Friday, 15 September 2017

ஓ கனடா..."டேய் றங்கேக்க அடிச்சிட்டு றங்கு" WhatsAppல் நகு சொல்லிக் கொண்டிருக்கும் போது Bunnings அடியில் இருக்கும் signal lightல் காரை நிற்பாட்டியிருந்தேன். அழகிய மெல்பேர்ணில் இன்னுமொரு அற்புதமான காலைப் பொழுது மலர்ந்திருந்தது.

"மச்சான் றங்கேக்க என்னென்டு அடிக்கிறது, ப்ளேனுக்க phone வேலை செய்யாது" குழம்பிப் போய் கேட்க, பக்கத்து காரில் ஒரு வடிவான குமரி, காரின் நடுக்கண்ணாடியை தன்பக்கம் திருப்பி விட்டு lipstick போட்டுக் கொண்டிருந்தாள்.

"டேய் உங்க றங்கேக்க அடியென்றுறன்" நகு கொஞ்சம் கடுப்பான மாதிரி தெரிந்தது. Signal lightல் சிவப்பு மஞ்சளாகி பச்சை நிறத்திற்கு வழிவிட வாகனங்கள் அசையத் தொடங்கின. Lipstick குமரியின் கார் என்னை முந்திக்கொண்டு பறந்தது.

"என்னடா மச்சான் குழப்புறாய்" இளம் காலைப் பொழுதிலும் மண்டை விறைக்கத் தொடங்கியது, "இங்க ஏறி உங்க இறங்குவம்.." சொல்லி முடிக்கவிடாமல் நகு குறுக்கிட்டான்

"மச்சான் இங்க றங்குறது என்றா வெளிக்கிடுறது என்று meaning" என்றான். கனேடிய தமிழிற்கு என்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். "ஓ....கனடா தமிழாடா" என்று அங்கலாயக்க

"Ok, ok ok ok ok ok ok ok ok
....okbye" என்று சொல்லிவிட்டு நகு WhatsAppல் விடை பெற்றான். ஏன்டா இவன் இவ்வளவு ok சொல்லுறான் என்று விசாரிக்க, "மச்சி, கனடாவில் phone கதைச்சிட்டு வைக்கேக்க 12 ok சொல்லிட்டு தான்டா bye சொல்லோணும், அதுவும் கடைசி okஐயும் byeஐயும் சேர்த்து சொல்லோணும்" என்று முன்னாள் கனடா தமிழரான, சிக்காகோ சிறி எங்கட SJC92 foruத்தில் விஞ்ஞான விளக்கம் தந்தார். 

"அதோட டொரோன்டோ டொரோன்டோ என்று சொல்லாதேடா.. அவங்க டொரானோ என்று தான் சொல்லுவாங்கள்" என்று சிக்காகோ சிறி அறிவுறுத்தினான்.

அம்மம்மாவின் சகோதரி ஒருத்தி அறுபதிகளில் கனடாவில் குடியேறி இருந்தா. அவாவை நாங்க கனடா அன்ரி தான் கூப்பிடுவம். 80களில் ஒருமுறை கனடா அன்டி யாழ்ப்பாணம் வரும்போது  டக்கென்று  எடுத்து பட்டென்று புகைப்படம் பிரின்ட் பண்ணித்தாற instant camera ஒன்றை கொண்டு வந்து ஃபிலிம் காட்டிக் கொண்டு திரிந்தது இன்றும் ஞாபகத்தில் இருக்கிறது. 


அம்மம்மாவின் தும்பளைக் காணியில் அம்மம்மாவை பங்குக் கிணற்றடியில் நிற்க வைத்து எடுத்த அந்த குட்டிப் படத்தை, அம்மம்மாவின் அல்பத்தில் பார்த்திருக்கிறேன். கொழும்பில் வாழ்ந்த அம்மம்மா தன்னுடைய காணி ஞாபகம் வந்தால் அந்தப் படத்தை எடுத்துப் பார்த்துக் கொண்டிருப்பா. 

கனடா அன்டியின் அளப்பறையும் எடுப்பும் 
கனடாக்காரன்கள் என்றால் ஃபிலிம் காட்டும் எடுப்புப் பேர்வழிகள் தான் என்று அன்று  நினைக்க வைத்தது. சாமத்திய சடங்கிற்கு ஹெலிக்கொப்டரில் பிள்ளையை கொண்டு வந்து இறக்கி அந்த அனுமானத்தை, அவரைப் போன்ற வேறு சில கனடாக்காரன்கள் இன்றும்  நினைவுறுத்துகிறார்கள்.

தாயகத்தில் விடுதலைப் போராட்டம் தீவிரமடையத் தொடங்க, முதலில் ஊர் விட்டு ஊர் இடம்பெயரத் தொடங்கிய தமிழர்கள், பின்னர் பாரியளவில் நாடு விட்டு நாடுகளை நோக்கி புலம்பெயரத் தொடங்கினார்கள். புலம்பெயர விரும்பிய தமிழர்களை அரவணைத்து ஏற்ற நாடுகளில் கனடாவே முதலிடம் வகிக்கிறது. 1986ல் கடலில் தத்தளித்த 155 தமிழ் அகதிகளை அரவணைத்ததுடன் தொடங்கிய தமிழர்கள் மீதான கனடாவின் கரிசனம் இன்றுவரையில் தொடர்கிறது.

கனேடிய பாராளுமன்றத்திற்கு தமிழர்களை அனுப்பிய கனடாக்காரன்கள், கனேடிய தேசிய கீதத்தை
தமிழிலும் பாடும் பேறை பெற்று, தமிழ் கூறும் நல்லுலகையே பேருவகையடைய வைத்தவர்கள். போராட்ட காலத்திலும் அதற்கு பின்பும் தாயக உறவுகளிற்கு தொடர்ந்து உதவும் உன்னத உணர்வாளர்களால் நிறைந்த நாடும் கனடா. 

கனடாவில் ரோட்டில் பாலும் தேனும் ஓடுமடா என்ற மாதிரி தங்கட நாட்டைப் பற்றி கனடாக்காரன்கள் பீத்திக் கொள்வார்கள். ஆனால் winter வந்தால், எங்கட டைடஸ் போல்ராஜ் ரோட்டில் குவிந்து கிடைக்கும் பனியை படம் பிடித்து போடுவார். நண்பன் ஷெல்டனோ தன்னுடைய வீட்டு drivewayயிலிருக்கும் snowஐயும் shovel பண்ணி, பக்கத்து வீட்டுக்காரியின் drivewayஐயும் shovel பண்ணிவிட்டு "நாரி நோகுதடா" என்று புலம்புவான். மெல்பேர்ணில் அடிக்குது குளிரு என்று staus போட்டால் , "உதெல்லாம் ஒரு குளிரே, இங்க வந்து பார் உனக்கு சகலதும் விறைக்கும்" என்று விபீஷ்ணா நக்கலடிப்பான்.

Summer வந்தால், நாலஞ்சு மரங்களிற்கு நடுவில் கதிரையை போட்டு இருந்து கொண்டு, நடுவில் குட்டி நெருப்பை வளர்த்து விட்டு, சிரித்துக் கொண்டே படம் போடுவதில் ரஜீசன் தான் கில்லாடி. என்ன ஏது என்று கேட்டால், "we went camping" என்று பதில் வரும். நியூஸிலாந்திலிருந்து குடிபெயர்ந்த விபீஷ்ணா, கனடா ஏன் கிரிக்கட்டிலும் ரக்பியிலும் உலக தரத்தில் விளையாடுவதில்லை என்ற கவலையில் தாடி வளர்த்துக் கொண்டு திரியிறானாம்.

"மச்சாஆஆஆஆஆன், நான் கனடா வந்து சுதுவாகிட்டேன்" என்ற கத்துற "பனங்கொட்டை" அமலன், 'மட்ஸ் மண்டைக்காய்' நந்தீஸ், பாலர் வகுப்பிலிருந்து படித்த 'கொக்கர்' குகனேசன், கோலாலம்பூரை குதுகலிக்க வைத்த டிலாஷ் 'மாமா', பஸ்ஸில் துரத்தி துரத்தி துரத்தி காதலித்த 'சதோச' ஜெயந்தன், நித்தி, சுதாகர் என்று பரி யோவானிலும் கொழும்பு இந்துவிலும் படித்த ஏராளமான நண்பர்களை அவர்களின் புகுந்த நாட்டிலேயே பார்க்கும் பாக்கியம் இப்போது தான் நிறைவேறப் போகிறது.   

உயர்தரத்தில் commerce படிக்கும் போது, வாத்திமாரிற்கு நிகராக, இல்லை இல்லை அதைவிட மேலாக, பஸ்ஸிலும் பஸ் ஹோல்டிலும் எனக்கு  புரியாத பாடங்களை புரிய வைத்து,  என்னுடைய மொக்குக் கேள்விகளை  பொறுமையாக தெளிவுபடுத்திய, கஜோபனை தொண்ணூறுகளின் பின்னர் நேரில் சந்திக்கும்போகும் அந்தப் பொழுதை ஆவலுடன் எதிர்பார்த்து பறந்து வருகிறேன்.

"நீ எழில் கண்டு (உ)வப்போம்" என்று கனேடிய தேசிய கீதத்தில் சொல்லியுள்ள வரிகளின் வடிவைக் காணவும் கடல் கடந்து வருகிறேன். 
கனேடிய பிரதமர் Justin Trudeau ருசித்து சாப்பிட்ட அந்த கொத்து ரொட்டியை நினைத்து வாயூற ஊற வந்து கொண்டேயிருக்கிறேன். 

நயகரா நீர் வீழ்ச்சியின் பிரம்மாண்டமான எழிலகையும் Scarboroughவின் குட்டி யாழ்ப்பாணத்தையும் கண்டு மெய்மறக்க, மெய்யாலுமே இந்த முறை வந்தே விடுகிறேன்.

ஓ கனடா.... இந்தா றங்கிட்டன்....

No comments:

Post a Comment