Friday, 24 March 2017

அந்த ஒரு மணித்தியாலம்... 1982 Big Match


 

194 ஆண்டுகால பழமை வாய்ந்த பரி யோவான் கல்லூரிக்கு என்று பல சிறப்பம்சங்கள் உண்டு. அந்த சிறப்பம்சங்களில் பிரதானமானது, காலங் காலமாக, தலைமுறை தலைமுறையாக, பேணப்பட்டும் காவப்பட்டும் வரும் விழுமியங்கள் (Values). பாடசாலையின் பிரதான வாயிலின் முகப்பைத் தாண்டி உள்நுழையும் ஒவ்வொரு மாணவனிலும் ஏதோ ஒரு வகையில் இந்த விழுமியங்கள் உள்நுழைக்கப்படும், மாணவனாலும் உள்வாங்கப்படும்.

பரி யோவானின் விழுமியங்கள் காலங்கள் கடந்தும் அந்த மாணவனின் வாழ்வில் நிலைத்து நிற்கும். வாழ்விலே ஏதோவொரு சந்தர்ப்பத்தில் சவால்களை சந்திக்கும் போது இந்த விழுமியங்களே ஜொனியன்ஸிற்கு கைகொடுக்கும்.

Pitch may be bumby
Light may be blinding, but
Johnians always play the game

என்ற வாசகங்கள், ஜொனியன்ஸ் விளையாட்டுக் களத்தில் மட்டுமன்றி வாழ்க்கை எனும் களத்திலும் என்றுமே கடைசி வரை போராட வேண்டும், அதுவும் நேர்மையாக போராட வேண்டும் என்ற நற்பண்பை வலியுறுத்த, ஒவ்வொரு ஜொனியினின் மண்டைக்குள்ளும் விதைக்கப்படும் விழுமியம், தாரக மந்திரம்.

1982 Big Matchல் பரி யோவான் அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 126/9 என்ற இக்கட்டான நிலையில் நின்ற போது, களத்தில் நின்ற விக்னபாலனையும்
விஜயராகவனையும் மனந்தளராது போராட வைத்தது இந்த ஜொனியன் விழுமியம் தான். 

வெற்றியின் விளிம்பில் நின்று வெற்றிக் கொண்டாட்டத்திற்கு ஆயத்தமான மத்திய கல்லூரி அணியை விரக்தியடையச் செய்தது, பரி யோவான் அணியின் கிரிக்கெட் வல்லமை அல்ல, "நான் ஒரு ஜொனியன், நான் கடைசிவரை நேர்மையாக போராடுவேன்" எனும் விழுமியத்தை அடித்தளமாக கொண்ட, இறுமாப்பு நிறைந்த ஓர்மம் தான்.

"மச்சான், முதல் அஞ்சு பந்தை நான் பசையுறன், கடைசி பந்தை தட்டிவிட்டு ஓடுவம், சரியாடா" Batஜ கமர்க்கட்டுக்குள் பிடித்தபிடி வந்த விஜயராகவனிற்கு விக்னனபாலன் கூறிய பொன் மொழிகள். விஜயராகவன் வந்த முகூர்த்தம், மத்திய கல்லூரி அணி New ball எடுக்கவும் சரியாகவிருந்தது.

மணிக்கூட்டு கோபுர முனையிலிருந்து தோமஸ் வேகமெடுக்க, சுப்ரமணிய பூங்கா முனையிலிருந்து உமாசுதனும் சுதர்ஷனனும் புயலாய் பந்து வீசினார்கள். "மச்சான், காலை முன்னுக்கு வைத்து, batஐ காலுக்கு பின்னால் வைத்து விளையாடு" ஓவர் நடுவில் விக்கனபாலனின் உபதேசம் நடக்கும். "டேய் back footல மட்டும் போய்டாதாடே, காலில் பட்டுச்சோ, umpire தூக்கிக் குடுத்துடாவான்" விக்னபாலனின் பிரசங்கத்தை புன்முறுவலுடன் விஜயராகவன் கேட்பார்.

மைதானத்தின் ஓரத்தில் மத்திய கல்லூரி மாணவர்களும் பழைய மாணவர்களும் ஆதரவாளர்களும், தங்கள் அணி இந்தா வெற்றி பெறப் போகிறது, காண்பதற்கரிய ஒரு வரலாற்று வெற்றியை தங்கள் அணி பெறப் போகிறது, என்ற ஆனந்தத்தில் மைதானத்திற்குள் ஓடத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

மத்திய கல்லூரி அணியின் பந்து வீச்சாளர்கள் வீசும் பந்துகளை, விக்னபாலன் தரையோடு தடவி தடுத்தாட, மத்திய கல்லூரி அணியினரின் விரக்தி அதிகரித்தது. silly mid-on, silly mid-off, silly point, Gully , இரண்டு slips மற்றும் forward short leg என பரி யோவானின் துடுப்பாட்டக்கானை சுற்றி பத்ம வியூகமே அமைத்திருந்தார் மத்திய கல்லூரி அணியின் தலைவர் தோமஸ்.

விக்னபாலன் தடுத்தும் மறித்தும் ஆடிய விதம் அவருக்கு "பசைவாளி" என்ற பட்டத்தையும், அதற்கு பிறகு பரி யோவானில் மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தில் யார் நொட்டி விளையாடினாலும், "இவன் பசையலில விக்னபாலனை விஞ்சுவான்டா" என்ற அழியாப் புகழையும் சேர்த்தது.

 

பன்னிரெண்டாவது அல்லது பதின்மூன்றாவது
ஓவராக இருக்கலாம். Off stumpsற்கு சற்று வெளியே விழுந்த பந்தை விக்னபாலன் ஓங்கி அடிக்க, பந்து மட்டையின் நுனியில் பட்டு இரண்டாவது slipsல் நின்ற பிரதீபனிடம் போகிறது. தாவி பந்தைப் பிடிக்க முயன்ற , பிரதீபனின் கை விரலில் பட்டு நிலத்தில் விழுகிறது. மத்திய கல்லூரி அணி வெற்றி பெறக் கிடைத்த சந்தர்ப்பம் ஒன்று கை நழுவிப் போகிறது.


அந்தக் கடைசி மணித்தியாலத்தில் மத்திய கல்லூரி அணி மூன்று சந்தர்ப்பங்களை தவறவிட்டதாக போல் பிரகலாதன் அண்ணா நம்புகிறார். விக்னபாலன் அண்ணாவோ "நாங்க ஒரே ஒரு chance தான் குடுத்தனாங்க, அதுவும் நான் close field settingஐ உடைக்கவென்று அடிக்க வெளிக்கிட்ட படியால்" என்று நீண்ட விளக்கம் தந்தார்.

 

பத்து ஓவர்கள் பரி யோவானின் கடைசி துடுப்பெடுத்தாட ஜோடி ஆடிவிட்டது. மத்திய கல்லூரி அணியின் பிரதித் தலைவர் போல் பிரகலாதன் தனது தலைவரை அணுகுகிறார். "தோமஸ், நீ spin போடுடா" போலின் அறிவுரையை தோமஸ் உதறிவிடுகிறார். "பந்து இன்னும் புதுசா எல்லோ இருக்கு, இப்ப பறக்குது பார்" என்று சொல்லி விட்டு வேகப் பந்து வீச தோமஸ் தயாராகிறார். தோமஸ் ஒரு மிகச்சிறந்த சுழல் பந்து வீச்சாளர், அவர் ஆட்டத்தின் அந்த கடைசி ஒரு மணித்தியாலத்தில் ஒரு ஓவர் கூட சுழல் பந்து வீசாது விட்டது ஆட்டத்தின் தலைவிதியை மாற்றப் போகிறது என்பதை அவர் அப்போது உணரவில்லை.

பரி யோவான் அணி வீரர்களிற்கு தண்ணீர் கொண்டு வந்த ஷண்டி ரவிச்சந்திரனும் "எதையாவது குடுங்கோடா, batஐ மட்டும் குடுத்திடாதீங்கோடா" என்று கெஞ்சி விட்டு ஓடுகிறார். மத்திய கல்லூரி அணியோ ஓவர்களிற்கிடையிலான மாற்றங்களை அதி வேகமாக முடித்து, மீண்டும் மீண்டும் பந்து வீச தயாராகிக் கொண்டு இருக்கிறது.

"இப்ப விழும் பாரடா" என்று மத்திய கல்லூரி ஆதரவாளர்கள் இலவு காக்க, பரி யோவான் பாசறையிலோ ஓரிரண்டு மேளங்கள் மட்டும் அப்போதும் இப்போதும் முழங்க, College College .. St Johns College கோஷம் ஈனஸ்வரத்தில் கேட்கிறது. "டேய்.. யாரும் groundsற்குள் ஓடக் கூடாது" வெற்றியின் விளிம்பில் நின்ற மத்திய கல்லூரி ஆதரவாளர்களின் கட்டுப்பாடு ஆச்சரியப்பட வைக்கவில்லை.


"அண்ணே, அந்த கடைசி மணித்தியாலம் umpiring எப்படி இருந்து" போல் அண்ணாவை கேட்டேன். "நாங்க நிரம்ப தரம் lbற்கு appeal பண்ணினாங்கள் தான். ஆனா நான் நினைக்கேல்ல ஒன்று கூட out என்று" போல் பிரகலாதன் எனும் யாழ்ப்பாணத்தின் உன்ன விளையாட்டு வீரர்களில் ஒருவரின் வார்த்தைகளில் வெளிப்பட்டது உண்மையான sportsmanship. "எல்லாம் வெளில போன பந்துகள் அல்லது height கொஞ்சம் கூட, நான் mid onல தான் நின்றனான்" போல் அண்ணாவின் குரலில் இன்றும் வெற்றியைத் தவறவிட்ட ஏமாற்றம் எதிரொலித்தது.

இருபதாவது mandatory over... மைதானம் எங்கும் பதற்றம். வெற்றி கை நழுவி போகுமோ என்று மத்திய கல்லூரியினர் ஏங்க, தோல்வியிலிருந்து மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கை பரி யோவான் பாசறையில் துளிர் விடத் தொடங்கியது. பரி யோவான் அணி தங்கியிருந்த சிறிய கொட்டிலிற்கு முன்னாலும் சனம் கூடிவிட, கொட்டிலிலிருந்த வாங்குகளில் ஏறி நின்று தான் பரி யோவான் அணி ஆட்டத்தை பார்க்கிறது.


இருபதாவது ஓவரின் கடைசி பந்தை விக்னபாலன் மறித்து ஆட, பரி யோவான் மாணவர்களும் ஆதரவாளர்களும் மைதானத்திற்குள் பாய்ந்து விட்டார்கள்.

நேரம் பிற்பகல் 4:50

மைதானத்தின் நடுவில் பரி யோவான் மாணவர்கள் ஆரவாரிக்க, மத்தியஸ்தர்கள் மட்டும் அசையவில்லை. ஆட்டம் இன்னும் முடியவில்லை, ஆட்டம் முடிய இன்னும் இரண்டு ஓவர்கள் இருக்கிறது என்று அறிவித்தார்கள். மத்திய கல்லூரி அணியினர் ஒரு மணித்தியாலத்தில் வீச வேண்டிய 20 mandatory ஓவர்களை 50 நிமிடங்களில் வீசியதால், மத்திய கல்லூரி பந்துவீச இன்னும் இரண்டு ஓவர்கள் கிடைத்துள்ளது என்ற இடியைத் தூக்கி போட்டார்கள்.

மீண்டும் திக் திக் திக்...

இருபத்தோராவது ஓவரை விஜயராகவனும் "பசைவாளி" விக்னபாலனும் ஒருவாறு நொட்டி சமாளித்து விட்டார்கள். ஆனால் திட்டமிட்ட படி அந்த ஓவரின் கடைசி பந்தில் விக்னபாலன் மறுமுனைக்கு ஓட முடியாமல் மத்திய கல்லூரி அணியின் பந்து வீச்சும் களத்தடுப்பும் விடவில்லை.

இருபத்திரண்டாவது ஓவர், கடைசி ஓவர்

மணிக்கூட்டு கோபுர முனையிலிருந்து தோமஸ் பந்துவீச சுப்ரமணிய பூங்கா முனையில் விஜயராகவன் துடுப்பெடுத்தாட எதிர் கொள்கிறார்.

முதலாவது பந்து.. நேரடியாக விக்கெட் காப்பாளரிடம் செல்கிறது

இரண்டாவது பந்து..எகிறி வந்த பந்து, விஜயராகவனின் தோளில் பட்டு விழுகிறது, வலியை தாங்கிக் கொள்கிறார்

மூன்றாவது பந்து.. முன்னால் வந்து தடுத்தாட அவரது padsல் படுகிறது, bat பின்னால் நிற்கிறது. How is that என்று அணியோடு சேர்ந்து மத்திய கல்லூரியே கத்த, umpire அசையவில்லை

நான்காவது பந்து, மீண்டும் ஒரு bouncer. தலையை குனிந்து batஐ கொடுக்காமல் தப்பி விடுகிறார், விஜயராகவன்

ஐந்தாவது பந்து வீச முன்னர், விஜயராகவனருகில் வந்த விக்னபாலன், அவரை தோளில் தட்டி விட்டு செல்கிறார், வார்த்தைகள் வரவில்லை. ஐந்தாவது பந்து தரையோடு மறித்து விஜயராகவன் ஆட, பரி யோவான் பாசறையில் ஆரவாரம் கேட்க தொடங்கியது.

கடைசிப் பந்து.. எல்லைக் கோட்டை சூழ்ந்து பதினைந்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூட்டம் ஆரவாரிக்க, என்ன நடக்குமோ என்று எட்டிப்பார்க்க மணிக் கூட்டு கோபுரமும் ஒரு நிமிடம் ஓய்வெடுக்க, பண்ணைக் கடலில் மறைந்து கொண்டிருந்த சூரியனும் மட்ச் பார்க்க ஒரு கணம் தாமதிக்க, மைதானத்தில் இருந்த அனைவரின் இதயமும் படபடக்க...

பந்தை வீச தோமஸ் வேகமாக ஓடி வருகிறார்.. விஜயராகவனிற்கு முன்னால் விழுந்து எழும்பிய பந்திற்கு batஐ கொடுக்காமல் தனது நெஞ்சில் பந்தை வாங்குகிறார் விஜயராகவன்.

Match Draw..
 
 

மறுமுனையிலிருந்து ஓடி வந்த விக்னபாலன் விஐயராகவனை கட்டிப்பிடிக்க, பரி யோவானின் பரிவாரங்கள் மைதானத்தில் ஆரவாரத்துடன் குவிய, பரி யோவானின் சிவப்பு கறுப்பு கொடிகள் காற்றில் அசைந்தாடுகின்றன. விக்னபாலனையும் விஜயராகவனையும் தோளில் தூக்கி, ஆனந்த தாண்டவம் ஆடுகிறார்கள் பரி யோவானின் மாணவர்கள். தோல்வியின் விளிம்பிலிருந்து மீட்ட மீட்பர்கள் இருவரின் பெயர்களும் பரி யோவான் வரலாற்றில் பொறிக்கப்படுகின்றது.

மைதானத்தின் மத்தியிலிருந்து பரி யோவான் அணியின் கொட்டிலை நோக்கி தூக்கி வரப்படும் கதாநாயகர்களை நோக்கி
வெள்ளை Shirtம் வெள்ளை Pantsம் அணிந்த ஒரு உயர்ந்த கம்பீரமான உருவம் மைதானத்திற்குள் ஓட்டமும் நடையுமாக
வருகிறது. அந்த கம்பீரமான மனிதனருகில் வந்ததும் விக்னபாலனும் விஜயராகவனும் தோளிலிருந்து இறக்கப்படுகிறார்கள், ஆரவாரமும் சற்று அமைதியடைகிறது.

அடுத்த கணம், அந்த ஆளுமை நிறைந்த மனிதர், விக்னபாலனையும் விஜயராகவனையும் இறுக்க கட்டிப்பிடித்து, முதுகில் தட்டுகிறார், "well done Boys". தங்களை இறுக்கிக் கட்டிப்பிடித்தவரை பார்த்து விக்னபாலனும் விஜயராகவனும் மட்டுமல்ல முழு பரி யோவான் சமூகமே திகைப்பில் திளைத்தது. அந்த திகைப்பிற்கு காரணமானவர் கண்டிப்பற்கும் ஒழுக்கத்திற்கும் பெயர் போன பரி யோவானின் மிகச்சிறந்த அதிபர்களில் ஒருவரான, CE ஆனந்தராஜன்.

கிசு கிசு
ஆட்டத்தின் கடைசி மணித்தியாலத்தை விக்னபாலனின் "கிளி" பார்த்ததாம். மிகுதிக் கதையை கூற அவரது உன்னத நண்பர்கள் மறுத்துவிட்டார்கள்.

கொசுறு
நொட்டி நொட்டி பரி யோவான் அணியை காப்பாற்றிய விக்னபாலனிற்கு, பரி யோவான் பழைய மாணவனும், பரி யோவானின் scoreboard கட்டியவர்களில் ஒருவருமான, தொழிலதிபர் ராஜசிங்கம், தனது கழுத்தில் தொங்கிய தங்கச் சங்கிலியை பரிசளித்தாராம். 125 ஓட்டங்கள் அடித்து Man of the Match ஆக தெரிவான போல் பிரகலாதனிற்கு கிடைத்த பரிசுப்பணம் ரூபாய் 500.

1982ம் ஆண்டு Big Matchன் Best Allrounder ஆக உமாசுதனும், Best Batsman ஆக போல் பிரகலாதனும் Best Bowler ஆக தோமஸும் Best Fielder ஆக பரி யோவானின் DM ரவீந்திராவும் விருதுகளைப் பெற்றார்கள்

வெற்றியின் விளிம்பில்..1982 Big Match (Part 2)

1982 Big Match (Part 1)


No comments:

Post a Comment