Friday, 27 October 2017

மீண்டும் மாயமான்(கள்)எண்பதுகளின் நடுப் பகுதியில், ரஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக பதவியேற்று, இலங்கைப் பிரச்சினையில், இந்திரா காந்தியின் அணுகுமுறையில் இருந்து விலகி நடந்து கொண்டிருந்த காலம். இலங்கை அரசையும் தமிழ் இயக்கங்களையும்  இணக்கத்திற்கு கொண்டு வர இந்தியா பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்த கால கட்டம்.  இந்தப் பின்னனியில் தான் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினர் “மாயமான்” எனும் தெருக்கூத்தை அரங்கேற்றினார்கள்.

பின்னேரங்களிலும் இரவுகளிலும் யாழ்ப்பாணம் எங்கும் ஊர் சந்திகளில் அரங்கேறிய “மாயமான்” தெருக்கூத்தில் வரும் பாடல்களில் ஒன்று, இன்று மீண்டும் ஒரு தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் நினைவில் வந்தது. 

“தென்னாசியாவின் 
மன்னாதி மன்னர் நான்
ஏனென்று கேட்காமல்
என் பின்னால் வாருங்கள்”

என்ற பாடலை பாடிக் கொண்டு ரஜீவ் கதாபாத்திரம் முன்னே போக, தென்னாசியாவின் குட்டி நாடுகள் அவர் பின்னால் போவதைப் போன்று அந்தக் காட்சி அமையும். ரஜீவ் காந்தியை குறித்து எழுதப்பட்ட இந்த வரிகள், ரஜீவ் கொடுக்க விரும்பிய தீர்வுப் பொதியை பற்றியதாகவும் இருந்திருக்கலாம்.

——————————

தமிழீழம் என்பது தமிழர்களின் கனவு. அந்தக் கனவு முள்ளிவாய்க்காலோடு யதார்த்த ரீதியில்முற்றுப் பெற்றாலும், நாங்கள் சாகும் வரை அந்தக் கனவு எங்கள் கண்களிற்குள் ஒட்டிக் கொண்டு தானிருக்கும். நனவாகாத அந்தக் கனவு எங்களுக்குள் உறங்கு நிலையில் இருக்கும் போது எந்தவொரு தீர்வுத் திட்டமும் எங்களிற்கு திருப்தி தராது.

தமிழ் தலைமைகளோடு ஏற்படுத்திய ஒப்பந்தங்களை சிங்களத் தலைமைகள் மீறிய வரலாறே 1977ல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கும் ஆயுதப் போராட்டத்திற்கும் வித்திட்டது. தனித் தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் உச்சம் பெறத் தொடங்க, கிடைத்த இடைக்காலத் தீர்வுகளை தமிழர் தரப்பு நிராகரிப்பதும் எட்டப்பட்ட உடன்படிக்கைகளிற்கு நீதிமன்றங்கள் முட்டுக்கட்டை போடுவதும்  வரலாறாகத் தொடங்கியது. 


இப்போது 2017ல் மீண்டும் ஒரு அரை குறைத் தீர்வாக இடைக்கால அறிக்கை எனும் பெயரில் வந்திருக்கும் புதிய அரசியல் யாப்பிற்கான சிபாரிசுகளையும் நிராகரிக்க எங்களை நாங்கள் தயார்படுத்தத் தொடங்கிவிட்டோம். அன்றும் இன்றும் நிராகரிக்க நாங்கள் கூறும் காரணங்கள் மிக வலுவானவை, எங்களைப் பொறுத்தவரை வலு நியாயமானவை. மற்றப் பக்கத்தில் சிங்கள பேரினவாதிகளும் தங்களது எதிர்ப்பு ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள்.

“மச்சான், நாளைக்கு சிங்களவனே மனம் மாறி எங்களிற்கு தமிழீழம் தந்தாலும், நாங்கள் சிலாபத்தில் இருக்கும் தென் தமிழீழ எல்லையை வெள்ளவத்தை மட்டும் நீட்டாட்டி எங்களிற்கு தமிழீழம் வேண்டாம் என்று சொல்லுவமடா” என்று நண்பன் ஒருவன் பகிடியாய் சொன்னதிலும் ஒரு தார்ப்பரியம் இருக்கிறதா?

போரில் தோற்ற நாங்கள் தான் இறங்கிப் போக வேண்டும் என்ற வாதம் சரணாகதிக்கு சமானம் இல்லலையா? சரி இறங்கிப்போவதுதான் என முடிவெடுத்தால் எவ்வளவு தூரம் இறங்கலாம் என்பதற்கும் ஓரு எல்லையுண்டல்லவா?  அந்த எல்லை எதுவரை என்பதை எப்படி தீர்மானிப்பது ? இறங்கிப்போனால் அப்படியே மூழ்கிப்போய்விடுவோம் என்பவர்களுக்கான பதில் தான் என்ன? 

1987லிருந்து தரப்பட்ட தீர்வுகளை நிராகரிக்க நிராகரிக்க, அடுத்து வந்த தீர்வுகள் தேய்ந்து கொண்டு போனது தான் வரலாற்று உண்மை என்று அண்மையில் மெல்பேர்ண் வந்த அமைச்சர் மனோ கணேசன் சொன்ன கருத்து நியாமானதா?  நாங்கள் விரும்பும் தீர்வும்  ஒரு மாயமானா? 

—————-

தீர்வுத் திட்டங்களின் உள்ளடக்கம் மட்டுமா தேய்ந்தது? யுத்தம் எங்களை விரட்ட, நாங்கள் தென்னிலங்கைக்கும் வெளிநாடுகளிற்கும் புலம்பெயர, தாயகப் பகுதிகளில் எங்கள் சனத்தொகை தேயத் தொடங்கியது. எங்களது சனத்தொகை குறைவதும், ஒரு வகையில் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்களிற்கு வழி விடுவதாகவே அமைகிறது. 

கல்வியில், 1990களின் ஆரம்பத்தில் முதல் மூன்று மாவட்டங்களில் இடம்பிடித்த யாழ்ப்பாண மாவட்டம், 2016ல் 21வது இடத்திற்கு தள்ளப்பட்டதும் இந்த காலகட்டத்தில் தான். 1980களில் இலங்கையின் பொருளாதாரத்திற்கு 25 சதவீதத்திற்கு பங்களிப்பு வழங்கிய வடக்கு-கிழக்கு மாகாணங்களின் பொருளாதார பங்களிப்பு, 2016ல் 6 சதவீதத்திற்கு சரிந்ததும் இதே கால கட்டத்தில் தான். 

நாங்கள் அரசியல் உரிமைகளை வெல்வதில் மட்டும் குறியாக இருக்க, இலங்கையின் பிற சமூகங்கள் தங்களை பொருளாதார ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் வளப்படுத்திக் கொண்டு விட்டன என்ற கசப்பான உண்மை எமக்கு நன்கு தெரிந்தது தான். அந்த சமூகங்கள் பொருளாதார ரீதியாக அடைந்த முன்னேற்றங்கள் அவர்களை அரசியல்  ரீதியாகவும் பலப்படுத்தி விட்டன.

அரசியல் உரிமைகள் வெல்லும் வரை எங்கள் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுக்க நாங்கள் தொடர்ந்தும் மறுத்து வருவதும் ஏன்? அரசியல்-பொருளாதாரம் எனும் இரட்டை நோக்கங்களையும் சமாந்தரமாக கொண்டியக்கவல்ல கொள்கைகள் நமக்கு கசப்பதன் காரணம் தான் என்ன?
எங்களது அரசியல் உரிமைகள் நோக்கிய பயணத்தை திசை திருப்பவல்ல மாயமான் தான் சமூக-பொருளாதார அபிவிருத்தியா?

—————————

“ஐநா வரை எங்கட பிரச்சினை போயிருக்குடா. இப்ப போய் ஒரு அரை குறை தீர்வை ஏற்றுக் கொண்டோம் என்றால் அவ்வளவு தான். பிறகு எந்தக்காலத்திலும் எங்களால் அதிக அதிகாரமோ உரிமைகளோ கேட்க முடியாது, தம்பி” என்று அண்ணர் ஒருத்தர் விளக்கிய நியாயத்திலும் நியாயம் இருக்கிறது. 

மே 2009ல் எங்களது ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டதோடு, நாங்கள் எங்களை நம்பி,உயிரும்  ரத்தமும் உழைப்பும் வியர்வையும் பவுணும் பணமும் விதைத்து கட்டியெழுப்பிய மிகப் 
பெரிய பேரம் பேசும் பலம் (bargain power), அழிந்து போனது. இப்போது சிங்கள அரசாங்கத்தை உருட்டி வெருட்டி மிரட்டி அதிக உரிமைகளை தர வைக்க எங்களிற்கிருக்கும் பேரம் பேசும் பலம் தான் என்ன? 225 பேரடங்கிய பாராளுமன்றத்தில் இருக்கும் எங்களது 15 பேரா? இலங்கையின் பொருளாதாரத்தை முடக்க முடியாத வடக்கின் கடையடைப்புக்களா?

2009ல் மனித பேரவலம் நடந்த போது அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் கனடாவிலும் ஐநாவிலும் தலைமைப் பதவிகளில் இருந்தவர்களால் தான், அதற்கு பிந்தைய ஆண்டுகளில் சர்வதேசத்தில் இலங்கை அரசிற்கு எதிராக மேற்கோள்ளப்பட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இன்று அவர்களின் ஆட்சிகளும் மாறி இலங்கையிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. அன்று இருந்த அதே ஓர்மத்துடன் சர்வதேசம் எங்களிற்காக களமிறங்கி எங்களது உரிமைகளை பெற்றுத் தரும் என்று இன்றும் நாங்கள் நம்பலாமா? சர்வதேச தலையீடு என்று நாங்கள் காலங்காலமாக எதிர்பார்த்து இருப்பதும் ஒரு மாயமானா?

———————-

நாங்கள் ஒரு பக்கம் இந்த மாயமான்களை துரத்திக் கொண்டு திரிய, போரின் காரணமாக புலம்பெயர்ந்து தங்களை பலப்படுத்திக் கொண்டு விடுதலைப் போராட்டத்திற்கும் பலம் சேர்த்த ஒரு தலைமுறை, “நாட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும்” என்ற இன்னும் நிறைவேறாத வேட்கையுடன் முதுமையை நோக்கியும் மரணத்தை நோக்கியும் பயணித்துக் கொண்டிருக்கிறது. 1950களிலும் 1960களிலும் பிறந்த இந்த தலைமுறை தான், போரால் அழிவுண்ட எங்கள் தேசத்தை மீள கட்டியெழுப்ப வேண்டிய நிபுணத்துவத்தையும் நிதிவளங்களையும் தம்மகத்தே கொண்டிருக்கிறார்கள். 

எங்கள் தேசத்தை ஆழமாக நேசிக்கும் இந்தத் தலைமுறைக்கு பின்னர் வரும் தலைமுறைகள் அவர்களிற்கிருக்கும் அதேயளவு பற்றுடன் தாயகத்திற்கு உதவி செய்யப் போவதில்லை.  தாயகத்தை நேசித்து புலம்பெயர் தேசத்தில் வாழும்  இந்த தேசப் பற்றாளர்களின் பலத்தை தாயக  சமூகத்தையும் பொருளாதாரத்தையும்
மீளவும் கட்டியெழுப்ப பயன்படுத்தப் போகிறோமா? இல்லை காலம் அவர்களையும் காவு கொள்ள விட்டு விடப்போகிறோமா? மாயாமான்களிடம் மீண்டும் ஏமாறப் போகிறோமா? Friday, 20 October 2017

பரி யோவான் பொழுதுகள்: 1980 SJC v Royal Cricket Match

மார்ச் 17, 1980.
பரி யோவான் கல்லூரி மைதானம்,
யாழ்ப்பாணம்.

இலங்கைப் பாடசாலைகளிற்கிடையிலான கிரிக்கெட் போட்டிகளிற்கு  மட்டுப்படுத்தப்பட்ட 45 ஓவர்கள் போட்டிகள் (limited overs) அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பரி யோவான் கல்லூரி அணி விளையாடிய முதலாவது   கிரிக்கட் ஆட்டம் தான் கொழும்பு ரோயல் கல்லூரிக்கு எதிராக பரி யோவான் மைதானத்தில் அரங்கேறிக் கொண்டிருந்தது. 

பரி யோவான் கல்லூரி மைதானத்தின் வடக்கு முனையில் 1977ல் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட scoreboard பெருமையுடன் நிமிர்ந்து நிற்கிறது. அந்த பெருமைக்கு காரணம் scoreboard காட்டிய
Batsman No 3: 99


Scoreboard மட்டுமல்ல, மைதானம் நிறைந்த பரி யோவானின் மாணவர்களும் கிரிக்கெட்டை காதலிக்கும் யாழ்ப்பாண மக்களும் பெருமையோடும் ஆவலோடும்,  99 ஓட்டங்களோடு மைதானத்தில் அதிரடியாக ஆடிக்கொண்டிருக்கும் பரி யோவான் கல்லூரி அணியின் உப தலைவரும் No 3 Batsman ஆன N.வசந்தனை, ஆரவாரித்து உற்சாகப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். Church முனையில் இருந்து பந்து வீச, ரோயல் கல்லூரி அணியின் Off Spin பந்து வீச்சாளரும் உப தலைவருமான ஹரூன் முஸாஃபரை, அணியின் தலைவர் Sudat Pasqual அழைக்கிறார். மறுமுனையான Principal Bungalow   முனையில் தனது SS Batஐ styleஆக பிடித்தபடி பந்து வீச்சை எதிர்கொள்ள N. வசந்தன். Non striker முனையில், பரி யோவான் அணியின் தலைவர் EJ ஜெபரட்ணம். நிரம்பி வழியும் மைதானத்தில்  டென்ஷனோ டென்ஷன்.

1978-79 ஆண்டுகளில் Ranjan Madugalle தலைமை தாங்கிய ரோயல் கல்லூரி அணியின் தலைமையை 1980ல் ஏற்ற Pascal, 1979ல் இங்கிலாந்தில் இடம்பெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை கிரிக்கட் அணியில் விளையாடியவர். 1980ல் St. Thomas கல்லூரியிடனான Big Matchஐ வென்றுவிட்டு, யாழ்ப்பாண பாடசாலைகளோடு 45 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நாள் ஆட்டங்களை ஆடவந்த ரோயல் கல்லூரி அணியை ஆட்டம் காண வைத்துக்கொண்டு இருந்தார், “ஜொனியன்” வசந்தன்.

தலையில் தொப்பி அணிந்துகொண்டு, முதலாவது பந்தை வீச முஸாஃபர் தயாராக, பந்தை எதிர்கொள்ள வசந்தன் நிலையெடுக்கிறார். ஆடி அசைந்து தனது சுழல் பந்தை வீச ஓடி வந்த முஸாஃபர், இடை நடுவில் பந்து வீச்சை நிற்பாட்டி, தனது தொப்பியை கழற்றி umpireடம் கொடுக்கிறார். 99 ஓட்டங்களோடு டென்ஷனில் இருந்த வசந்தன், தனது batting stanceலிருத்து நிமிர்கிறார், மைதானத்தில் ஏற்பட்ட ஒரு கண நிசப்பதம் நீங்கி மீண்டும் ஆரவாரம் தொடர்கிறது. 

அன்று காலை நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பரி யோவான் அணியின் தலைவர் ஜெபரட்ணம், ரோயல் கல்லூரி அணியை துடுப்பாட அழைத்திருந்தார். Principal Bungalow முனையிலிருந்து வேகப் பந்து வீச்சை தொடங்கிய ஜெபரட்ணத்தின் முதலாவது ஓவரில், ரோயல் கல்லூரியின் முஸாஃபர்  அடித்த அழகிய cover drive நான்கு ஓட்டங்களை பெற்றுக் கொடுத்திருந்தது. Church முனையிலிருந்து இரண்டாவது ஓவரைத் தொடங்கிய இடதுகை வேகப்பந்து வீச்சாளரான ஜெயக்குமாரின் இரண்டாவது மற்றும் நான்காவது பந்துகளில் ரோயல் கல்லூரியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ஆட்டமிழக்க...ரோயல் கல்லூரி 7/2

மீண்டும் தனது முதலாவது பந்தை வீச, run up எடுத்த முஸாஃபர், நின்று நிதானித்து யோசிக்கிறார், மறு முனையில் பந்தை எதிர் கொண்டு சதம் அடிக்கும் ஆவலோடு வசந்தன். முஸாஃபர், தனது அணித்தலைவர் Pascalஐ அழைத்து ஏதோ கதைக்கிறார், அவர்களோடு இன்னும் இரு ரோயல் கல்லூரி வீரர்கள் இணைந்து கொள்கிறார்கள். நிமிடங்கள் கடக்கின்றன, ரோயல் கல்லூரி அணி நிதானமாக தங்களது field settingஐ மாற்றுகிறார்கள். ரோயல் கல்லூரிகெதிராக சதமடிக்கப்போகும் வடக்கின் மைந்தன் வசந்தன் பொறுமையை இழக்கத் தொடங்குகிறார்...

ரோயல் கல்லூரி 27 ஓட்டங்களை எடுத்த வேளை தனது மூன்றாவது விக்கெட்டை இழக்கிறது. ஜெபரட்ணம் வீசிய பந்தில் முதலாவது slipsல் நின்ற கருணைகுமாரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தவர் Sumithra Warnakulasooriya, இரு வாரங்களிற்கு முன்னர் St Thomas அணிக்கெதிராக 197 ஓட்டங்கள் அடித்த ரோயல் அணியின் நம்பிக்கை நட்சத்திரம். 27/3ல் பரி யோவான் அணியின் கை ஓங்கியிருக்க, களமிறங்கிய ரோயல் அணியின் தலைவர் Pascalம் Ajit Devasurendraவும் ரோயல் அணியின் இன்னிங்ஸை மீள கட்டியெழுப்புகிறார்கள்.

கப்டனோடு கலந்தாலோசித்து field settingஐ மாற்றிய முஸாஃபர், மீண்டும் பந்து வீச தயாராகிறார், வசந்தனும் மீண்டும் நிலையெடுக்கிறார். பந்து வீச ஓரடி எடுத்து வைத்த முஸாஃபர், சடாரென நின்று, Third manல் நின்ற fielderஐ  mid onற்கும் mid onல் நின்றவரை Third manற்கும் மாற்றி வினாடிகளை வீணடித்து வசந்தனை விரக்தியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறார். பொறுமையிழந்த மாணவர்களும் பார்வையாளர்களும் ரோயல் கல்லூரி அணிக்குக் கூக் காட்ட தொடங்குகிறார்கள். 

 Devasurendra (43) ஆட்டமிழந்து செல்ல களமிறங்கிய, பின்னாட்களில் இலங்கை அணிக்கு விளையாடிய, Roshan Juranpathy (45), Pascal (83) ஓடு இணைத்து ஆடி, ரோயல் அணியின் ஓட்ட எண்ணிக்கையை மளமளவென அதிகரிக்கிறார்கள். 45 ஓவர்கள் முடிவில் ரோயல் அணி 217/6 ஓட்டங்களை எடுத்திருந்தது. பரி யோவான் அணிக்கு இரு விக்கெட் காப்பாளர்கள் அன்று மாறி மாறி gloves அணிந்திருந்தார்கள், ஒருவர் சிவேன் சீவரட்ணம் மற்றவர் தஞ்சரட்ணம். 

பரி யோவான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான DM ரட்ணராஜாவும் DM ரவீந்திராவும் களமிறங்கிய போது மத்தியான வெய்யில் உச்சியில் இருந்து.  ரட்ணராஜா Square Cut shot, Hook shot என்று ரோயல் கல்லூரியின் ஆரம்ப பந்து வீச்சாளரான Pascalன் பந்துகளை விளாசி அடிக்கத் தொடங்கினார். அடுத்தடுத்த ஓவர்களில் ரட்ணராஜாவும் ரவீந்திராவும் ஆட்டமிழக்க வசந்தனோடு  இணைந்து தஞ்சரட்ணமும் (21)  கருணைகுமாரும் (23) பரி யோவானின் இன்னிங்ஸை கட்டியெழுப்புகிறார்கள். Pascal வீசிய ஒரு ஓவரில் அடுத்ததடுத்து மூன்று பவுண்டரிகளை வசந்தன் விளாசியதுடன் பரி யோவானின் ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்குகிறது, ரோயல் கல்லூரி அணிக்கு கிலி பிடிக்கத் தொடங்குகிறது.

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதை போல, மீண்டும் முஸாஃபர் பந்து வீச தயாராகிறார். இந்த முறையாவது பந்தை வீசுவாரா இல்லையா என்ற ஜயம் வசந்தனின் மண்டையிலும் பார்வையாளர்களின் மனதிலும் விதைக்கப்பட்டிருந்தது. பந்து வீச ஓடி வந்த முஸாஃபர், இந்த முறையும் பந்து வீசவில்லை. துடுப்பெடுத்தாட தயாரான வசந்தனிற்கு சைகை காட்டிவிட்டு, குனிந்து தனது சப்பாத்து laceஐ  அவிழ்த்துக் கட்டத் தொடங்கினார். வசந்தனையும் சனத்தையும் வெறுப்பற்றிய ரோயல் கல்லூரி அணிக்கெதிரான கோஷங்கள், மைதானத்தை அதிர வைக்கின்றன.


பரி யோவான் கல்லூரி வரலாற்றில் பாடசாலைக்கு ஆடிய மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக இன்றும் கருதப்படும் வசந்தன் அடித்த பல சதங்கள் பரி யோவான் அணி அடைந்த வெற்றிகளுக்கு அடித்தளமாகியிருக்கின்றன. ரோயல் கல்லூரி அணியுடனான இந்த போட்டியில் துடுப்பாட தயாரான வசத்தனிற்கு, அணியின் பயிற்சியாளரான மனுவல்பிள்ளை மாஸ்டர் சொல்லியனப்பிய அறிவுரை "Don't get out. Bat through 45 overs. We will win” என்பது மட்டுமே. 

முஸாஃபர் மீண்டும் பந்து வீச தயாராகிறார். Old Park பக்கமிருந்து பாசி படிந்த குட்டிச்சுவரோடு சைக்கிளை சாத்திக் கொண்டு ஆட்டத்தை பார்த்து கொண்டிருந்த யாரோ ஒருவர் சத்தமாக ஏதோ கத்துகிறார். இந்த முறை பந்து முஸாஃபரின் கையால் வெளிக்கிட்டால் ஒன்று Old Park தாண்டும் இல்லை Dining Hall தாண்டும் என்ற ஓர்மத்துடன் வசந்தனும் துடுப்பெடுத்தாட தயாராகிவிட்டார். “தட்டிப் போட்டு single எடு ராசா” ரோபர்ட் வில்லியம்ஸ் மண்டபத்தடி இலந்தை மரத்திற்கு கீழே நின்ற யாரோ ஒரு பழைய மாணவர் கத்துகிறார்.  

சுற்றி சுழன்று ஓடி வந்த முஸாஃபர், கையை லாவகமாக சுழற்றி பந்தை வீசுகிறார். உண்மையிலேயே இந்த முறை பந்தை வீசியே விட்டார். பரி யோவான் மைதானத்தின் matting pitchல் விழுந்த பந்து வசந்தனை நோக்கி வருகிறது. இதயம் படபடக்க மைதானமே அந்த பந்து போக போகும் திசையில் பார்வையை பயணிக்க... வசந்தன் கிட்ட வந்த பந்தை கடந்த சில நிமிடங்களில் தனக்குள் ரோயல் கல்லூரி அணி ஏற்றியிருந்த வெறுப்பை எல்லாம் சேர்த்து ஓங்கி அடிக்கிறார்... பந்து மேலேழுகிறது...

N. Vasanthan C&B H.Musafer 99


1980ல் வெற்றியை நோக்கி வீறுநடை போட்ட பரி யோவான் கல்லூரி அணியை, mind games விளையாடி, தோல்வியடையச் செய்த கொழும்பு ரோயல் கல்லூரி அணியை  அதே பரி யோவான் கல்லூரி மைதானத்தின் matting pitchல் 37 ஆண்டுகளிற்கு பின்னர், இந்த வாரம் 10 ஓட்டங்களால் பரி யோவான் கல்லூரி அணி வெற்றி பெற்றிருக்கிறது. 

மீண்டும் தொடங்கும் மிடுக்கு!பி.கு
முதலாவது வகுப்பு படிக்கும் சிறுவனாக சனத்திரளின்
மத்தியில், அப்பாவின் தோளில் இருந்து இந்த ஆட்டத்தின் கடைசி ஓவர்களை பார்த்த ஞாபகம் நினைவில் நிழலாடுகிறது. இந்த பதிவில் பொதிந்துள்ள தரவுகளை தந்துதவிய பரி யோவான் பழைய மாணவர்களிற்கு நன்றிகள்.

Scores 
Royal - 217/6 in 45 overs
Pasqual 83, Jurangpathy 45, Devasurendra 43

Jebaratnam, Jeyakumar and Karunakumar took 2 wickets each.

St.John's - 192/8 in 45 overs
Vasanthan 99, Karunakumar 23, Thanjaratnam 21Teams in batting order:

St.John's College
1. D.M.Ratnarajah
2. D.M.Raveendra
3. N.Vasanthan (Vice Captain)
4. E.T.Thanjaratnam (Wicket Keeper)
5. S.Karunakumar
6. E.J.Jebaratnam (Captain)
7. S.Seevanayagam
8. N.Prabaharan
9. V.Kathirgamanathan
10. P.Jeyakumar
11. S.Dhananjeyan
12. J.J.Puveendran

Royal College
1. Haroon Musafer (Vice Capt)
2. Chulaka Amarasinghe
3. Sumithra Warnakulasooriya
4. Sudath Pasqual (Captain)
5. Ajit Devasurendra
6. Rohan Jurangpathy
7. Nalin De Alwis (Wicket Keeper)
8. Sivaharan Nithyananthan
9. Chelliah
10. Kesara De Costa
11. Yasantha Peiris

From the College Magazine 

Friday, 13 October 2017

கனடா பயணம்"டேய் மச்சான், டொரானோவில் என்ன செய்யுறியோ இல்லையோ, பாபுஸின் கொத்து ரொட்டியையும் Quality Bakeryயில் மட்டன் ரோல்ஸும் சாப்பிடாமல் வராதே... மற்றது லிங்கம் கூல்பார் ice cream" பயணம் புறப்பட முன்னரே கஜன் கனடாவில் கட்டாயம் செய்ய வேண்டிய விடயங்களை பட்டியலிட்டான்.

"ஏன்டா நான் கனடாக்கு போறேனோ இல்லை யாழ்ப்பாணத்திற்கு போறனோ" அறியாமல் கேள்வியை கேட்டேன். 

"போய்ட்டு வா... உனக்கு விளங்கும்" கஜன் சொல்லி முடிய WhatsApp தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள், தாங்கள் புலம்பெயர்ந்த நாடுகளின் சட்டதிட்டங்களோடும் பழக்க வழக்கங்களோடும் முரண்படாது பயணிக்க தம்மை மாற்றிக்கொண்டார்கள்.  அதேவேளை காலங்காலமாக பரம்பரை பரம்பரையாக இலங்கையில் தாங்கள் கடைப்பிடித்த சம்பிரதாயங்களையும் பழக்கங்களையும் அந்நிய நாடுகளில் குடியேறிய பின்னரும் விடாது கடைப்பிடிக்கிறார்கள். 

ஒஸ்ரேலியாவில் வாழத் தொடங்கியதில் பழகிய கோப்பி குடிக்கும் பழக்கம், கனடாவிலும் தொடர்ந்து பயணித்தது.  “கோப்பி என்றா Tim Hortons தான்டா” என்று சொல்லி நகு கூட்டிக் கொண்டு போனான். தனக்கு ஒரு “double double” சொல்லி விட்டு, என்னுடைய Latteக்கு ஆனை விலை கொடுத்தான். “இங்கே யாரும் latte பெரிசா குடிக்கிறது இல்லை... உன்னை மாதிரி வெளிநாட்டுக்காரன்கள் தான் கேட்பாங்கள்.. அதான் இந்த விலை” என்று நீண்ட விளக்கம் தந்தான்.

நகுவின் “double double” ஓடரை எடுத்தது “கீதா” என்ற பெயருடைய பெட்டை, கோப்பி போட்டதோ “லலிதா”. டொரான்டோவில் எந்த கடையில் ஏறினாலும் அங்கு பணியாற்றும் எங்கட ஆட்களை தாராளமாக காணலாம். “மச்சான் அது என்னடா double double” கீதா-லலிதா இரட்டையர் தயாரிக்கும் கோப்பியின் அர்த்தம் கேட்டேன்.

“ரெண்டு சீனி.. ரெண்டு பால்.. அது தான் double double” நகு பொறுமையாக விளக்கப்படுத்தினான். அடுத்த நாள் நானும், கீதாவிடம் double double  சொல்லி, லலிதாவிடம் கோப்பையை வாங்கி வாயில் வைத்தால், உவாக்...கச்சல் தாங்க முடியவில்லை. நமக்கு cafe latte தான் சரி. 


கனடாவில் கவனித்த இன்னொரு விஷயம், “உங்கட வீடு எங்கே” என்று வீட்டு விலாசம் கேட்டால், குறுக்கறுக்கும் வீதிகளின் பெயர்களை சொல்கிறார்கள். “Markham & Milner” என்று சொன்னார்கள் என்றால், அவர்கள் வசிக்கும் வீடு, அந்த இரு வீதிகள் சந்திக்கும் சந்திக்கு அண்மையில் இருக்கிறது என்று அர்த்தமாம். 

Scarborough பக்கம் போனால் தமிழ் பெயர்ப் பலகைகளோடு நிறைய கடைகள் கண்ணுக்கு விருந்தாகும். கொத்து ரொட்டி வாங்க Babu’ஸ்கு போனால், கடையின் பெயர்ப்பலகையில் “மாவீரர் கண்ட கனவு பலிக்கும் மகிழ்ச்சிக் கடலில் தமிழ் மண் குளிக்கும்” என்ற வாசகமும் நல்ல கறி மணமும் வரவேற்றது. சுடச்சுட போட்டுத் தந்த கொத்து ரொட்டி, உண்மையிலேயே நல்ல ருசியாகத் தான் இருந்தது. 

நயகரா நீர்வீழ்ச்சியையும் CN towerஐயும் தவிர ரொரன்டோவில் பார்க்க பெரிதாக ஒன்றும் இல்லை. டொரோன்டோவில் இருந்து இரண்டு மணித்தியால ஓட்டத்தில் இருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி, உலகில் அதிகளவில் சுற்றுலாப் பிரயாணிகளை கவரும் இடங்களில் ஒன்றாக இருப்பதில் அதிசயமொன்றுமில்லை. அமெரிக்க கனேடிய எல்லையில் இருக்கும் நீர்வீழ்ச்சியை அருகில் சென்று பார்க்கும் படகு (cruise) பயணம் தான் நயாகாராவின் எழிலை ஐம்புலன்களாலும் உணர வைத்த அற்புத அனுபவம். 

டொரோன்டோவில் இருபது முப்பது வருடங்களாக தாயகம் திரும்பாமல் இருக்கும் பலரை சந்தித்து வியந்தேன். “அங்க எங்களிற்கு யாரும் இல்லை.. எல்லாரும் இஞ்ச வந்திட்டினம்” எனும் போது, புலத்திற்கும் தாயகத்திற்குமான உறவுப்பாலம் உடைய தொடங்கி விட்டதோ என்று எண்ண வைத்தது. ஊர் போய் பல்லாண்டுகளாகி விட்டாலும் ஊர்ப் பற்று மாறாமல் உணர்வோடு தான் இன்றும் வாழ்கிறார்கள். ஊர்ச் சங்கங்கள் ஊடாக ஊருக்கும் பழைய மாணவர் சங்கங்கள் ஊடாக பள்ளிக்கும் உதவிக்கரம் நீட்டிக் கொண்டுதானிருக்கிறார்கள்.  

கொடிய யுத்தம் குதறி போட்ட வாழ்க்கையில், பல்லாண்டுகளிற்கு முன்னர் நாட்டை விட்டு சென்ற உறவினர்கள் பலரை கனடாவில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது, கனடாப் பயணத்தில் கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சி. பல்லாண்டுகளிற்கு பின்னர் சந்தித்தவர்கள், என்னை இன்னும் சிறுவனாகவே பார்த்தார்கள், கதைத்தார்கள். இன்னாரின் பேரன் வந்திருக்கிறாராம் இன்னாரின் மகன் வந்திருக்கிறாராம் என்று அறிந்து, தாங்களாகவே தொடர்பு எடுத்து தங்களது உறவு முறையை அறிமுகம் செய்து நேரில் வந்து பார்த்த உறவுகள் நெகிழ வைத்தார்கள். சந்திக்க வரும்போது மொறு மொறு வடையும் சுவையான குண்டு மோதகமும் வாங்கி வந்தார்கள். 

பள்ளிக்காலத்திலும் படிக்கும் காலத்திலும் கூடித்திரிந்த நண்பர்கள், பிரியாவிடை சொல்லாமலே நாட்டை விட்டு ஓடியவர்கள், மீண்டும் கண்ட போது ஓடி வந்து கட்டியணைத்து, அன்று விட்ட இடத்திலிருந்து இன்று கதையை தொடங்கினார்கள். கலியாணம் கட்டி பிள்ளை பெத்ததையும் மறந்து அந்தக் காலத்தில் சுழற்றிய “சரக்குகளை”ப் பற்றி கதைத்து சிரித்த பொழுதுகள் இனிமையானவை.

கனடாவை விட்டு புறப்படும் போது, ஊருக்கு போய் வரும் போது ஆட்கொள்ளும் பிரிவுத் துயரம் தான் ஏனோ ஆட்கொண்டது. அதற்கு அந்த கொத்து ரொட்டியும், மட்டன் ரோல்ஸும், மோதகமும், வடையும் மட்டும் காரணமல்ல, கனடாவில் ஊர்ப்பற்றோடும் மண் மணம் மாறாத வாஞ்சையோடு வாழும் உறவுகளும் நண்பர்களும் தான் காரணம். 

கனடா... புலம்பெயர்ந்த யாழ்ப்பாணம்