Friday, 1 September 2017

நல்லூரில் சப்பரம்...


"அண்ணே bataவை கழட்டி வச்சிட்டு போங்கண்ணே" செட்டி வீதியில் கச்சான் விற்க கடை பரப்பியிருந்த பதினொன்று அல்லது பதின்ரெண்டு வயதேயான தம்பியை நம்பி, போனமுறை Big Matchற்கு வரும்போது DSIயில் வாங்கிய Red &Black செருப்பை, அவனது கடையடியில் கழற்றினேன்.

"தம்பி, செருப்பு கவனமடா" கடலைக்கடை தம்பிக்கு அறிவுறுத்திவிட்டு நடையை கட்டினேன். போட்டிக் கடலைக் கடைகளின் "bata கழட்டுங்கோ" குரல்களைத் தாண்டி, கோயிலை அண்மிக்க, கோயிலை நோக்கி நிமிர்ந்து நின்ற சப்பரத்திற்கு முன்னால் சனம் நிரம்பத் தொடங்கியிருந்தது. 

சப்பரத்திலிருந்து பத்தடி தள்ளி நின்று, நல்லூர் திருப்பதியின் காற்றில் கலந்திருந்த கற்பூர வாசனையையும் அந்த சூழலில் நிறைந்திருந்த பக்தி மயமான சூழலையும் உள்வாங்கிக் கொண்டு, பக்கத்தில் திரும்பிப் பார்த்தால், குமரன் நிற்கிறார். சிட்னியில் வசிக்கும் 'ஜொனியன்' குமரன், நண்பன் அரவிந்தனின் தம்பி.

எதிர்பாராமல் சந்திக்கும் போது எழும் அதே அரண பரண முகமன் கேள்விகளையும் பதில்களையும் பரிமாறிவிட்டு விஷயத்திற்கு வந்தோம்.

"ஐசே, சப்பரம் என்றால் என்ன meaning" நல்லூர் பின்வீதியில் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த குமரனை நோக்கி வட கொரிய ஏவுகணை பறந்தது.  "Actually.. I don't know" தம்பி தவித்தான், நிமிர்ந்து சப்பரத்தை பார்த்தான், "I think, சப்பரம் means கப்பல், இதை பார்த்தா அப்படித்தான் இருக்கு", தம்பி சமாளித்தான். 

நல்லூர் கோயிலின் வழக்கங்களை நன்கறிந்த  நண்பன் ஒருவன் "மச்சான், சப்பரம் என்றால் சப்பையாக இருக்கும் ரதம்" என்று WhatsAppல் விளக்கம் தந்தான். "ரதம் என்றால் 3 dimensionல் இருக்கோணும், 3 dimensionல் இருந்தால் தான் அது ரதம், அதை சப்பையாக பண்ணினால் எப்படியிருக்குமோ அது தான் சப்பரம்" என்று விளக்கம் தந்தான்.

"சைவத்திற்கு பெரிய கோயிலான சிதம்பரத்தில் இதை திருவையடைத்தான் என்று சொல்வார்கள்" என்று நல்லூரிலிருந்து சிதம்பரத்திற்கு நண்பன் தாவினான். "திருவையடைத்தான் என்பது தெருவை அடைத்தான் என்பதன் மருவிய வடிவமாம். தெருவை அடைக்குமளவிற்கு பெரிய ஒரு structure தான் சப்பரம்" என்று கூறி விட்டு, 


"250 வருட பழமை வாய்ந்த நல்லூர் சப்பறம் தான் உலகிலேயே மிகப் பழமையானதும் அதியுயரமானதுமான அசையும் கட்டுமானப் பொருள் என்று ஒரு news வந்தது, அது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியாதுடா" என்று சொல்லி முடித்தான்.


"அண்ணா இந்தப் பக்கம் நின்டா வடத்தில மாட்டுவம், அங்கால பக்கம் போவம்" என்று என்னையும் கூட்டிக் கொண்டு குமரன் சப்பரத்தின் மற்றப்பக்கம் போனான். நல்லூர் சந்நிதியில் எந்தப் பக்கம் எந்த நேரம் நிற்க வேண்டும் என்பது ஒரு பெரிய சூட்சுமம். காலங்காலமாக நல்லூர் தேர் திருவிழா தரிசித்தவர்களிற்கு மட்டும் தெரிந்த வித்தையது. சரியான இடத்தில் சரியான நேரத்தில் நின்றால் தான் சாமியின் தரிசினம் நிறைவாக கிடைக்கும், திருவிழாவின் நிகழ்வுகளையும் கண்கூடாக கண்டு களிக்கலாம்.

"தம்பி இந்த வடம் பிடிக்கோணும் என்று எனக்கு ஒரு ஆசை" பக்கத்தில் நின்ற குமரனிடம் சொன்னேன். நல்லூரில் திருவிழாக் காலங்களில் கொம்பு தூக்குவதற்கும் வடம் பிடிப்பதற்கும் நடக்கும் முறுகல்கள் பற்றியும் சம்பிரதாயங்கள் பற்றியும் நண்பர்கள் ஜெயராமும் சாந்தனும் சொல்ல கேள்விப்பட்டிருந்தேன். நக்கலாக ஒரு சிரிப்பு  சிரித்து விட்டு "வாங்கோ நடுவுக்க போவம்" என்று சப்பரத்தின் முன் பகுதிக்கு முன்னேறினோம். 

கற்பூரங்கள் ஏற்றிய நீண்ட இரும்புக் கம்பிகளைச்  சுழற்றிக் கொண்டே இருவர் வர, சப்பரத்திற்கும்  கோயிலின் பிரதான வாயிலிற்கும் இடையில் ஒரு வெளி உருவாகியது. "இது ஒரு crowd control mechanism" குமரன் காதுக்குள் முணுமுணுத்தார். காலில் பொய்கால் அணிந்து உயரமாக நடந்து வந்த ஒருவரின் காதில் தொலைபேசி ஒட்டிக்கொண்டிருந்தது. "டேய் எங்கேடா இருக்கிறாய்....நான் இஞ்ச தான் இருக்கிறன்" என்று யாரோடோ செல்ஃபோனில் கதைத்துக் கொண்டே, மரக்காலில் நடந்து போனார். 

 கோயிலின் மணிக்கூடு ஆறு மணியடித்து முடிய, நல்லூர் கோயிலின் பிரதான வாயிலைக் கடந்து வள்ளி தெய்வானை சகிதம் முருகன் எழுந்தருள, "ஓம் முருகா" கோஷம் நல்லூர் திருப்பதியை நிறைத்தது. கொம்புகளில் காவிக் கொண்டு வரப்பட்ட மூவரும் சப்பரத்தில் ஏற்றப்பட்டு தீபாராதனை முடிய, சப்பரத்தின் முன்னால் தள்ளு முள்ளு எற்பட்டது. "எதுக்குடா தள்ளுபடுறாங்கள்" என்று கேட்க குமரனை திரும்பிப் பார்த்தால், ஆளை காணவில்லை.

"அண்ணா வாங்கோ.. பிடியுங்கோ" என்ற குமரனின் குரலை கேட்டுத் திரும்பிப் பார்க்க, குமரன் வடத்தை பிடித்துக் கொண்டு ஓடுகிறார். அவரைத் துரத்திக் கொண்டு போய், வடத்தை கையில் பிடித்தால், வடம் இழுக்க போன எங்களை, வடம் இழுத்துக் கொண்டு போன கதை தான் நடந்தது. கல்லும் தேங்காய் சிரட்டையும் காலில் குத்த, பிடித்த வடத்தை விடக்கூடாது என்று உள்ளுணர்வு சொல்ல, வடத்தோடு ஓடி முடித்து மூச்செடுக்க, நல்லூர் கோயிலின் வாயிலில் வடத்தோடு நின்றோம். 

"வடம் வரப்போகுது.. விலகி நில்லுங்கோ" என்று சிறிய ஒலிவாங்கியில் பெரியவர் ஒருவரின் குரல் ஒலித்துக் கொண்டேயிருந்தது. வடத்தின் முன்னால் நீண்டிருந்த இரு பெரிய மொத்தக் கயிறுகளை நூற்றுக்கணக்கானோர் பிடித்து இழுக்க சப்பரம் நகரத் தொடங்கியது.


சனம் நிறைந்த அந்த கோயில் வெளிவீதிகளில், சப்பரத்தை  தெற்கு வீதியிலும் பின்வீதியிலும் வடக்கு வீதியிலும் திருப்பி இழுக்க இரு வடங்களையும் பிடித்திருந்ததவர்கள் எவ்வாறு தங்களது நிலைகளை மாற்றினார்கள் என்பதை நினைக்க இன்றைக்கும் ஆச்சரியமாகவே இருக்கிறது.

எங்கிருந்தோ யாரோ கொடுத்த கட்டளையை ஏற்று, நீண்ட வடத்தில் ஒரு கை வைக்கக் கூட இடமில்லாமல், நூற்றுக்கணக்கில் கூடி நின்று, உற்சாகமாகவும், ஒரே நோக்கத்தோடும் வடம் பிடிக்கும் என் சனத்தை பார்க்க, "இதே ஒற்றுமையையும் ஓர்மத்தையும் காட்டி அரசியல் மற்றும் பொருளாதாரம் எனும் வடங்களைப் பிடித்து தமிழின சுபீட்சம்  எனும் ரதத்தை நாங்கள் ஏன் இழுக்கக் கூடாது" என்ற ஆதங்கம் எண்ணங்களில் மேலெழுந்தது.

ஒரு கணமேனும் வடம் பிடிக்கும் ஆசை கண்களில் தெரிய, தள்ளு முள்ளுக்குள் அகப்படத் தயங்கி, பம்மிக் கொண்டு ஒதுங்கி நின்றவர்களையும் "அண்ணே வடம் பிடிக்க போறியளா.. வாங்கோண்ணே" என்று கூப்பிட்டு அவர்களது எண்ணத்தை நிறைவேற்றிய தம்பிமார் நெகிழ வைத்தார்கள். 

வரலாற்றுப் பெருமை வாய்ந்த நல்லூர் ஆலயம், 1248ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சிபுரிந்த சிங்கையாரிய மன்னன் காலத்தில் மந்திரியாகவிருந்த புவனேகவாகுவால் கட்டுவிக்கப்பட்டது என்று ஒரு வரலாற்றுத் தகவலும், 13ம் நூற்றாண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சிசெய்த ஆரிய சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கலிங்கமாகன் அல்லது கூழங்கை சக்கரவர்த்தியால் கட்டுவிக்கப்பட்டதாக யாழ்ப்பாண வைபவமாலையும் கூறுகிறது.

போர்த்துக்கேயர் ஆட்சியில் அழிக்கப்பட்ட ஆலயத்தை, ஒல்லாந்தர் ஆட்சிப் பணிமனையில் சிறப்பாக கடமையாற்றி வந்த தொன்யுவான் மாப்பாண முதலியார் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி மீளவும் கட்டுவதற்கு உத்தரவு பெற்றுக் கொடுத்தாராம். 


நல்லூரானின் இந்த வரலாறுகளை கடந்து வந்து, வடக்கு வீதியில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த அதே இடத்தில் நின்று கொண்டிருந்தோம். கடவுளும் கைவிட்டாரா என்று எண்ணத் தோன்றும் தன்னினத்திற்காக தன்னை தியாகம் செய்த அந்தத் தன்னிகரில்லா தனயன், தன்னையே ஆகுதியாக்கி முப்பது வருடங்கள் ஆகப்போகிறது.  திலீபன் உண்ணாவிரதமிருந்த அந்த மண், புனித பூமியில் உறையும் தியாக பூமி.

சப்பரம் சுற்றி வந்து கோயிலடிக்கு வர, தவில் நாதஸ்வர கச்சேரி களைகட்டியது. நாதஸ்வரத்தையும் தவிலையும் சுற்றி நின்று பார்த்து ரசிக்க இன்னும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. இரவின் இருளில் தீப்பந்தங்களின் அழகிய அசைவுகளை பார்க்கவும் அருமையாக இருந்தது. ஜம்புலன்களையும் ஆட்கொண்ட அற்பத கணங்களவை.


சாமி கோயிலிற்குள் மீண்டும் குடியேற, சனத்திற்குள் நெரிபட்டுக் கொண்டு லிங்கம் கூல்பாரிற்கு போக அரை மணித்தியாலத்திற்கு  மேல் பிடித்தது.  கூட்டம் நிரம்பி வழிந்த லிங்கம் கூல் பாரில், மேசையொன்று காலியாகும் மட்டும் பொறுமையோடு காத்திருந்து "லிங்கம் ஸ்பெஷல்" ஒன்றை குடித்து விட்டு, கடலைக் கடையில் கழற்றி விட்டு வந்த செருப்பை  எடுக்க செட்டி வீதிக்கு நடக்கத் தொடங்கினேன்.

பச்சைக் கலர் மதிலிற்கு பக்கத்தில் இருந்த கடலைக் கடை தம்பியின் கடையை தேடிப்பிடித்து, iPhoneன் வெளிச்சத்தில் செருப்பைத் கண்டு பிடித்தேன். வியாபாரத்தில் மும்முரமாய் இருந்த தம்பியை பார்த்து "thanks தம்பி...இந்தாரும்.. சிலிப்பரை பார்த்துக் கொண்டதற்கு" என்று நூறு ரூபா தாளை நீட்டினேன்.

"சும்மா தரவேண்டாம் அண்ணே.. கச்சான் வாங்குங்கோ" தம்பியின் வார்த்தைகள் கன்னத்தில் பளார் என்று விழுந்தது. ஊரில் இருக்கும் எம்மவர்களிற்கு வெளிநாட்டு காசை வாரி இறைப்பதால் ஏற்படும் சமூக பொருளாதார சீர்கேடுகளைப் பற்றி பக்கம் பக்கமாக வாசித்ததும், பந்தி பந்தியா எழுதியதும் நினைவில் நிழலாடியது. 

"சரி.. அப்ப ஒரு bag கச்சான் தாரும்" தம்பியை மகிழ்விக்க கச்சான் வாங்கினேன். கச்சானை வாங்கிக் கொண்டு திரும்ப,

"அண்ணே, இந்தாங்கண்ணே மிச்சக் காசு" ஜம்பது ரூபா தாளை தம்பி நீட்டிக் கொண்டிருந்தான். "வேண்டாம் தம்பி, நீரே வச்சிரும்" டொலரில் உழைத்ததை ரூபாயில் அள்ளி எறிந்து பழகிய பழக்கம் தொடர்ந்தது.

"வேண்டாமண்ணே... நீங்களே வச்சிருங்கோ" வெளிநாட்டுக் காரரின் ஏவறைக் காசு எனக்கு வேண்டாம் என்பதைத் தான் அந்தத் தம்பி பவ்வியமாக சொல்லிக் கொண்டிருந்தான். 

வானத்தில் வளர்பிறை வளரத் தொடங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. 


No comments:

Post a Comment