Tuesday, 26 December 2017

மெல்பேர்ணில் Boxing Day
காலம்பற நல்ல நித்திரையில் இருக்கும் போது, மிருதுவாக யாரோ நெற்றியை தடவுற மாதிரி கனவு வந்தது. கனவு கொஞ்சம் நீளாதா என்று நினைக்க...பச்சக்.. நெத்தியில் முத்தம். 

“தேத்தண்ணி போட்டு வச்சிருக்கிறன்..நான் போய்ட்டு வாறன்”

ஜயோ.. மனிசியின் குரல்...அப்ப நெத்தியை தடவினதும்..பச்சக் கிடைத்ததும்.. கனவல்ல.. நினைவு தான்.

திடுக்கிட்டு எழும்பி.. ஃபோனை தூக்கினால், அது 7:00 மணி, 26 Dec 2017 காட்டுது... Boxing Day.

Garageக்கால் கார் வெளிக்கிடும் சத்தம் இடியோசை போல கேட்கிது. புலி புறப்பட்டு விட்டது...shoppingற்கு. கலங்கிய நித்திரையில் கட்டிலில் நிமிர்ந்து இருந்து ஃபோனைத் தட்டினேன் 

“ஹலோ...” மறுமுனையில் அவ்வளவு அன்பு, பாசம், காதல்.

“எந்த shopping centreற்கு போறீர்?” பதற்றத்தை கட்டுப்படுத்திக் கொண்டேன்.

“Chadstoneற்கு தான்.. அங்க தான் நல்லம்” மகிழ்ச்சியில் மறுமுனை ஒலித்தது.

“பார்த்து ராசாத்தி.. credit card பாவம்... பார்த்து பக்குவமா இழும்.. உமக்கும் கை நோகும்” கரிசனையை காதலில் கலந்து கலக்கத்துடன் பரிமாறினேன்..

“சரி..சரி.. காலங்காத்தால கடிக்காதேயும்” மறுமுனை தொடர்பையிழந்தது.

“கர்த்தரே credit cardஐ காப்பாற்றும்” என்று ஜெபித்துவிட்டு, திரும்பி படுத்தால், “வேலைக்காரன்” படத்தில் இடைக்கிடை வந்த நயன்தாராவைப் போல், நித்திரையும் வர மறுத்தது.

“அப்பா...ஆ” பாசக்கார பயலொருத்தனின் குரல் கேட்டு அரை நித்திரையும் கலைந்து எழுந்தால், ஒஸி ஜேர்ஸி அணிந்து கொண்டு சந்தோஷ் கட்டிலிற்கு பக்கத்தில் நிற்கிறான். 

“Wake up.. we have to go”, பள்ளிக்கூட நாட்களில் தட்டியெழுப்பும் பிள்ளை, cricket match பார்க்கப் போக என்னை எழுப்பும் போது, நேரம் 8:00 மணி, 26 December.. Boxing Day.

மெல்பேர்ணில் MCGயில் Boxing Day Test Match பார்க்கப் போவது ஒரு பாரம்பரியம். அதுவும் இங்கிலாந்து அணியோடு Ashes Test Match என்றால் இன்னும் விசேஷம். ஆண்டுக்கொருமுறை அரங்கேறும் ஒரு புனித பயணம் (Pilgrimage) என்றும் சொல்லலாம்.

கிரிக்கட் உலகின் புனித ஸ்தலமான MCGயில், ஒரு லட்சம் பக்தகோடிகளோடு இணைந்து, கிரிக்கெட் ஆராதனைகளில் கலந்து கொள்வது என்பது மெய்யாகவே மெய் சிலர்க்க வைக்கும் ஒரு அனுபவம். 

3-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை வென்று விட்ட ஒஸ்ரேலிய அணி இன்றைக்கும் இங்கிலாந்து அணியை வெளுத்து வாங்கும், அதைக் கண்டு ஒஸ்ரேலியர்கள் ஆர்பரிப்பார்கள்.  ஒஸ்ரேலிய தேசிய கீதம் பாடி முடிய எழுந்த கரகோஷம் அதற்கு கட்டியம் கூறுவது போல் அமைந்தது.

ஆட்டத்திற்கு முன்னர் மைதானத்தில் ஒலித்த முதல் பாடல் “Jerusalem”, இங்கிலாந்து தேசத்தின் உத்தியோகப்பற்றற்ற தேசிய கீதம். ஜெருசலேம் நகரைப் போல், இழந்த மாட்சிமையை, இங்கிலாந்து கிரிக்கெட் அணி மீண்டும் பெறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

அதே வேளை, இதே நாளில்.. 13 ஆண்டுகளிற்கு முன்னர் தாயகத்தை தாக்கிய சுனாமியில் உயிரிழந்த உறவுகளையும் நினைவில் கொள்வோம், அவர்களின் ஆத்ம சாந்திக்காகவும் பிராரத்திப்போம். 

இங்கிலாந்தின் உத்தியோகபூர்வ தேசிய கீதமான “God save the queen” ஒலித்த போது என்னுடைய மனதில் ஒலித்தது என்னவோ...”God save my credit card” தான்..

Friday, 22 December 2017

Christmasம் Curiosityயும்


கிறிஸ்மஸ் காலம் வந்தாலே ஒருவித curiosity தானாக வந்து ஒட்டிக் கொள்ளும். curiosity என்ற ஆங்கில வார்த்தைக்கு பொருத்தமான தமிழ் சொல் என்னவென்று மூளையை போட்டு கசக்கினேன், ஒன்றும் பிடிபடவில்லை. முகநூலில் தமிழில் வெளுத்து வாங்கும் தம்பிமார் இருவரைக் curiosityக்கு சரியான தமிழ் சொல் என்னடா என்று கேட்டேன். 

ஒருத்தர் சொன்னார் “ஆர்வம் could be the closest”. இன்னொருத்தர் “தேடல்.. ஆர்வம்..எதிர்பார்ப்பு...இதுகளுக்க ஒன்று அண்ணே” என்று இழுத்தார். “சரி தம்பி, curiosity பற்றி உங்களை curious ஆக்கியாச்சு, மண்டைக்குள் ஏதாவது தட்டுபட்டா, இன்பொக்ஸ் அடியுங்கோ” என்றேன். “ஓமண்ணே ஓமண்ணே, கட்டாயம்” என்றுவிட்டு தொலைபேசியை துண்டித்தவரிடமிருந்து இதுவரை பதிலில்லை. 

Christmas பற்றிய curiosity, பாலகன் இயேசுவின் பிறப்பிற்கு முன்னரே ஆரம்பமாகிவிட்டது. பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்ட, யூதர்களை அடிமைத்தளையிலிருந்து மீட்க வரும் மீட்பர் (மெஸியா) எப்படி வருவார், எப்போது வருவார் என்ற curiosityயிலிருந்து Chrismasம் curiosityயும் தொடங்குகிறது எனலாம்.

கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட யூதர்களை மீட்க வரும் மீட்பர், வீசியடிக்கும் புயல் போல் வருவாரா?, ஆரோகரிக்கும் அலை போல் வருவாரா?, வெடிக்கும் எரிமலை போல் மேலெழுவாரா?, இல்லை வானத்தில் இருந்து குதிப்பாரா? என்று எல்லோரும் curiousஆக இருக்க, ஜெருசலேமிற்கு அந்தப் பக்கமிருக்கும் பெத்லகேம் என்ற குட்டிக் கிராமத்தில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் அமைதியாக, ஆரவாரமில்லாமல் வந்து அவதரித்தார், எங்கள் மனுஷகுமாரன். 

மேற்கு வானில் தோன்றிய ஒரு வால்நட்சத்திரம் கிளப்பிய curiosity தான், கிழக்கு திசையிலிருந்து மூன்று சாத்திரிகள், ஓட்டகத்தில் ஏறி, யூதேயாவிற்கு பிரயாணம் பண்ண வைத்தது. அந்த மூன்று சாத்திரிகள், நட்சத்திரத்தை பின்தொடர்ந்து வந்து, பாலகன் யேசுவை தொழுவத்தில் கண்டடைந்து, பொன்னையும் தூபவர்க்கதையும் வெள்ளைப்போளத்தையும் பரிசாக கொடுத்த கதையும் Christmasம் curiosityயும் என்ற சொல்லாடலில் அடங்கும்.

மீட்பரை தேடிவந்த மூன்று சாத்திரிகள், யூதாயேவை ஆக்கிரமித்திருந்த ரோம சாம்ராஜ்ஜியத்தின் கவர்னரான ஏரோதை சந்தித்து, தங்களின் பயணத்தின் நோக்கத்தைப் பகிர, அவனுக்கும் curiosity தொற்றிக் கொள்கிறது. “பிறக்கப் போகும் யூதர்களின் ராஜாவை கண்டால், எனக்கும் அவரிருக்கும் இடத்தை சொல்லுங்கள், நானும் போய் வணங்குகிறேன்” என்று கபடமாக கூறி அனுப்பிய ஏரோதின் curiosity, கடைசியில் பல பாலகன்களை கொன்று போடுவதில் முடிந்த Christmasம் curiosityயும் சொற்பதத்தினுள் அடக்கம்.

குளிரும் இராப் பொழுதில், தங்கள் மந்தைகளிற்கு காவலாய் நின்ற, ஆயர்களின் curiosity, அவர்களையும் யேசு பிறந்திருந்த மாட்டுத் தொழுவத்திற்கு இட்டு வந்தது.  வானிலிருந்து தோன்றிய தேவதூதர்கள் ஆயர்களிற்கு வழிகாட்ட, உலகை பாவங்களிலிருந்து மீட்க அவதரித்த இரட்சகரைக் காண ஆயர்களும் தங்களுடைய ஆட்டுக் குட்டிகளோடு ஓடிய கதையும் Christmasம் curiosityயும் தான். 

கிறிஸ்மஸ் பண்டிகை வந்தாலே அன்புக்குரியவர்களிற்கு பரிசுப் பொருட்கள் வாங்க முண்டியடிக்கும் சனக் கூட்டத்தால், கடைத் தெருக்கள் நிரம்பி வழியும். யார் யாருக்கு என்னென்ன வாங்குவது என்று கொடுப்பவர்கள் curious ஆக, யார் யார் என்னென்ன தரப்போகிறார்கள் என்று வாங்குபவர்களும் curious ஆக, Christmasம் curiosityயும் உலகையே ஆட்டிப் படைக்கும்.

2000ம் ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு, விடுதலைப் புலிகள் அறிவித்த நிபந்தனையற்ற யுத்த நிறுத்தம், அந்தக் காலத்தில் இலங்கை அரசியலில் curiosityயை வரவழைத்திருந்தது. 2000ம் ஆண்டு கிறிஸ்மஸ் யுத்த நிறுத்தம், பின்னர் 2002ம் ஆண்டு பெப்ரவரி 11ம் நாள் உத்தியோகபூர்வமாக, தலைவர் பிரபாகரனாலும் பிரதமர் விக்கிரமசிங்கவாலும் ஒப்பந்தங்களாக கைச்சாத்திடப்பட்ட, அந்த Christmasம் Curiosityயும் ரணகளமான இலங்கையிலும் தடம் பதித்து ஒரு தற்காலிக சமாதானத்தை தந்து சென்றது. 

ஓவ்வொரு ஆண்டும் Christmas காலத்தில் உலகத்தின் curiosityஜ உசுப்ப ஏதாவது ஒன்று நடந்து கொண்டேயிருக்கும். இந்தாண்டு, இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருஸலேமை  அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் Trump அறிவித்தது உலகெங்கும் curiosityஜ அதிகரித்துள்ளது.  


ஆபிரகாமின் விசுவாசத்தை கடவுள் சோதித்த, மோரியா (Temple Mount) மலையில் தான், யூத மன்னனான சொலமன்,  கடவுளை வணங்க முதலாவது கோயிலை கட்டினான். கிமு 586ல் இந்த ஆலயம் பபிலோனியர்களால் அழிக்கப்பட, இரண்டாவது ஆலயத்தை, யூதர்களின் மனங்களை வெல்லவென, யூதேயாவை ஆண்ட முதலாவது ஏரோது மன்னன் கட்டினான்.ஏரோது மன்னன் கட்டிய இரண்டாவது ஆலயமும் கிபி 70ல் ரோமானியர்களால் அழிக்கப்பட்டது.


மூன்றாவது ஆலயம் பற்றியும் மீட்பரின் மீள்வருகை பற்றியதுமான வேதாகம எதிர்வுகூறல்கள், Trumpன் “ஜெருசலமே இஸ்ரேலின் தலைநகரம்” அறிவிப்பால் மீண்டும் முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட, Christmasம் curiosityயும், கை வீசம்மா கை வீசு, சந்தைக்கு போகலாம் கை வீசு என்று பாடிக் கொண்டே நம்முன் மீண்டும் நடை போடுகின்றன.

மீண்டும் பிறக்கப் போகும் இயேசு பாலகன், உங்களிற்கும் உங்கள் குடும்பத்தாரிற்கும் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் நிம்மதியையும் அருள்பாலிக்க வேண்டும் என்று பிராரத்திப்போம். 

இந்தப் புனித நாட்களில், எங்கள் நாட்டிலும் நீதியான சமாதானம் நிலைக்க ஆண்டவரை வேண்டுவோம். முக்கியமாக, காணாமல் போகடிக்கப்பட்ட தங்களது உறவுகளைத் தேடும் உறவுகளிற்காகவும், சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும், ஆக்கிரமிக்கப்பட்ட தங்களது நிலங்களை மீட்கப் போராடும் எம் மக்களிற்ககாவும் எல்லாம் வல்ல இறைவனிடம் ஜெபிப்போமாக.  

இனிய நத்தார் தின வாழ்த்துக்கள் நண்பர்களே! 


Thursday, 14 December 2017

CIMA காலங்கள்: IAS கனாக்காலம்வாங்கோ.. இன்றைக்கு உங்களை IASற்கு கூட்டிக் கொண்டு போறன்.. அதுவும் நாங்கள் IASல் படித்த தொண்ணூறுகளிற்கு..கொழும்பில் கோலோச்சிய IAS அந்தக் காலத்தில் எப்படி இருந்தது என்று காட்டுறன்.

நீங்கள் வெள்ளவத்தை பக்கமிருந்து வாறீங்கள் என்றால், ஒன்றில் பம்பலப்பிட்டி Fltats அடியிலிருக்கும் Bus Haltல் இறங்கி நடக்கலாம், இல்லாட்டி HFC தாண்டி வாற Greenlands Bus Haltலும் இறங்கலாம். கொள்ளுப்பிட்டி பக்கம் இருந்து வந்தால், HFC haltல் தான் இறங்க வேண்டும், SPM halt கொஞ்சம் தூரம்.

காலி வீதியில் இருக்கும் Mannemperuma Traders என்ற கார் விற்பனையகத்திற்கு அருகால் கடற்கரை நோக்கி போகும் குறுகிய வீதி தான் Jaya Road. வெள்ளிக்கிழமை பின்னேரம் ஐந்து மணியளவில், காலி வீதியிலிருந்து ஒரு இறக்கத்தில் தொடங்கும் Jaya வீதியில் நடக்கத் தொடங்கினால், CIMA படிக்க வாற சட்டை போட்ட வடிவான தமிழ் பெட்டைகளால், கண்கள் மட்டுமல்ல இதயமும் குளிரும். 

ஸ்டைலாக தோளில் ஒரு Bagஐ கொழுவிக் கொண்டு அழகாக சட்டையணிந்து ஒயிலாக நடை பயிலும் பெட்டைகளை பின் தொடர்ந்து நடந்து வந்தால், வீதியின் முடிவில் இருக்கும் பழுப்பு நிற கட்டிடம் உங்களை வரவேற்கும், இது தான் IAS. 

ஏன் பெட்டைகளை பார்த்துக் கொண்டு நிற்கிறியள்.. வாங்கோ.. ஆ.. இது தான் பத்மசிறீ.. இப்ப எங்களிற்கு notes தந்து கொண்டிருக்கும் இவர் தான் IASன் checkie. ஆள் உயரம் குறைவாக இருக்கிறதால் வகுப்பு நடக்கும் போது வகுப்பிற்குள் வந்து மேசைகளின் நடுவில் புகுந்தும் cardஐ check பண்ணும் அபார checkie. 

அந்த படிக்கட்டடியில் இருக்கும் சின்ன கரும்பலகையில் இன்றைக்கு எங்கட வகுப்பு எந்த அறையில் நடக்கிறது என்று எழுதியிருக்கும். வாங்கோ அப்படியே நேராக போய் Officeஐ எட்டிப் பார்த்துவிட்டு வருவம். வாசலில் இருக்கும் மேசைக்கு பின்னால் வலு சீரியஸான முகத்தோடு இருப்பவர் தான் கந்தசாமி, IASன் office manager, நல்ல மனுஷன். வாத்திமார் யாரும் இல்லாத நேரங்களில் ஊரில் நடக்கும் சண்டை நிலவரங்களை அறிந்து கொள்ள ஆர்வமாய் எங்களோடு ரகசியமாக கதைப்பார். 

அறையில் இருக்கும் பிரம்புக் கதிரைகள் வாத்திமாரிற்கு, அதுவும் சீனியர் வாத்திமாரிற்கு. சீனியர் வாத்திமார் அறைக்குள் வரும் போது அவர்களிற்கு கதிரை காலியாக இல்லாவிட்டால் ஜூனியர் வாத்திமார் தங்களது கதிரையை தியாகம் செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத IAS நியதிகளில் ஒன்று. வகுப்புகளில் doubt கேட்க வெட்கப்படும் எங்கட பெட்டைகள் இங்க வந்து தான் வாத்திமாரை சந்தித்து விளக்கம் கேட்பினம்.

மாடிப்படிகளிற்கு நேரே இருக்கும் இந்த வகுப்பறை தான் Room No 5. இந்த அறையில் அநேகமாக stage 3 வகுப்புகளும், Business Law இல்லாட்டி Corporate Law படிப்பிக்கும் ASM Pereraவின் வகுப்புக்கள் நடக்கும். Shirt அணிந்து, Pantsஐ தொந்தியில் பெல்டால் இறுக்கக் கட்டிக் கொண்டு,  படு டீசென்டாக வகுப்பெடுக்கும் ASM தான் இந்தப் பாடங்களில் இலங்கையின் மிகச்சிறந்த விரிவுரையாளர். 

முழு நேரமாக Additional Solicitor Generealஆக வேலை பார்க்கும் ASM, வேலை முடிந்து ஆர்வத்தோடு வகுப்பெடுக்க வருவார். மாணவர் நலனில் அதீத அக்கறை எடுத்துக் கொள்வார், கஷ்டமான பாடத்தை இலகுவாக்கி ஒரு கவித்துவமான ஆங்கிலத்தில் கற்பித்துத் தருவார். தன்னிடம் படிக்கும் பல தமிழ் மாணவர்களை பொலிஸ் கைதுகளிலிருந்து விடுவித்திருக்கிறார். நாங்கள் CIMA முடித்த போது, தன்னுடைய வீட்டிற்கு அழைத்து எங்களிற்கு விருந்தும் அளித்தவர். இன்று ASM ஒரு UNP அரசியல்வாதி.

Room 5ற்கும் officeற்கும் இடையில் இருப்பது தான் Room 4. இந்த அறையில் தான் இங்கிலாந்தில் படித்து விட்டு நாடு திரும்பிய, முன்னாள் ஜேவிபி காரனான சமன் கிரிவத்துடவவின் வகுப்புகள் நடக்கும். தமிழர் போராட்டம் பற்றிய நல்ல புரிதல் இருந்த சமன் எங்களை “தம்பி” என்றே அழைப்பார். நாங்கள் பரீட்சையில் தேற வேண்டும் என்று உண்மையான அக்கறை கொண்டு அயராது பாடுபட்ட ஒரு நல்ல மனிதன். ருஷ்டி அஸீஸின் வகுப்புக்களும் இந்த அறையில் தான் நடக்கும். 

இந்தப் பக்கம் வந்தீங்கள் என்றால் இது தான் IASன் கன்டீன். “ஆ லால்.. கொஹமத பொஸ்”. லால் தான் கன்டீனை குத்தகைக்கு எடுத்திருக்கிறார். திறமான பால் தேத்தண்ணியும் முட்டை பனீஸும் இருக்கு. லாலும் அவருடைய பெடியளும் பெடியளோடு சிநேகபூர்வமாக பழகுவார்கள். பெட்டைகளிற்கு அந்த யன்னல் வழியாகத்தான் விற்பனை நடக்கும். 

கன்டினை தாண்டினவுடன் வாறது தான் Room 7, இதில தான் அப்துல் அஸீஸ் கத்தி கத்தி costing படிப்பிப்பார். அதோடு ஒட்டி இருக்கும் Room 8 தான் பாணுதேவன் கதாகலாட்சபம் நடாத்தும் மண்டபம். இந்து மா சமுத்திரத்தின் இரைச்சலும், ஓடும் கடுகதி ரயிலின் சத்தங்களும், பக்க வாத்தியங்களாக, பாணுதேவன் மாஸ்டர் மைக்கில் managementம் economicsம் பிரசங்கிப்பார்.

படியால ஏறி மேல வந்தியள் என்றால் வலப்பக்கமாக இருக்கும் சின்ன அறை தான் Room 1. இதில தான் stage 4ற்கு துரையர் வகுப்பெடுப்பார். சிங்கள மாணவர்களும் இருக்கும் வகுப்பில், “venture capital என்றால் மலையை மயிரால் இழுக்கிறது தான் venture capital என்று விளக்கி விட்டு, “வந்தா மலை போனா..”என்று தனது தலைமுடியை இழுப்பார், துரையர் என்கிற துரைராஜா. சிங்களவனிடம் 1956ல் கும்பிட கும்பிட அடிவாங்கின கதை சொல்லிய துரைராஜா, அந்தக் காலத்தில் இலங்கை வங்கியின் DGM. சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு அவாவின் சின்ன வயதில் கணக்கு சொல்லி கொடுத்தவராம். 

இந்த குட்டி அறைக்கு எதிரில் இருக்கும் Room 4ல் தான், லொக்கர் என நாங்கள் அழைக்கும் லோகநாதனின் வகுப்பு நடக்கும். லோகநாதன், வளைந்து நெளிந்து , Financial Accounting படிப்பிப்பார். லோகநாதன், அந்தக்காலத்தில் Veytexல் MD. இதே அறையில் தான் Advanced Management Accounting படிப்பிக்கும் ரஜித காரியவாசத்தின் வகுப்புக்கள் நடந்தேறும்.

இந்த இரண்டு அறைகளையும் தாண்டி வந்தால் இருக்கும் பெரிய அறை தான் Room 1. இதில் அநேகமாக Sri Lankan Chartered Accounting வகுப்புகள் நடக்கும். அவை நடைபெறாத நேரங்களில், மாணவர்களால் நிரம்பி வழியும் stage 1 வகுப்புகள் நடக்கும். stage 1 வகுப்புக்களை பாணுதேவன், ASM, லொக்கர், விஜயபால இல்லாட்டி நகுலேஸ்வரன் நடத்துவினம். 

ஆ.அந்தா வகுப்பு முடிஞ்சுது.. வாங்கோ போவம்.. திரும்பவும் காலி வீதி நோக்கி இந்த அழகிய கல்லூரிச் சாலையில் பெட்டையளை சுழற்றிக் கொண்டே நடப்பம்.. காலி வீதியில் ஏறிவிட்டால் பொலிஸ் நிற்கும்.. ஆமியும் செக் பண்ணும்.. 

எங்களுடைய IAS வசந்த காலங்கள் இந்த ஜெயா ரோட்டைப் போல குறுகியவை தான், ஆனால் அவை பசுமையானவை, இனிமையானவை, நினைவில் நிலைத்து நிற்பவை. அது ஒரு மீண்டும் திரும்ப முடியாத கனாக்காலம் தான். 


Thursday, 7 December 2017

கோமாளிக் கூத்து


மூன்றாவது ஈழ யுத்தம் மூண்டு, வடக்கு போர் முனையில் உக்கிர மோதல்கள் நடந்து கொண்டிருந்த காலமது, 1999ம் ஆண்டின் முற்பகுதி. கொள்ளுப்பிட்டியில் இருந்த ஒரு ஹொட்டலில் நண்பர்களோடு ஒரு Party நடந்து கொண்டிருந்தது. நன்றாக குடித்து வெறி தலைக்கேறிய நண்பன் ஒருவன் திடீரென உரத்தக் கத்தத் தொடங்கினான்

“எனக்கு இப்ப தமிழீழம் வேணும்.. இப்ப.. இப்ப.. தமிழீழம் வேணும்”. பத்தடி தள்ளி காலி வீதியில் இராணுவக் காவலரண் வேறு இருந்தது. கொழும்பில் தமிழ் இளைஞர்களை கண்காணிக்க உளவுத்துறையும் சாதாரண உடையில் உலாவிய காலமது. 

“டேய் மச்சான், அங்கால ஆமி நிக்குதடா.. அடக்கி வாசி” தமிழீழம் கேட்கும் நண்பனிற்கு யதார்த்தத்தைப் புரிய வைக்க முயன்றோம்.

“மட தங் தமிழீழம் ஓண” அவன் தென்னிலங்கைக்கும் விளங்க வேண்டும் என்று கத்தியே சொன்னான்.

“பறையாமல் இருடா.. ப்ளீஸ்” பொலிஸ் நிலைய சிறைக் கதவுகளிற்கு அஞ்சி நாங்கள் கெஞ்சினோம்.

“I want tamil eelam now” சர்வதேசத்தை திரும்பிப் பார்க்க வைக்க அவன் குரல் கொடுக்கத் தொடங்கினான்.

 தேர்தல் வெறி கொண்டு எங்களின் அரசியல்வாதிகள் ஆடும் கோமாளிக் கூத்துக்களைப் பார்க்க, குடிவெறி தலைக்கேறி தமிழீழம் கேட்ட நண்பனின் கதை தான் ஞாபகம் வந்தது. கொள்கை கோட்பாடு எல்லாவற்றையும் காற்றில் பறக்க விட்டு விட்டு, தமிழக அரசியல்வாதிகளைப் போல், ஆசனங்களிற்காக ஆலாய்ப் பறக்கும் இந்த அரசியல்வாதிகளைப் நினைக்க, நினைக்க, ஆற்றாமை கலந்த வேதனை தான் வருகிறது.

முப்பத்தேழு தமிழ் அரசியல்வாதிகளின் வழிகாட்டலில், முப்பத்தைந்தாயிரம் தமிழ் அரச ஊழியர்கள் எனும் மாபெரும் சேனை இயங்கும் வடமாகாண சபையே, மூன்று வருடமாக முக்கியும் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்க முடியாமல் முடங்கிக் கிடக்க, கிராம சபைகளையும் பிரதேச சபைகளையும் நகர சபைகளையும் ஏன் மாநகர சபைகளையும் எங்களுக்குள் அடிபட்டு கைப்பற்றி என்னத்தை கிழிக்கப் போகிறோம் ?

இடைக்கால அறிக்கை எனும் பெயரில் வந்திருக்கும் அரை குறைத் தீர்வை குற்றம் குறை சொல்லும் தரப்பினர் கூட, ரோட்டு கூட்டும் அதிகாரம் கூட இல்லாத சபைகளிற்காக கோதாவில் இறங்குவதும் தேர்தலிற்காக கட்சியின் பெயரை மாற்றுவதும் ஏமாற்றத்தை தரவில்லையா?

“மச்சான், சிங்களவன் மொக்கன்டா, எங்களிற்கு தமிழீழத்தை தந்திடோணும்.. நாங்களே எங்களிற்குள் சண்டை பிடித்து எங்களை அழித்துக் கொள்வோம்.. பிறகு அவன் எங்களை ஆளலாம்” என்று தனிநாட்டை எதிர்க்கும் என் நண்பன் ஒருவன் அடிக்கடி சொல்லி உசுப்பேத்துவான். உள்ளூராட்சி மன்ற தேர்தல்களிற்காக பிரியும் கூட்டமைப்பையும் புதிது புதிதாக இணையும் கூட்டணிகளின் கூத்துக்களையும் பார்க்க அவனது கூற்று உண்மையாகி விடுமோ என்று பயமாகவும் இருக்கிறது.

தங்கள் உயிரை துச்சமென மதித்து, தாயக மீட்புப் போரில் தங்களை ஆகுதியாக்க இயக்கங்களில் இணைந்த, முன்னாள் போராளிக் குழுக்களின் தலைவர்கள், ஆசனப் பங்கீட்டிற்காக இரவிரவாக அடிபடும் காட்சிகள் உண்மையிலேயே அருவருக்கின்றன. அன்று இளைஞர்களாக ஆயுதம் தரித்து நின்ற போது, மிதவாத தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் தலைவர்களின் திருகுதாளங்களை எள்ளி நகையாடிய இயக்கங்களின் முக்கியஸ்தர்கள், இன்று பதவிக் கதிரைகளிற்காக குத்தி முறியும் அவலம் அரங்கேறுகிறது.  

எல்லாவற்றையும் பூலோகப் பூதக்கண்ணாடியால் பார்த்து பழகிய தலைவரோ, அவருடன் கூட்டுச் சேராத இரு இயக்கங்களை வல்லரசுகளின் செல்லப் பிள்ளைகளாக மகுடம் சூட்டி அழுகுணி ஆட்டம் ஆடுகிறார்.  காங்கிரஸை மறைக்க முன்னனியாக உருமாறியவர், இன்று இரண்டையும் கைவிட்டு பேரவை எனும் போர்வையை போர்த்துக் கொண்டு தேர்தல் களம் காணவும் புறப்பட்டு விட்டது இன்னுமொரு நகைச்சுவை நாடகம். 

அரசியல் இன்று ஒரு பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறி விட்டதோ என்று எண்ணும் வண்ணம் பலரின் நடவடிக்கைகள் இருக்கின்றன. உள்ளூராட்சி சபை உறுப்பினராக, மாகாண சபை உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக ஆவதும் ஒரு தொழிலாக மாறிவிட்டதோ என்று இந்த அரசியல்வாதிகள் எண்ண வைக்கிறார்கள். தமிழ் தேசியம் பேசும் இவர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டு தோல்வியைத் தழுவ, போன முறை பொதுத் தேரத்தலில் நடந்தது போல, சிங்கள பேரினவாத தேசியக் கட்சிகள் எங்கள் பிரதேசங்களில் வெற்றி பெறப் போகின்றன. 

இற்றைக்கு பதினைந்து ஆண்டுகளிற்கு முன்னர், அரசியல்-இராணுவ-இராஜதந்திர சமபல நிலையோடு, வெளிநாடுகளில் சர்வதேச மத்தியஸ்தோடு, இலங்கை அரசிற்கு சரிசமமாக எதிரெதிரே உட்கார்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட எமது இனம், இன்று அடைந்திருக்கும் இழி நிலையை எமக்கு நினைவுறுத்தும் செயற்பாடாகவே, தேர்தலையும் பதவிகளையும் முன்னிறுத்தி எமது அரசியல் தலைவர்கள் ஆடும் கோமாளிக் கூத்துக்களைக் நோக்க வேண்டியிருக்கிறது.

நடுநிலை வகித்து, தமிழர் நலன் பேண, அரசியல் தலைமைகளிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய பொதுஜன அமைப்புக்களும் புலம்பெயர் அமைப்புக்களும், தாங்களும் கட்சிகளின் பின்னால் அணிவகுத்ததும் தலைவர்களுக்கு துதிபாடியதும் இந்த அவல நிலையை நாங்கள் அடைய முக்கியமான காரணங்களில் ஒன்றாகிறது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் காலத்தில் நடக்கும் இந்தக் கோமாளிக் கூத்துக்கள் நமக்கு நல்ல படிப்பினையாக அமைய வேண்டும். அடுத்து வரும் தேர்தல்களை போரினால் அழிவுண்ட ஒரு சமூகத்தில் எஞ்சியிருக்கும் மக்களாக, ஒன்றுபட்ட ஒரு  இனமாக, எவ்வாறு நாங்கள் எதிர்கொள்ளப் போகிறோம் என்பதை மீளாய்வு செய்யும் காலம் வந்து விட்டது.


Friday, 1 December 2017

மரக்கறிச் சாப்பாடுமரக்கறிச் சாப்பாடு என்றால் எனக்கு கண்ணிலும் காட்டேலாது. ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும், சனி பகவானிற்கு விரதம் என்று சாட்டோ காரணமோ காட்டி, வீட்டில் மனிசி மரக்கறிச் சாப்பாடு தான் சமைப்பா.  விடை தெரிந்து கொண்டே கேட்கப்படும் “ஏன் முகத்தை நீட்டிக் கொண்டு சாப்பிடுறீர்” என்ற கேள்வியை அவாவும் அடிக்கடி கேட்பா. இழைத்த போர்க்குற்றங்கள் பற்றி இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு சொல்லும் பதில்கள் மாதிரி, விதம் விதமாக நானும் பதில் சொல்லப் பழகி விட்டேன். அதைக் கேட்டு, தமிழ்ச் சனம் மாதிரி, அவக்கும் அலத்துப் போய்விட்டது. 

நல்ல மரக்கறி சாப்பாடு என்றால் சில விஷயங்கள் இருக்க வேண்டும், அதுவும் இருக்க வேண்டிய இடத்தில், இருக்கிற மாதிரி இருக்க வேண்டும். நல்ல மரக்கறி சாப்பாடு என்றால் குத்ததரிசி சோற்றோடு பஞ்ச பாண்டவர் மாதிரி நல்ல ஜந்து மரக்கறிகளோடு இத்யாதி இத்யாதிகள் சேர வேண்டும், அப்போது தான் “நல்ல மரக்கறிச் சாப்பாடு” எனும் வரைவிலக்கணத்திற்குள் அந்த சாப்பாட்டுச் சபை அடங்கும். 

நல்ல மரக்கறிச் சாப்பாடு என்றால் கட்டாயம் வாழை இலையில் தான் சாப்பிட வேண்டும். வாழையிலையில் சாப்பிடும் போது தான் மரக்கறிச் சாப்பாடு சாப்பிட்ட மாதிரி இருக்கும். அதற்காக குனிந்து எழும்ப கஷ்டப்படுவோரை பந்தியில் இருத்தி வைத்து வருத்தக் கூடாது.  மேசையில் இருந்தும் இலையில் சாப்பிடலாம்.  எல்லாவற்றையும் விட முக்கியம் இலையில் எது எது எங்கெங்கே இருக்க வேண்டும் என்பது. 

குத்தரிசியை விட்டு விட்டு சம்பா கிம்பா அல்லது பாஸ்மதி கீஸ்மதி போட்டால், முதலாவது பந்தில் அவுட்டாகும் ஆரம்ப துடுப்பாட்டக்காரனின் முகத்தைப் போல, மரக்கறிச் சாப்பாடு சோபையிழந்து விடும்.  பச்சை தலை வாழையிலையில், நடுவனாக வீற்றிருக்கும் குத்தரிசி சோற்றில், குந்தியிருக்கும் மரக்கறிச் சாப்பாட்டை பார்த்தாலே ஒரு கவர்ச்சி இருக்கும், வயதாகியும் கும்மென்றிருக்கும் குஷ்பூவைப் போல. 

நல்ல மரக்கறிச் சாப்பாட்டு அணியில் இணைய வேண்டிய முதலாவது அதிரடி ஆட்டக்காரர், நல்ல குழப்பு தான். திறமான உறைப்பாகவும், ஓட ஓட தண்ணியாக இல்லாமலும் குழம்பு இருக்க வேண்டும். நல்ல குழம்பு வைக்க சரியான மரக்கறிகள் என்றால் வெண்டைக்காயும் தக்காளிப் பழமும் தான். (வெண்டைக்) காயும் (தக்காளிப்) பழமும் இணைந்து வரும் குழம்பு நல்ல தடிப்பாக, குத்தரிசி சோற்றின் நடு சென்டரில் இறக்க வேண்டும்.

சிறத்த மரக்கறி அணியின் அடுத்த ஆட்டக் காரன், மரவெள்ளிக் கிழங்கு, அதுவும் உரும்பிராய் கிழங்கு என்றால் இன்னும் விசேஷம். மரவெள்ளியை இதமாக அவித்து, பச்சை மிளகாய் சேர்த்து, குத்தரிசி சோற்றின் இடப் பக்க மூலையில் பதமாக பரிமாற வேண்டும்.  மரவெள்ளியை வேறு எந்த மரக்கறியோடும் கூட்டுச் சேர்க்கக் கூடாது, மரவெள்ளியை தனிச்சனாகவே காய்ச்ச வேண்டும். 

மூன்றாவதாக மரக்கறி அணியில் களமிறங்குபவரும் ஒரு கிழங்கர் தான், அவர் தான் கருணைக்கிழங்கு. சின்னன் சின்னனாக வெட்டி, உப்பும் தூளும் கலந்து, ஒரு பிரட்டல் கறியாக வைத்தால், கருணைக்கிழங்கர் சும்மா விண் கூவுவார். கருணைக் கிழங்கரை மரவெள்ளிக்கு பக்கத்தில், வாழையிலையின் 75 பாகை வாக்கில் வைக்க வேண்டும். 

கருணைக் கிழங்கு மாமாவிற்கு பக்கத்து வீடு, பீட்ரூட் தம்பிக்கு தான் ஒதுக்க வேண்டும். அழகாக செக்கச்செவேலென்று வழவழவென்று இருக்கும் பீட்ரூட்டை, தேங்காய்ப் பாலும் வெங்காயமும் கலந்து கறியாக வைக்க வேண்டும். எனக்கு மிக மிகப் பிடித்த பீட்ரூட்டை,  வெங்காயத்தோடு இணைத்து Salad மாதிரி வைத்து விட்டு, “எப்படி இருக்கிறது” என்று சிரித்துக் கொண்டே கேட்கும் பல கெட்ட கிரிமினல்களை வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன், பார்த்துக் கொண்டு பொறுமையாகவும் இருக்கிறேன்.

வாழையிலையின் வலப்பக்கத்தில் 75 பாகையடியில், எங்கட ஊர் முருங்கைக்காயிற்கு அரியாசனம் ஒதுக்கப்பட்டிருக்கும். புரட்டாசிச் சனி விரதம் என்றால் கட்டாயம் முருங்கை இருக்க வேண்டும் என்பதால், அவருக்கு தேசிய பட்டியல் பின்கதவு ஆசனம் என்று யோசிக்க கூடாது. முருங்கைக்காய் இல்லாத மரக்கறிச் சாப்பாடு, பஞ்ச் டயலொக் இல்லாத ரஜினிகாந்த் படம் மாதிரியாகி சொதப்பலாகி விடும். 

முருங்கைக்காய் என்றால் கொஞ்சம் குண்டாக தடிப்பாக இருக்க வேண்டும். ஒல்லிப்பிச்சான் மாதிரி இருக்கிற முருங்கைக்காயை தூக்கி குப்பையில் தான் போட வேணும். தடிப்பான முருங்கைக்காயை நல்ல கறித்தூள் போட்டு அளவாக அவித்து, குழம்பும் இல்லாமல் பிரட்டலும் இல்லாமல் இருக்கும் போது அடுப்பால் இறக்கி, இலையில் பரிமாற வேண்டும். அப்பத் தான், ஒரு குழம்பு, ஒரு பிரட்டல், ஒரு பால்க்கறி என்று நிறைந்திருக்கும் அணியில், முருங்கைக்காயிற்கு தனித்துவம் கிடைக்கும்.

வாழையிலையின் வலக்கோடியில் கடைசி இடம், வாழைக்காய்ப் பொரியலிற்கு தான். வட்ட வட்டமாக வெட்டப்பட்ட வாழைக்காயை உப்பும் தூளும் தடவி மொறு மொறு என்று பொரிக்க வேண்டும். வாழைக்காய் பொரிக்கும் போது, புது எண்ணெயில் பொரிக்காவிட்டால் அதன் ருசியே மாறிவிடும்.

மரக்கறிச் சாப்பாடு எனும் சபையில், குத்தரிசி சோற்றில், வெண்டைக்காய் + தக்காளி குழம்பு, கருணைக் கிழங்கு பிரட்டல், பீட்ரூட் பால்க்கறி, முருங்கைக்காய் கறி, வாழைக்காய் பொரியல் என்று எல்லோரும் கம்பீரமாக வீற்றிருந்து, விருந்துண்ண நாங்கள் தயாராக, “எங்களையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளுங்கோ” என்று கத்திக் கொண்டே மும்மூர்த்திகள் ஓடிவருவினம். அந்த மும்மூர்த்திகள் வேறு யாரும் அல்ல, எங்கட பப்படம், வடகம், மோர் மிளகாய் தான். 

பொங்கிப் பூரித்து பொரிந்திருந்தால் தான் பப்படத்திற்கு அழகு. அதே மாதிரி, உப்பு அதிகமாக கைக்காமல், மொறு மொறுப்பாகவும் விறைப்பாகவும் வாழை இலையில் குதிப்பது தான், மோர் மிளகாயிற்கு மதிப்பு. மோர் மிளகாய் பொரிந்த அதே எண்ணெய்ச் சட்டியில், துள்ளிக் குதித்து விட்டு, கருகாமல் வெளியே வந்து, இலையில் அமர்வதில் தான் வடகத்தின் வைராக்கியம் வெளிப்படும். 

பஞ்ச கறிகளையும் முப் பொரியல்களையும் சோற்றோடு இணைத்து களமாட இறங்க, “எங்களை ஏன் சேர்க்காமல் விட்டனீங்கள்” என்று தயிரும் ரசமும் சண்டிக் கட்டு கட்டிக்கொண்டு சண்டைக்கு வருவார்கள். “இலையில் இடமில்லையடா” என்று அன்பாகச் சொன்னாலும் கேட்காமல், வேலிச் சண்டை பிடிக்கும் யாழ்ப்பாணப் பெண்களைப் போல் கத்திக் கொண்டேயிருப்பார்கள். “சரி, சரி, வாங்கடா வாங்கடா” என்று மனிதாபிமான அடிப்படையில் தயிரையும் ரசத்தையும், கடைசி வாய்களிற்கு இணைத்துக் கொள்ளலாம். 

மத்தியானத்தில் மரக்கறிச் சாப்பாட்டை ஒரு கட்டு கட்டி முடிய, லேசாக நித்திரை கண்ணைக் கட்டும். பிரம்பு ஈஸி செயரில், மர நிழலிலோ இல்லாட்டி fanற்கு கீழேயோ காலைக் கையை நீட்டி, ஒரு குட்டித் தூக்கம் அடித்தால் தான், சாப்பிட்ட மரக்கறிச் சாப்பாடு செமிக்கும். 

“உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு“Friday, 24 November 2017

தாயகக் கனவோடு...


அன்னை மடியின் இதமான சூட்டிலிருந்து விலகியவர்கள் என்னவானார்கள் ? எங்கு போனார்கள் ? என்ன செய்தார்கள் ? என்ன எண்ணினார்கள் ? " என்ற ஈரோஸ் இயக்கத்தின் தலைவரும், விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினருமான பாலகுமாரன் "நஞ்சுண்ட காடு" புத்தகத்திற்கு எழுதிய முன்னுரையில், இயக்கத்திற்கு போன இளைஞர்களைக் குறித்து  எழுதிய வரிகள் காலத்தால் அழியாதவை.


என்னுடைய சிறு வயதில், எங்கள் ரோட்டிலிருந்து இயக்கத்திற்கு போன இருவர் இன்றும் நினைவில் உள்ளார்கள். ஒருவர் பரி யோவான் கல்லூரியில் படித்த ராஜு அண்ணா, கல்லூரியில் அவர் மகேந்திரராஜா, புகழ் பூத்த SJC85 Batch காரன். மற்றவர் தவம் அண்ணா, இந்திய இராணுவ காலத்தில் யாழ்ப்பாண மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக செயற்பட்டு வீரமரணமடைந்த மேஜர் டயஸ் (கந்தசாமி).


ராஜு அண்ணா ஒரு பம்பல் காய். அப்பா மறைந்து விட்ட அவரின் குடும்பத்தில், அவரின் உலகமே அவரது அம்மாவும் தங்கச்சியும் தான். பரி யோவானில் ராஜு அண்ணா ஒரு சகலதுறை விளையாட்டு வீரர், கல்லூரியின் கிரிக்கெட், football அணிகளில் விளையாடியவர். எப்பவும் பம்பலாக சிரித்தபடி மென்மையாக பேசுவார். முதலில் இயக்கத்திற்கு helper ஆக இருந்த ராஜு அண்ணா, பின்னர் ஆயுதப் பயிற்சியை நிறைவு செய்துவிட்டு முழுநேர உறுப்பினராக செயற்படத் தொடங்கினார்.


ராஜு அண்ணா என்றதும் நினைவில் வருவது பரி யோவான் கல்லூரிக்கும் சென். பற்றீக்ஸ் கல்லூரிக்கும் இடையிலான under 17 கிரிக்கெட் ஆட்டம் ஒன்று தான். பரி யோவான் கல்லூரிக்கு ராஜு அண்ணா தான் ஆரம்ப துடுப்பாட்டக்காரர். பற்றிக்ஸ் அணிக்கு தலைமை தாங்கிய கிங்ஸ்லி அண்ணா, அந்த அணியின் ஆரம்ப பந்து வீச்சாளர், கிங்ஸ்லி அண்ணா ராஜு அண்ணாவின் அயலூர்காரன்.

முதலில் துடுப்பெடுத்தாடிய பற்றிக்ஸ் அணி அதிக ஓட்டங்கள் எடுக்காமல் சுருண்டு விட்டது. தனக்கே உரித்தான அலட்சியம் நிறைந்த மிடுக்கோடு பரி யோவான் அணி துடுப்பெடுத்தாட இறங்கியது. ராஜு அண்ணா தான் கிங்ஸ்லி அண்ணாவின் பந்தை எதிர் கொள்ள தயாராகிறார். ராஜு அண்ணா முதலாவது ஓவரிலிருந்தே அடித்தாட தொடங்கி விடுவார், அன்று சென் பற்றிக்ஸ் அணியுடனான ஆட்டம் என்பதால், எதிர்பார்ப்பு பலமாக இருந்தது. பந்து வீச்சாளரின் தலைக்கு மேலால் பந்தை எழுப்பி அடித்து, பந்தை பவுண்டரிக்கு அனுப்புவது ராஜு அண்ணாவின் ஸ்டைல், தனித்துவம்

தேவாலய முனையிலிருந்து ஓடி வந்து கிங்ஸ்லி அண்ணா வேகமாக பந்து வீசுகிறார், ஒரு short run up தான். Off stumpற்கு சற்று வெளியே விழுந்த பந்தை ராஜு அண்ணா அழகாக தூக்கியடித்து uppish ஆக straight drive செய்ய, எல்லோரும் பவுண்டரி லைனை பந்து தாண்டும் என்று எதிர்பார்த்த கணத்தில், எம்பித் துள்ளி காற்றில் ஒரு குத்துக்கரணம் அடித்து கிங்ஸ்லி அண்ணா அந்த பந்தை தானே catch பிடிக்கிறார். கிங்ஸ்லி அண்ணா, ராஜு அண்ணா அந்த shot விளையாடுவார் என்று எதிர்பார்த்திருக்கலாம். அந்த அருமையான கணங்களை நேரில் பார்த்த யாரும் இன்றும் அதை மறக்க மாட்டார்கள்.இந்திய இராணுவ காலத்தில் இந்திய இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டு காங்கேசன்துறை இராணுவ முகாமில் ராஜு அண்ணா கடும் சித்திரவதைகளை அனுபவித்தார். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் விடுதலையாகி வந்தவர், இயக்கத்திலிருந்து விலகி, தனது குடும்பத்தோடு வாழத் தொடங்கினார். 1994 இறுதியில் யாழ்ப்பாணம் போன போது ராஜு அண்ணா அரியாலை சனசமூக நிலைய அணிக்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்


1996ல் இலங்கை இராணுவம் மீண்டும் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களின் பட்டியலில் ராஜு அண்ணாவின் பெயரும் இணைந்து கொண்டது. மாவீரர் பட்டியலில் ராஜு அண்ணாவின் பெயர் இணைக்கப்பட்டதா இல்லையா என்பது தெரியாது, என்னைப் பொறுத்தவரையில் ராஜு அண்ணாவும் ஒரு மாவீரனே.

————————————

நகரங்களிலும் கிராமங்களிலும், கிரிக்கெட்டும் ஃபுட்போலும் விளையாடிக் கொண்டு, பள்ளிக்கூடங்களில் நண்பர்களோடு பம்பலடித்துக் கொண்டு, ரோட்டால் போற பெட்டைகளை சுழற்றிக் கொண்டு திரிந்த இளைஞர்கள், இரவோடு இரவாக வீடுகளை விட்டு, இயக்கத்திற்குப் போனார்கள். வசதியான வாழ்க்கையை உதறிவிட்டு, உறவுகளைப் பிரிந்து ஆயுதப் பயிற்சியெடுக்க காட்டுக்குள் போனார்கள்.

வெளிநாடுகளில் வாழ்ந்து வந்தவர்களையும், கொழும்பில் தொழில் புரிந்தவர்களையும், படித்து பட்டம் பெற்றவர்களையும், பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டு இருந்தவர்களையும், உயர்தரம் பயின்று கொண்டிருந்தவர்களையும்படிப்பை பாதியில் விட்டவர்களையும், இனமானம் எனும் இலட்சிய வேட்கை கவர்ந்திழுத்தது

ஊர் வாழ வேண்டும் என்று, உன்னத நோக்கம் கொண்டு, ஏராளமான இன்னல்கள் தாங்கி நின்று, ஈழத் தமிழினித்தின் விடுதலைப் பயணத்தில் வித்தாகியவர்கள் எங்கள் சகோதர சகோதரிகள். விடுதலை வேட்கை எனும் ஓர்மம், எங்கள் சாதாரண இளைஞர் யுவதிகளிற்கு அசாதாரண சக்தியை கொடுத்தது. களத்தில் தங்கள் உயிர்களை ஆகுதியாக்கி அவர்கள் செய்த விடுதலை வேள்வி, காலங்காலமாக பேரினவாதிகளிடம் அடிமைப்பட்டிருந்த எங்களையும் எங்களினத்தையும் தலை நிமிர வைத்தது.


வீறுகொண்டெழுந்த ஒரு தமிழர் பரம்பரை, ஒரு நாட்டின் இராணுவத்திற்கல்ல இரு நாட்டு இராணுவங்களிற்கு சிம்மசொப்பனமாக இருந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்று மகன்மாரிற்கு பெருமையாக ஓரு நாள் சொல்லிக் கொண்டிருக்கும் போது, இளையவன் கேட்டான் “then why did you lose the war?”, வரலாற்றின் குரலாக அவனது குரல் எதிரொலித்தது.


நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்ற படத்தில்,  “என்னாச்சு.. நீ தானே அடிச்சாய்.. Ball மேல போச்சுஎன்ற வசனம் திரும்ப திரும்ப திரும்ப வரும். சில நேரங்களில் எங்களது விடுதலைப் போராட்டத்திற்கு நடந்த கதியை யோசித்தாலும் இந்த வசனம் ஏனோ பொருந்துவதாகவே தோன்றுகிறது.

என்னாச்சு...ஆட்டிலெறி அடிச்சோம், ஆனையிறவை பிடித்தோம், ஆகாயத்திலும் பறந்தோம், கடலிலும் கோலோட்சிணோம், கட்டுநாயக்காவையும் தாக்கினோம்.. அப்புறம்..இப்ப.. என்னாச்சு

ஒரு தனி நாட்டிற்குரிய பல பண்புகளோடு, உலகமெங்கும் பரவியிருந்த பலமான கட்டமைப்போடு, அகிலமே வியக்க, எங்களை மட்டும் நம்பி, நாங்கள் நடாத்திய விடுதலைப் போராட்டம் மெளனிக்கப்பட்ட பின்னர் எங்களிற்கு என்னாச்சு? ஆளுமையுள்ள தலைமைகளால் நிரம்பியருந்த தமிழர் விடுதலைப் போராட்டத்தின் பொற்காலத்தில் வாழ்ந்த எங்களிற்கு, இன்றைய தமிழ் தலைமைகளின் கோமாளிக் கூத்துக்களை பார்க்க என்ன பாவம் செய்தோமோ

தாயகக் கனவோடு ரத்தமும் வியர்வையும் சிந்தி சமர்க் களங்களாடி வெற்றிகளை காணிக்கைகளாக்கி விட்டு கண்ணுறங்குகிறார்கள் எங்கள் கண்மணிகள்
மாவீரர்  கண்ட கனவு பலிக்க வேண்டும்
எங்கள் தேசம் மீண்டும் மீளெழ வேண்டும்
இனிவரும் காலங்களாவது எமதாக வேண்டும்

Friday, 17 November 2017

பரி யோவான் பொழுதுகள்: துரத்தும் நிழல்“ஒரு காலத்தில எங்கட அப்பப்பாமார் அம்மம்மார் செத்து போறதை பார்த்தம்.. பிறகு எங்கட அப்பாமார் போச்சினம்.. இப்ப எங்களோட படிச்சவங்களே சாகிற காலம் வந்திடுச்சு மச்சான்”

பரி யோவான் கல்லூரியில் எங்களோடு LKG வகுப்பில் இணைந்த நகுலனின் மரணச் செய்தியை பகிர்ந்து கொண்ட போது, மேற்கண்டவாறு ஏஞ்சல் சொன்ன செய்தியில் சோகம் மட்டுமல்ல நிதர்சனமும் நிறைந்திருந்தது. 

யாழ்ப்பாணம் பிரதான வீதியில், கண்டி வீதி ஆரம்பமாகும் முனையில் இருக்கும் பரி யோவானின் ஆரம்பப் பிரிவின் வாசல் தாண்டி உள்ளே வந்தால் எங்களுடைய LKG வகுப்பு இருக்கும். எங்களுடைய முதலாவது ஆசிரியை, Lewis miss. எங்கள் வகுப்பில் 38 பெடியள் இருந்ததாக ஞாபகம். அந்த வகுப்பில் இருந்த உயரமான வெள்ளைப் பெடியன் தான் நகுலன்.

அந்த ஆண்டு நிகழ்ந்த Parents Dayயில் இலங்கையில் வாழும் சமூகங்களை பிரதிபலிக்கும் ஒரு நாடகத்தில் எங்கள் வகுப்பு கலந்து கொண்டது. அந்தந்த சமூகத்தை பிரதிபலிக்கும் உடைகளணிந்து நாங்கள் மேடையேறினோம். எனக்கு சிங்கள குடும்பத்தில் மகன் வேடம், நகுலன் தான் இலங்கை மாதா, இலங்கை வரைபட கட்டவுட்டிற்குள் குந்திக் கொண்டிருப்பான். பள்ளிநாட்களிலும் அதன் பிறகும் நகுலனோடு நெருங்கிப் பழகவில்லை, அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகளும் வாய்க்கவில்லை. “எங்கட வகுப்பின் முதலாவது monitor அவனாகத் தானிருக்கும்” என்று கேர்ஷன் சொன்னான், அதனால் தான் எட்டி நின்றேனோ தெரியவில்லை. 

“மச்சான் உனக்கு ஞாபகமிருக்கா, நகுலனும் அவனுடைய cousin சுரேந்திராவும், ஒரு Cadillac காரில் தான் பள்ளிக்கூடத்திற்கு வாறவங்கள்” சத்தியரூபன் நினைவூட்டினான்.
“யாழ்ப்பாணத்திலிருந்த ஓரே ஓரு Cadillac கார் அவங்களிடம் தானிருந்தது” சத்தியரூபன் அளந்து கொண்டே போனான், விட்டால்  Cadillac காரை பிரிச்சு மேய்வான்.1983 ஜூலை கலவரத்தின் பின்னர், தென்னிலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து வந்து மாணவர்களை உள்வாங்க, எங்கள் வகுப்பு பிரிக்கப்பட்டு, புதிய மாணவர்களோடு கலக்கப்பட்டது. “Peto Hallன் கன்டீன் பக்கமிருந்த அறையில் இருந்த எங்கட வகுப்பில் தான் நகுலன் இருந்தவன் மச்சி” என்று நிரூபன் WhatsApp groupல் தனது நினைவை பதிவு செய்தான். 

பரி யோவான் ஆரம்பப் பிரிவு விளையாட்டுப் போட்டிகளில், Pargiter இல்லத்தின் அணித் தலைவராகவும், Primary school Prefect ஆகவும் நகுலன் விளங்கினான். பார்க்க அமைதியாக இருந்தாலும் நகுலனும் குழப்படிக்காரன் தான். 

“அவன்ட முகத்தில கோவமே பாத்ததில்ல மச்சான்” நித்திரையால் எழும்பின செந்தில், நகுலன் பற்றிய தனது ஞாபகத்தை பகிர்ந்தான். “நானும் அவனும் இடைவேளைகளில் பவிலியன்ல நின்று Old Parkல் இயக்கம் training எடுக்கிறத பாக்கிறனாங்கள்..அவனிடம் எப்போதும் ஒரு கொமிக்ஸ் புத்தகம் இருக்குமடா” என்றுவிட்டு, நகுலன் தனக்கு சொன்ன பகிடிகளை செந்தில் பகிர்ந்து கொண்டான் 

நாங்கள் O/L சோதனை எடுக்க முதலே, நகுலனும் அவனது மச்சான் சுரேந்திராவும், கனடாவிற்கு புலம்பெயர்ந்து விட்டார்கள். கல்வியங்காட்டிலிருந்து ஒன்றாக பாடசாலைக்கும் டியூஷனிற்கும் போய் வரும் நகுலனும் சுரேந்திராவும் ஒன்றாகவே புலம்பெயர்ந்தார்கள்.

கனடாவிற்கு இடம்பெயர்ந்த பின்னர், இருவரும் எங்கள் வகுப்பு நண்பர்களோடு ஏனோ விலத்தியே நடந்தார்கள். எங்கள் SJC92 நண்பர்களின் ஒன்றுகூடல்களிலும் கலந்து கொள்ள விரும்பாமல் தனித்தே வாழ்ந்தார்கள்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில், லண்டனில் சுரேந்திரா மாரடைப்பால் காலமான செய்தி எங்களை எட்டியது. “இவன் எப்படா லண்டன் வந்தவன்.. எங்களிற்கு தெரியாதே” என்று லண்டன் நண்பர்கள் சிலர் ஆச்சரியப்பட்டார்கள்.

சுரேந்திராவின் செத்த வீட்டில் கலந்து கொள்ள கனடாவிலிருந்து நகுலன் பறந்து வந்தான். தனது அன்பு மச்சானிற்கும் நெருங்கிய நண்பனிற்கும் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்து உரையாற்றினான். செத்த வீட்டிற்கு வந்திருந்த பள்ளிக்கால நண்பர்கள் அனைவரையும் இறுகத்தழுவி விடைபெற்றான். “மச்சான், WhatsAppற்கு வாடா” என்று சிறிசெல்வா கூப்பிட, எங்கட WhatsApp குறூப்பில் இணைந்து ஒருமுறை ஹலோவும் சொன்னான்.

பலமுறை நகுலனிற்கு அழைப்பெடுத்து கதைக்க வேண்டும் என்று வந்த எண்ணம் “அவனுக்கு என்னை ஞாபகம் இருக்குமோ தெரியாது” என்ற தயக்கத்தில் அடிபட்டு போனது. சுரேந்திராவை ஆண்டவரிடம் அனுப்பி விட்டு கனடா திரும்பிய நகுலனை தாக்க, கொடிய புற்று நோய் காத்திருந்தது.

“மச்சான், நகுலனின் நிலைமை சரியில்லை, கன காலம் இருக்க மாட்டான்” என்று ஓகஸ்டில் நல்லூர் திருவிழாவிற்கு யாழ்ப்பாணம் போன நேரம் டாக்குத்தர் கோபி  சொன்னான். “வாவென்றா நகுலனை போய் பார்ப்பம்.. ஹொஸ்பிடலில் இருக்கிறான்” கனடா போன போதும் ஷெல்டன் அழைத்தான். “அவனுக்கு என்னை ஞாபகமிருக்காதுடா.. இந்த நிலையில் அவனை பார்க்க விரும்பேல்ல” மீண்டும் தயக்கம் ஆட்கொண்டது. 

கடந்த வெள்ளிக்கிழமை டொரோன்டோ மருத்துவமனையில் தனது இறுதி நாட்களை கழித்துக் கொண்டிருந்த நகுலனை, ஷெல்டன், நகு, கஜன், ‘கிளி’ சுரேஷ் மற்றும் கிறிஸ் போய்ப் பார்த்தார்கள். கண்கள் திறக்க முடியாமல் படுத்திருந்த நகுலனின் கரங்களைப் பிடித்து ஷெல்டன் ஜெபிக்க, “Thanks machan” என்று நகுலன்
அனுங்கலாகச் சொன்னானாம்.

“மரணம், எமது வாழ்வு முழுவதும் கூடவேயிருந்து துரத்துகின்ற நிழல்” என்று தம்பி ஜேகே எங்கோ பதிவு செய்திருந்தார். உண்மை தான், அன்று எங்கள் அம்மம்மாமாரையும் பின்னர் அப்பாமாரையும் துரத்திய நிழல் இன்று நண்பர்களையும் விழுங்க ஆரம்பித்திருக்கிறது. 

ஒன்றாய் பாடசாலைக்கு வந்து, ஒன்றாய் ட்யூஷனிற்கு போய், ஒன்றாய் கனடாவிற்கு புலம்பெயர்ந்த இரு நல்ல நண்பர்களை, மரணம் எனும் அந்த கொடிய நிழல் ஒரே வருடத்தில் காவு கொண்டுள்ளது. 

“மச்சான், அடுத்த batsman யாரோ தெரியாதுடா” என்று யாரோ ஒருத்தன் WhatsAppல் போட்ட message,  வாழும் வாழ்க்கையின் மகத்துவத்தையும் ஆண்டவரின் ஆசீர்வாதங்களையும் மீண்டும் ஒரு முறை உணர்த்தியது. 

Friday, 10 November 2017

முதல் முதலாக... கம்ப்யூட்டர்1995ம் ஆண்டின் ஆரம்பத்தில் முதல் முறையாக வேலை செய்யத் தொடங்கிய நாள் தான் கம்ப்யூட்டரை முதன் முதலாக தொட்ட நாள்.  கொழும்பு Vauxhall வீதியில் அமைந்திருந்த ஒரு பழைய கட்டிடத்தில் தான் அப்போது Aitken  Spence நிறுவனத்தின் நிதிப்பிரிவு இயங்கியது. அந்த பழைய கட்டிடத்தின் ஒதுக்குப்புறமான அறையில் இயங்கிய Corporate Planning Unitல், இருந்த பழைய மர மேசையில், என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டும், கர புர என்று சத்தம் போட்டும் பயமுறுத்திக் கொண்டிருந்தது.. அந்த வெள்ளைக் கம்ப்யூட்டர்.


அதற்கு முதல் கம்ப்யூட்டரை ரெண்டே ரெண்டு தரம் தான் கண்ணால் பார்த்திருக்கிறேன். முதல் முறை, பரி யோவான் கல்லூரியில் முதன் முறையாக கம்ப்யூட்டர் கொண்டு வரப்பட்ட போது, ஒவ்வொரு வகுப்பிற்கும் கம்ப்யூட்டர் அறிமுகம் அரங்கேறியது. Dining Hallல் வைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டரை, ராஜராஜேஸ்வரன் மாஸ்டர், “இது தான் CPU, இது தான் mouse, இது தான் keyboard” என்று அறிமுகப்படுத்தி, “இதில தட்டினால் இதில வரும்” என்று ஒரு சிறு Demoவும் காட்டினார். நாங்களும் எட்ட நின்று பார்த்து புளங்காகிதம் அடைந்து விட்டு, பிற பாடசாலை நண்பர்களிற்கு புளுகிக் கொண்டு திரிந்தோம். ஜொனியன்ஸ் என்றாலே புளுகு தானாக வரும் தானே. 

இரண்டாவது முறை கம்ப்யூட்டர் கண்டது CIMA படிக்கும் போது IAS கரும்பலகையில். “In the UK...There is a supermarket” என்று நூறாவது முறையாகத் தொடங்கி, ITM படிப்பித்த ஆனந்தகுமார், கம்ப்யூட்டர் படம் கீறி ஃபிலிம் காட்டிய போது தான், ஆஹா இது தானா கம்ப்யூட்டர் என்று ஒரு கணம் கிலாகித்து விட்டு, மறுகணம் பின்வாங்கிலிருந்த நாங்கள் முன் வாங்கிலிருந்த பெட்டைகளை ரசித்துக் கொண்டுருந்தோம், காலியை நோக்கி கடுகதி ரயில் ஓடிக்கொண்டிருந்தது. 

வேலையில் முதல் நாள்,  “பய வென்ட எபா (பயப்பிட வேண்டாம்)” என்ற கனிவான குரல் கேட்டு நிமிர்ந்து பார்க்க, மீசை வைத்த குழந்தை முகம் ஒன்று ஆதரவாய் சிரித்துக் கொண்டே பக்கத்தில் நின்றது. “மங் மென்டிஸ்.. மெந்தா கியலா மேகொல்லங் மாவ கதாகரணே (நான் மென்டிஸ்.. இவர்கள் என்னை மெந்தா என்று அழைப்பார்கள்)” என்று தன்னை அவர் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

அன்றிலிருந்து கம்ப்யூட்டரை பொறுமையாக எனக்கு கற்றுத்தந்தது மெந்தா தான். எங்கோ ஒரு பிரிவில் பியூனாக வேலை செய்த மெந்தாவை, எங்களுடைய Boss, கம்ப்யூட்டர் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதை கற்க வைத்து, மெந்தாவின் வாழ்வை மேம்படுத்தியிருந்தார். எங்களுடைய Boss Aitken Spence நிறுவனத்திலிருந்து ஓய்வு பெறும் வரை மெந்தா தான் அவரது computer specialist. 

அந்தக் காலத்தில் அன்றாடம் வேலை செய்ய நாங்கள் பிரதானமாக இரண்டு applicationsஐ பாவித்தோம். Analysis செய்யவும் budgeting & forecasting செய்யவும் பாவித்தது Lotus 123. இன்றைய MS Excelற்கு முன்னோடியே இந்த Lotus 123 தான். Lotusல் பழகிய பழைய சில கெட்ட பழக்கங்கள் ஆண்டுகள் கடந்தும் Excel பாவிக்கும் போதும் தொடர்வது தனிக்கதை. அறிக்கைகள் தயாரிக்க பயன்படுத்தியது Word Perfect.

மெந்தாக்கு இங்கிலீஷ் துண்டற வராது. இங்கிலீஷ் தெரியாமல் எப்படி கம்ப்யூட்டர் படித்தீர்கள் என்று கேட்டால், கையை விரித்து வானத்தை காட்டி விட்டு சிரித்துக் கொண்டே போய் விடுவார். நிறுவனத்தின் IT பிரிவில் இருந்தவர்களே சில நேரங்களில் சந்தேகம் தீர்க்க மெந்தாவை intercomல் அழைப்பார்கள்.

Lotus 123ல் இருந்த சிக்கலான “If formulae” முதலில் மண்டைக்குள் ஏறவேயில்லை, போடப் போட பிழைத்துக் கொண்டேயிருந்தது. Training manualஜ வாசித்து வாசித்து பார்த்தாலும் புரியவேயில்லை. ஒரு நாள் மெந்தா தான் வடிவாக சொல்லித் தந்தார். “மேக்க.. நத்தங்.. மேக்க... எச்சராய் (இது இல்லாட்டி இது.. அவ்வளவு தான்). இன்றும் Excelல் @If போடும் போது, மெந்தா நினைவில் வருவார், பக்கத்தில் நின்று “மேக்க.. நத்தங்.. மேக்க... எச்சராய்” சொல்லுவார். 

மெந்தா மட்டுமே பாவித்த application, Harvard Graphics. அந்தக்காலத்தில் Lotus 123ல் இருந்த graphs அவ்வளவு சரியில்லாத படியால், எங்களது நிறுவனம் Harvard Graphics பாவித்தது. சனிக்கிழமைகளில் வேலைக்கு போனால் மெந்தா எனக்கு Harvard Graphics சொல்லித் தருவார். 

வெள்ளவத்தையில் 32nd laneல் இயங்கிய  ஒரு கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்தில் சுதர்ஷன் அண்ணாவோடு dBase படிக்க போனேன். dBase படித்தது ஞாபகமில்லை ஆனால் சுதர்ஷன் அண்ணா அடித்த சிக்ஸர்களை இன்னும் மறக்க முடியவில்லை. CIMA முடித்து விட்டு ACS அல்லது BCS படித்தால் நல்லம் என்று சிலர் சொன்னார்கள், ஆனால் படிக்க தான் வசதியும் நேரமும் வாய்க்கவில்லை. 

ஒவ்வொரு மாதம் முடிந்து  ஏழாம் நாள், Aitken Spence குழுமத்தின் நிறுவனங்களின் நிதிக் கூற்றுக்கள் floppy disketல் மெந்தாவிற்கு வரும். Email அறிமுகமாகாத அந்தக் காலத்தில் எல்லாமே floppyயில் தான் ஓடித்திரியும். மெந்தா அந்த floppy disketல் உள்ள தரவுகளை தரவிறக்கம் செய்து எங்களிற்கு தருவார், நாங்கள் அவற்றை அலசி ஆராய்ந்து அறிக்கை தயாரிப்போம். பேப்பர் வடிவில் இருந்த ACMA விண்ணப்பத்திற்கான Experience summaryயை அழகாக Word Perfectல் வடிவமைத்து தந்ததும் மெந்தா தான். 

20 ஆண்டுகளில் வேலைத்ளத்தில் கர கர கம்ப்யூட்டர் மறைந்து சத்தம் போடாத Laptop வந்து விட்டது. Lotus மறைந்து Excel கோலோட்சுகிறது. Floppy Disk காணாமல் போய் cloud உருவெடுத்து விட்டது. ERP, BI என்று விதவிதமான applications ஓடு ஓடி விளையாடிக் கொண்டிருந்தாலும், அந்த முதல் கம்ப்யூட்டரும் அதை பாவிக்க கற்றுத் தந்த மெந்தாவும் நினைவை விட்டகலவேயில்லை.

மேக்க.. நத்தங்.. மேக்க... எச்சராய்!

Friday, 3 November 2017

விசுக்கோத்துக்கள் பல விதம்
“இவன் நகு ஓரு தேத்தண்ணியில் ஊறிப்போன விசுக்கோத்துடா” WhatsAppல் நண்பன் ரஜீஷன் அலுத்துக் கொண்டான்.

“Lol...what does that mean” இங்கிலீஷில் கேட்டு ரஜீஷனை கடுப்பேத்தினேன். கடும் இங்கிலீஷில் கதைத்தால் ரஜீஷனிற்கு கடும் கோபம் வரும், கடும் கோபம் வந்தால் தான் அவனிடமிருந்து நல்ல தமிழ் கொப்பளிக்கும்.

“டேய் அலுக்கோசு” எனக்குத் தான் ஏச்சு விழுந்தது “அவன் ஒரு நமுத்துப் போன விசுக்கோத்து” விஞ்ஞான விளக்கம் அடுத்த வரியில் வந்து இறங்கியது.  


---------------------------------------------------------------------------------------

எனக்கு பிஸ்கட் என்றால் சரியான விருப்பம். விதவிதமான பிஸ்கட் சாப்பிடுவதில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் காணும் ஒரு சாமானிய பிறவி. ஒரு நாளைக்கு ஒரு பிஸ்கட் சாப்பிடாவிட்டால் அந்த நாள் யாழ்ப்பாணத்தில் அடிக்கடி அரங்கேறும் ஹர்த்தால்கள் போல சோபையிழந்து போய் விடும். 

என்னுடைய Favourite பிஸ்கட் என்றால் அது Nice பிஸ்கட் தான். நல்ல மொறு மொறுவென, மேலால சீனி பதிந்திருக்கும் சிங்கனை ஒரு கடி கடித்தால்.. சொல்லி வேலையில்லை. Nice பிஸ்கட்டை சூடான ப்ளேன் டீயில் தொட்டு அடிக்க சும்மா விண் கூவும். வேலைத்தளத்தில் ஒரு நாள் இப்படித்தான் Nice பிஸ்கட்டை தேத்தண்ணியில் தோய்த்து சாப்பிட, என்னை விநோதமாக பார்த்த வெள்ளைக்கார நண்பன், பிறகு தானும் தோய்த்து சாப்பிட்டு விட்டு “wow.. this is awesome mate” என்று விட்டு என்னுடைய மிச்ச பிஸ்கட் பக்கட்டை சுட்டுக் கொண்டு போய்விட்டான்.  


தேத்தண்ணியில் தோய்த்து சாப்பிட திறமான இன்னொரு பிஸ்கட் Marie பிஸ்கட், அதுவும் Munchee Marie பிஸ்கட் என்றால் இன்னும் விசேஷம். Ceylon Biscuits நிறுவனம் தயாரிக்கும் இந்த Munchee Marie பிஸ்கட்டின் தரம் அண்மைக் காலங்களில் குறைந்து விட்டது. சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்ற கதையாக, simple & sweet ஆக இருந்த Marie பிஸ்கட்டை, Tikiri, Milky என்று வித விதமாக மாற்றி, பழைய ஒரிஜினல் Marieஐ தொலைத்து விட்டார்கள். 

பின்னேரங்களில் சாப்பிட ருசியான பிஸ்கட் Chocolate Cream. சிறிய இரு கறுப்பு பிஸ்கட்டுக்களிற்கு மத்தியில் இனிப்பாய் Chocolate Cream தடவியிருக்கும். எத்தனையோ Brandகள் இந்த பிஸ்கட்டை தயாரித்தாலும் இலங்கையில் தயாராகும் Maliban chocolate cream பிஸ்கட்டை யாராலும் அடிக்கவே முடியாது. இந்தியாவில் தயாராகும் Britannia பிஸ்கட்டுக்களின் ருசி Malibanற்கு கிட்டவும் வராது. ஒட்டிக்கொண்டிருக்கும் இரண்டு பிஸ்கட்டுக்களில் ஒன்றை நைஸாக பிரித்து, creamஐ நாக்கால் நக்கி creamஜ ருசி பார்த்து விட்டு, மீண்டும் பிஸ்கட்டுக்களை இணைத்து சாப்பிடுவது ஒரு அலாதியான அனுபவம். 

யாழ்ப்பாணத்தில் சிறுவர்களாய் வளர்ந்து வரும் காலங்களில், பிஸ்கட் ஒரு luxury item. அம்மாவிற்கு சம்பளம் கிடைக்கும் நாளில், தவசீலன் கடையில் நூறு கிராம் பிஸ்கட் வாங்க ஒரு பத்து ரூபாய் கிடைக்கும். Chocolate cream வாங்குவதா இல்லை Wafers வாங்குவதா என்பதில் தம்பியோடு தொடங்கும் சண்டை, வாங்கிய பிஸ்கட்டை பிரிப்பது வரை நீண்டு, “அடுத்த மாசம் ரெண்டு பேருக்கும் பிஸ்கட் இல்லை” என்ற  அம்மாவின் எச்சரிக்கையோடு முடிவிற்கு வரும்.  

காதலியின் முத்தம் போல Wafers பிஸ்கட்டும் ஒரு வகை மயக்கம் கலந்த போதை தான். பக்கெட்டை திறந்தால் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம்....அடுத்த பக்கட்டை திறக்கும் வரை. மிருதுவாக உதட்டை தடவி, நாவை இனிக்க வைக்கும் மொளு மொளுப்பான Wafers பிஸ்கட்டை நினைத்தாலே வாயூறும். ஒஸ்ரேலியாவில் தயாராகும் Arnottsன் Wafers தான் இதுவரை நான் சாப்பிட்டதில் அதிக ருசியான Wafers. 

சுகமில்லை என்று போய் ஆஸ்பத்திரியில் படுத்தாலோ இல்லை வீட்டில் ஓய்வெடுத்தாலோ, சுகம் விசாரிக்க வருபவர்கள் வாங்கி வருவது அநேகமாக Lemon Puffஆகத் தானிருக்கும். வருத்தக்காரர்களின் பிஸ்கட் என்று பெயரெடுத்த Lemon Puff என்றால் Munchee Lemon Puff தான். 

காய்ச்சல் வந்து படுத்திருக்கும் காய்ச்சல்காரருக்கு Maliban Crackers பிஸ்கட்டும் சாதுவான சூட்டோடு Nestamaltம் தான் சாப்பாடு. சிலருக்கு இஞ்சி போட்ட Ginger பிஸ்கட்டும் கிடைக்கும். ஒஸ்ரேலியாவில் பிள்ளைகளிற்கு வயித்தாலடித்தால் (diarrhea) arrowroot பிஸ்கட் தின்னக் கொடுத்து கக்கா போவதைக் கட்டுப்படுத்துவார்கள்.

அந்தக் காலத்தில் அடிக்கடி பிஸ்கட் வாங்கித்தரும் இன்னொருவர், அப்பப்பா. ஆசீர்வாதம் அச்சகத்தில் தனது அந்திம காலம் வரை முகாமையாளராக பணியாற்றிய அப்பப்பா, பாடசாலை விடுமுறை நாட்களில் வேலை முடிந்து வரும் போது குட்டி குட்டி Button பிஸ்கட் வாங்கி வருவார். ஒரு Button அளவில், குட்டியான தட்டை வெள்ளை பிஸ்கட்டில் கலர் கலராக ஒரு dot cream குந்திக் கொண்டிருக்கும் பிஸ்கட் தான் Button பிஸ்கட்.  பத்துக்கு மேற்பட்ட பேரப்பிள்ளைகளிற்கு அவரே கிள்ளி கிள்ளி கொடுக்கும் போது ஒவ்வொருவரிற்கும் மூன்றோ நாலோ பிஸ்கட் தான் கிடைக்கும். பார்க்கவே அழகாயிருக்கும் அந்த பிஸ்கட்டை நாக்கில் வைத்து அதுவாக கரையும் வரை அதன் சுவையை சுவைத்த பொழுதுகள் உண்மையிலேயே இனிமையானவை.

யாழ்ப்பாணத்தில் பிரபலமான இன்னொரு பிஸ்கட், Gem பிஸ்கட். உள்ளூர் பேக்கரிகளில் தயாராகும் இந்த பிஸ்கட் கருகிய Brown கலரில், பாதி மாபிள் அளவில் தான் இருப்பார். பேக்கரிகளிலும் கடைகளிலும் போத்தல்களில் லூசாகாவும் பக்கற்றுக்களில் அடைபட்டும் விற்பனையாவார். Gem பிஸ்கட், கடிக்க கொஞ்சம் கஷ்டமான தடிப்போடும் சாதுவான இனிப்போடையும் வாயூறப் பண்ணுவார். 

----------------------------------------------------------------------

பிஸ்கட்டுக்களும் நாங்கள் வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள் போலத்தான், ஒவ்வொன்றும் ஒரு விதம். 

சிலர் எங்களோடு Niceஆக பழகுவார்கள், 
சிலர் Wafersஆக உருகுவார்கள்,  
சிலர் Gemஐப் போல் எடுப்புக் காட்டுவார்கள், 
சிலர் lemon puff போல் ஆறுதலளிப்பார்கள், 
சிலர் crackers போல் எந்தவித சலனமும் இல்லாமல் கடந்து போய் விடுவார்கள். 

நீங்கள் யாருக்கு எந்த பிஸ்கட்டாக இருக்கப் போகிறீர்கள் ? 

Friday, 27 October 2017

மீண்டும் மாயமான்(கள்)எண்பதுகளின் நடுப் பகுதியில், ரஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக பதவியேற்று, இலங்கைப் பிரச்சினையில், இந்திரா காந்தியின் அணுகுமுறையில் இருந்து விலகி நடந்து கொண்டிருந்த காலம். இலங்கை அரசையும் தமிழ் இயக்கங்களையும்  இணக்கத்திற்கு கொண்டு வர இந்தியா பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்த கால கட்டம்.  இந்தப் பின்னனியில் தான் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினர் “மாயமான்” எனும் தெருக்கூத்தை அரங்கேற்றினார்கள்.

பின்னேரங்களிலும் இரவுகளிலும் யாழ்ப்பாணம் எங்கும் ஊர் சந்திகளில் அரங்கேறிய “மாயமான்” தெருக்கூத்தில் வரும் பாடல்களில் ஒன்று, இன்று மீண்டும் ஒரு தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் நினைவில் வந்தது. 

“தென்னாசியாவின் 
மன்னாதி மன்னர் நான்
ஏனென்று கேட்காமல்
என் பின்னால் வாருங்கள்”

என்ற பாடலை பாடிக் கொண்டு ரஜீவ் கதாபாத்திரம் முன்னே போக, தென்னாசியாவின் குட்டி நாடுகள் அவர் பின்னால் போவதைப் போன்று அந்தக் காட்சி அமையும். ரஜீவ் காந்தியை குறித்து எழுதப்பட்ட இந்த வரிகள், ரஜீவ் கொடுக்க விரும்பிய தீர்வுப் பொதியை பற்றியதாகவும் இருந்திருக்கலாம்.

——————————

தமிழீழம் என்பது தமிழர்களின் கனவு. அந்தக் கனவு முள்ளிவாய்க்காலோடு யதார்த்த ரீதியில்முற்றுப் பெற்றாலும், நாங்கள் சாகும் வரை அந்தக் கனவு எங்கள் கண்களிற்குள் ஒட்டிக் கொண்டு தானிருக்கும். நனவாகாத அந்தக் கனவு எங்களுக்குள் உறங்கு நிலையில் இருக்கும் போது எந்தவொரு தீர்வுத் திட்டமும் எங்களிற்கு திருப்தி தராது.

தமிழ் தலைமைகளோடு ஏற்படுத்திய ஒப்பந்தங்களை சிங்களத் தலைமைகள் மீறிய வரலாறே 1977ல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கும் ஆயுதப் போராட்டத்திற்கும் வித்திட்டது. தனித் தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் உச்சம் பெறத் தொடங்க, கிடைத்த இடைக்காலத் தீர்வுகளை தமிழர் தரப்பு நிராகரிப்பதும் எட்டப்பட்ட உடன்படிக்கைகளிற்கு நீதிமன்றங்கள் முட்டுக்கட்டை போடுவதும்  வரலாறாகத் தொடங்கியது. 


இப்போது 2017ல் மீண்டும் ஒரு அரை குறைத் தீர்வாக இடைக்கால அறிக்கை எனும் பெயரில் வந்திருக்கும் புதிய அரசியல் யாப்பிற்கான சிபாரிசுகளையும் நிராகரிக்க எங்களை நாங்கள் தயார்படுத்தத் தொடங்கிவிட்டோம். அன்றும் இன்றும் நிராகரிக்க நாங்கள் கூறும் காரணங்கள் மிக வலுவானவை, எங்களைப் பொறுத்தவரை வலு நியாயமானவை. மற்றப் பக்கத்தில் சிங்கள பேரினவாதிகளும் தங்களது எதிர்ப்பு ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள்.

“மச்சான், நாளைக்கு சிங்களவனே மனம் மாறி எங்களிற்கு தமிழீழம் தந்தாலும், நாங்கள் சிலாபத்தில் இருக்கும் தென் தமிழீழ எல்லையை வெள்ளவத்தை மட்டும் நீட்டாட்டி எங்களிற்கு தமிழீழம் வேண்டாம் என்று சொல்லுவமடா” என்று நண்பன் ஒருவன் பகிடியாய் சொன்னதிலும் ஒரு தார்ப்பரியம் இருக்கிறதா?

போரில் தோற்ற நாங்கள் தான் இறங்கிப் போக வேண்டும் என்ற வாதம் சரணாகதிக்கு சமானம் இல்லலையா? சரி இறங்கிப்போவதுதான் என முடிவெடுத்தால் எவ்வளவு தூரம் இறங்கலாம் என்பதற்கும் ஓரு எல்லையுண்டல்லவா?  அந்த எல்லை எதுவரை என்பதை எப்படி தீர்மானிப்பது ? இறங்கிப்போனால் அப்படியே மூழ்கிப்போய்விடுவோம் என்பவர்களுக்கான பதில் தான் என்ன? 

1987லிருந்து தரப்பட்ட தீர்வுகளை நிராகரிக்க நிராகரிக்க, அடுத்து வந்த தீர்வுகள் தேய்ந்து கொண்டு போனது தான் வரலாற்று உண்மை என்று அண்மையில் மெல்பேர்ண் வந்த அமைச்சர் மனோ கணேசன் சொன்ன கருத்து நியாமானதா?  நாங்கள் விரும்பும் தீர்வும்  ஒரு மாயமானா? 

—————-

தீர்வுத் திட்டங்களின் உள்ளடக்கம் மட்டுமா தேய்ந்தது? யுத்தம் எங்களை விரட்ட, நாங்கள் தென்னிலங்கைக்கும் வெளிநாடுகளிற்கும் புலம்பெயர, தாயகப் பகுதிகளில் எங்கள் சனத்தொகை தேயத் தொடங்கியது. எங்களது சனத்தொகை குறைவதும், ஒரு வகையில் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்களிற்கு வழி விடுவதாகவே அமைகிறது. 

கல்வியில், 1990களின் ஆரம்பத்தில் முதல் மூன்று மாவட்டங்களில் இடம்பிடித்த யாழ்ப்பாண மாவட்டம், 2016ல் 21வது இடத்திற்கு தள்ளப்பட்டதும் இந்த காலகட்டத்தில் தான். 1980களில் இலங்கையின் பொருளாதாரத்திற்கு 25 சதவீதத்திற்கு பங்களிப்பு வழங்கிய வடக்கு-கிழக்கு மாகாணங்களின் பொருளாதார பங்களிப்பு, 2016ல் 6 சதவீதத்திற்கு சரிந்ததும் இதே கால கட்டத்தில் தான். 

நாங்கள் அரசியல் உரிமைகளை வெல்வதில் மட்டும் குறியாக இருக்க, இலங்கையின் பிற சமூகங்கள் தங்களை பொருளாதார ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் வளப்படுத்திக் கொண்டு விட்டன என்ற கசப்பான உண்மை எமக்கு நன்கு தெரிந்தது தான். அந்த சமூகங்கள் பொருளாதார ரீதியாக அடைந்த முன்னேற்றங்கள் அவர்களை அரசியல்  ரீதியாகவும் பலப்படுத்தி விட்டன.

அரசியல் உரிமைகள் வெல்லும் வரை எங்கள் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுக்க நாங்கள் தொடர்ந்தும் மறுத்து வருவதும் ஏன்? அரசியல்-பொருளாதாரம் எனும் இரட்டை நோக்கங்களையும் சமாந்தரமாக கொண்டியக்கவல்ல கொள்கைகள் நமக்கு கசப்பதன் காரணம் தான் என்ன?
எங்களது அரசியல் உரிமைகள் நோக்கிய பயணத்தை திசை திருப்பவல்ல மாயமான் தான் சமூக-பொருளாதார அபிவிருத்தியா?

—————————

“ஐநா வரை எங்கட பிரச்சினை போயிருக்குடா. இப்ப போய் ஒரு அரை குறை தீர்வை ஏற்றுக் கொண்டோம் என்றால் அவ்வளவு தான். பிறகு எந்தக்காலத்திலும் எங்களால் அதிக அதிகாரமோ உரிமைகளோ கேட்க முடியாது, தம்பி” என்று அண்ணர் ஒருத்தர் விளக்கிய நியாயத்திலும் நியாயம் இருக்கிறது. 

மே 2009ல் எங்களது ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டதோடு, நாங்கள் எங்களை நம்பி,உயிரும்  ரத்தமும் உழைப்பும் வியர்வையும் பவுணும் பணமும் விதைத்து கட்டியெழுப்பிய மிகப் 
பெரிய பேரம் பேசும் பலம் (bargain power), அழிந்து போனது. இப்போது சிங்கள அரசாங்கத்தை உருட்டி வெருட்டி மிரட்டி அதிக உரிமைகளை தர வைக்க எங்களிற்கிருக்கும் பேரம் பேசும் பலம் தான் என்ன? 225 பேரடங்கிய பாராளுமன்றத்தில் இருக்கும் எங்களது 15 பேரா? இலங்கையின் பொருளாதாரத்தை முடக்க முடியாத வடக்கின் கடையடைப்புக்களா?

2009ல் மனித பேரவலம் நடந்த போது அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் கனடாவிலும் ஐநாவிலும் தலைமைப் பதவிகளில் இருந்தவர்களால் தான், அதற்கு பிந்தைய ஆண்டுகளில் சர்வதேசத்தில் இலங்கை அரசிற்கு எதிராக மேற்கோள்ளப்பட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இன்று அவர்களின் ஆட்சிகளும் மாறி இலங்கையிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. அன்று இருந்த அதே ஓர்மத்துடன் சர்வதேசம் எங்களிற்காக களமிறங்கி எங்களது உரிமைகளை பெற்றுத் தரும் என்று இன்றும் நாங்கள் நம்பலாமா? சர்வதேச தலையீடு என்று நாங்கள் காலங்காலமாக எதிர்பார்த்து இருப்பதும் ஒரு மாயமானா?

———————-

நாங்கள் ஒரு பக்கம் இந்த மாயமான்களை துரத்திக் கொண்டு திரிய, போரின் காரணமாக புலம்பெயர்ந்து தங்களை பலப்படுத்திக் கொண்டு விடுதலைப் போராட்டத்திற்கும் பலம் சேர்த்த ஒரு தலைமுறை, “நாட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும்” என்ற இன்னும் நிறைவேறாத வேட்கையுடன் முதுமையை நோக்கியும் மரணத்தை நோக்கியும் பயணித்துக் கொண்டிருக்கிறது. 1950களிலும் 1960களிலும் பிறந்த இந்த தலைமுறை தான், போரால் அழிவுண்ட எங்கள் தேசத்தை மீள கட்டியெழுப்ப வேண்டிய நிபுணத்துவத்தையும் நிதிவளங்களையும் தம்மகத்தே கொண்டிருக்கிறார்கள். 

எங்கள் தேசத்தை ஆழமாக நேசிக்கும் இந்தத் தலைமுறைக்கு பின்னர் வரும் தலைமுறைகள் அவர்களிற்கிருக்கும் அதேயளவு பற்றுடன் தாயகத்திற்கு உதவி செய்யப் போவதில்லை.  தாயகத்தை நேசித்து புலம்பெயர் தேசத்தில் வாழும்  இந்த தேசப் பற்றாளர்களின் பலத்தை தாயக  சமூகத்தையும் பொருளாதாரத்தையும்
மீளவும் கட்டியெழுப்ப பயன்படுத்தப் போகிறோமா? இல்லை காலம் அவர்களையும் காவு கொள்ள விட்டு விடப்போகிறோமா? மாயாமான்களிடம் மீண்டும் ஏமாறப் போகிறோமா?