Friday, 19 January 2018

மொக்கு கொமர்ஸ்காரன் to Accountant
முற்குறிப்பு

தம்பி ஜேகே மட்ஸ் மண்டைக்காரன்களை மையமாக வைத்து எழுதும் பதிவுகளை வாசிக்கும் போது எனக்கு கை துறுதுறுக்கும். நாங்களும் அதே கருவை மையமாக வைத்து கொமர்ஸ்காரன்களை பற்றி எழுத வேண்டும் என்று உள்ளம் பதைபதைக்கும். அந்த எண்ணத்தை அவரோடு பம்பலாக உட்பெட்டியில் பகிர்ந்தால், “எழுதுங்கோ அண்ணே, I am waiting” என்று பதில் வரும். 

அந்த வரிசையில் ஜேகே எழுதிய “சப்பல் மன்னர்கள்” பதிவைத் தழுவி “கொமர்ஸ்காரன்களும்
கொமர்ஸ்காரிகளும்” பதிவு பிறந்தது.  அண்மைக் காலங்களில் ஜேகே தனது “படலையில்” எழுதி வரும் தன்னுடைய Programming வேலையைத் தழுவிய பதிவுகளிலிருந்து கிடைத்த inspirationஐ அடித்தளமாக வைத்து, ஒரு மொக்கு கொமர்ஸ்காரனாக யோசித்ததில் விளைந்த வினை தான் இந்தப் பதிவு. 

———————————————————

“மட்ஸ் படித்து, என்ஜியனாரானால் கட்டிடம் கட்டலாம், ரோடு போடலாம், இல்லை கொம்பியூடரில் விதம் விதமாக program எழுதலாம், பயோ படித்தால் டாக்குத்தராகி ஊசி கீசி போடலாம், நாங்க கொமர்ஸ் படிச்சு எக்கவுண்டன்ட் ஆகி என்ன ஐசே செய்ய போறம்?” தொண்ணூறுகளில் உயர்தரம் படிக்கும் காலத்தில், வெள்ளவத்தை காலி வீதியில் பஸ்ஸிற்கு காத்திருந்த ஒரு அழகிய மாலைப் பொழுதில் கஜோபன் கேட்ட கேள்வி இன்னும் காதில் எதிரொலிக்கிறது. 

“ஓம் ஐசே, எனக்கும் தெரியாது, அதில சில double accountants வேற இருக்கீனமாம்” என்று கதைத்துக் கொண்டிருக்கவும், புறக்கோட்டைக்கு போகும் CTB Bus வந்து நின்றது. 


CIMA படிக்கும் போதும், வேலைக்கு போய் என்ன செய்ய போகிறோம் என்று சுத்தமாக விளங்கவில்லை. முதல் வேலை கிடைத்து வேலை பழக தொடங்கியதும் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு மொக்கு கொமர்ஸ்காரன் எப்படி ஒரு திறமான accountant ஆக அவதாரம் எடுக்கலாம் என்ற சூட்சுமம் விளங்கத் தொடங்கியது. ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனம் மாறி வேலை செய்ய செய்ய, அந்த புரிதல் இன்னும் அதிகரிக்க தொடங்கியது. 

“அஞ்சும் மூன்டும் எட்டு, டக் டிக் டோஸ், எனக்கு balance sheet பலன்ஸ் பண்ணிட்டு, உனக்கு பலன்ஸ் பண்ணிச்சா, என்று கேட்கிறது தானேடா உங்கட படிப்பு” என்று நாங்கள் படிக்கும் காலத்தில் மட்ஸ்காரன்கள் நக்கல் அடிப்பாங்கள். அந்தக் காலத்தில் Balance Sheet பலன்ஸ் பண்ண நாங்கள் பட்ட அதே கஷ்டம் தான் இன்றைக்கு ஒவ்வொரு month end முடித்து நிறுவனத்தின் இலாபத்தையோ நட்டத்தையோ நிர்ணயிக்கும் போது நாங்கள் அனுபவிப்போம். மாதம் முடிந்து மூன்று நாற்களுக்குள் அந்தப் பொறுப்பை முடிக்க இரவும் பகலும் அயராது பாடுபடுவோம். ஒவ்வொரு month endம் ஒவ்வொரு பிரசவம் தான். 
Month end செய்யுறதை விட எனக்கு மிக மிக பிடித்த வேலை forecasting தான். இது ஒரு வகையில் சாத்திரம் பார்க்கிற வேலை தான். நிறுவனத்தின் நிதி அறிக்கைகளை சோதிடமாகப் பாவித்து, நாட்டின் பொருளாதார நிலைமையையும் சந்தை நிலவரத்தையும் கிரக சஞ்சாரமாகக் கணித்து, எதிர்காலத்தில் நிறுவனத்தின் நிதிப் பெறுபேறு எப்படி இருக்கும் என்று எதிர்வுகூறும் மண்டை விறுவிறுக்கும் வேலைதான், forecasting. 

இந்த forecasting செய்ய அடிப்படையாக தேவையானது நல்ல modeling. “மச்சான், ஏன்டா இதில மெனக்கிடுறாய், ஒரு software வாங்கி பூட்டி விடு, அது எல்லாம் செய்து தரும், நீ காலாட்டிக் கொண்டு Cricinfo பார்க்கலாம்” என்று software விற்பதையே தொழிலாக செய்யும் எனது அருமை நண்பனும் மொக்கு கொமர்ஸ்காரனுமான அருள்மொழி அலுப்புத் தருவான். 

“மச்சான், உன்ட software போடுறது சுயபுத்தி இல்லாத ரஜினி அரசியலிற்கு வாறமாதிரி, முதலில் சொந்த மண்டையில் சிந்தித்து ஒரு model உருவாக்க வேண்டும், அப்ப தான் நாங்க விரும்பியதை அடையலாம்” என்று அருளை அமைதிப்படுத்த முயன்றேன். “பிறகு அதைச் செய்யவல்ல நல்ல software தேடலாம், இல்லாட்டி ஒரு நல்ல மட்ஸ் மண்டைக்காரனை பிடித்து புதுசா ஒரு software toolயே உருவாக்கலாம்” என்று சொல்லியும் அவன் அடங்க மறுத்தான். 

பிரச்சினையை பிரதிபலிக்கும் ஒரு புதிய modelஐ உருவாக்கி, தீர்வைத் தேட பயணிக்க முயற்சிக்கும்
இடத்தில் தான் மொக்கு கொமர்ஸ்காரன், மட்ஸ் மண்டைக்காரனோடு சமபல நிலையை அடைகிறான். நிறுவனத்தின் இலாபத்தை நிர்ணயிக்கும் காரணிகளை கண்டறிந்து, அதில் எந்தக் காரணி எந்தக் காரணியை தீர்மானிக்கும் என்று sketch போட்டு, அந்த உறவை எப்படி ஒரு சமன்பாடாக மாற்றலாம் என்று மூளையை கசக்கி, ஒரு அணு ஆயுத விஞ்ஞானி அளவிற்கு யோசித்து, நாளுக்கு நாலு கோப்பை கோப்பி குடித்து, காதிற்குள் ஹெட் ஃபோன் மாட்டி இளையராஜா பாட்டு கேட்டு, மண்டை வியர்க்க வேலை செய்து, ஒரு Accountant ஒரு Financial modelஐ நிர்மாணித்து முடிக்க பயணிக்கும் பயணத்தில் அவன் தாங்கும் வலிகளை இந்த உலகம் அறியாது, அறியவும் விரும்பாது. 

போன கிழமை, வேலை செய்யும் நிறுவனத்தில், ஒரு பிரச்சினை, சாத்திரப் பிரச்சினை தான். சாத்திரம் பார்க்கிற முறை (forecasting) சரியில்லை என்று குத்தி முறிஞ்சாங்கள். ஒவ்வொரு நாளும் மணித்தியால கணக்காக கூட்டம் போட்டு சண்டை போட்டார்கள். பிரச்சினையைத் தீர்க்க ஒரு புதிய Modelற்கான sketchஐ போட்டேன். “கர்த்தரே என்னைக் காப்பாற்றும்” என்று ஜெபித்துவிட்டு, புத்தம் புதிதாக ஓரு Excel workbook திறந்து, பிள்ளையார் சுழி போட்டு அத்திவாரத்தை போடத் தொடங்கினேன். 

கொஞ்சம் கொஞ்சமாக கட்டி, model வடிவம் பெறத் தொடங்கியது. அங்க இருந்து dataவை எடுத்து இங்க இருந்த dataவோடு தொடுக்க vlookupஐ பாவித்து ஒரு சமன்பாட்டை போட்டால், நாலு இடத்தில் #N/A என்று error message பல்லிளிக்குது. என்னடா பிரச்சினை என்று கடுமையாக யோசித்துக் கொண்டிருக்க, phone சிணுங்குது. 

“டார்லிங்..” மனிசி தான் லைனில்.

“புஷ்பா அன்டிட்ட புட்டு ஓடர் பண்ணும்” மனிசனின் மண்டை அந்தரத்தில் நிற்குது, நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். 

“ஓகே ஓகே.. செய்யுறன்.. செய்யுறன்..இப்ப கடும் பிஸியா இருக்கிறேன்”. தொலைபேசியை துண்டித்துவிட்டு, மறுபடியும் modelingல் மூழ்க நினைக்க, மறுபடி தொலைபேசி..

“இப்ப என்ன...” சொல்லி முடிக்கவில்லை

“சம்பலை மறந்திடாதேயும்” ஆண்டவா, மதுரைக்கு வந்த சோதனையடா.

காதுக்குள் headphone மாட்டி, இளையராஜா பாட்டு கேட்டுக் கொண்டே, அந்த சமன்பாட்டு பிரச்சினையை தீர்த்து அடுத்த கட்டத்திற்கு முன்னேற @ifஐ நாலு இடத்தில் விதம் விதமாக பாவித்தது கைகொடுத்தது. நாலும் கலந்து சாம்பாராகி ஒரு புதிய சமன்பாட்டை நிர்மாணிக்க, இழவு விழந்த error அங்கேங்க எட்டிப் பார்க்க, விசருக்கே விசர்  வந்தது. 

விடுக்கென்று எழும்பிப் போய் சூடாக ஒரு கோப்பி போட்டுக் கொண்டு வந்து இருந்து, எப்படி போட்டு பார்த்தாலும் பிரச்சினை தீரவில்லை. ஒரு சமன்பாட்டை மாற்றி ஒரு பிரச்சினையை தீர்த்தால், தீரவே மறுக்கும் இலங்கைத் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைப் போல், சிக்கல் இன்னொரு இடத்தில் வேறொரு ரூபத்தில் பிறப்பெடுத்தது. 


மூன்று நாட்கள் கடும் தவமாய் தவமிருந்து, ஒவ்வொரு கல்லாக பார்த்து பார்த்து எடுத்து கட்டிய வீட்டைப் போல், என்னுடைய modelம் உருப்பெறத் தொடங்கி, நிறுவனத்தின் பிரச்சினையை தீர்க்க ஒரு மூலோபாயத்தை வழங்கியது. இடையில் இந்த தவத்தை கலைக்க ரம்பைகள் வடிவில் வந்து போன தடங்கல்கள் தான் எத்தனை எத்தனை. அத்தனையும் அடக்கி ஆட்கொண்டு, விடாக்கண்டனாக வேலை செய்ததில் கிடைத்த பேறில், அடைந்த நிறைவும் மகிழ்ச்சியும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. 

வேலை பார்த்த நிறுவனங்களின் பல பிரச்சினைக்கு தீர்வுகள் கிடைத்தாகிவிட்டது, எத்தனையோ எத்தனையோ வித விதமான சாத்திரங்கள் (forecasting) பார்த்தாகி விட்டது, நூற்றுக்கணக்கான “month end” பிரசவங்களும் பார்த்தாகி விட்டது, ஆனால் அன்று CTB பஸ்ஸில் ஏறி பயணித்த போது கஜோபன் கேட்ட கேள்விக்குத் தான் இன்று வரை பதில் தேடிக் கொண்டிருக்கிறேன்.

“ஐசே நீர் சொன்ன அந்த double accountant ஆகிறது எப்படி? 

2 comments: