Friday, 3 March 2017

கொழும்பு இந்துவின் கொமர்ஸ்காரன்கள்1992ம் ஆண்டு கொழும்பு இந்துவில் கொமர்ஸ்காரன்கள் கோலோச்சிய ஒரு அற்புதமான ஆண்டு. கொழும்பு இந்துவின் வரலாற்றில் முதல்தடவையாக கொமர்ஸ் பிரிவிலிலிருந்து Head Prefect தெரிவான ஆண்டு 1992. நண்பன் கறுப்பையா ரமேஷ், கொழும்பு இந்துவின் HP ஆக தெரிவாக, ஆருயிர் நண்பன் வசந்தன் கொழும்பு இந்துவின் உயர்தர மாணவர் ஒன்றிய தலைவராக தெரிவானான். 


1983ம் ஆண்டிற்கு பின்னர் கொழும்பு இந்துவில் உயர்தர மாணவர் மன்றம் செயற்படத் தொடங்கிய ஆண்டாக 1992 அமைந்தது. உயர்தர மாணவர்களின் நலன்களைப் பேண செயற்படத் தொடங்கிய இந்தச் சங்கம், நினைவில் நிலைத்த ஒரு  இரவு விருந்துபசாரத்தை, 1992 உயர்தர மாணவர்களுக்கான பிரியாவிடையாக, கல்லூரியில் அரங்கேற்றியது. கொழும்பில் தமிழ் பிரிவு இருக்கும் அனைத்து ஆண் பெண் பாடசாலைகளிற்கும் அவர்தம் பிரதிநிதிகளை அனுப்ப அழைப்புக்கள் அனுப்பப்பட்டன, ஆனால் கலந்து கொண்டதோ இந்து மகளிர் கல்லூரி, இராமநாதன் மகளிர் கல்லூரி, மெதடிஸ்ட் மகளிர் கல்லூரி மாணவிகள் மட்டுமே. 

1992 உயர்தர மாணவர் ஒன்றியத்தின் இரவு விருந்துபசாரத்தை ஒழுங்கமைக்க அனைத்து மாணவர்களும்  ஒற்றுமையாகவும் கடுமையாகவும் உழைத்தார்கள். விழாவின் சிறப்பு மலரும் autograph புத்தகமும் வத்தளை பிரின்டேர்ஸில் அச்சாகியது. கொட்டும் கொழும்பு மழையில், முழங்காலளவு சேற்று வெள்ளத்தில், பொலித்தீனில் சுற்றிய புத்தகங்களை தோளில் சுமந்து வரும் போது அறிமுகமானவர் தான் அருமை நண்பன் ஐங்கரன் சுப்ரமணியம், அன்று 1993 மட்ஸ் பிரிவின் வகுப்பு பிரதிநிதி. 

கொழும்பு இந்துவின் கால்பந்தாட்ட அணி, அகில இலங்கையிலும் மிகச் சிறந்த அணிகளில் ஒன்றாக திகழ்ந்தது. அணியில் முக்கால்வாசி ஆட்டக்காரன்கள் எங்கட வகுப்பில் இருந்தாங்கள். அமலன், நித்தி, பகீ, தேவா, ராஜூ, சதா,  பண்டா, கிரிஷாந்தன் இவங்களோடு, கப்பல் விபத்தில் நம்மை விட்டுப் பிரிந்த ஷிரானும் அணியில் இருந்தான். சின்னண்ணாவின் வழிகாட்டலில் கடுமையாக பயிற்சி எடுத்து சிறப்பாக ஆடிய கொழும்பு இந்து அணி, கொழும்பின்  பல பிரபல பாடசாலைகளிற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது. தமிழ் பாடசாலை அணி என்ற ஒரே காரணத்திற்காக, பெரும்பான்மையின நடுவர்களின் பாரபட்சத்தால் இந்த அணி ஈட்டியிருக்க வேண்டிய பல வெற்றிகள் தட்டிப் பறிக்கப்பட்டன என்பது வேதனையான சோகம். 


கொமர்ஸ் வகுப்புகளிற்கு தங்கராஜா டீச்சரின் முதலாவது பாடத்திற்குப் பின்னர் வாத்திமார் வருவது அரிது. எங்கள் 13E வகுப்பில் அதற்கு பிறகு யாதவனின் பாட்டுக் கச்சேரி களைகட்டும். யாதவன் பாட, கொட்டா பிரதீப் மேளம் அடிக்க, பண்டாவும் அமலனும் ஜோடி போட்டு MGRம் ஜெயலலிதாவும் போல் கட்டிப்பிடித்து ஆடுவதை பார்க்க மெய்யாலுமே கண்கோடி வேண்டும். 

பதினொரு மணி வாக்கில், ஆடலும் பாடலும் நிகழ்ச்சி முடிவடையும். வகுப்பிலிருந்து நைஸாக நழுவி, செக்கியூரிடியிடம் சிங்களத்தில் கதைத்து பாடசாலையை விட்டு வெளியேற அமலன் அனுசரணை வழங்குவார். வீட்ட போய் ஒரு குட்டித் தூக்கம் அடித்துவிட்டு பின்னேரம் சங்கத்திற்கு டியூஷனிற்கு வர "அதோ மேக ஊர்வலம், அதோ மின்னல் தோரணம்" உருத்திரா மாவத்தையில் ஊர்வலம் போகும். அமலன் வகுப்பில் இல்லாத நாட்களில் மதில் பாய்ந்து வீட்ட போக CR ரஞ்சன் உதவி செய்வார். 

அமலனின் Prefect விண்ணப்பம் முதலில் ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியர் கிமு என செல்லமாக அழைக்கப்படும் கிருஷ்ணமூர்த்தி ஆசிரியரால் நிராகரிக்கப்பட்டு, பின்னர் தங்கராஜா டீச்சரின் தலையீட்டால் தான் அவனிற்கு batch வழங்கப்பட்டது. "ஒரு prefect ஆக வர உனக்கென்ன தகுதியிருக்கு" என்று கிமு கேட்ட கேள்வியால் நொந்து நூலான அமலன், தங்கராஜா டீச்சரின் காலில் விழ "அவர் சொன்னது உண்மை தானேடா" என்று அமலனிற்கு சொல்லிவிட்டு, தங்கராஜா டீச்சர் தனது prefect ஆக வேண்டும் என்ற கனவை நனவாக்கியதை அமலன் சொல்லி நெகிழ்ந்தான். 


கிடைத்த batchஜ அமலன் AO ராமநாதனிற்கு, ஒரு பனிசீற்கும் டீக்கும் வாடகைக்கு விட்டு பிடிபட்டது தனிக்கதை. நண்பர்களிற்காக "குதிரையில்" AL படிக்க வந்த AO ராமநாதனின் கொழும்பு தமிழை சதானந்தன் மொழிபெயர்ப்பான். AO ராமாவும் "எலி வாய்" தேவாவும் நடாத்தும் கொழும்பு தமிழ் பட்டிமன்றத்தில் செந்தமிழும் சங்கத்தமிழும் பொங்கிப் பிரவாகிக்கும். 

கொழும்பு இந்து கல்லூரி தொண்ணூறுகளில்  பாடசால விவாத அரங்கில் கோலோச்ச அடித்தளம் இட்ட ஆண்டாகவும் 1992 அமைந்தது. பிற்காலங்களில் விவாத அரங்கில் கலக்கிய தமிழழகன், சுபாஷ் சிறிகாந்தா போன்றோர் 1992 விவாத அணியிலும் இருந்தார்கள். கொழும்பு இந்துவின் Quiz அணி, மேல் மாகாண தமிழ் பாடசாலகளிற்கிடையிலான போட்டியில் வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது மட்டுமன்றி தேசிய மட்ட போட்டிகளான ரூபவாஹினியில் ஒளிபரப்பான Dulux Do You Know, ITNல் ஒளிபரப்பான Olympics Quiz, SAARC Quiz போட்டிகளிற்கு தெரிவான ஒரே தமிழ் பாடசாலை என்ற பெருமையையும் பெற்றது. 

கொழும்பு கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்ற 1992ம் ஆண்டு கலைவிழாவை யாரும் மறக்க மாட்டார்கள். நண்பன் ஜெயபிரகாஷ் சிறிகாந்தாவின் பராந்தகன் கனவு சரித்திர நாடகத்திலும் ரமேஷ்-டெரன்ஸ் கூட்டணியின் நவீன ராமாயணம் நகைச்சுவை நாடகத்திலும் தளபதியாக நடிக்க வாய்ப்பு தந்தார்கள். இசை நிகழ்ச்சியில் கொமர்ஸ்காரன்களான  யாதவன், "சொக்கன்" விசாகன், "பம்பா ஃபளட்ஸ்" சுதாகர் என்று அருமையான பாடகர்கள் கலக்கினார்கள். அமலன் குறூப் "ஏப்ரல் மேயிலே பசுமையேயில்லை" என்ற இதயம் படப் பாடலிற்கு ஆடி கரகோஷம் வாங்கினார்கள்.
கொழும்பு இந்துவில் கடைசி நாள்..

எழுதிய கடைசி Logic exam Paper நினைத்த அளவிற்கு கஷ்டமாக இருக்கவில்லை. "ரம்போ" ராஜரத்தினமும் கேசவனும் படிப்பித்த பகுதிகளுக்குள் கேள்விகள் வந்திருந்தன. கர்த்தரே எப்படியாவது Colombo Campus போகோணும், அங்க தான் வடிவான பெட்டயளும் பெரிய மரங்களும் இருக்கு, என்று செபித்து பேப்பரை கையளித்துவிட்டு வெளியில வந்தால்... கூழ் முட்டை, சேற்றுத் தண்ணி போன்ற ரசாயன ஆயுதங்களுடன் குழப்படி குறூப் நிற்குது. 


AO ராமா தலைமையில் நின்ற குறூப்போட அமலன், நித்தி, பக்கா, ஜெயந்தன், ஷிரான் சேர்ந்து கொள்ள, தாக்குதல் தொடங்கியது. Head Prefect ரமேஷிற்கு முதலில் சேறபிஷேகம் நடக்க நாங்கள் கேட்டை நோக்கி ஓட தொடங்கிட்டோம். "வா வா வா" என்று கத்திகொண்டு அங்கேயும் நிற்கிறாங்கள். நானும் வசந்தனும் திரும்ப ஓடிப்போய் இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி பக்கமுள்ள வகுப்பறைக்குள் பதுங்கினோம். 


நாங்க ஒளிந்திருந்த வகுப்பிற்கு வெளியே பலமான தாக்குதல் சத்தங்களும் அவலக்குரல்களும் கேட்குது. "எல்லா stockம் முடிய வெளிக்கிடுவம்" என்ற எங்கள் திட்டத்தில் மண் விழுந்தது. சதா, எங்களை கண்டு பிடித்துவிட்டான். உடனே சத்தம் போட்டு எல்லோரையும் கூப்பிட்டு, சுத்தி நின்று கும்மியடிச்சாங்கள். உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை கூழ் முட்டையால் குளிப்பாட்டினாங்கள். 


முட்டை வெடுக்கு மணத்தோட பஸ்ஸில போக ஏலாது, மானப்பிரச்சினை வேற. பின்ரோட்டால போன ஆட்டோவை மறிக்க அவன் எங்களை ஏத்த மறுத்துவிட்டான். இப்படி நாலு ஆட்டோக்காரன்களால் நிராகரிக்கப்பட்டு ஜந்தாவது ஆட்டோவில் கெஞ்சி கூத்தாடி ஏறி வசந்தன் வீட்ட போய் 2 shampoo packet போட்டு குளித்தும் வெடுக்கு நாத்தம் போக கன நேரம் எடுத்தது.  கொழும்பு இந்துக் கல்லூரியில் படித்த நினைவுகளும் வாழ்வில் அழியாத கோலங்களாய் மனதில் ஆழமாய் பதிந்து விட்டது. 

No comments:

Post a Comment