Friday, 31 March 2017

வாருங்கள் வடம் பிடிப்போம்1990 ஜூன் மாதம், ஏதோ ஒரு கிழமை நாள்.

இரண்டாவது ஈழ யுத்தம் தொடங்கி, கோட்டை அடிபாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நாட்கள். அன்று காலை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளிவரப் போவதாக உதயன் பத்திரிகையில் கொட்டை எழுத்துக்களில் செய்தி வந்திருந்தது. 

1989 டிசம்பர் மாதம் நடக்க வேண்டிய எங்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சை, நாட்டில் நிலவிய வன்முறை சூழ்நிலையால் 1990 மார்ச் மாதத்திற்கு பிற்போடப்பட்டது. தெற்கில் ஜேவிபி பயங்கரவாதம் தலைவிரித்தாட, வட கிழக்கில் ஈபிகாரன்களின் கட்டாய ஆட்சேர்ப்பும் மண்டையன் குழுவின் படுகொலைகளும் தாண்டவமாடிய கொடிய காலகட்டம்.

பேப்பர் வாசித்ததிலிருந்து அம்மா கந்தசஷ்டி சொல்லத் தொடங்கினா. "இவனுக்கு என்ன results வரப்போகுதோ" என்று அம்மா ஒரு பக்கம் ஏங்க, அப்பரோ "இன்றைக்கு மானம் போகப் போகுது" என்று பம்பலாக அம்மாவை உசுப்பேத்தி விட்டு, மானம் காக்கவென, என்னுடைய தொப்பியை எடுத்து தனது தலையில் அணிந்து கொண்டு, கறி வாங்க சந்தைக்குப் போய்விட்டார்.

விதான்ஸ் லேனுக்கால சைக்கிளை திருப்பி, வைரவர் கோவிலடியில் சைக்கிள் சீட்டால் எழும்பி வைரவரிற்கு வணக்கம் வைத்து விட்டு,  இளங்கோவின் வீட்டடியை அடைகிறேன். இருவருமாக இணைந்து கல்லூரி நோக்கி சைக்கிளை மிதித்தோம், இருவருக்கும் டென்ஷனாக இருந்ததால் பெரிதாக இருவரும் கதைக்கவில்லை. 

பரி யோவான் கல்லூரி வளாகத்திற்குள் எங்கட SJC92 batch கூடத் தொடங்கியது. SJC92 batch, கல்லூரிக்கு அழியாப் பெருமை சேர்த்த நாளாகவும், வாழ்வில் கடைசி முறையாக கல்லூரி வளாகத்தினுள் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்த நாளாகவும், அந்த நாள் அமைந்தது.  சிறிது நேரத்தில் எல்லோரையும் Principal officeற்கு முன்னாலிருந்த வகுப்பறைகளிற்கு போகுமாறு உத்தரவு வந்தது. நீண்ட வெள்ளைக் காகிதங்களைக் கட்டாகத் தூக்கிக் கொண்டு கணபதிப்பிள்ளை மாஸ்டர்  ஒரு வகுப்பறைக்குள் நுழைகிறார். 


அன்று அந்த வகுப்பறையில் நிலவிய அசாரண அமைதியின் சத்தத்தில் காது வெடித்தது. பாடங்களிற்கான பெறுபேறுகளை அறிவிக்கும் ஒழுங்கு முறையை அறிவித்து விட்டு, மாணவர்களின் பெயர்களின் alphabetical ஒழுங்கில் பெறு பேறுகளை அறிவிக்கத் தொடங்கினார், கணபதிப்பிள்ளை மாஸ்டர். ஒரு நீண்ட rulerஐ கடதாசியில் பிடித்து பிடித்து ஒவ்வொரு மாணவனதும் பெறுபேறுகளை உரக்க வாசிக்கிறார். 


"Nimalan, G" ஒருக்கா தலையை நிமிர்த்தி, எழும்பி நின்ற நிமலனை ஒரு பார்வை பார்க்கிறார். "All D's...congratulations.. you may go" ஹொஸ்டலில் தனது மேற்பார்வையில் வளர்ந்து, ட்யூஷன் எதற்கும் போகாமல், பரி யோவானின் ஆற்றலும் அக்கறையும் மிகுந்த ஆசிரியர்களிடம் மட்டும் கல்வி கற்று, அனைத்து பாடங்களிலும் D எடுத்த மாணவனை புன்முறுவலுடன் கைகுலுக்கி அனுப்பி வைத்து விட்டு, அடுத்த மாணவனின் பெறுபேறை வாசிக்கிறார், கணபதிப்பிள்ளை மாஸ்டர்.

என்னுடைய முறையும் வருகிறது, இதயம் படபட என்று அடிக்க, பரலோகத்தில் இருக்கும் பிதாவே சொல்லத் தொடங்கினேன். கணபதிப்பிள்ளை மாஸ்டர் வாசிக்க வாசிக்க, காகிதத்தில் எழுதுகிறேன், D......D......C....கடைசிப் பாடம் Art.. அதுவும் C. கணபதிப்பிள்ளை மாஸ்டரின் அருகில் சென்று "சேர், ஒருக்கா திரும்ப check பண்ணுறீங்களா" என்று பணிவாக கேட்டேன்.

"ஏன் ஐசே உமக்கு என்ன doubt" கணபதிப்பிள்ளை மாஸ்டரிற்கு விசர் வந்தது. " இல்லை சேர், Artற்கு C வந்திருக்கு...அதான்" இழுத்தேன். ஒவ்வொரு தவணைப் பரீட்சையிலும் Artற்கு 40 தாண்டாது, சுட்டுப் போட்டாலும் வரைதல் வரவே வராது. தேவராஜா மாஸ்டரிடம் வாங்கிய அடியில் சித்திரப் பாடமே கதிகலங்கி போயிருக்க, இறுதிப் பரீட்சையில் C என்றால் என்னென்று நம்புவது. மீண்டும் ஓரு முறை rulerஐ வைத்து, பெறுபேறுகளைச் சரி பார்த்து விட்டு "ஐசே, நான் சரியாத் தான் சொன்னனான்.. நீர் போம்" கணபதிப்பிள்ளை மாஸ்டர் கடுப்பானார்.

வீட்ட போய், பெறுபேறுகளைச் சொல்ல, Artற்கு C வந்ததையும் Mathsற்கு D வந்ததையும் நம்பாத அம்மா, அப்பாவை கல்லூரிக்கு அனுப்பி பெறுபேறுகளை உறுதிப்படுத்தி வரச் சொல்லி அனுப்பின கதையையும் வரலாறு பதிவு செய்தது. 


பரி யோவானில் ஆறு பேரிற்கு அந்த முறை 8D வந்திருந்தது. அந்த அறுவரில் ரமோ, கணா, கோபால், நிமலன் அடக்கம். க.பொ.த சா.த பரீட்சையில், யாழ்ப்பாண மாவடத்தில், பரி யோவான் முதலிடம் பிடித்த கடைசி ஆண்டாக அது அமைந்தது என்று நினைக்கிறேன். அகில இலங்கையிலும் யாழ்ப்பாண மாவட்டம் முன்றாம் இடத்தை பிடித்திருந்தது, கொழும்பும் கண்டியும் முதலிரு இரு இடங்களைப் பிடித்திருந்தன. 

25 ஆண்டுகள் கடந்து...

அந்தக் காலத்தில் கல்வியில் கலக்கிய யாழ்ப்பாண மாவட்டத்தின் க.பொ.த சா.த பரீட்சையின் பெறுபேறுகள் சம்பந்தமான ஒரு அறிக்கையை அண்மையில் வாசிக்க வாசிக்க  வேதனை தான் வந்தது. அண்மையில் வெளிவந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு யாழ்ப்பாணத்திலிருந்து தோற்றிய பத்தாயிரம் சொச்ச மாணவர்களில், 37% வீதமானோர் உயர்தரம் படிக்க மாட்டார்கள் என்ற கசப்பான உண்மையை ஜீரணிக்க முடியாமலிருக்கிறது. 

 

1970களில் மறுக்கப்பட்ட கல்வி உரிமை,  ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டத்திற்கு இளைஞர்களை உந்தியதில் முக்கிய பங்கு வகித்தது. வீறுகொண்டெழுந்து, தாயகத்திற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த மறவர்களால் வழிநடத்தப்பட்ட, விடுதலைப் போராட்டம் மெளனிக்கப்பட்டு எட்டாண்டுகள் கடந்த நிலையில், கல்வியில் தமிழர் மாவட்டங்கள் பின் தங்கியுள்ள நிலைமைக்கு நாங்கள் அனைவருமே பொறுப்பாளிகள்.


பாடசாலைகளில் அக்கறையாக கற்பிக்காத ஆசிரியர்கள், புதுசு புதுசாக கட்டிடங்கள் கட்டுவதில் மட்டும் குறியாய் இருக்கும் அதிபர்கள், கலை நிகழ்ச்சிகளும் இரவு விருந்துகளும் நடாத்தி காசு சேர்க்கும் புலம் பெயர்ந்த பழைய மாணவர்கள் என்று குற்றவாளிக் கூண்டில் பலரை எற்றலாம். இவர்களை எல்லோரையும் விட இந்த கீழ் நிலைக்கு யாழ்ப்பாண மாவட்டம் செல்ல பிரதான காரணமானவர்கள், கல்வியில் அக்கறை செலுத்தாது வெளிநாட்டு பணத்தில் திளைத்து,  வெளிநாடு போகும் மோகத்துடன் வாழும் பெற்றோர்களும் பிள்ளைகளும் தான். 


குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டியவர்கள் பட்டியலில் இணைந்து கொள்ளப்பட வேண்டிய முக்கியமான மற்றுமிருவர், வட மாகாண சபையின் கல்வி அமைச்சரும் வட மாகாண சபையின் முதலமைச்சரும் தான். இலங்கையின் 25 மாவட்டங்களில், கடைசி 5 இடங்களை பிடித்த மாவட்டங்களில் 3 மாவட்டங்கள் வடமாகாண சபையின் ஆளுகைக்கு உட்பட்டவை. வடமாகாணத்தின் கல்வியில் பின்தங்கியுள்ள இந்த நிலைமை, வடமாகாண சபையின் வினைத்திறனை நோக்கி கேள்வி எழும் வினாக்களிற்கு வலுச்சேர்க்கிறது.


வடமாகாணத்தின் கல்வி நிலை தொடர்பான இந்த அறிக்கையைப் பற்றி அறிந்ததும், நாங்கள்  வடமாகாண கல்வி அமைச்சரின் கொடும்பாவியை எரிக்கப் போகிறோமா? இல்லை, முதலமைச்சரை இருத்தி வைத்து "வடமாகாணத்தில் தமிழர் ஆட்சியில் கல்வித்தரம் முன்னேறியுள்ளதா பின்தங்கியுள்ளதா" என்று பட்டிமன்றம் நடாத்தப் போகிறோமா?


சாதாரண தரத்தில் வெற்றி பெறும் மாணவர்களைக் கொண்டாடும் நாங்கள், சித்தியடையாத மாணவன் பற்றியும் சிந்திக்க வேண்டாமா? கல்விச் செயற்பாடுகளிலிருந்து விலகும் மாணவனே, வாள் வெட்டு குழுக்களிலில் இணைந்து தானும் நாசமாகி, சமூகத்தையும் சீர்குலைக்கிறான் என்று எண்ணத் தோன்றுவது தவறா? விரக்தியடையும் அந்த மாணவன் போதைக்கு அடிமையாக வாய்ப்புக்கள் அதிகமில்லையா?


இவ்வாறு வினாக்களை அடுக்கிக் கொண்டு போன போது, நண்பன் ஒருவன் 2014ல் தமிழ்க் கல்வியாளர்களால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கில், கல்வியை அபிவிருத்தி செய்வது பற்றிய ஆய்வறிக்கையை உட்பெட்டியில் அனுப்பினான். வடமாகாண சபையின் அனுசரணையில், புலம்பெயர் கல்வியாளர்கள் வழிகாட்ட, தாயகத்தில் கல்விப் பணியாற்றும் அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி பயிலும் மாணவர்கள் அவர்தம்  பெற்றோர்கள் என்போரது கருத்துக்களையும் அவதானங்களையும் உள்வாங்கி Bottom Up அணுகுமுறையில் தயாரிக்கப்பட்டது தான் இந்த Northern Education System Review (NESR) அறிக்கை.


தமிழர்களால் தமிழர் தாயகப் பிரதேசங்களில் கல்வியை முன்னேற்ற தயாரிக்கப்பட்ட NESR அறிக்கையை வாசித்த, மத்திய அரசும் பிற சிங்கள மாகாணங்களும், அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பெறுமதியான ஆலோசனைகளை நடைமுறைப்படுத்த, எங்கள் வடமாகாண சபை மட்டும் இந்த அறிக்கையின் பரிந்துரைகளை துரித கதியில் செயற்படுத்துவதில் இன்றுவரை அதீத ஆர்வம்  காட்டவில்லை என்பது வேதனையளிக்கிறது.


NESR அறிக்கையின் சில பரிந்துரைகளை அமுல்படுத்தி விட்டு, மீதியை நடைமுறைப்படுத்த மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காமை போன்ற நொண்டிச் சாட்டுக்களை வடமாகாண சபை சொல்லிக்கொண்டு இருக்கிறதாம். இந்த சோம்பேறித் தனமும் தட்டிக் கேட்பாரற்ற கேவலமான நிலையும் தொடர, எங்கள் மாவட்டங்கள் தொடர்ந்தும் பின்தங்கிய நிலையில் நிற்கின்றன. இந்த நிலை தொடர்ந்தால் எங்கள் தாயகத்தில் ஏற்படப்போகும் சமூக பாதிப்புக்கள் நிட்சயமாக பாரதூரமானவையாக இருக்கும். 


வடமாகாணமெங்கும் கல்விக்கு முன்னுரிமை கொடுத்து, நாமெல்லோரும் சேர்ந்து வடம் பிடிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. நிரந்த அரசியல் தீர்விற்கு பின்னர் கல்வி அபிவிருத்தி பற்றி சிந்திப்போம் என்றிருந்தால் "ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்க வேண்டும்" என்று அடம்பிடித்த கதையாகத் தான் முடியும். 


வாருங்கள்..கல்வி எனும் தேரின் வடம் பிடிப்போம், வடமாகாணத்தை மீண்டும் கல்வியில் வளமாக்குவோம்,  இழந்த மாட்சிமையை மீண்டும் கொண்டு வருவோம். வாருங்கள் வடம் பிடிப்போம்!

 

 

2 comments:

  1. I posted this table to answer someone's question. This tabl1eis for the 2015 Dec O/L. We are still waiting for the 2016 Dec O/L analysis. You can get all analysis at MOE website.

    ReplyDelete
  2. சிறந்த பதிவு அண்ணா. பரியோவான் கல்லூரி முதலிடம் பிடித்த இறுதி வருடம். . இத்தனை ஆண்டுகள் கடந்தும் திரும்ப எட்டமுடியவில்லை

    ReplyDelete