Friday, 24 February 2017

கொழும்பு இந்துவில்..
1992 August மாதம் கடைசி வெள்ளிக்கிழமை மத்தியான நேரம்,  A/L கடைசி சோதனை, அளவையியலும் விஞ்ஞானமுறையும் (Logic) பகுதி 2, எழுதப் போய்க் கொண்டிருந்தேன். பல்கலைக்கழக நுழைவு வெட்டுப்புள்ளியில் Management தாண்டுவமா இல்லை BCom தானா என்பதையும், கிளாலி தாண்டி யாழ்ப்பாண கம்பஸ் போக வேண்டுமா இல்லை கொழும்பு கம்பஸில் மரத்திற்கு கீழே இடம் பிடிக்கலாமா என்பதையும் நிர்ணயிக்கும் முக்கியமான சோதனை. 

St.Peters கல்லூரி பஸ் தரிப்பிடத்திலிறங்கி, வாழ்வில் கடைசி முறையாக வெள்ளை நிற பாடசாலை சீருடையில், மத்தியான வெய்யில் சுட்டெரிக்க, லோரன்ஸ் வீதியில் நடக்க இதயம் கனத்தது. இனிய பாடசாலை நாட்களின் பசுமையான நினைவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் மனத்திரையில் தோன்றி மறைந்தது. கொழும்பின் புறநகர் பகுதியான அந்த பகுதியில் தரிசித்திருந்த அழகிய முகங்கள் நினைவலைகளில் மீண்டுமொரு முறை உலாவந்தன.

கிட்டத்தட்ட  இரு வருடங்களிற்கு முன்னர், இதே லோரன்ஸ் வீதியால், யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்து, கொழும்பு இந்துக் கல்லூரியில் அனுமதி கேட்டு, அப்போதிருந்த அதிபரால் அனுமதி நிராகரிக்கப்பட்ட சொல்லொண்ணா வேதனையோடு,  அம்மாவோடு கொளுத்தும் வெய்யிலில் நடந்து சென்றதும் ஞாபகத்தில் வந்தது.  பரி யோவான் கல்லூரியை விட்டு விலகி வேறு ஒரு பாடசாலையில் படிக்க வேண்டி வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை. அப்படியிருக்க,  இன்னொரு கல்லூரியில் அனுமதி நிராகரிக்கப்பட்டது என்பது மனதை கடுமையாக வாட்டியது, வலித்தது.


கோட்டை சண்டையோடு இரண்டாவது ஈழப் போர் தொடங்கியதும், யாழ்ப்பாணத்தில் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. திலீபன் நினைவு நாளில் கோட்டையில் தளபதி பானு புலிக்கொடியேற்றிய அடுத்த கிழமை, இயக்கம் அமுல்படுத்தியிருந்த கடுமையான பாஸ் விதிமுறைகளை தளர்த்திய இடைவெளியில், கொம்படிவெளி தாண்டி கொழும்பிற்கு தப்பியோடிய பலரோடு இணைந்து கொண்டேன். 


கொழும்பில் வந்திறங்கினால், படிக்க அனுமதி தந்த ஒரே பாடசாலை St. Joseph's College தான். ஆனால் அங்கு தமிழில் கொமர்ஸ் பிரிவு இருக்கவில்லை, மீண்டும் மட்ஸ் பிரிவில் விருப்பமில்லாமல் இணைந்து கொண்டேன். பிற பாடசாலைகளில் அனுமதிக்கு போக influence இருக்கவில்லை, தமிழ்க் கல்லூரியான இந்துக் கல்லூரியிலோ அனுமதி மறுப்பு எனும் அவமானம்.


வெள்ளவத்தையில் ஒரு சனிக்கிழமை, தற்செயலாக டொக்டர் வேலாயுதப்பிள்ளையை அம்மா சந்தித்தார். டொக்டர் வேலாயுதப்பிள்ளை அம்மப்பாவின் நல்ல நண்பர், கொழும்பு இந்துக் கல்லூரி அபிவிருத்தி சபையின் தலைவர். அவருக்கு அம்மா இந்துக் கல்லூரியில் அனுமதி கிடைக்காத நிலைமையை சொல்ல, அவர் சொன்னார், "திங்கட்கிழமை மகனை பள்ளிக்கூடத்திற்கு போகச் சொல்லும், அவரின் பெயர் ரெஜிஸ்டரில் இருக்கும்". அடுத்த திங்கட்கிழமை இந்துக் கல்லூரியில் காலடி வைக்க, ரெஜிஸ்டரில் பெயரும் இருந்தது, வகுப்பில் கிரிஷாந்தன், அருள்மொழி, கஜோபன், யாதவன் என்று பரி யோவானில் பரிச்சயமான முகங்களும் இருந்தன. 


கொழும்பு இந்துவில் படிக்க தொடங்கிய முதல் நாளே, பிரபல கணக்கியல் வாத்தி பாக்கியநாதன் மாஸ்டரை AL வகுப்புகளிலிருந்து  OL வகுப்புகளிற்கு மாற்றிய பினாவின் (அதிபரின்) செயலை கண்டித்து, வெடி போட்டு தொடங்கிய கொமர்ஸ்காரன்களின் ஸ்ட்ரைக்கும் என்னை வரவேற்றது. அடுத்து வரும் கிழமைகளில் பினாவிற்கு பல தரப்புகளிலிருந்தும் தொல்லைகள் அதிகமாக, பினா மாற்றலாகி மட்டக்கிளப்பிற்கு பின்வாங்கினார். புதிய பினாவாக ஜொனியன் சிறிபதியின் அப்பாவான ஷர்மா மாஸ்டர் பொறுப்பெடுத்தார்.


கொழும்பு இந்து கொமர்ஸ் பிரிவில் இரு வகுப்புகள் இருந்தன, 12C & 12E. எங்கட வகுப்பான 12Eக்கு திருமதி தங்கராஜாவும் 12Cக்கு செல்வி தங்கராஜாவும் வகுப்பாசிரியர்கள், பெடியளிற்கு பெரிய சுடுதண்ணி சின்ன சுடுதண்ணி. இரு வகுப்புகளும் பாடசாலையின் கோயிலிற்கு முன்னால் இருந்த கட்டிடத்தில் அருகருகே அமைந்திருந்தன. வகுப்பறைகளின் மேல், கல்லூரியின் பிரதான மண்டபம் இருந்தது.  இரு கொமர்ஸ் வகுப்பாரும் இணைந்து நடாத்திய அட்டகாசத்தால் எங்கள் வகுப்பை கொஞ்சம் தள்ளி வைத்து, இடையில் வேறொரு வகுப்பை புகுத்தி, குழப்படியை கட்டுபடுத்த எடுத்த முயற்சி படுதோல்வியில் முடிவடைந்தது.

கொமர்ஸ் பிரிவில் மட்டுமன்றி, மட்ஸ் பிரிவிலும் பரி யோவான் நண்பர்கள் நிறைந்திருந்தார்கள். ரமோ, நவத்தி, நந்தீஸ் என்று நெற்றியில் 4A எழுதிய பரி யோவான் மண்டைக்காய்கள்,  ஹாட்லியிலிருந்து வந்திருந்த கெட்டிக்காரன்களோடும் யாழ் இந்துவின் விண்ணன்களோடும் கொழும்பு இந்துக் கல்லூரி மண்ணில் தேற்றம் நிறுவிக் கொண்டு திரிந்தார்கள். 


பாடசாலை மாறியதால் மட்டுமன்றி அந்நியமான வாழ்விடமும், பழக்கமில்லாத புதிய பிரதேசமும், தீவிர பொலிஸ் கெடுபிடியும்  எல்லோர் முகத்திலும் ஒரு வித இறுக்கத்தை விதைத்திருந்தது. கொழும்பு இந்துவின் மாணவர்கள் கதைத்த கொழும்புத் தமிழை புரிந்து கொள்ளவே கொஞ்ச காலம் எடுத்தது. "மச்சான் கரி வேலை செய்யாதே ஹரித என்று சொல்லுறதில் வாற கரி என்றா என்னடா மச்சான்" என்று கேட்டு "செம நோண்டியான" சம்பவங்கள் "அம்பாணைக்கு" அரங்கேறின. "மச்சான், அந்த புள்ள இன்னிக்கு வத்தள பஸ்ஸில வந்தாடா, அங்கிட்டு இங்கிட்டு பார்த்திட்டு என்னை பார்த்து சிரிச்சாடா, சிராடா" என்று நித்தி கதையளப்பான். சின்ன பிள்ளை சிரிச்சா இவன் ஏன் பரவசப்படுறான் என்று நினைத்து நாங்க குழம்புவோம். 


கொழும்பு இந்துவின் 1992 பிரிவில் எங்கட 13E வகுப்பு தான் கலகலப்பான வகுப்பு. வகுப்பில் முக்கால்வாசி பேர் prefects, footballers, hockey players இல்லாட்டி ஏதாவது ஒரு சங்கத்தின் தலைகள். அந்த முக்கால் வாசி பேரும், தங்கராஜா டீச்சரின் முதல் பாடம் முடிந்து டாப்பு மார்க் பண்ணியதும், வகுப்பிலிருந்து வெளியேறி விடுவார்கள், சிலர் மதில் பாய்ந்து எங்கேயோ போய் விடுவார்கள். ரெஜிஸ்டரில் பெயர் இருந்தால் தான் பிரேமதாசவின் இலவச மதிய உணவு கூப்பன் கிடைக்கும். அந்த கூப்பனை கழிவு விலையில் விற்று வாற "சல்லி" தான் பலருக்கு பொக்கற் காசு.


வகுப்பில் மிச்சம் இருக்கிறவங்கள் எல்லாம்,  தெல்லிப்பழையில் பிறந்து இரு வருடங்களிற்கு முன்னர் கொழும்பில் காலடி எடுத்து வைத்த "கறுத்த கொழும்பான்" அமலனின் வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால்,  "பனங்கொட்டைகள்". மட்டக்களப்பிலிருந்து இடம்பெயர்ந்திருந்த கதாவும் தொண்டாவும் வகுப்பிலிருந்ததால், எங்கள் வகுப்பறையில் யாழ்ப்பாண தமிழும் மட்டக்களப்பு தமிழும், கொழும்பார் வகுப்பில் இல்லாத நேரங்களில், கொஞ்சி விளையாடும். 


கொழும்பு இந்துக் கல்லூரியின் கொமர்ஸ் பிரிவில் படிப்பித்த ஆசிரியர்கள் அநேகர், அவரவர் பாடங்களில் பிரசித்தி பெற்ற ட்யூஷன் வாத்தியார். Logic என்றால் "ரம்போ" ராஜரத்தினம் மாஸ்டர், Commerce என்றால் செல்வநாயகம் மாஸ்டர், Accounts என்றால் பாக்கியநாதன் மாஸ்டர் என்று கொழும்பில் பிரசித்தி பெற்ற வாத்திமாரை இந்துவின் ஆசிரியர் அறையில் காணலாம், அவர்கள் வகுப்புகளிற்கு வருவது வெகு அரிது. ட்யூஷன் கற்பிக்காத திருமதி தங்கராஜா மட்டுமே அக்கறையாக பொருளியல் படிப்பித்தார், அதுவும் ட்யூஷனில் பிரபலமான நவ்பலை விஞ்சும் வண்ணம் படிப்பித்தார்.  தவணைப் பரீட்சை என்று வரும்போது இந்த ஆசிரியர்கள் தயாரிக்கும் வினாத் தாள்களும் அதை அவர்கள் திருத்தி புள்ளிகள் இடும் முறையும் அதியுயர் தராதரத்திலிருக்கும். இந்த நல்லாசான்களின் பரீட்சை தயார்படுத்தலே எங்களது ஆண்டில் கொழும்பு இந்துக் கல்லூரியில் கொமர்ஸ் பிரிவிலிருந்து பலருக்கு கம்பஸ் கனவு பலிக்க வழிகோலியது. 


வடகிழக்கிலிருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வந்த மாணவர்களை அரவணைத்து அவர்களின் வாழ்வை வளப்படுத்தியதில் கொழும்பு இந்துக் கல்லூரிக்கு பெரும் பங்குண்டு. பாடசாலை செயற்பாடுகளில் எங்களையும் உள்வாங்கி, எங்கள் திறமைகளிற்கு புடம் போட மேடைகள் தந்து, எங்கள் வெற்றிகளில் களிகூர்ந்த கொழும்பு இந்துக் கல்லூரி ஆசிரியர்களையும் நண்பர்களையும் வாழ்வில் மறக்கவே இயலாது. 


கொழும்பு இந்துவின் கொமர்ஸ் வகுப்பில் இடம்பெற்ற சில சுவாரசியமான சம்பவங்களும், பதற்றத்துடன் வாழ்ந்த எங்கள் வாழ்க்கையை பம்பலாக்கி நட்புப் பாராட்டிய நண்பர்களைப் பற்றிய நினைவுகளும்... அடுத்த பதிவில்


2 comments: