Saturday, 8 April 2017

காற்று வெளியிடை...

 
மணிரத்னம் படம் பார்க்க போறது ஒரு வேதனை கலந்த எதிர்பார்ப்பு. மணிரத்தினத்தின் முந்தைய சிறந்த படங்களை பார்த்து மகிழ்ந்ததால் வந்த எதிர்பார்ப்பு, இன்றைய படங்களை பார்க்கும் போது வரும் வேதனையோடு கலக்க, மிஞ்சுவது, ஒரு வெறுமையான உணர்வு மட்டுமே. 

மணிரத்தினத்திற்கு தானொரு intellectual இயக்குனர் என்று நினைப்பு அதிகம். மணிரத்தினம் படம் பார்த்து விட்டு ஆஹோ ஓஹோ என்று சொல்லுபவர்களில் சிலரும் தங்களை intellectual ரசிகர்களாக வெளிக்காட்ட முற்படும் "கார்த்தி ரக" சொதப்பல் நடிகர்கள். மணிரத்தினத்தின் அண்மையில் வெளிவந்த கெளதம் மேனனுடனான முழுநீள இங்கிலீஷ் செவ்வியில்  தானெடுத்த தமிழ் படங்களைப் பற்றி கதைப்பார், அவர் தன்னைத்தானே மற்ற தமிழ் இயக்குனர்களிடமிருந்து பிரித்தும் உயர்த்தியும் காட்ட எடுக்கப்பட்ட முயற்சியாகவும் இது இருக்கலாம்.

எடுக்கிறது தமிழ்ப் படம்
கதைக்கிறது கடும் இங்கிலீஷ்


"காற்று வெளியிடை" என்ற பாரதியாரின் கவித்துவ தலைப்பிற்கு மகுடம் தந்தவர்கள் ரஹ்மானும் வைரமுத்துவும் கார்க்கியும் தான். அழகான பாடல்களை மிக அழகாக படமாக்க மணிரத்தினத்தால் மட்டும் தான் முடியும், இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. இயற்கையின் அழகிலும் செயற்கையான அரங்கங்களின் ஒளியமைப்பிலும், ஒளிப்பதிவாளர் ரவி வர்மனின் அட்டகாசமான ஒளி ஓவியத்திலும் பாடல்கள் அனைத்துமே அட்டகாசம் தான்.

துளி காலம் கேட்டேன் 
துளி காதல் கேட்டேன்     
துளி காமம் கேட்டேன் 
முறு உயிரே……

காற்று வெளியிடை படம் வரமுதலே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாடல், tango இசையிலமைந்த "கேளாயோ கேளாயோ செம்பூவே" பாடல். ரஹ்மானின் இப்போதைய ஆஸ்தான பாடகர் ஹரிசரணும், சூப்பர் சிங்கர் புகழ் திவாகரும் இணைந்து கலக்கிய பாடல், அகலத்திரையில் பார்த்தால் மட்டுமே பரிபூரணமடையும். பாடலின் இறுதியில் வரும் "officerற்கு காது கேட்காதா", "டொக்டருக்கு மனசு மாறாதா" வசனங்களுடனான காட்சி, மணிரத்தினத்தின் பழைய டச் வெளிவந்த கணம்.

 நீ என்னை மறந்தால் காற்று கதறும் 
கடலின்  மேலே ஒட்டகம் நடக்கும்

வைரமுத்து, செம்மொழியாம் தமிழ் மொழியில் புகுந்து விளையாடியிருக்கும் பாடல், "நல்லை அல்லை". Red & Black சேலையில் அதிதி நடந்து வர, பின்னனியில் ரஹ்மானின் இசையோடு வைரமுத்துவின் வரிகள் கை கோர்க்க, காற்று வெளியிடை படத்தில் மெரஸலான ஒரு தருணமென்றால், சத்யபிரகாஷ் பாடிய இந்தப் பாடல் வந்த காட்சிகள் தான். 

நல்லையல்லை நல்லையல்லை
நன்னிலவே நீ நல்லையல்லை     
நல்லையல்லை நல்லையல்லை
நள்ளிரவே நீ நல்லையல்லை


மணிரத்னம் படங்களில் மிளிரும் இன்னொரு சிறப்பம்சம், காதல் காட்சிகள். நடிகர் நடிகையரின் கண்ணசைவுகளிலும் உடல் மொழிகளிலும் வெளிப்படும் காதல் பரவசம், மணிரத்தினத்தின்  ஒரிரு சொற்களிலான வசனங்களில் மெருகேறி, நம்மையும் காதல் கொள்ள வைக்கும். தெய்வீகன் குறிப்பிட்டது போல், அந்த காட்சிகள் அரண பரண, repetition, ஆக இருந்தாலும் மீண்டும் மீண்டும் ரசிக்கலாம்.

வரும்முன் அறிவான்
என்னுள் ஒளிவான் 
அருகே நிமிர்வான் 
தொலைவில் பணிவான்

மணிரத்தினத்தின் காதல் காட்சிகளை மீண்டும் மீண்டும் ரசிக்க வைக்க காரணம், அவர் தேர்வு செய்யும் நடிகர்கள். ரஜினிகாந்த்-ஷோபானா தொட்டு அரவிந்சாமி-மதுபாலா, மாதவன்-ஷாலினி, ஷாருக்-மனிஷா தாண்டி  போன வருடம் வந்த துல்கார்-நித்யா மேனன் வரை அந்த காதல் பரவத்தை, ரசிகர்களையும் உணர வைத்தவர்கள். ஆனால் காற்றிடை வெளியிலே படத்தில், அந்தவிதமான எந்த அசம்பாவிதமும் நடக்காமல் போனதற்கு காரணம், கார்த்தி. 

கர்வம் கொன்றால்
கல்லாய் உறைவான் 

"காற்றிடை வெளியிலே" படத்தின் பலவீனம் கார்த்தி. கார்த்தியை எனக்கு கண்ணிலேயே காட்ட முடியாது. கார்த்தியின் மொக்கை நடிப்பை காண காண வெறுப்பு இமயமலையின் உச்சியில் ஏறும். கார்த்தி எந்தக் காட்சியிலும் மணிரத்தினத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவேயில்லை, அதிலும் ஒரு முக்கிய காட்சியில் கார்த்தி அழ, கிளிசரீன் ஆறாய் ஓட, கார்த்தியின் முகத்தில் சோகத்தின் ரேகைகளை நாங்கள் தேடிக் கொண்டிருந்தோம். 

கண் திறந்தால் 
கணத்தில் கரைவான்

காற்றிடை வெளி படத்தில் அடிக்கடி கேட்ட பொமர் (bomber) இரைச்சலும் குண்டு பொழியும் காட்சிகளும், யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த நாட்களை நினைவில் கொண்டு வந்தன. அதனால் தான் என்னவோ fighter pilot ஆக வந்த கதாநாயகனை ஆரம்பத்திலிருந்தே மனம் வெறுக்கத் தொடங்கியது.


மணிரத்தினம் படத்தில் வழமையாக வரும் ரயில், காற்றிடை வெளியிலில் காணாமல் போக, உருமும் பொமர்கள் பறந்து பறந்து பயமுறுத்தியது. ஒரு காட்சியில் மட்டும் அதிதி ரயில் டிக்கட்டை காட்டி ரயிலேற போக போவதாக வசனம் மட்டும் வரும், ஆனால் ரயில் மட்டும் வராது.


காற்றிடை வெளியில் படத்தில் சிறந்த பாடல், திப்புவோடு ரஹ்மானியாவும் நிக்கிதா காந்தியும் பாடிய, "சரட்டு வண்டியிலே சிரட்டொலியிலே" தான். படம் முடிந்து வரும்போது திரும்ப திரும்ப கேட்க தோன்றிய அழகான பாடல், திரையில் வர்ண ஜாலமாக மிளிர்ந்தது, கொள்ளை அழகு. 

சேலைக்கே சாயம் போகும் மட்டும்     
ஒன்ன நான் வெளுக்க வேணுமடி     
பாடுபட்டு விடியும் பொழுதும்     
வெளியில் சொல்ல பொய்கள் வேணுமடி     

கார்த்தி நடித்த கதாபாத்திரத்தில் ஆர்யா நடித்திருந்தால் படம் நிட்சயமாக சிறப்பாக அமைந்திருக்கும். மணிரத்தினம், ரஹ்மான், வைரமுத்து என்ற ஜாம்பவான்களின் கூட்டணியில் அமைந்த திரைக்காவியத்தை பார்த்து விட்டு, வீட்ட வரும் போது மனிசி சொன்ன இரு வரி, மணிரத்தினம் பாணி விமர்சனம் தான் மண்டைக்குள் இப்போதும் எதிரொலிக்கிறது. "படத்தில எல்லாம்  இருந்தும், ஏதோ ஒன்று இல்லை என்ற ஃபீலிங் தான் வருகுது".

உண்மை தான், கவிதை வாங்க போய் காற்று வாங்கி வந்த கதை தான் "காற்று வெளியிடை"

No comments:

Post a Comment