் ஆண்டு ஆனையிறவுச் சமரில் தளபதி பால்ராஜ் பற்றியும் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இயக்கம் மன்னாரில் தான் சண்டையை தொடங்கும், ஏனெனில் அங்கு தான் இலங்கை இராணுவம் பலவீனமாக இருந்தது, ஆனால் தாங்கள் மிகப்பரவலாக இருந்த முகமாலையில் சண்டை தொடங்கியது தங்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது என்று, முகமாலைச் சமரை, கமால் குணரத்ன நினைவு கூறுகிறார். 

ஆனந்தபுரம் சண்டை தான், முடிவறுக்கும் சண்டையாக இருந்தது என்று கருதியிருக்கும் பலரிற்கு, 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம், புதுக்குடியிருப்பிற்கு தெற்காக இடம்பெற்ற கடும் சண்டை, எங்கள் தலைவிதியையே மாற்றியிருக்கும் வல்லமை வாய்ந்ததாக இருந்தது என்பது புதிய செய்தி. ஜெயசிக்குறு சமரைப் போல், இந்தச் சண்டையிலும், இராணுவம் சண்டையை கைவிட்டு தப்பியோட தொடங்கி விடுமோ என்று இலங்கை இராணுவ உயர்பீடம் அஞ்சிய கணங்களை கமால் குணரத்ன இந்தப் புத்தகத்தில் பதிவுசெய்துள்ளார். யுத்த முன்னரிங்கில் களமாடும் துருப்புக்கள் பின்வாங்கி ஒடாமலிருக்க, ஒரு நாற்சந்தியில் கட்டளைப்பீடத்தை நிறுவிய தனது வீரபிரதாபத்தை புளுகவும் கமால் குணரத்ன மறக்கவில்லை. 

“இந்த விசர்ப் புத்தகம் ஏன் இன்னும் இந்த வீட்டில் இருக்கு” போன கிழமை மனிசி மீண்டும் ஆட்டிலெறி அடிக்க தொடங்கினா. “எத்தனை மாசமா உதை வாசிக்கிறீர்.. உதை பார்க்க பார்க்க எனக்கு விசர் விசரா வருது” நியாயமான கோபத்திற்கு பதில் சொல்ல முடியாது திணறினேன். “இன்னும் ஓரே கிழமை தான்.. பிறகு உத குப்பேக்க தூக்கி போட்டிடுவன்” இறுதி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. 

கமால் குணரத்னவின் “Road to Nandikadal” பற்றி ஒரு Blog எழுத உண்மையிலேயே மனமில்லை. ஆனால் நாங்கள் உச்சத்தில் இருந்த காலத்தைப் பற்றி இந்த புத்தகம் அதிகளவில் பதிவு செய்துள்ளதால் தான் இந்த Blog. அதுவும் எதிரியின் வாயால் நாங்கள் அப்படி இருந்தோம் இப்படி அடித்தோம் என்று கேட்கும் போது வரும் ஆனந்தம், அடுத்த நாள் காலை யாழ்ப்பாணத்து பத்திரகைகளில் குப்பை கூட்டும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களிற்காக நமக்குள் நாமே போடும் சண்டைகளைப் பற்றி வாசிக்கும் போது அஸ்தவனமாகிவிடும். 

ஈழ யுத்தத்தின் தலைவிதியை நிர்ணயித்த சமர்களில் ஒன்றான 2009ம் ஆண்டு பெப்ரவரி மாத புதுக்குடியிருப்பு சமரின் போது, தனது இளநிலை தளபதிகளிற்கு கமால் குணரத்ன கூறிய வார்த்தைகளை வாசித்த பின்பு, நந்திக் கடல் சமர் பற்றிய அவரது இறுதி அத்தியாயத்தை வாசிக்காமலே வாசிப்பை நிறுத்திவிட்டேன். 

“If you win, no need to explain.
If you lose, you should not be there to explain”