Friday, 23 December 2016

பஹ்ரேய்ன் பசுபாரசீக வளைகுடாவில் அமைந்திருக்கும் முப்பது தீவுகளை உள்ளடக்கிய ஒரு குட்டி இராஜ்ஜியம் தான் பஹ்ரேய்ன். மன்னராட்சி நடக்கும் ஒரு இஸ்லாமிய நாடு. பெற்றோலியத்தில் தங்கியிருந்த பொருளாதாரத்தை, அதிலிருந்து மீட்டு, நிதிச் சேவைகள் நோக்கி நகர்த்திய முதலாவது வளைகுடா நாடும் பஹ்ரேய்ன் தான். மத்திய கிழக்கில் வேலைவாய்ப்பு தேடி எம்மவர்கள் கடல் கடக்க வெளிக்கிட்ட போது,  பஹ்ரேய்னையும் விட்டு வைக்கவில்லை.


எங்கட SJC92 பிரிவில் முதன்முதலாக மத்திய கிழக்கிற்கு போனவர் சியாமளராஜ். தொண்ணூறுகளின் மத்தியிலேலே மத்திய கிழக்கிற்கு பறந்து விட்டார். "டேய் நீங்க கொப்பி பேனையோடு தூக்கிக்கொண்டு திரிந்த நாட்களிலியே நான் தினாரில் உழைக்க தொடங்கிட்டன்" என்று லெவலடிப்பார். "எங்கட பட்சிலேயே மிடில் ஈஸ்டிற்கு முதல் முதலா வந்தது நான்தான்டா" என்று ஒரு நாள் ஸ்கைப்பில் பீத்தினார். "ஓமடா மச்சான், சந்திரனிற்கும் மனுசன் போக முதல் நாயைத் தான் அனுப்பினவங்கள்" என்று திருப்பி அடிக்க, சிரித்துவிட்டு கட் பண்ணினார்.


பத்தாண்டுகளிற்கும் மேலாக பஹ்ரேய்னில் பதுங்கியிருக்கும் இந்தப் புலி, கடந்த இரண்டு ஆண்டுகளாக Facebook மற்றும் WhatsApp சமூகவலைத் தளங்களில் உறுமிக் கொண்டு திரிகிறது. அன்டிமாரோடு பல குழுக்களில் கொட்டமடிக்கும் இந்த கன்னிப்புலியின் ரோதனையை ரசிப்பவர் பலர், சொல்லாலடித்து துரத்துபவர் சிலர். 


எதற்கெடுத்தாலும் "வானத்தையும் பூமியையும் படைத்த ஆண்டவன்" என்று தொடங்கி WhatsAppல் பிரசங்கம் வைப்பதும், "I am number 2" என்று பெருமையடிப்பதும், பாட்டு பாடுறன் என்று சொல்லி கல்பனா அக்காவையே அழ வைக்குமளவிற்கு கத்துவதும், அரசியல் மேதாவியாக அவதாரம் எடுத்து அலட்டுவதும், தத்துவம் சொல்லி அறுப்பதும் என்று, கடந்த சில ஆண்டுகளில் இவனின் அட்டகாசம் எல்லைக் கோட்டை தாண்டிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.


இந்த ஆண்டு பல பயணங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்தது. அதற்கெல்லாம் பிள்ளாயார் சுழி போட்டது மார்ச் மாதம் Big Match பார்க்கப் போன பயணம் தான். போன நவம்பரில் சுரேன் Big Match போகும் எண்ணத்தை விதைத்தான், உடனடியாக ஆதியும் கணாவும் நானும் டிக்கட் போட்டு விட்டோம். டிக்கட் போட்டு விட்டு தான் மனிசியிடம் சொன்னோம். பெப்ரவரியில் டுபாய்க்கு வேலை விஷயமாக போகும் நிர்ப்பந்தம் எற்பட, டிக்கெட்டை மாற்றி டுபாய் போய் வேலையை முடித்துவிட்டு யாழ்ப்பாணம் போக பயணத்தை மாற்றினேன். 


டுபாயில் வசிக்கும், பரி யோவானில் பாலர் வகுப்பிலிருந்து ஒன்றாக படித்த நண்பன் கணேஷ்குமாரும் இணைந்து கொள்ள, பஹ்ரேய்ன் புலியை பார்த்து வரும்  திட்டம் தயாரானது. "மச்சான், சனிக்கிழமை காலம்பற வாறம், குளிச்சு கிளிச்சு நில்.. சரியோ" என்று மெஸேஜ் அனுப்ப, சிங்கன் காத்தால எழும்பி தலை முழுகி விட்டு செல்ஃபி எடுத்து படத்தை குறூப்பில் போடுறார்.


சியாமள்ராஜ், ஒரு மண்டைக்காய், பரி யோவான் U15 opening batsman, யாழ்ப்பாணத்தின் தலை சிறந்த Table Tennis ஆட்டக்காரன். யுத்தம் என்ற கொடிய அரக்கன் எம்மல்லோரின் வாழ்வையும் உலுப்பி எடுத்தது. 1990ல் கொழும்பிற்கு இடம்பெயர்ந்து ஒருவர் தோளை ஒருவர் பற்றி நாங்கள் கல்வியில் கரையை தொட்டுவிட, சியாமளராஜ் யுத்தம் சிதைத்த வாழ்க்கைக் கடலில் இன்றும் தத்தளித்துக் கொண்டிருக்கிறான்.


பத்தாம் ஆண்டு, முதல் தவணைப் பரீட்சையில் சியாமளிற்கு கணிதத்திற்கு கிடைத்த மதிப்பெண்கள் 35. அடுத்த தவணைப் பரீட்சைக்கு கடுமையாக உழைத்து, வகுப்பில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று அந்தனிப்பிள்ளை மாஸ்டரை அசர வைத்தான். உயர்தரத்தில், பரீட்சைக்கு முதல் நாள்  கிரிஷாந்தனின் கொமர்ஸ் கொப்பியை வாங்கிக் கொண்டு போய், போட்டோ கொப்பி எடுத்து இரவிரவாக முழித்திருந்து படித்து விட்டு வந்து பரீட்சை எழுதினான். பரீட்சை பெறுபேறு வரும்போது இரண்டு வருடம் படித்த கிரிஷாந்தனிற்கும் B ஒரு நாளிரவு மட்டும் படித்த சியாமளராஜிற்கும் B. சியாமள்ராஜ், கொமர்ஸ் படித்த மண்டைக்காய். 


காலை 7 மணிக்கு டுபாயிலிருந்து பஹ்ரேய்ன் புறப்படும் விமானத்தில் கணேசும் நானும் பயணித்தோம். இரவிரவாக குறட்டை விட்டு என் நித்திரையை கெடுத்த கணேசை "மச்சான் ப்ளைட்டில் நித்திரை கொள்ளாதேடா, நான் ஒரு குட்டித் தூக்கம் அடிக்கப் போறன்" என்று எச்சரித்து விட்டு கண்ணயர்ந்தேன். டுபாய் விமான நிலையத்தில் குடித்த குப்பை கோப்பி வயிற்றுக்குள் விளையாட்டு காட்டியது.


யாழ்ப்பாண YMCAயில் சியாமளை எப்போதும் காணலாம், பக்கத்தில் தான் அவரின் வீடும். Table Tennisல் பல வெற்றிகளை ஈட்டிய சாம்பியன் சியாமள்ராஜ். அந்தக்காலத்தில் ஒல்லிப்பிச்சானான சியாமள் ஒரு ஸ்டைலா தான் விளையாடுவார், அவரோடு ஜோடி போட்டு ஆட, சுண்டுக்குளி பெட்டைகள் போட்டி போடுவார்களாம், அதையும் அவரே சொல்லுவார். சியாமள் பரி யோவான் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தது தனிக்கதை. அதை விபத்து என்பதா விபரீதம் என்பதா என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும்.


பஹ்ரேய்ன் விமான நிலையத்தில் இறங்கிய எங்களை இம்மியளவும் சிரிக்காத தாடி வைத்த ஷேக் அப்துல்லா வரவேற்றார். அவருக்கு நன்றி சொல்லி விட்டு வெளியே வந்தால், டானியலை காணவில்லை. பஹ்ரேய்னிற்கு போன சியாமளராசா என்ற சிவனடியார், பெந்தகோஸ்து திருச்சபையில் திருமுழுக்கு பெற்று டானியலாக புதிய பிறவி எடுத்திருந்தார். டானியல், பைபிளை கரைத்து குடித்து ஒரு அதி தீவிர கிறிஸ்தவனாக மாற்றம் கண்டிருந்தார். 


சியாமள் நல்லா கதை சொல்லுவான், கதை சொல்லும் பாணியிலேயே சிரிப்பு வரும்.1990ல் பலாலிக்கு பங்கர் வெட்ட இயக்கம் பிடித்துக் கொண்ட போன கதையை எவ்வளவு தரம் சொன்னாலும் கேட்கலாம், அலுக்காது. வெள்ளவத்தையில் மாலை நேரங்களில் ஊத்தைக்கடையடியில் சியாமள் வந்தா தான் கச்சேரி களைகட்டும். ஊத்தகடையின் கண்ணாடி அலுமாரியை தவறுதலாக உடைத்து நொறுக்கியதற்காக பொலிஸ் பிடித்து ஜீப்பில் ஏற்றிக் கொண்டு போகும் போதும் சிரித்துக் கொண்டே Bye சொன்ன வீரவேங்கை அவன்.


நாங்க பஹ்ரேய்ன் விமான நிலையத்தின் வெளியேறும் பகுதியால வெளியே வர, டானியல் உள்நுழையும் பகுதியின் வாசலில் போய் எங்களை வரவேற்க நிற்கிறான். எங்களைக் கண்டதும் ஓடி வந்து கட்டிபிடத்து அரவணைத்து சிரி சிரி என்று சிரிக்கிறான். "டேய் பயந்தாங்கொள்ளி, வந்து சேர்ந்து விட்டாய், உன்னை இன்றைக்கு போட போறன்" என்று ஆப்கானிஸ்தான் காரனின் பழைய காரில் எங்களை ஏற்றிக் கொண்டு போகும் போது காமெடி பண்ணினான். 


சியாமள் எங்களோடு CIMA படிக்கவும் வந்தான், முதலாவது stageஐ ஒரே ஷொட்டில் பாஸ் பண்ணினான். CIMA பாஸ் பண்ணினதற்கு Mt Lavinia கடற்கரையில் ஒரு பெரிய Partyயும் வைத்தான். அதற்கு பிறகு ஆளை CIMA பக்கம் காணவில்லை. 


"மச்சான் பசிக்குதடா, நல்ல தேத்தண்ணியா வாங்கித் தாடா" என்று கேட்டோம். எங்களை ஒரு மலையாள ஊத்தைக்கடைக்கு கொண்டு போய் தேத்தண்ணி என்ற பெயரில் களனித்தண்ணி வாங்கித் தந்தான். "நாயே இது நாறல் சாப்பாடு" என்று அலுப்பு கொடுக்க, எங்களை ஆனந்தபவனிற்கு கூட்டி போய் வயிறாற தோசை, கேசரி, கோப்பி எல்லாம் வாங்கித் தந்தான். அன்று பகல் முழுவதும் டானியலோடு பம்பலாக கதைத்து வயிறு வலிக்க சிரித்துவிட்டு அன்று பின்னேரமே டுபாய்க்கு திரும்பினோம். 


புலியைத் தேடி பஹ்ரேய்ன் போனால் அங்கே ஒரு பசுவைத் தான் தரிசித்தோம். சமூக வலைத்தளங்களில் ஐஃபோனிற்கு பின்னால் மறைந்திருந்து உறுமுவது புலியல்ல, டானியல் என்ற நல்ல மென்மையான உள்ளம் கொண்ட நல்ல பசு தான். 


முப்பது ஆண்டுகால கொடிய யுத்தம் எங்களில் இருந்த திறமையானவர்களை மட்டும் எங்களிடமிருந்து பறிக்கவில்லை, எங்களிடமிருந்த திறமைகளையும் மழுங்கடித்து விட்டது.  உலகத்திற்கு விடிவை கொண்டு வந்த கிறிஸ்துவின் பிறப்பு நெருங்கும் இந்த காலத்தில், எங்களதும் எம்மினத்தினதும் வாழ்விலும் ஒளி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு பிரார்த்திப்போம். 


குழந்தை யேசுவின் அழுகுரல் கேட்டதும், மீட்பர் அவதரித்து விட்டார் என்று உலகம் மகிழ்ந்ததாம் என்று போன கிழமை தேவாலயத்தில் போதகர் பிரசங்கித்தார்.  அன்று முள்ளிவாய்க்காலிலும் இன்று அலப்பாயிலும் அழும் குழந்தைகளினதும் மனிதர்களதும் அழுகுரல் ஏன் அந்த யேசுவிற்கு இன்னும் கேட்கவில்லை? 

No comments:

Post a Comment