Friday, 5 May 2017

மீண்டும் பாகுபலி

 

அழகிய கற்பனையும், கற்பனையை காட்சிப்படுத்திய அழகியலும், அழகியலை மிளரவைத்த பிரமாண்டமும் தான் பாகுபலி 2. பாகுபலி 1 விட்டுச் சென்ற "பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்" என்பதற்கான விடையை, அறிவுபூர்வமாக, சினிமாத்தனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, அறிவித்த திரைக்காவியமாக பாகுபலி 2 வெளிவந்திருக்கிறது.


ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் ஆறு மணிக்கு பாகுபலி 2 படம் பார்க்க மெல்பேர்ணின் Knox Village சினிமா தியேட்டரிற்கு போனால், எங்கும் வணக்கம் சொல்லும் தமிழர்களும் நமஸ்காரம் சொல்லும் தெலுங்கர்களும் தான் நிறைந்திருந்தார்கள். வெள்ளைக்காரன்களும் சைனாக்காரன்களும் அன்றைக்கு சினிமாவை பகீஷ்கரித்திருந்தார்கள். நீண்ட வரிசையில் பலர் நிற்க, வழமை போல் சிலர், வரிசையை உடைத்துக் கொண்டு முன்னேறி தங்கள் "கெட்டித்தனத்தை" காட்டினார்கள்.

 

பாகுபலி தமிழ் திரையிடப்பட்ட 11வது அரங்கினில் ஆசனங்கள் நிறைந்து வழிய, இருட்டில் ஆசனம் தேடி அமர, இன்னுமொரு இருபது நிமிடங்களிற்கு திரையில் விளம்பரங்கள் ஓடிக் கொண்டிருந்தன. $29க்கு டிக்கெட் விற்றும் மண்டபம் நிறைய
மக்கள் நிறைந்திருந்து Village Cinemaவின் share priceற்கு முட்டு கொடுத்துக் கொண்டிருந்ததார்கள். 

எந்த திரைக்காவியத்திலும் இன்னுமொரு திரைப்படத்தின் பாதிப்பைக் காணலாம், சில வேளைகளில் ஈயடிச்சான் கொப்பி மாதிரி, வேற்று மொழிப் படங்களிலிருந்து கதைகளையும் காட்சிகளையும் அப்படியே உருவி, தமிழ்ப் படங்களாக உருமாற்றிருப்பதையும் சகித்துக்கொண்டு அனுபவித்திருக்கிறோம். 


பாகுபலி, அவ்வாறான ஒரு படம் அல்ல. ஆனாலும் பாகுபலியில் வரும் கதாபாத்திரங்களும் சில காட்சிகளும் வேதாகமத்திலும் புராணங்களிலும் வந்த பாத்திரங்களையும் சம்பவங்களையும் ஏதோ வகையில் நினைவூட்டின. அனைத்தும் அடங்கியிருந்தபடியால் தானே அவை புராணங்கள், அவற்றை மீறி யாராலும் திரைப்படம் எடுக்க முடியாது. 


வேதாகமத்தின் பிரகாரம் ஆதாம் ஏவாளிற்கு பிறந்த முதல் குழந்தை காயேன், இரண்டாவது பிள்ளை ஆபேல். காயேன் என்றால் பெற்றெடுத்தது என்றும் ஆபேல் என்றால் வீணானது என்றும் அர்த்தமாம். காயேன் விவசாயத்திலும் ஆபேல் மந்தை வளர்ப்பிலும் ஈடுபட்டான். 

ஆண்டவரிற்கு பலிகொடுப்பதில்  இருவரும் போட்டிப் போட, ஆபேலின் பலியை மட்டும் ஆண்டவர் ஏற்றுக் கொள்கிறார். ஆபேலை ஆண்டவர் விரும்பியதால் அவன் மேல் எரிச்சலும் பொறாமையும் கொண்ட காயேன், ஆபேலை கொலை செய்கிறான். பாகுபலி-பல்வாள் எனும் இரு உடன்பிறவாத சகோதரர்களிற்கிடையிலும் ஏற்படும் போட்டியும் பொறாமையும், அதன் விளைவான மரணமும் தான் பாகுபலி கதையின் மூலக்கரு. 

 

பாகுபலி 1ல், குழந்தையான மகேந்திர பாகுபலியை அவரது பாட்டியான சிவகாமி, ஆற்றில் சுழியோடிக் காப்பாற்றும் காட்சியில், மூங்கில் கூடையில் வைத்து ஆற்றில் மிதக்க விடப்பட்ட மகாபாரத கர்ணனும் பைபிளின் மோசேயும் நினைவில் வந்து சென்றார்கள். 


ராஜதுரோக குற்றமிழைத்ததற்காக கோட்டையை விட்டுத் துரத்தப்படும் அமரேந்திர பாகுபலியும் தேவசேனாவும் ராமாயணத்தின் ராமனையும் சீதையையும் ஞாபகப்படுத்தினார்கள். மாறுவேடத்தில் சென்று தேவசேனாவில் காதல் கொண்ட அமரேந்திர பாகுபலியில், திரெளபதியை கவர்ந்த அர்ஜுனனின் நினைவு வந்து போனது. பல்வாள் தேவரின் அப்பாவாக வரும் நாசரின் கதாபாத்திரத்திலும் மகாபாரத சகுனியின் வாடை வீசுகிறது.


பாகுபலி 1ல், ஒரு மரத்தில் பிரபாஸையும் தமன்னாவையும் ஏற்றி இடையில் ஒரு பாம்பை ஊர்ந்து செல்ல வைத்து அழகாக ஒரு காதல் காட்சியை பின்னிய ராஜமெளலி, பாகுபலி 2ல் அனுஷ்காவிற்கும் பிரபாஸிற்கும் காதல் செய்ய அமைத்த களம், வில் சண்டை. அம்புகளை வில்லில் லாவகமாக கோர்த்து, அனுஷ்காவை தன்னோடு அணைத்து பிரபாஸும் அனுஷ்காவும் அம்புவிட்ட காட்சிகள், காதல் அழகியலின் உச்சக்கட்டம். 

பாகுபலி 1ல், அனுஷ்கா என்ற அழகிய அரேபிய குதிரையை ஊத்தை உடுப்பில காட்டி விட்டு தமன்னாவின் முதுகை முழுமையாக காட்டிய ராஜமெளலி, பாகுபலி 2ல் ஏன் அனுஷ்காவை ஏன் அவ்வாறு காட்டவில்லை என்று பின் சீட்டிலிருந்த வம்பர் ஒருத்தர் புறுபுறுத்தது காதில் வந்து விழுந்தது.

கடைசிக் காட்சியில், பிரபாஸ் தனது மேலாடையை கிழித்து எறிந்து விட்டு, தனது வெறும் மார்பில் திருநீறு பூசி களமிறங்கிய கணத்தில், "நல்ல காலம் இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்கேல்ல, இந்த ஸீனில் அவர்ட ஒல்லி உடம்பைத் தான் காட்டியிருப்..." சொல்லுக் கொண்டே போன பக்கத்து சீட் அன்டி, நான் சடாரென திரும்பிப் பார்க்க கதையை நிற்பாட்டினார்.


பாகுபலி 1ல் இருந்த பலவீனங்களான பின்னனி இசையும் வசனங்களின் தரமின்மையும் பாகுபலி 2லும் தொடர்ந்தது வேதனை. இரு மொழிகளில் ஒரே படம் எடுக்கப்படும் போது ஒரு மொழியில் குறைபாடுகள் வருவது எதிர்பார்க்கப்பட வேண்டியதே. ஆனாலும் இவ்வளவு பெரிய மகா பட்ஜெட் படத்திற்கு இசையமைக்க மரகதமணியை விடவும் திறமான இசையமைப்பளரையும் கார்க்கியை விட சிறந்த வசனகர்த்தாவும் ராஜமெளலிக்கு தமிழில் கிடைக்காமல் போனது தமிழ் சினிமா ரசிகர்களின் துரதிர்ஷ்டமேயன்றி வேறொன்றுமில்லை. 

பாகுபலி எனும் பிரமாண்டமான அரண்மனையின் பலமான அத்திவாரம் கதை என்றால், அந்த அழகிய அரண்மனையை தாங்கி நிற்கும் நான்கு தூண்கள், "பாகுபலி" பிரபாஸ், "சிவகாமி" ரம்யா கிருஷ்ணன், "கட்டப்பா" சத்தியராஜ் மற்றும் "தேவசேனா" அனுஷ்கா தான்.  பாகுபலி 2ன் கதையும் எந்த வித தொய்வுமில்லாமல் விறுவிறு என்று நகர்கிறது, அதை விட முக்கியமாக வழமையான தமிழ் படங்களில் இருக்கும் சினிமாத்தனமான லொஜிக் பிழைகள் பாகுபலியில் குறைவு என்றே சொல்லலாம்.

பல்வாள் தேவனின் மகன் கொலை செய்யப்படுவதை பாகுபலி 1ல் காட்டிய ராஜமெளலி, பாகுபலி 2லும் பல்வாள் தேவனின் மனைவியை காட்டாது விட்டதை  முட்டையில் நொட்டை பிடுங்க முயல்பவர்கள் தூக்கி பிடிக்க, அருமை நண்பர் ஒருவர் "மச்சான், அனுஷ்கா சில ஸீன்களில் குண்டாகவும் சிலதில் அளவாகவும் இருந்ததில் மட்டும் தான்டா லொஜிக் உதைக்குது" என்று தனது மனக் கவலையை பதிவு செய்தார்.

பாகுபலியின் கதையை விட பலமடங்கு சுவாரசியமும் விறுவிறுப்பும் கொண்ட கல்கியின் பொன்னியின் செல்வன் கதை, நமது வாழ்நாளில் திரைக்காவியமாகுமா என்ற ஏக்கம், பாகுபலியை பார்த்து விட்டு வரும் போது எழுகிறது. 

பொன்னியின் செல்வனை இயக்க சிறந்த இயக்குனர், ராஜமெளலியா மணிரத்தினமா இல்லை ஷங்கரா என்ற விவாதம் ஒரு புறம் நடக்க, அருள்மொழி தேவனாக நடிக்க பிரபாஸும் நந்தினியாக அரிதாரம் பூச அனுஷ்காவும் சிறந்த தேர்வுகளாக அமைவார்கள்.


பாகுபலி, முடிவும் ஆரம்பமும்...
பிரமாண்டமான கற்பனையின்
பிரமாதமான அழகியல் படைப்பு
1 comment: