Friday, 16 December 2016

ஓடு ராசா ஓடு
1984ம் ஆண்டு, பரி யோவானின் Primary schoolல் கடைசி வருடம். அதற்கு முந்தைய வருடம் honours prize கிடைத்தும் வகுப்புகளிற்கிடையிலான Know your School Quiz போட்டியில் அதிக புள்ளிகளை பெற்று வெற்றிக் கிண்ணம் வென்றும், Prefect badge கிடைக்கவில்லை என்ற ஏமாற்றம் மனதை வாட்டியது.


இந்தாண்டு ஏதாவது சாதித்து விட்டு தான் middle schoolற்குள் அடியெடுத்து வைக்க வேண்டும் என்ற ஓர்மம் மனதில் உருவெடுத்தது. இரண்டாம் தவணை Sports meet நெருங்க, எப்படியாவது "அந்த" ரேஸில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற உறுதி மனதில் வலுத்தது. கடந்த மூன்றாண்டுகளாக "அந்த" ரேஸில் கலந்து கொண்டாலும், heats தாண்டி sports meet அன்று இடம்பெறும் இறுதிப் போட்டிக்கு தெரிவானதேயில்லை.


இந்தாண்டும் வழமை போல் Long Jumpல் முதலாவது சுற்றிலும் Cricket ball throwல் கடைசி சுற்றிலும் தோல்வியை சந்திக்க, heatsன் ஒரு சுற்றில், "அந்த" ரேஸில் முதலாவதாக வந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றேன். கடுமையான பயிற்சியும் மனதில் நிறைந்திருந்த ஓர்மமும் இறுதிச் சுற்றில் இடம்பெற வழிவகுத்துத் தந்தன.


1984ம் ஆண்டு ஆரம்பப் பிரிவில் Thompson இல்லத்திற்கும் Johnstone இல்லத்திற்கும் தான் கடும் போட்டி. இரண்டு இல்ல அணிகளும் மிகச்சிறந்த ஓட்டக்காரன்களை கொண்டிருந்ததால், எல்லாவித ரேஸ்களும் விறுவிறுப்பாக இருந்தன.  Johnstone இல்ல அணியில் கேர்ஷன், கண்ணதாசன், அன்புச்செல்வன், "வெள்ளை" சத்தியேந்திராவும் Thompson Houseல் ஜெய்மன், வரேந்திரன், "அட்டாக்" சசி, யோகதாஸும் இருந்தார்கள். எங்கட Handy Houseல் ஏகாம்பரநாதன் (பிரபு) மட்டும் தான் திறமான ஓட்டக்காரன். 


ஆரம்பப் பிரிவின் கடைசி வருட Sports Meet ஒரு சனிக்கிழமை மத்தியானம் March Past உடன் ஆரம்பித்தது. Layden Garments தயாரித்த vest அணிந்து, swan polish போட்டு மினுக்கிய வெள்ளைச் சப்பாத்துக் காலால் அணிவகுப்பு கலாதியாக நடந்தது. எங்களிற்கு March Pastல் மூன்றாவது இடமும், அது முடிய நடந்த Ball passingல் நாலாவது இடமும் கிடைத்தது. 


"அந்த" ரேஸிற்கான நேரம் நெருங்க இதயம் படபடக்க தொடங்கியது. "மச்சான், நாங்க இந்தமுறை நாலாவதா வாறதா மூன்றாவதா வாறது என்றது உங்கட கையில் தான் இருக்கு" என்று எங்கள் இல்லத்தின் கேப்டன் பிரபு உற்சாகப்படுத்தினான். முதல் இரு இடங்களிற்கும் Johnstone இல்லமும் Thompson இல்லமும் தான் போட்டியிட்டன. மூன்றாவது இடத்திற்கு எங்களிற்கும் Peto இல்லத்திற்கும் தான் போட்டி. "அப்ப இன்னும் கொஞ்சம் குளுக்கோஸ் தாடா டேய்" சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். 


கையில் பிடித்திருந்த Handy houseன் பெரிய பச்சை நிறக் கொடியை நண்பன் சத்தியரூபனிடம் கொடுத்து விட்டு "வரத் திரும்பத் தரோணும்" என்று சாதுவா வெருட்டி விட்டு, "அந்த" ரேஸிற்கு ஆயத்தமாகிறேன்.  ஒலிபெருக்கியில் மயில்வாகனம் மாஸ்டரின் சிம்மக் குரலில், "அந்த" ரேஸ் பற்றிய அறிவிப்பு வர, shot put பிட்ச் இருக்கும் physics lab அடிக்கு நகர்கிறேன். 


"அந்ந" ரேஸின் இறுதிப் போட்டிக்கு தெரிவான ஜவரில் இருவர் எங்கட ஹவுஸ், இறைவனும் நானும். டொக்டர்இறைவன் தற்பொழுது கொழும்பில் பிரபல மருத்துவர், சக்தி டீவியில் வலம் வருவார். Johnstone இல்லத்திலிருந்து கோபியும் (பிரபல யாழ்ப்பாண Orthopaedic surgeon) Pargiterவிருந்து ஓருத்தனும் Petoவிலிருந்து இன்னொருத்தனும் தெரிவாகியிருந்தார்கள். 


வெள்ளை நிற cowboy தொப்பியணிந்த மகாலிங்கம் மாஸ்டர், "on your mark" சொல்ல, மூன்றாவது லேனில் ஓடத்தயாரான எனக்கு முடிவு கோட்டை விட மிச்ச எல்லாம் கண்ணுக்கு தெரிந்தது. 


Robert Williams மண்டபத்தின் கரையில் அடுக்கப்பட்டிருந்த இளநீல நிற வாங்குகளில் அமரந்திருந்த பெற்றோர்கள், அவர்களிற்கு சூசியமும் வடையும் பரிமாறப்படுவதை மேற்பார்வை செய்துகொண்டிருந்த ஜீவானந்தம் மாஸ்டர், முன்வாங்கில் வெள்ளையும் சொல்லையுமாக உடையணிந்து மிடுக்காக கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்த அதிபர் ஆனந்தராஜா மாஸ்டர், தண்ணீர் தாங்கியடியில் அமர்ந்திருந்த மாணவர்களை கண்காணித்துக் கொண்டிருந்த துரைச்சாமி மாஸ்டர் என்று எல்லாருமே பார்வை வீச்சுக்குள் வந்தார்கள். 

மகாலிங்கம் மாஸ்டர் "set" சொல்லவும் பழைய பூங்கா பக்கம் ஹெலிகொப்டர் ஒன்று பறக்கவும், அந்த சத்தத்தில் உறங்கிக் கொண்டிருந்த வெளவால்கள் திடுக்கிட்டெழும்பி மரத்தை விட்டு எழும்பி வானில் பறக்கவும் சரியாயிருந்தது. முகாம்களுக்குள்  ஆமி முடக்கப்படுவதற்கு முந்தைய காலமது. பழைய பூங்காவிலும் குருநகர் தொடர்மாடியிலும் இராணுவ முகாம்கள் இருந்தன. பழைய பூங்கா வீதியில் எப்போதும் இராணுவ நடமாட்டம் இருக்கும். 


"Go" சொல்லாமல் மகாலிங்கம் மாஸ்டர் வாயிலிருந்த விசிலால் விசிலடிக்க, "அந்த" ரேஸ் தொடங்கியது. ஆரம்பக் கோட்டிலிருந்து புயலென புறப்பட்டால், எனக்கு முன்னாலே கோபி பறக்கிறான். மற்றப்பக்கம் இறைவன் கோபியை கலைத்துக் கொண்டு போறான். போன வருடம் கோபிக்கு முதலாவது இடமும் இறைவனிற்கு இரண்டாவது இடமும் கிடைத்தது. ரேஸின் அரைவாசித் தூரமான புளியமரத்தடி தாண்ட, நான்காவது இடத்தில் ஓடிக்கொண்டிருந்த எனக்கு முடிவுக்கோடு வெகு தூரத்திலேயே தெரிகிறது. 


பழைய பூங்காப் பக்கமிருக்கும் குட்டிச்சுவரிற்கு மேலால, ஒரு இராணுவ ட்ரக் வலு வேகமாக போவது தெரிந்த அந்த கணத்தில் தான் அந்த அதிசயம் நடந்தது. எனக்கு இடப்பக்க லேனில் இரண்டாவதாக ஓடிக்கொண்டிருந்த இறைவன் தடக்கப்பட்டு கீழே விழுந்துவிட்டான், கோபி இன்னும் முன்னிலையில். 


கடவுளே விழுந்து வழிவிட,  உடனடியாக மூன்றாவது இடத்திற்கும், பிரபு தந்த இரண்டாவது கரண்டி குளுகோஸின் சக்தியால் உந்தப்பட்டு, சில நொடிகளில் இரண்டாவது இடத்திற்கும் முன்னேறுகிறேன். 


முடிவு கோட்டை நெருங்கியாச்சு, எங்கட இல்லத்தின் பச்சைக் கொடியை சத்தியரூபன் ஆட்டுவது தெரிகிறது, பிரபு "come on come on" கத்துவதும் கேட்கிறது. கோபி கோட்டை முதலாவதாக தாண்டப் போறான், அடுத்தது நான் தான்.


இன்றைக்கு இரண்டாவது இடம், ஹையா ஹையா, நான் சாதித்து விட்டேன். அந்த பச்சைக் கொடியின் நிழலில் நடந்து போய், இரண்டாவது பரிசை இன்னும் சில மணி நேரங்களில் வாங்கப் போகிறேன். தேவதாசன் மாஸ்டர் தான் அறிவிப்பார், ஆனந்தராஜா மாஸ்டர் கதிரையிலிருந்து கூர்ந்து கவனிப்பார், துரைச்சாமி மாஸ்டர் மேசையடியில் நிற்க பிரதம விருந்தினர் அந்த சான்றிதழை வழங்குவார், அதை பத்திரமாய் கொண்டு போய்... என்று கனவு கண்டு கவனத்தை சிதறடித்த அந்த சில கணங்களில்.. Pargiter இல்லக்காரன் கோபிக்கு அடுத்ததாக கோட்டைத் தாண்டிவிட்டான், பின்னால மூசிக்கொண்டு இறைவன் ஓடிவாற சத்தம் கேட்கிறது.


"கர்த்தரே என்னை கைவிடாதேயும்" என்று ஜெபிக்க "ஓடு ராசா ஓடு" என்ற கர்த்தரின் குரல் எதிரொலிக்கிறது. வியர்த்து, இளைத்து,  மூச்சிழைக்க, கோட்டைத் தாண்டுகிறேன். "சேர், இவர் தான் third" சந்திரமெளலீசன் மாஸ்டர் என்னுடைய கையை பிடித்துக் கொண்டு போய், "அந்த" ரேஸின் முடிவை பதிவு செய்கிறார். பிரபு குளுக்கோஸோடு ஓடி வாறான், பின்னால் கொடியோடு சத்தியரூபனும். 

Sack race என்ற "அந்த" ரேஸில் வென்ற பெருமிதத்துடன் பிரபு தந்த குளுகோஸை கையில் வாங்கி வாயில் போட்டு விட்டு, சத்தியிடமிருந்து மீண்டும் எங்கள் Handy இல்லத்தின் கொடியை பெருமையுடன் மீளபெற்றுக் கொள்கிறேன்.No comments:

Post a Comment