Friday, 10 February 2017

ஒரு நாள் ஜொனியன்ஸ்.."டேய் என்ட நகைகளை  அடைகு வச்சு,  டொனேஷன் கட்டித் தான் உன்னை சென் ஜோன்ஸில் சேர்த்தனான்" அம்மா ஒவ்வொரு வருஷமும் மெல்பேர்ண் OBAயின் Dinner Dance வரும்போதும் மறக்காமல் ஞாபகப்படுத்துவா. 1977 இனக்கலவரத்திற்கு பின், மீண்டும் யாழ்ப்பாணம்  செல்ல முடிவெடுத்த போது, சென். பற்றிக்ஸில் படித்த என்னுடைய அப்பா எனக்கு தெரிந்தெடுத்தது சென்.ஜோன்ஸில் கொலீஜ். 

ஜொனியன்ஸிற்கு தங்கள் கல்லூரியின் மேல் பற்று கொஞ்சம் அதிகம். பரி யோவானின் தண்ணியில் என்ன இருக்கிறதோ தெரியாது, பள்ளிக்கூட வளாகத்தை விட்டு பிரிந்த பின்பும் பரி யோவான் நாட்களைப் பற்றி கொஞ்சம் அதிகமாகவே பீத்துவது ஜொனியன்ஸின் தனிச் சிறப்பியல்பு. ஜொனியன்ஸின் இந்த பீத்தலில் அதிகம் பாதிக்கப்படுவது ஜொனியன்ஸிற்கு வாழ்க்கைப்பட்ட புண்ணியவதிகளும் அவர்தம் பிள்ளைகளும் தான். விடுமுறை முடிந்து 2017ம் ஆண்டிற்கு பரி யோவான் மீண்டும் கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு சில நாட்களிற்கு முன்னர் கல்லூரி வளாகத்திற்கு சென்றிருந்த போது, அதிபர் வண. ஞானபொன்ராஜாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. "சேர் என்ட பெடியங்களை ஒரு நாள் ஸ்கூலில் கொண்டு வந்து படிக்க விடவா" என்று எனது பள்ளியில் என்னுடைய பெடியள் படிக்க வேண்டும் என்ற நிறைவேறாத ஆசையை, ஒரு நாளுக்கேனும் நிறைவேற்ற அடித்தளம் போட்டேன். "தாராளமாக, புதன்கிழமை காலம்பற கூட்டிக்கொண்டு என்ட officeற்கு வாரும்" பிரின்ஸிபல் பச்சைக் கொடி காட்டினார். 


கல்லூரிக்கால் வெளிக்கிட்டு, பிரதான வீதியில் வலப்பக்கம் திரும்பி சைக்கிளை மிதிக்க பஸ்தியான் சந்தியில் அண்ணா நிற்கிறார். அண்ணா என்று எல்லோராலும் அன்பாக அறியப்பட்ட SJC89 batch பிரதீபன், பஸ்தியான் சந்தியில் பள்ளிச் சீருடைக் கடையொன்றை நடாத்துகிறார். புதன்கிழமை என்னுடைய பெடியள் கல்லூரிக்கு போக போகும் கதையை சொல்ல, "நாளைக்கு வாரும் உமக்கு 10% discount போட்டு தாறன், நானில்லாட்டி ownerன் friend என்று சொல்லும் தருவினம்" என்றார். 


"Boys, you are going to St. John's for one day" வீட்ட போய் பெடியளிடம் சொல்ல "what...oh no.. we are supposed to be on holidays" அவங்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்க, "உமக்கென்ன விசரா" மனிசி ஆட்டிலறிகளை முன்னரங்கிற்கு நகர்த்திச்சு. "Just do it for me will you, this is appa's dream" உணர்வுகளை வார்த்தைகளாக கொட்டி, கொள்கையில் உறுதியாக நிற்க ,ஆர்ப்பாட்டம் அடங்க, ஆட்டிலறி பின்வாங்கியது.


புதன்கிழமை காலம்பற, அண்ணாவின் கடையில் வாங்கின புத்தம் புதிய வெள்ளை ஷேர்ட்டும் நீல காற்சட்டையும் அணிந்து, school bagல் தினேஷ் வெதுப்பக ரோல்ஸும்  தண்ணிப்போத்தலும் அடைத்து, பரி யோவானில் ஏற்கனவே படிக்கும் தங்கள் மச்சான் வேணிலனுடன் யாழ் பரி யோவான் செல்ல புறப்பட்டார்கள் என்னுடைய செல்வங்கள்.


இருவரையும் தோளில் அணைத்து பரி யோவானின் அந்த கம்பீரமான பிரதான வாயில் வளைவிற்கூடாக கல்லூரிக்குள் காலடி வைக்க, மெய்யாகவே மெய் சிலிர்த்தது. கனவை ஒரு நாளுக்கேனும் நனவாக்கிய கர்த்தரிற்கு மனதுக்குள் நன்றி சொல்லி விட்டு, அலுவலகத்தற்குள் நுழைய பிரின்ஸிபல் நிற்கிறார். "வாரும் வாரும், எங்க அவங்கட college tie" ஒரு நாளுக்கேணும் விதிகளை தளர்த்த அவர் தயாராக இருக்கவில்லை. ஒஃபிஸில் ரெண்டு புத்தம் புது tie வாங்கி, அணிவித்து விட்டேன். 


இருவரையும் தன்னருகில் அழைத்து அவர்களிற்காக ஜெபித்து ஆசீர்வதாம் அளித்து விட்டு, "கோபி, இவரை Year 8லும் இவரை Year 6லும் கொண்டு போய் விடும், Old Boyட பிள்ளைகள் ஒரு நாள் படிப்பினம் என்று class teacherற்கு சொல்லும்", ஏதோஅலுவலாய் அலுவலகத்திற்கு வந்த கோபியின் கையில் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. Library அடியில் கோபி இளையவனை தோமஸிடம் பொறுப்பு கொடுத்துவிட்டு, மூத்தவனை அருளானந்தம் ப்ளொக்கின் மேல்மாடி நோக்கி அழைத்துச் சென்றார். கோபியும் தோமஸும் SJC95 batchகாரன்கள், டொக்டர் சிறியின்ர குறூப். பள்ளிக்கூடத்தில் படித்த காலத்தில் பழைய மாணவர்களின் பிள்ளைகளிற்கு கல்லூரியில் எப்போதும் ஒரு தனிக்கவனிப்பும் முன்னுரிமையும் இருக்கும், இன்று நமக்கும் அது கிடைத்தது மகிழ்ச்சி.


மூத்தவன் நான் படித்த 11B வகுப்பறையில் போய் அமர, சின்னவன் memorial hostel இல் இயங்கும் வகுப்பறையில் போய் அமரந்தான். முதல் மணியடிக்க எல்லோரும் serviceற்கு போனாங்கள். அது முடிய assemblyயும் இரண்டு பாடங்களும் நடந்து இடைவேளைக்கு மணியடித்தது. கல்லூரியின் மைதானத்தில் பரி யோவான் U19 அணி, ஸ்கந்தா அணியை துவம்சம் செய்து கொண்டிருந்தது, ஒரு கட்டத்தில் 4/8 என்ற நிலையில் ஸ்கந்தா பரிதவித்துக் கொண்டிருந்தது. 


இடைவேளை நேரம் மைதானத்திற்கு  மட்ச் பார்க்க வந்த மூத்தவனை யோகதாஸின் மகன் அடையாளம் கண்டு கதைத்துக் கொண்டிருந்தான். சின்னவனை சுற்றி ஒரு சிறு கூட்டம் கூடியிருந்து பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.  இருவரும் கொண்டு போன சாப்பாட்டை ஒரு பிடி பிடித்திருந்தார்கள், சாப்பிடாமல் போனா அம்மா கத்துவா என்று  அவங்களிற்கு யாழ்ப்பாணத்திலும் மறக்காமலிருந்தது. 


இடைவேளை முடிய, athletics selctionற்கு மாணவர்கள் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள். "அண்ணே உங்கட பெடியளிற்கு நீங்க Handy House என்று தெரியும், அவங்கள் Handy House ஓட போய்ட்டாங்கள்" கன்டீன் பக்கம் வந்த தோமஸ், சொல்லி விட்டுப் போனார். பள்ளிக்கூடம் முடிய மீண்டும் பெடியளை கையை பிடித்து அழைத்து கூட்டி வர மனதில் சந்தோஷமாக இருந்தது.   புலம்பெயராமல் இருந்திருந்தால் வாழ வேண்டிய வாழ்க்கையை ஒரு நாளேனும் வாழ்ந்து கழித்த நிறைவோடு மீண்டுமொரு முறை கல்லூரியின் பிரதான வாயில் வளைவு கடந்து வந்தேன். 

தாயகத்திற்கு விடுமுறை காலங்களில்  போகும் போது பிள்ளைகளிற்கு நாங்கள் கொடுப்பது நினைவுகள் தான். நாங்கள் வாழ்ந்த மண்ணில் பிள்ளைகளோடு மீண்டும் வலம் வரும்போது நாங்கள் சிறுவர்களாய் வாழ்ந்த கால நினைவுகளும் மனிதர்களும் எங்கள் கண் முன் வலம் வருவார்கள். அந்தக் கால நினைவுகளை பிள்ளைகளோடு கதைக்கும் போது ஏற்படும் ஆனந்தத்திற்கு அளவேயில்லை. அந்த அனுபவத்தையும் ஆனந்தத்தையும் தான் நனவிடை தோய்தல் என்று இலக்கியவாதிகள் வர்ணிப்பார்களோ? 

தாயகப் பயணங்கள்..
நினைவுகளைத் தேடி
கனவுகள் காணவும்
கனவுகள் நனவாகவும்

No comments:

Post a Comment