Saturday, 9 September 2017

மீளெழுவோம்...


2006ம் ஆண்டின் மத்தியில், Coles Myer நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது,  நிறுவனத்தின் ஒரு தலைமைத்துவ பயிற்சி நெறிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தேன். தலைமைத்துவ பயிற்சி நெறி நடந்தது Essendon Football Clubன் players roomலும் ஸ்டேடியத்திலும் தான். தலைமைத்து பயிற்சியில் இணைப் பயிற்றுவிப்பாளர்களாக, கழகத்தின் coach Kevin Sheedyயும் அணியின் தலைவர் James Hirdம் அணியின் நட்சத்திரம் Matt Lloydம் கலந்து கொண்டார்கள். 

"எங்களது கழகத்தின் பலமே, ஆண்டாண்டு காலமாக நாங்கள் பேணி பாதுகாத்து வரும் valuesம் cultureம் தான்" என்று கழகத்தின் நீண்ட கால பயிற்றுவிப்பாளரான Sheedy பிரசங்கம் பண்ணினார். "இந்த சுவர்களிற்குள் வரும் எல்லோரையும் கட்டாயமாக அந்த valuesஐயும் cultureஐயும் உள்வாங்க வைப்போம்" என்று Hird சொல்லும் போது  பரி யோவான் கல்லூரியின் ஞாபகம் தான் வந்தது. "இந்த வளாகத்தினுள் வரும் அனைவரும் பின்னாட்களில் வெளியேறும் போது  புதிய, சிறந்த மனிதர்களாக தான் வெளியேறுவார்கள்" என்றார் Hird.

"நாங்கள் வெற்றிகளிற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை" என்று தொடங்கிய Lloyd, "நாங்கள் எப்படி விளாயாடுகிறோம், எப்படி எங்களை தயார்படுத்துகிறோம், எப்படி strategise பண்ணுகிறோம், அதை எப்படி execute பண்ணுகிறோம் என்பவற்றில் தான் எங்கள் ஆற்றல்களை ஒருங்கிணைப்போம்" என்று Lloyd தொடர்ந்தார். "வெற்றி என்பது மேற்கூறியவற்றை திறம்பட செயற்படுத்தியதன் பக்க விளைவாகவே இருக்கும்" என்று சொல்லி முடிக்கும் போது Essendon கழகம் பற்றியிருந்த அபிப்பிராயம் பல நூறடிகள் உயர்ந்தது.


உலகில் தலைசிறந்த நகரமான மெல்பேர்ணிற்கு அகதியாக குடிபெயர்ந்தது ஒரு வரப்பிரசாதம். இந்த நகரில் Aussie rules football ஒரு Religion. விளையாட்டில் இருக்கும் முரட்டுத்தனம் கழகங்களை ஆதரிக்கும் ஆதரவாளர்களிடையே ஆரோக்கியமான பம்பல் கலந்த வாய்ச் சண்டைகளிற்கு வழிவகுக்கும், கைகலப்புக்கள் நடக்காது. வென்று கொண்டிருக்கும் தனது அணியை வெறித்தனமாக கத்தி கத்தி ஆதரிக்கும் ஒரு கழக ஆதரவாளரிற்கு பக்கத்தில் அமைதியாக எதிரணியின் T'Shirt அணிந்த ஆதரவாளர் பாதுகாப்பாக அமர்ந்திருப்பார். அவ்வாறு அருகில் அமர்ந்திருக்கும் ஆதரவாளர், வெற்றிக்களிப்பில் கூத்தாடுபவரின் மனைவியாகவோ, தந்தையாகவோ, பிள்ளையாகவோ, காதலியாகவோ, நண்பனாகவோ இல்லை அந்நியராகவோ இருப்பார்.

"So which team do you go for?" என்று வேலை தொடங்கி கொஞ்ச நாட்களில் கேள்விகள் எழத் தொடங்க, இந்த விளையாட்டை அறிந்தால் தான் இந்த நகரில் வாழலாம் என்று புரியத் தொடங்கியது. அன்றிருந்த 16 அணிகளை அலசினால் இரண்டே இரண்டு அணிகளைத் தான் ஆதரவளிக்க ஏதோ ஒரு காரணம் இருந்தது. ஒன்று Red & Black jersey அணிந்து ஆடிய Essendon Bombers, மற்றது Richmond Tigers. நான் தேர்ந்தெடுத்தது Essendon, விளையாட்டில் கூட ஆதரிக்கும் புலிகள் தோற்பதை  தாங்கும் மனவலிமை என்றும் இருந்ததில்லை, இருக்கப் போவதுமில்லை.

2013ம் ஆண்டில் Essendon கழகத்தின் விளையாட்டு வீரர்கள், தங்களது உடல் வலுவை அதிகரிக்க தடைசெய்யப்பட்ட ஊக்க ஊசிகளை ஏற்றினார்கள் என்ற செய்திகள் வந்த போது தலை சுற்றியது. 2013ல் அணியின் பயிற்றுவிப்பாளர், Eseendon அணியின் முன்னாள் தலைவரும் legendமான James Hird. ஆம், 2005ல் நமக்கு தலைமைத்துவ பயிற்சி நெறியில் வகுப்பெடுத்த அதே James Hird.

அடுத்து வந்த மூன்றாண்டுகள் Essendon கழகம் நெருப்பாற்றில் நீந்தியது. ஒஸ்ரேலிய anti doping agencyயின் விசாரணை, உயர் நீதிமன்ற வழக்குகள் என்று பிரச்சினை உச்சமடைய விளையாட்டு பின்னுக்கு தள்ளபட்டது. விசாரணைகளில் Essendon அணி வீரர்கள் ஊக்க மாத்திரை எடுத்தது உறுதிப்படுத்தப்பட, கழகத்தின் 'Golden Boy' James Hird இராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். அணியின் அனைத்து வீரர்களிற்கும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டது, அணியின் தலைவர் Jobe Watsonற்கு 2013ல் அவர் வென்ற சிறந்த வீரருக்கான Brownlow Medalஐ திருப்பி கொடுக்குமாறு பணிக்கப்பட்டது.  அவமானமும் ஏமாற்றமும் விரக்தியும் James Hird என்ற கதாநாயகனை தற்கொலை முயற்சி வரை தள்ளியது.

2017ல் பழைய வீரர்களின் தடை நீங்கி திரும்பி புதிய வீரர்களுடன் களமிறங்கி அற்புதமாக ஆடினார்கள். யாருமே எதிர்பாராத வெற்றிகளை பெற்று இன்று Finals seriesல் பலமான Sydney அணியுடன்  Sydneyயில் மோதிக் கொண்டிருக்கிறார்கள். ஒரே வருடத்தில் எவ்வாறு இந்த Essendon அணி, தனது பின்னடைவுகளை கடந்து முன்னேறியது என்று ஒஸ்ரேலியாவே வாயைப் பிளக்கிறது.

Essendon கழகத்தை நன்கறிந்தவர்கள்,  "That's Essendon mate" என்று ஒரு புன்முறுவலோடு கடந்து போகிறார்கள். 1871ல் ஸ்தாபிக்கப்பட்டு, Aussies rules போட்டிகளில் அதிகமுறை Premiership (championship) வென்ற அணியாக திகழும் Essendon அணியின் மீளெழுச்சியின் பிரதான காரணம், காலங்காலமாக அந்தக் கழகம் பேணிப் பாதுகாத்து வரும் values and culture என்று, கோப்பியை உறிஞ்சிக் கொண்டே அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு அதிதீவிர Essendon ஆதரவாளர் விளக்கம் தந்தார். தோல்விகளால் துவண்டு, ஏமாற்றங்களால் சுருண்டு போயிருந்த அணி, தனது பாரம்பரியம் எனும் கயிற்றைப்பிடித்துக் கொண்டு, தான் தள்ளப்பட்ட, இல்லை தானே தவறி விழுந்த, கிணற்றிலிருந்து ஏறி வெளியே வந்து கொண்டிருக்கிறது.

"நாங்க எங்கட தோல்வியிலிருந்து மீண்டு வரவேண்டும் என்றால், எங்கள் எல்லோரையும் பிணைக்கிற ஒரு கயிறு வேணுமடா" என்று 
தமிழர் போராட்டத்தோடு தன் வாழ்வை இணைத்து பயணித்த அண்ணன் ஒருவர் அண்மையில் யாழ்ப்பாணம் சென்ற போது தனது ஆதங்கத்தை வெளியிட்டார். "அது எது என்று தான் யோசிக்கிறன்" என்று தொடர்ந்தவர் "உந்த நல்லூரை பாரடா, எத்தனை பேரை உள்ளுக்க கொண்டு வருது, அதைப்போல பெரியளவில், எங்கட இனத்தை எப்படி இணைக்கிறது?" என்ற கேள்வியுடன் எனக்கு விடை தந்தார்.  

எல்லாத் தமிழர்களை இணைக்கும் அந்தக் கயிறு ஏன் தமிழ்தேசியமாய் இருக்க கூடாது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது தான், தம்பி தமிழ் பொடியன் "தமிழ் தேசியம் என்றால் என்ன, ஆரேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ" என்று முகநூலில் பதிவை போட்டு, குழம்பியிரிந்த மனக்குட்டைக்குள் 
கிரனைட்டை கழற்றி வீசினான்.

Essendon கழகத்தைப் போல், நாங்களும் மீளெழ எங்களை இணைக்கும் பிணைக்கும் அந்தக் கயிறு எதுவாக இருக்கும்?


No comments:

Post a Comment