Friday, 30 December 2016

விடைபெறும் 2016


யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் பயணங்கள் எப்பவுமே உணர்வுபூரணமானவை. இந்து மாசமுத்திரத்தின் அலைகள் மோதும் வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் ஒரு அதிகாலை வேளை யாழ்ப்பாணம் செல்லும் கடுகதி ரயிலில், பிதுங்கி வழியும் சூட்கேஸுகளைக் காவிக் கொண்டு, "வெளிநாட்டுக்காரர்" என்று ஊர்ச்சனம் பார்வையால் முத்திரை குத்த, ரயிலில் இருபத்தாறு ஆண்டுகளிற்கு பின்னர் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய பயணம் ஆரம்பமாகியது. 


2016ம் ஆண்டு பறந்தோடியே விட்டது. எங்களிற்கு வயது ஏறுவதால் நாட்கள் வேகமாக நகர்கிறதா, இல்லை உலகம் இறக்கை கட்டி பறப்பதால், பொழுதுகளும் வேகமெடுக்கிறதா தெரியவில்லை. இந்தாண்டு உலக அரங்கில் நிகழ்ந்த அதிரடி மாற்றங்கள் 2016ஜ மறக்க முடியாத ஒரு ஆண்டாக பதிவு செய்துவிட்டன.


2016ம் ஆண்டில் வாசித்த முதல் புத்தகம் ஷோபா ஷக்தியின் "Box" கதைப்புத்தகம்".
விறுவிறுப்பான மொழிநடையில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை கோப உணர்வுடன் இரு நாட்களிலேயே வாசித்து முடித்தேன். எம்மினத்தின் வலிகள் சுமந்த ஒரு புத்தகத்தை, எங்கள் போராட்டத்தின் இன்னுமொரு பிம்பத்தை வரைந்த ஒரு நாவலை, போர் சுமந்த வன்னி மண்ணின் அவலத்தை மீட்ட ஒரு பதிவை, நாங்கள் தப்பியோடி வெளிநாடு வந்து விலாசம் காட்டி கொண்டிருப்பதை கண்முன் கொண்டு வந்த மனசாட்சியின் மறுவுருவத்தை, வாசித்த அனுபவத்தை சயந்தனின் "ஆதிரை" நாவல் தந்தது. இந்தாண்டு வாசித்த மிகச் சிறத்த புத்தகம் ஆதிரை தான். 


திறக்க முடியாத யன்னலிற்கு வெளியே பச்சை வயல்வெளிகளும், புத்தர் சிலைகளும், தென்னை மரங்களும், ரயில் கடவைகளில் மனிதர்களும் வழியனுப்பி வைக்க, குருநாகலும் பொல்கஹவெலவும் தாண்டி யாழ்ப்பாணம் நோக்கி ரயில் முன்னேறிக் கொண்டிருந்தது. பள்ளி விடுமுறையாதலால் வெள்ளைச் சீருடையணிந்து வரப்புகளில் அன்னநடை பயிலும் சிங்களக் குமரிகளை காணவில்லை.


பெப்ரவரி மாதம் மைக்கல் நவரட்ணராஜா எம்மை விட்டுப்பிரிந்தது, அதிர்ச்சியையும் கவலையையும் அளித்தது. வாழ்வு எனும் இந்த குறுகிய பயணத்தின் யதார்த்தத்தை மீண்டுமொரு உணர்வித்த நிகழ்வாக மைக்கலின் மரணம் அமைந்தது. 


மார்ச் மாதம் Big Match பார்க்க நண்பர்களுடன் யாழ்ப்பாணம் போனது என்றுமே மறக்கவே முடியாத ஒரு இனிய பயணமாக அமைந்தது. துள்ளித்திரிந்த காலத்தில் ஓடித்திரிந்த பாடசாலை வளாகத்தை,  பம்பலடித்து திரிந்த நண்பர்களுடன் மீண்டும் தரிசிக்கும் அனுபவத்தை விபரிக்க வார்த்தைகள் தேட கஷ்டப்பட்டேன்.


இந்தாண்டு நிறைய புத்தகங்கள் வாசித்த ஆண்டாக அமைந்தது. மெலூஹாவின் அமரர்கள், அமல்ராஜின் கருகிய காலத்தின் நாட்குறிப்புகள், ஜெயமோகனின் காடு, Gota's War, செங்கை ஆழியனின் மீண்டும் வருவேன் மற்றும் சங்கிலியன், Tuesdays with Morrie, குணா கவியழகனின் விடமேறிய கனவு, ஜேகேயின் கந்தசாமியும் கலக்சியும் என்று இந்தாண்டு வாசிப்பு பசிக்கு தீனி போட்ட ஆண்டாக அமைந்தது. 

வவுனியா ரயில் நிலையத்தில் ரயில் நிற்க, வடையும் வாழைப்பழமும் தந்து வரவேற்றான் பள்ளிக்கால நண்பன் சுது சிறி. வன்னிக்காடுகளிற்கூடாக A9 வீதியை கொஞ்சிக் கொண்டு ரயில் பயணிக்க, ஜயசிக்குரு கால இடங்கள் ஒவ்வொன்றாய் நினைவில் வந்து தொலைத்தன. பக்கத்து சீட்டிலிருந்த சிங்கள குடும்பம் வரைபடத்தை விரித்து வைத்து அடுத்து வரும் ஸ்டேஷனை எதிர்வுகூறி எரிச்சல் படுத்தினார்கள். 


இந்தாண்டு தலைவர் படம் வெளிவந்த சிறப்பாண்டாக அமைந்தது. 2016ல் பார்த்த படங்களில் குற்றமே தண்டனை, 24, தோழா, காதலும் கடந்து போகும், விசாரணை, இறுதிச் சுற்று,  என்பன சிறந்தவை. இந்தாண்டின் சிறந்த படம், சூப்பர் ஸ்டார் இயல்பாக நடித்து கலக்கிய கபாலி தான்.


கிளிநொச்சியை ரயில் அண்மிக்க பச்சை பசுமையான வயல்வெளிகள் கண்ணிற்கு விருந்தாகின. பாரிய சில தொழிற்சாலை கட்டிடங்களும் தெரிந்தன. கிளிநொச்சி ரயில் நிலையத்தில் சில நிமிடங்கள் தரித்து நின்ற ரயில், யாழ்ப்பாணம் நோக்கி வேகமெடுத்தது. ஆனையிறவு வெளியை ரயில் கடந்து தென்மராட்சிக்குள் ரயில் நுழைய, மொட்டை தென்னை மரங்கள் இருந்த இடங்களில் புதிய மரங்கள் துளிர் விட தொடங்கியிருந்தன. 


AR ரஹ்மான், இளையராஜா, இமான், ஹரீஷ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் பல சிறந்த பாடல்கள் வெளிவந்த ஆண்டாக 2016 அமைந்தது. அச்சம் என்பது மடமையமடாவில் வந்த பாரதிதாசனின் வரிகளிலமைந்த "நானும் அவளும்", 24ல் அமைந்த "நான் உன்னழகினிலே", கபாலியில் "வானம் பார்த்தேன்" பாடல்கள் மனதை கவர்ந்தன. 


சாவகச்சேரி தாண்டி நாவற்குழி பாலம் கடக்க, கதவை திறந்து யாழ்ப்பாண காற்றை ஆசை தீர சுவாசித்தேன். தண்டவாளத்தை தொட்டு விடும் தூரத்தில் இருந்த வீடுகளை கடந்து வீறுடன் ரயில் யாழ்ப்பாண ரயில் நிலையத்தை அடைந்தது. மீண்டும் மண்ணில் கால்பதிக்க உள்ளம் உவகையில் திளைக்க, கண்களின் ஓரத்தில் ஏனோ ஈரம் கசிந்தது. 

பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றங்கள் உலக அரங்கில் செலுத்தப் போகும் தாக்கங்கள் 2017ம் ஆண்டு பதிவு செய்யும்.  ஈழத்தமிழர்களிற்கு கடக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏமாற்றம் தந்த வலியுடனும் அடுத்த ஆண்டில் விடியல் கிடைக்கும் என்ற நம்பிக்கையற்ற எதிர்பார்ப்புடனும் தான் கடக்கும். 2016ம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்த நம்பிக்கைகள் படிப்படியாக பொடி பொடியாகி, 2017ஜ ஏக்கத்துடன் தான் நாங்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளது.

அடுத்த ஆண்டிலாவது எங்களிற்கு விடிவும் நீதியும் கிடைக்க கர்த்தரும் கந்தனும் கருணை காட்டட்டும்.

2 comments: