Friday, 17 February 2017

ரயிலில் யாழ்ப்பாணத்திற்கு
யாழ்ப்பாணம் - கொழும்பு ரயில் பயணங்கள் எப்பவுமே இனிமையானவை, என்றும் நினைவில் நிற்பவை. சிறுவர்களாக இந்த ரயில் பயணங்களை அனுபவித்த நிகழ்வுகள் அடிக்கடி எண்ண அலைகளில் வந்து போகும். பாடசாலை விடுமுறை நாட்களை கழிக்க யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்து போன பயணங்கள் மனதில் பசுமையாக பதிந்து விட்டன. அரச உத்தியோகத்தர்களான அம்மாவிற்கும் அப்பாவிற்கும் கிடைக்கும் ரயில் warrant ஒரு வரப்பிரசாதம், அதுவும் மெயில் ரயிலில் berth கிடைத்த சந்தர்ப்பத்தை மறக்கேலாது. 


யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலங்களில், காலம்பற ஆறேகால் யாழ்தேவி பிடிக்க, அஞ்சரை மணிக்கு தேவன் அண்ணேயின் பழைய மொரிஸ் மைனர் கார் வரும். இளநீல நிற தேவன் அண்ணேன்ட காரில் போய், நிரம்பி வழியும் யாழ் ரயில் நிலையத்தில் இறங்கி, காங்கேசன்துறையிலிருந்து வரும் யாழ் தேவி ரயிலின் என்ஜினை பார்த்து பரவசப்பட்டு, அவசர அவசரமாக ரயிலில் ஏறி, தம்பியோடு யன்னல் கரை சீட் பிடிக்க சண்டை பிடித்து முடிய, நாவற்குழி பாலத்தை ரயில் கடகடவென கடக்கும். 


இந்த முறை யாழ்ப்பாணம் போவது என்று முடிவெடுத்ததும், அருள்மொழியிடம் சொல்லி ஒரு மாதத்திற்கு முன்பே ஏசி ரயிலில் டிக்கெட் பதிவு செய்தோம். வெள்ளவத்தை ரயில் நிலையத்திலிருந்து ஏறலாம் என்றறிந்ததும் இன்னும் கொஞ்சம் பரவசம் அதிகமாகியது. அஞ்சு மணி சொச்ச ட்ரெயினிற்கு, நாலுமணிக்கு எழும்பி குளித்து வெளிக்கிட்டு, வெள்ளவத்தை ரயில் நிலையம் வந்திறங்கினால், கடற்கரை சத்தமும், ஒற்றை லைட்டும், தண்டவாளமும் வரவேற்றது. பிதுங்கி வழியும் சூட்கேஸுகளை ஏற்றி இறக்க, இடுப்பு முறியப் போகுது என்று யோசிக்க "அண்ணே உதவி வேணுமோ", வீதியில் நிறுத்தியிருந்த ஓட்டோவில் இருந்த ஆட்டோத் தம்பி உதவிக்கு வந்தான். 


இந்து மாசமுத்திரத்தின் அலைகள் மோதும் வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் அந்த அதிகாலை வேளையில் யாழ்ப்பாணம் செல்லும் கடுகதி ரயிலில், பிதுங்கி வழியும் சூட்கேஸுகளை காவிக் கொண்டு, "வெளிநாட்டுக்காரர்" என்று ஊர்ச்சனம் பார்வையால் முத்திரை குத்த, ரயிலிற்காக காத்து நின்றோம். சரியான 5:10ற்கு ரயில் வர, கிடுகிடுவென ரயிலில் ஏறி சூட்கேஸுகளை அடுக்க, மூச்சு வாங்கியது, ரயில் கொள்ளுபிட்டியை தாண்டிக்கொண்டிருந்தது.  யன்னல் கரை சீட்டை மனிசி ஆக்கிரமித்திருந்தா. விட்டுத் தரச்சொல்லி சமாதான பேச்சுவார்த்தைக்கு போவமா  இல்லை சண்டைக்கு போவமா என்று யோசித்து முடிய முதல், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் வந்து நின்றது. 


கோட்டை ரயில் நிலையத்தில் ராஜன் குடும்பமும் ஏறிக் கொள்ள, பயணம் களைகட்டியது. இருபத்தாறு ஆண்டுகளிற்கு பின்னர் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய ரயில் பயணம், முன்னர் அப்பா, அம்மா, அம்மம்மா, பப்பாவோடு பயணித்தது ஞாபகத்தில் வந்தது. ரயில் புறப்பட்டு மருதானை தாண்ட, "மச்சான், ஒரு கோப்பி குடிப்பமாடா" என்று கேட்க, பிள்ளைகளும் எங்களோடு இணைய, ரயிலின் கன்டீனில் சுடச்சுட நெஸ்கஃபேயும் மாலு பாணும் சாப்பிட்டோம். கன்டீனில் பொலிஸ்காரனை கண்டு டென்ஷனாகி கோப்பியை மேசையில் ஊத்திப் போட்டு "ட்ரெய்ன் ஆட்டம் கூடவா இருக்குடா" என்று ராஜன் சமாளித்தான். 
கோப்பி குடித்து உற்சாகமான ராஜன், திரும்ப வந்திருந்து ஓடும் ரயிலில் தமிழ்ப் பாட்டு பாடத் தொடங்கினான். திறக்க முடியாத யன்னலிற்கு வெளியே பச்சை வயல்வெளிகளும், புத்தர் சிலைகளும், தென்னை மரங்களும், ரயில் கடவைகளில் மனிதர்களும் வழியனுப்பி வைக்க, குருநாகலும் வியாங்கொடவும் பொல்கஹவெலவும் தாண்டி யாழ்ப்பாணம் நோக்கி ரயில் முன்னேறிக் கொண்டிருந்தது. பள்ளி விடுமுறையாதலால் வெள்ளைச் சீருடையணிந்து வரப்புகளில் அன்னநடை பயிலும் சிங்களக் குமரிகளை காணவில்லை.

தலாவ ரயில் நிலையம் தாண்டியதும், நடுக் காட்டில் ரயில் நிறுத்தப்பட்டது. அழகான காலை வேளையில் மரங்கள் நிறைந்த காட்டில் ரயில் நிறுத்தப்பட, கதவை திறந்து படபடவென செல்ஃபி எடுத்து தள்ளினோம். கனநேரம் ரயில் நிற்க, இறங்கிப் போய் பார்த்தால், இரண்டு பெட்டிகளை இணைக்கும் அச்சாணி ஒன்றில் ஒரு பிளவு வந்திட்டுது என்று அவங்கள் கதைத்த சிங்களத்திலிருந்து விளங்கியது. ஒருவாறு அதைச் சரிக்கட்டிக் கொண்டு மெது மெதுவாக வந்து அநுராதபுரம் ரயில் நிலைத்தில் திரும்ப நிற்பாட்டி, மீண்டும் பழுதுபாரத்தார்கள். 


மதவாச்சி தாண்ட மண்வாசனை மனதில் மணந்தது. வவுனியா ரயில் நிலையத்தில் ரயில் நிற்க, வடையும் வாழைப்பழமும் தந்து வரவேற்றான் பள்ளிக்கால நண்பன் சுது சிறி. வன்னிக்காடுகளிற்கூடாக A9 வீதியை கொஞ்சிக் கொண்டு ரயில் பயணிக்க, ஜயசிக்குரு கால புளியங்குளம், கனகராயன்குளம், மாங்குளம் போன்ற இடங்கள் ஒவ்வொன்றாய் நினைவில் வந்து தொலைத்தன. பக்கத்து சீட்டிலிருந்த சிங்கள குடும்பம் வரைபடத்தை விரித்து வைத்து அடுத்து வரும் ஸ்டேஷனை எதிர்வுகூறி எரிச்சலை அதிகப் படுத்தினார்கள். 


கிளிநொச்சியை ரயில் அண்மிக்க பச்சை பசுமையான வயல்வெளிகள் கண்ணிற்கு விருந்தாகின. பாரிய சில தொழிற்சாலை கட்டிடங்களும் ஆங்காங்கே தெரிந்தன. கிளிநொச்சி ரயில் நிலையத்தில் சில நிமிடங்கள் தரித்து நின்ற ரயில், யாழ்ப்பாணம் நோக்கி வேகமெடுத்தது. ஆனையிறவு வெளியை ரயில் கடந்து தென்மராட்சிக்குள் ரயில் நுழைய, மொட்டை தென்னை மரங்கள் இருந்த இடங்களில் புதிய மரங்கள் துளிர் விட தொடங்கியிருந்தன. 


சாவகச்சேரி தாண்டி நாவற்குழி பாலம் கடக்க, கதவை திறந்து யாழ்ப்பாண காற்றை ஆசை தீர சுவாசித்தேன். தண்டவாளத்தை தொட்டு விடும் தூரத்தில் இருந்த வீடுகளை கடந்து வீறுடன் ரயில் யாழ்ப்பாண ரயில் நிலையத்தை ரயில் அடைந்தது. மீண்டும் மண்ணில் கால்பதிக்க உள்ளம் உவகையில் திளைக்க, கண்களின் ஓரத்தில் ஏனோ ஈரம் கசிந்தது. மண்ணைத் தொட்டு நெற்றியில் ஒற்ற, எங்கோ தூரத்தில் தாயகப் பாடலொன்று ஒலித்தது போலிருந்தது

இந்த மண், எங்களின்
சொந்த மண்No comments:

Post a Comment