Friday, 10 March 2017

1982 Big Match


1982ம் ஆண்டு மார்ச் மாதம் மூன்றாம் சனிக்கிழமை, எட்டு வயது சிறுவனாக, "இன்றைக்கு அங்க பிரச்சினை வரும்... போகாதே" என்ற அம்மாவின் அநியாய கட்டளையை, அப்பாவின் மென்வலுவால் வென்று, 84வது வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும், பரி யோவான் - மத்தியா கல்லூரி அணிகளிற்கிடையிலான Big Match பார்க்க கிடைத்த சந்தர்ப்பம் வாழ்வில் ஒரு வரப்பிரசாதம்.


தலையில் கறுத்த தொப்பி, சிவப்பு கறுப்பு டீஷேர்ட், கறுப்பு களுசான், கையில் பஸ்தியான் கடையடி டெயிலரிடம் வாங்கிய சின்ன Red & Black கொடி, கழுத்தில் தொங்கிய Drink Bottleல் தவசீலன் கடையில் வாங்கி நிரப்பிய cream soda, பொக்கற்றில் பத்து ரூபா காசு இவற்றோடு அப்பா காலையில் கொண்டு வந்து, சிங்கள பேரினவாதிகளால் எரிக்கப்பட்ட யாழ்ப்பாண பொது நூலகத்தடியில் இறக்கி விட்டது இன்றும் நினைவில் நிழலாடுகிறது. 

கொளுத்தும் யாழ்ப்பாண வெய்யிலில், யாழ்ப்பாண கிரிக்கட் வரலாற்றில் அழியாத இடம் பிடித்த ஒரு கிரிக்கெட் ஆட்டத்தை அன்று பார்த்த பரவசம் இன்றும் நினைவை விட்டு அகலவில்லை. முப்பத்தைந்து வருடங்களிற்கு முன்னர் அந்த ஆட்டத்தை கண்டுகளித்த யாருமே இன்று வரை அந்த கடைசி நாளை, குறிப்பாக அந்த கடைசி இரண்டு மணித்தியாலங்களை, விசேஷமாக அந்த இரண்டு பரி யோவான் ஆட்டக்காரர்களை மறக்கவே மாட்டார்கள். 


1982ம் ஆண்டு Big Match பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்று இருந்த நீண்ட நாள் கனவை நனவாக்க வழிகோலியது, சென்ற வருடம், நண்பர்களுடன் பயணித்த இனிமையான Big Match பயணம் தான். இந்தப் பயணத்தில் சந்தித்த மூவர் தான் இன்று இந்தப் பதிவை வரைய எனக்கு தகவல்களை தந்து உற்சாகப்படுத்தியவர்கள். 


முதலாமவர், "டேய் ஜூட், என்னடாப்பா" என்று பரி யோவான் கல்லூரி Dining Hall அடியில் வைத்து, கை எலும்பு நொறுங்க கைகுலுக்கி, உடல் நொறுங்க ஆரத்தழுவிய, யாழ்ப்பாணத்தில் எங்கள் ரோட்டுக்காரனான விக்னபாலன் அண்ணா. இரண்டாமவர், யாழ்ப்பாணம் Jetwings Hotelல் புகைப்படம் எடுத்த போது "ஹாய்" சொன்ன மத்திய கல்லூரியின் 1982 ஆட்ட நாயகன், போல் பிரகலாதன் அண்ணா. 


மூன்றாமவர் நாங்கள் CIMA படிக்கும் காலத்தில் எங்களை தனது காரில் ஏற்றி இறக்கிய காலம் தொட்டு இன்று வரை அன்பு பாராட்டும்  ஜூட் ஜோசப் அண்ணா. இவர்கள் அனைவரும் மறந்த சில தகவல்களையும் தரவுகளையும் உறுதிபடுத்த உதவியது தம்பி கோபிகிருஷ்ணா, பரி யோவானின் வாழும் cricket encyclopedia.
--------------------------

1970ம் ஆண்டு மத்திய கல்லூரி அணி ஈட்டிய வெற்றிக்கு பின்னர் இடம்பெற்ற அனைத்து ஆட்டங்களும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்திருந்தன. எண்பதுகளின் ஆரம்பத்தில் DM ரட்ணராஜா தலைமையிலான பரி யோவானின் 1980 மற்றும் 1981 ஆண்டு அணிகள் பலமாக இருந்தாலும், மத்திய கல்லூரி அணி அபரிதமாக ஆடி அந்த ஆட்டங்களில் தோல்விகளை தவிர்த்திருந்தது. 1980ல் DM ரட்ணராஜாவின் சதமும் 1981ல் சிவேன் சீவநாயகத்தின் சதமும் பரி யோவான் அணி வெற்றியீட்ட போதுமானதாக இருக்கவில்லை. 


1982ம் ஆண்டு, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி, வடக்கில் மட்டுமன்றி முழு இலங்கையிலும் மிகப் பலமான அணியாக விளங்கியது. சகலதுறை ஆட்டக்காரரான தோமஸ் தலைமை தாங்கிய அணியில், அணியின் பிரதி தலைவர் போல் பிரகலாதன், சுதர்ஷனன், உமாசுதன், விக்கெட் காப்பாளரான (காலஞ்சென்ற) மணிவண்ணன் என்று பலவருட அனுபவம் வாய்ந்த Colours menகளின் கூடாரமாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி திகழ்ந்தது. எப்படியும் இந்த முறை Central தான் Big Match வெல்லும் என்று யாழ்ப்பாணமே பரவலாக எதிர்பார்த்தது. பலவீனமான பரி யோவான் அணியை Big Matchல் வெல்லுவோம் என்ற  நம்பிக்கையிலேயே மத்திய கல்லூரி அணியும் உலா வந்தது. 


பரி யோவான் அணியுடனான Big Matchற்கு முதல் கிழமை, பலம் வாய்ந்த கொழும்பு ஆனந்தாக் கல்லூரி அணியை வென்று தன்னம்பிக்கையின் உச்சத்தில் வீற்றிருந்தது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி. ஆனந்தாக் கல்லூரியுடனான ஆட்டத்தில், போல் பிரகலாதன் சதம் அடித்திருந்தார். மத்திய கல்லூரி அணியின் தலைவரான தோமஸ் வேகப் பந்து வீச்சாளராகவும் சுழல் பந்து வீச்சாளராகவும் மாறி மாறி அவதாரம் எடுத்து, எதிரணிகளிற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். வேகப்பந்து வீச்சாளரான உமாசுதனின் பந்து வீச்சில் வேகமும் விவேகமும் கலந்திருக்கும்.  இதற்கு மாறாக பரி யோவான் பாசறையில் பல புது முகங்கள் இடம்பிடித்திருந்தன. பரி யோவான் அணியின் தலைவரான DM ரவீந்திராவும் பிரதி தலைவரான N பிரபாகரனும் மட்டுமே அணியின் colours men.  Half coloursman ஆன ஜூட் ஜோசப்பின், சுழல் பந்து வீச்சும், நிதானமான துடுப்பாட்டமும், முந்தைய வருட அனுபவமும் அணிக்கு பலம் சேர்த்தது.

 ஜூட் ஜோசப்பிற்கு நாடி நரம்பு, ரத்தம் எல்லாம் ஜொனியன் என்கிற வெறி, பெருமிதம், திமிர், எடுப்பு. ஆள் நடக்கும் போதே அந்த ஜொனியன் என்ற கர்வம் வெளிப்படும், ஆனால் பழகிப் பார்த்தால், பசு. 1980 Big Matchற்கு தன்னுடைய அப்பாவின் Layden Garments தொழிற்சாலையில் ஒரு பெரிய பரி யோவான் Red & Black கொடியை நெய்து, யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் பாரிய கொடியை அறிமுகப்படுத்திய பெருமை  ஜூட் ஜோசப்பை சாரும். 


பரி யோவான் அணியில் மகிந்தா, திருக்குமார் என்று இரு நெட்டையர்கள் விளையாடினார்கள். மகிந்தா ஒரு சகலதுறை ஆட்டக்காரர், 1983ம் ஆண்டு பரி யோவான் அணிக்கு தலைமை தாங்கியவர். திருக்குமார், வேகப் பந்து வீச்சாளர், பரி யோவானின் புகழ்பூத்த உதவி அதிபர் பஞ்சலிங்கம் மாஸ்டரின் மகன். 1984ம் ஒஸ்ரேலியாவிற்கு விஜயம் செய்த இலங்கை U19 தேசிய அணியில் விளையாடியதால், பரி யோவான் கல்லூரியின் அதியுயர் கெளரவமான Johnian Eagle விருதை வென்றவர், திருக்குமார். 


பரி யோவான் அணியின் அதிரடி ஆட்டக்காரன் தான் S விக்னபாலன். ஜந்தாவது அல்லது ஆறாவது விக்கெட் விழ இறங்கும் விக்கி, ஸ்டைலாக விளையாடுவார், ஆளும் ஸ்டைல் மன்னன் தான், ஜொனியன் என்றால் சும்மாவா. விக்னபாலன் ஸ்டைலில் மட்டுமல்ல சுழற்றலிலும் மன்னன். "மச்சான், வாடா ஒருக்கா கிளியை பார்ப்பம்" என்று நண்பர்களைக் கூட்டிக்கொண்டு அடிக்கடி இங்லீஷ் கொன்வென்ட் பக்கம் போவார். ஒரு சுப நாளில் கிளி அக்கா இவரைப் பார்த்து சிரிக்க, கூடப் போன நண்பர்களிற்கு ரிக்கோ ஹோட்டலில் ரோல்ஸும் சர்பத்தும் வாங்கித் தந்து விருந்து வைத்தார், விக்கி என்கிற விக்னபாலன், 1982 Big Matchன் கதாநாயகர்களில் ஒருவர். 

பரி யோவான் அணியின் வேகப்பந்து வீச்சாளராகவும் கடைசி துடுப்பாட்ட வீரராகவும் இடம்பிடித்தவர், விஜயராகவன். கல்லூரியின் உதைபந்தாட்ட அணியின் தலைவராகவும் ஒரு சிறந்த மெய்வல்லுனர் வீரனாகவும் திகழ்ந்த விஜயராகவன், கல்லூரி கிரிக்கெட் அணிக்கு விளையாடிய முதலும் கடைசியுமான வருடம், 1982. பரி யோவானின் தலைசிறந்த பயிற்றுவிப்பாளர்களில் ஒருவரான மனுவல்பிள்ளை மாஸ்டரின் உந்துதலில் கிரிக்கெட் விளையாட வந்தவர் தான், விஜயராகவன்.

மனுவல்பிள்ளை மாஸ்டரின் இன்னுமொரு தெரிவு,  Baby of the Team, JM ஜோர்ஜ். களத்தடுப்பில் மிகச்சிறந்து விளங்கியதற்காகவும் பரி யோவானின் கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் ஜோர்ஜை, 1982 Big Matchல் களமிறக்கினார் மனுவல்பிள்ளை மாஸ்டர். ஜோர்ஜ் பரி யோவான் கிரிக்கட் அணிக்குத் தலைமை தாங்கிய 1985ம் ஆண்டு, நாட்டுப் பிரச்சினை காரணமாக Big Match நடக்கவில்லை. இவர்களை விட அணியின் விக்கெட் காப்பாளராக நிர்மலனும், சிறந்த துடுப்பாட்ட வீரரான TS வரதனும் பரி யோவானின் 1982 Big Match அணியில் இடம்பிடித்திருந்தார்கள்.


நாணய சுழற்சியில் வெற்றிபெற்று, துடுப்பெடுத்தாட முடிவெடுத்து, களமிறங்கிய பரி யோவானின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான DM ரவீந்திராவையும் ஞானரட்னத்தையும் எதிர்பார்த்து காத்திருந்தது, யாழ் மத்திய கல்லூரி அணியின் தலைவர் தோமஸ், உமாசுதன், சுதர்ஷனன், மனோஜ்குமார் அடங்கிய வேகப்பந்து வீச்சாளர்களின் படையணி. 
1 comment:

  1. அண்ணா மிச்சம் எப்ப வரும்

    ReplyDelete