Friday, 3 February 2017

மண்ணுக்காக
கிளிநொச்சி.. பெயரை கேட்டதுமே மனதில் ஒரு ஏக்கம் வரும். விடுதலைப் புலிகள் கோலோச்சிய காலத்தில் கிளிநொச்சிக்கு சென்று வந்தவர்கள், இன்றும் கிளிநொச்சியை கடக்கும் போது, அந்தக் காலத்தில் கண்டி வீதியின் இருமருங்கிலும் இருந்த காவல் துறை அலுவலகத்தையும், தமிழீழ நீதிமன்றத்தையும், சமாதான செயலக ஒழுங்கையையும், பாண்டியன் சுவையகத்தையும் மனக்கண் முன் கொண்டு வராமல் கிளிநொச்சி கடக்க மாட்டார்கள். 


யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி வீதியில் கிளிநொச்சி நோக்கிச் சென்று ஆனையிறவு வெற்றிச் சின்னங்களை பார்த்து கவலையை வளர்த்து கொள்வதை தவிர்க்கவும், சங்குப்பிட்டி பாதையின் அமைதியான அழகிற்காகவும், கைதடியிலிருந்து பூநகரி சென்று அங்கிருந்து பரந்தன் சந்தியை அடைந்து,  கிளிநொச்சி நகரை அடைந்தோம். காலை வெய்யில் ஏறிக் கொண்டிருந்த அழகிய பொழுதில், கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு அண்மையில் இயங்கும் அம்மாச்சி உணவகத்தில் தம்பி தீபச்செல்வனின் வரவிற்காய் காத்திருந்த சில கணங்களில், அந்தப் பழைய கட்டிடங்கள் கண்முன் ஓடி மறைந்தன.


வடமாகாண விவசாய அமைச்சின் முன்னெடுப்பில் பாரம்பரிய உணவுகளை சுடச்சுட தயாரித்து வழங்கும் உணவகமாக அம்மாச்சி உணவகம் இயங்குகிறது. போரில் பாதிக்கப்பட்ட பெண்களால் நடாத்தப்படும் இந்த உணவகத்தில் பரிமாறப்படும் உணவுகள் நாவிற்கு சுவையானது மட்டுமல்ல உடலிற்கு ஆரோக்கியமானதும் கூட. ஒரு கரையில் பழச்சாறும் கஞ்சியும், அதற்கடுத்து சுடச்சுட அப்பமும், அங்கால தோசை மற்றும் குரக்கன் ரொட்டி என்று எந்த நேரமும் படு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது அம்மாச்சி உணவகம். 

குரக்கன் ரொட்டியும் சம்பலும் சாப்பிட்ட உறைப்பை போக்க மோதகத்தையும் சாப்பிட்டு தேத்தண்ணியும் குடித்து விட்டு, தம்பி தீபச்செல்வன் நெல்லிக்காய் ஜூஸ் குடித்ததை பார்த்து கெலிப்பட்டு, அதையும் வாங்கி குடிக்க வயிறு தான் நிரம்பியது, மனம் அமைதியிழந்திருந்தது. தம்பியிடம் விடைபெற வீதிக்கு வர, அண்ணே ஒருத்தர் வீதியோரத்தில் தனது சைக்கிளை நிறுத்தினார், இடக்கையில் ஒரு நிரந்தர பிளாஸ்டர். அவருடைய இடக்கை செயற்படாது என்பது அவர் சைக்கிளை பிடித்த விதத்திலிருந்து புரிந்தது. 

"அண்ணே என்ன உங்கட காணியை விட்டிட்டாங்களாம்" தீபச்செல்வன் கேட்டார் 

"ஓமடா தம்பி, ஆனா அதுக்க யாரோ போய் கொட்டில போட்டிட்டாங்கள்.. எழுப்புறது பெரும்பாடாய் கிடக்கு" களைத்து விழுந்த முகத்தில் ஆற்றாமையின் அடையாளங்கள் நிறைந்திருந்தன.

"எல்லாம் போராளி குடும்ப மாவீரர் குடும்ப காணியெல்லோ" தம்பியின் குரலில் கவலை குடியேறியது.

"ஓமடா.. அதான் உப்பிடி செய்தவங்கள்... காணியை விடப் போறாங்கள் என்ற அறிவிப்பு வர முதல் உவங்கள் எங்கட ஆக்கள் சேர்ந்து காசை வாங்கிக் கொண்டு யாரோக்கோ சொல்லி போட்டாங்கள்.. அவங்கள் இரவோடு இரவா இடத்தை பிடிச்சு கொட்டில் போட்டிட்டாங்கள்" சைக்கிளை நிறுத்திவிட்டு அதில் கொழுவியிருந்த ஒலைப் பையொன்றை வலக்கையால் கழற்றினார்.


"உங்களிட்ட ஆவணங்கள் இருக்கு தானே" நியாயம் பேச வெளிக்கிட்டார் தம்பி தீபச்செல்வன் 

"அது இயக்கத்தின்ட பத்திரமாம், இப்ப செல்லாதாம், பன்னிரெண்டு குடும்பம் தம்பி, எல்லாம் அந்தரப்படுதுகள்.. அறுவார் அவங்கள் காணியை விட்டாலும் எங்கட சனியன்கள் குறுக்கால நிற்குதுகள்.. நான் வாறன்" ஏக்க பெருமூச்சோடு கிடைக்ககாத நீதி தேடி அரச அலுவலகமொன்றை நோக்கி அண்ணே சென்று கொண்டிருந்தார். 

"கடற்புலிகளின் தளபதி அண்ணே இவர், கடைசி சண்டையில் காயம்.. புனர்வாழ்விற்கு போய் 2014ல் தான் விட்டவங்கள், ரெண்டு பிள்ளைகள், ஒரு உதவியும் இல்லை" தம்பி தீபச்செல்வன் சொல்லிக் கொண்டிருந்தார். 

தம்பி தீபச்செல்வனிடம்  விடைபெற்றுக் கொண்டு வாகனத்தை நோக்கி வர, வீதியில் ஒரு வயதான அம்மா நான்கு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியுடன் ஒரு மரத்திற்கு கீழ் கவலை தோய்ந்த முகத்துடன் நின்று கொண்டிருந்தா. 

"வணக்கம் அம்மா.. எப்படி இருக்கிறியள்" ஏனோ அவாவுடன் கதைக்கோணும் போல இருந்தது.

"என்னத்தை சொல்ல ராசா" அம்மாவின் கண்களில் கண்ணீர் முட்டியது.

"ஏனம்மா என்ன பிரச்சினை" ஆறுதலளிக்க கேட்டேன்.

"ஆமி வீட்ட எங்கட காணியையல்லோ ஆரோ குறுக்கால போவார் வந்து பிடிச்சிருக்கிறாங்கள்" சைக்கிளில் வந்த அண்ணன் சொன்ன பாதிக்கப்பட்ட பன்னிரு குடும்பங்களில் அம்மாவும் ஒருத்தி, இரு மாவீரர்களின் தாய், நிர்க்கதியாய் ரோட்டில். 

" இந்த சின்ன பிள்ளை யாரு அம்மா" பக்கத்தில் ஒரு குச்சியை வைத்து மண்ணில் கீறி விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை காட்டி கேட்டேன்.

"அது பக்கத்து வீட்டிலிருந்த பெட்டையின் பிள்ளை, பெத்து இரண்டாம் கிழமை பிள்ளையை கிணற்றுக்குள் போட்டிட்டு அவள் ஆரோடோ ஓடிட்டாள்.. நான் தான்  தான் தம்பி எடுத்து வளர்க்கிறேன்" ஆற்றாமையின் மத்தியிலும் பிறருக்கு உதவி செய்யும் அம்மாவின் அருமையான மனம் அவரின் வார்த்தைகளில் வெளிப்பட்டது. 

"பிழைப்புக்கு என்னம்மா செய்யுறியள்" எங்களிற்கு பக்கத்தில் வந்து நின்ற ஆமி ட்ரிக்கிலிருந்து இறங்கிய சிவில் உடை தரித்த இராணுவ சிப்பாய்கள், அரச வங்கியொன்றை நோக்கி சென்றார்கள்.

"அவங்களுக்கு இன்றைக்கு சம்பள நாள் தம்பி" அம்மா குசுகுசுத்தா. "பிழைப்பு தம்பி... கோயில் வாசலில் கச்சான் வித்து வாற வருமானத்தில் தான் ஓடுதுடா".

"காணியை திருப்ப எடுக்க என்ன செய்ய போறீங்க" அம்மாவின் கையிலிருந்த பனையோலை பையில் பொலித்தீனால் மூடப்பட்ட ஆவணங்கள் எட்டி பார்த்தன.

"விட மாட்டம் தம்பி, இன்றைக்கு பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க வரச்சொல்லி அறிவித்தல் வந்திருக்கு, அதான் வந்தனான்.. இந்த மண்ணுக்காக தானே தம்பி என்ர செல்வங்கள் தங்கட உயிரையே கொடுத்தவங்கள், அவங்களை..." கண் முட்ட கண்ணீர் பிரவாகம் எடுக்க அம்மா அழுதா. பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி அம்மா அழுவதை கண்டதும் ஓடிவந்து அம்மாவின் கால்களை கட்டிபிடித்தது. 

அந்தந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து தமது நிலத்தை மீட்க நடாத்தும் போராட்டங்களிற்கு வெளியேயிருந்து ஒருங்கிணைத்தளவிலும் பரந்தளவிலும் ஆதரவு கிடைக்காமலிருக்கிறது. இன்றும் கேப்பாப்புலவில் மண்ணுக்காக சனம் வீதியில் இறங்கி இரவிரவாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

யுத்தம் முடிந்து ஏழாண்டுகளாகியும் தமிழர் ஆதரவில் நல்லாட்சி அமைந்து இரண்டாண்டுகள் ஆகியும், இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருக்கும் நிலங்களின் விடுவிக்காமை தமிழ் மக்களின் பிரதான பிரச்சினையாகவே இருக்கிறது. தாய் மண்ணுக்காக இன்னுயிர்களை தியாகம் செய்து போராடிய இனம், யுத்தம் முடிவடைந்த பின்னும் மண்ணுக்காக அரசாங்கத்துடன் போராடிக் கொண்டேயிருக்கிறது. அதேவேளை அரசு விடுவிக்கும் இடங்களை சுருட்டும் எம்மவர்களையும் அதற்கு துணை போகும் அரச அதிகாரிகளையும் என்ன செய்யலாம்? 

அன்று மண்ணுக்காக மரித்தோம்
இன்று மண்ணுக்காக மல்லுக்கட்டுகிறோம்

No comments:

Post a Comment