Friday, 28 July 2017

கொழும்பு இந்துவில்: 1992 கலைவிழா
கொழும்பு இந்துக் கல்லூரி வளாகத்தினுள் புத்தெழுச்சி பிறந்த ஆண்டுகள் 1991ம் 1992ம் தான். 1983ம் ஆண்டு ஆடிக் கலவரத்தின் பின்னர் செயலிழந்திருந்த கழகங்களும் மாணவரவைகளும் மீண்டும் உற்சாகத்துடன் செயற்படத் தொடங்கிய வருடங்கள் அவை.  தமிழ் மொழி பாடசாலைகளிற்கிடையிலான போட்டிகளில் கொழும்பு இந்துவும் வீறுடன் போட்டி போடத் தொடங்கிய காலங்கள் அவை. 

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் கொழும்பு இந்துக் கல்லூரியின் விவாத அணி ஒரு பலமான அணியாக விளங்கவில்லை. விவாதப் போட்டிகளிற்கு போவதற்கு அணியில் ஆட்கள் சேர்ப்பதே பெரும்பாடாயிருக்கும். அப்படி இப்படி ஆளை பிடித்து கூட்டிக் கொண்டு போனாலும், பலமான St Thomas கல்லூரி அணியிடமோ கலக்கலான Royal கல்லூரி அணியிடமோ நாங்கள் தோற்றுப் போவோம்.

வெற்றி பெற கடுமையாக போராடிக் கொண்டிருந்த கொழும்பு இந்துவின் விவாத அணியில் இணைய உயர்தரம் படிக்கும் மாணவர்கள் தயங்கிய அந்த நாட்களில், விடிவெள்ளிகளாக, நம்பிக்கை நட்சத்திரங்களாக துணிவுடன் அணியில் இணைந்து பலம் சேர்த்தவர்கள் தமிழழகனும் சுபாஷ் சிறிகாந்தாவும் ஜெயபிரகாஷ் சிறிகாந்தாவும் தான். அடுத்து வந்த ஆண்டுகளில் இவர்கள் தலைமை வகித்த அணிகள் கொழும்பை ஒரு கலக்கு கலக்கின. 

1992ம் ஆண்டின் நடுப்பகுதியில் கொழும்பு இந்துவின் வருடாந்த கலைவிழா அரங்கேறியது.  கொழும்பு இந்துவின் கலை விழா என்றால் கொழும்பு தமிழ் சமூகமே திரும்பி பார்க்கும். கலைவிழா டிக்கட் கேட்க, வழமையாக திரும்பிப் பார்க்காத பெட்டைகளே கொழும்பு இந்து பெடியங்களைப் பார்த்து சாதுவாக சிரிக்க தொடங்கும், இல்லை சிரிக்கிற மாதிரி எங்கள் கண்களிற்கு தெரியும்.

1991ம் ஆண்டு தொடக்கம் கொமர்ஸ் பிரிவு மாணவர்களிற்கும் ஒழுக்கத்திற்கு பொறுப்பாக இருந்த கிமு வாத்தியாருக்கும் கொழுவல் தொடங்கி 1992ல் உச்சத்திலிருந்தது. 1992ம் ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு அழகான டயறியை எடுத்துக் கொண்டு பண்டா கிமு வாத்தியாரிடம் போனான். டயறியை அவரிடம் கொடுத்து புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு,  "சேர், இந்த வருடம் கலைவிழா எப்ப வருகிறது என்று இந்த டயறியில் குறித்து வைத்து கொள்ளுங்கோ, அன்றைக்கு உங்களிற்கு முட்டை அடிப்பம்" என்று சொல்லிவிட்டு, பண்டா ஓடியே போய்விட்டான்: 

1992 கலைவிழாவில் அப்போதைய Head Prefect ரமேஷும் டெரன்ஸும் இணைந்து எழுதி நெறிப்படுத்திய "The Great Producer" எனும் நகைச்சுவை நாடகம் அரங்கேறியது. முதலில் "கலியுக ராமாயணம்" என்று பெயரிடப்பட்டிருந்த இந்த நாடகம் கொமர்ஸ் பிரிவு மாணவர்களின் படைப்பு.  நாடகத்தில் ராமனாக ரமேஷும்  இராவணனாக தயானந்தனும் நடித்தார்கள். இராவணனின் தளபதியாக எனக்கும் ஒரு சின்ன வேடம் கிடைத்தது. "போரிற்கு தயார், எங்கே என் தளபதி, அழைத்து வாருங்கள்" என்று இராவணன் கட்டளையிட, அவசரத்தில் தளபதியை காவலாளிகள் தர தரவென இழுத்து வந்து தரையில் விட்டெறியும் காட்சி இன்றும் நினைவில் நிழலாடுகிறது.

"தளபதியாரே உம்மை எதற்கு அழைத்து வந்தோம் தெரியுமா" என்று மன்னன் இராவணன் கர்ஜிப்பான். மேடையில் விழுந்திருந்த தளபதி, எழும்பி வேட்டியில் பட்டிருந்த தூசியை தட்டிவிட்டு, "மன்னித்துக் கொள்ளுங்கள் மன்னா, அழைத்து வரப்படவில்லை, இழுத்து வரப்பட்டேன்" என்று தளபதியார் காவலாளிகளை பார்வையால் பயமுறுத்துவார். 

சரித்திர நாடகமாக மேடையேறி சர்ச்சைகளைக் கிளப்பியது பராந்தகன் கனவு எனும் நாடகம். பரந்த தமிழ் இராஜ்ஜியம் ஒன்றை நிறுவ கனவு காணும் சோழ மன்னனின் கதை தான் பராந்தகன் கனவு. சோழ மன்னனாக சுபாஷ் சிறிகாந்தாவும் அவனது மந்திரியாக ஜெயப்பிரகாஷ்  சிறிகாந்தாவும் மீண்டும் தளபதியாக அடியேனும் பாத்திரங்கள் ஏற்றிருந்தோம். பராந்தகன் கனவு நாடகத்தில் இடம்பெற்ற சில வசனங்கள் பாடசாலை நிர்வாகத்தால் தடைசெய்யப்பட்டது உட்பட, பல தடைகளைத் தாண்டியே பராந்தகன் கனவு மேடையேறியது. 

1992 கலைவிழாவில் அரங்கேறிய மூன்றாவது நாடகத்தை மட்ஸ் மற்றும் சயன்ஸ் பிரிவு மண்டைக்காய்கள் இணைந்து வழங்கியிருந்தார்கள். 

1992 கலைவிழாவை கலக்கிய நிகழ்ச்சி, இதயம் திரைப்படத்தில் இடம்பெற்ற "ஏப்ரல் மேயிலே பசுமையேயில்லை காஞ்சு போச்சுடா" பாடலிற்கு ராஜுவும் நண்பர்களும் ஆடிய நடனம் தான். சினிமாப் பாடலிற்கு ஆடுவதை அனுமதிக்க முடியாது என்று கல்லூரியின் நிர்வாகம் கடுமையாக வாதிட, திருமதி தங்கராஜாவும் வேறு சில ஆசிரியர்களும் "அவங்கள் நல்லா ஆடுறாங்கள், அவங்களிற்கு ஒரு சான்ஸ் கொடுங்கள்" என்று சண்டையிட்டதால் தான் இந்த நடனம் கதிரேசன் மண்டபத்தில் அன்று அட்டகாசமாக மேடையேறியது.

ராஜு நெறிப்படுத்திய இந்த நடனத்தில், கப்பல் விபத்தில் நம்மை விட்டுப் பிரிந்த ஷிரான், பண்டா, பகீ, இளங்கோ ஆடிக் கலக்கினார்கள். இதயம் படத்தில் ஆடிய பிரபு தேவா போல் உடையணிந்து ராஜு ஆடிய ஆட்டத்தை கண்டு அரங்கமே அதிர கரவொலி எழுந்தது. மேடையில் அன்று ஆடிக் கலகலக்கிய ராஜுவிற்கு, அந்த நிகழ்விற்கு வந்த HFC பெட்டைகளை இன்னும் ஞாபகம் இருக்காம்.நிகழ்வின் கடைசி நிகழ்ச்சியாக "இந்துவின் இன்னிசை கானங்கள்" இடம்பெற்றது. தனது மதுரக் குரலால் யாதவன் அரங்கத்தை கவர, விசாகன் வந்திருந்தோரை சொக்க வைக்க, சுதாகர் அற்புதமாக பாடல்களிற்கு இசையமைத்து பாடியுமிருந்தான். பரந்தளவில் இன்றுபோல் இசை நிகழ்ச்சிகள் நடைபெறாத அந்த காலப்பகுதியில், ஒரு உயர்தர இசை நிகழ்வாக "இந்துவின் இன்னிசை கானங்கள்" அரங்கேறியது. 

ஒரு பாடசாலையின் நிகழ்வை பிற பாடசாலை மாணவர்கள் சென்று கத்தி கூப்பாடு போட்டு குழப்புவது அப்போது கொழும்பில் ஒரு பாரம்பரியமாகவே இருந்தது. ஆனால் தங்களது நிகழ்வை வேறு யாரும் வந்து குழப்பக் கூடாது என்று 1992ல் கொழும்பு இந்துக் கல்லூரி மாணவர்கள் திடசங்கற்பம் பூண்டிருந்தார்கள். வழமையாக இந்த குழப்பங்கள் கடைசியாக நிகழும் இசை நிகழ்ச்சியின் போதே இடம்பெறும். "இந்துவின் இன்னிசை கானங்கள்" தொடங்கியதும் கதிரேசன் மண்டபத்தின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு, கதவுகளிற்கு அண்மையில் ஒரு Prefect நிறுத்தி வைக்கப்பட்டார். 

மண்டபத்தில் உள்நுழைய வேறு பாடசாலை மாணவர்கள் சிலர் முயல்வதாக யாரோ வந்து சொல்ல, மண்டபத்தில் பின்வரிசையில் எனக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த அமலன், tieஐ கழற்றி பொக்கற்றுக்குள் வைத்துவிட்டு "உxxx xxxx, இந்தா வாறன்டா"என்றுவிட்டு ஆவேசமாக எழும்பி போனதையும் மறக்கேலாது.  கதிரேசன் மண்டபத்தின் பெரிய கேட்டிற்கு வெளியே குழப்பம் விளைவிக்க வந்தவர்கள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டதால், கொழும்பு இந்துவின் 1992 கலைவிழா எந்தவித குழப்பங்களுமின்றி இனிதே நிறைவடைந்தது. 


No comments:

Post a Comment