Sunday, 17 September 2017

கனடா நினைவுகள்...


கனேடிய mobile SIM card ஒன்றை வாங்க, டொரோன்டோ மாநகரின் மத்தியில் உள்ள Bell நிறுவனத்தின் கடைக்கு சென்றேன். வரிசையில் எனக்கு முன்னே இரு சீனக் கிழவிகள் நின்று கொண்டிருந்தார்கள். 

கேட்ட கேள்வியை திரும்ப திரும்ப கேட்டு எனக்கே வெறுப்பேற்றிய முதலாவது கிழவியிற்கு பொறுமையுடனும் புன்முறுவலுடனும் பதிலளித்துக் கொண்டிருந்த தம்பியின் நிறத்திலும் நெற்றியிலும் "தமிழன்" என்ற முத்திரை பதிந்திருந்தது.

எனக்கு முன்னால் நின்ற கிழவியும் ஒரு தற்காலிக SIM cardஐ நூறு கேள்வி கேட்டு வாங்கினார். அதுவும் முக்கிய நிபந்தனையாக 8ம் நம்பரில் தொலைபேசி எண் முடிய வேண்டும் என்று விடாப்பிடாயாக நின்றார். Bell தம்பியும் நாலைந்து நம்பர்களை எடுத்து கடைசியில் கிழவியின் ஆசையை நிறைவேற்றி அனுப்பினார். சீனக் கிழவிக்கு sim cardற்கு $10 + recharge $25 + Tax $5 என்று மொத்தம் $40ற்கு உலை வைத்தார் Bell தம்பி. 

என்னுடைய முறை வர, " I need the same" என்று அவசரம் காட்டினேன். " oh do you have  the same  preference for numbers?" Bell தம்பியின் நக்கல் சிரிக்க வைத்தது. " no no I am good, I am not fussy" பக்கத்தில் மனிசி இல்லாததால் பொய் சொல்லி சமாளித்தேன்.

"Are you தமிழ்" bell தம்பியை கேட்டேன்.

"Ya...."தம்பி சிரித்தான்

"Where are you from?" தமிழர்கள் சந்திக்கும் போது கேட்கும் அதே கேள்வி தான் அடுத்த கேள்வி.

"Actually.. I am born here.. my dad is from Carrum-bon (கரம்பனாம்) and mum is from manna (மன்னாராம்)" தம்பியின் குரலில் பெருமை ஒலித்தது.

"Are you தமிழ் too" இப்போ தம்பி கேள்வி கேட்கத் தொடங்கினான்.

"Yep.." ஒஸி accentஐ எடுத்து விட்டேன்.

"How long have you been living in Australia?" இரண்டாவது தலைமுறையின் அடுத்த கேள்வியில் என்னுடைய வயது எட்டிப்பார்த்தது. நான் அவனது பூர்வீகத்தை விசாரிக்க அவன் எனது புலப்பெயர்வை துலாவினான்.

"21 years.. so do you speak தமிழ்" வேதாளம் மறுபடி முருங்கையில் ஏறியது.

"I can understand.. but I don't speak well"தம்பி கொஞ்சம் கவலைப்பட்டான்.

கதைத்துக் கொண்டே தன்னுடைய அலுவலை முடித்து என்னுடைய Phoneற்குள் sim cardஐ திணித்து, அதை பரீட்சித்தும் பார்த்திருந்தான் Bell தம்பி.

"Here you go... just pay $28...I didn't charge you for the sim"

"Wow.. did I got a discount because I am a தமிழ்?" பன்னிரெண்டு டொலர் விலைக்கழிவிலும் தமிழினப் பெருமை எட்டிப்பாரத்தது. 

"Ha ha ha.. you can say so" bell தம்பி சிரித்துக் கொண்டே விடை தந்தான்.

காற்றோடு கலந்தாலும் 
தமிழ் தான் உன் அடையாளம்

Friday, 15 September 2017

ஓ கனடா..."டேய் றங்கேக்க அடிச்சிட்டு றங்கு" WhatsAppல் நகு சொல்லிக் கொண்டிருக்கும் போது Bunnings அடியில் இருக்கும் signal lightல் காரை நிற்பாட்டியிருந்தேன். அழகிய மெல்பேர்ணில் இன்னுமொரு அற்புதமான காலைப் பொழுது மலர்ந்திருந்தது.

"மச்சான் றங்கேக்க என்னென்டு அடிக்கிறது, ப்ளேனுக்க phone வேலை செய்யாது" குழம்பிப் போய் கேட்க, பக்கத்து காரில் ஒரு வடிவான குமரி, காரின் நடுக்கண்ணாடியை தன்பக்கம் திருப்பி விட்டு lipstick போட்டுக் கொண்டிருந்தாள்.

"டேய் உங்க றங்கேக்க அடியென்றுறன்" நகு கொஞ்சம் கடுப்பான மாதிரி தெரிந்தது. Signal lightல் சிவப்பு மஞ்சளாகி பச்சை நிறத்திற்கு வழிவிட வாகனங்கள் அசையத் தொடங்கின. Lipstick குமரியின் கார் என்னை முந்திக்கொண்டு பறந்தது.

"என்னடா மச்சான் குழப்புறாய்" இளம் காலைப் பொழுதிலும் மண்டை விறைக்கத் தொடங்கியது, "இங்க ஏறி உங்க இறங்குவம்.." சொல்லி முடிக்கவிடாமல் நகு குறுக்கிட்டான்

"மச்சான் இங்க றங்குறது என்றா வெளிக்கிடுறது என்று meaning" என்றான். கனேடிய தமிழிற்கு என்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். "ஓ....கனடா தமிழாடா" என்று அங்கலாயக்க

"Ok, ok ok ok ok ok ok ok ok
....okbye" என்று சொல்லிவிட்டு நகு WhatsAppல் விடை பெற்றான். ஏன்டா இவன் இவ்வளவு ok சொல்லுறான் என்று விசாரிக்க, "மச்சி, கனடாவில் phone கதைச்சிட்டு வைக்கேக்க 12 ok சொல்லிட்டு தான்டா bye சொல்லோணும், அதுவும் கடைசி okஐயும் byeஐயும் சேர்த்து சொல்லோணும்" என்று முன்னாள் கனடா தமிழரான, சிக்காகோ சிறி எங்கட SJC92 foruத்தில் விஞ்ஞான விளக்கம் தந்தார். 

"அதோட டொரோன்டோ டொரோன்டோ என்று சொல்லாதேடா.. அவங்க டொரானோ என்று தான் சொல்லுவாங்கள்" என்று சிக்காகோ சிறி அறிவுறுத்தினான்.

அம்மம்மாவின் சகோதரி ஒருத்தி அறுபதிகளில் கனடாவில் குடியேறி இருந்தா. அவாவை நாங்க கனடா அன்ரி தான் கூப்பிடுவம். 80களில் ஒருமுறை கனடா அன்டி யாழ்ப்பாணம் வரும்போது  டக்கென்று  எடுத்து பட்டென்று புகைப்படம் பிரின்ட் பண்ணித்தாற instant camera ஒன்றை கொண்டு வந்து ஃபிலிம் காட்டிக் கொண்டு திரிந்தது இன்றும் ஞாபகத்தில் இருக்கிறது. 


அம்மம்மாவின் தும்பளைக் காணியில் அம்மம்மாவை பங்குக் கிணற்றடியில் நிற்க வைத்து எடுத்த அந்த குட்டிப் படத்தை, அம்மம்மாவின் அல்பத்தில் பார்த்திருக்கிறேன். கொழும்பில் வாழ்ந்த அம்மம்மா தன்னுடைய காணி ஞாபகம் வந்தால் அந்தப் படத்தை எடுத்துப் பார்த்துக் கொண்டிருப்பா. 

கனடா அன்டியின் அளப்பறையும் எடுப்பும் 
கனடாக்காரன்கள் என்றால் ஃபிலிம் காட்டும் எடுப்புப் பேர்வழிகள் தான் என்று அன்று  நினைக்க வைத்தது. சாமத்திய சடங்கிற்கு ஹெலிக்கொப்டரில் பிள்ளையை கொண்டு வந்து இறக்கி அந்த அனுமானத்தை, அவரைப் போன்ற வேறு சில கனடாக்காரன்கள் இன்றும்  நினைவுறுத்துகிறார்கள்.

தாயகத்தில் விடுதலைப் போராட்டம் தீவிரமடையத் தொடங்க, முதலில் ஊர் விட்டு ஊர் இடம்பெயரத் தொடங்கிய தமிழர்கள், பின்னர் பாரியளவில் நாடு விட்டு நாடுகளை நோக்கி புலம்பெயரத் தொடங்கினார்கள். புலம்பெயர விரும்பிய தமிழர்களை அரவணைத்து ஏற்ற நாடுகளில் கனடாவே முதலிடம் வகிக்கிறது. 1986ல் கடலில் தத்தளித்த 155 தமிழ் அகதிகளை அரவணைத்ததுடன் தொடங்கிய தமிழர்கள் மீதான கனடாவின் கரிசனம் இன்றுவரையில் தொடர்கிறது.

கனேடிய பாராளுமன்றத்திற்கு தமிழர்களை அனுப்பிய கனடாக்காரன்கள், கனேடிய தேசிய கீதத்தை
தமிழிலும் பாடும் பேறை பெற்று, தமிழ் கூறும் நல்லுலகையே பேருவகையடைய வைத்தவர்கள். போராட்ட காலத்திலும் அதற்கு பின்பும் தாயக உறவுகளிற்கு தொடர்ந்து உதவும் உன்னத உணர்வாளர்களால் நிறைந்த நாடும் கனடா. 

கனடாவில் ரோட்டில் பாலும் தேனும் ஓடுமடா என்ற மாதிரி தங்கட நாட்டைப் பற்றி கனடாக்காரன்கள் பீத்திக் கொள்வார்கள். ஆனால் winter வந்தால், எங்கட டைடஸ் போல்ராஜ் ரோட்டில் குவிந்து கிடைக்கும் பனியை படம் பிடித்து போடுவார். நண்பன் ஷெல்டனோ தன்னுடைய வீட்டு drivewayயிலிருக்கும் snowஐயும் shovel பண்ணி, பக்கத்து வீட்டுக்காரியின் drivewayஐயும் shovel பண்ணிவிட்டு "நாரி நோகுதடா" என்று புலம்புவான். மெல்பேர்ணில் அடிக்குது குளிரு என்று staus போட்டால் , "உதெல்லாம் ஒரு குளிரே, இங்க வந்து பார் உனக்கு சகலதும் விறைக்கும்" என்று விபீஷ்ணா நக்கலடிப்பான்.

Summer வந்தால், நாலஞ்சு மரங்களிற்கு நடுவில் கதிரையை போட்டு இருந்து கொண்டு, நடுவில் குட்டி நெருப்பை வளர்த்து விட்டு, சிரித்துக் கொண்டே படம் போடுவதில் ரஜீசன் தான் கில்லாடி. என்ன ஏது என்று கேட்டால், "we went camping" என்று பதில் வரும். நியூஸிலாந்திலிருந்து குடிபெயர்ந்த விபீஷ்ணா, கனடா ஏன் கிரிக்கட்டிலும் ரக்பியிலும் உலக தரத்தில் விளையாடுவதில்லை என்ற கவலையில் தாடி வளர்த்துக் கொண்டு திரியிறானாம்.

"மச்சாஆஆஆஆஆன், நான் கனடா வந்து சுதுவாகிட்டேன்" என்ற கத்துற "பனங்கொட்டை" அமலன், 'மட்ஸ் மண்டைக்காய்' நந்தீஸ், பாலர் வகுப்பிலிருந்து படித்த 'கொக்கர்' குகனேசன், கோலாலம்பூரை குதுகலிக்க வைத்த டிலாஷ் 'மாமா', பஸ்ஸில் துரத்தி துரத்தி துரத்தி காதலித்த 'சதோச' ஜெயந்தன், நித்தி, சுதாகர் என்று பரி யோவானிலும் கொழும்பு இந்துவிலும் படித்த ஏராளமான நண்பர்களை அவர்களின் புகுந்த நாட்டிலேயே பார்க்கும் பாக்கியம் இப்போது தான் நிறைவேறப் போகிறது.   

உயர்தரத்தில் commerce படிக்கும் போது, வாத்திமாரிற்கு நிகராக, இல்லை இல்லை அதைவிட மேலாக, பஸ்ஸிலும் பஸ் ஹோல்டிலும் எனக்கு  புரியாத பாடங்களை புரிய வைத்து,  என்னுடைய மொக்குக் கேள்விகளை  பொறுமையாக தெளிவுபடுத்திய, கஜோபனை தொண்ணூறுகளின் பின்னர் நேரில் சந்திக்கும்போகும் அந்தப் பொழுதை ஆவலுடன் எதிர்பார்த்து பறந்து வருகிறேன்.

"நீ எழில் கண்டு (உ)வப்போம்" என்று கனேடிய தேசிய கீதத்தில் சொல்லியுள்ள வரிகளின் வடிவைக் காணவும் கடல் கடந்து வருகிறேன். 
கனேடிய பிரதமர் Justin Trudeau ருசித்து சாப்பிட்ட அந்த கொத்து ரொட்டியை நினைத்து வாயூற ஊற வந்து கொண்டேயிருக்கிறேன். 

நயகரா நீர் வீழ்ச்சியின் பிரம்மாண்டமான எழிலகையும் Scarboroughவின் குட்டி யாழ்ப்பாணத்தையும் கண்டு மெய்மறக்க, மெய்யாலுமே இந்த முறை வந்தே விடுகிறேன்.

ஓ கனடா.... இந்தா றங்கிட்டன்....

Saturday, 9 September 2017

மீளெழுவோம்...


2006ம் ஆண்டின் மத்தியில், Coles Myer நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது,  நிறுவனத்தின் ஒரு தலைமைத்துவ பயிற்சி நெறிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தேன். தலைமைத்துவ பயிற்சி நெறி நடந்தது Essendon Football Clubன் players roomலும் ஸ்டேடியத்திலும் தான். தலைமைத்து பயிற்சியில் இணைப் பயிற்றுவிப்பாளர்களாக, கழகத்தின் coach Kevin Sheedyயும் அணியின் தலைவர் James Hirdம் அணியின் நட்சத்திரம் Matt Lloydம் கலந்து கொண்டார்கள். 

"எங்களது கழகத்தின் பலமே, ஆண்டாண்டு காலமாக நாங்கள் பேணி பாதுகாத்து வரும் valuesம் cultureம் தான்" என்று கழகத்தின் நீண்ட கால பயிற்றுவிப்பாளரான Sheedy பிரசங்கம் பண்ணினார். "இந்த சுவர்களிற்குள் வரும் எல்லோரையும் கட்டாயமாக அந்த valuesஐயும் cultureஐயும் உள்வாங்க வைப்போம்" என்று Hird சொல்லும் போது  பரி யோவான் கல்லூரியின் ஞாபகம் தான் வந்தது. "இந்த வளாகத்தினுள் வரும் அனைவரும் பின்னாட்களில் வெளியேறும் போது  புதிய, சிறந்த மனிதர்களாக தான் வெளியேறுவார்கள்" என்றார் Hird.

"நாங்கள் வெற்றிகளிற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை" என்று தொடங்கிய Lloyd, "நாங்கள் எப்படி விளாயாடுகிறோம், எப்படி எங்களை தயார்படுத்துகிறோம், எப்படி strategise பண்ணுகிறோம், அதை எப்படி execute பண்ணுகிறோம் என்பவற்றில் தான் எங்கள் ஆற்றல்களை ஒருங்கிணைப்போம்" என்று Lloyd தொடர்ந்தார். "வெற்றி என்பது மேற்கூறியவற்றை திறம்பட செயற்படுத்தியதன் பக்க விளைவாகவே இருக்கும்" என்று சொல்லி முடிக்கும் போது Essendon கழகம் பற்றியிருந்த அபிப்பிராயம் பல நூறடிகள் உயர்ந்தது.


உலகில் தலைசிறந்த நகரமான மெல்பேர்ணிற்கு அகதியாக குடிபெயர்ந்தது ஒரு வரப்பிரசாதம். இந்த நகரில் Aussie rules football ஒரு Religion. விளையாட்டில் இருக்கும் முரட்டுத்தனம் கழகங்களை ஆதரிக்கும் ஆதரவாளர்களிடையே ஆரோக்கியமான பம்பல் கலந்த வாய்ச் சண்டைகளிற்கு வழிவகுக்கும், கைகலப்புக்கள் நடக்காது. வென்று கொண்டிருக்கும் தனது அணியை வெறித்தனமாக கத்தி கத்தி ஆதரிக்கும் ஒரு கழக ஆதரவாளரிற்கு பக்கத்தில் அமைதியாக எதிரணியின் T'Shirt அணிந்த ஆதரவாளர் பாதுகாப்பாக அமர்ந்திருப்பார். அவ்வாறு அருகில் அமர்ந்திருக்கும் ஆதரவாளர், வெற்றிக்களிப்பில் கூத்தாடுபவரின் மனைவியாகவோ, தந்தையாகவோ, பிள்ளையாகவோ, காதலியாகவோ, நண்பனாகவோ இல்லை அந்நியராகவோ இருப்பார்.

"So which team do you go for?" என்று வேலை தொடங்கி கொஞ்ச நாட்களில் கேள்விகள் எழத் தொடங்க, இந்த விளையாட்டை அறிந்தால் தான் இந்த நகரில் வாழலாம் என்று புரியத் தொடங்கியது. அன்றிருந்த 16 அணிகளை அலசினால் இரண்டே இரண்டு அணிகளைத் தான் ஆதரவளிக்க ஏதோ ஒரு காரணம் இருந்தது. ஒன்று Red & Black jersey அணிந்து ஆடிய Essendon Bombers, மற்றது Richmond Tigers. நான் தேர்ந்தெடுத்தது Essendon, விளையாட்டில் கூட ஆதரிக்கும் புலிகள் தோற்பதை  தாங்கும் மனவலிமை என்றும் இருந்ததில்லை, இருக்கப் போவதுமில்லை.

2013ம் ஆண்டில் Essendon கழகத்தின் விளையாட்டு வீரர்கள், தங்களது உடல் வலுவை அதிகரிக்க தடைசெய்யப்பட்ட ஊக்க ஊசிகளை ஏற்றினார்கள் என்ற செய்திகள் வந்த போது தலை சுற்றியது. 2013ல் அணியின் பயிற்றுவிப்பாளர், Eseendon அணியின் முன்னாள் தலைவரும் legendமான James Hird. ஆம், 2005ல் நமக்கு தலைமைத்துவ பயிற்சி நெறியில் வகுப்பெடுத்த அதே James Hird.

அடுத்து வந்த மூன்றாண்டுகள் Essendon கழகம் நெருப்பாற்றில் நீந்தியது. ஒஸ்ரேலிய anti doping agencyயின் விசாரணை, உயர் நீதிமன்ற வழக்குகள் என்று பிரச்சினை உச்சமடைய விளையாட்டு பின்னுக்கு தள்ளபட்டது. விசாரணைகளில் Essendon அணி வீரர்கள் ஊக்க மாத்திரை எடுத்தது உறுதிப்படுத்தப்பட, கழகத்தின் 'Golden Boy' James Hird இராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். அணியின் அனைத்து வீரர்களிற்கும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டது, அணியின் தலைவர் Jobe Watsonற்கு 2013ல் அவர் வென்ற சிறந்த வீரருக்கான Brownlow Medalஐ திருப்பி கொடுக்குமாறு பணிக்கப்பட்டது.  அவமானமும் ஏமாற்றமும் விரக்தியும் James Hird என்ற கதாநாயகனை தற்கொலை முயற்சி வரை தள்ளியது.

2017ல் பழைய வீரர்களின் தடை நீங்கி திரும்பி புதிய வீரர்களுடன் களமிறங்கி அற்புதமாக ஆடினார்கள். யாருமே எதிர்பாராத வெற்றிகளை பெற்று இன்று Finals seriesல் பலமான Sydney அணியுடன்  Sydneyயில் மோதிக் கொண்டிருக்கிறார்கள். ஒரே வருடத்தில் எவ்வாறு இந்த Essendon அணி, தனது பின்னடைவுகளை கடந்து முன்னேறியது என்று ஒஸ்ரேலியாவே வாயைப் பிளக்கிறது.

Essendon கழகத்தை நன்கறிந்தவர்கள்,  "That's Essendon mate" என்று ஒரு புன்முறுவலோடு கடந்து போகிறார்கள். 1871ல் ஸ்தாபிக்கப்பட்டு, Aussies rules போட்டிகளில் அதிகமுறை Premiership (championship) வென்ற அணியாக திகழும் Essendon அணியின் மீளெழுச்சியின் பிரதான காரணம், காலங்காலமாக அந்தக் கழகம் பேணிப் பாதுகாத்து வரும் values and culture என்று, கோப்பியை உறிஞ்சிக் கொண்டே அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு அதிதீவிர Essendon ஆதரவாளர் விளக்கம் தந்தார். தோல்விகளால் துவண்டு, ஏமாற்றங்களால் சுருண்டு போயிருந்த அணி, தனது பாரம்பரியம் எனும் கயிற்றைப்பிடித்துக் கொண்டு, தான் தள்ளப்பட்ட, இல்லை தானே தவறி விழுந்த, கிணற்றிலிருந்து ஏறி வெளியே வந்து கொண்டிருக்கிறது.

"நாங்க எங்கட தோல்வியிலிருந்து மீண்டு வரவேண்டும் என்றால், எங்கள் எல்லோரையும் பிணைக்கிற ஒரு கயிறு வேணுமடா" என்று 
தமிழர் போராட்டத்தோடு தன் வாழ்வை இணைத்து பயணித்த அண்ணன் ஒருவர் அண்மையில் யாழ்ப்பாணம் சென்ற போது தனது ஆதங்கத்தை வெளியிட்டார். "அது எது என்று தான் யோசிக்கிறன்" என்று தொடர்ந்தவர் "உந்த நல்லூரை பாரடா, எத்தனை பேரை உள்ளுக்க கொண்டு வருது, அதைப்போல பெரியளவில், எங்கட இனத்தை எப்படி இணைக்கிறது?" என்ற கேள்வியுடன் எனக்கு விடை தந்தார்.  

எல்லாத் தமிழர்களை இணைக்கும் அந்தக் கயிறு ஏன் தமிழ்தேசியமாய் இருக்க கூடாது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது தான், தம்பி தமிழ் பொடியன் "தமிழ் தேசியம் என்றால் என்ன, ஆரேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ" என்று முகநூலில் பதிவை போட்டு, குழம்பியிரிந்த மனக்குட்டைக்குள் 
கிரனைட்டை கழற்றி வீசினான்.

Essendon கழகத்தைப் போல், நாங்களும் மீளெழ எங்களை இணைக்கும் பிணைக்கும் அந்தக் கயிறு எதுவாக இருக்கும்?


Friday, 1 September 2017

நல்லூரில் சப்பரம்...


"அண்ணே bataவை கழட்டி வச்சிட்டு போங்கண்ணே" செட்டி வீதியில் கச்சான் விற்க கடை பரப்பியிருந்த பதினொன்று அல்லது பதின்ரெண்டு வயதேயான தம்பியை நம்பி, போனமுறை Big Matchற்கு வரும்போது DSIயில் வாங்கிய Red &Black செருப்பை, அவனது கடையடியில் கழற்றினேன்.

"தம்பி, செருப்பு கவனமடா" கடலைக்கடை தம்பிக்கு அறிவுறுத்திவிட்டு நடையை கட்டினேன். போட்டிக் கடலைக் கடைகளின் "bata கழட்டுங்கோ" குரல்களைத் தாண்டி, கோயிலை அண்மிக்க, கோயிலை நோக்கி நிமிர்ந்து நின்ற சப்பரத்திற்கு முன்னால் சனம் நிரம்பத் தொடங்கியிருந்தது. 

சப்பரத்திலிருந்து பத்தடி தள்ளி நின்று, நல்லூர் திருப்பதியின் காற்றில் கலந்திருந்த கற்பூர வாசனையையும் அந்த சூழலில் நிறைந்திருந்த பக்தி மயமான சூழலையும் உள்வாங்கிக் கொண்டு, பக்கத்தில் திரும்பிப் பார்த்தால், குமரன் நிற்கிறார். சிட்னியில் வசிக்கும் 'ஜொனியன்' குமரன், நண்பன் அரவிந்தனின் தம்பி.

எதிர்பாராமல் சந்திக்கும் போது எழும் அதே அரண பரண முகமன் கேள்விகளையும் பதில்களையும் பரிமாறிவிட்டு விஷயத்திற்கு வந்தோம்.

"ஐசே, சப்பரம் என்றால் என்ன meaning" நல்லூர் பின்வீதியில் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த குமரனை நோக்கி வட கொரிய ஏவுகணை பறந்தது.  "Actually.. I don't know" தம்பி தவித்தான், நிமிர்ந்து சப்பரத்தை பார்த்தான், "I think, சப்பரம் means கப்பல், இதை பார்த்தா அப்படித்தான் இருக்கு", தம்பி சமாளித்தான். 

நல்லூர் கோயிலின் வழக்கங்களை நன்கறிந்த  நண்பன் ஒருவன் "மச்சான், சப்பரம் என்றால் சப்பையாக இருக்கும் ரதம்" என்று WhatsAppல் விளக்கம் தந்தான். "ரதம் என்றால் 3 dimensionல் இருக்கோணும், 3 dimensionல் இருந்தால் தான் அது ரதம், அதை சப்பையாக பண்ணினால் எப்படியிருக்குமோ அது தான் சப்பரம்" என்று விளக்கம் தந்தான்.

"சைவத்திற்கு பெரிய கோயிலான சிதம்பரத்தில் இதை திருவையடைத்தான் என்று சொல்வார்கள்" என்று நல்லூரிலிருந்து சிதம்பரத்திற்கு நண்பன் தாவினான். "திருவையடைத்தான் என்பது தெருவை அடைத்தான் என்பதன் மருவிய வடிவமாம். தெருவை அடைக்குமளவிற்கு பெரிய ஒரு structure தான் சப்பரம்" என்று கூறி விட்டு, 


"250 வருட பழமை வாய்ந்த நல்லூர் சப்பறம் தான் உலகிலேயே மிகப் பழமையானதும் அதியுயரமானதுமான அசையும் கட்டுமானப் பொருள் என்று ஒரு news வந்தது, அது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியாதுடா" என்று சொல்லி முடித்தான்.


"அண்ணா இந்தப் பக்கம் நின்டா வடத்தில மாட்டுவம், அங்கால பக்கம் போவம்" என்று என்னையும் கூட்டிக் கொண்டு குமரன் சப்பரத்தின் மற்றப்பக்கம் போனான். நல்லூர் சந்நிதியில் எந்தப் பக்கம் எந்த நேரம் நிற்க வேண்டும் என்பது ஒரு பெரிய சூட்சுமம். காலங்காலமாக நல்லூர் தேர் திருவிழா தரிசித்தவர்களிற்கு மட்டும் தெரிந்த வித்தையது. சரியான இடத்தில் சரியான நேரத்தில் நின்றால் தான் சாமியின் தரிசினம் நிறைவாக கிடைக்கும், திருவிழாவின் நிகழ்வுகளையும் கண்கூடாக கண்டு களிக்கலாம்.

"தம்பி இந்த வடம் பிடிக்கோணும் என்று எனக்கு ஒரு ஆசை" பக்கத்தில் நின்ற குமரனிடம் சொன்னேன். நல்லூரில் திருவிழாக் காலங்களில் கொம்பு தூக்குவதற்கும் வடம் பிடிப்பதற்கும் நடக்கும் முறுகல்கள் பற்றியும் சம்பிரதாயங்கள் பற்றியும் நண்பர்கள் ஜெயராமும் சாந்தனும் சொல்ல கேள்விப்பட்டிருந்தேன். நக்கலாக ஒரு சிரிப்பு  சிரித்து விட்டு "வாங்கோ நடுவுக்க போவம்" என்று சப்பரத்தின் முன் பகுதிக்கு முன்னேறினோம். 

கற்பூரங்கள் ஏற்றிய நீண்ட இரும்புக் கம்பிகளைச்  சுழற்றிக் கொண்டே இருவர் வர, சப்பரத்திற்கும்  கோயிலின் பிரதான வாயிலிற்கும் இடையில் ஒரு வெளி உருவாகியது. "இது ஒரு crowd control mechanism" குமரன் காதுக்குள் முணுமுணுத்தார். காலில் பொய்கால் அணிந்து உயரமாக நடந்து வந்த ஒருவரின் காதில் தொலைபேசி ஒட்டிக்கொண்டிருந்தது. "டேய் எங்கேடா இருக்கிறாய்....நான் இஞ்ச தான் இருக்கிறன்" என்று யாரோடோ செல்ஃபோனில் கதைத்துக் கொண்டே, மரக்காலில் நடந்து போனார். 

 கோயிலின் மணிக்கூடு ஆறு மணியடித்து முடிய, நல்லூர் கோயிலின் பிரதான வாயிலைக் கடந்து வள்ளி தெய்வானை சகிதம் முருகன் எழுந்தருள, "ஓம் முருகா" கோஷம் நல்லூர் திருப்பதியை நிறைத்தது. கொம்புகளில் காவிக் கொண்டு வரப்பட்ட மூவரும் சப்பரத்தில் ஏற்றப்பட்டு தீபாராதனை முடிய, சப்பரத்தின் முன்னால் தள்ளு முள்ளு எற்பட்டது. "எதுக்குடா தள்ளுபடுறாங்கள்" என்று கேட்க குமரனை திரும்பிப் பார்த்தால், ஆளை காணவில்லை.

"அண்ணா வாங்கோ.. பிடியுங்கோ" என்ற குமரனின் குரலை கேட்டுத் திரும்பிப் பார்க்க, குமரன் வடத்தை பிடித்துக் கொண்டு ஓடுகிறார். அவரைத் துரத்திக் கொண்டு போய், வடத்தை கையில் பிடித்தால், வடம் இழுக்க போன எங்களை, வடம் இழுத்துக் கொண்டு போன கதை தான் நடந்தது. கல்லும் தேங்காய் சிரட்டையும் காலில் குத்த, பிடித்த வடத்தை விடக்கூடாது என்று உள்ளுணர்வு சொல்ல, வடத்தோடு ஓடி முடித்து மூச்செடுக்க, நல்லூர் கோயிலின் வாயிலில் வடத்தோடு நின்றோம். 

"வடம் வரப்போகுது.. விலகி நில்லுங்கோ" என்று சிறிய ஒலிவாங்கியில் பெரியவர் ஒருவரின் குரல் ஒலித்துக் கொண்டேயிருந்தது. வடத்தின் முன்னால் நீண்டிருந்த இரு பெரிய மொத்தக் கயிறுகளை நூற்றுக்கணக்கானோர் பிடித்து இழுக்க சப்பரம் நகரத் தொடங்கியது.


சனம் நிறைந்த அந்த கோயில் வெளிவீதிகளில், சப்பரத்தை  தெற்கு வீதியிலும் பின்வீதியிலும் வடக்கு வீதியிலும் திருப்பி இழுக்க இரு வடங்களையும் பிடித்திருந்ததவர்கள் எவ்வாறு தங்களது நிலைகளை மாற்றினார்கள் என்பதை நினைக்க இன்றைக்கும் ஆச்சரியமாகவே இருக்கிறது.

எங்கிருந்தோ யாரோ கொடுத்த கட்டளையை ஏற்று, நீண்ட வடத்தில் ஒரு கை வைக்கக் கூட இடமில்லாமல், நூற்றுக்கணக்கில் கூடி நின்று, உற்சாகமாகவும், ஒரே நோக்கத்தோடும் வடம் பிடிக்கும் என் சனத்தை பார்க்க, "இதே ஒற்றுமையையும் ஓர்மத்தையும் காட்டி அரசியல் மற்றும் பொருளாதாரம் எனும் வடங்களைப் பிடித்து தமிழின சுபீட்சம்  எனும் ரதத்தை நாங்கள் ஏன் இழுக்கக் கூடாது" என்ற ஆதங்கம் எண்ணங்களில் மேலெழுந்தது.

ஒரு கணமேனும் வடம் பிடிக்கும் ஆசை கண்களில் தெரிய, தள்ளு முள்ளுக்குள் அகப்படத் தயங்கி, பம்மிக் கொண்டு ஒதுங்கி நின்றவர்களையும் "அண்ணே வடம் பிடிக்க போறியளா.. வாங்கோண்ணே" என்று கூப்பிட்டு அவர்களது எண்ணத்தை நிறைவேற்றிய தம்பிமார் நெகிழ வைத்தார்கள். 

வரலாற்றுப் பெருமை வாய்ந்த நல்லூர் ஆலயம், 1248ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சிபுரிந்த சிங்கையாரிய மன்னன் காலத்தில் மந்திரியாகவிருந்த புவனேகவாகுவால் கட்டுவிக்கப்பட்டது என்று ஒரு வரலாற்றுத் தகவலும், 13ம் நூற்றாண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சிசெய்த ஆரிய சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கலிங்கமாகன் அல்லது கூழங்கை சக்கரவர்த்தியால் கட்டுவிக்கப்பட்டதாக யாழ்ப்பாண வைபவமாலையும் கூறுகிறது.

போர்த்துக்கேயர் ஆட்சியில் அழிக்கப்பட்ட ஆலயத்தை, ஒல்லாந்தர் ஆட்சிப் பணிமனையில் சிறப்பாக கடமையாற்றி வந்த தொன்யுவான் மாப்பாண முதலியார் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி மீளவும் கட்டுவதற்கு உத்தரவு பெற்றுக் கொடுத்தாராம். 


நல்லூரானின் இந்த வரலாறுகளை கடந்து வந்து, வடக்கு வீதியில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த அதே இடத்தில் நின்று கொண்டிருந்தோம். கடவுளும் கைவிட்டாரா என்று எண்ணத் தோன்றும் தன்னினத்திற்காக தன்னை தியாகம் செய்த அந்தத் தன்னிகரில்லா தனயன், தன்னையே ஆகுதியாக்கி முப்பது வருடங்கள் ஆகப்போகிறது.  திலீபன் உண்ணாவிரதமிருந்த அந்த மண், புனித பூமியில் உறையும் தியாக பூமி.

சப்பரம் சுற்றி வந்து கோயிலடிக்கு வர, தவில் நாதஸ்வர கச்சேரி களைகட்டியது. நாதஸ்வரத்தையும் தவிலையும் சுற்றி நின்று பார்த்து ரசிக்க இன்னும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. இரவின் இருளில் தீப்பந்தங்களின் அழகிய அசைவுகளை பார்க்கவும் அருமையாக இருந்தது. ஜம்புலன்களையும் ஆட்கொண்ட அற்பத கணங்களவை.


சாமி கோயிலிற்குள் மீண்டும் குடியேற, சனத்திற்குள் நெரிபட்டுக் கொண்டு லிங்கம் கூல்பாரிற்கு போக அரை மணித்தியாலத்திற்கு  மேல் பிடித்தது.  கூட்டம் நிரம்பி வழிந்த லிங்கம் கூல் பாரில், மேசையொன்று காலியாகும் மட்டும் பொறுமையோடு காத்திருந்து "லிங்கம் ஸ்பெஷல்" ஒன்றை குடித்து விட்டு, கடலைக் கடையில் கழற்றி விட்டு வந்த செருப்பை  எடுக்க செட்டி வீதிக்கு நடக்கத் தொடங்கினேன்.

பச்சைக் கலர் மதிலிற்கு பக்கத்தில் இருந்த கடலைக் கடை தம்பியின் கடையை தேடிப்பிடித்து, iPhoneன் வெளிச்சத்தில் செருப்பைத் கண்டு பிடித்தேன். வியாபாரத்தில் மும்முரமாய் இருந்த தம்பியை பார்த்து "thanks தம்பி...இந்தாரும்.. சிலிப்பரை பார்த்துக் கொண்டதற்கு" என்று நூறு ரூபா தாளை நீட்டினேன்.

"சும்மா தரவேண்டாம் அண்ணே.. கச்சான் வாங்குங்கோ" தம்பியின் வார்த்தைகள் கன்னத்தில் பளார் என்று விழுந்தது. ஊரில் இருக்கும் எம்மவர்களிற்கு வெளிநாட்டு காசை வாரி இறைப்பதால் ஏற்படும் சமூக பொருளாதார சீர்கேடுகளைப் பற்றி பக்கம் பக்கமாக வாசித்ததும், பந்தி பந்தியா எழுதியதும் நினைவில் நிழலாடியது. 

"சரி.. அப்ப ஒரு bag கச்சான் தாரும்" தம்பியை மகிழ்விக்க கச்சான் வாங்கினேன். கச்சானை வாங்கிக் கொண்டு திரும்ப,

"அண்ணே, இந்தாங்கண்ணே மிச்சக் காசு" ஜம்பது ரூபா தாளை தம்பி நீட்டிக் கொண்டிருந்தான். "வேண்டாம் தம்பி, நீரே வச்சிரும்" டொலரில் உழைத்ததை ரூபாயில் அள்ளி எறிந்து பழகிய பழக்கம் தொடர்ந்தது.

"வேண்டாமண்ணே... நீங்களே வச்சிருங்கோ" வெளிநாட்டுக் காரரின் ஏவறைக் காசு எனக்கு வேண்டாம் என்பதைத் தான் அந்தத் தம்பி பவ்வியமாக சொல்லிக் கொண்டிருந்தான். 

வானத்தில் வளர்பிறை வளரத் தொடங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. 


வாடா மச்சான் வாடா..
ஒரு வேளைப்பளு நிறைந்த கடுமையான வெள்ளிக்கிழமை, வேலை முடித்து வீட்ட வர, 

"தேத்தண்ணி போடவா" மனிசி கேட்டா". இது தான் சரியான தருணம், மண்டைக்குள் மெஸேஜ் வந்தது.

"போட்டா நல்லம், போடாட்டியும் பரவாயில்லை, கஷ்டப்படாதேயும்" கார் திறப்பையும் phoneஐயும் மேசையில் வைத்து விட்டு,  கண்களில் கவலை கலந்து, அவாவை பார்த்தேன்.

"ஏன் ஒரு மாதிரியா இருக்குறீர்" கேத்தலில் தண்ணி நிரம்ப தொடங்கியது

"ச்சா ஒன்றும் இல்லை" பக்கத்திலிருந்த கதிரையில் அமர்ந்தேன்

"வேலையில் என்னவும் பிரச்சினையோ" கேத்தலிற்கு ஸ்விட்ச் போட்டாச்சு

"...இல்லை" முகத்தில் எந்த சலனமும் காட்டவில்லை

"இந்தியா தோத்தது கவலையோ" நக்கல் தொனித்தது.

"உமக்கென்ன விசரே" சலித்துக் கொண்டேன். "அவங்க தோத்தா எனக்கென்ன" 

"யாழ்ப்பாணத்தில் என்னவும் பிரச்சினையோ?" தொனியில் அக்கறை எட்டிப் பார்த்தது

"அங்க என்ன நடந்தா எங்களுக்கென்ன" தேயிலையில் சுடுதண்ணீர் இறங்கிக் கொண்டிருந்தது

"அப்ப என்னென்று சொல்லுமன்" சுடுதண்ணீரில் தேயிலையை தோய்த்து எடுத்தா

"இல்ல எங்கட சென் ஜோன்ஸ் batch பெடியள் get togetherற்கு வரட்டாம்" நைஸாக போட்டேன்

"போன வருஷம் தானே big matchற்கு போனீர்" தேயிலை bag குப்பை தொட்டியில் தொப்பென்று விழுந்தது

"---------" மெளனம் 

"இப்ப என்ன ஆட்டத்திற்கு போக போறியள்" சீனி டப்பா டக்கென்று திறந்தது

"45 வருகுதாம்" குரலில் கவலை தோய்த்து "உம்மை விட்டிட்டு போக எனக்கும் விருப்பமில்லை தான்"

"நல்லா நடிப்பீர்" சீனிக் கரண்டி தேத்தண்ணியில் இறங்கியது

"எல்லாரும் போறாங்கள்" காட்டி கொடுப்பு தொடங்கியது. "கிரிஷாந்தன், வாதுலன், ஆதி, சத்தி, நகு, கஜன்.. ....நான் இன்னும் வாறனென்று சொல்லேல்ல"

"வேண்டாமென்றா போகாமல் நிக்கவோ போறீர்" கோப்பையில் போட்ட சீனிக்கு நல்ல அடி விழுந்தது. "என்னவோ செய்யும்"

"நாலு நாள் தான்" சத்தியமா கெஞ்சவில்லை. "டக்கென்று வந்திடுவன்"

"போய் தொலையும்" தேத்தண்ணி கோப்பை கையில் வந்தது. "நீங்களும் உங்கட ஜொனியன்ஸும்... this is too much"

"தேத்தண்ணி சூப்பராயிருக்கு" ஒரு மிடாய் குடித்தேன். 


--------

WhatsAppல்
"Machan please put me as confirmed. Boss approved my leave application at work 👍"