Friday, 14 April 2017

சரா மாஸ்டரும் அலெக்ஸ் மாஸ்டரும்

 1980களின் நடுப்பகுதியில் ஒரு மத்தியான நேரம், ஏதோ ஒரு அவசர விஷயமாக பரி யோவான் கல்லூரியில் staff meeting நடந்து கொண்டிருக்கிறது. அலெக்ஸ் தம்பிராஜா மாஸ்டர் சீரியஸாக ஆங்கிலத்தில் உரையாற்றிக் கொண்டிருக்க, பலாலி பக்கமிருந்து வந்த இரு சியா மார்செட்டி ரக பொமர்கள்,  பழைய பூங்காவில் அமைந்திருந்த இயக்கத்தின் பயிற்சி முகாமை குறிவைத்து வானில் வட்டமடிக்கின்றன.

இழவு விழுந்த ஆமிக்காரன் குண்டு போடப் போறான் என்ற பயத்தில் பதறியடித்து எழும்பிய ஜீவானந்தம் மாஸ்டர், "Alex, bomber is bombing" என்று குறுக்கிடுகிறார்.

ஜீவானந்தம் மாஸ்டரின் குறுக்கீட்டை சகிக்காத Alex மாஸ்டர் "Jeevanantham, Be silent" என்று ஜீவானந்தம் மாஸ்டரை அமைதி காக்கும்படி கேட்கிறார். ஆங்கில வாத்தியாரான அலெக்ஸ்  மாஸ்டர் தான் ஆங்கிலத்தில் Bomber is Bombing என்று சொன்ன உச்சரிப்பில் B எழுத்தின் ஒலி silentஆக இருக்க வேண்டும் என்று தனது ஆங்கிலத்தை திருத்துகிறார் என்று கருதிய ஜீவானந்தம் மாஸ்டர் சொன்னார் 

"Omber is ombing"

ஜீவானந்தம் மாஸ்டர் பற்றிய பல பரி யோவான் கால பகிடிக் கதைகளில் இதுவும் ஒன்று, இந்தக் கதையில் அலெக்ஸ் மாஸ்டரிற்கும் ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும்.


கடந்த வாரங்களில் யாழ்ப்பாணம் பரி யோவானின் இரு பெருமதிப்பிற்குரிய ஆசான்கள் இவ்வுலகை நீத்தார்கள். ஒருவர் சரா தாமோதரம், மற்றவர் அலெக்ஸ் தம்பிராஜா. ஆளுமை நிறைந்த குணநலன்களிலும், கற்பித்தலில் காட்டிய முழுமையான ஈடுபாட்டிலும், மாணவர் நலனில் செலுத்திய அக்கறையிலும், பரி யோவானின் விழுமியங்களை பேணுவதில் காட்டிய விட்டுகொடாமையிலும், பரி யோவானின் பழைய மாணவன் என்ற மமதையிலும், சரா மாஸ்டரிலும் அலெக்ஸ் மாஸ்டரிலும் நிறைய ஒற்றுமைகளைக் காணலாம்.


ஆறு ஆண்டுகள் துரைச்சாமி மாஸ்டரின் கண்டிப்பும் கடும் கட்டுப்பாடுகளும் நிறைந்த பரி யோவானின் ஆரம்பப் பாடசாலையிலிருந்து, மத்திய பிரிவிற்கு 
வந்தால், பரியோவானில் ஒழுக்கத்தை பேணும் சிறப்பு தளபதி ஜீவானந்தம் மாஸ்டரின் பாசறை காத்திருந்தது. ஆண்டு 7Bயில் அருள்தாசன் மாஸ்டர் தான் வகுப்பாசிரியர், வாழ்வில் முதல் தடவையாக எங்களுக்கு விஞ்ஞானப் பாடம் அறிமுகப்படுத்தப்பட, சயன்ஸ் படிப்பிக்க வந்தவர் தான் சரா மாஸ்டர். 


1980களில் பரி யோவானின் ஆசிரியர் குழாமிலிருந்த கனபேர் வலு திறமான ஆசிரியர்கள், உண்மையான அக்றையுடன் ஆசிரியப் பணியாற்றியவர்கள். ஆசிரியர்களைத் தெரிவு செய்வதிலும் அவர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தி, பரி யோவானை கல்வியிலும் விளையாட்டுத் துறையிலும் முன்னனியில் வைத்திருந்ததில் அன்றைய அதிபர் ஆனந்தராஜாவிற்கு பெரும் பங்குண்டு. இன்றும் நாங்கள் ஆனந்தராஜா மாஸ்டர் அதிபராக இருந்த காலத்தில் படித்தோம் என்று பெருமைப்பட காரணம் இந்த ஆசிரியர்களும் தான். 


அந்த மாஸ்டர் எங்களிற்கு படிப்பிக்க வரமாட்டாரா, இந்த மாஸ்டர் படிப்பிக்க வந்தால் மணியா இருக்கும் என்று எங்களை ஏங்க வைத்த பல வாத்திமார் உலாவித் திரிந்த வளாகமாக, பரி யோவான் கல்லூரி திகழ்ந்து. அவ்வாறு எங்களிற்கு வகுப்பெடுக்காத திறமான ஆசிரியர்களில் ஒருவர், அழகாக ஆங்கிலம் கற்பித்த, அலெக்ஸ் தம்பிராஜா மாஸ்டர். 


சரா மாஸ்டர், ஒரு மெல்லிய சிறிய உருவம். சிறிய முகத்தில் பெரிய கண்ணாடி. சின்ன கண்களில் பொய்யாக வரவழைத்த கடுமை, இளகிய மனம். கையை பின்னால் கட்டிக் கொண்டு வேகமாக நடப்பார், இல்லை..இல்லை, காற்று தள்ளிக் கொண்டு போகும். மாணவர்கள் எல்லோரும் வாழ்வில் நல்லாய் வரவேண்டும் என்ற அக்கறை தொனிக்கும் அறிவுரைகள் அவரின் வகுப்புக்களில் வெளிவரும். ஹொஸ்டல் மாஸ்டராக கூடுதல் பொறுப்பிலும் இருந்ததால், மாணவர்களின் அபிமானம் பெற்ற ஒருவராக திகழ்ந்தார். 

 

அலெக்ஸ் மாஸ்டர் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார். கம்பீரமான உயர்ந்த உருவம், சில காலங்கள் வெள்ளை குறுந்தாடி இருந்ததாக ஞாபகம். அவரது நடை உடை பாவனையில் கண்டிப்பு கலந்திருப்பதால், மாணவர்கள் அவரது வகுப்புக்களில் சேட்டை விடத் தயங்குவார்கள். அதட்டலிற்கு அடங்காத அட்டகாசக்காரன்களிற்கு மட்டுமே அடி விழும், அதுவும் இறுதி முயற்சியாகத் தான். பின்னாட்களில் தேவ அழைப்பை ஏற்று முழுமையாக இறைபணியில் தன்னை இணைத்துக் கொண்டவர்.


ராஜசிங்கம் ப்ளொக்கின் கீழ் மாடியிலிருக்கும் வகுப்புகளில் கொஞ்சம் உயரமாகத் தான் கம்பிகளாலான யன்னல் அமைக்கப்பட்டிருக்கும். விஞ்ஞான பாடம் தொடங்க மணியடித்த சில நிமிடங்களில், அந்த யன்னல்களிற்கு மேலால் இரு விழிகள் தெரியும். சரா மாஸ்டர், நுனிக் காலில் உந்தி நின்று யன்னலுக்குள்ளால் குழப்படி செய்வோரை ஓரிரு நிமிடம் உளவு பார்ப்பார். பின்னர் சடாரென வகுப்பிற்குள் அதிரடியாய் நுழைந்து, குழப்படிக்காரனை பிடித்து நாலு சாத்து சாத்தி விட்டுத் தான் "Good afternoon" சொல்லுவார். சரா மாஸ்டரிடம் அதிகம் அடிவாங்கியது, தாயக கனவோடு களமாடச் சென்று, இறுதி யுத்தத்தில் காணாமல் போன சிவக்குமரன் (சேரலாதன்) தான். 


அலெக்ஸ் மாஸ்டர் கற்பித்த எங்களது batchன் இன்னொரு வகுப்பில், ஆங்கிலப் பாடத்திற்கான ஒப்படை (assignment) நடந்து கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தில் அலெக்ஸ் மாஸ்டரோடு சில நிமிடங்கள் சம்பாஷிக்க வேண்டும், அது தான் ஒப்படை. அலெக்ஸ் மாஸ்டர் "அட்டாக்" சசியை நேர்காணலிற்கு கூப்பிடுகிறார், ஏதோ பம்பலா நடக்கப் போகிறது என்று வகுப்பே உற்சாகமாகிறது.

"So.. what did you do last evening" அலெக்ஸ் மாஸ்டர் கம்பீரமாக கேட்கிறார்.

"Sir.. I played cricket sir" நாவற்குழி இராணுவ முகாமிற்கு சென்ரி பார்க்கப் போனதை மறைத்து, சசி கதையளக்க தொடங்குகிறான்.

"Good.. who is your favourite cricketer ?" அடுத்த கேள்வி அலெக்ஸ் மாஸ்டரிடமிருந்து வருகிறது.

"Sir.. சிறிகாந்த்.. sir...கிருஷ்ணமாச்சாரி சிறிகாந்த்" அறுத்து இறுத்து, இலகுவான கேள்விக்கு பதிலளித்ததில் சசியின் குரலில் ஆனந்த தாண்டவம்..

"Why do you like him" அலெக்ஸ் மாஸ்டரின் கேள்வியில் நக்கல் எட்டிப் பார்க்கிறது.

"Sir.. he hit sixers sir" சசி அடுத்த கேள்விக்கு முன்னேறி விட்டான். சிரிப்பை அடக்கிக் கொண்டு வகுப்பு அடுத்த கேள்வியை எதிர்பார்த்து காத்திருக்கிறது.

"Can you show me how Srikanth hits a six" அலெக்ஸ் மாஸ்டர் சசியை மடக்க கேள்வியை வீசுகிறார்.

ஒரு கணம் யோசித்த சசி, பதிலெதுவும் சொல்லாமல், forward defensive shot ஒன்றை விளாயாடிக் காட்டுகிறான். வகுப்பு ஆ ஊ என்று கத்தி கத்தி சிரிக்கிறது. 

அலெக்ஸ் மாஸ்டரிற்கு விசர் வந்து விட்டது, கதிரையால் எழும்பி விட்டார். "I say.. how can you score a six with a defensive stroke" அலெக்ஸ் மாஸ்டர் இடுப்பில் கை வைத்துக்கொண்டு கேட்ட தொனியில் சிரிப்பலைகள் அடங்க, சசி மட்டும் பின்வாங்க வில்லை. அரைக்கை ஷேர்ட்டின் கைகளை உயர்த்தி தனது வலிய புஜங்களைத் தட்டி விட்டுச் சொன்னான்

"பலம்....சேர்.... பலம்" வகுப்போடு சேர்ந்து அலெக்ஸ் மாஸ்டரும் சிரித்தார். 

 
அலெக்ஸ் மாஸ்டரும் சரா மாஸ்டரும் தமது செயற்பாடுகளை வகுப்பறைகளோடு மட்டும் மட்டுப்படுத்தவில்லை. கல்லூரியின் சங்கங்கள் கழகங்கள் இல்லங்கள் என்பவற்றை நிர்வகிப்பதிலும் தங்களை ஆர்வத்துடன் ஈடுபடுத்திக் கொண்டார்கள். 

சரா மாஸ்டரைப் போலும் அலெக்ஸ் மாஸ்டர் மாதிரியும் பல ஆசான்கள் பரி யோவானில் எங்களை ஆளாக்கினார்கள். ஆளுமை நிறைந்த ஆசிரியர்கள் எங்கள் எதிர்காலத்திற்கு வழிகாட்டியாக திகழ்ந்தார்கள். யாழ்ப்பாணத்தில் நிலவிய கடுமையான போர்ச்சூழலிலும் மெழுகுதிரியாக அவர்கள் எரிந்து எங்களின் வாழ்க்கையை ஒளிமயப்படுத்தினார்கள்.

எங்கள் SJC92 batch 1989 சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாணத்தில் முன்னனியில் திகழ்ந்தமைக்கு அடித்தளம் இட்டவர்கள், பாடசாலையில் முழுமையான ஈடுபாட்டோடு கல்வி கற்பித்த இந்த ஆசிரியர்கள் தான். 1992ம் ஆண்டு நாங்கள் உயர்தர பரீட்சை எழுதிய போது எங்கள் பிரிவிலிருந்து 6 பேருக்கு 4A கிடைத்தது, அதில் இருவர் மட்டுமே பரி யோவானிலிருந்து பரீட்சை எழுதியவர்கள். மீதி நால்வரும் பரி யோவானில் இடப்பட்ட அத்திவாரத்தில் கொழும்பு பள்ளிக்கூடங்களிலிருந்து பரீட்சை எழுதியவர்கள். அந்த 6x4A யும் பரி யோவானிலிருந்து வந்திருருந்தால், 1992ல் பரி யோவான் கல்லூரி அகில இலங்கையிலும் முதலாவது இடத்தை பிடித்திருக்கும்.

SJC1989 இலும் உயர்தர பரீட்சையில் Bio பிரிவில் அகில இலங்கையிலும் முதலாவது இடத்தை பிடித்த சுபனேசன், உட்பட பலரை உற்சாகப்படுத்தி வழிகாட்டியவர்கள் எங்களது ஆசிரியர்கள். நாங்கள் படித்த காலத்தில் கல்வியிலும் விளையாட்டிலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டுமன்றி முழ நாட்டிலும் முன்னனியில் திகழ்ந்த எங்கள் பரி யோவான் கல்லூரி, இன்று கல்வித் துறையில் பின்தங்கியிருப்பது வேதனையளிக்கிறது.

அண்மைய ஆண்டுகளாக எவ்வாறு கிரிக்கெட்டில் பரி யோவான் கல்லூரி அணி திறமையாக விளையாடி, வடமாகாணத்திலேயே அதி சிறந்த அணியாக திகழ்கிறதோ, அதே போல் கல்வித்துறையிலும் முன்னேறி யாழ்ப்பாணத்தின் முன்னனி பாடசாலைகளில் ஒன்றாக மீண்டும் மிளிர வைப்பதே அலெக்ஸ் மாஸ்டருக்கும் சரா மாஸ்டருக்கும் அவர்களைப் போல் தங்கள் வாழ்க்கையை பரி யோவானிற்கு அர்ப்பணித்த அனைத்து ஆசிரியர்களிற்கும் நாங்கள் அளிக்கும் உண்மையான காணிக்கையாக இருக்கும். 

வெல்லுவமா? 

5 comments:

 1. But we cannot study again you know Jude Pragash Anna? By the way you write these articles as extracts of History, so you have to be genuine in writing abouts events which happened in a point of time in the History.For example The Old park training base was bomed only once in mid May 1987 and it was after 3 pm and schools didn't fuction because of unsafe situation due to Operation Liberation. These kind of mistakes will keep to doubt the authenticity of your articles......Jude Pragrash Anna we want to keep your articles as a source of History so pleasw ensure genuinity while presenting incidences even it is joke.....

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. இது கனவும் நினைவும். திகதிகள் பொருந்தாவிடினும், சில நகைச்சுவைகள் சேர்க்கப் பட்டிருப்பினும், தலைப்பு தாங்கிப் பிடிக்கிறது. தப்புத் தவறுகளையும் தாண்டி காட்சியை கண்முன் கொண்டுவருகிறது. சம்பவங்களை எண்ணி சிந்திக்க மட்டுமல்லாமல் சிரிக்கவும் வைக்கிறது. அவரிலும் முன்னான பரியோவான் மாணவர்களாகிய எம்மையே எம் இளம் வயதை மீள வாழ சந்தர்ப்பம் தருகிறது. – very readable. Congratulations Jude.

   Delete
 2. Point taken Thambi. I think you took it out of context. The Old Park incident come as part of a fictional story I was relating to Jeevanantham Master's joke and I mentioned that clearly as well. Also, even in that context I didn't say it was not bombed, I said they were roaming in the sky. I actually go to a great length to get my facts right and am happy to be corrected whenever I have made a mistake.

  ReplyDelete
 3. my period is about 25 years before your period.I convey my heartfelt condolences to the family of Late Mr Sara Tharmotharam as the young Sara master was my Botany teacher then and his teaching style was very methodical and very attractive to any student.St John's and we are Very proud of gentlemen like Sara Master and Mr Alex.May both souls RIP

  ReplyDelete