Friday, 26 May 2017

பரி யோவான் பொழுதுகள்: 1986ல் ஒரு நாள்

 


1985ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் திகதி,  பரி யோவானின் புகழ் பூத்த அதிபர் ஆனந்தராஜா படுகொலை செய்யப்ட்ட பின்னர், அதிபராக குணசீலன் பதிவேற்றிருந்தார். ஆனந்தராஜா மாஸ்டரின் படுகொலை கல்லூரி சமூகத்தையே உலுப்பி விட்டிருந்தது. மாணவர்கள் முதற்கொண்டு ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என்று அனைவரும் ஆனந்தராஜா மாஸ்டரின் இழப்பை எண்ணிப் பரிதவித்த காலம்.


அதற்கடுத்த 1986ம் ஆண்டில் நாங்கள் Grade 7C வகுப்பில் இருந்தோம். Grade 7Cயில் எங்களிற்கு வகுப்பாசிரியர், மறைந்த டோனி கணேஷன் மாஸ்டர். டோனி கணேஷன் மாஸ்டர், 1983ற்கு முன்னர் பண்டாரவளை St Thomas கல்லூரியில் படிப்பித்தவர், ஜூலை 83 கலவரத்திற்குப் பின்னர் பரி யோவானில் காலடி எடுத்து வைத்தவர், யாழ்ப்பாண கல்லூரியின் பழைய மாணவன். டோனி மாஸ்டர் பம்பலாக வகுப்பு நடாத்துவார், அடிக்கும் குறைவிருக்காது. ஆள் நல்ல வாட்டசாட்டமாக இருப்பார், ஸ்டைலாக நடப்பார், ஒழுக்கத்தை மீறி குரங்குச் சேட்டை விட்டால், அடி பின்னி எடுப்பார். எங்கள் வகுப்பில் நிறைய பம்பல்காரன்கள் இருந்தார்கள், எல்லா வகுப்பைப் போல சில படிக்கிற பெடியன்களும் இருந்தார்கள்

எங்களுடைய 7C வகுப்பு அருளானந்தம் block கீழ் மாடியில், ராஜசிங்கம் block மூலையில், மேல்மாடிப் படிகளிற்கு அண்மையில் இருந்தது. சரியாக பழைய பூங்கா வீதியும் பிரதான வீதியும் சந்திக்கும் மூலையில் தான் இந்த வகுப்பறை இருந்தது. வகுப்பறையின் பிரதான வீதிப் பக்கச் சுவரில், சீமெந்தால் நிர்மாணிக்கப்பட்ட cupboard இருக்கும், அதற்கு ஓரு ஆமைப் பூட்டும் இருக்கும்.  

 


வகுப்பறையிலிருந்து கூப்பிடு தொலைவில் தற்பொழுது பழைய மாணவர்களின் நிதிப்பங்களிப்பில், மெல்பேர்ண் மற்றும் யாழ்ப்பாண பழைய மாணவர் சங்கங்கள் இணைந்து, மீள நிர்மாணிக்கும் basketball court இருக்கிறது. . 

 

8வது வருடமாக பள்ளியில் படித்துக் கொண்டிருந்தும் ஒரு வருடம் கூட monitorஆக இருந்ததில்லை. ஒரு பாடம் முடிந்து அடுத்த பாடத்திற்கு வாத்தி வர முதல், பக்கத்திலிருந்த அல்லது பின்னாலிருந்த அல்லது முன்னாலிருந்த  நண்பனுடன், ஏதோவொரு முக்கிய விஷயமாக குசுகுசுத்ததை பார்த்து கரும்பலகையில்  பெயரை எழுதி, வாத்திமாரிடம் அடிவாங்கித் தந்த monitorமார் மேல் எப்பவும் ஒரு தணியாத கடுப்பு இருந்து கொண்டே இருந்தது. 


டோனி மாஸ்டர் எப்பவும் வித்தியாசமாக யோசித்து விபரீதமான முடிவுகளை எடுத்து விவேகமாக செயற்படுவார். Grade 7Cயில் இரண்டாவது தவணையில் என்னை Assistant Monitor ஆக நியமித்து விட்டார். Assistant Monitor என்றால் அல்லக்கை வேலை, காலையில் officeற்கு போய் register எடுத்து வர வேண்டும், cupboardல் chalk இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும், வாத்திமார் வராவிட்டால் Middle school supervisorஆக இருந்த தனபாலன் மாஸ்டரிடம் சொல்லி actingற்கு இன்னொரு வாத்தியை கூட்டி வரவேண்டும் என்று பியோன் உத்தியோகம் தான். 


Monitor பள்ளிக்கூடத்திற்கு வராத நாள் தான், அதிகாரம் assistant monitorன் கைக்கு வரும் திருநாள். அந்த நாளில் கையில் chalk துண்டு எடுத்து, கொட்டை எழுத்தில் கரும்பலகையில் யார் யாரின் பெயர் எழுத வேண்டுமோ அதையெல்லாம் எழுதி பழிக்கு பழி வாங்கலாம் என்ற கனவு கண்டு கொண்டிருந்த  நாட்கள். 


அந்த நாள் விரைவில் வரவேண்டும், இவங்களிற்கு விளையாட்டு காட்ட வேண்டும் என்று ஜெபிக்காத நாளில்லை. "கர்த்தரே இன்றைக்கு எங்கட monitor நந்தகுமாரிற்கு காய்ச்சல் வரவேண்டும்" என்று காலம்பற எழும்பி ஜெபித்து விட்டுப் பள்ளிக்கூடத்திற்குப் போக, நந்தகுமாரோ (நந்தீஸ் அல்ல) வெள்ளனவே வந்து வகுப்பு வாசலில் விலாசமாக நிற்பான். 

ஒரு நாள் மத்தியானம் இடைவேளை முடிந்து பெடியள் திரும்ப வகுப்பிற்கு வரும்போது தான் அந்த அசம்பாவிதம் நடந்தது. ஏதோ ஒரு சாமானை எடுக்க cupboardஐ திறந்து, அதை எடுத்து விட்டு திரும்பிய monitor நந்தகுமாரின் கன்னத்தை எங்கிருந்தோ வந்த chalk துண்டு ஒன்று பதம் பார்த்தது. இடைவேளை முடிந்து பெடியள் அள்ளுபட்டு வந்ததால், யார் எறிந்தது என்று நந்தகுமாரிற்கு அடையாளம் தெரியவில்லை. 

நந்தகுமார் உண்மையிலேயே கலங்கிப் போனான். அடுத்து வந்த பாடங்களில் முறுக்கிக் கொண்டு தான் நின்றான், யாரும் எதுவும் பெரிதாக கதைக்கவில்லை. அந்த நாளின் கடைசிப் பாடம் டோனி கணேஷன் மாஸ்டரின் சமூகக்கல்வி பாடத்தில், கட்டாயம் நந்தகுமார் போட்டு கொடுப்பான் என்று எதிர்பார்த்திருந்தோம்.

எதிர்பார்த்த மாதிரியே டோனி மாஸ்டர் வந்து "good evening" சொல்லி முடிய, நந்தகுமார் எழுந்து "சேர், எனக்கு யாரோ chalkஆல எறிஞ்சு போட்டாங்கள்" என்று அழுவாரைப் போல கன்னத்தை தடவிக் கொண்டே, தனது முறைப்பாட்டை பதிவு செய்தான். கடைசிப் பாடம், வெளியில் வெய்யில் வேற கொளுத்துது, டோனி மாஸ்டர் திறந்திருந்த சமூகக்கல்வி புத்தகத்தை மூடி வைத்து விட்டு எழும்பி விட்டார். இன்றைக்கு பாடம் நடக்காது என்று நினைத்து நாங்களும் புத்தகத்தை தள்ளி வைத்தோம்.

"எதில வச்சு உனக்கு அடி விழுந்தது" டோனி மாஸ்டரின் விசாரணை தொடங்கியது. "இதில நிற்கேக்க தான் சேர் வந்து பட்டது" நந்தகுமார், cupboard அடிக்கே போய் விட்டான். இன்றைக்கு பாடம் நடக்காது, நல்லா படம் பார்க்கலாம் என்று நாங்களும் உற்சாகமானோம்.

 

சம்பவம் நடந்த இடத்திற்குப் போய் நின்று, டோனி மாஸ்டர் ஒருக்கா சுற்றிப் பார்த்தார். "உனக்கு யாராவது எதிரிகள் இருக்காங்களா" டோனி மாஸ்டரின் முதலாவது கேள்வியை, நந்தகுமார் எதிர்பார்க்கவில்லை. "அப்படி யாரும் இல்லை சேர்", காட்டி கொடுத்தால் வரும் வினைக்கு பயந்து அவன் பின்வாங்கினான். 

கொடுப்பிற்குள் நமட்டுச் சிரிப்பு ஒன்றை உதிர்த்து விட்டு, டோனி மாஸ்டர் வகுப்பின் முன்பகுதிக்கு வந்தார். "முருகேந்திரன், சிவக்குமரன், யசீந்திரா, ரொஷான்..." என்று வகுப்பில் வழமையாக குழுப்படி செய்யும் நாலைஞ்சு பேரை முன்னால் வருமாறு அழைத்தார். "ஐயோ சேர் அடியாதீங்கோ சேர்.. அம்மாவாண சேர்.. நானில்லை சேர்" வாங்கிலிருந்து எழும்பினவுடனேயே முருக்கர் அலற தொடங்கினான். 

சந்தேக நபர்களை ஒவ்வொருவராக டோனி மாஸ்டர் விசாரணை நடாத்தினார். 

"Interval நேரம் என்ன செய்தனீ"

"எப்ப வகுப்பிற்குள் வந்தனீ"

"மொனிட்டரோடு ஏதாவது பிரச்சினை இருக்கா"

"உனக்கு யாரிலாவது சந்தேகம் இருக்கா" 

என்று துருவி துருவி விசாரித்தார். அவங்கள் யாரும் அசையவில்லை, யாரையும் காட்டியும் கொடுக்கவில்லை. கடைசியாக நந்தகுமாரை பார்த்து கேட்டார்.

"உனக்கு assistant monitorஓட ஏதாவது பிரச்சினை வந்ததா" அவன் லேசா யோசிக்க,   அதே கேள்விக் கணைகளால் என்னையும் துளைத்தெடுத்தார். 

டோனி மாஸ்டரின் புலனாய்வு நடவடிக்கை அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. நந்தகுமாரை அடிவிழுந்த இடத்தில் நிற்கச் சொல்லி விட்டு, 
வகுப்பறையில் சந்தேகத்திற்கிடமான பெடியள் இருந்த வாங்குகளிலிருந்து டோனி மாஸ்டர் 
நந்தகுமாரை நோக்கி chalk எறிய தொடங்கினார். 

"இந்தப் பக்கம் இருந்து வந்ததா", 
"இந்தளவு speedஆக வந்ததா"
"இந்த angleலிருந்து வந்ததா"

என்று டோனி மாஸ்டர் எறிய எறிய, ஒரு முறை வாங்கிய எறிக்கு, முறையிட்ட குற்றத்திற்காக 
நந்தகுமார் பலமுறை எறி வாங்கிக் கொண்டிருந்தான்.  டோனி மாஸ்டர் எவ்வளவு முயன்றும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. டோனி மாஸ்டர் இறுதியாக ஒரு எச்சரிக்கையை விட்டார்

"எறிஞ்சவன் ஒத்துக்கொண்டால் அவரிற்கு ரெண்டு அடி விழும், வேறயாராவது காட்டிக் கொடுத்தால், நாலடி" அதற்கும் வகுப்பில் எந்த அசைவும் இல்லை. டோனி மாஸ்டர் முகவாயை தடவிக் கொண்டு யோசித்தார், கரும்பலகைக்கு முன்னால் அங்கும் இங்கும் நடந்தார்.

"ஓகே, நந்தகுமார் போய் தனபாலன் மாஸ்டர் officeல் பிரம்பை எடுத்துக் கொண்டு வா" அவர் சொல்லி முடியவில்லை, நந்தகுமார் வகுப்பறை வாசல் தாண்டினான். "இன்றைக்கு முழு classற்கும் அடி விழப் போகுது" டோனி மாஸ்டர் தனது முடிவை அறிவித்தார்.

 

"சேர் இது அநியாயம்" என்று நல்லவன்கள் கொடுத்த குரல், இன்றைக்கு அந்த நல்லவன்களிற்கும் படிக்கிற பெடியளிற்கும் அடி விழப்போகுது என்ற சந்தோஷத்தில் நாங்கள் சிரித்த சிரிப்பில் காணாமல் போனது. அதில ஒரு படிக்கிற பெடியன் மேசையில் முகம் புதைத்து அழத் தொடங்கியே விட்டான், அவனுக்கு மானப்பிரச்சினையாம். 

நந்தகுமார் பிரம்பை கொண்டு வந்து, ஒரு புன்முறுவலுடன், "இந்தாங்கோ சேர்" என்று கொடுக்க, "ஓகே... good..நீர் போய் முதலில் நில்லும்" என்று நந்தகுமாரிற்கு அடிக்கு முதல் ஓரு இடியை தூக்கிப் போட்டார். "சேர் நான்.. நான்" அவன் அதிர்ந்து போய் இழுக்க "நீரும் இந்த வகுப்பு தான் ஐசே, நீரும் அடி வாங்க தான் வேணும்" என்று team mentality எனும் பரி யோவான் விழுமியத்திற்கு  டோனி கணேஷன் மாஸ்டர் அந்த ரணகளத்திலும் செயல்வடிவம் கொடுத்தார்.

நந்தகுமாரைத் தொடர்ந்து வரிசையாக எல்லோரும் கரும்பலகையடியில் வந்து அடி வாங்கினோம். என்றுமே அடிவாங்காத பெடியள் கண்ணில் நீர் மல்க அடி வாங்க, வழமையாக அடிவாங்கும் கோஷ்டி, அன்று தான் சந்தோஷமாக அடி வாங்கியது. 

பாடசாலை நாட்களின் நினைவுகளை மீட்டுப் பார்ப்பதே ஒரு இனிமையான அனுபவம். வாழ்வின் சுமைகள் எங்கோ பறந்து போக நாங்கள் மீண்டும் சிறுவர்களாக அவதாரம் எடுக்கும் கணங்கள் அவை. அழகிய அந்தப் பள்ளி நாட்களை மீண்டும் வாழ வழி வகுப்பவை reunionகளும் gettogetherகளும் தான். 

எங்கள் SJC92வும் 2013ல் KL மாநகரில் எங்கள் எல்லோரது 40வது பிறந்த நாளை கொண்டாடவும், 2016ல் எங்கள் வகுப்பு நண்பன் சுரேன்குமார் big matchல் century அடித்த 25வது ஆண்டை கொண்டாடவும் என இருமுறை ஒன்று கூடி மகிழ்ந்தோம்.

இரு முறை ஒன்றுகூடியும், பலமுறை WhatsAppலும் Facebookலும் கதைத்தும், அன்று monitor நந்தகுமாரிற்கு chalk எறிந்த வீரவேங்கை யாரென்று இன்று வரை தெரியவில்லை. 31 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த மர்மம் எப்போது விலகும்? 

 


Friday, 19 May 2017

ஒரு கோப்பை கோப்பி

 

சில ஆண்டுகளிற்கு முன்னர், ஒரு நாளிரவு எங்கள் வீட்டிற்கு TVயில் cricket match பார்க்க நண்பர்கள் சிலர் வந்திருந்தார்கள். இடைவேளையின் போது எல்லோருக்கும் தேத்தண்ணி போட வெளிக்கிட, எப்பவுமே வித்தியாசமாக எதையாவது செய்யும் நண்பன் ரூபி மட்டும் கோப்பி கேட்டான். சுடுதண்ணி கொதிக்கத் தொடங்க,

"மச்சான் ரூபி, எத்தனை கரண்டிடா" என்று கேட்டேன்.

"மூன்று மச்சான்" என்று ரூபியிடமிருந்து பதில் வந்தது. ஆள் பார்க்க சாதுவா இருந்தாலும் வீரியமுள்ளவன் தான் என்று நினைத்துக் கொண்டே கோப்பியை கலக்கி பரிமாறினேன்.

கோப்பி கோப்பையை வாங்கி வாயில் வைத்து விட்டு, முகத்தை சுளித்துக் கொண்டே ரூபி கேட்டான்

"டேய் எவ்வளவு கோப்பித் தூள் போட்டனீ"

"நீதானேடா மூன்டு கரண்டி போடச் சொன்னனீ" 

"அடப்பாவி நான் சொன்னது சீனிக்கு, கோப்பிக்கு யாராவது மூன்டு கரண்டி கோப்பித்தூள் போடுவாங்களா" ரூபி கோப்பியை வெளியில் ஊத்தி விட்டு, தனக்குத் தானே கோப்பி தயாரிக்க தயாரானான்.

அந்த துன்பியல் சம்பவத்திற்கு பின்னர், நண்பர்கள் யாரும் என்னை தேத்தண்ணியோ கோப்பியோ தயாரிக்க கேட்பதில்லை.

ஒஸ்ரேலிய வேலைத்தள கலாச்சாரத்தில் (working culture) கோப்பிக்கு ஒரு பிரதான வகிபாகம் உண்டு. ஒரு கோப்பை கோப்பி குடித்துக் கொண்டே பல முக்கிய முடிவுகள் எடுத்து முடிக்கப்பட்டு விடும். காலையில் வேலைக்கு போனதும் ஒரு கோப்பி குடித்தால் தான் மண்டை வேலை செய்யத் தொடங்கும் (brain will start working) என்று சொல்லுமளவிற்கு இந்த ஒஸ்ரேலிய கோப்பி கலாச்சாரம் வேலைத்தளங்களில் வியாபித்திருக்கும். 

 

அழகிய மெல்பேர்ண் மாநகரம், பல விடயங்களிற்கு பிரசித்தமானது. உலகின் most livable city என்ற பெருமையை தொடர்ந்து பல வருடங்கள் தனாதாக்கியிருக்கும் மெல்பேர்ண் மாநகரம், உலகின் மிகச்சிறந்த கோப்பிக் கடைகளிற்கும் (cafe) பெயர் போனது. Melbourne is worlds coffee capital என்று மெல்பேர்ண் வானொலிகள் தற்பெருமை அடித்துக் கொள்வது வாராந்த நிகழ்வு.


"Let's have a coffee, mate" என்று Boss வந்து கூப்பிட்டா, ஏதோ சங்கதி இருக்கு என்று அர்த்தமாகும். அலுவலகத்திற்கு பக்கத்தில் இருக்கும் கோப்பிக்கடையில், லண்டனிலிருந்து வந்த அழகிய வெள்ளைக்கார சிங்காரி சிரித்துக்கொண்டே கோப்பியை போட, என்னுடைய தலையில் இன்னுமொரு வேலைச்சுமை ஏற்றப்பட்டிருக்கும். கோப்பி போட்ட சுந்தரி வந்து "enjoy your coffee" என்று கோப்பி கோப்பையை மேசைக்கும் நோகாமால் தன்னுடையை கைக்கும் வலிக்காமல் வைத்து விட்டு நகர, "so when do you think we can complete this analysis" என்று கோப்பியில் சீனியை கலக்கிக் கொண்டே Boss கேட்பார். 

காலை வேளைகளில் McDonaldsன் drive thoughகளில் சுடச்சுட take away கோப்பி வாங்க பத்து பதினைந்து வாகனங்கள் வரிசையில் நிற்கும். McDonalds, Starbucks, Hudsons, Gloria Jeans என்ற பெரிய பெரிய கோப்பிக் கடைகளை விட, குட்டி குட்டி கோப்பி கடைகளில் தான் திறமான கோப்பி கிடைக்கும்.  கப்பிலும் கிளாஸிலும் ஊற்றி குடித்தால் தான் கோப்பி கோப்பியாக இருக்கும். காகிதத்திலான கோப்பி கோப்பைகள் கோப்பியின் வீரியத்தை குறைப்பதற்காக தெரிகிறது, 

அரசாங்கம் ஏதாவது வரிச்சலுகை வழங்கினாலும் அல்லது வரியை கூட்டினாலும் அதை அளவிட பயன்படுவதும் கோப்பி கணக்கு தான். "You can't even buy a cup of coffee with this tax cut" என்று எதிர்கட்சி அரசாங்கத்தை நக்கலடிக்கும். 

கோப்பியில் பல வகைகள் இருந்தாலும், latte, cappuccino மற்றும் flat white தான் பிரபலமானவை. கோப்பியில் கலக்கும் பாலின் அளவையும் வகையையும் பொறுத்து கோப்பி, flat white ஆகவும், latte ஆகவும், cappacuino ஆகவும் அவதாரம் எடுக்கும். 


கோப்பி கடைகளில் கோப்பி போடுபம் Baristaகளை பயிற்றுவிக்க பயிற்சி நெறிகள் நடக்கும். ஒரு நல்ல barista கோப்பி போடும் விதமே ஒரு தனியழகு தான். வழமையான வாடிக்கையாளரை வாசலில் கண்டவுடன், கண்சிமிட்டி விட்டு, வாடிக்கையாளன் வழமையாக குடிக்கும் latteஐயோ  cappuccinoவையோ போடத் தொடங்குவான்/ள் இந்த நல்ல Barrista. 

கோப்பிக்கு கலக்க, ஒரு கிண்ணத்தில் பாலை விட்டு ஒரு அலுமினிய குழாயக்குள்ளால் வரும் நீராவியைக் கொண்டு பாலை ஐதாக்கி சூடேற்றுவது frothing. இந்த frothing செய்முறையின் இறுதியில், கிண்ணத்தில் அடியில் பால் சூடாகவும் இடையில் சின்ன சின்ன குழுமிகளுடன் இதமாகவும் மேல் தளத்தில் பாலாடையாகவும், பால் மாறிவிடும். Frothing செய்யும் போது பால்கிண்ணத்தை லாவகமாக பிடித்து, அலுமினிய குழாய் பாலின் மேல்தளத்தில் பிடித்து இதமா பதமா பாலை காய்ச்ச வேண்டும், அதுவே ஒரு தனிக்கலை.

கிண்ணத்தின் அடியிலிருக்கும் சூடான திரவிய பாலோடு பிழிந்த கோப்பி (espresso) சேர்த்து பிறகு அதற்கு மேல் பாலாடையை தடவினால் அது latte. பாலாடையை மட்டும் கலந்து கோப்பி கலக்கினால் அது  cappuccino, கிண்ணத்தின் நடுவிலிருக்கும் ஐதான பாலை கலந்து கோப்பி தயாரித்தால், அது flat white.  கோப்பி கோப்பையின் மேல் தளத்தில் மிதக்கும்  பாலாடையில் pattern போட்டு கலக்கும் பிஸ்தா baristaகளும் இருக்கீனம். 


சென்னைக்கு போனால் சரவணபவனில் filter coffee குடிக்காமல் வருவதில்லை. இந்த filter கோப்பி தென்னிந்திய கலாச்சாரத்துடன் கலந்த ஒரு சமாச்சாரம். பாரம்பரியமாக கோப்பி தயாரிக்கும் முறையை ஒரு கலையாகவே தென்னிந்தியர்கள் கொண்டாடுவார்கள். Filter கோப்பியைப் போல் கும்பகோண degree கோப்பியும் சென்னையில் பிரபலமானது. 

16ம் நூற்றாண்டில் ஹஜ் யாத்திரைக்கு சென்ற புடான் பாபா என்ற சாமியார் அரேபியாவில் குடித்த கோப்பியில் மயங்கி, களவாக கொண்டு வந்த ஏழு கோப்பி கொட்டைகள் தான் தென்னிந்தியாவில் கோப்பி பயிர்ச்செய்கையிற்கு வித்திட்டதாக வரலாற்றில் பதிவாகியுள்ளது. இலங்கையிலும் டச்சுக்காரர்களால் கோப்பிப் பயிர் பதினேழாம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. 


யாழ்ப்பாணத்தில் எங்களுக்கு முந்தைய
தலைமுறையில் அநேகமானோர் காலையில் தேத்தண்ணியை விட கோப்பியையே அதிகமாக குடித்தவர்களாக இருந்தார்கள். அதுவும் அள்ளு கொள்ளையாக சீனியை கலக்கி, கோப்பியின் சுவையை முறியடித்து, சுடச்சுட பித்தளை பேணிகளில் கோப்பி குடிப்பார்கள். பச்சை முட்டையை கோப்பையில் கலக்கி முட்டைக் கோப்பியும் குடிப்பார்கள். யாழ்ப்பாணத்திலேயே தயாரிக்கப்படும் அண்ணா கோப்பியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். 

 

நித்திரை வராமல் செயற்கையாக உற்சாகத்தை வரவழைத்து வேலை செய்வதற்கு ஒரு கோப்பை கோப்பி உறுதுணையாக இருக்கும். கோப்பி குடிப்பது ஒரு வகை வாழ்வியல் வழக்கமாகிப் போன ஒரு நாட்டில் வாழ்ந்தாலும் தேத்தண்ணியை,  அதுவும் பிரியமானவளின் கையால் தயாரிக்கும் தேத்தண்ணியை எந்த கொம்பன் barista தயாரிக்கும் கோப்பியும் அடிக்கவே முடியாது.
Friday, 12 May 2017

கடவுள் நித்திரையிலிருந்தார்...


 


மே 2009
கடவுள் நித்திரையிலிருந்தார்

முள்ளிவாய்க்கால் மண்ணில்
இலங்கை அரசின் அசுரப் படைகள்
நாலாபுறமும் சுற்றி வளைத்து
தமிழ் மக்களையும் போராளிகளையும்
இனப்படுகொலை செய்ய  தயாரான போது,
கடவுள் நித்திரையிலிருந்தார்

தனியொரு தீவில் தனித்துவிடப்பட்ட
ஒரு சிறுபான்மையினத்தை
பேரினவாதம் கக்கும் பெரும்பான்மையினம்
அழித்தொழிக்க முன்னேறிய போதும்,
கடவுள் நித்திரையிலிருந்தார்

தடைசெய்யப்பட்ட குண்டுகளையும்
கனரக ஆயுதங்களையும் கண்டபடி பாவித்து
இலங்கை இராணுவம் அராஜகம் புரிவதை அறிந்தும்
ஐநா சபையே மெளனம் காத்த போதும்,
கடவுள் நித்திரையிலிருந்தார்

குழந்தைகளும் பெண்களும் முதியவர்களும்
அங்கவீனர்களும் நோயாளிகளும் 
கேட்பாரற்று ஒவ்வொரு நிமிடமும்
அவதிப்பட்டு செத்துக் கொண்டிருந்தத போதும்,
கடவுள் நித்திரையிலிருந்தார்

ஆஸ்பத்திரிகள் மீது குறிவைத்து தாக்கி
சர்வதேச நியமங்களை
சிங்கள அரசு மீறிய போதும்
ஆஸ்பத்திரி எங்கும்
பிணங்கள் நிறைந்திருந்த போதும்,
கடவுள் நித்திரையிலிருந்தார்

மனிதப் பேரவலமொன்று
கண்முன்னே அரங்கேறுவதை அறிந்தும்
அமெரிக்காவும் இந்தியாவும் ஐரோப்பாவும்
பாராமுகம் காட்டிய போதும்,
கடவுள் நித்திரையிலிருந்தார்

பட்டினியால் வாடிய மனிதர்களை
எறிகணைகளால் காயமாக்கி
காயம் ஆற்றும் மருந்துகளையும் தடைசெய்த
கொடும் செயல் நடந்த போதும்,
கடவுள் நித்திரையிலிருந்தார்

மரீனா கடற்கரையில்
மனைவியும் துணைவியும் சாமரம் வீச
காலையுணவிற்கும் மத்தியான
சாப்பாட்டிற்குமிடையில் கருணாநிதி
உண்ணாவிரத நாடகமாடிய போதும்,
கடவுள் நித்திரையிலிருந்தார்

கவசனவாகனங்கள் முன்னேறி வந்து
பதுங்கு குழிகளை சனத்தோடு சேர்த்து
மிதித்து சென்ற போதும்
வெள்ளைக் கொடியோடு சரணடைந்த போராளிகள்
இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட போதும்,
கடவுள் நித்திரையிலிருந்தார்

தமிழின பெண்களின் துயிலுரியப்பட்டு
சிங்கள இனவெறி இராணுவத்தால் சின்னாபின்னமாக்கப்பட்டு
இறந்த பின்னும், பாவிகளின் கமாரக்கள்
அவர்களின் வெற்றுடல்களை படம்பிடித்த போதும், 
கடவுள் நித்திரையிலிருந்தார்

அகிலமெங்கும் கோயில்களிலும் தேவாலயங்களிலும்
தமிழர்கள் ஒன்றிணைந்து
உயிரொழுக தேவாரம் பாடியும்
கண்ணீர் மல்க ஜெபித்தும்
இறைவனை இறைஞ்சிய போதும்,
கடவுள் நித்திரையிலிருந்தார்

முருகா என்றும் கர்த்தரே என்றும்
அம்மாளாச்சி என்றும் ஆண்டவரே என்றும்
கத்தி கத்தியே செத்த சனங்களின்
குரல்கள் காதில் கேட்காமல்,
கடவுள் நித்திரையிலிருந்தார்

அன்று தான் கடவுள் நித்திரையிலிருந்தார்
இன்றுமா நித்திரை? 
இன்னுமா விழிக்கவில்லை?

Friday, 5 May 2017

மீண்டும் பாகுபலி

 

அழகிய கற்பனையும், கற்பனையை காட்சிப்படுத்திய அழகியலும், அழகியலை மிளரவைத்த பிரமாண்டமும் தான் பாகுபலி 2. பாகுபலி 1 விட்டுச் சென்ற "பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்" என்பதற்கான விடையை, அறிவுபூர்வமாக, சினிமாத்தனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, அறிவித்த திரைக்காவியமாக பாகுபலி 2 வெளிவந்திருக்கிறது.


ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் ஆறு மணிக்கு பாகுபலி 2 படம் பார்க்க மெல்பேர்ணின் Knox Village சினிமா தியேட்டரிற்கு போனால், எங்கும் வணக்கம் சொல்லும் தமிழர்களும் நமஸ்காரம் சொல்லும் தெலுங்கர்களும் தான் நிறைந்திருந்தார்கள். வெள்ளைக்காரன்களும் சைனாக்காரன்களும் அன்றைக்கு சினிமாவை பகீஷ்கரித்திருந்தார்கள். நீண்ட வரிசையில் பலர் நிற்க, வழமை போல் சிலர், வரிசையை உடைத்துக் கொண்டு முன்னேறி தங்கள் "கெட்டித்தனத்தை" காட்டினார்கள்.

 

பாகுபலி தமிழ் திரையிடப்பட்ட 11வது அரங்கினில் ஆசனங்கள் நிறைந்து வழிய, இருட்டில் ஆசனம் தேடி அமர, இன்னுமொரு இருபது நிமிடங்களிற்கு திரையில் விளம்பரங்கள் ஓடிக் கொண்டிருந்தன. $29க்கு டிக்கெட் விற்றும் மண்டபம் நிறைய
மக்கள் நிறைந்திருந்து Village Cinemaவின் share priceற்கு முட்டு கொடுத்துக் கொண்டிருந்ததார்கள். 

எந்த திரைக்காவியத்திலும் இன்னுமொரு திரைப்படத்தின் பாதிப்பைக் காணலாம், சில வேளைகளில் ஈயடிச்சான் கொப்பி மாதிரி, வேற்று மொழிப் படங்களிலிருந்து கதைகளையும் காட்சிகளையும் அப்படியே உருவி, தமிழ்ப் படங்களாக உருமாற்றிருப்பதையும் சகித்துக்கொண்டு அனுபவித்திருக்கிறோம். 


பாகுபலி, அவ்வாறான ஒரு படம் அல்ல. ஆனாலும் பாகுபலியில் வரும் கதாபாத்திரங்களும் சில காட்சிகளும் வேதாகமத்திலும் புராணங்களிலும் வந்த பாத்திரங்களையும் சம்பவங்களையும் ஏதோ வகையில் நினைவூட்டின. அனைத்தும் அடங்கியிருந்தபடியால் தானே அவை புராணங்கள், அவற்றை மீறி யாராலும் திரைப்படம் எடுக்க முடியாது. 


வேதாகமத்தின் பிரகாரம் ஆதாம் ஏவாளிற்கு பிறந்த முதல் குழந்தை காயேன், இரண்டாவது பிள்ளை ஆபேல். காயேன் என்றால் பெற்றெடுத்தது என்றும் ஆபேல் என்றால் வீணானது என்றும் அர்த்தமாம். காயேன் விவசாயத்திலும் ஆபேல் மந்தை வளர்ப்பிலும் ஈடுபட்டான். 

ஆண்டவரிற்கு பலிகொடுப்பதில்  இருவரும் போட்டிப் போட, ஆபேலின் பலியை மட்டும் ஆண்டவர் ஏற்றுக் கொள்கிறார். ஆபேலை ஆண்டவர் விரும்பியதால் அவன் மேல் எரிச்சலும் பொறாமையும் கொண்ட காயேன், ஆபேலை கொலை செய்கிறான். பாகுபலி-பல்வாள் எனும் இரு உடன்பிறவாத சகோதரர்களிற்கிடையிலும் ஏற்படும் போட்டியும் பொறாமையும், அதன் விளைவான மரணமும் தான் பாகுபலி கதையின் மூலக்கரு. 

 

பாகுபலி 1ல், குழந்தையான மகேந்திர பாகுபலியை அவரது பாட்டியான சிவகாமி, ஆற்றில் சுழியோடிக் காப்பாற்றும் காட்சியில், மூங்கில் கூடையில் வைத்து ஆற்றில் மிதக்க விடப்பட்ட மகாபாரத கர்ணனும் பைபிளின் மோசேயும் நினைவில் வந்து சென்றார்கள். 


ராஜதுரோக குற்றமிழைத்ததற்காக கோட்டையை விட்டுத் துரத்தப்படும் அமரேந்திர பாகுபலியும் தேவசேனாவும் ராமாயணத்தின் ராமனையும் சீதையையும் ஞாபகப்படுத்தினார்கள். மாறுவேடத்தில் சென்று தேவசேனாவில் காதல் கொண்ட அமரேந்திர பாகுபலியில், திரெளபதியை கவர்ந்த அர்ஜுனனின் நினைவு வந்து போனது. பல்வாள் தேவரின் அப்பாவாக வரும் நாசரின் கதாபாத்திரத்திலும் மகாபாரத சகுனியின் வாடை வீசுகிறது.


பாகுபலி 1ல், ஒரு மரத்தில் பிரபாஸையும் தமன்னாவையும் ஏற்றி இடையில் ஒரு பாம்பை ஊர்ந்து செல்ல வைத்து அழகாக ஒரு காதல் காட்சியை பின்னிய ராஜமெளலி, பாகுபலி 2ல் அனுஷ்காவிற்கும் பிரபாஸிற்கும் காதல் செய்ய அமைத்த களம், வில் சண்டை. அம்புகளை வில்லில் லாவகமாக கோர்த்து, அனுஷ்காவை தன்னோடு அணைத்து பிரபாஸும் அனுஷ்காவும் அம்புவிட்ட காட்சிகள், காதல் அழகியலின் உச்சக்கட்டம். 

பாகுபலி 1ல், அனுஷ்கா என்ற அழகிய அரேபிய குதிரையை ஊத்தை உடுப்பில காட்டி விட்டு தமன்னாவின் முதுகை முழுமையாக காட்டிய ராஜமெளலி, பாகுபலி 2ல் ஏன் அனுஷ்காவை ஏன் அவ்வாறு காட்டவில்லை என்று பின் சீட்டிலிருந்த வம்பர் ஒருத்தர் புறுபுறுத்தது காதில் வந்து விழுந்தது.

கடைசிக் காட்சியில், பிரபாஸ் தனது மேலாடையை கிழித்து எறிந்து விட்டு, தனது வெறும் மார்பில் திருநீறு பூசி களமிறங்கிய கணத்தில், "நல்ல காலம் இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்கேல்ல, இந்த ஸீனில் அவர்ட ஒல்லி உடம்பைத் தான் காட்டியிருப்..." சொல்லுக் கொண்டே போன பக்கத்து சீட் அன்டி, நான் சடாரென திரும்பிப் பார்க்க கதையை நிற்பாட்டினார்.


பாகுபலி 1ல் இருந்த பலவீனங்களான பின்னனி இசையும் வசனங்களின் தரமின்மையும் பாகுபலி 2லும் தொடர்ந்தது வேதனை. இரு மொழிகளில் ஒரே படம் எடுக்கப்படும் போது ஒரு மொழியில் குறைபாடுகள் வருவது எதிர்பார்க்கப்பட வேண்டியதே. ஆனாலும் இவ்வளவு பெரிய மகா பட்ஜெட் படத்திற்கு இசையமைக்க மரகதமணியை விடவும் திறமான இசையமைப்பளரையும் கார்க்கியை விட சிறந்த வசனகர்த்தாவும் ராஜமெளலிக்கு தமிழில் கிடைக்காமல் போனது தமிழ் சினிமா ரசிகர்களின் துரதிர்ஷ்டமேயன்றி வேறொன்றுமில்லை. 

பாகுபலி எனும் பிரமாண்டமான அரண்மனையின் பலமான அத்திவாரம் கதை என்றால், அந்த அழகிய அரண்மனையை தாங்கி நிற்கும் நான்கு தூண்கள், "பாகுபலி" பிரபாஸ், "சிவகாமி" ரம்யா கிருஷ்ணன், "கட்டப்பா" சத்தியராஜ் மற்றும் "தேவசேனா" அனுஷ்கா தான்.  பாகுபலி 2ன் கதையும் எந்த வித தொய்வுமில்லாமல் விறுவிறு என்று நகர்கிறது, அதை விட முக்கியமாக வழமையான தமிழ் படங்களில் இருக்கும் சினிமாத்தனமான லொஜிக் பிழைகள் பாகுபலியில் குறைவு என்றே சொல்லலாம்.

பல்வாள் தேவனின் மகன் கொலை செய்யப்படுவதை பாகுபலி 1ல் காட்டிய ராஜமெளலி, பாகுபலி 2லும் பல்வாள் தேவனின் மனைவியை காட்டாது விட்டதை  முட்டையில் நொட்டை பிடுங்க முயல்பவர்கள் தூக்கி பிடிக்க, அருமை நண்பர் ஒருவர் "மச்சான், அனுஷ்கா சில ஸீன்களில் குண்டாகவும் சிலதில் அளவாகவும் இருந்ததில் மட்டும் தான்டா லொஜிக் உதைக்குது" என்று தனது மனக் கவலையை பதிவு செய்தார்.

பாகுபலியின் கதையை விட பலமடங்கு சுவாரசியமும் விறுவிறுப்பும் கொண்ட கல்கியின் பொன்னியின் செல்வன் கதை, நமது வாழ்நாளில் திரைக்காவியமாகுமா என்ற ஏக்கம், பாகுபலியை பார்த்து விட்டு வரும் போது எழுகிறது. 

பொன்னியின் செல்வனை இயக்க சிறந்த இயக்குனர், ராஜமெளலியா மணிரத்தினமா இல்லை ஷங்கரா என்ற விவாதம் ஒரு புறம் நடக்க, அருள்மொழி தேவனாக நடிக்க பிரபாஸும் நந்தினியாக அரிதாரம் பூச அனுஷ்காவும் சிறந்த தேர்வுகளாக அமைவார்கள்.


பாகுபலி, முடிவும் ஆரம்பமும்...
பிரமாண்டமான கற்பனையின்
பிரமாதமான அழகியல் படைப்பு