Friday, 27 January 2017

வீழமாட்டோம்ஒவ்வொரு ஆண்டும் உலகம் முன்னேறிக் கொண்டேயிருக்கிறது. 1980களின் இறுதியில் சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியுடன் சோஷலிஸம் முடிவிற்கு வர, உலகமயமாக்கல் (Globalosation) எனும் முதலாளித்துவ (Captilasm) குதிரையில் ஏறி இந்தியா, சீனா, பிரேஸில், மலேசியா உட்பட பல வளர்ந்துவரும் நாடுகள் பொருளாதாரத்தில் வெகுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றன. 1970களில் யுத்தத்தால் அழிவடைந்த வியட்நாமும் பங்களாதேஷும் கூட இந்த பயணத்தில் இணைந்து பயனடைய தொடங்கி விட்டன. 


1977ல் திறக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரத்தால் நன்மையடைய வேண்டிய தமிழினத்தை பேரினவாதம் திட்டமிட்டு அழித்த வரலாறே 1983 இனக்கலவரம். அன்றிலிருந்து இருபத்தாறு ஆண்டுகள் நாங்கள் யுத்தத்தில்  அழிவுகளை சந்தித்தது மட்டுமல்லாமல் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களையும் தவறவிட வைக்கப்பட்டோம். ஒரு புறத்தில் எங்கள் பொருளாதாரமும் வாழ்க்கை தரமும் பின்னோக்கி செல்ல, சிங்களவர்களும் முஸ்லீம்களும் தங்களை பொருளாதார, கல்வி, சமூக ரீதியாக பலப்படுத்திக் கொண்டு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களை தமதாக்கிக் கொண்டார்கள்.


நாங்கள் மீண்டும் ஒரு பலமிக்க இனமாக மீளெழ எங்கள் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். யுத்தம் முடிவடைந்து கடந்த ஏழாண்டுகளில் எங்கள் ஒட்டுமொத்த சக்தியும் தேர்தல் களங்களிலும் அவை ஏற்படுத்திய வெற்று நம்பிக்கைகளிலும் சர்வதேசத்தின் பால் வைத்த நம்பிக்கையிலும் கரைந்து விட்டது என்பது கசப்பான உண்மை. 

---------------------


நம்மில் பெரும்பாலானோர் கடும் அரசியல் பேசி காலத்தை வீணடித்துக் கொண்டிருக்க மண்ணில் இளைய தலைமுறை சுயமாக தொழில் முயற்சிகளை ஆரம்பித்து வேலை வாய்ப்புக்களை உருவாக்கி, தம்மையும் வளமாக்கி சமுதாயத்திற்கும் பலனளிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதை நேரடியாக காணும் வாய்ப்பை கடந்த தாயகப் பயணம் தந்தது. அளவில் சிறியளவிலான இம்முயற்சிகளிற்கு ஒரு சமூகமாக நாங்கள் தரப்போகும் ஆதரவும் ஊக்கமும் இது போன்ற பல முயற்சிகளுக்கு நிட்சயமாக விதையாக அமையும்.

----------------


மெல்பேர்ணை தளமாகக் கொண்டியங்கும் நண்பன் ஜெயபிரகாஷின் JeyLabs நிறுவனம், சட்டநாதர் கோவிலடியில் Ceymplon என்ற பெயரில் தனது யாழ்ப்பாணக் கிளையை ஆரம்பித்துள்ளது. தமிழர்களால் தமிழர்களைக் கொண்டு யாழ்ப்பாண்தில் இயங்கும் மென்பொருள் (software) நிறுவனமான Ceymplon, IT கற்கை நெறிகளில் ஈடுபடும் மாணவர்களிற்கு பயிற்சி (internship) வசதிகளையும் வழங்கி வருகிறது. 
இருபதிற்கு மேற்பட்ட இளைஞர்களிற்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ள இந்நிறுவனம், வட மாகாண சபையின் சுற்றுலா இணையத் தளத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. 

புலத்தில் நமக்கு தெரிந்த மென்பொருள் சம்பந்தமான வேலைத்திட்டங்களை (software development projects) இந்த நிறுவனத்திற்கு அளிப்பதன் புலம், இந்த சிறிய நிறுவனத்தை மேலும் பலமாக்கி, பெங்களூர், சென்னை போல் யாழ்ப்பாணத்தையும் ஒரு software hub ஆக்க நாங்கள் துணை நிற்கலாம். 

www.ceymplon.lk

---------------

மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலை தாண்டி ஒரு ஒழுங்கைக்கால விட்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள சேதன முறை விவசாய பண்ணை (organic farm) ஒன்றை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. கணக்காளராக வேலை செய்த சசி, இந்தப் பண்ணையை நடாத்துகிறார். சசியும் ஒரு ஜொனியன். மாடு, கோழி, வாத்து, மண்புழு, காளான், வாழைமரம், மரக்கறி என தோட்டம் நிரம்பியள்ளது. மாட்டின் சாணத்தை வைத்து எரிவாயுவும் தயாரிக்கப்படுகிறது, மிஞ்சிய சாணம் பயிர்களிற்கு உரமாகவும் பயன்படுகிறது. யாழ்ப்பாணத்தில் சேதன முறை விவசாயத்தின் முன்னோடியான "ஜொனியன்" ஜூட் ஜோசப் அண்ணாவின் ஆலோசனகளை உள்வாங்க தம்பி சசி ஆவலோடு காத்திருக்கிறார். 

-----------------

சென்னை ரங்கநாதன் தெருவில் போய் மனிசி சாரிகள் வாங்கும் போது வரும் கடுப்பு, இந்த முறை கிளிநொச்சியில் மனிசி சாரி வாங்கும் போது வரவில்லை. "எவ்வளவு வேண்டுமென்றாலும் வாங்கு ராசாத்தி" என்று பர்ஸை கொடுத்து விட்டு, ஸ்டூலில் உட்கார்ந்து விட்டேன். கிளிநொச்சியில் மனிசி வாங்கின சேலைகள் அனைத்தும் துணுக்காயிலும் பாண்டியன்குளத்திலும் இயங்கும் கைத்தறி தொழிற்சாலைகளில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எங்கட பெண்கள் நெய்த சேலைகள். 

 

கொஞ்சம் கொஞ்சமாக தலைநிமிர முயற்சிக்கும் என்னினத்தை நினைத்து பெருமைப் பட்டுக் கொண்டிருந்த தருணத்தில் "பிக் மேட்சிற்கு வந்த போது கொழும்பில் நீர் வாங்கின சாரிகளை விட, இந்த சாரிகள் எவ்வளோ better" என்று மனிசி திட்டியதும் காதில் சரியாக விழவில்லை. 


யாழ்ப்பாணத்தில் நாங்க நிற்கும் போது சுண்டுக்குளி மகளிர் கல்லூரி 1995 batch தங்களுடைய reunion நிகழ்வை யாழ்ப்பாணத்தில் நடாத்திக் கொண்டிருந்தார்கள். கல்லூரியில் நடந்த ஆசிரியர்களிற்கான கெளரவிப்பு நிகழ்விற்கு பல நாடுகளிலிருந்து வந்திருந்த அப்போதைய 1995 batch பெட்டைகள் (இப்போ அன்டிமார்) எல்லோரும் துணுக்காயில் நெய்த ஒரே டிசைனிலான கறுப்பு சிவப்பு கைத்தறி சேலைகளை அணிந்து சென்று மண்ணை மகிமைப்படுத்தினார்கள்.


Viberல் படம் அனுப்பி postல் வெளிநாட்டுக்கும் அனுப்பி வைப்பார்களாம். உங்கள் அடுத்த கைத்தறி சேலை வாங்க +94 (76) 315 0020ல் தொடர்பு கொள்ளுங்கள். 

 
--------------------

"தமிழன்டா", "வீழ்வேனென்று நினைத்தாயோ" போன்ற உணர்வு பொங்கும் வாசகங்களை தாங்கியும், அழகாக பெடியளிற்கு பிடித்த மாதிரி T'Shirt வடிவமைப்பது தம்பி அக்சரனின் AkiY TeeS நிறுவனம். பரி யோவான் கல்லூரியின் 1988 batch தங்களது reunionக்கான T'Shirtகளை தன்னிடம் வடிவமைத்ததையிட்டு பெருமிதம் கொண்டார் அக்சரன். நல்லூர் பின் வீதியில் அவரது வீட்டின் ஒரு பாகத்தில் இயங்கும் அக்சரனின் அலுவலகம், விரைவில் சொந்தமாக ஒரு தொழிற்சாலையை ஆரம்பிக்க உள்ள செய்தி இனித்தது. 

Facebook மூலமாக ஓடர் செய்யும் வசதிகளை ஏற்படுத்தியுள்ள அக்சரனின் முயற்சிக்கு ஆதரவளிக்க மனமிருந்தாலே போதும்.  நாம் பணியாற்றும் நிறுவனங்கள், பங்கு கொள்ளும் கழகங்கள், ஒன்றுகூடும் நிகழ்வுகள் என்று எத்தனையோ தேவைகளிற்கு தென்னிலங்கையில் தயாரிக்கும் T'Shirtகளை வடக்கில் இயங்கும் நம்மவர் ஒருவரிற்கு கொடுப்போம், நமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப துணை நிற்போம். 

பரி யோவான் கல்லூரியில் படித்த ஜொனியன்ஸிற்கு Big Matchற்கு சிவப்பு கறுப்பு நிறங்களில் விதம் விதமாக T'shirt மற்றும்  தொப்பிகள் வடிவமைத்து பிரபலமான தம்பி அக்சரனின் தமிழ் மணம் மணக்கும் T'shirt வாங்கலாம் என்று உச்சி வெய்யிலில் அவரின் வாசலில் போய் நின்றால், அவரின் பதில் கோபத்தை கொப்பில் கொண்டு போய் வைத்தது

"அண்ணே, extra large sizeல் நான் கனக்க T'Shirt அடிக்கேல்ல.. அடிச்சது முடிஞ்சுது.. நீங்க மெலியுங்கோண்ணே.. மெலிஞ்சா விஜயைப் போல இருப்பீங்களண்ணே"

"டேய்.. தமிழன்டா.. ... மெலிவேன் என்று நினைத்தாயோ...குண்டா கறுப்பா இருந்தால் தான் தமிழன்டா..."


--------------

"எங்கேயடா எங்கட யாழ்ப்பாண பணியாரங்கள் சாப்பிடலாம்" என்று கேட்க யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியடியில் இயங்கும் தம்பி ஜீவதர்ஷனின் மாருதம் உணவகத்தினை நோக்கி கையை காட்டினார்கள். கல்லா பெட்டிக்கு பின்னால் நின்ற காற்சட்டை போட்ட சிங்கம் சிரித்துக் கொண்டே வரவேற்க, நிமிர்ந்து பார்த்தால், சுவரில் எழுதியிருந்த வாசகங்கள் பெருமிதம் கொள்ள வைத்தன.
"தம்பி, சூசியம் ஒன்று தாடா.."
" அண்ணே, வந்தது காலம்பறயே முடிஞ்சுது"

"அப்பன் வாய்ப்பன் இருக்கோ.."
"இப்ப வந்திடும் எப்பன் பொறுங்கோ.. "

"அப்ப இப்ப குடிக்க பப்பா ஜூஸ் தாடா"
"டேய்.. அண்ணேக்கொரு பப்பா போடு.. உரும்பிராய் பப்பா பழத்தை போட்டடி"

"அப்படியே ஒரு போளியும் தாங்க ராசா"
"இங்க இப்ப போலிகள் மலிஞ்சு போச்சண்ணே"

நான் பப்பா ஜூஸை உறிஞ்சிக் கொண்டே போளியை கடிக்க, தம்பி ஜீவதர்ஷன் யாழ்ப்பாணத்தின் மரக்கறி சந்தை நிலவரம், யாழில் தம்புள்ளை சந்தை செலுத்தும் தாக்கம், மரக்கறி விலை ஏற்ற இறக்க காரணிகள், கடலுணவு சந்தை நிலவரம், கொழும்பிற்கு ஏற்றப்படும் நண்டுகள் என்று யாழ்ப்பாண பொருளாதாரம் பற்றி ஒரு குட்டி விரிவுரையே நடாத்தினார். 


அடப்பாவி, எந்த நேரமும் ஃபேஸ் புக்கில் அரசியல், கிரிக்கெட், சினிமா என்று கலாய்த்துக் கொண்டிருக்கும் உன் விரல் நுனியில் யாழ்ப்பாணத்தின் பொருளாதார புள்ளிவிபரங்கள் சுற்றியிருப்பதை பார்த்து அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லையடா.

"தம்பி, ஒரு நெல்லி ஜூஸ் அடிக்கலாமா"
" ஒமண்ணே, பின்னேரமா வாங்கோண்ணே, மிதிவெடி தயாராயிருக்கும்"


------------------------

நாம் பொருளாதார ரீதியாக பலமாக இருந்த 70களின் காலப்பகுதியே அரசியல் ரீதியாக துணிந்து குரல் கொடுக்கும் துணிவை நமக்கு தந்தது. புலத்தில் நாமடைந்த பொருளாதார செழிப்பே எந்த நாட்டின் ஆதரவுமின்றி ஆயுத போராட்டத்தை முன்னெடுக்க வழியமைத்தது. அரசியல் உரிமைக்காகவும் நீதிக்காகவும் போராடிக் கொண்டே அழிவடைந்து போயுள்ள எங்கள் பொருளாதாரத்தையும்  கட்டியெழுப்ப முனைப்புடன் செயற்பட வேண்டிய காலத்தில் நாங்கள் வாழ்கிறோம். 


தாமும் தலை நிமிர்ந்து தமிழர் பொருளாதாரத்தையும் தலைநிமிர வைக்க முயற்சிக்கும் இந்த சிறு முயற்சிகளிற்கு தோள் கொடுப்பது நமது காலத்தின் கடமை. 

வீழ மாட்டோம் நாம்
வீழ மாட்டோம்
வீழ விடமாட்டோம் நம்மவர்
வீழ விடமாட்டோம்

Friday, 20 January 2017

வாழ்வது தமிழ்...
அஞ்சாத சிங்கம் என் காளை
இது பஞ்சா பறக்கவிடும் ஆளை

என்று தொடங்கும் பீ.சுசீலா பாடிய பாடலிற்கு பத்மினியும் தோழியரும் ஆடி முடிய, வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வரும் ஜல்லிக்கட்டு காட்சியை யாரும் மறக்க மாட்டார்கள். வெள்ளையம்மாவை (பத்மினி) மணமுடிக்க அவள் வளர்த்து வரும் காளையை வெள்ளையத்தேவன் (ஜெமினி கணேசன்) அடக்கும் காட்சி, திரைப்படத்தில் பத்து நிமிடமளவு விரியும். 

கூரான கொம்பு ரெண்டு 
சீராக மின்னக்கண்டு 
வீரத்தை வீரனெல்லாம் 
கூறாமல் போனதுண்டு 
மாறாத ஆசையுடன் 
வீராப்பு பேசிக்கொண்டு 
மாட்டைப் பிடிக்க வந்து 
ஓட்டம் பிடித்ததுண்டு தமிழ்நாட்டு தமிழர்களின் பொங்கல் பண்டிகையை ஒட்டிய பண்பாட்டு நிகழ்வாக திகழும் ஜல்லிக்கட்டை, இந்திய உயர்நீதிமன்றம் தடை செய்து மூன்றாண்டுகளாகிறது. இந்தாண்டு, இந்த தடை மீண்டும் உறுதிப்படுத்தப்பட, தமிழ்நாட்டு இளைஞர்கள் வீதியில் இறங்கி தடைக்கெதிராக போராட தொடங்க, திரையுலகமும் அரசியல்வாதிகளும் ஈழத்தமிழர்களும் அவர்களுக்காதரவாக களத்தில் இறங்கியிருக்கிறார்கள். 


ஜல்லிக்கட்டின் தாய் வீடான அலங்காநல்லூரில் தொடங்கிய போராட்டம் யாழ்ப்பாணத்தின் நல்லூரையும் தாண்டி மெல்பேர்ண், சிட்னி, லண்டன் வரை வியாபித்திருக்கிறது. தமிழ் மக்களின் பண்பாட்டை காக்க, இன உணர்வோடு, தமிழன் என்ற ஒற்றை அடையாளத்தில் தமிழர்கள் ஒன்று திரண்டு போராடுவது  மகிழ்ச்சி, சந்தோஷம், பெருமை.


அறுபதுகளில் இந்தி மொழி திணிப்பிற்கெதிராக கிளர்ந்தெழுந்து தமிழ் மொழி காக்க போராடிய தமிழகம், இன்று தனது பண்பாட்டிற்கெதிராக விழுந்த தடையால் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்திருக்கிறது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், முதலமைச்சரின் வீட்டு வேலைக்காரியையும் முதலமைச்சாராக்கி அழகு பார்க்கப் போகும் அசிங்கத்தை எதிர்பார்த்திருந்த தமிழ் கூறும் நல்லுலகிற்கு, ஜல்லிக்கெட்டிற்கு ஆதரவாக அணிதிரண்ட தமிழக இளையோர் சற்றே ஆறுதலளித்திருக்கிறார்கள்.  


2009ல் தமிழீழத்தில் நடைபெற போகும் மனித பேரவலத்தை நிறுத்தக் கோரி தமிழகத்தில் அரங்கேறிய போராட்டங்களை சாதுரியமாக அடக்கி வெற்றிக்கண்ட இந்திய மத்திய அரசு, பாரம்பரிய தமிழ்ப் பண்பாட்டை காக்க இடம்பெறும் இந்த போராட்டத்தையும் ஒடுக்கி வெற்றி பெறாது, வெற்றி பெற கூடாது என்பது உலகத் தமிழர்களின் அங்கலாய்ப்பாக இருக்கிறது. இன்று தமிழகத்தில் இடம்பெறும் இந்த மக்கள் எழுச்சியை இருட்டடிப்பு செய்யும் இந்திய ஊடகங்கள் அன்றும் அதே கைங்கரியத்தை செய்ததை நினைவூட்டிக் கொள்வது அவசியமாகப்படுகிறது.


2013ல் இங்கிலாந்தின் Channel 4 தொலைக்காட்சி வெளியிட்ட பாலச்சந்திரன் 
படுகொலை தொடர்பான காணொளி, தமிழக மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்திய அதிர்வலை மாநிலம் தழுவிய போராட்டமாக வெடித்தது. சென்னை லயோலா கல்லூரியில் எட்டு மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்ததும் சகோதரி செங்கொடி தீக்குளித்ததும் போராட்டத்திற்கு உரமாக, ஜநா தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்கக் கோரி தமிழக மாணவர்கள் போராடினார்கள். 


2009ல் தமிழீழத்தில் இடம்பெற்ற யுத்தத்தை நிறுத்த தலையிட மறுத்த இந்திய மத்திய அரசிலிருந்து விலகாத திமுக, பாலச்சந்திரனின் படுகொலையை சாட்டாக வைத்து 2013ல் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசிலிருந்து வெளியேறியது. ஜெயலலிதாவின் அதிமுகவோ சட்டசபையில் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்புக் கோரி தீர்மானம் நிறைவேற்றி தன் பங்கிற்கும் ஏதோ செய்தது. 


2013ல் தமிழக மாணவர்கள் நடாத்திய போராட்டம் "அறப்போர்" எனும் ஆவணப்படமாக வெளிவந்து, பல திரைப்பட விமர்சகர்களின் பாராட்டை பெற்றது. ஆங்கிலம், ஃபிரெஞ் மொழி sub titles ஓடு வெளிவந்த இந்த ஆவணப்படத்தை Channel 4ன் Callum McRaeயும் பாராட்டி வாழ்த்தினார். ஆனால் இன்றுவரை ஈழத்தமிழர்களிற்கு நீதியும் கிடைக்கவில்லை பொது வாக்கெடுப்பும் நடைபெறவில்லை. திமுகவிலிருந்து குஷ்பூ காங்கிரஸிற்கு தாவ, மீண்டும் காங்கிரஸும் திமுகவும் கூட்டாளிகளாகி விட்டார்கள். 


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களமிறங்கியிருக்கும் தமிழக இளையோர்களிற்கு 2009ன் தோல்வியும் 2013ன் ஏமாற்றமும் படிப்பினைகளாக இருக்கும் என்று நம்புவோமாக. 1960களில் இந்தி மொழித் திணிப்பிற்கெதிராக தமிழகத்தில் எழுந்த தமிழுணர்வும் 1970களில் எங்களது இளைஞர்கள் தமிழீழ தனியரசமைக்க ஆயுதம் ஏந்த வைத்த காரணிகளில் ஒன்றாக வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்கிறார்கள். 


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முரட்டுக்காளை படத்திலும் ஜல்லிக்கட்டு காட்சி வரும். ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் காளையனாக தலைவர் பட்டையைக் கிளப்புவார். காளையை அடக்கிவிட்டு தனது பரிவாரங்களுடன் தலைவர் பாடிக்கொண்டே ஊர்திரும்புவார். 

பொதுவாக எம் மனசு தங்கம்
ஒரு போட்டினு வந்துவிட்டா சிங்கம்
உன்மையே சொல்வேன்... 
நல்லதே செய்வேன்
வெற்றி மேல் வெற்றி வரும்

தங்கமான மனதோடு நல்லதையே செய்யும் தமிழக மக்களிற்கு இந்த முறையாவது வெற்றி மேல் வெற்றி வரும் என்பது உலகத் தமிழர்களின் அவா, எதிர்பார்ப்பு, விருப்பம். போராட்டத்தை தொடங்குவதில் இருக்கும் வீரியத்தை போராட்டம் வெற்றி காணும் வரை நிலைக்கச் செய்ய எல்லாம் வல்ல ஆண்டவன் அவர்களிற்கு ஆசி வழங்கட்டும். போராட்டத்தை நீர்த்து போக செய்ய எடுக்கப்படும் முயற்சிகளை முறியடிக்க தமிழ் மொழிக்காகவும் மண்ணிற்காகவும் இறுதிவரை களமாடி வித்தாகிய மாவீரர்களின் ஆத்மாக்கள் வழிகாட்டட்டும். 

அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது உறைக்க உறைக்க Chilli பரோட்டாவும் சுடச்சுட தேத்தண்ணியும் வாங்கித் தந்துவிட்டு பக்கத்திலுருந்து காதுக்குள் முழங்கிய தம்பி கேதாரின்,  ஈழத்துக் கவி க.சச்சிதானந்தனின் கவி வரிகள் தமிழ் பண்பாடு காக்க போராடும் எம்மவர் மனங்களை நிட்சயம் பலமாக்கும். 1970களில் தமிழர் விடுதலை கூட்டணியின் பிரச்சார மேடைகளை அலங்கரித்து, போராட்டத்திற்கு வித்திட்ட வரிகளவை.

சாகும்போதும் தமிழ்படித்துச் 
சாகவேண்டும் 

என்றன் உடல் சாம்பலும் 
தமிழ்மணந்து வேகவேண்டும்

பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும்
பைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்

ஓடையிலே என்சாம்பல் ஓடும்போதும்
ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்.