Friday, 12 January 2018

பரி யோவான் பொழுதுகள்: Bouncing Back


1960களின் ஆரம்பத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியில் கிறிஸ்தவ திருச்சபைகளால் ஆரம்பிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்ட பாடசாலைகளை அரசுடைமையாக்கப் போவதாக அரசு அறிவித்தது. அரசுடைமையாக்கப்படாத பாடசாலைகளிற்கு ஆசிரியர்களின் சம்பளம் உட்பட எந்த நிதியுதவியும் அரசு வழங்காது என்றும் எச்சரித்தது. இலங்கை அரசின் அறிவிப்பை எதிர்த்து நின்ற ஒரு சில பாடசாலைகளில் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியும் அடக்கம். 

அறுபதுகளில் பாடசாலை நடாத்த, வீடு வீடாக சென்று பழைய மாணவர்களும் பெற்றோரும் ஆசிரியர்களும் நிதி சேகரித்ததையும், பள்ளிக்கூட வளாகத்தில் இருந்த மகோகனி மரங்கள் தறிக்கப்பட்டு விற்கப்பட்டதையும், சம்பளம் வாங்காமல் கல்விப் பணியாற்றிய ஆசிரியர்களின் வரலாற்றையும் பரி யோவானின் பழைய மாணவர்கள் நன்கறிந்திருப்பார்கள். 

முப்பதாண்டு கால யுத்தம் எங்கள் தாயகப் பிரதேசங்களின் பொதுச் சொத்துக்களையும் தனியாரின் சொத்துக்களையும் அழித்து சிதைவடையச் செய்தது. தமிழர்களின் பலமாக விளங்கிய கல்விசார் செயற்பாடுகளிற்கு களம் அமைத்துத் தந்த பாடசாலைகளின் கட்டுமானங்கள் யுத்தத்தால் பாரியளவில் அழிவிற்கு உள்ளாகின. 

1987ல் இந்திய இராணுவத்தின் எறிகணை வீச்சாலும் பின்னர் 1995ல் இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதற்கான இராணுவ நடவடிக்கையின் போதும் பரி யோவான் கல்லூரியின் கட்டிடங்கள் பாரியளவில் அழிவைச் சந்தித்தன. 

அறுபதுகளில் அரங்கேறியது போல், தொண்ணூறுகளில் நிகழ்ந்த அழிவுகளிலிருந்து பரி யோவான் கல்லூரியை மீட்க தோள் கொடுக்க முன்வந்ததும் பரி யோவான் கல்லூரியின் பழைய மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் தான். உலகெங்கும் பரவியிருந்த பரி யோவான் சமுதாயம், தங்களது சொந்த நிதிப் பங்களிப்பாலும் தங்களிற்கு அரசாங்கங்கள் மட்டத்திலும் உதவி வழங்கும் நிறுவனங்கள் மட்டத்திலும் இருந்த தொடர்புகள் மூலமாகவும், பரி யோவான் கல்லூரியை மீளக்கட்டியமைக்கும் முயற்சிகளை முன்னெடுத்தார்கள், முன்னெடுத்தும் வருகிறார்கள். 

இந்த முன்னெடுப்புக்களின் அண்மைய சாட்சியமாக விளங்குவது, கூடைப்பந்தாட்ட திடலின் (Basketball Court) மீள் நிர்மாணம். பரி யோவான் கல்லூரியின் மத்திய பிரிவு வகுப்பறைகள் அமைந்திருக்கும் பகுதியில் தான் எங்கள் Basketball Court அமைந்திருக்கிறது. பழைய பூங்கா வீதிப் பக்கமிருக்கும் PT Mathai Blockஆலும், பிரதான வீதிப் பக்கமிருக்கும் ராஜசேகரம் Block ஆலும், வடக்கே கல்லூரியின் மைதானத்தாலும், மேற்கே குணசீலன் Block ஆலும் சூழப்பட்டு, இந்த Basketball Court வீற்றிருக்கிறது.

இடப்பெயர்வுகளும் புலப்பெயர்வுகளும் பரி யோவானின் கல்வி பெறுபேறுகளிலும் விளையாட்டு துறையிலும் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தின. 2007ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஜந்தாண்டுகள் பரி யோவான் கல்லூரி கிரிக்கட் அணி, மத்திய கல்லூரியுடனான Big Matchல் தோற்றுப் போனது நம்மில் பலரிற்கு இன்றும் ஞாபகம் இருக்கும். ஆனால் அதே காலப்பகுதியில் பரி யோவானின் கூடைப்பந்தாட்ட அணி, அகில இலங்கை ரீதியில் முதல் எட்டு அணிகளிற்குள் தரவரிசைப்படுத்தப்படுத்தப்பட்டது பலரிற்குத் தெரியாது. 

கிரிக்கெட்டில் பரி யோவான் கல்லூரி அணி ஒரு பக்கம் மெல்ல மெல்ல மேலெழுந்து, வடமாகாணத்தின் சிறந்த அணியாக விருதுகளைப் பெறத் தொடங்க, பல தலைசிறந்த வீரர்களை உருவாக்கிய கூடைப்பந்தாட்ட திடலோ நலிவடையத் தொடங்கியிருந்தது. இதே காலப்பகுதியில் தான் 2009ல், இறுதி யுத்தத்தில் நேரடியாக பாதிப்படைந்த 612 மாணவர்களை பரி யோவான் கல்லூரி உள்வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.

2016 மார்ச் மாதமளவில், நலிவடைந்திருந்த கூடைப்பந்தாட்டத் திடலை திருத்தி, மீண்டும் கூடைப்பந்தாட்டத்தை முறையாக விளையாடும் நிலைக்கு கொண்டுவர, பரி யோவான் கல்லூரியின் மெல்பேர்ண் பழைய மாணவர் சங்கம் முன்வந்தது. கூடைப்பந்தாட்டத் திடலை புனரமைக்க ஒரு மில்லியன் ரூபாய்களை ஒதுக்க முன்வந்த மெல்பேர்ண் OBA, அந்தத் திட்டத்தை செயற்படுத்தும் பொறுப்பை பரி யோவானின் யாழ்ப்பாண பழைய மாணவர் சங்கத்திடம் ஒப்படைத்தது. பரி யோவான் கல்லூரியின் 195 வருட வரலாற்றில் இரு பழைய மாணவர் சங்கங்கள் இணைந்து மேற்கொண்ட முதலாவது செயற்திட்டம் இதுவாகத் தானிருக்கும். 

கல்லூரியின் அதிபர் வண. ஞானப்பொன்ராஜாவின் முழுமையான ஒத்துழைப்புடனும் அவரது வழிகாட்டலில், கூடைப்பந்தாட்ட திடல் புனருத்தாரணத்திற்கான (Basketball Court reconstruction) ஒரு செயற்குழு (steering committee) அமைக்கப்பட்டது. இந்த செயற்குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்க கல்லூரியின் பழைய மாணவனான Dr. கோபிசங்கர் முன்வந்தார்.  இந்த செயற்குழுவின் செயலாளராக இன்னுமொரு பழைய மாணவனான Dr. காண்டீபன் பொறுப்பேற்றுக்கொண்டார். செயற்குழுவிற்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை பழைய மாணவனான நிகோல்ட் ஆர்னல்டும் இணைந்து கொண்டார். இவர்களோடு இணைந்து இந்த செயற்திட்டத்தை வெற்றிபெற வைத்ததில் ரொஹான் தேவதாசன், முருகமூர்த்தி செந்தூரன் மற்றும் ராஜநாயகம் ஹஜீபன் ஆகிய பழைய மாணவர்களின் பங்களிப்பு அளப்பரியது. 

கூடைப்பந்தாட்டத் திடலை புனருத்தாரணம் செய்வதோடு மட்டுப்படுத்தாமல், பரி யோவானின் கூடைப்பந்தாட்டத் திடலை முழுமையாக அபிவிருத்தி செய்வது தான் சிறந்தது என்று கல்லூரியின் அதிபரும் செயற்குழுவினரும் முடிவு செய்ததார்கள். மெல்பேர்ண் OBA கொடுத்த நிதி பலமான ஆரம்பமாக அமைய, கல்லூரியில் எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் படித்த ஒவ்வொரு Batchஐயும் தொடர்பு கொண்டு, நிதி சேகரிப்பதற்கு செயற்குழு முடிவெடுத்தது. 

ஒவ்வொரு Batch ஆக தொடர்பு கொள்ளும் பாரிய பணி முடுக்கி விட்டது. பல Batchகள் “கட்டாயம் செய்யுறம் மச்சான்” என்று உறுதியளித்து விட்டு, ஓரிரு கிழமைகளிலேயே செயற்குழு கேட்ட தொகைக்கு மேலாக நிதியை திரட்டி அனுப்பினார்கள். 
மறுபுறத்தில், கல்லூரியின் பழைய மாணவனும் பரி யோவான் அணியின் முன்னாள் கூடைப்பந்தாட்டப் பயிற்றுவிப்பாளருமான தயாபரன், கல்லூரிக்கு ஆடிய பழைய கூடைப்பந்தாட்ட விளையாட்டு வீரர்களைத் தொடர்பு கொண்டு, நிதி திரட்டத் தொடங்கினார்.  உலகெங்கும் திரட்டப்பட நிதி, கூடைப்பந்தாட்ட அபிவிருத்திக்கென பிரத்தியேகமாக திறக்கப்பட்ட வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட்டது. வங்கியில் வைப்பிலிடப்பட்ட பணத்திற்கு உடனடியாகவே பற்றுச்சீட்டுக்களும் வழங்கப்பட்டன. 

கூடைப்பந்தாட்டத் திடலை மைதானப் பக்கமாக விஸ்தீரணமாக்கிய அதேவேளை, திடலில் வெள்ள நீர் தேங்காமல் இருக்க, திடலை சற்றே உயர்த்தி, நீர் வழிந்தோடவும் வகைசெய்யப்பட்டது. இலங்கை கூடைப்பந்தாட்ட சம்மேளனம் சிபாரிசு செய்த, தென்னிலங்கை பாடசாலைகளில் கூடைப்பந்தாட்ட திடல்களை அமைத்த அனுபவம் பெற்ற, ஒரு நிறுவனத்திடம் பரி யோவானின் கூடைப்பந்தாட்டத் திடலை புனரமைக்கும் வேலை ஒப்படைக்கப்பட்டது. 

பழைய மாணவர்களிடம் சேகரித்த நிதிக்கு மேலதிகமாக, வட மாகாண சபையும் தனது கல்விசார் அபிவிருத்திக்கான பாதீட்டிலிருந்து நிதியுதவி அளிக்க, கல்லூரியின் பழைய மாணவனும் வடமாகாண சபை உறுப்பினருமான இம்மானுவேல் ஆர்னல்ட் உதவிசெய்தார். கூடைப்பந்தாட்டத் திடலில் இரவிலும் ஆட்டங்களை அரங்கேற்ற, ஒரு மில்லியன் ரூபா செலவில், மின்னொளி கோபுரங்களை (Flood light towers) நிறுவ, கல்லூரியின் பழைய மாணவரான வாமதேவா தியாகேந்திரன் முன்வந்தார். 

பரி யோவான் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட திடலின் அபிவிருத்தி செயற்திட்டத்தில் மனமகிழ்ச்சியை தந்த இன்னுமொரு நல்ல விடயம் கூடைப்பந்தாட்டத் திடலின் ஒரு பக்க கோபுரம், எமது SJC92 Batch நண்பனான சிவக்குமரனின் (சேரலாதன்) பெயரை தாங்கி நிற்பதாகும். எங்களோடு கூடித்திரிந்து பம்பலடித்து மகிழ்ந்த நண்பனின் நினைவாக, எங்களது SJC92 Batch பெடியள் இந்த கோபுரத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்திருந்தார்கள். 

கூடைப்பந்தாட்ட திடலின் மீள்நிர்மாணத்தில் குறிப்பிடத்தக்க இன்னொரு விடயம், இந்த செயற்திட்டத்தை முன்னெடுத்து வழிநடத்தி பங்களிப்பு செய்தது, எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் , ஆனந்தராஜா மாஸ்டரும் தனபாலன் மாஸ்டரும் அதிபராக இருந்த காலத்தில் கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவர்கள். அறுபதிகளிலும் எழுபதுகளிலும் படித்த மாணவர்கள் கல்லூரிக்கு செய்த பங்களிப்பை பின்பற்றி அடுத்த தலைமுறையும் தனது பங்களிப்பை வழங்க தொடங்கியதன் அடையாளமாக இந்த செயற்திட்டம் அமைகிறது. 

பரி யோவான் கல்லூரியின் பழைய மாணவர்கள் பலரின் பங்களிப்போடு எங்கள் கூடைப்பந்தாட்டத் திடல் இன்று மீண்டும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. பரி யோவானின் கட்டிடங்களும் மைதானமும் எவ்வாறு யாழ்ப்பாண சமூகத்தின் பயன்பாட்டிற்கும் பயன்படுகிறதோ, அதே போல் இந்த கூடைப்பந்தாட்டத்திடலும் பரி யோவானின் மாணவர்களிற்கு மட்டுமன்றி, யாழ்ப்பாணத்தில் கூடைப்பந்தாட்ட வளர்ச்சிக்கு அடிகோலும் களமாக அமைய வேண்டும் என்பது தான் அனைத்து பழைய மாணவர்களின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்.

பழைய மாணவர்களின் முயற்சியை கொண்டாடும் அதே வேளை,  “புதுசு புதுசா கட்டிடம் கட்டிறதும், அதைத் திறக்கிறதும் தான் நடக்குது ஒழிய, எங்கட academic standards சரியா விழுந்துட்டுது” என்று பல பரி யோவானின் பழைய மாணவர்களின் அங்கலாய்ப்புக் குரல்கள் மெல்ல மெல்ல கேட்கத் தொடங்கி விட்டன. “ஹாட்லியும் ஹின்டுவும், இந்த முறை பற்றிக்ஸிலும் பெடியள் கலக்கிற மாதிரி எங்கட பெடியள் ஏன் results எடுக்கிறதில்லை” என்று ஒரு சாரார் வருத்தப்பட “உதுக்கெல்லாம் வெளிநாட்டில இயங்கிற OBAக்கள் தான் காரணம், காசை அள்ளி எறிஞ்சு கட்டிடம் கட்டுறதில் தான் கவனம் போகுது ஒழிய, கல்வியை முன்னேற்றுவதற்கு எந்த முயற்சியும் எடுப்பதில்லை” என்று இன்னொரு சாரார் கவலையோடு ஆத்திரப்படுகிறார்கள்.

பரி யோவானின் பழைய மாணவர்களின் அக்கறை நிறைந்த அங்கலாய்ப்பிலும் கவலையிலும்  ஆத்திரத்திலும் நியாயம் இருக்கிறது.  Big Match வெல்லும் போதும் ரோயல் கல்லூரியை வெல்லும் போதும் குதித்து கும்மாளம் போடும் எங்களால், OL, AL results வரும்போது, அடக்கி வாசிக்கத் தான் முடிகிறது. 

ஒரு காலத்தில் கல்வியிலும் கலக்கி விளையாட்டிலும் கோலோச்சிய எங்கள் கல்லூரி, உண்மையிலேயே கல்வியில் பின்தங்கி விட்டதா? இல்லை, பரி யோவான் கல்லூரியின் இலட்சியம், வாழ்க்கைக்கு தேவையான திறன்களை ஊட்டி, ஆளுமையுள்ள நல்ல வாலிபர்களை உருவாக்குவது தான், ஆதலால் நாங்கள் கல்வி பெறுபேறுகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லையா?

ஒரு பாடசாலையின் முதன்மையான இலக்கு கல்வியாகத் தான் இருக்க வேண்டுமா?விளையாட்டும் இதர செயற்பாடுகளும் கல்விச் செயற்பாட்டை பலப்படுத்தும் துணையாக மட்டும் தான் இருக்க வேண்டுமா? கல்வியும் விளையாட்டும் இதர செயற்பாடுகளும் சரியான அளவில் கலந்து வழங்கும் போது தான் ஒரு நல்ல மாணவன் ஒரு நல்ல மனிதனாக உருவெடுக்கிறான் என்பதில் யாவரும் உடன்படலாம். 

உக்கி உருக்குலைந்து குண்டும் குழியுமாய் இருந்த கூடைப்பந்தாட்டத்திடலை மீளநிர்மாணம் செய்ய உலகெங்கும் வாழும் பரி யோவானின் பழைய மாணவர்கள் பங்களிப்பு செய்த இந்த செயற்திட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட நினைவு மலரிற்கு அவர்களிட்ட பெயர், Bouncing Back. Bouncing Back என்பதை தமிழில் “மீண்டும் தொடங்கும் மிடுக்கு” எனும் மகாகவியின் சொல்லாடலோடு மொழிமாற்றம் செய்யலாம்.

Bouncing Back என்பது பரி யோவானின் கூடைப்பந்தாட்ட விளையாட்டோடு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டாமல், கல்லூரியின் கல்வி பெறுபேறுகளும் மீண்டும் எழுச்சி கொண்டு மாட்சிமை பெற வேண்டும். கூடைப்பந்து விளையாடுவதற்கு ஒன்றிணைந்து பங்காற்றிய பரி யோவான் சமுதாயம், கல்வியில் எங்கள் கல்லூரி Bouncing Back அடைவதற்கு, அதை விட பலமடங்கு பங்களிக்காதா? 

Let’s, Bounce Back....

No comments:

Post a Comment