Friday, 26 January 2018

பொப்பிசைச் சக்கரவர்த்தி“ஒரே மேடையில் 99 அழகிகளுடன் பொப்பிசைச் சக்கரவர்த்தி A.E மனோகரன்” 

1970களின் ஆரம்பத்தில், யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற ஒரு இசை நிகழ்ச்சியை விளம்பரப்படுத்த, யாழ் நகரெங்கும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி ஒன்றை பற்றி அண்ணர் ஒருத்தர் கிளுகிளுப்புடன் நினைவு கூர்ந்தார். “அடேய் தம்பி, it had four mini skirt clad ladies with Mano in the middle” என்று அந்த அண்ணா, தன்னுடைய விடலைப் பருவ நாற்களிற்கே என்னை கூட்டிப் போனார்.

“வீட்டில எங்களை A.E மனோகரனின் நிகழ்ச்சிகளிற்கு போக விட மாட்டீனம்” என்று சொன்ன அண்ணரின் குரலில் கோபமும் கவலையும் கலந்திருந்தது. யாழ்ப்பாணத்தை மெல்ல மெல்ல வசியப்படுத்தத் தொடங்கியிருந்த பொப் இசையை, யாழ்ப்பாணத்தின் பழைமைவாதம் பேணும் சமுதாயம் (conservative society) வரவேற்க மறுத்த காலகட்டம் அது. 

“வீரசிங்கம் மண்டபத்திலும் யாழ் Open Air Theatreலும் (அதான் எங்கட முற்றவெளி) மனோகரனின் program நடக்கும். Stageக்கு முன்னுக்கு வந்து பெடியள் ஆடிப்பாடி அட்டகாசம் செய்வது, அப்பத்தய யாழ்ப்பாணத்தாருக்கு புதுசா இருந்தது” என்று அண்ணர் சொல்லிக் கொண்டே போனார்.  

“உது உருப்பிடாதவங்கள் போற இடம், நீ அங்க போகக் கூடாது, அவயும் அவட சடை மயிரும் Bell bottom களுசாணும், விசர் கூட்டம்” என்று பொப் இசையில் மயங்கிய இளைஞர்களை ஹிப்பிகளாகவே பழமைவாத சமுதாயம் கண்ணோக்கியது என்று அண்ணர் சமூகவியல் வகுப்பெடுத்தார். பழமைவாத யாழ்ப்பாண சமுதாயத்தின் இந்த கண்ணோட்டத்திற்கு தனது பொப்பிசைப் பாணியிலேயே AE மனோகரன் பதிலடியும் கொடுத்திருந்தாராம்.

“ஹிப்பி முடி வளர்ப்பதெல்லாம் அழகிற்காகவே,
எங்கள் தொங்கு மீசை காட்டும் எம்மை ஆண்களாகவே,
கட்டடித்து ஜாலியாக ஜூலி பார்க்கவே,
எங்கள் கவனமெல்லாம் எந்த நாளும் பொப் டியூனிலே”


எழுபதுகளில் எழுச்சிக் கொண்ட இந்த பொப் இசை அலையிற்கு வித்திட்டவர்கள், பரி யோவான் கல்லூரியின் பழைய மாணவனான AE மனோகரன், யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவனான நித்தி கனகரத்தினம் மற்றும் “ஓ ஷீலா ஓ சாந்தி” புகழ் அமுதன் அண்ணாமலை. 

பழங்கதைகள் கதைக்கிறது என்றால் ஜொனியன்ஸிற்கு வலு விருப்பம். “மனோகரன் வந்துடா Fleming Hostelலில் தான் இருந்தவன், நான் அப்ப Evertsல் இருந்தனான்” என்று மெல்பேர்ணில் இருக்கும் ஒருத்தர் சொல்ல, கொழும்பில் இருக்கும் இன்னொருத்தரோ “இந்த வடை வடையா வித்து வந்தா சிங்காரக் கிழவி பாட்டு இருக்கைல்லோடா” என்று தொடங்கி “அந்தப் பாட்டு,பெரிய கிணத்துக்கு பக்கத்தில் இருக்கும் ராஜசிங்கம் ஹொஸ்டலில் வைத்து தான் மனோ இயற்றி பாடினவன்” என்று, பொப்பிசைச் சக்கரவர்த்தியின் பரி யோவான் கல்லூரிக் கால வரலாற்றைப் பதிவு செய்தார். 

“Hostel Dayயில் தான்டா அவன் கலக்க தொடங்கினவன்” என்று பரி யோவானின் விடுதி மாணவர்களிற்கு இடையில் நடக்கும் கலை கலாச்சார போட்டிகளை இன்னுமொரு ஜொனியன் நினைவுகூர்ந்தார். “தானே நாடகம் எல்லாம் எழுதி நடிப்பான், அப்பவே ஒன்றிரண்டு பாட்டுக்கள் தானே எழுதி, மியூசிக் போட்டு பாடுவான்டா” என்று அவர் விளாசிக் கொண்டு போன போது, பரி யோவானின் Hostel Day பற்றி Jaffna Boy புத்தகத்தில் பேர்னாட் சின்னையா விவரித்தது ஞாபகம் வந்தது.  

2013ம் ஆண்டு மீண்டும் பரி யோவான் அன்னை மடிக்குத் திரும்பிய AE மனோகரன், யாழ்ப்பாணத்தின் பிரபல இசைக் குழுக்களான அருணா மற்றும் ராஜன்ஸோடு இணைந்து Peto Hallல் ஒரு இசை நிகழ்ச்சியை வழங்கினார். உடல் உபாதைகளை பொருட்படுத்தாமல், அந்த அறுபது சொச்ச வயதிலும், சென் ஜோன்ஸ் காற்று பட்ட உற்சாகத்தில், தன்னந்தனியாக 36 பாடல்கள் பாடி, அந்த நிகழ்வை என்றும் மறக்கமுடியாத தனது கடைசி யாழ்ப்பாண நிகழ்ச்சியாக படைத்தார். 

2010ம் ஆண்டு மெல்பேர்ணில் அரங்கேறிய நிகழ்ச்சியை எமது கொழும்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. அரங்கம் நிறைந்த மக்களுடன் அட்டகாசமாய் அரங்கேறிய அந்த நிகழ்ச்சியில் stage management பொறுப்பை ஏற்றிருந்தேன். “குளிருது....குளிருது....குளிருதடா....ராசா”
என்று பாடிக் கொண்டே மேடையின் பின்புற அறைக்குள் நுழைந்த AE மனோகரனோடு கழித்த அந்த சில மணித்தியாலங்கள் வாழ்வில் மறக்க முடியாதவை.

மெல்பேர்ண் நிகழ்வின் இறுதியில், அன்று முற்றவெளியிலும் வீரசிங்கம் மண்டபத்திலும் மேடைக்கு முன்னால் ஆடிய “அன்றைய இளைஞர்கள்” சிலர், தங்கள் வயதையும் பதவிகளையும் பட்டங்களையும் சமூக அந்தஸ்தையும் எல்லாம் மறந்து,  மெல்பேர்ணில் மேடையிலேயே ஏறி, மனோகரனை சூழ நின்று ஆடி, AE மனோகரனை மட்டுமல்ல  அவர்தம் குடும்பத்தாரையும் மெல்பேர்ண் தமிழ் சமூகத்தையும் ஆச்சரியப்பட வைத்தார்கள். சற்றும் எதிர்பாராத இந்த “அந்தக்கால இளைஞர்களின்” ஆட்டத்தில், AE மனோகரனிற்கு சந்தோஷத்தில் கண்கலங்கி விட்டது. 

உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களின் வீட்டு Partyகளையும், ஒன்று கூடல்களையும் அலங்கரிக்கும் பாடல்கள் AE மனோகரனின் பாடல்கள் தான். எல்லோரும் சேர்ந்து கை தட்டி பாட்டு பாடி ஆட்டம் போடும் அருமையான பாடல்களின் கர்த்தா, பொப் இசைச் சக்கரவர்த்தி AE மனோகரன் தான். இந்த Partyகளில் அரங்கேறும் இன்னுமொரு பெரும் பகிடி என்னவென்றால், scotchல் rocksஐ மிதக்க விட்டு, glassஐ தூக்கி அன்டிமாருக்கு காட்டி, ஒரு கிலுக்கு கிலிக்கி விட்டு “கள்ளு கடை பக்கம் போகாதே” என்று பாட்டு பாடும் அங்கிள்மாரின் அரியண்டம். 

“நமோ நமோ” பாட மறுக்கும் தமிழர்களின் உத்தியோகபூர்வமற்ற தேசிய கீதம், AE மனோகரனின் “இலங்கை என்பது நம் தாய் திருநாடு” தானாகத் தானிருக்கும். “நல்லூர் நாயகனே நல்விழி காட்டுமையா” என்று உருகும் மனோகரனின் குரல் இன்றும் “நல்லூர் எம் பதியில்” ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது. சில ஆண்டுகளிற்கு முன்னர் AE மனோகரன் பாடிய “யாழ்ப்பாணம் போக ரெடியா” பாட்டு புலம்பெயர் வாழ் மக்களை தாயகத்திற்கு மீண்டும் அழைத்துச் சென்றதில் தாக்கம் செலுத்தியது. 


“அண்ணே, அப்ப பற்றிக்ஸில் நடந்த அந்த நிகழ்ச்சிக்கு mini skirt போட்ட 99 அழகிகள் வந்தவயளோ” AE மனோகரன் பற்றிய நினைவுகளப் பகிரத் தொடங்கிய அண்ணையை கிண்டினேன்.

“ராப் பத்து மணியாச்சு, மனோகரனை காணேல்ல, உவங்கள் சனத்தை வரவைக்க தான் மனோகரனை போஸ்டரில் அடிச்சவங்கள் என்று சனம் கத்தி, கூ அடிக்க தொடங்கிட்டுது, சிஸ்டர் மாரும் கொன்வென்ட் பெட்டையளும் அன்டிமாரும் பின்னல் போட்ட Ranjith Chairsல் இருக்கீனம்” அண்ண மாட்டை மரத்தில் கட்டினார். 

“பேந்து என்ன நடந்தது.. அண்ணே...அந்த 99 பெட்டையள்...” அண்ணரை கெதிப்படுத்தினேன். “பொறடா பொறடா...அதுக்கு வாறன், கொஞ்சம் பொறு” என்ற அண்ணர்,  பற்றிக்ஸ் மைதானத்தின் உயர்ந்த மதில்களை சுற்றி வந்து, பத்தரைக்கு AE மனோகரன் மேடையேறிய காட்சியை வர்ணித்து, தான் புது களுசான் போட்டுக் கொண்டு போனதைப் புளுகி, கடைசியாக விஷயத்திற்கு வந்தார், “ஆக ஒரே ஒரு சிங்கள பெட்டை தான்டா வந்தவள்.. அதுவும் MGRன் லதாவை பார்த்த Jaffna கண்களிற்கு it was a huge disappointment, எனக்கும் தான்”.

பொப்பிசைச் சக்கரவர்த்தி AE மனோகரன் 2010ல் சிட்னியில் கானா பிரபாவிற்கு அளித்த பேட்டியில், தான் 250ற்கு மேற்பட்ட  படங்கள் நடித்திருந்தாலும்  எத்தனையோ தொலைக்காட்சி நாடகங்கள் நடித்திருந்தாலும், தனக்கு மனமகிழ்ச்சியை தரும் விஷயத்தை பற்றி அவருடைய பாணியிலேயே பம்பலாக பதிவு செய்வார். 

“ஆனா என்ன தான் இருந்தாலும், எங்கட சாதி சனங்கள் வந்து நின்று, பாட்டை கேட்டு, கையை தட்டி, ஒரு ஆட்டம் ஒன்று ஆடி, ஒரு குலுக்கு ஒன்று குலுக்கி விட்டு போற மாதிரி, ஒரு மகிழ்ச்சியான குஷியான ஒரு இது வேறெதிலும் இல்லை, எங்கட சனம் வந்து ஒரு கிலுக்கல் கிலுக்கினா அதில உலகமே மடக்கம்.. அவ்வளவு தான்”

AE மனோகரன் பாடிய சுராங்கனியும், கோப்பித் தோட்ட முதலாளியும், டிங்கிரி டிங்காலேயும், ஆய் ஊய் மீனாட்சியின் எலிகள் பட்டாளமும், மற்ற பாட்டுக்களும் ஒலித்துக் கொண்டே இருக்கும் மட்டும் எங்கட சனத்தின் கிலுக்கல் கிலுக்கிக் கொண்டு தானிருக்கும். 

No comments:

Post a Comment