Friday, 25 August 2017

நல்லூரில்....

"ஒரிடத்தில கொண்டு வந்து நிற்பாட்டாமல், டவுண் முழுக்க கொண்டு வந்து நிரப்பி அடிச்சிருக்கிறாங்கள்" ஓட்டோவின் acceleratorஐ முறுக்கிக் கொண்டே, ஓட்டோக்காரத் தம்பி சொல்லும் போது, ஸ்டான்லி வீதியில் வெலிங்டன் தியேட்டர் தாண்டியிருந்தோம்.

"மூண்டு மணிக்கே வரத் தொடங்கிட்டுது" கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி, நல்லூர் திருவிழாவில் கலந்து கொள்ள, புலத்திலிருந்தும் தெற்கிலிருந்தும் வந்த சனங்களை சுமந்து வந்துகொண்டிருந்த நூற்றுக்கணக்கான
சொகுசு பஸ்வண்டிகளைப் பற்றித்தான் ஓட்டோத் தம்பி கதைத்துக் கொண்டிருந்தார்.

"இன்றைக்கு ஆறேழு மணி மட்டும் ஒரே ஓட்டம் தான் அண்ணே" அதிகாலை நாலு மணிக்கும் உற்சாகமாக வேலை செய்யும் அந்த தம்பியின் குதூகலம் யாழ்ப்பாணக் காற்றில் எங்கும் கலந்திருந்தது. 

"தம்பி, எவ்வளவு தம்பி" சூட்கேஸை இறக்கி விட்ட தம்பியிடம் ஓட்டோ சவாரிக்கான கூலியைக் கேட்டேன். "விரும்பினதை தாங்கோ அண்ணே, நல்லூரானை பார்க்க வந்திருக்கிறியள்" அடுத்த ஓட்டத்திற்கு ஓடும் அவசரம் அவரின் குரலில் எதிரொலித்தது.

--------------------------------------------------------------------------

"மச்சான், வந்திட்டியாடா" சூட்கேஸை திறந்து துவாயை எடுத்து குளிக்கப் போக, பரி யோவான் பள்ளிக்கால தோழன் கோபியிடமிருந்து SMS வந்தது. "Arrived, just now" என்று மறுமொழி அனுப்பிய அடுத்த நிமிடம், தொலைபேசி சிணுங்கியது. கோபி "நாலரைக்கு தேரடியில் நிற்பன், வந்து சேர்ந்திடு" என்று சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் தொடர்பை துண்டித்தான்.


குளிரும் யாழ்ப்பாணத் தண்ணியில் தலையில் முழுக, உடல் மட்டுமல்ல உணர்வும் சில்லிட்டது. நல்லூர் திருவிழா பார்க்க வேண்டும் என்ற அவாவவிற்கு வித்திட்டது, சில ஆண்டுகளிற்கு முன்னர் அதிகாலை வேளையில் கண்ட அந்தக் கனவு தான். நல்லூரின் பிரதான வாயிலில், வள்ளி தெய்வானை சகிதம் வெளிவீதியில் உலாப் போக புறப்படும் முருகனை கனவில் தரிசிக்கும் பாக்கியம் அந்தக் கனவில் கிட்டியது. மத நம்பிக்கைகளைக் கடந்து, தமிழ் கலாச்சாரத்தின் அசைக்க முடியாத கோட்டையாக விளங்கும் நல்லூர் திருவிழாவை காணும் பாக்கியம் இந்தாண்டு கைகூடியது உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதம். 

SJC OBA Melbourneன் வேட்டி Partyக்கு வேட்டி கட்டிய முன்னனுபவம் கைகொடுக்க, சடாரென்று வேட்டியைக் கட்டிக் கொண்டு, மடமடவென சுடச்சுட கோப்பியை குடித்து விட்டு, வெறுமேலில் யாழ்ப்பாண குளிர் காற்று அப்ப, நல்லூர் தேரடியை அடையும் போது அதிகாலை 4:35 மணி. எங்கும் "முருகா முருகா" என்றும் "அரோகரா அரோகரா" என்றும் பக்தர்களின் குரல்கள், அதிகாலையின் நிசப்தத்தில் சங்கமிக்க, நல்லூரின் பக்திப்பிரவாம், அங்கிருந்த யாவரையும் ஆட்கொண்டிருந்தது.


குனிந்து வேட்டியை ஒரு விதமாக குறுக்கு கட்டிக் கொண்டு "நீ எனக்கு பின்னால நடந்து வா" என்று கட்டளையிட்டு விட்டு, கோபி நல்லூர் ஆலயத்தின் பிரதான வாயிலடியில் இருந்து பிரதட்டை அடிக்க தொடங்கினான். நல்லூரான் மணலில் அவன் அங்கப்பிரதட்டையை தொடங்க, அவனிற்கு முன்னும் பின்னும் பெரிதாக இடைவெளியே இல்லாமல், உருண்டுகொண்டிருந்த நூற்றுக்கணக்கான ஆண்களைப் பார்த்து பிரமித்தே போனேன்.

புனித பூமியான நல்லூரின் மணலில் இளைஞர்களும்  நடுத்தர வயது ஆண்களும் ஒரே சீராக உருண்டு கொண்டிருந்தார்கள். கோபி கொஞ்சம் வேகமாக உருளத் தொடங்கினான். அவனிற்கு முன்னால் உருண்டு கொண்டிருந்தவர்களை லாவகமாக overtake பண்ணி, தார் வீதியில் உடல் ஏறாமலும், கோயிலின் மதிலில் உடம்பு மோதாமலும், அங்க பிரதட்டை செய்யும் நண்பனின் செயலில், பலவருடங்களாக அங்கப்பிரதட்டை செய்யும் அனுபவம் மிளிர்ந்தது. 

கோயிலை சுற்றிக் கொண்டே, திலீபன் உண்ணாவிரதமிருந்த வடக்கு வீதியில் ஏற, "என்னடாப்பா இங்க நிற்கிறாய்" பரிச்சயமான குரல் கேட்டு திரும்பி பார்த்தேன். வெற்றுடலில் அப்பிய மண்ணோடு, டொக்டர் சிறிகிருஷ்ணா அவருக்கே உரிய சிரிப்போடு எனது தோளில் கைபோட்டார். பரி யோவானின் ஒரே வகுப்பில் படித்த இரு நண்பர்களான கோபியும் சிறிகிருஷ்ணாவும் இன்று யாழ்ப்பாணத்தின் பிரபல orthopedic surgeons. அந்த இருவரையும் அந்த அதிகாலை வேளையில் நல்லூர் சந்நிதியில் சந்தித்தது மனதிற்கு மகிழ்ச்சியளித்தது. 

பட்டம், பதவி, அந்தஸ்து என்று யாவற்றையும் களைந்து, நல்லூரானின் ஆசியும் அருளும் வேண்டி, பக்தியுடன் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும் நல்லூர்க் கந்தனின் வல்லமையை நினைக்க மலைப்பாக இருந்தது. தன்னிடம் வரும் அடியார்கள் எல்லோரையும் சமமாக மதித்து, அதன் குறியீடாக ஆடவர்கள் அனைவரும் மேலாடை களைந்தே ஆலயத்திற்குள் பிரவேசிக்க வேண்டும் என்ற கடும் கட்டுப்பாட்டை பேணும் நல்லூர் ஆலயத்தின் கட்டுப்பாடு வியக்க வைத்தது. அந்தக் கட்டுபாட்டை, யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் மோடிக்காக கூட தளரத்தவில்லையாம். 

கோயிலின் வாசலில் கோபி தனது அங்கப்பிரதட்டையை முடித்துக் கொண்டு நாங்கள் ஆலயத்திற்குள் பிரவேசிக்கவும் காலை ஜந்தரை மணிப் பூசைக்கு மணியடிக்கவும் சரியாக இருந்தது. திரை விலகி தீபாராதனை தொடங்க, "ஓம் முருகா" என்ற கூவிக்கொண்டே விண்ணோக்கி குவிந்த கரங்கள் எதிலுமே ஃபோன்கள் இருக்கவில்லை. 

"மச்சான், கோயிலுக்க ஏன்டா பொலிஸ்காரிகளை நிற்பாட்டியிருக்கிறாங்கள், அதுவும் சட்டையோட" கும்பிட்டு முடித்துவிட்டு வந்த கோபியை கேட்டேன். "கள்ளர் மச்சான், chain அறுக்குற குறூப்பை பிடிக்கடா", கோபி சால்வையால் உடலை மறைத்துக் கொண்டான். 

"அதுக்கு, கோயிலுக்குள் சட்டையில் விடுறது பிழையில்லையா" புலத்தில் இருந்து பிழைபிடித்துப் பழகிய வாய் சும்மா இருக்க மறுத்தது. "பிழைதான்டா, ஆனா என்ன செய்யுறது, அது அவங்கட uniform, களவை நிற்பாட்ட வேற வழியில்லை" தாயகத்தில் வாழும் நண்பன் கள யதார்த்தம் புரியவைத்தான்.


பருத்தித்துறை வீதியில் இருந்த தண்ணீர் பந்தலில் தண்ணீர் குடிப்போம் என்று போனால், அங்கே அவர்கள் சுடச்சுட கோப்பி ஊற்றிக் கொண்டிருந்தார்கள். அந்த அதிகாலை வேளையிலும், தண்ணீர், இல்லை இல்லை, கோப்பிப் பந்தலிற்கு முன்னால் சனம் நிரம்பி வழிந்தது. செட்டித்தெரு மூலையில் இருந்த தேத்தண்ணிக் கடைக்கு கூட்டிக் கொண்டு போய், கோபி கோப்பி வாங்கித் தந்தான். சுட்டுக் கொண்டிருந்த டம்ளரில் மிதமான சீனிகலந்த அந்த கோப்பையின் சுவை இன்னும் நாவில் நிற்கிறது.

"சரிடா, அப்ப பின்னரேம் சந்திப்பம், நாலரைக்கு வந்திடு" கோபி விடைபெற, வெறுங்கால் யாழ் மண்ணில் பதிய, வெற்றுடலில் யாழ்ப்பாணக் காற்றுத் தழுவ, கோயில் வீதியில் நடக்கத் தொடங்கினேன்.
பொற்கிரணங்களை விரித்து சூரியன் மெல்ல மெல்ல யாழ்ப்பாணத்து வானத்தில் உதிக்கத் தொடங்கியிருந்தான். 

தொடரும்...

நல்லூரில் சப்பரம்

https://kanavuninaivu.blogspot.com.au/2017/08/blog-post_31.html


No comments:

Post a Comment